-மீனாட்சி பாலகணேஷ்             

திலகாவும் சைலஜாவும் திலகா வீட்டுத் திண்ணையை ஒட்டிய சிறிய அறையில் ரகசியமாக ஏதோ பேசிச் சப்தமிடாமல் சிரித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள்.

ab

“உங்க அத்தை பையன் பேரென்னடி? ரொம்ப உசரம்னு பாட்டி சொன்னாங்களே, நிஜமாவா?”திலகா கேட்டாள்.

“ம், இருப்பான் ஆறடி உசரம். ஸ்ரீனிவாசன்னு பேர். சீனுன்னு கூப்பிடுவோம்,” சைலஜா.

திலகாவின் கண்கள் அகல விரிந்தன.”அவன் இவன்னு சொல்லறே, உங்க அத்தை கோவிச்சுக்க மாட்டாங்களா?”

சைலா இத்தனை நாட்கள் இதைப் பற்றி சிந்தித்ததேயில்லை. இப்போது, ‘ஓ இப்படியும் ஒரு சம்பிரதாயம் உண்டா?,’ என அவளுடைய இளம் உள்ளம் தத்தளித்தது.

“ஆமாம், நாளைக்கு என்ன பாவாடை தாவணி போட்டுக்கப் போறே?” என்று சீண்டினாள் திலகா.

“அம்மா சொல்லறதத் தான். நானா எப்படி எடுத்துக்க முடியும்? போன வருஷம் ராஜிச் சித்தி நவராத்திரிக்கு ஹைதராபாதில இருந்து அனுப்பியிருந்தாங்களே, கல் வைச்ச வளையல், அதைப் போட்டுக்கவாடி திலகா?” என்று கன்னத்தில் சிறிது செம்மையேற, தலையைச் சாய்த்துக் கேட்டதில், குடை போன்ற ஜிமிக்கிகள் அவள் காதில் உரசி ரகசியம் பேசின.

ஆடலரசு அப்போது அந்த அறை வாயிலில் எட்டிப் பார்த்து, “திலகா, எனக்கு அட்லாஸ் வேணும்; படிக்கணும். என் புத்தகம் எல்லாம் இங்க தான் இருக்குது,” என்று சற்று விரைப்புடன் கூறவே இரு பெண்களும் வெளியே வந்தனர்.

ஆடலரசு சிடுசிடுத்தானே தவிர, சைலஜா தலை சாய்த்து வினவிய அழகுக் கோலம் அவன் மனத்தில் பதிந்து அவனை அலைக்கழித்தது. கன்னத்தில் விழுந்த குழியின் அழகில் மூழ்கிப் போனான் அவன். உதட்டோரத்தில் முகிழ்த்த நாணச் சிரிப்பு போதை போல ஒரு உபாதையை உள்ளத்தில் ஏற்றியது. தன் மனதில் ஒளித்து வைத்துக் காப்பாற்றிய ஒரு பரம ரகசியம் இப்போது அவனைத் தத்தளிக்க வைத்தது.

பக்கத்து வீட்டிற்குக் குடி வந்து தன் தங்கையின் தோழியாகிப் பின் தன் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என அவன் அறிவான். ஆனாலும் அவளுடைய புத்திசாலித்தனம், சமர்த்து எல்லாம் தனக்கு ஒரு சவாலாக அமைந்ததென அவன் கருதினான். அவள் முன்பு அறிவிலும், படிப்பிலும் சிறந்து விளங்கி அவளை வியப்பினால் புருவத்தை உயர்த்த வைக்க வேண்டும் என்பது அவன் கனவு.

‘அவள் மீது தான் கொண்ட அன்பு நிறைவேறாது. தான் இதை அவளிடம் கூட வெளியிட முடியாது,’ என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் தான் அவளை, அவளுடைய செயல்களை ஆர்வத்துடன் ரசிப்பதை அவள் அங்கீகரிக்கிறாள் என்று அவளுடைய கடைக்கண் வீச்சுகள் நன்றாக உணர்த்தியிருந்தன. ‘தொடக்கமும் முடிவும் இது தான்,’ என்று இரு இளம் உள்ளங்களும் உணர்ந்திருந்த போதிலும், தங்களுடைய பருவத்துக்கும், இளமைக்கும் இது ஒரு பரஸ்பர அங்கீகரிப்பு என ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இந்த திருட்டுப் பார்வைகளிலும், கண் வீச்சுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இன்று சைலஜாவின் நாணம் புதியதாக இருந்தது. ஆடலரசு இதுவரை காணாதது அது. ‘இத்தனை நாள்வரை அந்தக் கண்களில் சவால் விடும் விஷமமும் குறும்பும் தான் தென்பட்டு வந்தது. இப்போது நாணக்கலவையும் சேர்ந்து அவளை எவ்வளவு அழகாக மாற்றிவிட்டது! அவளுடைய அத்தை மகனுக்காகத் தான் இந்த நாணமும் கொஞ்சலும் அழகுமா? ‘என் தேவதை, நான் எட்டாத உயரத்தில் வைத்துப் பார்த்து மகிழும் இவளுடைய பார்வை கூட இனி என் பக்கம் திரும்பாதோ…’

‘இத்தனை நாள் உன்னை உயர்வாக மதித்துப் போற்றியிருக்கிறேனே பெண்ணே. என் இளம் மனத்தின் கதவுகளை மெல்லத் திறந்து அன்ன நடையிட்டு உள்ளே புகுந்தவள் நீ. நானாக உன்னை வெளியேற்ற மாட்டேன். நீயாக வெளியேற முற்படுகிறாய். நீயும் எவரும் அறியாமல் எத்தனை நாள் இங்கு குடியிருப்பாய்? உன் இருப்பு தெரிந்தால் தானே எனக்கும் மதிப்பு, உனக்கும் கௌரவம்…..

‘நீ போய் விட்டாலும் கூட, நீ அமர்ந்திருந்த என் இதயபீடத்தில், உன் காலடிச் சுவடுகள் உள்ளனவே, இதய அறையினில் இனிய நறுமணம் நிரம்பியுள்ளதே, இதைப் போற்றிப் பாதுகாத்து நான் உள்ளளவும் வழிபடுவேன். இதை நீ உணரவில்லையே சைலா….’

ஆடலரசுக்கு இதில் தான் மிகவும் வருத்தம்.

——————————————————————

சைலஜா துள்ளல் நடையிட்டுத் தங்கள் வீட்டுக் கூடத்தில் நுழைந்ததும் அப்பாவின் லேசான குறட்டையொலி கேட்டது. அவர் இருந்த கோலம் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது எனில், ரேடியோவிலிருந்து ஒலித்த பாடல் கன்னங்களைச் செம்மையேற்றி இதயத்துடிப்பை அதிகரித்தது.

‘அத்தை மகனே போய் வரவா, அம்மான் மகனே போய் வரவா, உந்தன் மனதைக் கொண்டு செல்லவா எந்தன் நினைவைத் தந்து செல்லவா..’ பி. சுசீலா இனிமையான குரலில் தலைவியின் உள்ளத்துக் காதலைக் குழைத்து வடித்து வார்த்துக் கொண்டிருந்தார்.

தான் பாட்டை ரசிப்பதை யாராவது பார்த்து விட்டார்களோ என்ற பதைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தபடி, விடுவிடெனச் சமையலறையை நோக்கி ஓடினாள் சைலஜா. “பாட்டி, அப்பாவைப் பாரேன். தூங்கியே போய் விட்டார், ” என்றாள். அலமு கூடத்துக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.

“இதோ தட்டு வைத்தாயிற்று. சாப்பிட வாங்கோ. அந்த கண்றாவிப் பாட்டை நிறுத்துங்கோ. பெண் குழந்தைகள் எல்லாம் கெட்டுப் போகணுமின்னே தான் போடறாங்கள் இந்த மாதிரிப் பாட்டெல்லாம்.”

எழுந்து நின்று சோம்பல் முறித்த வெங்கடேசன் ரேடியோவை நிறுத்தினார். பேப்பரை ஒழுங்காக மடித்து வைத்தார். ‘இளம் பெண்கள் கெட்டுப் போக இந்தப் பாட்டைக் கேட்க வேண்டாம். அத்தைமகன், முறைப்பெண் என்று முடிச்சுப் போடும் சம்பிரதாயங்களும், கேலிப் பேச்சுகளும், இளம் பெண்களின் மனதை எவ்வளவு பாதித்து, வீண் கனவுகளை வளர்த்துக் கொண்டு பின்பு சங்கடத்துக்குள்ளாக வைக்கின்றன,’ என நினைத்துக் கொண்டார். பழியைச் சுமர்த்த வேறு யாராவது கிடைத்தால் சரி!

அப்பாவோடு பக்கத்திலமர்ந்து குழந்தை என்கிற ஹோதாவில் சைலஜா எப்போதும் சாப்பிடுவாள். அவள் ‘பெரியவளாகி’ விட்ட பின்பு இதை மாற்ற முயன்று கொண்டிருந்தாள் அலமேலு. வெங்கடேசன் இந்தச் சிறிய சலுகையைத் தன் செல்ல மகளிடமிருந்து பறிப்பதை விரும்பவில்லை. அதனால் வழக்கம் போல இன்றும் தந்தையின் அருகிலேயே சைலஜா அமர்ந்து கொண்டாள்.

பாட்டி சாம்பார் பரிமாறி விட்டுப் போனதும் மெல்லக் கேட்டாள், “அப்பா, நானும் கூட சீனுவை மாதிரி டாக்டருக்குப் படிக்கலாமாப்பா?”

“பேஷ், அப்படியா பிளான்? டாக்டர் சைலஜா…ம்…ரொம்ப நன்றாயிருக்கும்மா கேட்கிறதுக்கே. படியம்மா கண்ணா. உனக்கில்லாததா குழந்தே…”

கேட்டுக் கொண்டிருந்த அலமுவோ, “நாளைக்கு உன் அத்தை என்ன சொல்லறா என்று கேட்டுக் கொண்டு, பின்னே கோட்டை கட்டலாம்,” என்றாள்.

தன் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதற்காக அத்தை தன் கருத்தை வெளியிட வேண்டும் என்று சைலாவுக்குக் குழப்பமாக இருந்தது. வீம்பாக, “அத்தை பிள்ளை சீனு தான் படிச்சு பெரிய டாக்டர் ஆகலாமோ? நானும் படிச்சா என்னவாம்? எங்கப்பா என்னைப் படிக்க வைக்கிறார்,” என ‘வெடுக்’கென மொழிந்தாள் அந்தப் பதினாலு வயதுப் பெண்.

“நீ கவலைப்படாதே அம்மா, நானாயிற்று உன் படிப்புக்கு உத்தரவாதம்,” என்ற தந்தையின் சொற்கள் அவளைச் சிறிது குளிர்வித்தன.

படிப்பில் என்றைக்குமே அவளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எல்லாரும் அவள் மனத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள்.தானும் அது போல ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேணும், இதனால் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று கனவு காண்பது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். ‘டாக்டர் சைலஜா’ என மனதுக்குள்ளேயே போர்டு மாட்டிக் கொண்டு பார்த்து மகிழ்வாள்! வானளாவக் கோட்டை கட்டுவாள். “டாக்டரம்மா, டாக்டரம்மா,” என்று நோயாளிகள் அவளைச் சுற்றி வருவதாகவும், கொடுக்கும் மருந்தில் குணமாகி அவளை வாழ்த்துவதாகவும் கற்பனை செய்து உள்ளம் நெகிழ்வாள்.

இந்த இலட்சியக் கனவுகளிடையே இப்போது இளமையின் வசந்தக் கனவுகளும் புகுந்து கொண்டு விட்டன. இரண்டும் ஒரு கலவையாகி, கற்பனைக் குதிரை இப்படியும் அப்படியுமாக ஓடியதால், சிறிது தடுமாறத்தான் செய்தாள் சைலஜா.

படிக்கும் பருவத்தில் ஒருவரது வாழ்வில் எது முக்கியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதற்குப் பெற்றோர் உதவி மிகவும் அவசியம். எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பதில்லை. மக்கோ, புத்திசாலியோ, குடும்ப வாழ்வு மட்டும் எல்லாருக்கும் எப்படியோ அமைந்து விடுகின்றது.

வெங்கடேசன் ஒரு லட்சியவாதி. தன் மகளைப் பற்றிய பெருமை நிரம்ப உண்டு அவருக்கு. அவளுடைய சமர்த்தையும் புத்திசாலித்தனத்தையும் கண்டு பெரிதாக எதையோ சாதிக்கப் பிறந்தவள் என்று திடமாக நம்பினார்.

அலமுவும் தன் தாயும் போடும் சம்பிரதாயமான சட்ட திட்டங்களுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு, அவர்கள் மனம் நோகாதபடியும் அனுசரித்துக் கொண்டு வந்தார்.

நாளை ஜானகி குடும்பத்தினரின் விஜயத்தால் என்ன மாறுதல்கள் ஏற்படப் போகின்றனவோ, எப்படி அவற்றை சமாளிக்க வேண்டும் என்று சிந்தித்தபடி சாப்பிட்டு எழுந்தவர், படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, “காலம்பற ஸ்டேஷனுக்குப் போகச் சீக்கிரம் எழுந்திருக்க வேணும். நான் படுத்துக்கப் போகிறேன்,” என்று தலையைச் சாய்த்தவர், ஐந்தாவது நிமிடமே குறட்டையொலியுடன் தூங்கியும் போனார்.

                                                                   (தொடரும்)

மறு பகிர்வு– தாரகை இணைய இதழ்

——————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *