சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
பேணும் அன்பரை நோக்கி’’நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டிநற் கந்தை கீளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல்கேட் டும்மைக்
காண வந்தனம் ‘’ என்றனன் கண்ணுதல் கரந்தோன்.
பொருள் :
இவ்வாறு வழிபடும் அன்பரை நோக்கி, ‘’ நீர் (அன்பினால்) பெருகிய அடியவர்களுக்கு மேன்மை மிக்க உணவும் ஊட்டிக் கந்தை, கீள், உடை ஆகியவற்றையும் புதிய வெண்மையான உயர்ந்த கோவணங்களையும் கொடுத்தல் கேட்டு உம்மைக் காண வந்தோம் ‘’ என்று நெற்றிக்கண்ணை மறைத்து வந்த இறைவர் சொன்னார்.
விளக்கம் :
பேணும் அன்பரை – வழிபடுகின்ற அடியவர்களை, பெருகிய- ஓர்அடியாருக்கு உணவு உடை,முதலிய எல்லாம்உதவுதல்கேட்டு அடியார்கள் பலரும் வந்தடைகின்றமை யால் அளவினால் பெருகிய என்றும் பொருள் கொள்ளலாம்,
‘’ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவிலார் உளம்மகிழவே’’ என்று சேக்கிழாரே கூறுதல்காண்க மேன்மையில் ஊட்டி – மேம்பட்ட வகையில் உணவளித்து, மேன்மை என்பதை உணவுக்காக்கி மேன்மையில் ஊணும் என்று கூட்டி உணவின் சிறப்புரைத்ததாகக் கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும், உணவின் சிறப்பும் 442, 443 திருப்பாட்டுக்களிற் காண்க .
ஊட்டி – ஊண்பித்து. தாய் குழந்தையை ஊட்டுவதுபோலக். காலம் -அளவு – தகைமை – விருப்பு – முதலியன அறிந்து அன்போடு உண்ணச் செய்து என்பதாம். “பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து“ என்ற திருவாசகங் காண்க. உண்பது அடியவர் செயல் என்று காண இயலாதபடி அவர் உண்பது இவர் ஊட்டுவதாகிய செயலேயாய் நின்றது எனக் குறிக்கும் பிறவினைக் கூற்றிற் கூறிய சுவை காண்க.
கந்தை முதலியன- கந்தையாவது கிழிந்த துணிகள் பல சேர்த்துத் தைத்த பொந்தையேயாயினும் பற்றற்ற அடியார்கள் இதனையே வேண்டுவா ராதாலானும், வேண்டுவார் வேண்டியது தருதலே சிறந்த கொடையாதலானும், அதனையே உதவினர் என்ப.
யாணர்வெண்கிழிக் கோவணம் – இச்சரித நிகழ்ச்சிக்குக் கோவணம் காரணமாதலின் இதனை உடை வகைகளினின்று வேறு பிரித்து, யாணர் – வெண் – கிழி – என மூன்று அடைமொழிகள் தந்து சிறப்பித்துக் கூறினார். யாணர் – புதிய – அழகிய – நல்ல என்றலுமாம். கிழி – கிழி போன்ற. கிழி – பொன் முடிப்பு. எழுது படம் என்றலுமாம். இறைவனின் கீளுடை புதுவருவாய், தூய்மை , பொன் முடிப்பு போன்ற உயர்வு கொண்டது என்று பாடுகிறார்!
உம்மைக் காண – உம்முடைய தொண்டின் விளக்கங் கண்டு உலகிற்குக் காட்டும்பொருட்டு என்க. “ தொண்டரை விளக்கங் காண’’ என்ற பகுதியைக் காண்க! ஒன்றை வாங்கவாவது,கொண்டு போகவாவது அன்று; காணமட்டும் என்ற குறிப்புமாம். “சும்மா உங்களைப் பார்க்க வந்தேன்“ என்னும் உலக வழக்கும் காண்க.
காண – கண்ணுதற் கரந்தோன் – காண வந்தவன் கண்ணைத் திறந்து வராமல் அதனைக் கரந்து வந்தான் என்ற நயமுங் காண்க. அக் கண் அடியாரிடத்துக் காட்டாது மறைத்தருளுங் கண் என்ற குறிப்பும் காட்டுகிறது!
ஈவது கேட்டு – பேணிய அடியார்க்கு – என்பனவும் பாடங்கள். 11
இப்பாடலில் அடியார்முன் காட்டிய கீளுடையின் சிறப்பு அதன் புறத் தோற்றத்தைப் பொறுத்ததன்று, அதன் அகமதிப்பைக் காட்டும் அழகுடையது என்பதை விளக்குகிறது!