இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 232 )
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். மார்ச் மாதம் கடைசி வாரமாகிய இவ்வாரத்தில் இம்மடல் மூலம் நான் எடுத்து வரப் போகும் விடயம் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். கடந்த ஞாயிறு அதிகாலை அதாவது 26ஆம் திகதி அதிகாலை ஒரு மணி முன்னோக்கி நகர்த்தப்பட்டு இரண்டு மணியாக்கப்பட்டது.
சிலர் என்ன இது என்று புருவத்தை உயர்த்தலாம் .
வேறு ஒன்றுமில்லை! வருடாந்தரம் நடைபெறும் ஜரோப்பிய கோடைகால நேரமாற்றம் தான் அது. அட… இதைப் போய் பெரிய விஷயமாகச் சொல்ல வந்திட்டாரா சக்தி? எனத் தொடரப் போகும் உங்கள் வினா எனக்குப் புரிகிறது. சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நிகழ்ந்திருப்பதைப் போட்டு உடைக்கும் முன்னால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தலாமே என்றுதான்.. .
ஆமாம் ஏறத்தாழ 42 வருடங்களாகப் பங்கு வகித்து வந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறப் போகிறோம் என்பதை உத்தியோகபூர்வமாக எமது பிரதமர் தெரேசா மே அவர்கள் கடந்த 29ஆம் திகதி அதாவது புதன்கிழமை 12 மணிக்கு இங்கிலாந்துக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மூலம் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவரிடம் கடிதம் மூலம் அறிவித்த நிகழ்வே நான் மேற்குறிப்பிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த அறிவித்தலைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு அளித்த அறிக்கையில் ” ஐக்கிய இராச்சியமானது திரும்ப முடியாத ஒரு திருப்பத்தினுள் நுழைந்து விட்டது. இத்திருப்பத்தினுள் எதை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் ஆதங்கம் இருந்தாலும் அனைத்தும் எமக்கு அனுகூலமாக அமைவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே எம் முன்னால் இப்போது இருக்கும் பாரிய பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் சரித்திரத்தில் இது ஒரு மைல் கல்லே! இம்மாற்றத்தினால் இங்கிலாந்து சுபீட்சமடையப் போகிறதா? இல்லை… பாரியப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறதா? என்பது அனைவருக்கும் இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் முடிவு எதுவாக இருப்பினும் அம்முடிவினை உத்தியோகபூர்வமாக முடுக்கிவிட்ட பொறுப்பைத் தற்போதைய பிரதமராகிய தெரேசா மே அவர்களே ஏற்க வேண்டும் என்பது சரித்திரத்தில் இடம்பெறப் போகும் உண்மையாகும்.
சரி இனி நடக்கப் போவது என்ன ?
உத்தியோக பூர்வ அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு இரண்டு வருட காலக்கெடு விதிக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதியிலிருந்து இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உறவு நிரந்தரமாக முறிக்கப்படுக்கிறது. அதன் பின்னால் இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வகையிலான உறவினைப் பேணப்போகிறது என்பது இந்த இரண்டு வருட இடைவெளியின்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படும் இணக்கங்களையும், ஒப்பந்தங்களையும் பொறுத்தே அமையப் போகிறது. இந்தத் திருப்பம் இங்கிலாந்தில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? என்பதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இப்போது இங்கிலாந்து எடுத்திருக்கும் இம்முடிவானது இனிவரும் பல தலைமுறைகளின் வாழ்வாதரத்தைப் பாதிக்கப் போகிறது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பது அனைத்துத் தர அரசியல் அவதானிகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதிப்பு அனுகூலமானதா ? அன்றிப் பிரதிகூலமானதா? என்பதே இவர்களுக்கிடையில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படை.
இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்களின் முடிவு என்பதே யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை என்பதன் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு யதார்த்தம் புதைந்து போன ஒரு உண்மை . இந்தச் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பகுதியின் வாக்கு வீதம் 52 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாக்களித்தோர் வீதம் 48 ஆகும். வெறும் 4 வீதத்தினால் மட்டுமே இன்று இங்கிலாந்து இந்தப் பாரிய திருப்பத்துக்குள் தன்னை நுழைத்திருக்கிறது. எவர் எதைச் சொன்னாலும் 48 வீதமான மக்களின் அபிலாஷைகளைப் பிரதமர் எந்த வகையில் அனுசரித்து போகப்போகிறார் என்பது பலரது பார்வையில் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகிறது.
இந்த மடல் வரிசையில் இன்னும் பல மடல்களில் இதைப்பற்றிய விரிவான அலசல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு ஆரம்பமே! விளையாட்டை பிரித்தானியப் பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இவ்விளையாட்டில் மற்றும் 27 விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய பகடைகளை உருட்டப் போகிறார்கள் என்பது போகப் போக வெளிச்சமாகும்.
இன்றைய நிலையில் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு முக்கியமான திருப்பம் ஏற்[பட்டதை வருங்காலச் சரித்திரத்தில் படிக்கும்போது நாம் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருந்தோம் எனும் கேள்வி எழும்போது சக்தி இங்கிலாந்தில் இதைப்பற்றிய மடலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான் என்பதுவே விடையாகும்.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்