இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (233 )

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்!

 

சித்திரை2017

இதோ அடுத்தொரு சித்திரைத் திங்கள் வாசலில் நான் வரையுமிந்த மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்க விழைகிறேன். இது தமிழர்களின் வருடப்பிறப்பா? இல்லையா ?எனும் விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இவ்விழாவினில் எமை ஆழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் ஒரு சிறிய மகிழ்வினை அனுபவிக்கத் துடிக்கும் மக்கள் ஒருபுறமென இச்சித்திரைத் திங்களின் வரவு பல முனைகளில் நிகழ்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த ஒரு கலாசார நிகழ்வாக இதனைக் கருதுவது சரியேயாகும். எனது தந்தை வழிப் பாட்டியிடம் இருந்து கைவிசேடம் பெறும் ஒரு நிகழ்வே இச்சித்திரைத் திங்களின் பிறப்பின் நினைவுகளை என் நெஞ்சில் தாலாட்டுகிறது.

உலகம் ஒரு புதுத் திசையில், புது வேகத்துடன், புது முனைப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக நாம் காத்து வந்த பல கலாசார மகிமைகள் காலத்தோடு கரைந்து போகும் ஒரு நிலையைக் கண்டு உள்ளம் கொஞ்சம் வாடத்தான் செய்கிறது. காலத்தோடு மனிதன் மாற வேண்டிய தேவை மானிட குலத்தின் காலக்கட்டாயம் எனும் வாதத்தை மறுப்பதற்கு இல்லை. ஆனால் எந்தெந்தவைகளின் மாற்றத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எவைகளை மாற்றம் எனும் பெயரில் நாம் பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் நாம் மனத்தெளிவு கொண்டிருப்பது அவசியமாகிறது.

இன்றைய உலகத்தின் முக்கிய தேவை என்ன ? இன்றைய உலகத்தின் போக்கு என்ன? என்பனவற்றை நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது. எமது வாழ்க்கையின் போக்குகளை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கு எத்தகைய நிலையில் உள்ளது? அவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகரப் போகிறது? இவையெல்லாம் மனதில் யதார்த்தமாக எழவேண்டிய கேள்விகள். நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் போக்கிலும் எமக்குள்ள பங்கு எத்தகையது? எமக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை என்று நாமாக ஒதுங்கி இருந்து விட்டு நாட்டின் போக்கினைப் பற்றி ஆங்காங்கே முனகுவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியுமா?

இன்று இங்கிலாந்தில் நான் காணும் போக்கு மனதில் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. சில வருடங்களின் முன்னால் எது பொதுவாக மக்கள் முன்னால் கிளறிவிடப்படக்கூடாத கருத்துக்கள் என்று கருதப்பட்டனவோ அவை இன்று உண்மையைப் பேசுகிறோம், நேர்மையான அரசியல் நடத்துகிறோம் வழமையான அரசியல்வாதிகளுக்கு முரணாக மக்களின் அங்கலாய்ப்புக்களை வெளிக்கொணருகிறோம் எனும் போர்வையில் சாவகாசமாக ஊடகங்களில் முன் வைக்கப்படுக்கின்றன. இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே இலைமறைகாயாக இருக்கும் பிரிவினைகளை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் தற்கால அரசியல் எனும் பெயரில் சகஜமாகப் பேசப்பட்டு வருகிறது. என் இனிய அன்பு வாசக நெஞ்சங்களே! மக்களின் மனதில் அங்கலாய்ப்புகளாக, மக்களின் உள்ளங்களில் தாம் காணும் குறைகளாக இருப்பவை சிறுபான்மை மக்களின் மனதினைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக விவாதிக்கப்படக்கூடாது என்பதல்ல எனது கருத்து. நான் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக மதிப்பவன். மக்களுக்காகவே அரசியல் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டவனல்லன். ஆனால் விவாதிக்கப்படும் விடயங்கள் ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்கப்பட்டாலொழிய அது மக்களுக்குத் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.

இத்தகைய ஒரு சூழலில், இத்தகைய பின்னணியில் நாம் சாதாரண மனிதர்களாக எதைச் சாதித்து விடப் போகிறோம்? நான் இங்கிலாந்துக்கு வந்து 42 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த 42 வருடங்களில் மாணவனாக சில வருடங்களும் பின்னர் பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளராக ஏறத்தாழ 30 வருடங்கள் பணியாற்றியது தான் என் வாழ்வில் சாதனையா? பல பரிசில்கள் பெற்று, பலரின் பாராட்டைப் பெற்று முன்னிலை வகிக்கும் ஒரு எழுத்தாளனல்லன் நான். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வின் தாக்கங்களையும் எளிமையான தமிழில் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும் எழுதத்துடிக்கும் ஒரு பாமரனே நான். தமிழின்பால் நான் கொண்ட நேசம் இன்று நான் படைக்கும் என் வரிகளையிட்டு என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது. இந்த உணர்வே என்னுள்ளத்தின் வெற்றியென்பேன். எனது காலத்தின் பின்னர் எத்தனையோ வருடங்களின் பின்னால் உலகின் ஒரு மூலையில் யாரோ ஒருவர் 2017ஆம் ஆண்டில் சக்தி சக்திதாசன் எனும் சாதாரண எழுத்தாளன் இப்படிப் பதிவு செய்துள்ளார் என்று எண்ணினால் அதுவே என் சாதனை என்று எண்ணுகிறேன்.

இவ்வகையில் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சாதனையாளர்களே! அவர்களின் சாதனைகள் அவர்களின் மனத்தராசில் அவரவர் நிலைகளுக்கேற்ப அவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்வில் அன்றாடம் பசியைப் போக்குவதற்கு அல்லாடும் ஒருவன் ஒருநாள் தன் தேவைகளை நிறைவேற்றும் போது அதுவே அவனுக்கு சாதனையாகிறது.இத்தகைய ஒரு உலகத்திலே இன்று அரசியல் எனும் மேடையில் பலரும் தாம் பல சாதனைகளைப் புரிந்து விட்டதாக புகழ்பாடும் ஒரு நிலையும் இருக்கிறது. ஆனால் அரசியல் எனும் மேடையில் ஏறும் நாடகங்களின் தயாரிப்பாளர்கள் அன்றாடம் வாழ்வில் அல்லாடும் சாதாரண மக்கள்தான் எனும் உண்மையை அவர்கள் மறந்து போய்விட்டது போல் தெரிகிறது. மக்களின் மனநிலைக்கேற்ப அவர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்கிறதோ அதைப்பேசி தாம் பதவிக்கு வருவதையே குறிக்கோளாகக் கொண்டியங்கும் பல அரசியல் தலைவர்களே இன்று முன்னணியில் இருப்பது போல் தெரிகிறது. இறக்கும்போது தனது பையில் 72 ரூபாயே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் ஆதவன் மறைந்திடும்போது மறைந்திடும் நிழல் போல மறைந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அவரைப் போன்ற தலைவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள் “என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவே இன்றைய உலகின் நிலை என்று எண்ணும்போது எதிர்காலத்தைப் பற்றி ஓரளவு அச்சம் எழத்தான் செய்கிறது.

இது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு நிலையே. எதற்காக இப்போது சக்திக்கு இத்தகைய ஒரு மனத்திறப்பு என்று எண்ணலாம். நாளை அதாவது ஏப்பிரல் 14 2017 , சித்திரைப் புதுவருடப் பிறப்பு. இத்தினத்தோடு அமைந்த இம்மடலில் இன்றைய உலக ஸ்திரமற்ற நிலையை சிறிது அலச முற்பட்டேன். உலகம் நாடுகளால் ஆனது, நாடுகள் நகரங்களினால் ஆனது , நகரங்கள் சமூகங்களினால் ஆனது, சமூகம் சாதரண மனிதர்களினால் ஆனது. அத்தகைய வகையில் சமூகத்தில் ஒருவனான என்னையும் சிறிது அலச முற்பட்டேன்.

மக்களின் உணர்வுகள் தெளிவடைந்து, உண்மையான, யதார்த்தமான தேவைகளின் நியாயங்கள் விழிப்படைந்தால் தான் அம்மனிதர்களிடை இருந்து மகோத்தமமான தலைவர்கள் உருவாக முடியும். பணத்தினால் தலைவர்கள் உருவாகும் நிலைமாறி மனத்திடத்தினால் உருவாகும் தலைவர்கள் மக்களின் உண்மைநலனை முன்வைத்துச் சேவையாற்ற முன்வருவார்கள் எனும் நம்பிக்கையோடு இச்சித்திரைப் புத்தாண்டினுள் நுழைவோம் வாருங்கள்.

அன்பு வாசக உள்ளங்கள் மற்றும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் எனது அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

***

பங்குனித் தாயின் வயிற்றில்
பக்குவமாய் உதிக்கும் எம்
சித்திரைத் திங்கள் மகளே
சீரடி எடுத்து வாராய்!

இத்தரை மீதினில் மக்கள்
இடர் பல கண்டும் தளரா
மனமது கொண்டு வாழ்வோடு
போராடி வாழ்கின்றார் பாராய்!

சிறக்கின்ற பல செயல்கள்
சிறப்புற ஆற்றிட்ட போதிலும்
சிந்தனையற்றோர் செயலால்
சிதைகின்ற சமுதாயம் காணாய்!

எதைக் கொண்டு வந்தோம் உலகில்
எதைக் கொண்டு செல்வோம்?
விதைக்கின்ற செயல்கள் தானே
வினையாய் முளைக்கின்ற விந்தை

காலங்கள் மாறுது காண்பீர் இங்கே
காட்சிகள் கலையுது கண்முன்னே
மாற்றத்தை ஏற்றிடும் துணிச்சல்
மனதினில் கொண்டு வாழ்ந்திட

திடமான ஒரு இளஞ்சமுதாயம்
தீர்க்கமாய் உருவாக வேண்டும்
பிறந்திடும் சித்திரைப் புத்தாண்டு
பரவட்டும் நல் மன உணர்வுகளை

உலகெங்கும் சூழ்ந்திடும் மேகங்கள்
உருவாக்கிடும் போர்க்காலச் சாரல்கள்
நிலையாக மானிடம் வாழ்ந்திட
நிலையான மனிதாபிமானம் தேவையே

கலந்திட்டே வாழ்ந்திடும் மக்களிடையே
கலக்கின்றார் பிரிவினை உணர்வினை
கண்டிடுவீர் அறிவுடை மாந்தரே
கலைத்திடுவீர் புல்லர்களை வெளியே

உள்ளத்தில் தெளிவோடு உண்மை
உணர்வினில் கருணை கொண்டு
நாளை நீர் படைத்திடும் உலகம்
யாவர்க்கும் பொதுவாய்த் திகழட்டும்

நம்பிக்கை என்னெஞ்சில் உண்டு
நல்லபல இளையோர் மீதினில்
உதிர்க்கின்றேன் உமக்கெந்தன்
உள்ளத்தில் பூத்திடும் வாழ்த்துக்கள்!

சித்திரைப் பெண்ணவள் மெதுவாய்ச்
சிங்காரம் தாங்கி நுழைகின்றாள்
உலகெங்கும் அமைதியை அளித்து
உயிர்களைக் காத்திட வந்திடம்மா!

உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகள்
உகுத்திடும் வாழ்த்துப் பூமழை
படிக்கின்ற அனைவர்க்கும் எனது
பணிவான சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *