திருச்சி புலவர் இராமமூர்த்தி

“நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
சொல்லு வித்ததுஎன் கோவணம் கொள்வது துணிந்தோ?
ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று
எல்லை யில்லவன்  எரிதுள்ளி னால்என  வெகுண்டான்.

நல்லூர்  அமர்நீதியாரிடம்  தம்  கோவணத்தை  வைத்துச்  சென்ற  வேதியர் அக்கோவணத்தை மறைத்துவிட்டு  அதற்குத்  தலைமுழுகினாரோ, சடையில் உள்ள கங்கைநீரில்  நனைந்தாரோ, வானம் பெய்த மழையில் நனைந்து வந்தார். அவரை அறுசுவை உணவுடன் அமர்நீதியார் வரவேற்ற பொழுது, ‘’நான் ஈரத்தை  மாற்ற முன்பு உம்மிடம் தந்த  கோவணத்தை தருக’’  என்றார். அந்தணரின் சூழ்ச்சியை அறியாத அமர்நீதியார்  அக்கோவணத்தை  வைத்த இடத்தில் காணாது, எங்கெங்கும் தேடினார். கோவணத்தைக் காணா மையால் பெருந்துன்பமுற்றார். தம் இல்லத்தில்  மனைவியார் மற்ற உறவினர்கள்  யாவரும் இப்படி ஒரு சங்கடம் வந்ததே   என்று திகைத்தனர். ஆகவே  வேதியர் அணிந்து கொள்வதற்கேற்ற நல்ல கோவணத்தை எடுத்துக் கொண்டு, அவர்முன் சென்று ‘’ நீங்கள் அளித்த கோவணத்தை வைத்த  இடத்தில் காணவில்லை;  யாரும் அதனை எடுத்து வைக்க வில்லை; இது வியப்புக்குரியது!  ஆதலால்  நீறு புனைந்த  நெற்றியடைய வேதியரே, நன்றாகப்  புதிய துணியால் நெய்த வேறொரு  நல்ல  கோவணம் கொண்டு வந்தேன்; ஈரத்தை மாற்றி, என்னை மன்னித்து, இதனை அணிந்து கொள்க’’ என்று வேண்ட வேதியர், ‘’இன்று காலையில் வைத்த கோவணம்  இன்றே காணவில்லை என்கிறீர், பலநாளும் ஆகவில்லை, வேறொன்று தருகிறேன் என்பது சரியோ?’’; இதுவரை நல்ல கோவணம் தருவேன் என்று ஊரறியக் கூறி, என் சிறந்த ஆடையைக் கவரும் நும் வியாபார உத்தியோ?‘’ என்று கனல் உமிழும் சொற்களால்  வைதார். அந்தப்பாடல் ,

“நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
சொல்லு   வித்ததுஎன் கோவணம்   கொள்வது   துணிந்தோ?
ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று எல்லை யில்லவன்  எரிதுள்ளி   னால்என  வெகுண்டான்.

பொருள்:

“நல்ல கோவணந் தருவேன் என்று உலகிலே பல நாளும் சொல்லச் செய்வது எனது கோவணத்தைக் கொள்வதற்குத் துணிந்துதானோ? விரைவாக நீர் இங்குச் செய்த வாணிபம் உமக்கு அழகிதே!“ என்று கூறி, எல்லையிலாதவராகிய இறைவர் எரிதுள்ளினாற் போலச் சினந்தார்.

விளக்கம்:

நல்ல….சொல்லுவித்தது – நாயனார் உலகில் தமது செயலைத் தாமே விளம்பரப்படுத்தியதாகக் கூறியவாறு.

‘’உங்கள் பழைய பொருளை போட்டுவிட்டுப் புதியதை எடுத்துச் செல்லுங்கள்‘’ என்று விளம்பரப்படுத்தலே (Advertisement) வியாபார முறை என்பதை இந்நாள் மக்களுக்குச் சொல்லவேண்டுவதில்லையன்றோ?

சொல்லுவித்தது – பலரும் எடுத்துச் சொல்லும்படி செய்தது. உலகின் மேல் – உலகிலே மேற்போக்காக. மேன்மையாக என்றலுமாம்.

கொடுப்பன் என்று சொல்லுவித்தது, கொள்வது துணிந்தோ? – கொடுப்பதும் கொள்வதுமே வாணிபத் தொழிற்குரியன. “கொடுப்பதுங் குறைபடாது கொள்வது மிகைபடாது“ என்ற பட்டினப் பாலையை  இங்கு நினைவு கூர்க. இக்கருத்தினைத் தொடர்ந்தே பின்னரும் “ஈங்குறு வாணிபம் அழகிதே“ என்றார் இங்கு மறையவர் நாயனாரது குலத்தொழிலையும் சுட்டி இழித்துக் காட்டுவது போலக் கூறியது. தமது மிக்க வெகுட்சியையும் அறிவித்து, அவர் செயலைமிக இழிவுபடுத்துவது போன்று காட்டி, அதற்கும் கீழ்ப்பட்டுநின்ற அவரது அன்பின் பெருமை காட்டுதற்காம்.

அழகிதே – அழகன்று. எதிர்மறை குறித்தது. “நிலைமை நன்று“ (526) என்றது போல உடன்பாட்டுப் பொருட் குறிப்பும் பெறக்கூறிய சுவை காண்க.

எல்லையில்லவன் – அளவுட்படாதவன். “அளவிலா அளவுமாகி“ முதலியனவாக முன்னர் இப்புராணத்தில்  உரைத்தனவுங் காண்க.

எரிதுள்ளினால் என வெகுண்டான் – கோப மிக்கவழிக் கண்கள் தீப்பொறி பறக்க உள்ளனபோலச் சிவக்கும். இது மிகு கோபத்தின்தியல்பு என்பர். தீயும் சிவந்து மிகுதியும் பற்றியவழிப் பொறி பறக்க நிற்கும். ஆதலின்- எரிதுள்ளினாலென தீப்பொறி பறக்க மிகுவதுபோல என்றதாம். இதனைக் “கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போல்“ என்ற சிவஞானபோதம் 10-ம் சூத்திர உதாரண வெண்பாவினுரையில் “ஒப்புமைபற்றிக் கதமிக் கெரிகதிர்“ என்றார். ஒப்புமையாதல் “எல்லை யில்லவ னெரிதுள்ளினாலென வெகுண்டான் என்றதனானுமறிக“ என்று சிவஞானபோத மாபாடியத்துள் விளக்கியருளினார்,  எமது மாதவச்சிவஞான சுவாமிகள்!

அழகிதீதுமக் கென்று – என்பதும் பாடம். 26

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.