திருச்சி புலவர் இராமமூர்த்தி

தொடக்கம் –

நல்லூர்  அமர்நீதி நாயனார்  தம்மிடம் வேதியர் வைத்துச்சென்ற  கோவணத்தைக் காணாமல் தேடித்  திகைத்தார்!  தாம் வைத்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை. உறவினராலும் அப்பொருளைக்  கண்டுபிடிக்க  இயலவில்லை.  மானை  மறைத்துக்  கரத்தில்  தண்டேந்திய வேதியர் அதுகேட்டுத் தீப்போல் வெகுண்டார். அமர்நீதியார் உணர்வு கலங்கி ‘’என் பெரும்பிழையைப்  பொறுத்துக்  கொள்க; உங்களுக்கு ஒன்றுகூறுகிறேன். இக்கோவணம் தவிர யான்உங்களுக்குச் சிறந்த நல்ல பட்டாடைகள், மணிகள் கொண்ட புதிய ஆடையை ஏற்றுக்கொள்க‘’ என்று கூறி மிகவும்  பணிந்து வணங்கினார்.

அடியார் கூறியதை ஏற்றுக்கொண்ட வேதியர், ‘’நீங்கள் கொடுக்கும்  புதிய ஆடைகளும் மணிகளும்  எதற்கு?  அணியத்தக்க  கோவணம்   தருக, அதுபோதும்.’’   என்றார்.  அதுகேட்டு மகிழ்ந்த அமர்நீதியார்,‘’ அந்த வெண்ணிறக் கோவணத்திற்கு நிகராக வேறெந்த புதிய ஆடையையும் ஏற்றுக் கொள்ள  இசைக.’’ எனக்கேட்டார்.

‘’நீர் தொலைத்த  கிழிந்த கோவணம்  தவிர என்தண்டத்தில் ஏந்திய வேறொரு கோவணம்இது; இதற்கு இணையான  எடையுடைய கோவணம் தருக‘’ என்றார்.  அடியார், ‘’மிகவும் நல்லது’’ எனக்கூறி  ஒரு துலாக்கோலை  நிறுத்தினார். அதன் ஒரு தட்டில் வேதியர் மற்றொரு கோவணத்தை  வைத்தார்.  அடியார்  புதிய  கோவணத்தை  மறு தட்டில் வைக்க அந்தக்  கோவணம்  எடை  குறைந்திருந்தது! அதனைக்  கண்ட அடியார் வியந்தார்;

‘’ஈதென்ன மாயம்! இக்கிழிந்த   கோவணம்  நாமளிக்கும்  புதிய கோவணத்தை விட  அதிக  கனம் காட்டுகிறதே!‘’ என்று கூறி, தம்மிடம் இருந்த பற்பல மெல்லிய துகில்களையும் பட்டாடைகளையும் மறுதட்டில் இட்டார். இவ்வாறு தம்மிடம் இருந்த பற்பல கோடித்துணிகளையும் கொண்டு வந்து இட்டார். அப்போதும் கோவணத்தட்டு தாழ்ந்தே நின்றது.

இதனைக் கண்டு  அஞ்சிய அடியார், தம்மில்லத்தில்  இருந்த ஆடைகள், வண்ண  நூல்கள் பலவற்றையும் இட்டும்  எடை நேராக வில்லை. ‘’இனி  என்னென்ன  செல்வத்தை யான் இட வேண்டும்?’’  என்று  வேதியரிடம் கேட்டார்.

அதைக் கேட்ட வேதியர் ‘’உங்களிடம்  உள்ள  செல்வம் யாவற்றையும் இடுக, எங்கள்  கோவணம் நேர் நிற்க வேண்டும் ‘’ என்றார். அடியார் தம்மிடமிருந்த பொன், வெள்ளி,நவரத்தினக்  குவியல், பலவகைப் பட்ட உலோகங்கள் முதலான  அளவற்ற பொருள்களை ஒருதட்டில்  இட, இட  ஏற்றுக் கொண்ட தட்டு நிறைந்து மெல்ல மேலுயரத் தொடங்கியது! உலகோர் அனைவரும் வியந்தார்கள்!

தவத்தால்  நிறைந்த  நால்வேதங்களால் உருவான சிவபிரான் விரும்பிய திருக்கோவணம் இருந்த துலாக்கோல் தட்டிற்கு  இணையாக அடியாரின் செல்வங்கள் மட்டுமல்ல, எல்லா  உலகங்களும்  நேர்நிற்காது ! என்பது புகழ் மொழியல்ல.

கோவணத்துக்கு  இணையாக துலாக்கோல் தட்டு நிகராகாத போது, கொடையில்  தமக்கு நிகர் இல்லாத அமர்நீதியார், ‘’எல்லாப் பொருள் களையும் ஒன்றுவிடாமல் வைத்து விட்டேன்; இறைவனே  இனி, நானும் என் மனைவியும் மகனும் ஏறி நிற்பது தகுமாயின் , உங்கள் அருளால் செய்வோம்!’’ என்று  வணங்கினார்.

குற்றமற்ற அடிமைத்திறம் புரிந்த அமர்நீதியார், வேதியர் முன் நேர் நின்று அஞ்சிக் கேட்டுக் கொண்டமையால், தம் விதியை நிச்சயித்த இக்குற்றத்தில் நின்றும் விடுவித்து உயர்த்த அத்தட்டில் ஏற அனுமதித்தார்! உடனே அந்தணர் திருவடியை வணங்கி, குடும்பத்துடன் வலம் வந்து தம் தகுதிக்கேற்ப  தட்டில் ஏறும்போது,

‘’நான் இதுவரை செய்த இறைவன் திருநீற்றுக்கு உண்மையான அடிமைத் திறத்தில் சிறுபிழையும் செய்ய வில்லையாயின், இத்துலாக்கோல் தட்டு, கோவணத்தட்டுக்கு நேராக நிற்கட்டும் !’’ என்று நல்லூர்ச் சிவனை வணங்கி, ஐந்தெழுத்தினை  ஓதியவாறே, துலைத்தட்டில்  ஏறினார்!

பாடல்: 

மண்டு   காதலின்   மற்றவர்   மகிழ்ந்துட   னேற,
அண்டர் தம்பிரான் றிருவரைக் கோவணம் அதுவும்
கொண்ட வன்பினிற் குறைபடா அடியவர்  அடிமைத்
தொண்டும்  ஒத்தலால் ஒத்துநேர் நின்றதுஅத்   துலைதான்.

பொருள்:

மிகுந்த காதலினாலே மற்று அவர்கள் மகிழ்ந்து உடனே தட்டிலே ஏறினார்களாக, எல்லா அண்டமுடையார்க்கும் பெருமானாகிய இறைவனது திருவரையிற் சாத்தும் கோவணமும், அவர்பாற் கொண்ட அன்பினிற் குறைபடாத அடியவர்களது தொண்டும் ஒப்புடையன ஆதலால் (மேலும் கீழுமாய் நிற்றலன்றி) ஒத்து அத்துலைதான் நேர் நின்றது.

விளக்கம்:

மண்டுகாதலின்  என்ற தொடர்,  மேன்மேலும்  மிகுகின்ற ஆசையால், கோவண நேர்நிற்கப் பெறுவோம் என்ற திண்மையான உறுதி பெற்றா ராதலின், தமது பிழையினை மாற்றப் பெற்றோமென்ற உணர்ச்சிவர, அதுவே மண்டுகாதலை விளைத்தது.

மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற – என்ற தொடரால் மனைவியும்  மகனும்  மகிழ்ச்சியோடுஒன்று சேரத்தட்டிலேஏறினார்களாக,  அவர்களின் உள்ளத்தில் காதல் மண்டியவழி உடம்பிலும் மகிழ்ச்சி உண்டாகியது. காதல் உள்ளத்தும் மகிழ்ச்சி புறத்தும் நிகழ்வன.

கோவணம் அதுவும் அடிமைத் தொண்டும் ஒத்தலால்  என்ற அடியே இப்பாடலின் அடிப்படை! கோவணமே  மறையாதலின் இறைவனை உள்ளே பொதிந்து வைத்துப் பற்றி நிற்பது. அடிமைத் தொண்டும் அவ்விறை வனையே உள்ளத்திற் பொதிந்து பற்றிக் கிடப்பது. ஆதலின் இரண்டும் ஒத்தன  என்றார்!

அடிமைத் தொண்டு – அடிமையாந் தன்மை பெற்றதனாற் செய்யும் தொண்டு,

அண்டர் தம்பிரான் – அண்டங்களுக்கு நாயகர்களாகிய  வானவர்களுக்குத் தலைவர். “அண்டவா னவர்கட் கெட்டா அருட்கழல்“ என்பது முதலியவை காண்க.

கொண்ட அன்பினிற் குறைபடா அடிமைத் தொண்டு –  இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்ற நிலைமை.

கொண்ட – உயிர்க்கீடாகக் கொண்ட, கடைப்பிடியாகிய. அன்பினிற் குறைபடா – எந்தவகை முட்டுப்பாடு நேரினுங் குறையாத.

இப்பாடலில் நேர் நின்றது அத்துலைதான்  என்பதை  அத்துலைதான்  நேர் நின்றது என மாற்றுக. இரண்டுதட்டுக்களிலும் இட்ட பொருள்கள் தம்முள் ஒத்தபோதே துலையும் நேர்நிற்கும். ஆதலின், கோவணமும் தொண்டும் ஒத்தலால் என்று காரணங்கூறியவாறு.

இங்குத் தட்டில் நின்றது நாயனாரும் மனைவியாரும் புதல்வருமே யாயினும் அவர் தம்மையே அடியவர்க்கு (இறையவர்க்கு) ஒப்புக் கொடுத்த தொண்டின் செயலே இங்கு ஒப்புமை செய்தது என்பார் தொண்டரும் என்னாது கோவணமும்  தொண்டரும் ஒத்தலால் என்றார்.

“மெய்யடிமை பிழைத்திலோம் எனில்“  என நாயனாரும் அடிமையையே குறித்ததும் காண்க.

அத்துலைதான் – துலைக்கோல் துலை எனப்பட்டது. இறைவனது கோவணங் கொண்டதேயாயினும் என்க.

“அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங், குன்றே யனையாய் என்னை யாட்கொண்ட போதே கொண்டிலையோ? இன்றோரிடையூ றெனக்குண்டோ“

என்ற மணிவாசகத்தின்படி உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் அவன் வசமாக்கிய வழியே இறைவன் அவர் இடர்  அடையாது வெளிப்படத் தாங்கி நிற்பன். பணிசெய்து கிடப்பதே கடமையாகிப் பிறிதொன்று மில்லாத பொழுதே, இறைவன்றன்கடன் அடியேனையும் தாங்குதலாம் என்று அருளிய தேவாரமும்  உணர்த்திடும்.

பணிசெய்து கிடக்கும் நிலையினையே இங்கு அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத் தொண்டு எனப்பட்டது. முன்னர் உடைமை மட்டும் நேர்தந்தார்,  உடலும் உயிரும் தம்மதாக நிறுத்தினராதலின் தட்டு நேர்படாது நின்றது.

இப்போது உடலையும் உயிரையும் நேர்பெற ஒப்புவித்தனர். குறைநிரம்பிட இறைவனும் நேர் கொண்டனர் என்க.

“ஆட்கொண்ட வார்த்தை“ என்று இது பற்றிய அப்பர் சுவாமிகள் திருவிருத்தமும் சிந்திக்க.

பொட்டடித்து   எங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித்து  உள்அமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும்  என்னையும்;
வட்டமது  ஒத்தது; வாணிபம் வாய்த்ததே.

என்ற திருமூலர் திருமந்திரம், இச்சரிதத்தினையும் அதன் தத்துவத்தினையும் நினைவூட்டிநிற்பது ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

மிகுந்த பக்தியுடன் மனைவியையும் மகனையும் ஏற்றிய அமர்நீதியார், அவரும் இறையருள் பெறும் மகிழ்ச்சியுடன் துலைத்தட்டில்  ஏறினார்! அப்போது சிவபிரானின்  திருவரையில் திகழ்ந்த கோவணமும், அடியாரின் குறைவற்ற திருத்தொண்டுக்கு நிகராயிற்று! ஆகவே அந்த துலாக்கோல் தட்டு நேராக  நின்றது!  உள்ளத்தில் மறைந்திருக்கும் பக்தி, வெளியில் புலப்படும் திருத்தொண்டை மீறி  இறையருளைப்  பெற உதவுவன  என்பதை இப்பாடல் விளக்குகிறது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *