இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (234)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

போனவாரம் மடல் வரையும்போது இவ்வார மடலின் கருப்பொருள் இதுவாக இருக்கும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை . இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மறைந்த ஹெரால்ட் வில்சன் அவர்கள் ஒருமுறை பேசும்போது “அரசியலில் ஒருவாரக் காலம் என்பது மிக நீண்ட காலமாகும் ” என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இவ்வாரத்துக்கும், போன வாரத்துக்குமான இடைவெளி இங்கிலாந்தின் அரசியல் உலகில் ஏற்படுத்திய மாற்றம் அது ஒரு மிகநீண்ட காலம் என்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. மிகச் சிறந்த அரசியல்வாதியான ஹெரால்ட் வில்சன் எதற்காக அப்படிக் குறிப்பிட்டார் என்பதன் அர்த்தமும் தெளிவாகப் புரிகிறது.

அது என்ன அப்படியான மாற்றம்? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கையே ! ஆனால் அதற்கான விடையையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் புதியதோர் தேர்தலுக்கான திகதியை அறிவித்ததுதான் அம்மாற்றம் எனலாம். 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டரசாங்கத்தில் இனி ஒரு கட்சி அர்சாளும் பெரும்பான்மை பெற்று அரசமைத்தால், அவ்வரசு தனது முழுப்பதவிக்காலமான ஜந்து வருடங்கள் முடிவதற்கு முன்னால் நம்பிக்கையிலாத் தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மை பலத்தை இழந்தாலொழிய அரசைக் கலைக்க முடியாது எனும் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம் அடுத்த தேர்தல் சரியாக ஜந்து வருடத்தின் பின்னால் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடத்தப் பட வேண்டும்.

சரி, அப்படியானால் எப்படி இந்தத் திடீர் தேர்தல் அறிவிப்பு எப்படிச் சாத்தியமாயிற்று?

அரசைக் கலைத்து தேர்தலை யூன் மாதம் 8ஆம் திகதி நடத்த விரும்புவதாக அறிவித்த பிரதமர், நான் மேற்குறிப்பிட்ட சட்டத்தை இம்முறை தளர்த்தி வைப்பதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் அதற்கு மறுநாள் கோரப்போவதாகவும் அது ஆதரிக்கப்பட்டால் தேர்தல் யூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன் பிரகாரம் அதற்கு மறுநாளான கடந்த புதன்கிழமை அதற்கான கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க 509 அதிகப்படியான வாக்குகளினால் பிரதமரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து யூன் மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆகா வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா என்று வடிவேலு பாணியில் ஒரு சாரார் அலுத்துக் கொள்ள தேர்தல் பிரசாரத்துக்கான பூஜை போடப்பட்டு பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சரி இன்னும் மூன்று வருட காலம் அரசுக்கு பதவிக்காலம் இருக்கிறதே பின் எதற்காக இந்தத் திடீர் தேர்தலுக்கான அறிவித்தல்? பிரதமருக்கு என்ன பைத்தியமா?எனும் எண்ணம் தோன்றுகிறது. இங்கேதான் நாம் சில முக்கிய அம்சங்களை நோக்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் யூன் மாதம் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஆரம்ப நடவடிக்கைகளை இங்கிலாந்து முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது மக்களின் வாக்குகளைப் பெறாமல் டேவிட் கமரன் பதவி விலக பின் கதவால் நுழைந்த இப்பிரதமருக்கு இந்த “ப்ரெக்ஸிட்” எனும் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வைத் தலைமை தாங்கும் தகுதி இல்லை எனும் குற்றச்சாட்டு ஒரு சாராரினால் முன் வைக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை வெறும் 12 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் அரசின் அமைச்சர்களினுள்ளேயே சில வேறுபாடுகள் உண்டு. அது மட்டுமல்ல லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி என்பன ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளுக்கு தம்மாலான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.வலுவான பெரும்பான்மை இல்லாததினால் தீர்க்கமான ஒரு நிலையான தலைத்துவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வெளியேற்றம் குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடியாமல் தடுமாறுகிறார் பிரதமர்.

இப்போதிருக்கும் நிலைமையில் அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டே நடைபெறும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறும் ஆண்டு 2019 ஆகும். ஒரு சமயம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் நிகழ்வினால் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து. நாடு சிக்கலுக்குள்ளானால் அப்போது சந்திக்கும் தேர்தலில் பிரதமர் தோல்வியடைய நேரிடலாம். இப்போது ஒரு தேர்தலை நடத்துவதின் மூலம் அவர் தனக்கான அவகாசத்தை 2022 வரை நீடித்துக் கொள்ளலாம். அப்படியே ஏதாவது பொருளாதார வீழ்ச்சி வந்தால் கூட சுதாகரித்துக் கொள்வதற்கு நேரம் இருக்கிறது.

இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் தற்போதைய எதிர்க்கட்சியான லேபர் கட்சி சின்னாபின்னமான நிலையிலிருக்கிறது . அதன் தலைவரான ஜெர்மி கோர்பன் பிரதமராக வருவார் என்பதை எண்ணிப்பார்க்க அஞ்சுவோர்களே நாட்டில் பெரும்பான்ம்மையாக இருக்கிறார்கள். பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சியை விட 21% அதிகப்படியாக முன்னிலை வகிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவிக்கு வருவதற்கு பிரதமருக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காது.

இவையனைத்துமே அரசியல் கணிப்புகள் தாம். பிரதமர் சரியாகக் கணிப்பிட்டுள்ளாரா என்பது ஜூன் 9ஆம் திகதி தெரிந்து விடாதா என்ன?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *