இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . .(236)
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். ஒரு சில வார இடைவெளிக்குப்பின் இம்மடல் உங்களை நாடி வருகிறது. நான் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்த ஒரு செயல் முடிவடைந்து விட்டது எனும் மகிழ்வில் ஆர்ப்பரிப்பதற்காகக் காத்திருந்த நான் காலத்தின் கோலத்தினாலும் சில மனிதாபிமானமற்ற வெறியர்களின் செயலாலும் கனத்த இதயத்தோடு இம்மடலை வரைகின்றேன்.உள்ளத்தில் ஓர் பதைபதைப்பு, உணர்வில் ஓர் துடிதுடிப்பு. கடந்த திங்கட்கிழமை எனது பேத்தியை மகனின் இல்லத்தில் சென்று பார்த்து விட்டு இரவு நேரம் கடந்து வந்ததினால் நேராக படுக்கைக்குச் சென்று விட்டோம் நானும் எனது மனைவியும்.அடுத்தநாள் காலை முதல்நாள் எனது பேத்தி சிறிது உடல்நலம் குன்றியிருந்ததினால் அவள் எப்படியிருக்கிறாள் என்று கேட்பதற்காக எனது மகனுக்கு போன் செய்தேன். காரில் வேலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த என் மகன் பேத்தி இப்போது நலமாக உள்ளாள் என்று கூறினான்.
அடுத்து “பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் பாரதூரமானது அல்லவா?” என்றதும் “எங்கே? எப்போது?” எனும் கேள்விகள் என்னிடமிருந்து “மான்செஸ்டரில், நேற்று இரவு 10.45மணியளவில், நியூஸ் பார்க்கவில்லையா?” என்றான் மகன், உடனடியாக அவனது சம்பாஷணையைத் துண்டித்து விட்டு அவசரமாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திருகினேன். அப்போதுதான் திங்கட்கிழமை இரவு மான்சேஸ்டர் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பயங்கரம் புரிந்தது. 22 வயதே நிரம்பிய இளைஞன் பதின்ம வயது நிரம்பிய பாலகர்கள் பலர் தமது அபிமானத்துக்குரிய அமெரிக்கப் பொப்பிசைப் பாடகியான அரியானாவின் இசைநிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தோரைப் பழிவாங்கும் படலமாகத் தன்னை ஒரு தற்கொலைக் குண்டுதாரியாகப் பயன்படுத்தி நிகழ்த்திய பயங்கரவாதச் செயல்.
ஐக்கிய இராச்சியம் முழுவதுமே அதிர்ந்து போயிருந்தது. 22 பேர் உயிரிழந்து சுமார் 60 பேர்வரை காயமடைந்து மூர்க்கத்தனமான எதுவிதமான காரணங்களுமின்றி நடத்தப்பட்ட இப்பாதகச் செயலால் பாதிக்கப்பட்டார்கள்… குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பாலகர்கள் என இழப்புகளின் மத்தியில் தவித்துக் கொண்டிருந்தது மான்செஸ்டர் எனும் மாபெரும் நகரம். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒருவகை மனோவியாதிக்குட்பட்ட இத்தகைய எண்ணம் கொண்டோர் அடுத்தவர் உயிரை அதுவும் பதின்ம வயதுப் பாலகர்களைப் பழிவாங்குவது உள்ளத்தின் அனைத்துப் பகுதிகளையும் வலிக்கப் பண்ணுகிறது .
மதம் என்பது உருவாக்கப்பட்டதே மனித சமுதாயத்தை மனிதாபிமானம் எனும் ஒரு கோட்பாட்டுக்குள் வைப்பதற்காகவே ! எந்தவொரு மதமும் எப்போதும் கொலை,களவு, சூது, பெண்ணடிமை என்பனவற்றை நியாயப்படுத்தியது கிடையாது. இம்மதத்தினை மக்களுக்கு போதிக்கிறோம் என்று கூறி இம்மதங்களின் காவலர்கள் என்று கூறிகொள்வோரில் சிலர் தம் மனம் போன போக்கிற்கு இம்மதங்களை விளக்குவதனால் மக்களிடையே உருவாக்கும் பேதங்களே பல குற்றங்களுக்கு அடிகோலுகின்றன.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” என்றான் ஒருவரி தந்து பலபொருள் சொன்ன வள்ளுவப் பெருந்தகை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அவ்விளைஞனின் பின்னணியை எடுத்துப் பார்த்தால் புரியும்.
லிபிய நாட்டில் கேர்னல் கடாபி சார்வாதிகாரம் புரிந்து வந்த வேளை அந்நாட்டின் சர்வாதிகாரக் கொடுமைகளில் இருந்து தப்பி இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியவரே இவ்விளைஞனின் பெற்றோர். இங்கிலாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இங்கிலாந்துப் பல்கழகத்தில் நுழைந்த இவ்விளைஞன் தமது குடும்பத்தின் உயிரைக் காப்பதற்குத் தஞ்சமளித்த நாட்டின் சில இளந்தளிர்களின் உயிரைப் பறித்ததுதான் இந்நாட்டிற்கு அவனளித்த நன்றியறிதலாகும்.
சரி இனி இத்தகைய தக்குதல்களினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பார்ப்போம். கடந்தவருடம் நடைபெற்ற பிரெக்ஸிட் எனப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தில் மக்களிடையே ஒருவிதமான பிரிவு தோன்றியிருந்தது. வெளிநாட்டில் இருந்து ஐக்கியைராச்சியத்துக்கு வந்து குடியேறியவர்கள் இங்கிலாந்து தேசமக்கள் தம்மை அந்நியதேசத்து மக்களெனும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் எனும் வகையில் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இப்பிரிவுக்கு இங்கிலாந்தின் இனத்துவேஷ கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூபமிட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய தாக்குதல்கள் அத்தகைய தீவிரவாத சக்திகளின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பவையாக அமைகின்றன.
அடுத்து ஐக்கிய இராச்சியம் இன்னும் மூன்று வாரங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது, தேர்தல் பிரச்சாரம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தான் இத்தகைய தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. தேர்தலில் கட்சிகளின் உண்மையான் அரசியல் நிலைப்பாடுகளைக் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சியின் மீது பொதுமக்களுக்கு ஒருவிதமான சாயத்தைப் பூசுவது போன்றே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலின் விளைவு என்றே கருத வேண்டியதாகவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் தேர்தல் வெற்றியானது ஒருவகையான இனத்துவேஷத்தைக் கிளறிவிட்டிருந்தது என்றே கூறவேண்டும். அவர் இப்போது தனது நிலைப்பாட்டை சிறிது தீவிரமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாலும் அவரது வெற்றியின் பின்னணியில் ஒருவகையான வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான குரல் இருந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இஸ்லாம் எனும் மதத்தினருக்கு எதிராகச் செய்யப்படும் பிரசாரங்கள் வெறும் பிரசாரங்களாகவே இருந்தாலும் இத்தகைய தாக்குதல்கள் அப்புனித மதத்தின் மீது அவதூற்றைப் பரப்பும் ஒரு செய்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரானவர்களாகவும், அனைத்து மதத்தினரோடும், தாம் வாழும் ஐக்கிய இராச்சியத்தின் உண்மையான விசுவாசிகளாக இருப்பினும் ஒருவகை அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அந்நிலையை மேலும் நிரூபிக்கவே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உதவும்.
இத்தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்தது ஒரு தனிநபரல்ல; அவரின் பின்னணியில் ஒரு நாசகாரக் கும்பல் இயங்கியுள்ளது என்பது இங்கிலாந்து பாதுகாப்புக் குழுவினரின் கணிப்பாகிறது. இத்தாக்குதலின் நோக்கம் எதுவென்று எண்ணிச் செய்யப்பட்டதோ அதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. ஆம், இத்தாக்குதல் மக்களுக்கிடையே பேதங்களை உருவாக்குவதற்குப் பதிலாக அனைவரையும் இணைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இத்தாக்குதலை அடுத்து மனிதர்களுக்கிடையே கட்டப்பட்ட மனிதாபிமானம் அனைவரையும் உணர்ச்சிக்களிப்பில் மூழ்கவைத்துள்ளது. மன்செஸ்டர் நகரில் இயங்கும் பல டாக்ஸி வண்டிகள் இலவசமாக இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் வேண்டும் இடத்துக்கு கொண்டு சென்று விட்டமை, எந்தவித வேற்றுமையும் காட்டாது பொதுமக்கள் தாக்குதலில் அகப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட வசதிகள் என அனைத்துத் தேவைகளுக்கும் முன்நின்று உதவியமை,வைத்தியாசலைகள், மற்றும் அம்பியூலன்ஸ் சேவையினருக்கு உணவு, குடிபானம் என்பன வழங்கி உதவியமை எனப்பல்வேறு வகைகளில் மனிதாபிமானம் மேலோங்கி நின்றதையிட்டு பிரதமர் முதல் அனைவரும் பெருமையுடன் மெச்சுகிறார்கள். அது மட்டுமன்றி ஓய்வில் இருந்த வைத்தியர்கள், தாதிமார், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தாமாகவே முன்வந்து சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது..
மிகவும் குறிப்பிடக்கூடிய விடயம் எது தெரியுமா? இஸ்லாம் எனும் மதத்தின் பெயரால் பல உயிர்களைக் கொலைசெய்த அந்த இஸ்லாமிய இளைஞனா? அன்றி தாக்குதலகப்பட்ட அனைவருக்கும் தம்மாலான அனைத்து உதவிகளையும் புரிய முன்வந்த மான்செஸ்டர் நகர் வாழும் பல இஸ்லாமிய மக்களா? யார் உண்மையான இஸ்லாமியர்?
ஒன்று மட்டும் உண்மை. மனிதாபிமானத்துக்கு மதம் கிடையாது. கடைசியில் ஜெயிப்பது மனிதம் மட்டுமே ! பயங்கரவாதம் அல்ல!
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொற்களெல்லாம் ஒரு மொழிபெயர்ப்புச் சொற்றொடர்கள். அதாவது பயங்கரவாதம் (Terrorist), தீவிரவாதம் (Extremism or Extremist) என்ற மொழிபெயர்ப்புகள் இந்த நவநாகரீக உலகில். மேலும் இதை இஸ்லாமியர்கள் இதைத் தனக்கே சொந்தமாக்கியதுபோல் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இக்கொடுஞ்செயல் தன்மைசார்ந்த சொல்; அதாவது அசுரத் தன்மை, அரக்கத் தன்மை என்பதாகும். அசுரர்களும், அரக்கர்களும் புராண காலந்தொட்டேயிருந்து வருபவர்கள் என்பது நம் புராண, இதிகாச நூல்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. நரகாசுரன், பத்மாசுரன், பகாசுரன், மேலும் இலங்கையை ஆண்ட இலங்கேசுவரனும்கூட அசுர குணம் படைத்தவன் என்றே காணப்படுகிறது. இவர்களின் செயல் ஒரு வெறிச்செயலேயன்றி, காரணமுற்ற செயலென்று கொள்ள இயலாது என்பது நம் பண்டைய ஏடுகளால் செப்பிய ஒன்று. ஆனால், அந்தக் காலங்களில் உயிர் வதையைக் காட்டிலும், சித்ரவதைதான் மிகுந்துக் காணப்பட்டது. இதில் ஒரு சில விதிவிலக்குகளுமுண்டு. இந்த அசுரத் தன்மை, அரக்கத் தன்மை கொண்டவர்களை மானுட சக்தியைக் காட்டிலும், இறைசக்தியால் மட்டுமே அடக்க இயலும் என்பதையும் நம் புராண, இதிகாச, இலக்கியங்களில் படித்ததுமுண்டு. இவர்களிடம் மனிதாபிமானம் கொண்டவர்களின் பேச்சு வார்த்தைகளாலோ, அல்லது அறிவுரைகளாலோ கட்டுக்குள் கொண்டுவர இயலாது என்பதை நாம் அறிந்திருந்தாலும் முயற்சிகளும், சில நேரங்களில் அரசுகளே தன் ராணுவத்தை அசுரத்தன்மை கொள்ளச் செய்து ஒடுக்க முயல்வதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு தீர்வு என்பதைக் காலம்தான் நமக்கு உணர்த்த இயலும்…….. நன்றி ஆழ்கடல் முத்து