நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 65

மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
‘இனங்கழு வேற்றினார் இல்’. 

பழமொழி – ‘இனங்கழு வேற்றினார் இல்’

பக்கத்துவீட்டிலிருந்து பலத்த சத்தம். எட்டிப் பார்த்தேன்.

எல பொசகெட்ட பயலே. சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டிருந்தா எப்டி? ஆளு மட்டும் பனமரம் கணக்கா வளந்து நிக்க. உங்க சித்தப்பந்தான் புத்திகெட்டு அலையுதாம்னா உனக்கெங்கல போச்சு புத்தி. அவன் பேச்சக்கேட்டு மண்டை கொளம்பி கிளம்பி போயிடுச்சோ. இங்ஙனகூடி அரிவாளத் தூக்கிட்டுத் திரிஞ்ச…. பொறவு உனக்கும் எனக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில்லனு சொல்லிப்புடுவேன். கஞ்சிகுடிக்க நாளமுன்னயும் வாசப்படி மிதிக்கவொட்டாம ஆகிப்போவும். நாதியத்து தெருவுல நிப்ப. மரியாத கெட்டுப்போவும். போலீஸ் கேசு ஆகிப்போச்சுதுன்னா குடும்பத்தோட நாண்டுகிட்டு நிக்க வேண்டியதுதான். வரமுறை தெரியாம சிலுப்பிக்கிட்டு அலையாத. ஆமாம்… சொல்லிப்புட்டேன். தலைமுடியை கொண்டையிட்டுக்கொண்டே கத்திக்கிட்டிருக்கா வெள்ளைச்சீல ஆச்சி.

இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் இந்தச் சத்தங்கள் சாதாரணம்தான். ஒண்ணு வயல்வரப்பு பிரச்சினையா இருக்கும். இல்ல மாடு பயிர மேஞ்சிருக்கும். ஆனா இவங்க பிரச்சின வேற மாதிரியில்ல தோணுது. சரி பொடிநடையா போயி பெட்டிசன் சீனுகிட்ட விசாரிச்சா சேதி தெரிஞ்சுபோகும்.

என்னய மாதிரி அரசாங்க வேலை பாத்துட்டு ரிடையர்மெண்ட் கு அப்பறம் கிராமத்துல குடியேறினவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்ல. மாசம் பொறந்தா பென்சன் வரும்.அத வச்சி காலத்த கழிச்சிர வேண்டியதுதான். பாவம் இந்த உழைப்பாளிகள்.

மழை பெய்யலேன்னா பிரச்சினை. அதிகமா பெய்தா பிரச்சினை. பூச்சிகளால பிரச்சினை. இப்ப புதுசா வெட்டுக்கிளியாலயும் பிரச்சினையாம். நேத்துதான் பொலம்பிக்கிட்டிருந்தா இந்த ஆச்சி. இப்ப இந்தக் கத்து கத்திக்கிட்டு நிக்கறா. அவளோட செல்வத்திருமகனுக்கு சரியா படிப்பு வரல. அவனும் விவசாயந்தான் பாக்கறான். மூக்குக்கு மேல கோபம் மட்டும் வந்திரும். ஊர்ல இருக்குற எல்லாப் பிரச்சினையையும் தலைக்கு மேல போட்டுக்கிட்டு முன்னால போய் நிப்பான். இப்ப அப்டி என்னத்த இழுத்துண்டு வந்து நிக்கறானோ தெரியல. சீனு வாசத்திண்ணையிலதான் உக்காந்திருக்கான். மெதுவாக பேச்சுகுடுத்தேன். சீனு விஷயத்தைக் கக்க ஆரம்பிச்சான்.

அது ஒண்ணுமில்ல. நம்ம சீனித்தேவர் பொண்ணு அதான் டவுண் காலேஜ்ல படிக்கறாளே அவ நம்மஊர் பஸ்டாண்டுல நின்னு யாரோ ஒரு பையன்கூட பேசிண்டிருந்தா போல. அதுக்குத்தான் ஊரே இந்தக் குதி குதிக்கிறது.

சமஞ்ச பிள்ள இப்டிச் செய்யலாமா. குனிஞ்ச தலநிமிராம காலேஜுக்கு போனேம் வந்தேம்னு இருக்காம இப்டி எங்க குடும்ப மானத்த வாங்கிப்புட்டாளேன்னு அவர் சம்சாரம் வாசல்ல நின்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க. உள்ள சொக்காரன், பங்காளினு ஒரு கூட்டமே அந்தப்பொண்ண சிபிஐ ரேஞ்சுல விசாரிச்சிண்டிருக்கா. அதுல உங்க பக்கத்து ஆத்துப் பிள்ளையாண்டான் அரிவாள வேற எடுத்துண்டு போறான். என்ன நடக்கப் போறதோ.

அக்கம்பக்கத்துல கூடப்படிக்கிற ரெண்டு பொண்ணுகளும் போய் அந்தப்பையனும் நாங்களும் ஒரே பாடத்த எடுத்துப் படிக்கறதால பாட சம்பந்தமா ஏதோ கேட்டான். அவ்வளவுதான்னு சொல்லியும் யாரும் கேக்கறதா இல்ல.

ஏண்டா சீனு ‘இனங்கழு வேற்றினார் இல்’ ங்கற பழமொழியக் கேள்விப் பட்டிருக்கியோ. இது பழமொழி நானூறுல முன்றுரை அரையனார் சொன்னது. அதுல அவர் அரசனா இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சொல்லறதக் கேக்காம என் சட்டம் இப்டித்தான் சொல்றது அதன்படிதான் நடப்பேன்னோ அல்லது எதுத்து நிக்கற எல்லாரையும் கழுவிலேற்றி கொன்னுடுவேன்னோ சொன்னதா யாருமில்லனு சொல்லியிருக்கார். சட்னு ஞாபகம் வந்ததால சொன்னேன்.

இந்த மாதிரி சட்டத்தைக் கையில எடுத்துண்டு எடுத்தேன், கவிழ்த்தேன்னு நடந்துக்கிறவாகிட்ட என்னன்னு போய்ப் பேச. அதுக்காக சும்மா உக்காந்து பாத்துண்டும் இருக்க முடியாது. நான் பேசிக்கொண்டேபோக…

சொந்தப்பொண்ண சந்தேகத்தின் பேர்ல கவுரக்கொலையெல்லாம் பண்றது தப்புனு தேவர்கிட்ட எடுத்துச் சொல்லற தைரியம் உங்க பக்கத்து ஆத்து ஆச்சிக்குத்தான் உண்டு. வாரும் சட்னு போய் ஆச்சியக் கூட்டிண்டு வரலாம். சீனு சொல்ல நானும் எழுந்து கிளம்பினேன்.

பாடல் 66

புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’.

பழமொழி- ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’

உம் பொண்ணு ஜனனிக்காக இங்க வந்ததில நிறைய பேரோட நிறம் வெளுக்கறது தெரியுது. சொல்லிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறார் என் கணவர்.

அம்மா… அப்பாவ அங்கயெல்லாம் போகச் சொல்லாதீங்க. அந்த சிடுமூஞ்சி ஹெச் எம் பாத்தாங்கன்னா கேள்வி கேட்டே உண்டு இல்லனு பண்ணிடுவாங்க.

மகளின் ஆதங்கத்துக்குப்பின் கவனிக்க ஆரம்பிச்சேன். இவர் எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டு இருக்காரு. போகிற போக்குல ஏதோ துணியில சாயம் வெளுத்தமாதிரி நிறம் வெளுக்குதுனு வேற சொல்றாரு. நாம இங்க வந்த வேலைய கவனிக்காம எதுக்கு இப்ப இந்த நடை. ,

யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து வெளியில் வந்த அந்த மஞ்சள் புடவைக்காரி. ..ஜனனி 10 ‘பி’ உள்ள வாம்மா. நாற்காலியிருந்து எழுந்த என்னை இப்ப ஸ்டூடன்ட் மட்டும்தான் உள்ள வரணும். நாங்க கூப்பிடும்போது நீங்க வந்தா போதும். ஜனனியோட அப்பா வந்திருக்கார் இல்ல. கன்பார்ம் செய்துகொண்டு உள்ளே சென்றுவிட்டாள். கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.

சாவகாசமா ஜனனி அப்பா வந்து விசாரிக்கிறார். பொண்ண எங்க. நீ மட்டும் உக்காந்திருக்க.

அவளை உள்ளே கூப்பிட்ட தகவலைச் சொன்னவுடன் சரி எழுந்திரு. ஒரு ரவுண்ட் இந்த ஸ்கூல சுத்திக்காட்டறேன். சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்து நாற்காலிகள் எல்லாம் விநோதமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தன.

தலையெழுத்து. இந்த மனுசன்கூட. ஜனனி இரண்டாம் வகுப்புலேந்து இங்கதான் படிக்கறா. பாதிக்குமேல கட்டிடங்கள் என் கண் முன்னாலதான் கட்டினாங்க. இந்த ஸ்கூலோட மூல முக்கு எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். நீங்க தான் ஒருதடவ கூட வந்ததில்ல. சொல்லிக்கொண்டே அவரைத் திரும்ப அழைத்துவர பின்னாலேயே போகிறேன்.

அனைவரின் கண்களும்எங்கள் பக்கம் என்பதால் இப்ப என்ன அவசரம். வந்த வேலய முடிச்சுட்டு குடும்பமா ஊர்வலம் போகலாம். இப்ப வந்து பேசாம இந்த நாற்காலில உக்காருங்க. எப்ப வேணும்னாலும் நம்ம ரெண்டு பேரையும் கூப்பிடுவாங்க. சொல்லிவிட்டு நான் அமர்ந்தேன்.

அதெல்லாம் அரைமணிநேரம் ஆகும் விசாரிச்சிட்டேன். இப்ப ஜனனிக்கு ஒரு டெஸ்ட் குடுத்திருப்பாங்க. அத அவ எழுதி முடிச்சி அதோட ரிசல்ட வச்சிக்கிட்டுதான் நம்மகிட்ட பேசுவாங்க.

பக்கத்து நாற்காலி பேச்சு குடுக்க ஆரம்பித்தது. ஹாய்.. நான் ஸ்வேதாவோட அம்மா.  வேற ஏதாவது ஸ்கூலுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா. என்ன குரூப் எடுக்கணும்னு டிசைட் பண்ணியிருப்பீங்கயில்ல அதனால கேட்டேன். கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அந்த அம்மாள் தொடர்ந்தாள். எங்க ஸ்வேதாவோட ஸ்மார்ட்னஸ்கு அவள நாங்க சட்டப்படிப்புல சேர்க்கலாம்னு இருக்கோம். அந்த சப்ஜெக்ட் இந்த ஸ்கூல்ல இல்லாததால நாங்க வேற இடத்துல அப்ளை பண்ணிட்டோம். இப்ப சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு வந்திருக்கோம். இவங்க சொல்லப்போறத சீரியசா எடுத்துக்க மாட்டோம்.

அவர்கள் பேசிக்கொண்டே போக என் மனம் மூடிய கதவுக்கு உட்புறம் என்ன நடக்கிறதோ என எண்ணத் தொடங்கியது. ஒவ்வொருத்தர் தங்கள் பிள்ளைகளைப் பத்தி எவ்வளவுதூரம் யோசிச்சு முடிவெடுக்கிறாங்க. நாமளும் இருக்கோமே என சலித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் என்னை நோக்கி …. ஆமா நான் பேசிக்கிட்டே இருக்கேன்.உங்க ஜனனி என்ன குரூப் எடுக்கப்போறா. மேற்படிப்பு என்ஜினியரிங் தானே. ஸ்வேதா அடிக்கடி சொல்லுவா ஜனனிக்கு கணிதம் புடிக்கும்னு. ஒப்புக்கு நானும் ஆமாம் எனத் தலையாட்டிவிட்டு எழுந்து விட்டேன்.

சொல்லிவைத்தாற்போல் மூடிய கதவு திறக்கப்பட்டு முதலில் எங்களைத் தான் அழைக்கிறார்கள். இந்த மனுசன் எங்கதான் இருந்தாரோ நல்ல பிள்ளைபோல் முதலில் நுழைகிறார். எங்கள் இருவரையும் எதிரே அமரச் செய்து ஜனனியை வெளியில் அனுப்பிவிட்டார் அந்த உளவியலாளர்.

அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். பள்ளி முதல்வரின் அறை அது. இன்றைய தினத்துக்காக மூன்று மேசைகளில் உளவியலாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே சமயத்தில் மூன்று பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவன் போல் அடக்கமாய் அமர்ந்திருக்கின்றனர்.

எங்கள் முன்னே அமர்ந்திருக்கும் உளவியலாளர் ஜனனி எழுதிய தேர்வின் விடைத்தாளைக் காண்பித்து ஏதோ பேச எத்தனிக்கிறார். அவர் ஆரம்பிக்குமுன் என் கணவர் அதிக அளவு கெட்ட வார்த்தை பேசுகிற பசங்களை நீங்க எப்படி அறிவுரை சொல்லித் திருத்துவீங்க எனக் கேட்கிறார்.

மீண்டும் அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்களின்மேல். அங்கு மாட்டப்பட்டிருந்த கடிகாரம், சார்ட்பேப்பர் இவைகளெல்லாம் கூட எங்களைப் பார்த்து முறைப்பதுபோல் உணர்கிறேன். அந்த மஞ்சள்புடவைக்காரி கையில் வைத்திருக்கும் லிஸ்டைக் காட்டி உளவியலாளர் காதில் ஏதோ சொல்கிறாள். அதற்குமேல் பொறுக்க முடியாமல் மெதுவான குரலில் கொஞ்சம் சும்மா உக்காந்திருக்கீங்களா. எந்த நேரத்துல எதப் பேசறதுனு தெரியாம. வந்த வேலையைப் பாக்கலாமே என்கிறேன்.

என்னசார் பதிலே இல்ல என எதையுமே காதில் வாங்கிக்காம மீண்டும் கேட்கிறார் என் கணவர்.

நீங்க ஜனனியப் பத்தி சொல்ல வந்ததச் சொல்லுங்க சார். மற்ற விசயத்தைப் பத்தி அப்பறம் பேசலாம். இடைமறிக்கிறேன் நான்.

எங்கள் இருவரையும் பார்த்து நிதானமாக ஆரம்பிக்கிறார் அந்த உளவியலாளர்.

எப்பவுமே நாங்க பசங்களுக்கு அனுபவபூர்வமாதான் உணர்த்துவோம். அறிவுரையாச் சொன்னா ஒரு காதுல வாங்கிட்டு இன்னொரு காது வழியா வெளிய தள்ளிடுவாங்க. அதிகமா வசவுச்சொல் பேசற பசங்க தங்களச் சுத்தி நடக்கறத நல்லா கவனிக்கிறாங்கனு அர்த்தம். அவங்க உபயோகிக்கிற சொற்கள் எல்லாம் வீட்டுக்குள்ள அப்பாவோ அம்மாவோ அல்லது வேறு ஒரு உறவினரோ உபயோகிக்கிற சொற்களாயிருக்கலாம் அல்லது குடியிருக்கிற பகுதியில பேசற பேச்சுக்களா இருக்கலாம். அத முதலில் கவனிப்போம். அப்படிப்பட்ட பசங்களுக்கு உற்ற நண்பர்கள்னு யாரும் அமைய மாட்டாங்க. அது எதனாலன்னு புரிஞ்சிக்காமயே தனித்து இருக்கோங்கிற வருத்தத்தில மேல மேல வகுப்பறையில அடாவடித்தனம் பண்ணுவாங்க.

இந்தப் பசங்கள எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வரும்போது இனிமையா எப்படிப்பேசணும்னு பயிற்சி குடுப்போம். அதுக்குப்பிறகு இந்த மாதிரி வகுப்பறையில் பேசிப்பாருங்க. பதினைந்து நாள் போதும் உனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைச்சிடுவான்னு ஊக்குவிப்போம். முதலில் செஞ்சுதான் பார்ப்போமேன்னு தொடங்கற அவங்க ஒருத்தன  புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை அதன் பலன் நல்லதாகவே இருக்கும்னு உணர ஆரம்பிச்சிட்டாங்கன்னா வாழ்நாள் முழுக்க மத்தவங்க மனசுநோகாம இனிமையாகவேதான் பேசுவாங்க.

புரியுது. புரியுது. ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’னு பழமொழியே இருக்கே. இவர் குறுக்கிட நான் தொடையைக் கிள்ளுகிறேன்.

உளவியலாளர் தொடர்கிறார். சார் உங்க மகள் ஜனனி உங்களமாதிரியே புத்திசாலி. தனக்குப் பிடித்தது கணிதப் பாடம் அப்டிங்கறத தெளிவா தெரியப்படுத்தி இருக்காங்க இந்த டெஸ்ட்ல. அதனால அவங்களுக்குப் பிடித்த படிப்பைத் தொடர அனுமதியுங்க. வாழ்த்துக்கள்.

அவர் முடித்துவிட்டார். இவ்வளவுதானா. எனக்கு ஒரே ஏமாற்றம். இரண்டு மணிநேரம் உட்கார்ந்தது இந்த இரண்டு வார்த்தை கேட்கத்தானா. வெளியே வந்தவொடனே இவர் மீண்டும் ஆரம்பிக்கிறார். நம்ம பக்கத்து வீட்டு ரமேஷும் அவர் மனைவியும் தம் பிள்ளையக் கூட்டிக்கிட்டு வந்து வகுப்பாசிரியர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க. ரமேஷ் ரொம்ப வருத்தமா சொல்லிக்கிட்டு இருந்தான். எம் பையன் நிறைய கெட்ட வார்த்தைகளை சரளமா உபயோகிக்கிறான். அவன் வகுப்புல இருக்கற பசங்கள கண்டிச்சு வைங்கன்னு. அதுக்கு அந்த ஆசிரியர் இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்ல. உங்க மகன்தான் மத்த பசங்களுக்குக் கத்துக் கொடுக்கிறான். அதப் பத்தி பேசதான் நான் உங்களக் கூப்பிட்டுவிட்டேன். ஒண்ணும் பெரிய பிரச்சினைஇல்ல. எங்க பள்ளியில உளவியலாளர் இருக்கார். அவர் கிட்ட தொடர்ந்து ஒருவாரம் அரைமணிநேரம் அனுப்பினா சரியாயிடும். அதுக்கு உங்க அனுமதி தேவை. அதுக்காகத்தான் கூப்பிட்டுவிட்டேன்னாங்க. நான் நிக்கறத கவனிச்சுட்டு அவங்க திரும்பிப் பாத்ததால வந்துட்டேன். அதனாலதான் இப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

பாத்தியா அவன் சாயம் எப்டி வெளுத்திருச்சுனு. வீட்டுக்குள்ள இவன் சண்டபோடும் போது சொல்ற வார்த்தைகளத்தான் பிள்ளை பள்ளிக்கூடத்துல சொல்றானோ என்னவோ. என்னவரின் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்க நான் ஜனனியுடன் மௌனமாய் நடந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *