-மீனாட்சி பாலகணேஷ்

காவேரி ஓரம் கவிசொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா-அந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா?

                                       *******************

“அம்மா, நான் போயிட்டு வரேன்.  சாயங்காலம் வர நாழியாகும். எங்க காலேஜ் ஜெனடிக்ஸ் கிளப்பில புரஃபஸர் சூரியநாராயணனோட லெக்சர் இருக்கு.  கிளப் காரியதரிசியான நானே போகலேன்னா மத்த எல்லாரும் கிழிச்சுப்பிடுவா,” என்றபடி புத்தகங்களை மார்போடணைத்தவாறு கிளம்பினாள் சைலஜா.

வெங்கடேசன் குடும்பம் சென்னை வந்து சில வருடங்களாகி விட்டன.  ஒரு பிரைவேட் கெமிக்கல் கம்பெனி துவக்குவதற்கு பொறுப்பான ஒரு என்ஜினியர் தேவையாக இருந்தது.  கம்பெனி முதலாளியின் நெருங்கிய நண்பர் வெங்கடேசனுக்கு ஒன்று விட்ட சித்தியின் பிள்ளை.  திறமை இருந்தும் குடத்துள் விளக்காக இருக்கும் வெங்கடேசனுக்கு இந்தப் பொறுப்பை வாங்கிக் கொடுத்தால் அந்தக் குடும்பத்துக்கும் நல்லது செய்த மாதிரி இருக்கும் என்று அவர் தான் வெங்கடேசனிடம் முதலில் பேசினார்.

meenakshiசைலஜாவும் எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருந்தாள்.  இனி மேல்படிப்புக்கு சென்னைக்கு அனுப்பலாம் என்று பிளான்.  வெளியூரில் இருந்து கொண்டு, பெண்ணை ஹாஸ்டலுக்கு அனுப்பிப் படிக்க வைக்க எல்லாம் நிறையப் பணம் வேண்டுமே- சென்னையில் கிடைக்கவிருக்கும் பொறுப்பான பெரிய வேலையும், பணமும், சைலாவையும் படிக்க வைக்கும் வாய்ப்பும் கூடி வந்த போது உற்சாகமாக வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்.

பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரு ஆண்டுகளிலேயே தமது திறமையை வெளிப்படுத்தினார்.  சிறிய கம்பெனி ஸ்திரமாகி உறுதியாக நடைபோட ஆரம்பித்தது.  கம்பெனி முதலாளி மனமகிழ்ந்து வெங்கடேசனைத் தன் வலது கையாகவே ஆக்கிக் கொண்டார்.

சைலாவும் நன்றாகவே படித்து பி. யூ. சி. யில் முதல் வகுப்பில் உயர்ந்த மதிப்பெண்களுடன் தேறியிருந்தாள்.  ஆர்வம் மிகுந்த எல்லா மாணவர்களையும் போல, மெடிக்கல் காலேஜில் சேர விண்ணப்பித்தாள். நீண்ட நாளைய கனவாயிற்றே.  எந்தக் கனவுகள் நிறைவேறின?  சீட் கிடைக்கவில்லை.  இது முதல் அதிர்ச்சி.  ஜீரணமாக ரொம்ப நாட்கள் ஆயின.  “அப்பா, நான் ஏதாவது ஸ்கூலில் பாட்டு டீச்சராக வேலைக்குப் போகிறேன்.  இல்லை.  மேடைக்கச்சேரி பண்ண முயற்சிக்கிறேன். படிப்புக்கு  ‘குட்பை’ சொல்லிடறேன்பா,” என மாய்ந்து மாய்ந்து அழுத கண்ணீருக்கு அளவில்லை.

“இல்லையம்மா.  நீ இப்போ பி. எஸ்.சி சேர்ந்துடு.  அது முடிஞ்சதும் திரும்பவும் மெடிக்கல் டிரை பண்ணுவோம்மா,” வெங்கடேசனின் வார்த்தைகள் புண்ணுக்கு மருந்தாக வந்தன.  அதன்படி சைலஜா இப்போது பி. எஸ். சி கெமிஸ்டிரி இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா அலமேலுவுக்கு மகள் மெடிக்கல் காலேஜில் சேராதது பற்றிச் சந்தோஷம்.  “சீனு அன்னைக்கே வேண்டாம்னு தான் சொன்னான். இப்போ பார்.  என்ன குறைந்து போயிற்று?  கல்யாணத்தைப் பண்ணிண்டு சீனுவோட சந்தோஷமா இரு,” என்னவோ வாழ்வின் முக்கியமான குறிக்கோளே சீனுவைக் கல்யாணம் செய்து கொள்வது தான் என்பது போலப் பேசினாள்.

சைலஜா டாக்டருக்குப் படிக்காததால் சீனுவுக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தடை ஒன்றும் இருக்காது என்று வெங்கடேசன் கூட அப்பாவியாக நினைத்துக் கொண்டார்.  அலமேலு தான் தினம் ஒரு தடவையாவது இதைப் பற்றிப் பேசி சைலாவின் மனதை அலைக்கழிக்க வைத்தாள். சைலஜா மூன்றாவது வருடம் பி. எஸ். சி படிக்கும்போது தான் ஜானகியிடமிருந்து லெட்டர் வந்தது..  ‘சீனு மேலே படிக்க அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருக்கிறான்,’ என்று அட்மிஷன், விஸா எல்லாம் கிடைத்து விட்டதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.

“கல்யாணத்தைப் பத்தி ஏதாவது ஒரு முடிவு சொல்லியிருந்தா நாம்பளும் என்ன பண்ணுவது என்று யோசிக்கலாமே,” அலமுவுக்கு மனது அடித்துக் கொண்டது.

சைலஜாவின் ஆவல் இப்போது வேறு விதமாக ஒரு பக்கம் வெட்டினால் மறு பக்கம் துளிர் விடும் மரம் போல, இன்னொரு பாதையில் உருவெடுத்து வளர்ந்தது.  மருத்துவப் படிப்பு ஆசை மறைந்து விட்டது.  ஆராய்ச்சியில் இறங்கி விட ஆவல் கொண்டிருந்தாள். வெங்கடேசனும் பாவம், வெகுளியாகவே கனவு கண்டார்.  “சீனு இப்போ டாக்டர்.  தன் திருமணத்தைப் பற்றி நினைக்கத் தோணும்.

அமெரிக்காவுலே இருப்பதாலே மனசு விசாலப்பட்டு சிந்திக்கவும் தோணும்.  பி.எஸ். சிக்கு அப்புறம் சைலஜா எம். எஸ். சியும் முடிச்சுட்டா அங்கேயே, அமெரிக்காவுக்கே போய் கல்யாணத்துக்கப்புறம் பி. எச்டி செய்து கொள்ளலாம்,” என்று கணக்குப் போட்டார்.  கனவுகளுக்கு ஏது எல்லை?

மூன்றாம் வருடம் பி. எஸ். சி பரீட்சைக்கு முன்பு தான் ‘அந்த’க் கடிதம் வந்தது.  எல்லாருடைய எண்ணங்களிலும் மண்ணை வாரிப் போட்டது.  அதுவும் ஜானகி அத்தை தான் புலம்பித் தள்ளி எழுதியிருந்தாள்.  சீனு அங்கேயே, நியூயார்க்கில், தன் கூடவே வேலை செய்து கொண்டே படித்துக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்கப் பெண்ணை, லிஸா (எலிஸபெத்) என்று பெயராம், பதிவுத் திருமணம் செய்து கொண்டு தன் பெற்றோருக்கு அறிவித்திருக்கிறான்.

தன் செல்ல மகளின் கனவுகள் வீணாகத் திரும்பத் திரும்பத் தகர்ந்ததால், வெங்கடேசன் மிகவும் ஆங்காரப் பட்டார்.  ஜானகி குடும்பத்துடனான உறவையே முறித்துக் கொண்டு விட்டார்.  “சைலுக் குட்டி, உன்னை டாக்டராக்கிக் காட்டறேன் பாரம்மா.  மெடிஸின் படித்தால் தான் டாக்டரா?  கெமிஸ்டிரியிலே ரிஸர்ச் பண்ணி பெரிய ஆளா வரணுமம்மா நீ,” என்று உள்ளம் நெகிழக் கூறினார்.

அப்போது தான் சைலஜா கற்றுக் கொண்டாள்- மனதை அழுத்தி மூடிக் கொள்வதற்கும், மேற்பூச்சாக ஒரு செயற்கைச்  சிரிப்புடன் எல்லாருடனும் பழகவும், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதையே சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிப்பாதைக்கு அஸ்திவாரம் போடவும், இந்த நிகழ்ச்சி அவளைத் தயார் செய்தது.

தன் பெண்ணுக்கு இனிமேல் திருமணமே ஆகாது என்பது போல அலமேலு தான் மிகவும் இடிந்து போய் விட்டாள்.  சைலஜா வெகு சீக்கிரம் சமாளித்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு விட்டது போலத் தான் தோன்றியது.  ஆனால் இத்தகைய திடமனத்தின் உள்ளே வெகு மென்மையான ஒரு பகுதி சிதைந்து, சீர்படுத்த முடியாத அளவுக்கு நொறுங்கி விட்டதை எத்தனையோ நாட்கள் கழித்தல்லவோ அவளும், அவள் குடும்பத்தினரும் உணரப் போகிறார்கள்!

“அம்மா! பி.எஸ்சியிலே நான் காலேஜ் பர்ஸ்ட்,” சைலாவின் உற்சாகம் தளும்பும் குரல்.  “அலமு, பார்த்தியா, எம். எஸ்சிக்கு இவ மார்க்கைப் பார்த்துட்டு அட்மிஷனே குடுத்துட்டா.  போய் பீஸ் தான் கட்டணும்,” வெங்கடேசனின் பெருமிதம்.  சில ஆண்டுகள் கழிந்த பின், “என்னவோடியம்மா, கோல்டு மெடல் வாங்கிட்ட.  இப்போ அமெரிக்கவிலே போய் பி. எச்டி. பண்ணப் போறேன் என்கிறியே, இது எதிலே போய் முடியுமோ,” அலமுவின் புலம்பல்.  ஆனால் அப்பாவும் பெண்ணும் தங்களுடைய திட்டத்தின்படி வேறோர் உலகில் சஞ்சரித்தனர்.  பாஸ்போர்ட், விஸா கிடைத்து மகளைப் பிளேனில் ஏற்றி விட்ட பின்பு வீடு வந்த வெங்கடேசன் முதல் முறையாக வெறுமையை உணர்ந்தார்.

மகளின் மனம் மிகவும் நொந்து போயிருந்ததையும், அவளுடைய செயற்கைத்தனமான குதூகலமும் மகிழ்வும் அவர் கொஞ்ச நாட்களாகவே அறிந்திருந்தது தான்.  அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவளிடம் பேசி உற்சாகப்படுத்த முயன்றிருக்கிறார்.

ஃபாக்டரியிலிருந்து ஃபோன் பண்ணுவார், “சைலுக் குட்டி, என்ன ப்ரோக்ராம் அம்மா சாயங்காலம்?”

“ஒன்றுமில்லை அப்பா, அம்மா கேட்கிறா அவ கூட கதாகாலட் சேபத்துக்கு வரயா என்று. போகட்டுமா?,” வலுவில் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் சிரிப்பாள்.

“ஏம்மா, அம்மாவை முதல்ல கதாகாலட்சேபத்துக்கு ட்ராப் பண்ணிட்டு, டிரைவர் கிட்ட உன்னை ‘லிட்டில் ஆனந்தி’ல ட்ராப் செய்யச் சொல்லேன்.  ரோமியோ அண்ட் ஜூலியட் ஓடறதாம்.  ரெண்டு டிக்கட் புக் பண்ணியிருக்கேன்.  உன்னோடயும் கொஞ்சம் பர்சனலாகப் பேசணுமே அம்மா,” என்பார்.

இப்படியும் ஒரு தந்தை.  மனம் பொங்கி நெகிழ, “ஓ.கே. அப்பா,” என்பாள்.

வேணுமென்றே, இந்தக் காதல் சித்திரமான திரைப்படத்தைப் பார்க்க வைத்து, ஷேக்ஸ்பியரை டிஸ்கஸ் செய்வது போலக் காதல், அதில் வரும் ஏமாற்றம், மனவருத்தம், விரக்தி எல்லாவற்றையும் பெண்ணுடன் விவரமாக அலசுவார்.  அற்புதமான மனமுதிர்ச்சியுடன் அவருடன் விவாதிப்பாள் சைலஜா.

இத்தனைக்குப் பின்னும் சீனுவின் செய்கை தன் மனத்தைப் புண்படுத்திக் கீறிக் காயப் படுத்தியதை ஒருபோதும் அவள் தந்தையிடம் வெளிப்படையாகக் கூறியதில்லை.  மனமெனும் மணிக்கதவம் இறுகத் தாழ் போட்டுக் கொண்டு விட்டதோ?  அவள் உள்ளத்தினுள்ளே இருப்பதைக் காண ஒருவராலும் இயலவில்லையே!

தன் மனத்தில் உள்ளது பிறருக்குத் தெரிந்து விடுமோ, தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற ஒருவிதமான தற்காப்பு உணர்வு அவள் மனதின் ஆழத்தில் நோயாக வேரூன்றி விட்டது.  இதன் விளைவுகளை யாரே அறிவார்?

*******

தொலைபேசி சிணுங்கலாகக் கிணுகிணுத்தது.  ப்ரியா அதை எடுத்து, “டைரக்டர்ஸ் ஆபீஸ்,” என்றதும் ரிஸப்ஷனிஸ்ட், “ப்ரியா, டாக்டர் ஆடலரசு என்பவர் மேடத்தைத் தெரியும், பேச முடியுமா எனக் கேட்கிறார்…..”

“ஒன் மினிட்,” ரிஸீவரைக் கையால் மூடியபடி, “ஷீலா…” விவரத்தைத் தெரிவித்தாள்.

ஷீலாவின் முகத்தில் உணர்ச்சிகள் பலவிதமாகப் பளிச்சிட்டன. ஆச்சரியம்-   ‘இவன் எங்கே இங்கு வந்து இத்தனை நாட்களுக்குப் பின் என்னைத் தேடிப் பிடித்தான்’;  எரிச்சல்- ‘முக்கியமான மண்டையை உடைக்கும் ஃபைலைப் பார்க்கும்போது இது என்ன தொந்தரவு!’; கலவரம்- ‘என் கடந்த காலத்தை அறிந்ததால் எள்ளி நகையாடப் போகிறானோ?.  ஒரு தற்காப்பு உணர்வு தோன்றி ஒரு கணம் வயிற்றைப் பிசைந்தது.

“முடியாது. ஐ ஆம் பிஸி நௌ,” என்றவள் உடனே சிந்தித்தாள். மாலையோ, நாளையோ அவன் கூப்பிடுவதைத் தவிர்க்க முடியாது என்பதால், “ஓகே, அவர் எனது பழைய குடும்ப நண்பர், இப்போதே பேசுகிறேன்,” என ஒப்புக் கொண்டாள்.

அவளுடைய தயக்கமும் பரபரப்பும் ப்ரியாவை வியப்பிலாழ்த்தின. ஷீலா ரிசீவரைக் கையிலெடுத்தவள், ஒரு சில விநாடிகளில் தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே அழுத்தமான ஆங்கில உச்சரிப்புடன் “ஷீலா ராபர்ட்ஸ் ஸ்பீக்கிங்,” என்றாள்!

திரும்பவும் ஆச்சரியம்!  இவளுடையதை விட மிகையான ஆங்கில உச்சரிப்புடன், “என்னுடன் பேச முடிந்ததற்கு மிக்க நன்றி!  நான் ஆடலரசு பேசுகிறேன்.  என் தங்கை திலகவதி உங்கள் இளம்பிராயத்து உயிர்த் தோழி ஆயிற்றே!  நான் சென்ற வாரம் தான் யூ. கே. யிலிருந்து வந்தேன்.  இங்கு புதிதாகத் தொடங்கப்பட்டு இருக்கும்………………… மருத்துவ மனையில் ‘சீஃப் ஆஃப் மெடிஸின்’ ஆக ஜாயின் பண்ணியிருக்கிறேன்……..,” உற்சாகமாகப் பேச்சு தொடர்ந்து கொண்டே போயிற்று.

ஆடலரசின் குரலா இது?  எத்தகைய மாற்றம்?  உறுதியும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் தளும்பும் குரல்.  எதிராளியை வசப்படுத்தும் கனமான, ஆழமான குரல்.  இத்தனை வருடங்களுக்கு அப்புறம் எப்படி இருப்பான் ?  எண்ண ஓட்டங்களினிடையே பதில் பேசவும் மறந்து அமர்ந்திருந்தாள் ஷீலா.

அமெரிக்கா செல்லும் வரை திலகாவுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள் ஷீலா.  அதிலிருந்து, ஆடலரசு எம். பி. பி. எஸ் முடித்தவன் மேலே இங்கிலாந்து சென்று ‘ஸ்பெஷலைஸ்’ செய்ய முயன்று கொண்டிருந்ததாக அறிந்து கொண்டிருந்தாள்.  அது தான் ஆடலரசு பற்றிய கடைசித் தகவல்.  இதோ, அவன் ஒரு பெரிய மருத்துவ நிபுணனாகத் திரும்பி வந்திருக்கிறான்.  ‘நான் என்ன சாதித்தேன்….’

அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவனை அவனுடைய குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்து கொண்டு டெலிஃபோனைக்  கீழே வைத்தாள் ஷீலா.

மனது அலை பாய்ந்தது.  ‘நாளன்றைக்கு அழகான மனைவி, இரு குழந்தைகள் சகிதம் வந்து நின்று ஸ்டைலாக ஒரு பெரிய பூங்கொத்தைத் தந்து நலம் விசாரிக்கப் போகிறான்.  என் பங்குக்கு என்ன இருக்கிறது காட்டிப் பீற்றிக் கொள்ள-  முறித்துக் கொண்ட மணவாழ்வும் வளர்க்கக் கிடைக்காத ஒரு குழந்தையும் சித்திரம் வரைபவன் ஒருவனிடம் அன்பை விலைவாங்க  நடித்த பொய் வேஷங்களின் கசப்பு அனுபவங்களும் தான் என் வாழ்வின் ஏடுகள்.’  பொங்கிச் சுழன்றடித்த ஆவேச நினைவலைகளில் தலை ரொம்ப வலித்தது.  ஆயாசத்துடன் நாற்காலியை விட்டெழுந்தவள் குறுக்கும் நெடுக்குமாக அறையில் நடை பயிலலானாள்.

ப்ரியாவைக் கூப்பிட்டு, ” எனக்கு ஒரு ப்ளாக் காஃபி, கூடவே ஒரு ஆஸ்பிரினும்.” கண்கள் விரிய ஏறெடுத்த ப்ரியாவிடமிருந்து சாமர்த்தியமாகப் பார்வையை மீட்டு,  எதையோ தேடும் சாக்கில் அறையின் கோடியிலிருந்த  புத்தக அலமாரியை நோக்கி நடந்தாள். எப்போதாவது தன் அந்தரங்கங்களை அவளுடன் பகிர்ந்து கொள்வதுண்டு- இப்போது இயலாது- முடியாது- கூடாது.  ‘ஷீலா ராபர்ட்ஸ் ஒரு ஸூப்பர் வுமன்.  கடந்த காலத்து நிகழ்வுகள் எதுவும் அவளை என்றும் பாதித்ததில்லை.’  தலையை உலுக்கிச் சிலுப்பிக் கொண்டாள்.

ப்ரியாவின் கரம் அவள் முன்பு காஃபியுடனும் ஆஸ்பிரினுடனும் நீண்டது.

“தாங்க்ஸ் ப்ரியா,” அவள் கண்களையும் அவற்றில் தொக்கி நின்ற வினாவையும் தவிர்க்க முயற்சித்துத் தோல்வியுற்றாள் ஷீலா.

“ஷீலா, என் தோழியே சொல்லி விடு.  உன் மனத்தை உறுத்தும் எதையும் வெளியே சொல்வது தான் உனக்கு நல்லது,” என்றபடி அவள் தோள்களை உறுதியாகப் பற்றி உலுக்கினாள் ப்ரியா.

“ஆடலரசு நீண்ட நாளைய குடும்ப நண்பர்.  ரொம்ப நாட்களுக்குப் பின் சந்திக்கும் போது என்னுடைய சாதனைகள் என்று கூறிக் கொள்ள என் வாழ்வில் என்ன தான் மிஞ்சியிருக்கிறது ப்ரியா?” ஷீலாவுக்குத் தொண்டையை அடைத்தது.

‘என் சொந்த வாழ்விலும், சமூகத் தொண்டு செய்ய ஏதுவான மருத்துவ உயர் கல்வியிலும் தோற்று விட்டேன்.  எதிர் நீச்சலடித்து இங்கே இருக்கிறேன்,’ என்று கூறிக் கொள்ள அவளுடைய தன்மானம் இடம் தரவில்லை.

ஆடலரசைச் சந்திப்பதை எப்படித் தவிர்க்கலாம் என யோசனை செய்தாள்-  புரியவில்லை-  அடுக்கடுக்காகக் குழப்பங்கள் நிறைந்து பயமுறுத்தின.

                                                                                                         (தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.