படக்கவிதைப் போட்டி 295இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
குட்டிப் பூனையைத் தாய்ப்பூனை கவ்விச் செல்லும் இக்காட்சியை அழகாய்ப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. கிஷோர் குமார். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
பூனை தன் குட்டியை வாயால் கவ்விச் செல்வதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி ’மார்ச்சால நியாயம்’ என்று கூறுவர்.
இதன் விளக்கமாவது, பூனை தன் குட்டிகளைத் தானே தூக்கிச்சென்று பல இடங்களிலும் வைத்துப் பாதுகாப்பதைப் போல ஆண்டவனே வந்து நம்மைக் காப்பாற்றிப் பரமபதத்தை அளிப்பான் என்பது தென்கலை வைணவரின் நம்பிக்கை. எனவே இதற்கு மார்ச்சால நியாயம் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ஒளிப்படத்துக்கு நம் கவிஞர்கள் எத்தகைய கவிதைகளை வழங்கி ஒளியூட்டப்போகிறார்கள் என்பதை அறிந்துவருவோம் வாருங்கள்!
*****
“மந்தியானது தாய் மந்தியைக் கவ்வுவதுபோல் நானுன்னைப் பற்றவேண்டும் (மர்க்கட நியாயம்) என எண்ணாமல், பூனை தன் குட்டியைக் கவ்விக் காப்பதுபோல் (மார்ச்சால நியாயம்) நீ என்னைப் பற்றிக் காப்பாய்” என்று பிறைசூடிய பெம்மானை அன்புருக வேண்டுகின்றார் திருமிகு. இராதா.
பிறை சூடிய பெம்மானே எனது
பிணிகளுக் கெல்லாம் அரு மருந்தே
ஆறறிவு இருந்தும் அறிந்திலேன்
அடியார் மனத்துள் வாழ்பவனே
கண்ணுக்குக் கண்ணாக இருக்கும்
கருப்பொருளே காலாதீதனே!
விண்ணவருக்கும் எட்டா
வேத விழுப்பொருளே! பழமையனே!
நின்னை அடையவே நீலகண்டனே
நீள்கழல் காட்டியும் நின்னை மறந்து
நெஞ்சமோ எனது வஞ்சகமே செய்ய
பஞ்சமா பாதக வழி நடக்கின்றேனே!
செய்வதறியாது பிறவி தோறும்
பிறந்து உனை மறந்து திரிந்தேனை
மந்தி தாய் மந்தியைக் கவ்வுதல் போல
நான் நின் கழல் பற்றுவது முறையோ?
ஆதலினாலே ஆலமுண்ட அரசே
நீயே நின்னருள் கரம் கொண்டு
பூனை தன் மகவினைக் கவ்விக்
காப்பது போலக் காத்தருள்வாயே!
*****
”தாக்கும் புலிக்குமுண்டு தாய்ப்பாசம்; இதனை மனிதர்கள் மறந்துவிடலாகாது என்பதற்கு இக்காட்சியொரு பாடம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
பாடமாய்…
தாய்மை என்பது மிகவுயர்வே
தாக்கும் புலிக்கும் வேறில்லை,
ஓய்வு யென்பதே அதற்கில்லை
ஓடிச் சேயிரை தேடிடவே
பாய்ந்து செல்லும் வரையினிலே
பற்றியே வாயில் தூக்கிடுமே,
தாய்மை மறந்த மனிதருண்டு
தவிக்க விடுவோர்க் கிதுபாடமே…!
******
”பால் வைத்துப் பரிவுகாட்டி வளர்த்தாலும் மனிதர்களை நம்பாது குட்டியைத் தூக்கிச் செல்லும் சந்தேகப் பிராணியான இப்பூனையைப் போலவே மனிதர்களாகிய நாமும் உண்மைக்கும் பொய்ம்மைக்கும் வேற்றுமை அறியாது மூடர்களாய்த் தவிக்கின்றோம்” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
குருட்டுப் பூனை
பால் வைத்துப் பரிவுகாட்டி
மடிமீது தானமார்த்தி,
தாலாட்டித் தூங்கவைத்து
அன்பு காட்டி வளர்த்தாலும்
முழுவதுமாய் நம்பவில்லை
மதிலமர்ந்த பூனையிது!
தாவிச்சென்று சட்டென்று கவ்வித்
தூரமாய்த் தூக்கிச் சென்று
கண்ணில் காட்டாமல்
மறைத்துப் பதுக்கிவைத்துச்
சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
முக்காடிட்ட சைவப் பூனை!
உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
வெளியிலே வேடமிட்டுக்
கள்ளத்தின் நாற்றத்தை
வார்த்தைப் புனுகுபூசி
தினந்தோறும் மறைத்ததினால்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வேற்றுமையை அறியாமல்
தன் பிம்பக் காட்சியினை
பிறர்மீது ஏற்றிவைத்து
இருண்டு போன உலகமென்று
கண்மூடி அழுகின்றோம்!
*****
”இப்புவி இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது தாய்ப்பாசமெனும் உணர்வினாலே; தாய்மையைப் போற்றுவோர் போற்றப்படுவர்; தூற்றுவோர் துன்பப்படுவர்” என்று தாய்மையின் தூய்மையைப் பாவில் போற்றியிருக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.
புலி என்றாலும்
பூனை என்றாலும்
தாய்மை என்பது
தன்னிகரில்லாதது
கடிவதெல்லாம்
காப்பாற்ற அன்றி
கண்டிப்பதற்கல்ல!
கொடும் புலியின் கண்கள்
கருணை பொழிவது
பாலூட்டிக் குட்டிகளை
அரவணைக்கும் பொழுது மட்டுமே!
பண்பான பசுவின்
கண்களில் கனல் தெறிப்பது
கன்றுகளை எவரேனும்
காயப்படுத்தும் பொழுது மட்டுமே!
எதிர்பாரா அன்பே
தாய்மையின் அடையாளம்
இப்புவி இன்னமும் இயங்குவது
அதனால்தான்!
காந்தியின் அன்னையும்
கோட்சேயின் தாயும்
மகன்மீது காட்டிய அன்பு
மாறுபட்டதல்ல
அதுவே அன்னைகளின்
பலமும் பலவீனமும்!
தாய்மையைப் போற்றுவோர்
போற்றப்படுகிறார்கள்
தூற்றுவோர் துன்பப்படுகிறார்கள்!
*****
தாய்ப்பாசத்தின் அருமையை இப்படத்தில் கண்டு நெகிழ்ந்து, அதனைத் தம் கவிதைகளில் உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை உளமாரப் பாராட்டுவோம்!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
தாய்மை
எத்தனை இயற்கைச் சீற்றங்கள்
கீறிவிட்டது இப்பூமியை…
இருந்தும்
இன்றும் நிறுத்தவில்லை
சுற்றுவதை இந்த பூமி!
காரணம்…
பூமிக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்
அதன் பெயர்தான் தாய்மை!
பூமியில் தாயான ஜீவராசிகளும்
தன் குழந்தைகளைக் காக்கிறது
பூமியைப்போல…
எதிரிகளிடமிருந்து காக்கும் போது
வருவதுண்டு சிறு துன்பங்கள்
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகாது!
பூனை தன் வாயால் கவ்வக் குட்டியும் சாவதில்லை
இதைப்போலத் தாய் தந்தை ஏசுவதும்
பிள்ளைகளின் நலனுக்கே
இதனை உணர்ந்த பிள்ளைகளே
உயர்வார்கள் உலகம் மெச்ச
உணராத பிள்ளைகள் உயர்வதில்லை!
கோழி மிதித்துக் குஞ்சு முடமாவதில்லை; பூனை கவ்வி அதன் குட்டி சாவதில்லை. ஈதொப்ப, தாய்தந்தையரின் ஏச்சு பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பதற்கேயன்றிச் சீரழிவதற்கில்லை என்பதையுணர்ந்த பிள்ளைகள் வாழ்வில் சிறப்பர்” எனும் நல்ல கருத்தை நவின்றிருக்கும் திருமிகு. இராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.