சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த வன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரம சாரியின் படிவாகி,
அருஞ்சொற்பொருள்
பிறைத்தளிர் – இளம்பிறையாகிய தளிர், கறைக்களம் = நஞ்சுண்ட கண்டம், கோவணம் = கீளுடை, மறைக்குலம் = வேதியர் சாதி, படிவாகி = வடிவம் கொண்டு
பொருள்
பிறையாகிய தளிரைச் சூடிய சடையினையுடைய பெருந்தகையாகிய பெருந்திருநல்லூரில் எழுந்தருளிய திருநீலகண்டராகிய, இறைவனார், தமது கோவணத்தின் பெருமையை முன்காட்டி, அதன் மூலம், நிறைந்த அன்புடைய திருத்தொண்டர்க்கு நீடிய அருள் கொடுக்கும் பொருட்டு, வேதியர் குலத்து ஒரு பிரமசாரியின் வடிவுடையராகி,
விளக்கம்
பிறைத் தளிர்ச் சடை என்ற தொடர், பிறையைத் தளிர்போலச் சூடிய சடையைக் குறித்தது. இலையாக மேலும் வளர நிற்பது தளிராதலின், சடையைச் சார்ந்ததனால் முழுமதியாக வளரநின்ற பிறையைத் தளிர் என்றார். ‘பிறையும், ஆத்தியின்தளிரும்’ சூடிய, என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பாருமுண்டு. “பிறை மல்கு செஞ்சடை“ என்ற இத்தலத் தேவாரக் குறிப்பும் காண்க. பிறை எனத் தக்கன் சாபத்தால் குறைந்த சிறுபிறை, இறைவனின் பெருங்கருணையினால் வளர்ந்து நிலவாயிற்று என்று புராணம் கூறும்.
பெருந்தகைஎன்றதொடர்,பெரியதனுளெல்லாம் பெரிதான தகைமையுடைய என்று பொருள் படும். இறைவனது பெருந்தகைமை யாவது உயிர்கள் எத்தனை பிழை செய்யினும் வெறுத்துத் தள்ளாது பொறுத்து அவைகளிடத்து மேலும் கருணை செய்துகொண்டே யிருத்தல்.
“வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே“,
“பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி“,
முதலிய திருவாசகங்களும்,
“மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்,
கண்ணுதலான்பெருங்கணை கைக்கொள்ளும்“
என்ற புராணமும் காண்க.
“பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே“ சம்பந்தர் தேவாரம் .
“பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தை“ – திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்.
பெருந் திருநல்லூர் என்ற தொடர், அவனும் பெருந்தகை; அவனது ஊரும் பெரியது; திருவும் நலமும் தருவது என்ற குறிப்பைக் கொண்டது.
கறைத் களத்திறை, என்பது கரிய கண்டத்தர்’
“நஞ்சணி கண்ட னல்லூருறை நம்பனை“ என்பது இத்தலத் தேவாரம். திருநீல கண்டம் அவரது பெருந்தகைமையும் கருணையும் காட்டி நிற்கும் அடையாளமாம்.
“ஆர்ந்த நஞ்சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி“,
“பொங்கி நின் றெழுந்த கடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ சொலாய்“
முதலிய திருவாக்குக்கள் காண்க.
‘’விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்’’
என்பார் இளங்கோவடிகள் .
கோவணப் பெருமை முன்காட்டி – கோவணப் பெருமை காட்டுதல் பின்னர் இச்சரித நிகழச்சியிற் காணலாம்.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவ மென்கொலோ?
பொ-ரை: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?
சாம்பற் பூச்சும், கீள் உடையும் பரமனின் பற்றற்ற நிலையைக் குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும் அநுபவியாமல் யோகியாயிருந்து உயிர்கட்கு யோகநெறி காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.
துறந்தோராலும் விரும்பப் பெறும் பெருமை. அதனைத் தரிக்கும் அன்பர் பெருமை, அதன் பெருமை முதலியன. இதனைக் காட்டவே இறைவனும் தாம் இல்வாழ்வார் என்ற நிலையினின்றும் பிரமசாரியா யிறங்கி வந்தனர்.
‘முன்’ என்ற சொல் தேற்றமாக – யாவரும் அறியுமாறு, முன்னிலையில் விளங்க. அன்பர்க் கருள் கொடுப்பதன் முன் என்றெல்லாம் பொருள் தரும்.
நிறைந்த அன்புடைத் தொண்டர் என்ற தொடருக்கு, இனி மேலும் கொள்ளுதற் கிடமில்லாத படி நிறைவித்த அன்பு எனப்பொருள் கொள்ளலாம்.
“தீர்ந்த வன்பாய வன்பர்“ என்பது திருவாசகம்.
“விளைத்தவன் புமிழ்வார் போல“ – என்பது கண்ணப்பர் புராணம்.
நீடருள் அருள் பேணி என்ற படி இதுவரை ஈந்ததும் அருளேயாம்; ஆயின் இனித் தருவது நீடுகின்ற அருள். அளவு, காலம், அனுபவம், இன்பம் முதலியவற்றாற் குறைவில்லா திருத்தல் நீடு எனப்பெறும். மாளா இன்பம், மீளா நெறி முதலியனவாகப் பேசப் பெறும் வீட்டின்பம்.
“பேரா வொழியாப் பிரிவில்லா
மறவா நினையா வளவிலா
மாளாவின்ப மாகடலே“
என்பது திருவாசகம்.
கொடுப்பான் – பானீற்று வினை யெச்சம். கொடுக்கும் பொருட்டு.
மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவாகி – மறைக்குலத்து – வேதியர் குலத்திலே. குலங்களிலும் முதல் மூன்றிலும் பிரமசரிய முதலிய நிலைகள் நூல்களில் வகுக்கப் பெறுமாதலின் அவற்றுள் ஏனை மூன்று குலங்களையும் நீக்குதற்கு மறைக்குலத்து என்றார். பிறிதினியையு நீக்கிய விசேடணம்.
பின்னர்த் துன்று வேதியர் தூய்மையி னமைப்பது முளதால்“
என்று இப்புராணமே பாடும்.
ஒரு – ஒப்பற்ற. பிரமசாரி – பிரம உபாசனை நிலையிலே சரிக்கின்றவன் – “வேதத்தை ஓதுகின்றவன். அவனுடைய செய்கையாவது: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூன்று சாதியில் ஒரு பாலன் உபநயனம் ஆனவுடனே பாக்கு வெற்றிலை தின்னாமலும், சந்தனந்தரித்தல், பூச்சூடுதல் இல்லாமலும், இடையில் ஒரு வஸ்திரத்தை மாத்திரஞ் சுற்றிக் கொண்டு அயலூரில் உள்ள பிராமண அக்கிரகாரத்தில் சென்று, இராக் காலத்தில் தருப்பையைக் கீழே பரப்பி அதன்மேற் படுத்துக்கொண்டு, பிட்சையாகக் கொண்டஅன்னத்தைப் புசித்துத்தகுந்த குருவினிடத்தில் கலியாணம் செய்யத்தக்க காலம். வருகின்ற அளவும் வேத அத்தியயனம் பண்ணிக்கொண் டிருத்தல்“ என்பர் மகாலிங்கையர். இது நாற்பத்தெட்டு வயது எல்லை வரை நீடிக்குமென்பர்.
“அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய வறனவில்கொள்கை“
என்பது திருமுருகாற்றுப்படை!
இவ் வியல்பின் இயன்ற உண்மைப் பிரமசரிய நிலை இந்நாளில் எங்கேனும் காணக் கிடைக்குமா என்பது அறிவாளிகள் கருதத்தக்கதாம்.