திருச்சி புலவர் இராமமூர்த்தி

  1. இலைமலிந்தசருக்கம்

  1. எறிபத்தநாயனார்

திருத்தொண்டர் வரிசையில் ஒன்பதாமவராக வருபவர் எறிபத்தநாயனார். அவருடைய அருள்வரலாறு திருத்தொண்டர்புராணத்தின் மூன்றாம் சருக்கமாகிய  இலைமலிந்தசருக்கம் என்றபகுதியில் அமைகிறது.

சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை பதின்மூன்று எண்சீர் விருத்தங்களால் ஆனது. இந்நூலின் முதல்சருக்கம் திருமலைச்சருக்கம் ஆகும். அடுத்து   இரண்டாம் பாடல் தில்லைவாழ் எனத் தொடங்குகிறது. அதனையே சேக்கிழார் பெருமான்  தம் திருத்தொண்டர் புராணத்தின் இரண்டாம்  சருக்கமாகக்  கொண்டு ‘’தில்லைவாழந்தணர்  சருக்க’’த்தில்  அடியார்கள் எண்மரின் வரலாற்றைப் பாடினார். அவ்வாறே பதின்மூன்று சருக்கங்களுடன்  இப்புராணம்  அமைந்தது.

இரண்டாம் விருத்தத்தின் முதலடி ‘’இலைமலிந்த சீர்நம்பி’’  எனத்  தொடங்குவதால் இரண்டாம் சருக்கம், ‘’இலைமலிந்த சருக்கம்’’ ஆயிற்று. இதில் ஒன்பதாம் அடியாராகிய எறிபத்த நாயனார் அருள்வரலாறு முதலில் அமைந்தது! அந்நாயனார் அவதரித்த கருவூர்பற்றி  முதலில்  சேக்கிழார் கூறத்  தொடங்குகிறார்.

பாடல்

பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்
மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்
தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி முதூர்.

பொருள்

பழைமையாகிய   நெடிய   கருவூர்  என்று  சொல்லப்பெற்றது இவ்வூர். இவ்வூர்  ஒளியும் அழகும்  உடைய  வீதிகள் நிறைந்த  பழைய ஊராகும்.  வெற்றியின் அடையாளமாக  சோழர் மரபின் முன்னோர் இமயமலையின்  உச்சியில்  புலிக்கொடி ஏற்றினர். பின்னர் தம் நாட்டுக்கு  வரும் பல வழிகளையும் அடைத்து , ஒரு பெரும் வாயிலை அமைத்தனர். கரிகாற் சோழர்  முதல் அநபாயச்  சோழர் வரை ஆண்ட சோழர்கள்  இமய மலையிலும்,  தம் நாட்டிலும் காவல் பொருந்திய  புதிய  வழிகளை அமைத்தனர். அத்தகைய காவல் மிக்க ஊரே கருவூர் . இது சோழர் தலைநகரங்களில் ஒன்று!

நம் பழந்தமிழ்  நூல்கள்  இமய மலையில் சோழர்  புலிக்கொடியையும் , சேரர்  விற்கொடியையும், பாண்டியர்  மீன் கொடியையும்  ஏற்றி  அரசாண்டனர் என்பதை ஆதாரங்களோடு  கூறுகின்றன.

‘’பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்’’

என்ற தொடர்  பொன்மலையாகிய  இமயத்தைப் புலி வென்றோங்கிய காலத்திலிருந்து தம்நாட்டிற்குள்   நுழையும் பெருவழியைத் தவிர வேறு வழிகளை  அடைத்து வைப்பது பாதுகாப்பு நெறியாகும். இக்காலத்திலும் எல்லைப்புறப்   பாதுகாப்பு என்றபெயரில் நீர், நில எல்லைகளை அரண் நிறுவிப் பாதுகாத்தலைக் காண்கிறோம்.

‘’மன்னிய  அநபாயன் சீர் மரபின்’’ என்ற தொடரால் சேக்கிழார் தம்காலத்தில்  தம்மைக்காத்த அநபாயச் சோழன் மரபின், முன்னோர்களையும் கருதிப் போற்றிய செயலைக் குறித்தது. அநபாயன் – இப்புராணம் பாடுவித்துச் சைவ வுலகத்துக்குச் செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரைச்  சேக்கிழார்  நன்றியுடன் பாராட்டி வைத்த பதினோரிடங்களில்  ஒன்றாகும்.

இவ்வாறு தம் காலத்து மன்னரை முன்னோருடன் இணைத்துப் போற்றுதலைக் கம்பராமாயணத்தில் ‘’சடையன்  வன்மை மரபுளோர்  கொடுக்க  வாங்கி   வசிட்டனே புனைந்தான் மௌலி‘’  என்ற பகுதியில் சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் கொடுக்க, வசிட்டர்  வாங்கி இராமனுக்கு  முடி சூட்டினார் என்ற நன்றி பாராட்டும்  கவிஞரியல்பு  புலனாகிறது.

‘’சீர் மரபின்மா நகர மாகும் தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி  முதூர்.’’

என்ற தொடர்,  சோழர் மரபில் முடிசூட்டும் மரபில்  வந்த கருவூரைக்  குறித்தது. புகார், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் ஆகியவை  முடிசூடியும்  பழமையான  ஐந்து பதிகள் என்பது இப்புராணத்தில் உள்ள சான்றாகும். அவ்வூரின் வீதிகள் சுடர்மணிபோல்  ஒளிவீசும்  என்பது அவ்வீதி இந்த வரலாற்றில் சிறப்பிக்கப் பெறுவது கருதியே.

இப்பாடலில்  எறிபத்த நாயனாரின் சிறந்த குண நலன்களுக்கு அவர் தோன்றிய நகரமும் துணையான சூழலைப்  புலவர் பெருமான் காட்டுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *