படக்கவிதைப் போட்டி 293இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
தோளில் வீற்றிருக்கும் கிளிகளோடு அமர்ந்திருக்கும் இளைஞரைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ஆர். கே. லக்ஷ்மி. இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை நவில்கின்றேன்.
தோளிலே தத்தைகளோடும் முகத்திலே தீவிரச் சிந்தனைகளோடும் அமர்ந்திருக்கின்றார் இந்த இளைஞர். கவிஞர்களின் சிந்தனைக்கும் வேலை தந்திருக்கின்றது இந்த ஒளிப்படம் என்றே கருதுகின்றேன்.
படத்திற்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளித்தர வாரீர் கவிஞர்களே!
*****
”முதுகில் கிளிகளைச் சவாரி செய்ய அனுமதி! காதிற்குக் கிடைக்கும் தேனிசை; மனத்திற்குள் குலுங்கும் மலர்த்தோட்டம்; முதுகு வலிக்குக் கிடைக்கும் பஞ்சழுத்தம்” என்று கிளிகளால் கிட்டும் நற்பயன்களைப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.
உன் முதுகில் சவாரி செய்யக்
கிளிகளுக்கு அனுமதி
பச்சைக் கிளிகளுக்கு அனுமதி
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை
கேட்டாயா… என்ன சொல்லிற்று?
பட்சிகளுடன் செலவழிக்கும் நேரம்
நம் கவலைகளை மறக்கும்
உணர்ந்தாயா… அதில் மகிழ்ந்தாயா?
நிரம்பக் கிளிகளை அனுமதி
உன் முதுகில் சவாரி செய்ய!
காதிற்குத் தேனிசைதான்
மனதிற்குள் குலுங்கும் மலர்த்தோட்டம்தான்
உழைக்கும் முதுகின் வலிக்குப் பஞ்சழுத்தம் தான்
அனுபவி பட்சிகளோடு அனுபவி!
*****
அடுத்து வருவது சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
காலம் இது!
போட்டு வைத்த படக்கட்டைப்
பொறுக்கியெடுக்கப் பழக்கிவைத்து
எதிர்காலம் உரைப்பேனென்று
ஏமாற்றிப் பிழைப்பவர் போல்
பணக்கட்டும் சின்னப்படமும்
போட்டிப்போட வாக்கு வாங்கிக்
காட்டி வைத்த வித்தைகளை
மீட்டெடுக்க விழையும் காலமிது!
ஆண்ட ஆளின் முதுகிலேறி
அவர் உரையை மொழிந்துவிட்டு
ஐந்தாண்டு கழித்து மீண்டும்
அடியவரின் வாசல் வந்து
காத்து நிற்கும் காலமிது!
பறந்து செல்லும் பச்சைக்கிளி
அரிசிமணி ஆசையிலே
சுதந்திரத்தை இழந்ததுபோல்
பெற்றெடுத்த உரிமைதனை
விற்றுவிட்டுத் தவித்திடாமல்
குற்றமற்ற தலைவர்களைத்
தேர்வு செய்யும் காலமிது!
”மக்களே! அரிசிமணி மேல்கொண்ட இச்சையிலே பச்சைக்கிளி தன் சுதந்தரத்தை இழந்ததுபோல் நாமும் நம் உரிமைதனை, அற்பப் பொருளுக்கு, விற்றிடாது குற்றமற்ற தலைவர்களைத் தேர்வுசெய்யும் காலமிது” என்று நல்லுரை நவின்றிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.