சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல் :
சிந்தை செய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் மடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள்வார்,
அருஞ்சொற்பொருள்:
சிந்தை = மனத்தால்நினைப்பது, அல்லது = அன்றிவேறொன்று, அந்தி வண்ணர் = செவ்வான நிறம்படைத்தசிவன், கந்தை = கிழிந்தஆடை, கீளுடை = கோவணம். வரும்பயன் = நற்பயன்.
பொருள்:
அமர்நீதி நாயனார், தமது மனத்தினுள் எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்றையும் எண்ணாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய சிவபெருமானுக்கே உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து அதற்கேற்பக் கந்தையுங் கீளும் உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால் வந்த செல்வத்தினது வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று வருதலாலுளதாகிய உறுதிப் பயனைக் கொள்வாராய்(விளங்கினார்)
விளக்கவுரை:
இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப் பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது – எப்போதும் எண்ணுவது.
கழல் அல்லதொன்றில்லார் – என்றதொடரில் அல்லது ஒன்றுஇல்லார் என்ற இரண்டு எதிர்மறைகள் தேற்றப் பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள் குறித்தன. “அதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு“ என்ற குறளில் அல்லது இல்லை என்றாற்போற் கழலினையல்லாது வேறொன்றினையும் இல்லாதவர்.
அந்தி வண்ணர் – என்றதொடர் அந்தி – மாலை. அது அக்காலத்தில்தோன்றும் செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர். “செவ்வான வண்ணர்“ – தேவாரம். தீ என்பது தி எனக் குறுகிநின்ற தென்று கொண்டு அம் தீ அழகிய தீ – நிறம் என உரைத்தாலும் பொருந்தும் “அழல் வண்ண வண்ணர்“, எரிபோன் மேனிப்பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர் திறம்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. தீ என்பது தன்னுட்பட்ட பொருள்களை எரித்துத் தீயனபோக்கித் தூயதாக்கும். இறைவன்திறம் அத்தகையது!
கந்தை – பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக வைத்து நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வையாடை. கீள் – அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பார் காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியார். கந்தை – கிழிந்த ஆடை என்றலுமாம்.
“கந்தை மிகையாங் கருத்தும்“
“சாம்பற் பூச்சுங்கீ ளுடையுங் கொண்ட வுருவம்“ என்பன தேவாரப்பாடல்கள் உடை – இடையில் உடுக்கும் துகில். ஐகாரம் – செயப்படுபொருளில் வந்த விகுதி; உடுக்கப்படுவது.
கோவணம் – அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக் கட்டுவது. இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும் கொள்ளப்படும். “நால்விரற் கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“ என்பன தேவாரம். இச்சரிதம் கோவணத்தினின்று விளைவதாகலின், பலவகை உடைகளிலும், இதனைத் தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.
கருத்தறிந்து உதவி – அடியார்கள் எதையும் பெற விரும்பமாட்டார் ஆதலால், அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. ஆதலால் அவர்தம் தேவையறிந்து, அதனை நிறைவேற்றுவது சிவனடியார்களின் நற்பண்பாகும்.
வந்த செல்வம் என்ற தொடர், இருந்த செல்வங்களுடன் வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தையும் குறித்தது “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“ என்றபடி பல நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம் இறைவனைப் பூசித்ததன் பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம் என்றலுமாம்.
வளத்தினால் – அவற்றின் வாணிபத்தினால் ஈட்டிய வளங்களைக் கொண்டு.
வரும்பயன் – இவ்வுலகில் வருதலால் உளதாகிய உறுதிப்பயன். பயனை வளத்தினாற் கொள்வார் என்க, கொள்வார் – கொள்வாராகி – அடைவாராகி; முற்றெச்சம். இப்பாடலை, கொள்வார் – அமுது செய்வித்து – வணங்கிச் – சமைத்தார் எனக் கூட்டி முடிக்க.
இப்பாடலில் அமர்நீதி நாயனார், அடியார்களுக்கு மிகச்சிறிய தேவையாகிய கீளுடை கொடுத்தார் என்பதிலிருந்து, அடியாரின் மிகப்பெரிய தேவைகளாகிய உணவையும், மற்றும் வாழ்க்கைக்குரிய பெரும் பொருள்களையும் இறையருளால் பெற்றுக் கொடுக்கும் பண்புநலம் பெற்றவர் என்பதும், கீளுடை என்பது இறைவன் திருவருளின் பெருமையைக் குறிக்கும் என்பதும், அதன் வலிமையும் தகுதியும் மிகவும் பெரியவை என்பதும் இறைவனைச் சார்ந்த எப்பொருளும் பெருமை மிக்கது என்பதும், செல்வமும் கொடையும் இறைவன் திருவருளால் அமைவதாகும் என்பதும் குறிக்கப் பெற்றன,