Category: பொது

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(245)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். கடந்தவாரம் மடல் வரைய முடியாத ஒரு சூழ்நிலை. நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்காக கனடா வரைசென்றிருந்த நான் அங்கிருந்து திரும்பாத நிலையில் மடல் வரையும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தேன். இப்போது நான் வரையும் இந்த மடல் கனடாவிலிருந்து திரும்பி இங்கிலாந்திலிருந்து வரையும் மடலாகும்.

    வாழ்க்கையில் சில சில சந்தர்ப்பங்கள்
    ஒரேயொருமுறைதான் பலருக்குக் கிட்டுகிறது. சில சமயங்களில் பற்பல காரணங்களினால் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடும் நிலையேற்படுகிறது. தவறவிட்ட பின்னால் அந்நிகழ்வின் மகத்துவத்தை, அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுகிறோம். கடந்து போன சாதாரண நாள்களைப் போல் இந்நிகழ்வையும் கடந்து போய்விட்ட ஒரு சாதாரண நிகழ்வென்றே எடுத்துக் கொள்கிறோம்.

    கடந்த ஐந்து வருடங்களின் முன்னால் இதே போன்ற நான் படித்த யாழ் மத்திய கல்லூரியின் எழுபதுகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று இதே கனடாவின் ரொராண்டோ மாநகரில் நிகழ்ந்தது. அதற்கும் எனது நண்பர்களின் மூலம் அழைப்பு கிடைக்கப்பெற்ற நான் பல காரணங்களினால் அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது. காலங்கள் கரைய அதுவும் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்டிருந்தது. அந்நிகழ்வினால் தாமடைந்த அளப்பரிய அனுபவங்களை எனது நண்பர்கள் மூலம் அறிந்தாலும் நான் எத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டேன் என்பதின் முழுத்தாக்கத்தையும் நான் அறிந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே கல்விபயின்ற பாடசாலையின் மீது இவ்வளவு ஈர்ப்பா என்று எண்ணும் என் சில நண்பர்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டு வருடங்களும் எனக்கு வாழ்வின் இனிய இருபது வருடங்களின் அனுபவத்தினைக் கொடுத்தது என்பதுவே உண்மை. அது எனது பள்ளிப்பருவத்தின் ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அப்பொற்காலத்தில் நான் பழியறிந்து, பார்த்துப் பேசிய தோழர்களின் ஞாபகங்கள் இன்றும் என்னுள்ளத்தில் ஈரப்பசையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.

    என் வாழ்வினில் நான் என் சகோதரனைப் போல, சகோதரனைவிட நேசத்தோடு பழகிய எனது உற்ற நண்பன் வாழ்வது கனடா நகரிலே என்பது எனது இந்த விஜயத்தின் மற்றொரு மகிழ்ச்சியாகும். அதுதவிர கனடாவில் வாழும் எனது மூத்த சகோதரன் ஓர் பேரனைப் பெற்று பாட்டனாகிய நல்ல நிகழ்வும் நான் கனடா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. லண்டனில் வாழும் என் குடும்ப அங்கத்தினர் சார்பில் பேரனைப் பார்த்த முதல் அங்கத்தினன் எனும் பெருமையையும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது என்பதும் இவ்விஜயத்தின் குரிப்பிடக்கூடிய அம்சங்களில் ஒன்றாகும். நிகழ்வுகள் ஆரம்பமாவது ஜூலை மாதம் 29ஆம் திகதி என்ற போதும் பத்து நாள்களுக்கு முன்னதாகவே நான் கனடா சென்றிறங்கி விட்டேன். நிகழ்வுகள் ஆரம்பத்தின் முன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பத்து நாள்கள் அவகாசம் நான் பார்க்க வேண்டிய எனது முக்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கான கால இடைவெளியைக் கொடுத்தது. எனது தாய்வழிச் சொந்தங்களே கன்டாவில் அதிகமாக உள்ளனர். அவர்களை, அதுவும் மூத்தோர்களைச் சந்திப்பதையே முக்கியமான கடமையாகக் கொண்ட எனக்கு எனது உற்ற நண்பனின் உதவியோடு என்றோ எப்போதோ லண்டனில் ஏதோ என்னாலான சிறிய உதவியைச் செய்த நண்பரொருவர் ஓடோடி வந்து உதவியது வாழ்வின் உண்மையான உறவுகளின் உன்னதமான யதார்த்த நிலைகளைப் படம் போட்டுக்காட்டியது.

    sakthi

    இந்த ஒன்றுகூடலின் உண்மையான் நோக்கம் எழுபதுகளில் யாழ் மத்தியக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று அகிலம் முழுவதும் பரவிக் கிடப்போரை ஒன்றிணைத்து அக்கால பசுமையான நினைவுகளை மீண்டும் உள்ளத்தில் மலரச் செய்து தொலைந்து போன கணங்களை சிலநாள்களுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதே. இவ்வற்புத நிகழ்வுகளுக்கான மேடைகளை அமைத்து, இத்தகைய ஓர் அரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நான்கே நான்கு பேர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இவர்களின் பின்னால் நின்று பலர் தார்மீக ஆதரவை நல்கியிருந்தாலும் இவர்களின் இந்த மகத்தான சேவையும் இச்சேவையைப் புரிவதற்கு இவர்கள் பின்னால்நின்று இவர்களை இயக்கிய இவர்களின் வாழ்க்கைதுணைகளும், அவர்தம் குடும்ப அங்கத்தினர்களும் ஆற்றிய அளப்பரிய சேவைகளை வெறும் வார்த்தை அலங்காரங்களினால் விவரித்து விட முடியாது. ஆமாம், சிவா, மதி, ரமீஸ், பேரி எனும் இந்த நான்கு அன்பு உள்ளங்களும் இவர்களுக்குப் பக்கதுணையாக நின்று பணியாற்றிய இவர்களின் வாழ்க்கைத்துணைகளும் எம் அனைவருடைய அன்பான நன்றிகளுக்கு உரித்தானவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகிறது.

    சரி, இனி இந்த விழாவிற்கு வருவோம். இவ்வொன்றுகூடலில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் இவ்விழாவினை ஒழுங்கு செய்தோரின் இல்லங்களில் அறிமுக ஒன்றுகூடலுக்கான விருந்துகளில் கலந்து கொண்ட நிகழ்வோடு 29ஆம் திகதி ஆரம்பமாகியது விழா. ஆகா ! சுமார் 43 வருடங்களின் பின்னால் நான் சந்தித்த பழைய நண்பர்களின் தற்போதைய தோற்றம் மாறியிருந்தாலும் மத்தியக் கல்லூரியின் வாசம் அவர்களது மனத்தை விட்டு அகலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகவில்லை.. தொடர்ந்து 30ஆம் திகதி இளையோருக்கான சிறப்பு நிகழ்வு, மற்றும் விடுதி இரவு, கிரிக்கெட் போட்டி என ஒவ்வொரு நாளும் களைகட்டிய நிகழ்வுகளும் அதனோடு நண்பர்களின் ஒன்றுகூடலின் சிறப்புகளும் வெறும் வார்த்தைகளினால் விளக்கக்கூடிய ஒன்றல்ல. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கச்சேரி இரவு ஆண்கள் பெரும்பான்மையோர் தமிழ்க்கலாசார உடையான வேஷ்டி, சட்டையுடனும், பெண்கள் சேலையுடனும் கலந்துகொண்டு மேடைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடிக்களித்த நிகழ்வும்,இதற்காகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு, மேற்கு கலந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் உள்ளத்தைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. அத்தோடு இந்நிகழ்வுகளை பசுமையான காலநினைவுகளைக்கூட்டும் நண்பர்களும் அமர்ந்து ரசிப்பதென்றால் கேட்கவும் வேண்டுமா?

    அடுத்த முக்கியமான நிகழ்வாக 1000 தீவுகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அனைவரும் ஓரிடத்தில் கூடி இரண்டு சொகுசு பஸ் வண்டிகளில் அக்கப்பற்தளத்தை நோக்கிப் பிரயாணித்தோம். பிரயாணித்தோம் என்றால் சும்மாவா? பஸ்ஸுக்குள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மீண்டும் அப்பதின்ம வயது மாணவர்களாகவே மாறிவிட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! மிகவும் வசதியான ஒரு சீன உணவு விடுதியில் அனைவருக்கும் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிய விருந்து, மீண்டும் பஸ்ஸிலே பிரயாணித்து அக்கப்பற்தளத்தை அடைந்தோம். அங்குக் கப்பலில் ஏறுவதற்கு முன்னால் இருமணிநேர இடைவெளி அனைவரும் காலாற நடந்தும், அப்பிரதேசத்தின் அழகினை ரசித்தும் இருக்கும்போது , அடடா ஆச்சரியம் தேநீர் தயாரிக்கும் உபகரணங்களையும் அப்பிரயாணத்தில் கொண்டு வந்திருந்த அமைப்பாளர்கள் அனைவருக்கும் யாழ் முறையில் தேநீரும்,பிஸ்கட்டும் கொடுத்து கலக்கி விட்டார்கள் போங்கள்!

    சொகுசுக் கப்பலில் ஏறி உட்கார்ந்தோம். அப்பப்பா !அருமையான பிரயாணம், அற்புதமான ஆங்கிலப் பாடகரின் தொடர்ந்த இசைமழையுடன் கூடிய இராப்போசனம். இப்பிரயாணத்தின் முக்கிய அம்சமே ஆதவன் மேற்கினுள் வீழ்வதைக் காணும் அற்புதக் காட்சி.  இது ஒருபுறமிருக்க நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே கப்பலின் மேற்தளத்தில் நின்று தமக்குள்ளே இசைமழை பொழிந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் வாழ்வினில் ஒரேயொருமுறை கிடைக்கக்கூடிய அற்புதமான அனுபவம் என்றே கூறவேண்டும். அடுத்த நாள் பிரசித்தி பெற்ற பூங்காவில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு. அங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆறுதலாக, அமைதியாக அந்நாளைக் கழித்தார்கள்.

    இவ்விழாக்களின் இறுதி நிகழ்வாக அனைத்துக்கும் மகுடம் சூட்டும் வகையில் நடனத்துடன் கூடிய இராப்போசன வைபவம் பிரசித்தி பெற்ற ஒரு மண்டபத்திலே நிகழ்த்தப்பட்டது.

    யாழ் மத்திய கல்லூரியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது யாழ் மணிக்கூட்டுக் கோபுரமே! யாழ் மத்தியக் கல்லூரியின் சில பிரபல்யமான கிரிக்கெட்வீரர்கள் இக்கோபுரத்தை நோக்கி சிக்சர்களாக விளாசித்தள்ளிய வீரசாகசக் கதைகளும் உண்டு. இவ்விழா அமைப்பாளர்கள் இக்கோபுரத்தைச் கட்டமைப்பாகச் செய்வித்து அதனை இவ்விழா மண்டபத்தின் வரவேற்பு மண்டபத்தில் முக்கிய அடையாளமாக நிறுத்தி வைத்திருந்தமை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. அனைவரும் பழைய ஞாபகங்களின் வழிநின்று இம்மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நின்று புகைப்படம் பிடித்துக் கொண்டார்கள். அதுமட்டுமின்று! அக்கால மாணவர்களின் மனத்தில் என்றும் அழியாமல் பதிந்திருப்பது பள்ளியோடு ஒட்டியிருந்த “மணியம் கடை.” அதேபோல ஒரு பெட்டிக்கடையை உருவகித்து அதிலே வாழைப்பழக் குலைகளைத் தொங்கவிட்டது மட்டுமின்றி காலத்தோடு ஓட்டிய சினிமாப் போஸ்டர்களை ஒட்டியிருந்தமை அபாரமான, அற்புதமான திட்டமாகும். இதற்காக இவ்விழாவினை ஒழுங்குசெய்த நால்வரும் எத்தனைதூரம் கடினமாக உழைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லித்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. மிகவும் ஆடம்பரமாக , அழகாக, அமைதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவினிலே மத்தியக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று நடித்த சில பாடல் காட்சிகளோடு பிரபல்யமான ஆங்கில நடனக்குழுவினரும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் எம்மனைவருக்கும் அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகப்பட்டது எமது அருகிருந்த சகோதர பெண்கள் கல்லூரியான “வேம்படி மகளிர் கல்லூரி” ஆகும். இவர்களது யூனிபார்மாக அவர்களது டை மஞ்சள் கறுப்பு வரிகளைக் கொண்டது. இவ்வமைப்பாளர்கள் இவ்விருந்து வைபவத்தில் பரிமாறும் ஆங்கிலப் பெண்கள் வெள்ளை சார்ட்டுடன் இவ்வேம்படி மகளிர் கல்லூரி டைகளை அணிவிக்கச் செய்திருந்தது அனைத்துக்கும் மகுடம் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    என் வாழ்வின் என்றுமே மறக்க முடியாத இனிமையான ஒரு நிகழ்வினை அனுபவிக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தந்த அந்நால்வருக்கும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த அந்நாளைய நட்பினை மீண்டும் எனக்கு நினைவூட்டக் காரணமாயிருந்த அனைத்து நேச உள்ளங்களுக்கும், கனடா நாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் அளித்த நல்வரவேற்புக்கும் இவைகள் அனைவரினது வாழ்க்கைத்துணைகளுக்கும், குடும்ப அங்கத்தினருக்கும் எனது உளம் நிறைந்த, தாழ்மையான, அன்பான நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

    நாலுபேருக்கு நன்றி – அந்த
    நாலுபேருக்கு நன்றி
    நானிலமெங்கும் சிதறி வாழ்ந்த
    நம்மை ஒன்றுகூட்டி
    நெஞ்சில் நிழலாய்ப் பதிந்த
    அந்தநாள் ஞாபகங்களைப்
    பசுமைபூசி மீண்டும் மலர்வித்த
    புதுமைகள் பூட்டி நிகழ்வினைப்
    பெருமைகொள் ஒன்றாய்
    நிகழ்த்திக் காட்டிய அந்த
    நாலுபேருக்கு நன்றி!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • தற்காலப் பெண்ணின் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும்

    -கு.கோபாலகிருஷ்ணன்

    முன்னுரை

                    இக்கட்டுரை, மரபுகாலம் தொட்டுத் தற்காலம் வரை சமுதாயத்தில் பெண்ணிய வளர்ச்சியும்  அதே நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களையும் காண்கின்றது. தீர்வுகள் என்பதைச் சிக்கல்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யலாம் என்னும் பாங்கில் அமைந்திருக்கின்றது.

    சமுதாயம், ஓர் விளக்கம்

                 சமுதாயம் என்பது பல்வேறு சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் சமூகக் கூட்டமைப்பு என்பர்.  தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இனப்பெருக்குவதற்கும், புதிய தேவைகளை உருவாக்கம் செய்வதற்கும், காரணிகளை உற்பத்தி செய்யும் கூட்டியக்கமே சமுதாயம் ஆகும்.

    பெண்ணியம் – விளக்கம்

                    பாலினப்பாகுபாடு தொடர்பானச் சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொள்ளவும், பெண்ணியம் தெளிவான வரையறையை வகுத்துக் கொள்கிறது. பெமினிசம் (Feminism) என்ற ஆங்கிலச் சொல் ‘பெமினா’ (Femina) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘பெமினா’ (Femina) என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பொருளாகும்.  முதலில் இச்சொல் பெண்ணின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுப் பின்பு பெண்களின் உரிமையைப் பேசப் பயன்பட்டது.

                    1890-க்கு முன்பு வரை உமனிசம் (Womanism) என்ற சொல் பெண்ணின் உரிமைப் பிரச்சனையும் அதன் அடிப்படையில் எழுந்த போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்டது. 1890லிருந்து உமனிசம் என்ற சொல்லினடத்தைப் பெமினிசம் (Feminism) என்ற சொல் பெற்றது.

                    பெண்ணியம், பெண்ணியல், பெண்நிலைவாதம், பெண்ணுரிமை எனப்பலவாறு ‘பெமினசம்’ (Feminism) என்ற ஆங்கிலச் சொல் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும் ‘பெண்ணியம்’ என்ற சொல்லே இன்று வழக்கில் நிலை பெற்று வருகின்றது.

                    ‘போர்லடபன்ச்’ என்ற அறிஞர் பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும்.  அவற்றின் வழியாக உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மிக நெறியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கை உடையதாகும்.  இளம்பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஏழைப் பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள், வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் தலையாய இலக்காகும்.

    சமுதாயச் சிக்கல்கள்

                    சமுதாயத்தில் மரபுகளைத் தொட்டுப் பெண்ணைத் தெய்வமாகவும், தாயாகவும் போற்றும் முறைகள் எண்ணற்ற சிக்கல்களையும், கொடுமைகளையும் பெண்ணுக்குப் பரிசாக கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது எனலாம்.

    1)            தொழிற்புரட்சி சிக்கல்கள்
    2)            மேற்கத்திய உருவாக்கச் சிக்கல்கள்
    3)            நகரிய உருவாக்கச் சிக்கல்கள்
    4)            புதுமையாக்க நிலைகள்
    5)            சமூகச் சீர்திருத்த இயக்கக் கூறுகள்
    6)            நாட்டு விடுதலை இயக்கங்கள்
    7)            சமநிலை இன்மை
    8)            பாலுறவுச் சிக்கல்கள்
    9)            பெண்மீதான வன்முறைகள்
    10)          குழந்தை முதல் முதியோர்வரை ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள்

    ’பெண் என்று பிறந்து விட்டால். பெரும் பிழை இருக்குதடி’ என்றான் பாரதி. இந்த ஒப்பற்ற பிறவியைத்தான் இந்த ஆண் சமுதாயம் பெரும் அடிமைப்படுத்துகிறது.

                    உற்பத்திப் பொருளாதார அமைப்பிலே (Productive Economy) ஆண், பெண் இருபாலரின் பணிகள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டதனால், குடும்பம் பொருள் உற்பத்தி செய்யும் களமாக விளங்கியது.  இவற்றின்வழிப் பெண்களுக்குச் சிக்கல்கள், போராட்டங்கள் எழலாயின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய நாள்முதல் மேனாட்டுக் கல்விமுறையும், பண்பாடும், தொழில் நுட்பங்களும் உற்பத்தி முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. ‘மகளிர் ‘ பலர் கற்கத் தலைப்பட்டனர்.  மேற்கத்தியப் பண்பாடான நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் இந்நாட்டிலும் வளரத் தொடங்கின. இதன் விளைவால் சமூகச் சிக்கல்கள், குற்றங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.  நகரிய ஆக்கத்தால் கிராமங்களில் செய்து வந்த உழவுத் தொழில்களையும், கைத்தொழில்களையும் கைவிட்டு ஆண், பெண் இரு பாலரும் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இவற்றின் வழியாக வளர்ச்சி அதே அளவுக்குப் பெண்களின் மீதான பல்வேறு சிக்கல்கள், கொடுமைகள் யாவும் வளர்ச்சி அடைய தொடங்கின.

                    கால நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளும் உருமாறின, புதிய வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தன. அரசியல், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் தழைத்தன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெகிழ்ச்சி அடையும் அளவுக்கு வளர்ச்சிப் பெற்றனர்.  வேத காலத்திலும், பழந்தமிழர் காலத்திலும், உரிமையோடு கடமையாற்றிய மகளிர் உரிமையை இழந்தனர் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.

    1)            குழந்தைமணம்
    2)            கொடுமை
    3)            விதவைத் துயர்
    4)            உடன்கட்டை ஏறுதல்
    5)            பலதாரமணம்
    6)            பிற மூடப் பழக்கங்கள்
    7)            குழந்தைப்பேறு இன்மை பிற

    மேற்கண்ட கொடுமைகள் எல்லாம் உடைத் தெரிந்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் கண்டு வரும் வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.

    தற்காலச் சமூகம்

                    இன்னும் பிறந்தக் குழந்தை பெண் என்பதால் முயற்சியில்லா மூடர்கள் சலிப்பும் வெறுப்பும் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். மேலும் காலங்காலமாய்ப் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவற்றிற்குக் கடுமையான சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் கலந்து போன ‘இன்டர்நெட்’ அறிவியல் வளர்ச்சி என்பதில் ஆபாசத்தை உட்படுத்துவது நாட்டுப் பண்பாட்டை முற்றிலும் அழித்து வருவதை பெண்கள் (இளைஞர்கள்) உணர்ந்து நடக்க வேண்டும்.

                    பெண்கள் மதிப்பும், மரியாதையும் உரிய தொழில்களைத் தேர்வு செய்து பணியாற்றிட வேண்டும். கலைத்துறை, உழைப்பு, பணியகம் இவற்றில் உடலியல் சார்ந்த அநீதிகள் தவிர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘சாதீயம்’என்ற ‘தீ’ அழிக்கப்பட வேண்டும். அது எரியும் வரைச் சமுதாயமும் எரிந்து கொண்டிருக்கும்.

                    ஆண். பெண்ணின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் என்றென்றும் வழிவகை செய்ய வேண்டும்.  பத்துமாதம் சுமந்து பெற்ற ஒப்பற்ற தெய்வம் ‘தாய் ’ ஒரு பெண்தானே என்பதை உணர்ந்து அனைவரும் வாழச் சமுதாயம் வளரும்.

    Share
  • இரு எழுத்தாளர்களின் சந்திப்பு!

    -தமிழ்த்தேனீ

    ஒரு எழுத்தாளர் வருகிறார்; ஒரு எழுத்தாளர் அவரை வரவேற்கிறார்.

    உக்காருங்க  நண்பரே  என்ன  சாப்படறீங்க?

    ஒண்ணும் வேண்டாம் சார்;  இப்போதான் காப்பி குடிச்சிட்டு வந்தேன்.

    (மனதுக்குள் ஏதாவது குடுத்தா  நல்லாத்தான் இருக்கும்.)

    முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க வெய்யில்லே வந்திருக்கீங்க.

    உள்ளே இருந்து எழுத்தாளர்  மனைவி வருகிறார்.

    அடேடே  வாங்க வீட்டுலே எல்லாரும்  சௌக்கியமா?

    நல்லா இருக்காங்கம்மா; நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரர்  ஜமாய்க்கறார்!

    எப்பிடித்தான் இவருக்கு இவ்ளோ கற்பனை வருதோ  ரொம்ப நல்லா   எழுதறாரு.

    (மனதுக்குள் ஒரு காட்சி நிழலாடுகிறது போனமுறை சந்தித்தபோது இவர் கொடுத்த புத்தகத்தை  வீட்டிலே கொண்டு போயி  சோபாவிலே வெச்சேன் இன்னும் படிக்கலே.)

    சார் நீங்க  குடுத்தீங்களே… அந்தப் புத்தகத்தை  இதுவரைக்கும்  நான் அஞ்சு தடவை  படிச்சிட்டேன்;  அலுக்கவே இல்லே.

    சார் அப்பிடியெல்லாம் ஓவரா  புகழாதீங்க;  ஏதோ  எழுதறேன்.

    நீங்க  அடக்கமா சொல்லிக்கிறீங்க.  படிக்கற  எங்களுக்குத்தானே உங்க அருமை தெரியும். (மனதுக்குள் எப்பிடி நடிக்கறான் பாரு அடக்கமா!)

    இப்போ சமீபத்திலே  நான் ஒரு புத்தகம் எழுதறேன். ரெண்டு மூணு பதிப்பாளர் கேட்டுகிட்டே  இருக்காங்க; நமக்கு இருக்கற வேலைக்கு நடுவே  எழுதறோம்; அவங்க அவசரத்துக்கு நாம் எழுதமுடியுமா?

    (மனதுக்குள் அடப்பாவி; கூசாம எப்பிடிய்யா பொய் சொல்றே.)

    எந்தப் பதிப்பகத்தார் யா உன்னை இவ்ளோ  தொந்தரவு  செய்யறாங்க  எந்தப் புத்தகமும் விக்கலேன்னு அவங்களே அல்லாடிக்கிட்டு இருக்காங்க.)

    எனக்கும் அதே நெலமைதான். ஆனாப் போனதடவை பப்ளிஷ் பண்னாங்களே அவங்களே கேக்கறாங்க;  இன்னும் ஒரு புஸ்தகம் வெளியிடலாம்னு   நானும் எழுதித் தரேன்னு சொல்லி இருக்கேன்.

    சார் நீங்க ஜமாயுங்க!  நானும் எனக்குத் தெரிஞ்ச  பப்ளிஷர்கிட்டே போகும் போதெல்லாம்  உங்களைப் பத்திதான்  சொல்லிகிட்டே இருப்பேன்.

    ஆனா ஒண்ணு  யார்கிட்டே  பேசினாலும் எங்களுக்கு அவரை நல்லாத் தெரியுமே அப்பிடீங்கறாங்க; உங்க புகழ் உங்களுக்குத்தான் தெரியலே!

    ( மனதுக்குள்  யோவ்  யாராவது  பப்ளிஷர் இருந்தாச் சொல்லேன்யா;  நானும்தான் ஒரு புஸ்தகம் வெளியிடறேன்; மனதுக்குள் அதெல்லாம் செய்யாத உன்னைப் பத்தியே நெனைச்சுகிட்டு உன் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுக்கோ.)

    உங்களுக்குச் செய்யாமே வேற யாருக்கு நான் உதவப் போறேன்; நீங்க அந்த புஸ்தகத்தை எழுதிமுடிங்க. நான்… நானே உங்களை  அழைச்சிகிட்டு போறேன்  பப்ளிஷர்கிட்டே.

    உள்ளே இருந்து  காப்பி கொண்டுவந்து கொடுக்கிறார் எழுத்தாளர்  மனைவி.

    அதை வாங்கி குடிச்சிட்டு  உங்களுக்கு  எதுக்கும்மா  வீண் ஸ்ரமம்;  நாந்தான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னேனே. ஆனா அருமையான காப்பி.

    சரி…அப்போ நான் கிளம்பறேன்.

    சரி போயிட்டு வாங்க… அடிக்கடி வாங்க!

    நீங்களும் உங்க  மனைவியைக் கூட்டிகிட்டு  வாங்க சார் நம்ம  வீட்டுக்கு.  நான் அக்கம்பக்கத்திலே  பெருமையா  சொல்லிக்குவேன் நீங்க  என் நண்பர்ன்னு.

    அப்பொ நான் வரேம்மா; வரேன் நண்பரே. நானு அந்தப் புஸ்தகத்தை  எழுதி முடிச்சு எடுத்துகிட்டு வரேன்.

    சரி நண்பரே… நானும் அதுக்குள்ளே இப்போ எழுதிகிட்டு இருக்கற  நாவலை முடிச்சிருவேன் ரெண்டு பேருமா போயி பாக்கலாம் பப்ளிஷரை.

    நன்றி! சந்திப்போம்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . .(236)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.  ஒரு சில வார இடைவெளிக்குப்பின் இம்மடல் உங்களை நாடி வருகிறது. நான் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்த ஒரு செயல் முடிவடைந்து விட்டது எனும் மகிழ்வில் ஆர்ப்பரிப்பதற்காகக் காத்திருந்த நான் காலத்தின் கோலத்தினாலும் சில மனிதாபிமானமற்ற வெறியர்களின் செயலாலும் கனத்த இதயத்தோடு இம்மடலை வரைகின்றேன்.உள்ளத்தில் ஓர் பதைபதைப்பு, உணர்வில் ஓர் துடிதுடிப்பு. கடந்த திங்கட்கிழமை எனது பேத்தியை மகனின் இல்லத்தில் சென்று பார்த்து விட்டு இரவு நேரம் கடந்து வந்ததினால் நேராக படுக்கைக்குச் சென்று விட்டோம் நானும் எனது மனைவியும்.அடுத்தநாள் காலை முதல்நாள் எனது பேத்தி சிறிது உடல்நலம் குன்றியிருந்ததினால் அவள் எப்படியிருக்கிறாள் என்று கேட்பதற்காக எனது மகனுக்கு போன் செய்தேன். காரில் வேலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த என் மகன் பேத்தி இப்போது நலமாக உள்ளாள் என்று கூறினான்.

    அடுத்து “பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் பாரதூரமானது அல்லவா?” என்றதும் “எங்கே? எப்போது?” எனும் கேள்விகள் என்னிடமிருந்து “மான்செஸ்டரில், நேற்று இரவு 10.45மணியளவில், நியூஸ் பார்க்கவில்லையா?” என்றான் மகன், உடனடியாக அவனது சம்பாஷணையைத் துண்டித்து விட்டு அவசரமாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திருகினேன். அப்போதுதான் திங்கட்கிழமை இரவு மான்சேஸ்டர் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பயங்கரம் புரிந்தது. 22 வயதே நிரம்பிய இளைஞன் பதின்ம வயது நிரம்பிய பாலகர்கள் பலர் தமது அபிமானத்துக்குரிய அமெரிக்கப் பொப்பிசைப் பாடகியான அரியானாவின் இசைநிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தோரைப் பழிவாங்கும் படலமாகத் தன்னை ஒரு தற்கொலைக் குண்டுதாரியாகப் பயன்படுத்தி நிகழ்த்திய பயங்கரவாதச் செயல்.

    ஐக்கிய இராச்சியம் முழுவதுமே அதிர்ந்து போயிருந்தது. 22 பேர் உயிரிழந்து சுமார் 60 பேர்வரை காயமடைந்து மூர்க்கத்தனமான எதுவிதமான காரணங்களுமின்றி நடத்தப்பட்ட இப்பாதகச் செயலால் பாதிக்கப்பட்டார்கள்… குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பாலகர்கள் என இழப்புகளின் மத்தியில் தவித்துக் கொண்டிருந்தது மான்செஸ்டர் எனும் மாபெரும் நகரம். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒருவகை மனோவியாதிக்குட்பட்ட இத்தகைய எண்ணம் கொண்டோர் அடுத்தவர் உயிரை அதுவும் பதின்ம வயதுப் பாலகர்களைப் பழிவாங்குவது உள்ளத்தின் அனைத்துப் பகுதிகளையும் வலிக்கப் பண்ணுகிறது .

    மதம் என்பது உருவாக்கப்பட்டதே மனித சமுதாயத்தை மனிதாபிமானம் எனும் ஒரு கோட்பாட்டுக்குள் வைப்பதற்காகவே !  எந்தவொரு மதமும் எப்போதும் கொலை,களவு, சூது, பெண்ணடிமை என்பனவற்றை நியாயப்படுத்தியது கிடையாது. இம்மதத்தினை மக்களுக்கு போதிக்கிறோம் என்று கூறி இம்மதங்களின் காவலர்கள் என்று கூறிகொள்வோரில் சிலர் தம் மனம் போன போக்கிற்கு இம்மதங்களை விளக்குவதனால் மக்களிடையே உருவாக்கும் பேதங்களே பல குற்றங்களுக்கு அடிகோலுகின்றன.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு” என்றான் ஒருவரி தந்து பலபொருள் சொன்ன வள்ளுவப் பெருந்தகை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அவ்விளைஞனின் பின்னணியை எடுத்துப் பார்த்தால் புரியும்.

    லிபிய நாட்டில் கேர்னல் கடாபி சார்வாதிகாரம் புரிந்து வந்த வேளை அந்நாட்டின் சர்வாதிகாரக் கொடுமைகளில் இருந்து தப்பி இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியவரே இவ்விளைஞனின் பெற்றோர். இங்கிலாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இங்கிலாந்துப் பல்கழகத்தில் நுழைந்த இவ்விளைஞன் தமது குடும்பத்தின் உயிரைக் காப்பதற்குத் தஞ்சமளித்த நாட்டின் சில இளந்தளிர்களின் உயிரைப் பறித்ததுதான் இந்நாட்டிற்கு அவனளித்த நன்றியறிதலாகும்.

    சரி இனி இத்தகைய தக்குதல்களினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பார்ப்போம். கடந்தவருடம் நடைபெற்ற பிரெக்ஸிட் எனப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தில் மக்களிடையே ஒருவிதமான பிரிவு தோன்றியிருந்தது. வெளிநாட்டில் இருந்து ஐக்கியைராச்சியத்துக்கு வந்து குடியேறியவர்கள் இங்கிலாந்து தேசமக்கள் தம்மை அந்நியதேசத்து மக்களெனும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் எனும் வகையில் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இப்பிரிவுக்கு இங்கிலாந்தின் இனத்துவேஷ கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூபமிட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய தாக்குதல்கள் அத்தகைய தீவிரவாத சக்திகளின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பவையாக அமைகின்றன.

    அடுத்து ஐக்கிய இராச்சியம் இன்னும் மூன்று வாரங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது, தேர்தல் பிரச்சாரம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தான் இத்தகைய தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. தேர்தலில் கட்சிகளின் உண்மையான் அரசியல் நிலைப்பாடுகளைக் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சியின் மீது பொதுமக்களுக்கு ஒருவிதமான சாயத்தைப் பூசுவது போன்றே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலின் விளைவு என்றே கருத வேண்டியதாகவுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் தேர்தல் வெற்றியானது ஒருவகையான இனத்துவேஷத்தைக் கிளறிவிட்டிருந்தது என்றே கூறவேண்டும். அவர் இப்போது தனது நிலைப்பாட்டை சிறிது தீவிரமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாலும் அவரது வெற்றியின் பின்னணியில் ஒருவகையான வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான குரல் இருந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இஸ்லாம் எனும் மதத்தினருக்கு எதிராகச் செய்யப்படும் பிரசாரங்கள் வெறும் பிரசாரங்களாகவே இருந்தாலும் இத்தகைய தாக்குதல்கள் அப்புனித மதத்தின் மீது அவதூற்றைப் பரப்பும் ஒரு செய்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரானவர்களாகவும், அனைத்து மதத்தினரோடும், தாம் வாழும் ஐக்கிய இராச்சியத்தின் உண்மையான விசுவாசிகளாக இருப்பினும் ஒருவகை அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அந்நிலையை மேலும் நிரூபிக்கவே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உதவும்.

    இத்தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்தது ஒரு தனிநபரல்ல; அவரின் பின்னணியில் ஒரு நாசகாரக் கும்பல் இயங்கியுள்ளது என்பது இங்கிலாந்து பாதுகாப்புக் குழுவினரின் கணிப்பாகிறது. இத்தாக்குதலின் நோக்கம் எதுவென்று எண்ணிச் செய்யப்பட்டதோ அதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. ஆம், இத்தாக்குதல் மக்களுக்கிடையே பேதங்களை உருவாக்குவதற்குப் பதிலாக அனைவரையும் இணைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இத்தாக்குதலை அடுத்து மனிதர்களுக்கிடையே கட்டப்பட்ட மனிதாபிமானம் அனைவரையும் உணர்ச்சிக்களிப்பில் மூழ்கவைத்துள்ளது. மன்செஸ்டர் நகரில் இயங்கும் பல டாக்ஸி வண்டிகள் இலவசமாக இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் வேண்டும் இடத்துக்கு கொண்டு சென்று விட்டமை, எந்தவித வேற்றுமையும் காட்டாது பொதுமக்கள் தாக்குதலில் அகப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட வசதிகள் என அனைத்துத் தேவைகளுக்கும் முன்நின்று உதவியமை,வைத்தியாசலைகள், மற்றும் அம்பியூலன்ஸ் சேவையினருக்கு உணவு, குடிபானம் என்பன வழங்கி உதவியமை எனப்பல்வேறு வகைகளில் மனிதாபிமானம் மேலோங்கி நின்றதையிட்டு பிரதமர் முதல் அனைவரும் பெருமையுடன் மெச்சுகிறார்கள். அது மட்டுமன்றி ஓய்வில் இருந்த வைத்தியர்கள், தாதிமார், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தாமாகவே முன்வந்து சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது..

    மிகவும் குறிப்பிடக்கூடிய விடயம் எது தெரியுமா? இஸ்லாம் எனும் மதத்தின் பெயரால் பல உயிர்களைக் கொலைசெய்த அந்த இஸ்லாமிய இளைஞனா? அன்றி தாக்குதலகப்பட்ட அனைவருக்கும் தம்மாலான அனைத்து உதவிகளையும் புரிய முன்வந்த மான்செஸ்டர் நகர் வாழும் பல இஸ்லாமிய மக்களா? யார் உண்மையான இஸ்லாமியர்?

    ஒன்று மட்டும் உண்மை. மனிதாபிமானத்துக்கு மதம் கிடையாது. கடைசியில் ஜெயிப்பது மனிதம் மட்டுமே ! பயங்கரவாதம் அல்ல!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • அன்னை 

    -சித்ரப்ரியங்கா ராஜா

    அன்பின் உருவம்
    இன்முகத்தரசி                                   annai
    ஈடில்லா குணவதி
    உத்தம பத்தினி
    ஊமையாய்ப் பலநேரம்
    எளிமையின் பிறப்பிடம்
    ஏற்றத்தாழ்வின்மை என்றும்
    ஐயம் தீர்க்கும் குரு
    ஒப்பனையற்ற தேவதை
    ஓய்வில்லா எந்திரம்
    ஔடதமாய் ஆயுள் வரை
    இஃதே அழகு அன்னை
    இனிதே பணிவோம் உன்னை!

     

     

    Share
  • ஆணடிமைகள்!

    -தமிழ்த்தேனீ

    ஆண்களே விழித்துக்கொள்ளுங்கள்!

    பாகம் 1:

    இது பெண்களுக்கு எதிரான கட்டுரை அல்ல; ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை முயற்சி. 

    “Henpecked husbands“ என்று இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் “Henpecked Wives“   என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    கீழே எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உடனே பொங்காமல் சொற்களை அவசரப்பட்டு அள்ளித் தெளித்து விடாமல்  தீர ஆராய்ந்து  விவாதிக்க  தைரியமான  உண்மையான ஆண்பிள்ளைகளே வாருங்கள். அப்படி உண்மைகளைத் தைரியமாக சொல்லிவிட்டால் மறுநாளிலிருந்து உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற  தார்மீக  பயம் கொண்ட ஆண்பிள்ளைகள் இந்த இழையில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து தங்களுடைய  மானமுள்ள சாப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    அல்லது  பெண்டாட்டியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு  தைரியமாக களத்தில் இறங்குங்கள். தைரியமாக கருத்தைச் சொல்லுங்கள். அவ்வப்போது பரிதாபமாக பெண்டாட்டியைப் பார்த்து கோவப்படாதே சும்மா இந்த  இழைக்காக  எழுதுகிறேன் என்று சமாதானப்படுத்திக்கொண்டே எழுதுங்கள்.

    மீண்டும் தலைப்பில் எழுதியதையே இங்கே அளிக்கிறேன்

    Henpecked husbands என்று இது வரை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்

    Henpecked Wives என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    அதே போல்  தமிழில் பெண்டாட்டிதாசன்  என்னும் சொல்லை உருவாக்கிய  தைரியமான ஆண்பிள்ளைகள் பெண்டாட்டிக்கும்  பெண்மணிகளுக்கும் பயந்துகொண்டு அஞ்சி  “புருஷதாசி“ என்னும் சொல்லை  உருவாக்காமலே இருந்த  நம் முன்னோர்கள் முதல் இன்னோர்கள் வரை அனைவருக்கும் ஒரு கேள்வியாகவே இதைக் கேட்கிறேன்.

    பாகம் 2:

    அதே போல் தாசி என்கிற  சொல்லுக்குத் தவறான பொருளைக் கற்பித்த  அனைவரையும்  கண்டிக்கிறேன்.

    ஒரு பெண்ணானவள் கணவனுக்கு நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்,  படுக்கையில் தாசியாய் இருந்தால்தான்  பத்தினி  என்று பெரியவர்கள்  எல்லோரும் சொல்கிறார்கள். இது தவறான  சொல்லாடல் அல்லவா?

    ஏனென்றால்  ஒரு ஆணை கணவனாக  வரித்து அவன் மேல் பக்தியும் ப்ரேமையும் கொண்டு ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்னும் வேதவாக்கைக் கடைப்பிடித்து அவனுக்காவே வாழும் உத்தமப் பெண்மணிக்கும்  தாசி  என்கிற பெயர். அதே போல் ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் த்ரோகம் செய்து பலருடன் வாழும் பெண்மணிக்கும்  தாசி என்கிற பெயர்  என்றால் எங்கோ  இடிக்கிறதே.   ஆகவே களங்கப்படுத்தும் வகையில்    மானத்தைக் காற்றிலே  பறக்கவிட்டுப் பொருள்ஈட்டும்  பரத்தைக்கும் தாசி என்கிற  சொல்லைக் வைக்காதீர்கள்.   தாசி என்றால்  காதலுள்ளவள்  அன்புள்ளவள் பக்தியுள்ளவள் பாசமுள்ளவள் என்றெல்லாம் பொருள் சொல்லாமல்  ஒரு தவறான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே  இது நியாயமா?

    கண்ணதாசன் என்று தைரியமாக பெயர் வைத்துக்கொள்ளும் இந்த நாட்டிலே  கண்ண தாசி கிருஷ்ணதாசி என்று பெயர் வைத்துக்கொள்ள ஒரு பெண்மணியால் இப்போது முடியுமா?

    அடியேன் தாசன் என்று ஒரு ஆணால் தைரியமாக சொல்ல முடியும் ஆனால் அடியாள் தாசி என்று ஒரு பெண்ணால் தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா?

    முடியாது  ஏனென்றால் தாசி என்றால் உண்மையான பொருளை மறைத்துக்  கேவலமான பொருளை மக்கள் மனதிலே திணித்துவிட்டார்கள்  அதனால் முடியாது.

    ஏற்கெனவே கிருஷ்ணதாசி என்றுதான்  பக்த  மீராவுக்கும் அவர் போல் கிருஷ்ணன் மேல் காதல் அன்பு பாசம்  பக்தி கொண்டவர்களுக்கும்  பெயர் என்று  சப்பைக் கட்டுக் கட்டவேண்டாம் . இப்போதைய  காலகட்டத்தில்  அதுவும் குறிப்பாக தாசி என்கிற சொல்லுக்கு  தவறான பொருள் கொண்ட  இக்காலத்தில்  யாரேனும் தைரியமாக கிருஷ்ணதாசி என்றோ  ராம தாசி என்றோ  பெயர்  வைத்துக்கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். 

    பாகம் 3 :

    இன்று வரை பெண்ணுக்குப் பெண்ணே  எதிரி என்னும் சொல் வழக்கு இருக்கிறது.   ஒரு பெண்ணுக்கு எதிரியாக இன்னொரு பெண்ணைத்தான் சொல்கிறார்களே தவிர  ஒரு பெண்ணுக்கு  ஆணே எதிரி  என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை  ஏனென்றால்   ஆண்கள்  பெண்ணுக்கு எதிரி அல்ல;  அடிமைகள் என்பதை  பெண்மணிகள் நன்றாகவே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அப்படிப் பெண்ணுக்கு ஆணே எதிரி  என்கிற  சொல் வழக்கை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

    நன்றாக யோசித்துப்  பார்த்தால்  அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இராமாயணக் காலம் முதற்கொண்டு  கைகேயி சூர்ப்பனகை போன்றோர்கள்  மஹாபாரதக் காலத்திலே  குந்தி தேவிக்கு  முதலில் குழந்தை பிறந்துவிட்டது என்று பொறாமைப்பட்டு  அம்மிக் குழவியால்  தன் வயிற்றிலே இடித்துக்கொண்டாள் காந்தாரி அப்படி இடிபட்டதால்  101  சதைப் பிண்டங்களாக  சிதைந்த  அந்த  சதைப்பிண்டங்களை உயிர் பிழைக்க வைத்து  நூற்றி ஒரு குழந்தைகளாகப் பிறக்க வைத்தனர் என்பது  மஹாபாரத நிகழ்வு.

    சரி அதை விட்டுவிடலாம்!  கற்புக்கரசி  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தது   மாதவிதானே தவிர   பாண்டிய  மன்னன் அல்ல; பாண்டிய மன்னன் கோவலனின் உயிரைத்தான் எடுத்தான்.  ஆனால்  மாதவி  கோவலன் என்கிற  ஆணின் மானத்தை உயிரை உடமைகளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தாள்.

    ஆக கண்ணகி என்கிற  கற்புக்கரசியின் வாழ்வைக் குலைத்தது  மாதவி  என்கிற இன்னொரு பெண்தான் இது சிலப்பதிகாரம்.

    ஆகமொத்தம் இதிகாச புராணங்கள் இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே பெண்கள்தான் பெண்களுக்கு எதிரிகளே தவிர  ஆண்களல்ல  என்பது  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    ’சினிமாவுக்குப் போன  சித்தாளு’ என்னும் கதையில் திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சாதாரண கீழ்த்தட்டு பெண்மணி  வழக்கத்துக்கு மாறாக  அவள் புருஷன் மேல்  விழுந்து விழுந்து கட்டிக்கொண்டு கொஞ்சுகிறாள்  புருஷனே ஆச்சரியப்படுகிறான்  என்றெல்லாம்  எழுதிவிட்டு, அந்தப் புருஷன் போட்டிருக்கும் பனியனில் ப்ரபல நடிகரின் புகைப்படம் பதிந்திருக்கிறது  என்று எழுதினாரே!

    இப்போதைய செய்திதாள்களிலே பார்த்தால்  கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற  காரிகை என்றுதான் தலைப்புச் செய்தியே  போடுகிறார்கள். அன்னிய நாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டு  தங்களின் அழகால் மயக்கும் தன்மையால் ரகசியங்களைக் கவர்ந்து ஆண்களைப் புத்தி பேதலிக்க வைத்து மன்னாதி மன்னர்களையும் மண்ணைக் கவ்வ வைப்பது பெண்களா  அல்லது ஆண்களா என்று யோசித்தால் ஆதாரங்களே சொல்கின்றன பெண்கள்தானென்று.

    ஒவ்வொரு ஆணும் பயப்படும் ஒரு நிகழ்வு இது! ஒரு பெண் ஒரு ஆணை அடையவேண்டும் என்று நினைத்து விட்டாலோ  அல்லது அவனிடம் உள்ள பொருட்களை கவர்வதற்காகவோ  அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகவோ அந்த ஆணை அணுகும்போது அந்த  ஆண் சம்மதிக்காவிடில்   கூசாமல்  இந்த ஆளு என் கையைப் பிடித்து  இழுத்துவிட்டான்  என்றோ  என்னிடம் தவறாக நடந்துகொள்ள  முயற்சித்தான் என்றோ அந்தப் பெண்மணி சொல்லிவிட்டால் உடனே  எல்லா ஆண்களும்  சற்றும் யோசிக்காமல் நடந்த  உண்மையென்ன என்பதை ஆராயாமல்  ஒற்றுமையாக சேர்ந்து  ஒரு பொண்ணுகிட்டே இப்பிடியா நடந்துக்கறது. (மனதுக்குள்  எனக்கு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே  என்று முணுமுணுத்துக் கொண்டே) அந்த வாய்ப்பு கிடைக்காத  ஏமாற்றத்தையும் ஆத்திரமாக மாற்றிக்  குற்றம் சொல்லப்பட்ட  ஆண்மகனுக்கு  தர்ம அடி கொடுக்கும் ஆண்களே அதிகம் என்கிற ஒரே காரணத்தால் பயப்படும் ஆண்களே!  இப்போதாவது தைரியமாக  உண்மையை சொல்ல  முன் வாருங்கள். இந்த அரிய  சந்தர்ப்பத்தையும்  இழ்ந்துவிட்டால் ஆணினத்துக்கு  விமோசனமே கிடையாது. நன்றாக யோசித்துப் பாருங்கள்!

    பாகம் 4 

    ஒருபெண் நினைத்தால் அவள்  சாதுர்யமாகவோ அல்லது தன் அழகாலோ தன் கவர்ச்சியாலோ அல்லது அன்பாலோ பாசத்தாலோ காதலாலோ  ஒரு ஆணை வீழ்த்த  முடிகிறது, ஆனால் ஆண்கள் தாம் விரும்பும் பெண்ணை அடைய எத்தனையோ முயற்சிகள் செய்தும் தோற்றுப் போகிறார்கள். 

    இல்லையேல் அவள் கிடைக்காத ஆத்திரத்தால் அவளைத் துரத்தி  அவளுக்கு கேடு விளைவித்து  மாட்டிக்கொண்டு கம்பி எண்ணுகிறார்கள். சாதுர்யம் என்னும் கலை ஆண்களுக்கு வரவே வராதோ? வருவதில்லை  என்பதே  உண்மை. ஐயோ பாவம் ஆண்கள்!

    ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கத் தொடங்கினால் ஒரு சிறு கண்ணசைவிலேயே உணர்த்தி விடுகிறாள். ஆனால் ஆண் காதலிக்க ஆரம்பித்தால் ஒன்று வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான் அல்லது அசடு வழிகிறான், அல்லது காதலைச் சொல்ல தடுமாறுகிறான், அப்படியே தைரியம் கொண்டு அந்தக் காதலைச் சொல்ல முடிவெடுத்தாலும் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் அந்தப் பெண்ணைக் கவர நீ இல்லேன்னா நான் உயிரை விட்ருவேன்  என்றோ, அல்லது தன்  மேல் இரக்கம் வருவதற்காக தன்னையே அழித்துக்கொள்ள முயன்று அதன் மூலமாக அவளுக்கு உணர்த்த  முனைகிறான். ஆனால் அந்தப் பெண் அவன் உணர்ச்சிகளை புரிந்துகொண்டாலும் அவளுக்குத் தன்மேல் தன் அழகின்மேல் இருக்கும்  அபார நம்பிக்கையால்  அவனை விலக்குகிறாள், அவளுக்குப் பிடித்தவனையே காதலிக்கிறாள். 

    அதனால் ஆண் உணர்ச்சிவசப்படுகிறான். கதாநாயகன் என்னும் அந்தஸ்திலிருந்து  வில்லனாக  மாறுகிறான். சமூகத்திலே  கெட்டபெயர் வாங்குகிறான். ஒரு பெண்ணின்  சம்மதமே அவனை கதாநாயகனாகவோ வில்லனாகவோ மாற்றுகிறது. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பர்  சொன்னதிலிருந்து தெரிகிறது. அந்தச் சீதையான  அவள்  மட்டும் அண்ணலை நோக்காதிருந்தால் அண்ணல் ராமன் வில்லனாகவும்  ராவணன் கதாநாயகனாகவும்  மாறி இருப்பான் என்பதே உண்மை.

    பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார்  அது  உண்மையே.    அப்படிக் கண்ணால் காதலை ஒரு பெண் சொல்லாத போது ஒரு கடுகும் சிறு கடுகும் மா மலையாகிறது ஆணுக்கு. 

    ஆனால் லோக மாதாவான சீதை பரப்பிரும்மத்தை ஏற்கெனவே அறிவாள் அதனால் அவளும் நோக்கினாள் பிரிந்த  தம்பதிகள் மீண்டும் ஒன்று கூடினர் அவ்வளவே. அவர்களைப் பிரிக்கமுடியாது என்பதை அறியாத ராவணன்   வீண் முயற்சியால் கெட்ட  பெயர் எடுத்தான். 

    பாகம் 5

    பெண்பார்க்கும் படலத்திலே  அந்த  நாள் முதல்  இந்த  நாள் வரைப்  பெண்கள் மிகச்சரியான தேர்வு முறையையே கையாண்டனர். உண்மையில் பெண் பார்க்க வந்த  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் அதையும் பெற்றோர்களுக்கு உணர்த்தியும்  பிடிவாதப் பெற்றோர்களால் பிடிக்காத மாப்பிள்ளைக்கு மணமுடிக்கப்பட்டால்  முழு மனதோடு வாழாமல்  துன்பத்துக்கு ஆளாகினரே ஒழிய பிடித்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உண்மை. அதையும் மீறிச் சில பெண்கள்  விதியை நினைத்து வருத்தப்பட்டாலும்  வேறு வழியில்லாத  காரணத்தால்   அனுசரித்து வாழ்ந்த பல பெண்களும் உண்டு  என்றாலும், பார்த்த  பார்வையிலேயே ஆணை எடைபோடும் சாமர்த்தியம் பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்குக் கிடையாது  என்பதே உண்மை.

    அதனால்தான் தன் தகுதிக்கும் அழகுக்கும்  மீறிய  பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பயந்து பயந்து எங்கே  நம்மை விட்டு விட்டுப் போய்விடுவாளோ  என்று அஞ்சி  அவளுக்கு தாசானு தாசனாகி  அதற்காகவே  பெற்றோரையும் உற்றார் உறவுகளையும்  கூடப் பகைத்துக்கொண்டு  பெண்டாட்டி தாசனாக ஆகிறார்கள் என்பதே உண்மையான அவல நிலை.

    எனக்கு ஒரு ஆச்சரியம்!  அம்மாவைக் கொடுமைப்படுத்தும் அப்பாவை வெறுக்கும் ஆண்கள் கூட  அம்மா என்னும் பெண்மணி அந்த அப்பாவின் உழைப்பையும்  வாங்கிக்கொண்டு  அவருடைய சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு மொத்தமாய் அவரை அன்பாலோ பண்பாலோ அழகாலோ அதிகாரத் தோரணையாலோ ஆள் பலத்தாலோ ஆட்கொண்டு குளவி கொட்டிக் கொட்டி தன் நிறம் ஆக்குதல் போல் நாளடைவில் அவரைக் குழந்தையாக்கித் தன் முந்தானைக்குள்ளே அவரைப் பூட்டி வைத்து  செயலிழக்க வைத்து  அவருக்கு  அவர் ஒரு ஆண்பிள்ளை  என்பதையே மறக்கடித்து  ஆமாம் சாமி போட்டுத் தலையாட்டும் ஒரு தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையை உருவாக்கி  வைத்திருக்கிறாள் என்பது எப்போது புரியும்.   இப்படிப்பட்ட அப்பாவியான அப்பாவை வில்லனாக நினைக்கும் பிள்ளைகளாவது  தன்மானத்தையே பெரிதாக  நினைத்து ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டி அவர்கள் மனைவியை அடக்கி ஆள்கிறார்களா?

    இல்லையே  அவளிடம் அடிமைப்பட்டு  பெற்றவர்களையே  முதியோர் இல்லத்திலோ  அல்லது அனாதை விடுதியிலோ  சேர்க்காமல் இருக்கிறார்களா அல்லது  வீட்டில் வைத்திருந்தாலும்  மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு  அம்மாவையும் அப்பாவையும் துன்புறுத்தாமல் மரியாதையாக நடத்துகிறார்களா  என்றால் அதுவும் இல்லை.

    பாகம் 6

    அதைப் பார்க்கும்  பேரன் மனம் வெதும்புகிறான்  தாத்தாவையும் பாட்டியையும் அப்பா ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்  நம்மோட  அம்மாவுக்கு பயந்து என்று  அவனும் தன்னுடைய  அப்பனை வெறுக்கத் தொடங்குகிறான்.  இப்படி  வம்ச பரம்பரையாக  வந்தீரே  சித்தப்பா என்னும் சொல் வழக்குக்கேற்ப  எந்தப் பிள்ளைக்கும்  தகப்பனைப் பிடிப்பதில்லை.

    இப்படிக்  காலம் காலமாக அப்பா பிள்ளை உறவு கசந்தே இருக்கிறது. தன் மேன்மையை  நினைத்தே அப்பா கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்பதை உணராமல் இருக்கும் பல பிள்ளைகள்  அவர்கள் பிள்ளையிடம்  கண்டிப்பாக  நடந்து கொள்கிறார்களே அது எப்படி அந்தப் பிள்ளை மட்டும் அவரைப் புரிந்து கொள்ளும்  என்று நம்புகிறார்கள் என்பதே ஒரு பெரிய  கேள்விக்குறி.

    ஆக மொத்தம் எந்தப் பிள்ளையாவது பெற்ற தகப்பனை அன்போடு நடத்துகிறார்களா  பாசத்தோடு கவனிக்கிறார்களா என்றால் இல்லை என்கிற வருந்தத்தக்க விடையே வருகிறது. இதிலும் தாய்க்குலம் தப்பித்துவிடும்  அதென்னவோ  தாய்க்குலம் காட்டும் ஆசை பரிவு பாசம் நேசம்  எல்லாம் மட்டும் புரிகிறது பிள்ளைகளுக்கு.  ஆனால் ஜுரம் வந்தால் கசப்பு மருந்து கொடுக்கும் வைத்தியரைப் பிடிக்காமல் போவது போல தந்தை காட்டும் கண்டிப்பான  நேர்வழி  உயரும் வழி என்று தெரிந்தாலும் அதைக் கசப்பு மருந்தாகவே எண்ணித் தந்தையை வெறுக்கும் பிள்ளைகளே அதிகம். இதுதான் ஆண்களின் தலைவிதி போலும். இதையெல்லாம் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் பிள்ளையின் முன்னேற்றமே குறிக்கோளாய் தியாகியாய் வாழ்பவரே அப்பா.   ஐய்யோ பாவம் இந்த அப்பாக்கள்,  இந்த ஆண்கள்.

    ஆகமொத்தம் மாமியார் கொடுமை கேள்விப்பட்டிருக்கிறோம்;  மாமனார் கொடுமை என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?  ஆகவே  சிந்தியுங்கள் ஆண்களே!  இது பெண்ணடிமைக் காலமல்ல; ஆணடிமைக் காலம் என்பதை உணருங்கள்!

    ஆனாலும் ஆண்களின் மழுங்கிப்போன புத்தியை எந்தக் காலத்திலும் விழித்துக்கொள்ளாத அளவுக்கு ஆக்கவே  பெண்கள்.  பெண்களை ஆண்களுக்கு  நிகராக நடத்த வேண்டும் என்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்  என்றும் மாதர் சங்கங்களும் பெண்களும்  ஒரு திறமையான  அரசியல்வாதி போல் செயல்பட்டு ஆண்களையும் அவர்கள் தன்மானத்தையும் பிரித்தேஆளும் சூழ்ச்சி கொண்டு  அடக்கி ஆளுகிறார்கள்.

    விழித்துக் கொள்ளுங்கள் ஆண்களே!

    இவ்வளவு சொல்லியும் விழித்துக்கொள்ளாவிட்டால் நான் என்ன செய்ய?

    அது சரி,  தலைவிதி என்று ஒன்று இருக்கிறதே! அதை யாரால் மாற்ற முடியும்? ’விதி வலியது’ அதற்கு முன்னால் நாம் எல்லோரும் வெறும் தூசுகள்.  தாய்க்குலம் வாழ்க வாழ்க வாழ்க!  (நமக்கேன் வம்பு)

    Share
  • அன்னையர் தினம்!

    -தமிழ்த்தேனீ

    உலகிலேயே லாபமில்லா நிறுவனம் அதாவது NON PROFITABLE ORGANAISATION ஆரம்பித்தவர் யார் தெரியுமா?

    அதாவது எந்த ஒரு லாபமும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு துணைப் பங்குதாரரையும் இணைத்துக்கொண்டு முதன் முதலாக லாபமில்லாத நிறுவனம் தொடங்கித் தங்களுக்கு வரும் பரிசுப் பொருட்கள், சொத்துக்கள் எல்லாவற்றையும் உபயோகிப்பாளருக்கே தந்து நஷ்டத்திலேயே இயங்கி ஆனாலும் மகிழ்ச்சியாக நிறுவனத்தை நடத்தி கடைசியிலே தங்கள் கையிலே ஒன்றுமில்லாமல் லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு தள்ளப்படும் ஒரே லாபமில்லாத நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் இன்னமும் நடத்திக் கொண்டிருப்பவர்கள், இனி எக்காலத்திலும் தளராமல் நடத்தியே தீருவோம் என்னும் நம்பிக்கையோடு நடத்தி வரும் முதலாளிகள் யாரென்று தெரிகிறதா?

    தங்கள் சொத்துக்களை, பரிசுப் பொருட்களை, உழைப்பை அன்பை, பாசத்தை, உடல் பொருள் ஆவி அனைத்தையும் வாடிக்கையாளராருக்கே தந்துவிட்டு வெறுங்கையோடு சொர்க்கம் செல்பவர்கள் அல்லது லாபம் ஈட்டும் நிறுவனமான முதியோர் இல்லத்துக்குச் செல்பவர்கள் யாரென்று தெரிகிறதா ? சந்தேகமில்லாமல் தாங்கள் பெற்ற பிள்ளைகளின் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பெற்றோர்கள் எனப்படும் தாயும் தந்தையும்தான் அந்த முதலாளிகள்

    வாடிக்கையாளர்கள் எப்போதுமே பிள்ளைகள்தான். அந்த அன்னைக்கும் அவளின் அன்புக் கணவனுக்கும் அன்னையர் தினமாகிய இன்று வணக்கம் சொல்வோம்!

    என் தந்தை ஆர் ரங்கசாமி அவர்களுக்கும் என் அன்னை ஆர் கமலம்மாள் அவர்களுக்கும் என் சிறம் தாழ்ந்த நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன்!

    Share
  • தூரிகை உதறியதில் விழுந்த வர்ணம்!

    -ராஜகவி ராகில்

    மழை
    இலைகள் பிரார்த்தனை கேட்டு
    நனைந்த கார்முகிற்செடி
    குளிர்ந்து
    குனிந்து தூவுகின்ற
    துளித் துளி ஈர மல்லிகை!

    கடல்
    அலைக் குதிரைப் படை
    வந்தும்
    சென்றும் காவல் காக்க
    தண்ணீர் தேச மன்னன் வாழ்கிறான்
    மீன் மக்களோடு! 

    அருவி
    மலைப் பொந்துக்குள்ளிருந்து புறப்படுகின்ற
    ஊற்று அரவம்
    இறங்கி
    விழுந்து சீறுகிறது
    வெண் நாகமாய்! 

    குயில் 
    துளை ஒன்று
    சிறகுகள் இரண்டு கொண்டு பறக்கின்ற
    புல்லாங்குழல் இசையழகி!

    பெளர்ணமி
    வேர்
    நீர் இல்லாமல் எப்படி வளர்ந்தாள் என
    இரவு கேட்கும் கேள்விக்கு
    ஒளிப் பதில் சொல்லும் தேவதை!

     

     

     

    Share
  • சாளிக்கிராமம் அடை நெஞ்சே! (பிரயாணக் கட்டுரை)

    -என். ஸ்ரீதரன்

    நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் என்னும் சாளிகிராமப் பெருமாளைச் சேவிப்பது அவ்வளவு எளிதல்ல. பன்னிரு ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் ஏராளமான திவ்விய தேச க்கோவில்களைக் குதிரையில் சென்று தரிசித்து மங்களாசாசனம் செய்துள்ளார். சாளிகிராமப் பெருமாளையும் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் நடந்து சாளிக்கிராமம் போவது மிகவும் கடினம் என்பதால் ’சாளிக்கிராமம் அடை நெஞ்சே’ என்று பாடியுள்ளார்.

    முக்திநாத் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்னும் என் நெடுநாளைய ஆசை இந்த வருடம் நிறைவேறியது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ஸ்ரீ டிராவல் மூலம் மேற்கொண்ட  எட்டு நாள் பிரயாண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    முதல் நாள் திங்கட் கிழமை ( 3-4-2017)

    இன்று திங்கட் கிழமை . வெங்கடேசப் பெருமாளை வணங்கிவிட்டு எட்டரை மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் நங்கநல்லூரிலிருந்து கிளம்பி மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தடைந்தோம். தில்லிக்குப் போய் அங்கிருந்து லக்னோ செல்லவேண்டும். எங்களுடன் சாலிக்கிராமத்திலிருந்து பாலசுப்ரமணியம், அவரது மனைவி, மகள், மகன் ஆக நால்வர் வருகிறார்கள். இன்னும் இரண்டு பேர் சித்ரா  அவரது தமக்கை கல்யாணி, ஐந்து மணி விமானத்தில் புறப்பட்டு  லக்னோ வந்து சேருவார்கள். ஆக மொத்தம் எட்டு பேர் சென்னையிலிருந்து முக்திநாத் போகிறோம்.

    பாலசுப்ரமணியம் குடும்பம் எங்களுக்கு முன்பே வந்து போர்டிங் பாஸ் வாங்கிவிட்டிருந்தார்கள். நாங்களும் போர்டிங் பாஸ் வாங்கின பிறகு எல்லோரும் விமானத்தில் ஏறினோம். காலை 10.30 மணிக்குக் கிளம்பிய விமானம் சரியாக 1:00 மணிக்குக்குப் புது டில்லியை அடைந்தது. அங்கு மற்றொரு முறை பெட்டிகளை ஸ்கேன் செய்து, செக்யூரிட்டி செக் செய்து இன்னொரு விமானத்தில் ஏறி லக்னோ சென்றடைந்தபோது சுமார் 3.30 மணி.  டூர் மேனேஜர் பார்த்தசாரதி விமானநிலையத்திற்குக் கார் அனுப்பியிருந்தார். லக்னோவின்  அழகைப் பார்த்துக் கொண்டே காரில் சென்றோம் . பெரிய பெரிய கட்டிடங்கள், சாலையில் ஏராளமான வாகனங்களைப் பார்த்தபோது லக்னோ பெரிய ஊர் என்று புரிந்தது. எங்கள் கார் பிரசிடெண்ட் ஓட்டலை அடைய 15 நிமிடம் ஆகிற்று. ரிசப்ஷனில் பார்த்தசாரதி எங்களை வரவேற்றார். அனைவருக்கும் ஒரு ஸ்டீல் தட்டும், ஒரு ஸ்டீல் தம்பளரும் வழங்கப் பட்டது; ஆளுக்கு ஒரு மினரல் பாட்டில் கொடுக்கப்பட்டது.

    சென்னையிலிருந்து பரிமளா என்பவரும் பெங்களூருவிலிருந்து அவருக்குத் தெரிந்த ஏழு பேரும் நம்முடன் வருவார்கள் என்று சொன்னார். அன்று ஓய்வு.  வேறு எங்கும்  போக வேண்டியதில்லை என்று கூறினார். எனவே கடைவீதிக்குச் சென்று நைவேதியத்துக்குத் தேவையான திராட்சை, முந்திரி, பாதாம் எல்லாம் வாங்கி வந்தோம். அதற்குள் வெளியே போயிருந்த பரிமளா மாமியும் அவருடைய தோழிகளும் வந்து விட்டிருந்தார்கள். பரிமளா மாமி சென்னையில் மையிலாப்பூரில் வசிப்பதாகவும், முக்திநாத் பார்த்துவிட்டுக் காசி, கயா போய்விட்டுச் சென்னை போகப் போவதாகவும் கூறினார். அவருடைய உயிர்த்தோழி லக்ஷ்மியை அறிமுகம் செய்து வைத்தார்.

    இரண்டாம் நாள் புதன் கிழமை ( 04-04-2017)

    காலை ஆறு மணிக்கு லக்னோவிலிருந்து நாங்கள் பதினாறு பேரும் நைமிசரண்யம் கிளம்பினோம். ஒன்பது மணி சுமாருக்கு நைமிசரண்யத்திற்கு பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சீதாபூர் என்னும் இடத்தை அடைந்தோம். அங்குள்ள பெருமாளைத் தரிசனம் பண்ணிவிட்டு நைமிசரண்யத்தில் உள்ள கோமுகி நதிக்கரைக்கு வந்தோம். நைமிசரண்யம் திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

    sali1

    நதியில் குளித்துவிட்டுத்  திவ்யதேசப் பெருமாளான தேவராஜப் பெருமாளை நின்ற கோலத்தில் தரிசனம் செய்தோம்.

    sali2

    போகும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து காடு போல் தோற்றமளித்தது. பக்தர்கள் வழியெல்லாம் சேவித்துக் கொண்டே சென்றனர். பெருமாள் வனரூபத்தில் இருப்பதால் அப்படிச் சேவிக்கின்றனர் என்று பரிமளா மாமி சொன்னார். அவர் ஏற்கனவே இந்த இடத்தைப் பார்த்து விட்டார். இப்போது இரண்டாம் முறையாகத் தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.

    ”ஓரறிவும் இல்லாத என்போல்வார்க்கு உய்யலாம்
    பேரறிவு உண்டேனும் பிறர்க்கரிது – பார் அறிய
    நைமிசரண்யத்து நாதர் அடியாரொடும்
    இம்மிசார் உண்டாயி னால்.”

    என்று திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் போற்றப்பட்ட தலம் நைமிசரண்யம். அங்கு  திருப்பதி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் பாலாஜி கோவிலில் வெங்கடேசப் பெருமாளைத் தரிசனம் செய்தோம். பின்பு சக்தி பீடம் லலிதாதேவி, சக்ர தீர்த்தம், வியாசர் கோவில் எல்லம் கண் குளிரத் தரிசனம் செய்துவிட்டு  ஓட்டலுக்கு வந்தோம். எங்களுடன் சமையல்காரர் சாந்தகுமார், அவருக்கு உதவி செய்ய இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் செய்து வைத்திருந்த மதிய உணவை உண்டு விட்டு அயோத்திக்கு புறப்பட்டோம்.

    அயோத்திக்குப் பதினைந்து கிலோமீட்டர் முன்னால் உள்ள பைசாபாத் என்னும் ஊரிலுள்ள “திருப்தி”  ஓட்டலுக்கு  இரவு 8.15 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு நிம்மதியாக உறங்கினோம்.

    மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை ( 05-04-2017 )

    இன்று ஸ்ரீராமநவமி. இந்நாளில் அயோத்தியில் இருப்பது மனத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. எங்குப் பார்க்கிலும் கூட்டம்; வட இந்தியாவே  அப்படிதான். குறிப்பாக நதி, கடல் இருக்கும் ஊரில் ஏதாவது திருவிழா அல்லது மேளா என்றால் கூட்டம் அலைமோதும்.  ஏராளமான வாகனங்கள், மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் போக அனுமதிக்கப் படவில்லை.சாலையின் ஓரத்தில் பேருந்தை  நிறுத்திவிட்டு எல்லோரும் கீழே இறங்கினோம். அங்கிருந்து ஒரு மணல் மிகுந்த ஒரு சரிவான பாதையைக் கடந்து கீழே உள்ள மற்றொரு சாலையை அடைய வேண்டும். எல்லோரும் கீழே இறங்கி விட்டோம். ஆனால் பரிமளா மாமி கீழே இறங்கும்போது கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார். ஒருவர் கை கொடுக்கக் கஷ்டப்பட்டு எழுந்தார். கால் வலியினால் துடித்தார். நடக்க முடியவில்லை என்று சொன்னதால் அவரைப் பேருந்திலே விட்டு விட்டு நாங்கள் ஷேர் ஆட்டோவைப் பிடித்துச் சரயு நதியை அடைந்தோம். புனிதமான நதி சரயு. ஆரவாரமின்றி அழகாய், அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தாள்.  நதியில் நீராடிவிட்டுத் திவ்ய தேச கோவிலான அம்மாஜி பெருமாள் (ராமர்) கோவிலுக்குச் சென்றோம். அயோத்தியாவின்  ராமபிரானை, பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள் 13 பாசுரப்பாக்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நம்மாழ்வார்

    “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பாரோ?
    புற்பா முதலாம் புல்லெறும் பாதி ஒன்று இன்றியே
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
    நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே” எனப் போற்றுகிறார்.

    ராமர், சீதையை நன்கு சேவித்தோம். கர்ப்பகிரஹம் எப்போதும் இருட்டாக இருக்கும். இன்று ஸ்ரீராம நவமி என்பதால் நல்ல வெளிச்சத்தில் பகவானைச் சேவிக்க முடிந்தது  என்றார் பார்த்தசாரதி. அவர் கூறியதுபோல் நல்ல பிரகாசமான வெளிச்சத்தில்  பெருமாளைச் சேவிக்க முடிந்தது.

    பிறகு ராம ஜென்ம ராமர் தரிசனத்திற்கு வரிசையில் நின்றோம். ராம ஜென்ம பூமியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமரை ”ராம்லாலா” என்கிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் திறந்திருக்கும். மீண்டும் இரண்டு மணிக்குத் திறக்கிறார்கள். வளைந்து வளைந்து செல்லும் மிகவும் நீளமான வரிசை. ராணுவப் பாதுகாப்பு அதிகம் உள்ள இடம். நாலு முறை செக்கியூரிடி செக்கிங். பெல்ட், மொபைல், பேனா , வாட்ச் எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தூக்கி வீசி விடுகிறார்கள். எல்லாம் வட இந்தியச் சிப்பாய்கள். நாம் பேசும் பாஷை அவர்களுக்குப் புரியவில்லை. ஏராளமான கூட்டமிருந்தாலும் ஒரு மணி நேரத்தில் ராமரைத் தரிசிக்க முடிந்தது.

    ”அயோத்தியில் குரங்கு அதிகம் . மூக்குக் கண்ணாடியைக் குரங்கு பிடுங்கிண்டு போய்விடும். ஜாக்கிரதையாய் இருங்க.  நான் போன தடவை வந்தபோது குரங்கு என் கண்ணாடியைப் பிடுங்கிண்டுப் போயிடுத்து “ என்று உஷார் படுத்தினார்  கல்யாணி மாமி.

    பிறகு அனுமான் கோவில், சீதா கோவில், சீதையின் சமையல் அறை, கனகபவன், தசரத பவன் எல்லாவற்றையும் கண்டு களித்துவிட்டு ஓட்டல் வந்தோம். உணவுக்குப் பிறகு சுமார் நாலு மணிக்கு கிளம்பினோம். நேபாள் பார்டரை 9.30 மணிக்குள்  அடைந்துவிட வேண்டும் என்று பார்த்தசாரதி சொல்லிக் கொண்டிருந்தார். கோரக்பூர் வழியாகச் சென்று பைரவா என்னும் இடத்தை. நாங்கள் அடையும்போது இரவு சுமார் 10.45. பைரவா கோவில் அல்ல.  அங்குதான் நேபாளத்தின் பார்டர் இருக்கிறது.

    பார்டர் மூடி விட்டதால் அதற்குமேல் போக அனுமதி கிடையாது. மேலும் நேபாள் எல்லைக்குள் பேருந்து போக பர்மிட் வேண்டும், அது காலையில்தான் கிடைக்கும். எங்களுக்குப் பார்டரிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மம்தா ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பார்டர் மூடிவிட்டதால் பேருந்தால் போக முடியாதே தவிர அதற்கு மாற்றாக ரிக்‌ஷாவில்  போக அனுமதி உண்டு. டிக்கியில் உள்ள சாமான்கள் ( பெட்டிகள், பைகள் ) எல்லாம் ரிக்‌ஷாவில் ஏற்றப் பட்டன. நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டே நடந்தோம். பரிமளா மாமிக்கு  ஒருவர் பைக்கில் லிப்ட் கொடுத்தார். அன்று இரவு உணவுக்குப் பிறகுச் சுகமாய் தூங்கினோம்.

    நான்காம் நாள் சனிக்கிழமை (06-04-2017)

    காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்ப தயாரானோம். அப்போது மணி எட்டு . பர்மிட் வராததால் பேருந்து தயாரக இல்லை. பக்கத்திலிருந்த கடையில் பிஸ்கட் வாங்கினோம். இந்திய ரூபாய்க்கு நேபாள ரூபாயை மாற்றிக் கொண்டோம். இந்திய நூறு ரூபாய் நேபாள நூற்று அறுபது ரூபாய்க்குச் சமம். அது போலவே நேபாள நேரம் இந்திய நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்னதாக  இருக்கும்.

    எட்டரை மணிக்குப் பர்மிட் வந்துவிட்டதால் நாங்கள் கிளம்பினோம்.   நாங்கள் போக வேண்டிய இடம்  போக்ரா. பேருந்து  எந்தவிதத் தடங்கலும் இல்லாமல்  சென்று கொண்டிருந்தது. பன்னிரண்டு  மணிக்கு வண்டி ஒரு இடத்தில் நின்றது. டிரைவர் டீ, காபி சாப்பிடுவதற்கு வண்டியை நிறுத்தினார் என்று நினைத்தோம். கீழே இறங்கி விசாரித்துவிட்டு வந்த டிரைவர், . ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருப்பதால் ரோடின்    ஒரு பக்கம்தான் வண்டியை அனுமதிக்கிறார்கள், இப்போது எதிர்ப் பக்கத்திலிருந்துதான் வண்டி வந்து கொண்டிருக்கிறது.  வண்டியை எடுக்க  பிற்பகல் நாலு மணி ஆகிவிடும் என்றார். இது சற்றும் எதிர்பாராதது. என்ன செய்வது ? வெளியூரில் பிரயாணம் செய்யும்போது இப்படி ஏதாவது தடங்கல் வருவதை யாரால் தடுக்க முடியும்? காற்றோட்டமான இடத்தில் நின்று, நடந்து, பேசிக் காலத்தைக் கடத்தினோம். பேருந்திலேயே சாப்பிட்டு விட்டோம். நாலு மணிக்கு எங்கள் பேருந்து கிளம்பியது. மோசமான சாலை . இரண்டு மணி நேரம் கழித்து டிரைவர் காபி குடிக்க வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கு காபி , டீ குடித்தோம் . இரவு 9.30 மணி சுமாருக்கு போக்ராவை அடைந்தோம். ஓட்டல் ஸ்போர்ட்ஸில் எங்களுக்கு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அன்று இரவு சாந்தாராம் அரிசி உப்புமா பண்ணி எங்களுக்குச் சாப்பிட அளித்தார்.  இரவு அங்கு தங்கினோம்.

    ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ( 07-04-2017)

    காலை எழுந்து காபி , சிற்றுண்டி எல்லாம் முடித்துத் தயாராகி விட்டோம். இன்று சிறிய விமானம் மூலம் ஜான்சம் என்னும் இடத்திற்குப் போக வேண்டும். ஜான்சம் ஏர்போர்டை அடைந்தோம்.  பரிமளா மாமியை டாக்டரிடம் அழைத்துப் போக வேண்டியிருந்ததால் பார்த்தசாரதி எங்களுடன் வரவில்லை. கபில் என்பவர் எங்களுடன் வந்தார். சிறிய விமானத்தில் (20 பேர் அமரக்கூடியது ) ஜான்சன் என்னும் இடத்தை அடைந்தோம். அங்கிருநது நடந்தே நாங்கள் தங்கும் ஓட்டலை அடைந்தோம். அங்கிருந்து ஜீப்பில் கிள்ம்பி ஒரு மணி நேரம் பிரயாணம் செய்து மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அப்படிப் போகும்போது கண்டகீ நதியில் ஏராளமான சாளக்கிராமங்களைக் கண்டோம். மலையடிவாரத்திலிருந்து முக்திநாத் கோவிலைக் குதிரை மூலமாகவோ அல்லது நடந்தோ அடையலாம். ஒன்றரை கிலோ மிட்டர் தூரம். சிலர் நடந்தும் சிலர் குதிரையிம் மூலமும் பிரயாணம் செய்தார்கள்.

    வடநாடு திவ்ய தேசங்களில் மிக முக்யமானதாகக் கருதப் படுவது சாளிக்கிராமம் என்னும் திவ்ய தேசம் . நேபாளம் அன்னபூர்ணா மலைத்தொடர்களுக்கு அப்பால் சுமார் 13800 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இது ஸ்வயாம்வ்யத்த ஷேத்திரம். சாளகிராமத் திருக்கோயில் நேபாளிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் தரையோடு தரையாக இருக்கும். இரண்டு சிறிய குளங்களும் ஆலயத்தின் உள்பிரகாரத்தில் 108 கோமுகிகள் வழியாகத் தீர்த்தம் கொட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம். பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் . பெரிய திருமொழி முதல் பத்து ஐந்தாம் திருமொழி முதல் பாசுரத்தில்

    “கலையும் கரியும் பரிமாவும் திரியுன் கானம் கடந்து போய்
    சிலையுன் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
    மலைகொண்டு அலை நீரணைகட்டி மதிள் நீர் இளங்கை வாளரக்கர்‘
    தலைவன் தலைகறுத்துகந்தான் சாளகிராமம் அடை நெஞ்சே” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்கிறார். சாளிக்கிராமம் அடைநெஞ்சே என்று ஒரு முறைக்கு  ஒன்பது முறை பாசுரங்களில் ஆற்றப்படுத்துகிறார்.

    கோமுகிகள் வழியாக வரும்  தீர்த்தம் புனித தீர்த்தம். அதிக சில்லென்று இருக்கும். முதலில்  அதைச் சிறிது குடித்து விட்டு பிறகு அதில் குளித்து விட்டு அங்கிருந்த இரண்டு குளங்களிலிருந்த நீரைச் சிறிது தலையில் ப்ரோஷணம் செய்துகொண்டு வரிசையில் நின்று  சாளிக்கிராமப் பெருமாளைச் சேவித்தோம்.

    பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்குத் தனி அறை இருக்கிறது. மாயவனைகூட்டம் அதிகமாக இல்லாத காரணத்தினால் மூன்று முறை வரிசையில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மாலவனை, மாதவனை நாமம் பல சொல்லி நாராயணாவென்று தொழு நன்னெஞ்சே என்று பாடத் தோன்றியது.

    அங்கிருந்த பெண் அர்ச்சகர் நாம் எடுத்துச் சென்ற முந்திரி, திராட்சை முதலியவற்றை பெருமாளுக்கு நிவேத்யம் செய்து கொடுக்கிறார். அவ்விடத்தில்  கடை எதுவும் கிடையாது. அதனால் நாம் போகும்போதே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப் போய்விட வேண்டும்.

    திரும்பி வரும்போது குதிரை எதுவும் கிடைக்கவில்லை. எல்லோரும் . நடந்துதான் ஓட்டலுக்குத் திரும்பினோம். குளிர் என்றால் அவ்வளவு குளிர் . தலையில் தொப்பி, கைகளில் கிளவுஸ், காலில் சாக்ஸ், ஸ்வெட்டார் அதுக்கு மேலே ஒரு சாலவை என்று இருந்தாலும் குளிரின் சிலுசிலுப்பை உணர முடிந்தது. அன்று ஜான்சம்மில் தங்கினோம். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லை. ரஜாய் என்னும் கம்பளி இருந்ததால் குளிரைச் சமாளிக்க முடிந்தது.

    ஆறாம் நாள் (8-4-2017)

    இன்று காலை தேனீர் அருந்திவிட்டு எட்டு மணி சுமாருக்கு ஜாம்சம் ஏர்போர்ட்டுக்கு வந்தோம். பனி  அதிகமாயிருந்தது. பேசும்போது  வாயிலிருந்து பனிப் புகை வந்தது.  அப்போது மலையில் பனி படர்ந்து வெள்ளைச் சால்வையை அணிந்துள்ளது போல தோன்றியது. சூரியனும் பிரகாசத்துடன் பனியை நீராக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.  சிறிய விமானத்தில் கிளம்பி போக்ரா வந்து சேர்ந்தோம். சில சமயங்களில் சீதோஷ்ணம் காரணமாக விமானத்தை ரத்து செய்து விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக அன்று விமானம் எதுவும் ரத்து செய்யப் படவில்லை. நாங்கள் விமானம் மூலம் போக்ரா வந்தடைந்தோம். சில சமயம் சீதோஷ்ணம் காரணமாக எப்போதாவது யாராவது ஒருவர்  முக்திநாத் தலத்திலேயே முக்தி அடைந்து விடுவதுண்டு. அந்த மாதிரி அனுபவம் நேர்ந்திருக்கிறதென்று பார்த்தசாரதி பேருந்தில் வரும்போது கூறியது ஞாபகம் வந்தது.  ஓட்டலில் நுழையும் போது எங்கள் எல்லாருடைய மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. எங்களை எதிர்கொண்ட பார்த்தசாரதி அதற்குப் பதில் அளித்தார். ”நேற்று மாமியை டாக்டரிடம் காட்டினேன். அவர் பரிசோதனைச் செய்து விட்டு காலில் இரண்டு எலும்பு முறிவு இருக்கிறது என்று மாவு கட்டு போட்டிருக்கிறார். ஒரு வாரம் கழித்து எலும்பு ஒன்று சேரவில்லையானால் மைனர் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்றார்.” இன்று மாமி விமானம் மூலம் சென்னை செல்ல டிக்கட் வாங்கியாகிவிட்டது என்றார். மாமியைப் போய்ப் பார்த்தோம் . எல்லாம் பெருமாளின் திருவுள்ளம் .நாம் விரும்பினாலும் அவன்  விரும்பாவிட்டால் பெருமாளைத்  தரிசிக்க  முடியாது என்றார் மாமி புன்முறுவலுடன்.

    மதியம் போக்ராவில் சைட் சீயிங் . முதலில் பெவா லேக்.. படகில் பிரயாணம் செய்து கோவிலுக்குப் போக வேண்டும். வராஹி கோவில், பிந்து வர்ஷினி கோவில், மகேஷ்வர் குகை, டேவிஸ் பால்ஸ் எல்லாம் சுற்றிப் பார்த்தோம். டேவிஸ் பால்ஸ் என்பது சிறிய நீர்வீழ்ச்சி.  மகேஷ்வர் குகை என்பது 5000 வருடம் ஆன பழமையான குகை. இங்குத் தானக உருவான சிவன் உள்ளது. கீழே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

    ஏழாவது நாள் ( 09-4-2017)

    இன்று காட்மண்டுவுக்கு ரோட் மூலம் பயணம் செய்தோம். . இருபக்கமும் மலை . சாலையை ஒட்டி நதி ஓடிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாய் இருந்தது.

    போகும் வழியில் மானக்கம்னா தேவியைத் தரிசித்தோம். ரோப் காரில் ஏறி மலை உச்சிக்குப் போக வேண்டும். டிக்கட் உண்டு . ஒரு டிக்கட்டின் விலை ஐநூறு ரூபாய். நேபாளி கரன்சியில் எண்ணுறு ரூபாய் . நேபாளைப் பொறுத்தவரை இந்தியர்கள் வெளிநாட்டவர். ஆனால் விசா, பாஸ் போர்ட் இல்லாமல் இங்குப் பயணம் செய்யலாம் . இந்தியப் பிரஜை என்று நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது வோட்டர்ஸ் ஐடியை கையில் வைத்திருக்க வேண்டும்.

    போகும் வழியில் எங்கள் பஸ் பங்க்சர் ஆகி விட்டது. பங்க்சர் போட ஒரு மணி நேரம் ஆனது. காட்மண்டில் ரோடு மிகவும் சிறியது. மோசமாகவும் இருக்கும்.  அதனால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிவிடும். நாம் ஓட்டல் போய்ச்சேர எப்படியும் பதினோரு மணி ஆகி விடும் என்று வண்டி டிரைவர் சொன்னார். காட்மண்டு போய் சேரும்போது இரவு 9.30 ஆகியிருந்தது. எங்களுக்கு    மகாதேவ என்னும் ஓட்டலில் அறை ரிசர்வ் ஆகியிருந்தது. பெரிய ஓட்டல் . 24 மணி நேரமும் சூடான தண்ணீர் குழாயில் வரும். குளித்து விட்டுக் கீழே இறங்கி வந்தால் அதற்குள் சமையல்காரர் சாந்த குமார் இட்லி தயார் செய்து  வைத்திருந்தார். அன்று இரவு நன்கு உறங்கினோம்.

    எட்டாவது நாள் ( 10-4-2017)

    இன்று காலை 7.30 மணிக்குக் கிளம்பி முதலில் ஜல நாராயணனைத் தரிசிக்கச் சென்றோம். அரை மணி நேரத்தில் கோவிலை அடைந்துவிட்டோம். அப்போது ஆர்த்தி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பாம்பின் மேல் பெருமாள் சயனம் செய்து  கொண்டிருக்கிறார். மிகவும் அழகான கண்கள். வைத்தக் கண்ணை எடுக்க முடியவில்லை.

    sali3

    கண் குளிர ஜல நாரயணனைத் தரிசித்து விட்டுப் பசுபதி நாத் கோவிலுக்கு வந்தோம். நல்ல கூட்டம். மைசூரைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்கிறார்கள்.

    sali4

    ஈஸ்வரனைத் தரிசித்துவிட்டு ஷாப்பிங் செய்தோம். காட்மண்டில் பவளம், பல வண்ண நிற  மணிகள் எல்லாம் விலை மலிவாக கிடைப்பதால் பெண்கள் ஆசைக்கு ஒண்ணு, மத்தவங்களுக்கு கொடுக்க ஒண்ணு என்று வாங்கினார்கள். ஒருவாறாக ஷாப்பிங் முடிந்ததும்  ஓட்டலுக்குத் திரும்பினோம்.

    பிற்பகல் 3.25க்கு ஏர் இண்டியா விமானத்தில் கிளம்பிப் புதுடில்லி வந்து அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ஏறிச் சென்னை வந்து சேரும்போது மணி சுமார் 11.50. சாளிக்கிராமம் அடை நெஞ்சே என்று திருமங்கை ஆழ்வார் பாடியதைப் போல் முக்திநாத் பெருமானை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவரவர் வீட்டை அடைந்தோம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (234)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    போனவாரம் மடல் வரையும்போது இவ்வார மடலின் கருப்பொருள் இதுவாக இருக்கும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை . இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மறைந்த ஹெரால்ட் வில்சன் அவர்கள் ஒருமுறை பேசும்போது “அரசியலில் ஒருவாரக் காலம் என்பது மிக நீண்ட காலமாகும் ” என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இவ்வாரத்துக்கும், போன வாரத்துக்குமான இடைவெளி இங்கிலாந்தின் அரசியல் உலகில் ஏற்படுத்திய மாற்றம் அது ஒரு மிகநீண்ட காலம் என்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. மிகச் சிறந்த அரசியல்வாதியான ஹெரால்ட் வில்சன் எதற்காக அப்படிக் குறிப்பிட்டார் என்பதன் அர்த்தமும் தெளிவாகப் புரிகிறது.

    அது என்ன அப்படியான மாற்றம்? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கையே ! ஆனால் அதற்கான விடையையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் புதியதோர் தேர்தலுக்கான திகதியை அறிவித்ததுதான் அம்மாற்றம் எனலாம். 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டரசாங்கத்தில் இனி ஒரு கட்சி அர்சாளும் பெரும்பான்மை பெற்று அரசமைத்தால், அவ்வரசு தனது முழுப்பதவிக்காலமான ஜந்து வருடங்கள் முடிவதற்கு முன்னால் நம்பிக்கையிலாத் தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மை பலத்தை இழந்தாலொழிய அரசைக் கலைக்க முடியாது எனும் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம் அடுத்த தேர்தல் சரியாக ஜந்து வருடத்தின் பின்னால் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடத்தப் பட வேண்டும்.

    சரி, அப்படியானால் எப்படி இந்தத் திடீர் தேர்தல் அறிவிப்பு எப்படிச் சாத்தியமாயிற்று?

    அரசைக் கலைத்து தேர்தலை யூன் மாதம் 8ஆம் திகதி நடத்த விரும்புவதாக அறிவித்த பிரதமர், நான் மேற்குறிப்பிட்ட சட்டத்தை இம்முறை தளர்த்தி வைப்பதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் அதற்கு மறுநாள் கோரப்போவதாகவும் அது ஆதரிக்கப்பட்டால் தேர்தல் யூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன் பிரகாரம் அதற்கு மறுநாளான கடந்த புதன்கிழமை அதற்கான கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க 509 அதிகப்படியான வாக்குகளினால் பிரதமரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து யூன் மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆகா வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா என்று வடிவேலு பாணியில் ஒரு சாரார் அலுத்துக் கொள்ள தேர்தல் பிரசாரத்துக்கான பூஜை போடப்பட்டு பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சரி இன்னும் மூன்று வருட காலம் அரசுக்கு பதவிக்காலம் இருக்கிறதே பின் எதற்காக இந்தத் திடீர் தேர்தலுக்கான அறிவித்தல்? பிரதமருக்கு என்ன பைத்தியமா?எனும் எண்ணம் தோன்றுகிறது. இங்கேதான் நாம் சில முக்கிய அம்சங்களை நோக்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் யூன் மாதம் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஆரம்ப நடவடிக்கைகளை இங்கிலாந்து முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது மக்களின் வாக்குகளைப் பெறாமல் டேவிட் கமரன் பதவி விலக பின் கதவால் நுழைந்த இப்பிரதமருக்கு இந்த “ப்ரெக்ஸிட்” எனும் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வைத் தலைமை தாங்கும் தகுதி இல்லை எனும் குற்றச்சாட்டு ஒரு சாராரினால் முன் வைக்கப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை வெறும் 12 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் அரசின் அமைச்சர்களினுள்ளேயே சில வேறுபாடுகள் உண்டு. அது மட்டுமல்ல லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி என்பன ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளுக்கு தம்மாலான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.வலுவான பெரும்பான்மை இல்லாததினால் தீர்க்கமான ஒரு நிலையான தலைத்துவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வெளியேற்றம் குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடியாமல் தடுமாறுகிறார் பிரதமர்.

    இப்போதிருக்கும் நிலைமையில் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடைபெறும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறும் ஆண்டு 2019 ஆகும். ஒரு சமயம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் நிகழ்வினால் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து. நாடு சிக்கலுக்குள்ளானால் அப்போது சந்திக்கும் தேர்தலில் பிரதமர் தோல்வியடைய நேரிடலாம். இப்போது ஒரு தேர்தலை நடத்துவதின் மூலம் அவர் தனக்கான அவகாசத்தை 2022 வரை நீடித்துக் கொள்ளலாம். அப்படியே ஏதாவது பொருளாதார வீழ்ச்சி வந்தால் கூட சுதாகரித்துக் கொள்வதற்கு நேரம் இருக்கிறது.

    இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் தற்போதைய எதிர்க்கட்சியான லேபர் கட்சி சின்னாபின்னமான நிலையிலிருக்கிறது . அதன் தலைவரான ஜெர்மி கோர்பன் பிரதமராக வருவார் என்பதை எண்ணிப்பார்க்க அஞ்சுவோர்களே நாட்டில் பெரும்பான்ம்மையாக இருக்கிறார்கள். பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சியை விட 21% அதிகப்படியாக முன்னிலை வகிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவிக்கு வருவதற்கு பிரதமருக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காது.

    இவையனைத்துமே அரசியல் கணிப்புகள் தாம். பிரதமர் சரியாகக் கணிப்பிட்டுள்ளாரா என்பது ஜூன் 9ஆம் திகதி தெரிந்து விடாதா என்ன?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (233 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்!

     

    சித்திரை2017

    இதோ அடுத்தொரு சித்திரைத் திங்கள் வாசலில் நான் வரையுமிந்த மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்க விழைகிறேன். இது தமிழர்களின் வருடப்பிறப்பா? இல்லையா ?எனும் விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இவ்விழாவினில் எமை ஆழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் ஒரு சிறிய மகிழ்வினை அனுபவிக்கத் துடிக்கும் மக்கள் ஒருபுறமென இச்சித்திரைத் திங்களின் வரவு பல முனைகளில் நிகழ்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த ஒரு கலாசார நிகழ்வாக இதனைக் கருதுவது சரியேயாகும். எனது தந்தை வழிப் பாட்டியிடம் இருந்து கைவிசேடம் பெறும் ஒரு நிகழ்வே இச்சித்திரைத் திங்களின் பிறப்பின் நினைவுகளை என் நெஞ்சில் தாலாட்டுகிறது.

    உலகம் ஒரு புதுத் திசையில், புது வேகத்துடன், புது முனைப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக நாம் காத்து வந்த பல கலாசார மகிமைகள் காலத்தோடு கரைந்து போகும் ஒரு நிலையைக் கண்டு உள்ளம் கொஞ்சம் வாடத்தான் செய்கிறது. காலத்தோடு மனிதன் மாற வேண்டிய தேவை மானிட குலத்தின் காலக்கட்டாயம் எனும் வாதத்தை மறுப்பதற்கு இல்லை. ஆனால் எந்தெந்தவைகளின் மாற்றத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எவைகளை மாற்றம் எனும் பெயரில் நாம் பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் நாம் மனத்தெளிவு கொண்டிருப்பது அவசியமாகிறது.

    இன்றைய உலகத்தின் முக்கிய தேவை என்ன ? இன்றைய உலகத்தின் போக்கு என்ன? என்பனவற்றை நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது. எமது வாழ்க்கையின் போக்குகளை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கு எத்தகைய நிலையில் உள்ளது? அவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகரப் போகிறது? இவையெல்லாம் மனதில் யதார்த்தமாக எழவேண்டிய கேள்விகள். நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் போக்கிலும் எமக்குள்ள பங்கு எத்தகையது? எமக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை என்று நாமாக ஒதுங்கி இருந்து விட்டு நாட்டின் போக்கினைப் பற்றி ஆங்காங்கே முனகுவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியுமா?

    இன்று இங்கிலாந்தில் நான் காணும் போக்கு மனதில் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. சில வருடங்களின் முன்னால் எது பொதுவாக மக்கள் முன்னால் கிளறிவிடப்படக்கூடாத கருத்துக்கள் என்று கருதப்பட்டனவோ அவை இன்று உண்மையைப் பேசுகிறோம், நேர்மையான அரசியல் நடத்துகிறோம் வழமையான அரசியல்வாதிகளுக்கு முரணாக மக்களின் அங்கலாய்ப்புக்களை வெளிக்கொணருகிறோம் எனும் போர்வையில் சாவகாசமாக ஊடகங்களில் முன் வைக்கப்படுக்கின்றன. இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே இலைமறைகாயாக இருக்கும் பிரிவினைகளை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் தற்கால அரசியல் எனும் பெயரில் சகஜமாகப் பேசப்பட்டு வருகிறது. என் இனிய அன்பு வாசக நெஞ்சங்களே! மக்களின் மனதில் அங்கலாய்ப்புகளாக, மக்களின் உள்ளங்களில் தாம் காணும் குறைகளாக இருப்பவை சிறுபான்மை மக்களின் மனதினைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக விவாதிக்கப்படக்கூடாது என்பதல்ல எனது கருத்து. நான் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக மதிப்பவன். மக்களுக்காகவே அரசியல் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டவனல்லன். ஆனால் விவாதிக்கப்படும் விடயங்கள் ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கப்பட்டாலொழிய அது மக்களுக்குத் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.

    இத்தகைய ஒரு சூழலில், இத்தகைய பின்னணியில் நாம் சாதாரண மனிதர்களாக எதைச் சாதித்து விடப் போகிறோம்? நான் இங்கிலாந்துக்கு வந்து 42 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த 42 வருடங்களில் மாணவனாக சில வருடங்களும் பின்னர் பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளராக ஏறத்தாழ 30 வருடங்கள் பணியாற்றியது தான் என் வாழ்வில் சாதனையா? பல பரிசில்கள் பெற்று, பலரின் பாராட்டைப் பெற்று முன்னிலை வகிக்கும் ஒரு எழுத்தாளனல்லன் நான். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வின் தாக்கங்களையும் எளிமையான தமிழில் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும் எழுதத்துடிக்கும் ஒரு பாமரனே நான். தமிழின்பால் நான் கொண்ட நேசம் இன்று நான் படைக்கும் என் வரிகளையிட்டு என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது. இந்த உணர்வே என்னுள்ளத்தின் வெற்றியென்பேன். எனது காலத்தின் பின்னர் எத்தனையோ வருடங்களின் பின்னால் உலகின் ஒரு மூலையில் யாரோ ஒருவர் 2017ஆம் ஆண்டில் சக்தி சக்திதாசன் எனும் சாதாரண எழுத்தாளன் இப்படிப் பதிவு செய்துள்ளார் என்று எண்ணினால் அதுவே என் சாதனை என்று எண்ணுகிறேன்.

    இவ்வகையில் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சாதனையாளர்களே! அவர்களின் சாதனைகள் அவர்களின் மனத்தராசில் அவரவர் நிலைகளுக்கேற்ப அவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்வில் அன்றாடம் பசியைப் போக்குவதற்கு அல்லாடும் ஒருவன் ஒருநாள் தன் தேவைகளை நிறைவேற்றும் போது அதுவே அவனுக்கு சாதனையாகிறது.இத்தகைய ஒரு உலகத்திலே இன்று அரசியல் எனும் மேடையில் பலரும் தாம் பல சாதனைகளைப் புரிந்து விட்டதாக புகழ்பாடும் ஒரு நிலையும் இருக்கிறது. ஆனால் அரசியல் எனும் மேடையில் ஏறும் நாடகங்களின் தயாரிப்பாளர்கள் அன்றாடம் வாழ்வில் அல்லாடும் சாதாரண மக்கள்தான் எனும் உண்மையை அவர்கள் மறந்து போய்விட்டது போல் தெரிகிறது. மக்களின் மனநிலைக்கேற்ப அவர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்கிறதோ அதைப்பேசி தாம் பதவிக்கு வருவதையே குறிக்கோளாகக் கொண்டியங்கும் பல அரசியல் தலைவர்களே இன்று முன்னணியில் இருப்பது போல் தெரிகிறது. இறக்கும்போது தனது பையில் 72 ரூபாயே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் ஆதவன் மறைந்திடும்போது மறைந்திடும் நிழல் போல மறைந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அவரைப் போன்ற தலைவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள் “என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவே இன்றைய உலகின் நிலை என்று எண்ணும்போது எதிர்காலத்தைப் பற்றி ஓரளவு அச்சம் எழத்தான் செய்கிறது.

    இது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு நிலையே. எதற்காக இப்போது சக்திக்கு இத்தகைய ஒரு மனத்திறப்பு என்று எண்ணலாம். நாளை அதாவது ஏப்பிரல் 14 2017 , சித்திரைப் புதுவருடப் பிறப்பு. இத்தினத்தோடு அமைந்த இம்மடலில் இன்றைய உலக ஸ்திரமற்ற நிலையை சிறிது அலச முற்பட்டேன். உலகம் நாடுகளால் ஆனது, நாடுகள் நகரங்களினால் ஆனது , நகரங்கள் சமூகங்களினால் ஆனது, சமூகம் சாதரண மனிதர்களினால் ஆனது. அத்தகைய வகையில் சமூகத்தில் ஒருவனான என்னையும் சிறிது அலச முற்பட்டேன்.

    மக்களின் உணர்வுகள் தெளிவடைந்து, உண்மையான, யதார்த்தமான தேவைகளின் நியாயங்கள் விழிப்படைந்தால் தான் அம்மனிதர்களிடை இருந்து மகோத்தமமான தலைவர்கள் உருவாக முடியும். பணத்தினால் தலைவர்கள் உருவாகும் நிலைமாறி மனத்திடத்தினால் உருவாகும் தலைவர்கள் மக்களின் உண்மைநலனை முன்வைத்துச் சேவையாற்ற முன்வருவார்கள் எனும் நம்பிக்கையோடு இச்சித்திரைப் புத்தாண்டினுள் நுழைவோம் வாருங்கள்.

    அன்பு வாசக உள்ளங்கள் மற்றும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் எனது அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ***

    பங்குனித் தாயின் வயிற்றில்
    பக்குவமாய் உதிக்கும் எம்
    சித்திரைத் திங்கள் மகளே
    சீரடி எடுத்து வாராய்!

    இத்தரை மீதினில் மக்கள்
    இடர் பல கண்டும் தளரா
    மனமது கொண்டு வாழ்வோடு
    போராடி வாழ்கின்றார் பாராய்!

    சிறக்கின்ற பல செயல்கள்
    சிறப்புற ஆற்றிட்ட போதிலும்
    சிந்தனையற்றோர் செயலால்
    சிதைகின்ற சமுதாயம் காணாய்!

    எதைக் கொண்டு வந்தோம் உலகில்
    எதைக் கொண்டு செல்வோம்?
    விதைக்கின்ற செயல்கள் தானே
    வினையாய் முளைக்கின்ற விந்தை

    காலங்கள் மாறுது காண்பீர் இங்கே
    காட்சிகள் கலையுது கண்முன்னே
    மாற்றத்தை ஏற்றிடும் துணிச்சல்
    மனதினில் கொண்டு வாழ்ந்திட

    திடமான ஒரு இளஞ்சமுதாயம்
    தீர்க்கமாய் உருவாக வேண்டும்
    பிறந்திடும் சித்திரைப் புத்தாண்டு
    பரவட்டும் நல் மன உணர்வுகளை

    உலகெங்கும் சூழ்ந்திடும் மேகங்கள்
    உருவாக்கிடும் போர்க்காலச் சாரல்கள்
    நிலையாக மானிடம் வாழ்ந்திட
    நிலையான மனிதாபிமானம் தேவையே

    கலந்திட்டே வாழ்ந்திடும் மக்களிடையே
    கலக்கின்றார் பிரிவினை உணர்வினை
    கண்டிடுவீர் அறிவுடை மாந்தரே
    கலைத்திடுவீர் புல்லர்களை வெளியே

    உள்ளத்தில் தெளிவோடு உண்மை
    உணர்வினில் கருணை கொண்டு
    நாளை நீர் படைத்திடும் உலகம்
    யாவர்க்கும் பொதுவாய்த் திகழட்டும்

    நம்பிக்கை என்னெஞ்சில் உண்டு
    நல்லபல இளையோர் மீதினில்
    உதிர்க்கின்றேன் உமக்கெந்தன்
    உள்ளத்தில் பூத்திடும் வாழ்த்துக்கள்!

    சித்திரைப் பெண்ணவள் மெதுவாய்ச்
    சிங்காரம் தாங்கி நுழைகின்றாள்
    உலகெங்கும் அமைதியை அளித்து
    உயிர்களைக் காத்திட வந்திடம்மா!

    உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகள்
    உகுத்திடும் வாழ்த்துப் பூமழை
    படிக்கின்ற அனைவர்க்கும் எனது
    பணிவான சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • குருவும் சீடனும்!

    -தமிழ்த்தேனீ

     

    guru

    சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்?

    குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்?

    குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும்.

    சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா?

    குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  தெய்வத்தைக் காண வேண்டும்.

    சீடன் :   தெய்வத்தை  எப்படிக் காண்பது?

    குரு :  விக்ரகத்தின் மூலமாகக்  காணலாம் .    அப்பு வாயு தேயு ப்ரித்வி ஆகாயம்  என்கின்ற  வெறும் பஞ்சபூதங்களாகிய  நீர்  நெருப்பு நிலம் காற்று  ஆகாயம் ஆகியவைகளிலும்  காணலாம்;  அது உன்னுடைய  மன முதிர்ச்சியைப் பொறுத்தது.

    சீடன் :  அப்படியானால் காணும் பொருட்கள் யாவிலும்  இறைவனைக் காணும்  அளவுக்கு  மனமுதிர்ச்சி அடைய   என்ன செய்ய வேண்டும்?

    குரு :  உன்னை உணரவேண்டும்; உன்னை  உணர உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :  மீண்டும் தொடங்கிய  இடத்துக்கே வந்துவிட்டீர்களே   குருதேவா  சற்றே விளக்கமாக சொல்லக் கூடாதா!

    குரு :   தொடங்கிய இடத்துக்கே  வருவதுதான் தெய்வம்.  ஆதி அந்தமில்லாமல் ஒரு புள்ளி என்றில்லாமல் அனைத்துப் புள்ளிகளிலும் இணைவதே  தெய்வம்.  அதனால்தான்  ஆதியும் அவனே அந்தமும் அவனே என்கிறார்கள்  விஷயம் அறிந்தவர்கள்.

    சீடன் :  அப்படியானால் என் போன்ற  சாமானியர்களுக்கு  இறையை உணர   அல்லது எங்களை உணர  வேறு வழியே இல்லையா  குருதேவா?

    குரு :  இருக்கிறது சீடனே!  பக்தி மார்க்கத்தில்  மர்க்கட நியாயம், மார்ஜால  நியாயம் என்று இருவகையைச் சொல்கிறார்கள் .  மர்க்கடம் என்றால்  குரங்கு , குரங்கு  எப்போதுமே  குட்டிகளைப் பற்றிக் கொள்ளாது ஆனால் குட்டிகள்  குரங்கைப் பற்றிக் கொண்டே இருக்கும்.   பற்றியதை விட்டுவிட்டால் குரங்குக் குட்டி  கீழே விழுந்துவிடும்.

    ஆனால்  மார்ஜால நியாயம் என்பது  என்ன தெரியுமா?  மார்ஜாலம் என்றால் பூனை.  பூனை எப்போதும் தன் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டே  இருக்கும்.   எப்போதும் கூடவே இருந்து அந்தக் குட்டிகளுக்கு  எழுந்து நடக்க  ஓட  எகிறிக் குதிக்க உணவை வேட்டையாடக்  கற்றுக் கொடுக்கும்.  அதுபோலத்தான்   இறைவனும் இரண்டு விதமானவன்.

    சீடன் :  என்ன  குருவே  இறைவன் இரண்டு  விதமானவனா  அதெப்படி?

    குரு :   நீ ஏற்கெனவே கேட்டாயே  என்னை நான் எப்படி உணர்வது  என்று.  அதற்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது.  அது உன்னிலிருந்து நீயே இரண்டாகப் பிரிந்து  உன்னையே நீ கண்காணிப்பது.,    த்வைதம் அத்வைதம் என்று சொல்வார்கள்.  ஒன்றுதான்  இல்லை இரண்டு   ஆனால்  இரண்டுமே ஒன்று  என்று  அது போலத்தான்.

    சீடன் :  அதெப்படி முடியும்?

    குரு :   கண்ணாடி அறையிலே  நீ இருக்கும் போது உன்னுடைய  பல பிம்பங்கள் தெரிகிறது. அத்தனையும் வெவ்வேறா  எல்லாம் நீதானே!  அது போலத்தான்  நீ இரண்டாகப் பிரிந்தாலும் அல்லது பலவாகப் பிரிந்தாலும் அல்லது  ஆயிரம் கோடி அணுக்களாகப் பிரிந்தாலும்  அது நீதானே?  உன்னிலிருந்து பிரிந்தவைதானே  அது?

    சீடன் :   அது சரி  ஆனால்  இறை பிரிந்தால் என்ன ஆகும்?  ஒருவன் சிவன் என்கிறான் ஒருவன் விஷ்ணு என்கிறான்  யாரை நம்புவது?

    குரு :   நீ யாரை நம்புவது  என்று குழம்பாதே  நீ யாரை நம்பினாலும் அவன்தான் இறைவன். அவன் சிவன்  விஷ்ணு  என்கிற பலவடிவங்களில்  இருந்தாலும்  எல்லாம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்துவிட்டால் அதன்பின்  உன் குழப்பங்கள் தீர்ந்துவிடும். ஆனால் யாரை  நம்பக் கூடாது  என்று முதலில் தெரிந்துகொண்டால்  அதன் பின் யாரை நம்புவது என்று எளிதாகப் புரிந்துவிடும்.

    சீடன் :  குருவே ஒவ்வொருவர் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகிறார்களே அதற்குண்டான விதிமுறைகள் மாறுகின்றனவே . ஒருவன் சொல்கிறான் கடவுளுக்கு உருவம் கிடையாது  என்று;  இன்னொருவன்  உருவம் உள்ளவன்தான்  கடவுள் என்கிறான். விக்ரக  வழிபாடு கூடாது என்கிறான் ஒருவன்;  விக்ரகத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபடுவதே சிறந்தது என்கிறான் மற்றொருவன்.

    குரு :   சீடனே நீயும் மற்றவர்களும்  நானும் போய்ச்சேருமிடம்  ஒன்றுதான்  என்பதை அறிவு பூர்வமாக ஆத்ம பூர்வமாக ஒப்புக்கொண்டால்  எல்லாம் விளங்கிவிடும்.   போய்ச்சேருமிடம் ஒன்று என்றால் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  இரு சக்கர வாகனத்திலோ  காரிலோ விமானத்திலோ  போகிறார்கள். ஆனால் போய்ச்சேருமிடம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்து பார்.   இந்த  மதங்கள் என்பது வெறும் வாகனங்கள்தான்.  நாம் எப்போதாவது  வாகனத்தில் சென்று ஓரிடத்தை  அடைந்து விட்டால் அந்த  வாகனத்தையும் போகுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டா அலகிறோம்? இல்லையே… அதுபோலத்தான் மதம் என்பதும் அதிலே ப்ரயாணம் செய்யலாம்; ஆனால் தூக்கிக் கொண்டு  அலையக் கூடாது.

    சீடன் :   எப்போது நான் என்னை உணர்ந்து  இறையை உணர்ந்து  குழப்பம் நீங்கித் தெளிவு கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை குருவே!

    குரு :   சீடனே  நீயும் இறையும் வெவ்வேறு  என்று எண்ணுகிறாய்?

    அப்படி அல்ல  என்பதை உணரத்தான் உன்னை உணர் என்றேன் . அதனால்தான் அணுவைச் சத கூறிட்ட அணுவிலும் உளன்  என்கிறார்கள்  இறைவனை .  ஆகவே நீ உன்னை உணர்ந்தால் இறையை உணரலாம் . இறையை உணர்ந்தால் உன்னை உணரலாம்.  அதன் பின் இறையும் நீயும் வெவ்வேறல்ல  என்பதையும் உணரலாம்.

    சீடன் :   குருவே கடைசியாக ஒரு கேள்வி.  நான் என்னை உணர்கிறேனோ இல்லையோ  இறையை உணர்கிறேனோ இல்லையோ  குறைந்த பக்‌ஷம் என் கூடவே இருந்து காட்சிதரும் உங்களை உணர  நான் என்ன  செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்!

    குரு: சீடனே இறையும் நீயுமே வேறில்லை என்கிறேன்.  என்னை உணர  முயற்சிக்கிறேன் என்கிறாயே?  நீயே நான் நானே நீ  புரிகிறதா ?   இன்னும் புரியவில்லை என்றால்  முதலில்  உன்னை உணர்.

    சீடன்: குருவே  எனக்கு மயக்கமாக வருகிறது.

    குரு :    குழம்பினால்தானே தெளிவு வரும்;  அதனால் சீக்கிரம் நீ தெளிந்துவிடுவாய்!

    Share
  • நாளொரு பக்கம்: 6: 2017

    -இன்னம்பூரான்

     

    innam

     

    नभसो भूषणं चन्द्र:

    नारीणां भूषणं पति: |

    पृथिव्या भूषणं राजा

    विद्या सर्वस्य भूषणं ||

     

    நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:

    நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |

    ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா

    வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||

    சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

    ***

    சித்திரத்துக்கு நன்றி:

    http://4.bp.blogspot.com/-FW8viYN3nBs/VN8WVM59C7I/AAAAAAAADt4/UGnTZ_BmQxo/s1600/booksanddegree.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 232 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மார்ச் மாதம் கடைசி வாரமாகிய இவ்வாரத்தில் இம்மடல் மூலம் நான் எடுத்து வரப் போகும் விடயம் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். கடந்த ஞாயிறு அதிகாலை அதாவது 26ஆம் திகதி அதிகாலை ஒரு மணி முன்னோக்கி நகர்த்தப்பட்டு இரண்டு மணியாக்கப்பட்டது.

    சிலர் என்ன இது என்று புருவத்தை உயர்த்தலாம் .

    வேறு ஒன்றுமில்லை! வருடாந்தரம் நடைபெறும் ஜரோப்பிய கோடைகால நேரமாற்றம் தான் அது. அட… இதைப் போய் பெரிய விஷயமாகச் சொல்ல வந்திட்டாரா சக்தி? எனத் தொடரப் போகும் உங்கள் வினா எனக்குப் புரிகிறது. சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நிகழ்ந்திருப்பதைப் போட்டு உடைக்கும் முன்னால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தலாமே என்றுதான்.. .

    ஆமாம் ஏறத்தாழ 42 வருடங்களாகப் பங்கு வகித்து வந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறப் போகிறோம் என்பதை உத்தியோகபூர்வமாக எமது பிரதமர் தெரேசா மே அவர்கள் கடந்த 29ஆம் திகதி அதாவது புதன்கிழமை 12 மணிக்கு இங்கிலாந்துக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மூலம் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவரிடம் கடிதம் மூலம் அறிவித்த நிகழ்வே நான் மேற்குறிப்பிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த அறிவித்தலைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு அளித்த அறிக்கையில் ” ஐக்கிய இராச்சியமானது திரும்ப முடியாத ஒரு திருப்பத்தினுள் நுழைந்து விட்டது. இத்திருப்பத்தினுள் எதை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் ஆதங்கம் இருந்தாலும் அனைத்தும் எமக்கு அனுகூலமாக அமைவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே எம் முன்னால் இப்போது இருக்கும் பாரிய பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்தின் சரித்திரத்தில் இது ஒரு மைல் கல்லே! இம்மாற்றத்தினால் இங்கிலாந்து சுபீட்சமடையப் போகிறதா? இல்லை… பாரியப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறதா? என்பது அனைவருக்கும் இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் முடிவு எதுவாக இருப்பினும் அம்முடிவினை உத்தியோகபூர்வமாக முடுக்கிவிட்ட பொறுப்பைத் தற்போதைய பிரதமராகிய தெரேசா மே அவர்களே ஏற்க வேண்டும் என்பது சரித்திரத்தில் இடம்பெறப் போகும் உண்மையாகும்.

    சரி இனி நடக்கப் போவது என்ன ?

    உத்தியோக பூர்வ அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு இரண்டு வருட காலக்கெடு விதிக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதியிலிருந்து இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உறவு நிரந்தரமாக முறிக்கப்படுக்கிறது. அதன் பின்னால் இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வகையிலான உறவினைப் பேணப்போகிறது என்பது இந்த இரண்டு வருட இடைவெளியின்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படும் இணக்கங்களையும், ஒப்பந்தங்களையும் பொறுத்தே அமையப் போகிறது. இந்தத் திருப்பம் இங்கிலாந்தில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? என்பதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இப்போது இங்கிலாந்து எடுத்திருக்கும் இம்முடிவானது இனிவரும் பல தலைமுறைகளின் வாழ்வாதரத்தைப் பாதிக்கப் போகிறது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பது அனைத்துத் தர அரசியல் அவதானிகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதிப்பு அனுகூலமானதா ? அன்றிப் பிரதிகூலமானதா? என்பதே இவர்களுக்கிடையில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படை.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்களின் முடிவு என்பதே யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை என்பதன் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு யதார்த்தம் புதைந்து போன ஒரு உண்மை . இந்தச் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பகுதியின் வாக்கு வீதம் 52 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாக்களித்தோர் வீதம் 48 ஆகும். வெறும் 4 வீதத்தினால் மட்டுமே இன்று இங்கிலாந்து இந்தப் பாரிய திருப்பத்துக்குள் தன்னை நுழைத்திருக்கிறது. எவர் எதைச் சொன்னாலும் 48 வீதமான மக்களின் அபிலாஷைகளைப் பிரதமர் எந்த வகையில் அனுசரித்து போகப்போகிறார் என்பது பலரது பார்வையில் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகிறது.

    இந்த மடல் வரிசையில் இன்னும் பல மடல்களில் இதைப்பற்றிய விரிவான அலசல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு ஆரம்பமே! விளையாட்டை பிரித்தானியப் பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இவ்விளையாட்டில் மற்றும் 27 விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய பகடைகளை உருட்டப் போகிறார்கள் என்பது போகப் போக வெளிச்சமாகும்.

    இன்றைய நிலையில் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு முக்கியமான திருப்பம் ஏற்[பட்டதை வருங்காலச் சரித்திரத்தில் படிக்கும்போது நாம் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருந்தோம் எனும் கேள்வி எழும்போது சக்தி இங்கிலாந்தில் இதைப்பற்றிய மடலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான் என்பதுவே விடையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • நாளொரு பக்கம்: 5: 2017

    -இன்னம்பூரான்
    மார்ச் 30, 2017

    innam5

    “I speak to everyone in the same way, whether he is the garbage man or the president of the university.”  -Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955)

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் ஒரு ஆத்மஞானி. சமத்துவத்தை எளிய சொற்களில், அதுவும் தனது பண்பே அதுதான் என்பதையும் இரு வரிகளில் கூறிவிட்டார். அவரது பெளதிக அறிவாற்றல், ஆய்வுத் தீர்மானங்கள் ஆகியவை உலகளவில் புகழப்பட்டாலும், அவற்றை புரிந்து கொண்டவர்கள் சொற்பம்.

    விளையும் பயிர் முளையிலே என்பதற்கேற்பப் பள்ளியில் முதல் மாணவன் மட்டுமல்ல; 15 வயதிற்குள் கணக்குப்புலியாக கருதப்பட்டார். காதல் பரவசத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கும், மனைவி மிலெவா மெரிக் அவர்களுக்கும் திருமணத்துக்கு முன் பிறந்த பெண்குழந்தையைப் பற்றி தகவல் இல்லை. இந்த மட்டும் அவருடைய சேகரத்திலிருந்து 1980களில் தெரிய வந்தது. இதைக் கூறுவதின் காரணம், அவரும் சராசரி மனிதனாகத்தான் வாழ்ந்து வந்தார்.

    தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் அவருக்கு ஐயமிருந்தது இல்லை. மிலெவாவுடன் இல்லறம் நீடிக்கவில்லை. விவாகரத்து; எல்ஸாவுடன் திருமணம். அப்போது மிலெவாவிடம், தனக்கு நோபல் கிடைத்தவுடன் அதில் ஒரு பங்கு அவளுக்குக் கொடுப்பதாக 1919இல் சொன்னார். 1922இல் அது கிடைத்தவுடன், தன் வாக்கைக் காப்பாற்றினார்.

    ஆதவனின் அருள் அவருக்குக் கிட்டியது. 1919ஆம் வருட சூரிய கிரகணத்தை ஆராய்ந்த ஸர் ஆர்தர் எட்டிங்க்டன், ஐன்ஸ்டீனின் சிந்தனையில் எழுந்த விஞ்ஞானத் தீர்மானங்கள் இதனால் நிரூபிக்கப்பட்டது என்றார்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    https://s-media-cache-ak0.pinimg.com/564x/a7/60/81/a76081eddcec91cf117063a6b7e0b5e2.jpg

     

     

    Share