திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல்

ஒக்க நெடுநா ளிவ்வுலகி லுயர்ந்த சைவப்  பெருந்தன்மை   
தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையாற் றம்பெருமா னருளி னாலே தாணிழற்கீழ்
மிக்க கணநா யகராகுந் தன்மை பெற்று விளங்கினார்.  

பொருள்

இதுபோலவே பலகாலம் இவ்வுலகிலே உயர்ந்த பெருந்தன்மைகள் யாவும் கூடிய நிலையாகிய சைவநெறியினைப் பாதுகாத்துத் திருத்தொண்டு செய்யும் பேறு பெற்று வாழ்ந்த விறன்மிண்ட நாயனார் தமது திருத் தொண்டினுக்குப் பொருந்திய வகையினாலே கணநாயகராகும் நிலைமை யினைப் பெற்றுத் திருவடிநிழற்கீழ் விளங்கினார்.

விளக்கம்

ஒக்க – மேலே கண்ட வகைகளைப் போலவே. பெருந்தன்மை தொக்க சைவநெறி என மாற்றி, யாவையும் தொகுதியாகக் கூடிய நெறி சைவநெறியேயாம் என்பதை அறிந்துகொள்க  இது திருத்தொண்டத் தொகையாற் போந்த நெறி குறித்தது.

நிலைமை நெறி – நிலைமையே இந்நெறியாம் என்க. போற்றி – பாதுகாத்து. துதித்து என்றலுமாம்.

தொண்டு பெற்ற – நெறி போற்றுதலாகிய திருத்தொண்டினைச் செய்யும் பேறு பெற்ற. பெற்ற – “திருக்கூட்டத் தெதிர்முன்பரவு மருள் பெற்றே யிறைவூர் பாதந் தொழப் பெற்றார்“ , “புறகென் றுரைப்பச் சிவனருளாற் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்“  என்பன, இத்தொண்டினை இறைவ னருளாலே தாம் பெற்றவர். என்பதைஉணர்த்துகின்றன.

“அவனருளாலே அவன்றாள் வணங்கி“ என்பது திருவாசகம்.

தக்க வகை – இவர் செய்து வந்த திருத்தொண்டினுக்குப் பொருந்திய வகை. தகுதியாவது, சரியையாதி வழிகளில் தொண்டு செய்வோர்க்கு உரிய சாலோகம் முதலியனவாகச் சாத்திரங்களிற் கூறிய வகை.

அருளினாலே தன்மை பெற்று – அருளாலே தொண்டு பெற்ற அதனால் அவ்வருளினாலே இறுதியில் இத்தன்மை பெற்று.

மிக்க – மேன்மையான. கணநாயகர் – சிவகணங்களின் தலைவர். தொண்டர்களின் நெறி போற்றி இங்குத் தலைமை பெற்ற தொண்டினுக் கேற்க அங்கும் கணநாயகராயினர் என்பது.

“தூநறுங்  கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி,
மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி னிலைபெற்றார்“

என்பது  கணநாத நாயனர் புராண உள்ளுறை.

இப்பாடல் தொண்டர்நெறிகளில் தலைமை பெற்றவர் விறன்மிண்டர் என்பதையும், அவருடைய கடுமையான தொண்டுநெறி அவருக்கு ‘கணநாயகர்’ என்ற உயர்பதத்தை அளித்தது என்பதையும்   குறிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.