Category: தொடர்கள்

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 11

    கதை வடிவில் பழமொழி நானூறு – 11

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 23

    அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
    திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
    புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; ‘அறஞ்செய்ய
    அல்லவை நீங்கி விடும்‘.

    பழமொழி – ‘அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும்‘.

    பட்டணத்து வேலை. நல்ல சம்பளம். வெளியில் இறங்கினால் கார். சொகுசு வாழ்க்கைதான். ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டில் கழித்த பத்து நாட்களும் வித்தியாச அனுபவம்  பாசமான பாட்டியின் கோரிக்கையை மறுக்கமுடியாமல் வந்த எனக்கு இந்த பத்து நாட்களில் இவ்வூரின் வாழ்க்கை பழகிவிட்டது.

    காலையில் எழுந்தவுடன்முதல் காட்சி. அனைவரும் வாசலில் சாணம்தெளித்துக் கோலம் போடுவது. அடுத்தது வீட்டின் உள்ளே க்ளீனிங். பின் கிணற்றடிக்குளியல். அல்லது வயக்காட்டுக்குநடந்து சென்று பம்புசெட்டுக்குளியல். மாடு வளர்ப்பவர்கள் காலையில் மாட்டைக் குளத்தில் குளிப்பாட்டி பருத்திக்கொட்டையும் புண்ணாக்கையும் காலை உணவாகக் கொடுத்து மேய்ச்சலுக்குப் பத்திச்செல்கிறார்கள். வீட்டிலுள்ள அரசிகள் காலை சிற்றுண்டிக்குப் பின் கையோடு சமையல் செய்துவிட்டு வாசல்திண்ணை அரட்டைக்கச்சேரி ஆரம்பிக்கிறார்கள். அதிலும் பெரிசா ஒரு டாபிக்கும் கிடையாது. செஞ்சசெய்யப்போற சமையலைப் பத்தியும். அக்கம்பக்கத்து வீட்டு விசேசங்கள், வம்புகள் இவ்வளவுதான்.  அதையும் தாண்டி இளவட்டங்கள் புடவை நகை கம்பேரிசன்.

    இருக்கும் வேத பாடசாலை மாணவர்களுக்கு தெருமுக்கு அரச மரத்திலிருந்து விழும் குச்சிகளைச் சேகரிப்பதுதான் டாஸ்க். அதை ஹோமத்திற்குப் பயன் படுத்துவார்களாம். கடவுள்நம்பிக்கை, சொத்து சேர்ப்பது, சாப்பாடு இதைத்தாண்டி இந்த ஊரில் எதுவும் இல்லையென்றாலும் மக்கள் பரபரப்பில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கிறார்கள். நகரத்தில்மட்டும் நாம் எதைத் தேடி ஓடுகிறோம். என்ன சாதித்து விட்டோம். இன்னும் மன அமைதியை விலை கொடுத்து வாங்கமுடியவில்லையே. அங்குள்ள மனநலமருத்துவர்கள் அது உன்னிடத்திலேயே உள்ளது வெளியில் தேடாதே என்று சொல்வதற்கு நான்கு முறை அழைத்து புத்தி சொல்லி பணம் வாங்குகிறார்கள். வெக்கமில்லாமல் நாமும்கொடுக்கிறோம்.

    ஏதோ எண்ண ஓட்டம். சட்டென்று தடைபட்டது பாட்டியின் வருகையால். இந்தாடா இத வாங்கி அந்தப் பிச்சக்காரனோட பாத்திரத்துல கொட்டு.

    மறுக்காமல் கையில் வாங்கி தண்ணீரில் நொதித்துப் போயிருந்த பழையதை பிச்சைக்காரன் நீட்டிய அதுங்கிய அலுமினியப் பாத்திரத்தில் கொட்டினேன். எல்லார் வீட்டுச் சாப்பாடும் கலந்து அவன் பாத்திரத்திலிருந்து ஒரு அதீத நெடி.

    பாட்டி இட்லி சாப்பிட அழைத்தும் என்னமோ என் மனம் ஒட்டவில்லை. பாவம் இந்தப் பிச்சைக்காரன். இவன் யாரோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் பாழடைந்த எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்கிறான். பக்கத்தில் உடல் மெலிந்த ஒரு கருப்பு நாய் அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறது.

    வந்துட்டுயா. உன்னயத்தான் தேடினேன். இந்தா சாப்புடு. அவன் நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு தான் சாப்பிட ஆரம்பிக்கிறான்.

    என்னடா. எவ்வளவு நேரம் கூப்பிடறேன். இட்லி ஆறிப்போகுது. இங்க என்ன வாயப் பொளந்துட்டு பாத்துட்டிருக்க.

    ஓ அவனப் பாக்கறயா. அவனால முடிஞ்சது அந்த நாய்க்கு சாப்பாடு வைக்கறது. அந்த தருமத்துக்காகவாவது கடவுள் அவன் பசியப்போக்கட்டும். போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே பாட்டி உள்ளே போய்விட்டாள்.

    எவ்வளவு பெரிய தத்துவம்.   ‘அறம் செய்யப் பாவம் நீங்கும்‘ ங்கறது இதுதானோ. பட்டணத்துல சேமிக்கறதயே குறியா வச்சு ஓடிஓடி பணம் சம்பாதிக்கறாங்க. இங்க பாவத்தத் தொலைக்கறதுலயே குறியா தானம் செய்யறாங்க. நினைத்துக்கொண்டே எழுந்து நடந்தேன்.

    பாடல் 24

    தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
    மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
    நெறியல்ல சொல்லல்நீ, பாண! – ‘அறிதுயில்
    யார்க்கும் எழுப்பல் அரிது‘.

    பழமொழி -‘அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது‘

    கிரிஷாங் குப்தா… பெயர் வாசிக்கப்பட்டவுடன் மனதுள் பெரும் எதிர்பார்ப்பு. அவன் வந்திருக்கக் கூடாது. ஒருநொடிக்குள் பல எண்ணங்கள். மும்பையில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையான நான் காலை என் வகுப்பின் வருகைப்பதிவேட்டிலிருந்து பெயர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

    அவன் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என நீங்கள் யோசிக்கக்கூடும்.

    அந்த ஐந்தாம்வகுப்பு சி பிரிவின் ஆசிரியையான எனக்குமட்டும்தானே தெரியும் அவன் படுத்தும் பாடு. ஒருநாள் அவன் வரவில்லையென்றால் எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

    என் எதிர்பார்ப்பு வீண். அவன் வந்திருக்கிறான். முதல் பாட வகுப்பிற்கான அழைப்புமணி ஒலித்துவிட்டது. நான் ஆறாம் வகுப்பிற்குப் பாடம் எடுக்கச் செல்லவேண்டும். தினப்படி அறிவுரைகளுடன் கூடுதலாக கிரிஷாங் என அழைத்து இன்று எந்த ஆசிரியையிடமிருந்தும் புகார் வராவிட்டால் கடைசி பாட வகுப்பில் உனக்கு சாக்லெட் கிடைக்கும் என ஊக்குவித்தேன்.

    சொல்லிமுடிக்குமுன்பே பக்கத்து சீட்டில் இருந்த கார்த்தியாயினியைப் பென்சிலால் குத்திவிட்டான். வீர் என அலறுகிறாள்.

    முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சாரி மேடம். பென்சில் ஷார்ப்னஸ் செக் பண்ணினேன்.  அவ்வளவுதான் என்கிறான்.

    இன்று அவன் பெற்றோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். ஸ்கூல் கவுன்சிலருடன் அமர்ந்து ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும்.

    அவனைப்பற்றி மற்ற ஆசிரியர்கள் புகார் அளித்த துண்டு சீட்டுக்களை எடுத்துக்கொண்டு கவுன்சிலர் அறைக்குச் செல்கிறேன்.

    கவுன்சிலர் ரமா பெற்றோருக்கு விளக்கத்தொடங்கினாள். உங்கள் மகன் எந்த ஆசிரியரின் பேச்சையும் கேட்பதேயில்லை. ஓரிடத்தில் உட்காருவதேயில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது பென்சில் சுண்டி விளையாடுகிறான். ரப்பரில் பென்சிலின் சீவிய முனையைச் சொருகி பம்பரம்விடுகிறான். எல்லாப் பாட வேளைகளிலும் தாகம் அல்லது டாய்லெட் எனக்காரணம் காட்டி வெளியே சுற்றி நேரம் போக்குகிறான். உள்ளே வேறு மாணவர்கள் இருக்கும்போது கழிவறைக் கதவுகளை வெளியிலிருந்து தாள் போட்டுவிட்டு வந்துவிடுகிறான். என நீண்டுகொண்டே போனது.

    ரமா அவன் அப்பாவைப்பார்த்துத் தொடர்ந்தாள்.  நீங்கள் ஒரு மனநல மருத்துவர். உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அவனைப்பார்த்தாலே ஆசிரியர்களும் மாணவர்களும் தெரித்து ஓடுகிறார்கள். இப்போ அவன் சின்னப்பையன். போகப்போக இது பெரிய பிரச்சினையாயிடும் உங்களுக்கு. அவனை அமரச்செய்து பலமுறை அறிவுரை சொல்லியிருக்கேன். நான் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அவனே எது சரி எது தப்புனு சொல்லிடுவான். எனக்கென்னமோ தான் செய்யறது தப்புனு தெரிஞ்சுக்கிட்டே திரும்பத்திரும்ப அதே தப்ப அவன் பண்றான். தூங்கறவனதான் எழுப்பமுடியும். தூங்கறாமாதிரி நடிக்கறவன எழுப்பறது ரொம்ப கஷ்டம். எங்களப் பொறுத்தவர அவன் தூங்கறாமாதிரி நடிக்கறவன். அதனாலதான் உங்களைக் கூப்பிட்டோம். நீங்களூம் கொஞ்சம் வீட்ல கண்டிப்பா நடந்துக்கணும்.

    கவுன்சிலர் ரமா பேசப்பேச தமிழச்சியான எனக்கு ‘அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது‘. பழமொழி நினைவிற்கு வருகிறது. இப் பழமொழி பற்றி வெளியில் சொல்ல இது தருணம் அல்ல. இருப்பினும் இதற்கு விளக்கம் போல் என் வகுப்பு மாணவன் கிரிஷாங் நடந்து கொள்வது ஆச்சரியம்தான்.  நான் அங்கு அமர்ந்திருந்தாலும் என் மனம் பின்னோக்கிச் சென்று பள்ளிப் பருவத்தில் கற்ற பழமொழிகளை அசைபோடுகிறது.

    சுதாரித்துக்கொண்டு அவர்கள் பேசுவதில் மீண்டும் கவனம் செலுத்த முயல்கிறேன்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    தி. இரா. மீனா

    சத்தியக்கா

    சரணர்களின் வீட்டுமுற்றத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்துவது இவரது காயகமாகும். ’சம்பு ஜக்கேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    1. “மலர்தூவி வணங்குவது நியமமில்லை
    மந்திரம் தந்திரம் நியமமில்லை
    தூபம் தீபாரதனை நியமமில்லை
    பிறர் பணம்,பிறன் மனை,பிறதெய்வங்களை
    விரும்பாததுவே நியமம்
    சம்பு ஜக்கேஸ்வரனில் காண்பீர் நித்தியநியமம்”

    2. “காதலனுக்கு வேட்கையில்லை எனக்கும் பொறுமையில்லை
    மனதின் வேட்கையறியும் தோழியரில்லை என்ன செய்வேன்?
    மன்மத பகைமையின் அனுபவத்திற்குள் மனம் உள்ளது.
    என்ன செய்வேன்? நாட்கள் வீணாவதால் இளமை கழியுமுன்
    சம்பு ஜக்கேஸ்வரனோடு இணைத்து விடு தாயே.”

    3. “முலையும் கூந்தலுமிருப்பதால் பெண்ணென மெய்ப்பிக்கமுடியாது
    தாடிமீசை கத்தியிருப்பதால் ஆணென மெய்ப்பிக்க முடியாது
    அது உலகின் கண்ணோட்டம், அறிந்தவரின் நீதியன்று.
    கனி எதுவானாலும் இனிப்பே காரணம்
    அழகற்ற மலருக்கு நறுமணமே காரணம்
    இதன் வகையை நீயேயறிவாய் சம்பு ஜக்கேஸ்வரனே“

    சித்தபுத்தய்யாவின் பூண்னியஸ்திரி காளவ்வே 

    “பீமேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.

    “விரதக் கேடுடையோன் இலிங்கமற்றவனைக் காண்பது
    இறந்த ஞமலியைக் காகம் பார்ப்பது போலாம்
    அவனுடன் தொடர்பு வேண்டாம் பீமேஸ்வரனே“

    சித்தராமா 

    சித்தராமேஸ்வரா பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் வரிசை வசனக்காரர்களில் இவரும் ஒருவர். சிறுவனாக இருந்தபோதே அறியாமை உடைய பக்தராக இருந்தவர் மாடு மேய்ப்பது இவரது காயகம். ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனரைக் கண்டார். பின்னர் சொன்னலிகே வந்து கோயில் கட்டினார். அதற்கு ’யோகரமணீய திருத்தலம்’ என்று பெயரிட்டார். இலிங்கம் நிறுவுதல், குளம், ஏரிகள் அமைப்பது ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செயல் பட்டதால் ’கர்மயோகி’ எனப் போற்றப்பட்டார். அல்லமாபிரபு இவரைக் கல்யாணுக்கு அழைத்து வந்து பசவேசரிடம் ’இலிங்கதீட்சை ’பெற வைத்தார். கல்யாண் புரட்சிக்குப் பிறகு ’சொன்னலிகே’ சென்று இறைவனோடு ஐக்கியமானார். ’கபிலசித்த மல்லிகார்ஜூனா’  இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திற்கு இன்பம் அளித்தவரைக் கண்டேனேயன்றி
    இலிங்கத்துக்கு கொடுத்தவரைப் பார்க்கவில்லை.
    இலிங்கத்துக்குப் பதினாறு வகையில் உபச்சாரங்கள்
    செய்தவரைப் பார்த்தேனேயன்றி
    உள்ளம் கொடுத்தவரைக் காணேன்.
    உள்ளம் கொடுத்தவரைக் கண்டேனேயன்றி
    உள்ளமே இலிங்கமானவரைக் காணவில்லை,
    கபிலசித்தி  மல்லிகார்ஜூனனே“

    2. “ஐயனே! நீரை இரும்பு உட்கொண்டதைப் போல
    ஒலியை அமைதி உட்கொண்டதைப் போல
    கானல்நீரை வெட்டவெளி உட்கொண்டதைப் போல
    என்னை எப்போதும் ஆட்கொள்வாய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    3. “அறிந்தவன் எப்படி இறந்தான்?
    அறிந்தவன் எப்படிப் பிறந்தான்?
    அறிந்தவன் எப்படிக் கொடிய தளையில் சிக்கினான்?
    அறிந்தவனே சிரஞ்சிவியாம் பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    4. “நீரெல்லாம் ஒன்றாம் ;
    பனைமரத்தில் நிலைத்து மதுவென்றானது,
    கற்பகத் தருவில் நிலைத்து அமுதமானது.
    தேகமெல்லாம் ஒன்றே;
    பெண்ணுள் நிலைத்துப் பிறவிக்கு மூலமானது,
    இலிங்கத்துள் நிலைத்துப் பிறவிக்குக் காட்டுத் தீயானது பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    5. “செதுக்கிய கல் இலிங்கமென்றானது
    செதுக்காத கல் வெறுங்கல்லென்றானது;
    வழிபாடு செய்பவன் பக்தனென்றானான்;
    வழிபாடு செய்யாதவன் மனிதனென்றானான்;
    கல்லானாலென்ன, பக்திக்குதவியது
    மனிதனானாலென்ன, பக்திக்குக் காரணமானான்;
    கல் இலிங்கமல்ல, இலிங்கம் கல்லல்ல  பாராய்,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    6. “கற்பக விருட்சத்தை மரமெனலாமா?
    காமதேனுவைப் பசுவெனலாமா?
    பரிசவேதியைக் கல்லெனலாமா?
    நம் கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் அடங்கியோர்
    அனைவரையும் மனிதரெனலாமோ?

    7. “பார்க்கலாம் கைக்குள் கிடைக்காது
    அறியலாம் அடையாளப்படுத்த முடியாது
    உணரலாம் இணையமுடியாது
    உவமையற்ற இத்தகு மேன்மையை
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே, உன் சரணர் அறிவார்.”

    8. “பக்தர்கள் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்
    திருமணத்தில் இணைகின்றனர்.
    பக்தர்கள்  மண்மீது காதல்கொள்கின்றனர்
    வாங்கி வீடுகட்டுகின்றனர்
    பக்தர்கள் சொத்தின்மீது காதல் கொள்கின்றனர்
    வேதனைக்குள்ளாகின்றனர்
    கபிலசித்த மல்லிகார்ஜூனா!”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)

    சேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மாது கூறுவள்  “மற்றொன்றுங் காண்கிலேன்;
    ஏதி   லாரும்    இனித்தரு வாரில்லை;
    போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை;
    தீது செய்வினை யேற்கென் செய?“ லென்று;

    அதற்கு அம்மையார் விடை கூறுவாராய் “அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக் கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும் சென்று தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை;தீவினையேனுக்கு  இனி யென்ன செயலுளது?“ என்று சொல்லிப் பின்னரும்.

    விளக்கம்: மற்றொன்றுங் காண்கிலேன் – மற்று ஒன்றும் -என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் – என்பது, அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார். அவ்வொன்றினையன்றி மற்ற வழிகளாக எண்ணக்கூடியவற்றை எல்லாம் இப்பாட்டில் தனித்தனி கூறிக் கழித்து அவ்வொன்றினையே முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு காண்க.

    ஏதிலார் – அயலார். வேறு ஏதும் தொடர்பு இல்லாதவர். இனி – இதுவரைத் தன்னை மாறி யிருக்க உள்ள கடன்கள் தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் கடன் வாங்க இயலாமை குறித்தவாறு.

    போதும் வைகிற்று – வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை குறித்தது. போது – பொழுது. அகாலமாயினமை வேறிடம் போகக்கூடாமைக்குக் காரணமாம். இடம் வேறு – இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம்.

    தீதுசெய் வினையேற்கு என் செயல்? – தாமும் தம் நாயகரும் மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க இயலாமையின், இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த தீவினையின் பயனாகவே கருதி மனைவியார் வருந்துகிறார்.

    மேம்போக்காக இப்பாடலின் பொருள், ஓர் எளிய இல்லறத்தலைவி தம் நிலைமையைக்  கூறுதலும், வருந்துதலும் எனஅமையும்! ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால்  நம்மை வியப்பின் எல்லைக்கே  கூட்டிச் சென்று விடும்!

    ‘’பெண்ணுக்கு  ஞானத்தை வைத்தான்! – புவி
    பேணி   வளர்த்திடும் ஈசன் !’

    என்பார் மகாகவி பாரதியார்! இந்த ஞானம் மிக்க பெண்ணின் பேச்சு அவர்தம் அறிவின் எல்லையை நமக்குக்  காட்டுகிறது. இராமாயணத்தில் சீதையைக் கண்டு அவர் பேச்சிக்கு கேட்ட அனுமன் அடைந்த வியப்பை இங்கே  நினைவு கூரவேண்டும்.

    ‘’வெங்கனல் வீக்கியும்   புனலின் மூழ்கியும்
    நுங்குவ   அருந்துவ   நீக்கி  நோற்பவர்
    எங்குளர்? கற்பின்  வந்து இல்லின் மாண்புடை
    நங்கையர்  மனத்தவம்  நவிலற்பாலதோ?

    என்ற அனுமன் வாக்கிலே, கற்புடன் இல்லறம் நடத்தி அதனையே தவமாகச் செய்யும் சிறப்பு, பெண்களுடையது! என்கிறான். மேலும் கனலில் நின்றும், புனலில் நீராடியும், உண்பன, அருந்துவனவற்றை  நீக்கியும்  காட்டில்  நோற்கின்ற ஆடவர் தவம், இச்சீதையின் மனத்தவத்தின் முன் எளிதே என்கிறான்!

    கொங்கணவன் என்ற ஒரு முனிவன் தவம் செய்து கொண்டிருந்த  போது. அவன் தலைமேல் ஒரு கொக்கு எச்சமிட்டு விட்டது. சற்றே சினத்துடன் அவன் மேலே பார்த்தான்; உடனே கொக்கு எரிந்து விழுந்து விட்டது! தம் தவத்தின் வலிமை இதுவோ? என்றெண்ணிய அவன் . ஒரு வீட்டில் வந்து ‘’பவதி  பிட்சாந்தேகி!‘ என்று கேட்டான். உள்ளிருந்து, ‘’சற்றே பொறுங்கள். என்கணவனுக்குப் பணிவிடை செய்து விட்டு வந்து உணவிடுகிறேன்‘’ என்று ஓர் இல்லத்தரசி  கூறினாள். சற்றே கோபமடைந்த முனிவன், அவள்  வெளியே வந்தவுடன், அந்தக் கொக்கை நினைத்து, அப்பெண்ணை வெகுண்டு நோக்கினான்!. அந்த இல்லத்தரசியின் தவமோ இந்த முனிவனின் தவத்தை விட மேலானது. அவள் அமைதியாகக்  ‘’கொக்கென்று நினைத்தாயோ , கொங்கணவா?’’ என்றாள். முனிவன் திடுக்கிட்டான். என்னை அந்தக் கொக்கு போல் எரித்து விடலாம் என்று நினைத்தாயோ? என்ற அப்பெண்ணின் மனத்  தவம் எத்தகையது? என்று வியந்தானாம்!

    இங்கே ஏதுமறியாத மாறனார் மனைவியார் கூறிய எளிய சொற்கள் சிறந்த ஞானத்துடன் நிகழ்ந்ததை நாம் காண்கிறோம்! மாது கூறுவள் – அந்த இல்லத்தரசி கூறுகிறாள். மற்று ஒன்றும் காண்கிலேன் – இங்கு வேறெந்த அருட்செயலையும் காண்கிலேன்!  ஏதிலாரும் – வேறே எவரும் . இனித் தருவார் இலர் – நமக்கு  நற்கதி அளிப்பார் இலர்; இவரே தருவார்!  போதும் வைகிற்று – நமக்கு நற்பேறடையும் காலமும் வந்து விட்டது! போமிடம்  வேறிலை – நாம் செல்லும் இடம் கைலாயமன்றி வேறில்லை! தீது செய்  வினையேற்கு  இனி என் செயல்? ‘’நமக்கு தீமைபுரியும் வினைகள் இனி இல்லை!‘’ என்கிறாள்! ஞானத்தின் திருவுருவாக விளங்கிய அம்மையாரின் அருளுரை நம்மை வியந்து  போற்ற வைக்கிறது.

    இவ்வாறு ஞானவழியில் விளங்கிய அம்மையாரின் சொல், எளிய இல்லத்தரசி,  மனத்தவத்தால் பெற்ற  பெரு ஞானத்தை  நமக்குக்  காட்டி அவர்களின் பெருமையை  உயர்த்துகிறது. சேக்கிழார் பெருமானின் பாடல் நயம் இத்தகையது!

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 3

    பரிமேலழகர் உரைத் திறன் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

    முன்னுரை

    ‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

    திறனானறியும் குறட்பாவும் உரையும்

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

    “அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

    • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
    • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

    எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

    விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

    இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

    1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
    2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
    3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
    4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
    5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
    6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
    7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
    8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
    9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

    பரிமேலழகர் உரை அருமை

    இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

    இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

    • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
    • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

    என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    ‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 21

    இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
    உணர்பவர் அஃதே உணர்ப; – உணர்வார்க்கு
    அணிமலை நாட! ‘அளறாடிக் கண்ணும்
    மணிமணி யாகி விடும்‘.

    ‘அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்‘

    சங்கீதவக் கல்லூரி விடுதி வரை கொண்டு விட்டாச்சு. இன்னிக்கு சாயங்காலம் ரயிலில கிளம்பிற வேண்டியதுதான். நாமக்கல்லிலிருந்து பேசும் அப்பாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தேன். அவர் விட்டபாடில்லை.

    சாப்பாடு எல்லாம் சரியா இருக்கா இல்ல வெளியில ஏதாவதுநல்ல சாப்பாடு கிடைக்குதா இதையெல்லாம் பாத்து ரெண்டு நாள் தங்கி மெதுவா வரதுதானே என்ன அவசரம்? தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஆமாம் இவருக்கென்ன? இவர் பாட்டன் வீட்டு நிறுவனத்திலயா நான் வேலை பாக்கறேன். ஏற்கனவே நாலு நாள் லீவு எடுத்தாச்சு. இனிமேஎடுத்தா சீட்டு கிழிஞ்சுரும். இதையெல்லாம் சொன்னா அவருக்குப் புரியப் போறதில்லை.

    கவலைப்படாதீங்கப்பா. காசியில எல்லாரும் நல்லாத்தான் பழகுறாங்க. ஹாஸ்டல் சாப்பாடு ஒத்து வரலைன்னா பக்கத்துல ஒரு அம்மா எடுப்பு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கறாங்க. உடனே மெனு கேக்க ஆரம்பிச்சிடாதீங்க. எனக்கு நேரம் ஆகுது. எல்லாம் சங்கீதா பாத்துப்பா அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் விவரமா போன்ல சொல்றேன். எனக்கு நன்றாகத் தெரியும் அவருக்கு மனம் ஒப்பாது என்று.

    அவரின் செல்லப் பேத்தியில்லயா. அம்மாவும் அப்பாவும் இவளின் அட்மிஷனுக்கு வருவதாகத்தான் இருந்தார்கள். சங்கீதாதான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். உங்க காசி யாத்திரையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க. நான் முதல்ல விஸ்வஹிந்து பல்கலைக் கழகத்துல சேந்து படிக்க ஆரம்பிக்கறேன். மெதுமெதுவா ஒவ்வொருத்தரா வந்துபாக்கலாம். இப்போ அப்பா மட்டும் வந்தாப் போதும். அவளே முடித்துவிட்டாள்.

    அவசரமாகச் சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டு சங்கீதாவிடம் விடைபெற்று சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தேன். அப்பப்பா எவ்வளவு லாவகமாக ஓட்டுகிறான். இருக்கிற எல்லா சந்துபொந்துகளிலும் நுழைந்துவெளியே வந்து ஒருவழியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தாச்சு. எங்க பாத்தாலும்கூட்டம். மக்களுக்கு கடவுள் பக்தி இவ்வளவு முத்திப்போச்சா. அல்லது வாழ்க்கையில் பயம் அதிகரித்ததால் இறையைத் தேடி ஓடுகிறார்களா தெரியவில்லை.

    எப்படியோ காசியிலிருந்து வந்து ஒருவாரம் ஓடிவிட்டது. நேரம் கிடைக்காததால் அப்பாவிடம் பேசவில்லை. சேர்த்து வைத்து சங்கீதா அனுப்பின அத்தனை போட்டோவையும் வாட்ஸப்பில் பகிர்ந்து பேசிவிடவேண்டும் தீர்மானித்துக்கொண்டே படுத்திருந்தேன். கைபேசி மணி ஒலிக்கிறது. சங்கீதா கூப்பிடுகிறாளோ.

    என்ன அதிசயம். அப்பாதான் கூப்பிடுகிறார். ராத்திரி ஒன்பது மணிக்கு ஏன் கூப்பிடுகிறார். மனசில் ஒரு பதட்டம்.

    என்னடா அதுக்குள்ள தூங்கிட்டயா. எவ்வளவு ரிங் அடிச்சேன். சரி விசயத்துக்கு வரேன். சங்கீதா சொன்னாளா என் நண்பனைப் பத்தி.

    இல்லையே. என்ன சொல்ல வரீங்கனு புரியல. நான் முடிப்பதற்குள் சங்கீதா ஒரு போட்டோ அனுப்பினாளே. ஒரு தமிழ் ஆண்ட்டி கிட்ட ராத்திரி சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன்னு.  அவங்க வீட்டு சோபால அந்தம்மா கூட உக்காந்த மாதிரி.  அத நல்லாப் பாரு. அவங்க பின்னால சுவத்துல ஒரு போட்டோ மாட்டிருக்குல்ல. அவருதான் நம்ம தியாகு. என்கூட சுதந்திரப்போராட்டத்துல கலந்துக்கிட்டவரு. அப்ப நாங்க சின்னப் பசங்களா இருந்தாலும் இளைஞர் அணியில இருந்தோம். ஒண்ணா சிறைச்சாலையும் போனோம். சுதந்திரத்துக்குப் பிறகும்நாங்க பல வருசங்கள் தொடர்புலயே இருந்தோம்.  என் கல்யாணத்துக்குக் கூட அவன் வந்தான். அப்புறம் பிழைப்புக்காக வடக்க போனான்.

    இப்பதான் தெரிஞ்சது உலகத்த விட்டே போயிட்டான்னு. அப்பாவை இடை மறித்து அப்பா நீங்கபாட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க. வாட்ஸப் போட்டோவ நானும் பாத்தேன். அவ்ளோ கிளியரா இல்லயே.

    திடீர்னு இந்தமாதிரி விசயத்தயெல்லாம் கேக்கக் கூடாது. ஒருமாசம் போகட்டும் நான் சங்கீதாவ உட்டு அவங்க யாருனு கேட்டுச் சொல்லச் சொல்றேன்.

    அட போடா. நான் நேரா சங்கீதாவுக்கு போனப்போட்டு பேசியாச்சு. அவளும் அந்தம்மா வீட்டுக்குத் திரும்பப் போயி நேத்திக்கு என்கிட்ட பேசவச்சா. நான் நினைச்சது சரிதான். இப்போ தியாகி பென்சன் வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களாம். குழந்தைகுட்டி இல்லைபோல. நம்ம சங்கீதாவப் பத்தி கவலைப்படாதீங்கனு சொன்னாங்க. அடுத்தமுறை சங்கீதா வரும்போது அவங்களக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.

    அப்பா பேசப்பேச என் மனம் வெட்கியது. ‘அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்‘. அப்டிங்கற பழமொழி ஞாபகத்துக்கு வருது. சேத்துல கிடந்தாலும் மணியோட தன்மை தெரிஞ்சவங்க அத மணியாத்தான் பாப்பாங்களாம். அதுபோலத்தான் உயர்ந்தவர்களோட கண்ணுக்குத்தான் உயர்ந்தவங்க தெரியுவாங்க.

    அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத்தியாகி. அதனால தான் அவரால இன்னொரு தியாகிய அடையாளம் காண முடிஞ்சது. என்னய மாதிரி பஞ்சப் பொழப்பு பொழைக்கிறவங்க கண்ணுக்கு அவங்க சாப்பாடு குடுக்கற ஒரு சாதாரண அம்மாவாத்தான் தெரிஞ்சாங்க.

    பழமொழி -22

    வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
    கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
    புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
    ‘
    அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘.

    ‘அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘

    ரொம்பநாள் கழிச்சு இன்னிக்குதான் ரெண்டுபேரும் வாக்கிங் போரோம். அப்டி என்ன மலையப்பொரட்டற யோசன என் பத்து வருடத் தோழி பவானி கேட்கிறாள்.

    இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன என்னோட ஓரகத்திகிட்டேருந்து போன் வந்தது. அவ எப்போதும்போலத்தான் பேசினா. அதத்தான் யோசிச்சுக்கிட்டே வரேன்.

    என்ன ஏதாச்சும் பிரச்சினையா? இது பவானி.

    அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவ ஒருத்திதான் என்கிட்ட பேசிக்கிட்டிருக்கா. அப்பப்ப நடக்கற விசேசம் தொடங்கி எல்லாம் அவ சொல்லிதான் நான் தெரிஞ்சுக்குறேன்.

    அப்டி இப்ப அவ என்னதான் சொன்னா. கொஞ்சம் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கறேன். ஆர்வம் காட்டினாள் பவானி.

    போன வாரம் எங்க மாமியாரோட ஒண்ணுவிட்ட நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணமாம். எல்லாரும் ஒண்ணா கும்பகோணம் போயிட்டுவந்தாங்களாம். போற வர வழி முழுக்க என்னயப் பத்திதான் என் நாத்தனாருங்க பேசிக்கிட்டே வந்தாங்களாம். உன்னயப் பத்தி எப்பவுமே அவுங்களுக்கு தப்பு அபிப்பிராயம்தான். உனக்கு சமைக்கவே தெரியல. ருசியா சாப்பாடு போடாததால அவங்க தம்பி கஷ்டப்படறானாமா. அடிக்கடி அக்காக்களுக்கு போன் போட்டு என்ன செய்ய? என் தலையெழுத்துனு நொந்துக்கறாராமா.

    அப்படியா ஆச்சரியமா இருக்கே. நீ பாம்பே குடி வந்தே பத்து வருசம் ஆச்சே. ஒருதடவ கூடவா உன் புருசன் உன்கிட்ட நேர்ல குறை சொல்லல.

    இல்லயே. ஒருதடவ கூட சொன்னதில்ல. என் ஓரகத்தியும் ஒவ்வொரு போன் கால்லயும் என் சாப்பாட்டப் பத்தி மாமியார் குறை சொன்னதாவும், நாத்தனார்கிட்ட சொன்னதாவும் சொல்லறா. நான் அத விசாரிக்கப் போனா இவர் தேவையில்ல உங்க டைம்பாஸ் வம்புல எல்லாம் என்னய மாட்டி உடாதனு ஒத்தவரியில பதில் சொல்லிடுவாரு.

    நானும் முயற்சியெடுத்து ஒருதடவை நாத்தனாருக்கு போன் போட்டு பேச ட்ரை பண்ணினேன். அவங்க என் தம்பி இருக்கும்போது பேசு. நீ மாத்தி மாத்தி பேசற ஆளு. எங்க குடும்பத்து மேல உனக்கு எந்த அக்கரையும் இல்ல. உன்கிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க. அதான் ஆச்சரியமா இருக்கு. இதுவரை என்னோட மாமியார்வீட்ல யார்கிட்டயும் நான் ரெண்டு நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கு வந்து தங்கி இருந்ததும் கிடையாது. அவங்க யாரும் அதிகமா பேச மாட்டாங்க அதனால எனக்கும் பேச டாபிக் இல்லனு நான் விட்டது இப்ப எப்படி இவ்வளவு வெறுப்பா ஆச்சு.

    ஓ. இதுதான் விசயமா. உன்கிட்ட அடிக்கடி போன்ல பேசுதே ஓரகத்தி. அதோட டைப் எப்படி?

    அதுவும் எனக்குத் தெரியாது. நல்லா பேசும். அட்லீஸ்ட் பேச ஒரு ஆளாவது இருக்கேனு நானும் எல்லா விசயத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன்.

    அதான் தப்பு. அந்த அம்மா உன்கிட்டேந்து எல்லா விசயத்தையும் கறந்து உன்னயப்பத்தி எல்லா சொந்தக்காரங்ககிட்டயும் தப்பான அபிப்பிராயத்த உண்டுபண்ணிருச்சு.

    அவுங்களும் அவ அடிக்கடி உன்கிட்ட பேசறதால உன்னயப்பத்தி அவளுக்கு நல்லாத் தெரியும்னு நெனச்சிருப்பாங்க.

    மொதல்ல அந்தம்மாட்ட பேசறத நிறுத்து. உன் ஹஸ்பெண்ட் சொல்றமாரி அது நல்லா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்கு. எனக்கென்னவோ உன் ஓரகத்தி மேலதான் மொத்த சந்தேகமும். எல்லாரையும் தனித்தனியா நம்ப வச்சு குடும்பத்துக்குள்ள சண்டமூட்டி உடுது. இதத்தான் ‘அள்ளில்லத்து உண்ட தனிசு‘னு பழமொழி நானூறு சொல்லுது. இதோட அர்த்தம் இந்த மாதிரி போலித்தனமான ஆட்களோட நட்பு ஒருவீட்டுக்குள்ளயே கடன்பட்டது போல பெரிய வேதனையைக் குடுக்கும்ங்கறதுதான்.

    பவானி முடித்தவுடன் நான் யோசிக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 27

    பழகத் தெரிய வேணும் – 27

    நிர்மலா ராகவன்

    (கேள்விகள் ஏன்? எப்போது?)

    பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர், “ஏதாவது கேட்பதானால் கேளுங்கள்,” என்பார்.

    பலர் மௌனம் சாதிப்பார்கள். தம் ஐயம் மடத்தனமாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே காரணம்.

    பள்ளி வகுப்புகளிலும் இதே கதிதான்.

    பலரும் படிப்பில் சோடை போவது ஏன் தெரியுமா?

    கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள விரும்பாது, அதற்கான பதிலையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்மை இல்லாததால்தான்.

    குழந்தைகள் மூன்று வயதிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

    வீட்டிலிருக்கும் தாய்மார்கள் வேலை மும்முரத்தில், ;தொணதொணப்பு’ என்று திட்டி குழந்தைகளை அடக்கிவிடுவார்கள்.

    ‘கேள்வி கேட்பதே தவறு’ என்று அக்குழந்தைகள் மனதில் படிந்துவிட, புதிய சமாசாரங்களை அறிவதில் நாட்டமில்லாமல் வளர்கிறார்கள்.

    ‘அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன். ஏனோ இப்படி இருக்கிறாள்!’ என்று சில பெற்றோர் குறைப்படுகிறார்கள்.

    குழந்தைகளுக்காகச் செலவிடும் பணம் முக்கியமில்லை. அவர்கள் எதையாவது அறிய ஆர்வம் காட்டுவார்கள். அப்போது மேலெழும் ஆர்வத்திற்குத் தடைவிதிக்காது, அவர்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துவைக்க நேரத்தையும் ஒதுக்கவேண்டும்.

    கதைகள்

    1. மூன்று வயதுச் சிறுமி தன் தாயின் மார்பகத்தைச் சுட்டிக் கேட்டாள், “ஏன் ஒனக்கு மட்டும் இது பெரிசா இருக்கு? நான் அப்படி இல்லியே!”

    வயதுக்கு மீறிய கேள்வி என்று கருதி, தாய் கோபிக்கவில்லை. புரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு என்ன வழி?

    “நீயும் பெரியவளா ஆனா, என்னைப்போல இருப்பே!” என்று சமாதானப்படுத்தினாள்.

    2. ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஒங்க கைக்கு அடியிலே ஏன் இப்படி வளர்ந்திருக்கு?” என்று கேட்டான். (அவள் கையில்லாத ரவிக்கை அணிந்திருந்தாள்).

    தாய்க்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அதை மறைக்க, ‘ரொம்ப அசடாப் போயிட்டே!’ என்று மகனைப் பார்த்துக் கத்தினாள்.

    “குழந்தைகளுக்குத்தான் அப்படி இருக்காது. பெரியவர்களுக்கு..,” என்று அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவளைப் பொறுத்தவரை, இதெல்லாம் கெட்ட சமாசாரம். (இயற்கை வளர்ச்சியை இப்படி மறைத்தே குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறோம்).

    3. ஏழு வயதுச் சிறுவன் தன் தாயைக் கேட்டான், “அம்மா! ஏன் சில பேர் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறார்கள்?”

    அவர்கள் வீட்டில் குடியிருந்த நான் சமையலுக்கு அதைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கேட்டிருக்கிறான்.

    தனக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள விரும்பாத தாய், அறியும் ஆர்வம் இருந்த மகனைக் கண்டித்தாள்: “நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா விடிஞ்சுடும், போ!”

    நான்தான் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஆசிரியை ஆயிற்றே! “விரைவாக வேகும்,” என்று இரண்டே வார்த்தைகளில் விளக்கினேன்.

    பையனது முகம் சுண்டிப்போயிற்று. தன் அம்மாவுக்குத் தெரியாதது வேறொரு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறதே என்ற வருத்தம்தான்.

    ‘எங்கள் அம்மாக்கள் முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம்!’ என்று என் மாணவிகளில் சிலர் தன்னிரக்கத்துடன் கூறியிருப்பது நினைவில் எழுந்தது.

    தற்காலத்தில், நாம் அறிய வேண்டுவன எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள கணினி வழிவகுக்கிறது. அது மட்டும் போதுமா?

    முதன்முறையாக வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லுமுன் பயண ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம். சென்றபின், அங்கு பார்க்கவேண்டியவை வேறு ஏதாவது உள்ளதா என்று அங்குள்ளவர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ளலாம்.

    ஆனால், சகபயணிகளின் உயிரை வாங்கி தம் அறிவைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்கள் பிறரது அமைதியைக் குலைப்பவர்கள்.

    கதை

    நானும் என் மகளும் கிழக்கு மலேசியா (போர்னியோ) சென்றிருந்தோம். அங்கிருந்து கடலில் படகுப் பயணம் — ஒரு காட்டுப் பகுதியில் தங்குவதற்கு.

    எங்களுடன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் படகில் இருந்தாள். அறிமுகம் முடிந்ததும், ஓயாது ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

    அநாவசியமாக எதையாவது கேட்டு வைப்பவர்களுக்குப் பதிலில் அக்கறை கிடையாது. அது பொழுதைப் போக்க ஒரு வழி. அவ்வளவுதான்.

    “இந்துப் பெண்கள் கல்யாணமானதும்தான் சிவப்பு நிறப் பொட்டு அணியலாம் என்று கேள்விப்பட்டேன். அப்படியா?”

    “தைப்பூசம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள்?” என்று விசாரித்தபடி இருந்தாள்.

    எனக்கோ, ரம்மியமான சூழ்நிலையைப் பார்த்து ரசிக்க முடியாது போகிறதே என்ற எரிச்சல்.

    இறுதியில், பொறுக்க முடியாது போக, “Not now!” என்றேன் கறாராக.

    அதன்பின் அவள் வாயைத் திறக்கவில்லை.

    அப்படியில்லாது, ஒரு விஷயத்தில் உண்மையான ஆர்வத்துடன் கேட்பவருக்கோ பெரும்பாலும் தக்க பதில் கிடைக்கும்.

    ஆனால், நம் கேள்வியால் அவரது அறிவை எடைபோடுகிறோமோ என்று தவறாக எண்ணிவிடுபவர்களும் உண்டு.

    கதை

    நான் ஒரு காமெரா வாங்கி வைத்து, புத்தகங்களிலிருந்து புகைப்படக்கலையைக் கற்க முயன்று கொண்டிருந்தேன்.

    காதரின் என்ற அமெரிக்க மாது தன் குழுவுடன் சேர ஒரு காமெரா இருந்தால் போதும், புகைப்படக்கலையைக் கற்கலாம் என்று தினசரியில் விளம்பரப்படுத்தி இருந்தாள்.

    விடுவேனா! வாரத்தில் சில நாட்கள் அவர்களுடன் நான் கோலாலம்பூரில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்தேன்.

    மற்றவர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே ஓரிரு முறை உபயோகப்படுத்திவிட்டு எறியும் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இருந்தவர்கள்.

    எனக்கோ எதுவும் புரியவில்லை. புத்தகங்களில் பயிலாததைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டபடி இருந்தேன்.

    குழுத் தலைவி காதரின் விளையாட்டாக, “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய்!” என்று குற்றம் சாட்டினாள்.

    “எனக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான்,” என்று ஒத்துக்கொண்டேன், பரிதாபகரமாக.

    ஒரு நாள் இந்துக்கோயில் ஒன்றில் படம் பிடிக்கச் சென்றபோது, எங்களுடன் இணைந்து வந்த அயல்நாட்டுக்காரர்களுக்கு – அவர்கள் கேளாமலேயே — பார்த்ததையெல்லாம் விளக்கினேன்.

    மகிழ்ந்த காதரின் என்னை அழைத்து, போட்டிகளில் பரிசுகள் வாங்கும் அளவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். அவள் தன் நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் எங்கள் நட்பு நீடித்தது.

    என்னதான் நடந்துவிடப்போகிறது?

    நமக்குள் இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் குழம்பும்போது உடனே நிம்மதி கிடைக்கும்.

    கதை

    ஒரு பெண் ‘நல்ல கலராக’ இல்லாவிட்டால் அவளைப் பெண்பார்த்துவிட்டு, நிராகரிக்கும் ஆண்களைத்தான் அந்த பாட்டி பார்த்திருக்கிறாள்.

    அதனால், தன் மகளுடைய சிறு குழந்தைகளைப் பார்த்ததும் அவளுக்குத் துக்கம் பெருகியது.

    ‘ரெண்டும் கறுப்பாப் பொறந்திருக்கே! இந்தப் பொண்களுக்கு எப்படித்தான் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறாளோ!’ என்று அவர்களைப் பெற்ற மகளுக்காக வருந்தினாள்.

    எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    அவர்களைவிட நிறம் மட்டமான ஆண் கிடைக்கலாம்.

    புற அழகைவிட அவர்களுடைய அறிவாற்றலைப் பெரிதாக எண்ணும் மாப்பிள்ளைகள் கிடைக்கலாம்.

    அவ்வளவு ஏன், பெரிய படிப்புப் படித்து, உத்தியோகமே வாழ்க்கை என்று வாழக்கூட நினைக்கலாம் அப்பெண்கள்.

    எப்போதோ நடக்கலாம் என்பதை எண்ணி இப்போதே வருந்துவானேன்!

    ‘பரீட்சையில் சரியாக எழுதவில்லையே, பாசாகித் தொலைக்காமல் இருந்தால் என்ன செய்வது!’

    பரீட்சை முடிவு வருவதற்குள் அநாவசியமாக அதைப்பற்றி எண்ணிக் குழம்புவானேன்! அப்படியே தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை எழுதிவிட்டுப் போகிறது!.

    என்ன நான் சொல்வது?

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    தி. இரா. மீனா

    சிவலெங்க மஞ்சண்ணா 

    பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்த பின்னர் சரணராகியவர். ’ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூனலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

    1. “உடலைக் கட்டியணைத்து நிறை கண்களால் கண்டு
    கைகள் மகிழும் வரை வணங்கி
    மனப்பூர்வமாக அறிவது, இடைவெளியற்ற இன்பம்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு
    கூடுகின்ற  கூட்டமாம்“

    2. “உடல் சோர்ந்து உள்ளம் உருகி காயகம் செய்யாமல்
    பிறரை வருத்தி, நயந்து இரந்து செய்வது தாசோகமா?
    எத்தொழிலையும் மனத்தூய்மையுடன்
    செய்கிற குருஜங்கமரைச் சமமாக எண்ணும்
    இலிங்கதேகமுடையோருடன் ஒரே தன்மையில் உறவாடினால்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு நிறைவாம்.”

    3. “சுவையறிய நாவாகி வந்து
    மணமறிய நாசியாகி வந்து
    உருவமறிய கண்களாகி வந்து
    ஒலியறிய செவியாகி வந்து
    உணர்வறிய தோலாக வந்து
    உடலில் நின்று ஐம்முகமாய் ஆனாய்
    ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கமே“

    சண்முகசுவாமி

    ’அகண்டேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “கல்கல்லென ஒலியெழுப்பினால் காதலன் வருவானென
    எல்லா வழியும் தேடிப் பார்க்கிறேன் அன்னையரே,
    காதலனின் சொல்லை மனமொன்றிக் கேட்கிறேன்
    அகண்டேஸ்வரன் என்னும் காதலனைக் கண்டால் மகிழ்ச்சி
    காணாமல் போயின் கடுந்துன்பமாம் அன்னையரே“

    2. “பால்குடத்தின் மீது மோர்குடம் வைத்தென்ன
    உறையாகுமா ஐயனே சரியான கலவையின்றேல்?
    அங்கம் மீது இலிங்கம் இருந்தென்ன,சிவஞானமில்லாமல்
    பொருந்தி சமரசமாகுமா  ஐயனே அகண்டேஸ்வரனே.”

    சகலேச மாதரசா

    அரசராக இருந்து சரணரானவர். ’சகலேஸ்வர தேவ’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆசையைவிடச் சிறியவரில்லை
    ஆசையின்மையை விடப் பெரியவரில்லை
    கருணையை விட தர்மமில்லை
    ஆராய்ச்சியை விட  உதவியில்லை
    அனைத்துயிருக்கும் சகலேஸ்வரனைத் தவிர தெய்வமில்லை”

    2. “ஈசனிலும் பெரியவரில்லை
    ஆசையினும் சிறியோரில்லை
    எல்லைக்கப்பால் திசையில்லை
    பிரார்த்தனைக்கப்பால் புண்ணியமில்லை
    அனைத்தின் பதியே சகலேஸ்வரதேவனே
    மெய்யுணர்வுக்கப்பால் உதவியில்லை“

    3. “ஏரி கட்டலாமே தவிர நீர் நிரப்ப முடியுமா?
    ஆயுதம் தரலாமன்றி கற்றுணர்த்த முடியுமா?
    மணமுடிக்கலாமன்றி ஆண்மைக்கு உதவமுடியுமா?
    மேன்மை காட்டலாமன்றி நினைவை நிறுத்த முடியுமா?
    படிப்பு கால்,புத்தி முக்காலெனும் பழமொழிக்கேற்ப
    குருவின் கருணையிருந்தும் சாதித்தவனல்லன்,
    சகலேஸ்வர தேவனே“

    சங்கமேஸ்வர அப்பண்ணா

    ’பசவப்பிரிய கூடல சென்ன சங்கமதேவ’ இவரது முத்திரையாகும்.

    “அன்றன்று நிரம்பியது மிகுதியெனும் எண்ணம் வேண்டும்
    முன்னோர்களை நினைக்க வேண்டும்
    ஜங்கமன் வந்தால் வஞ்சனையின்றிச் செய்ய வேண்டும்
    இதை எனக்கு வரமாக்கு
    பசவப்பிரிய  கூடல சங்கமதேவனே“

    சகரத பொம்மண்ணா

    ’சகரத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “மலர் பறிப்பாரேயன்றி மணம் பறிப்பவருண்டோ?
    பேசுவரேயல்லாமல் பேச்சின் உணர்வைக் கண்டவருண்டோ?
    இது நீதியின் பாடம்
    ஒழுங்குடன் செயல்படும் போது
    உணர்வு தூய்மையோடிருக்க வேண்டும்.
    பேச்சறிந்து பேசும் போது
    ஒழுங்கும் புலமையும் இணைந்திருக்க வேண்டும்.
    அதுவே ஆன்ம ஐக்கியம்
    சரகத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரனே.”

    சத்திகேதாய மாரய்யா

    குடை பிடிக்கும் காயகத்துடன் சேர்ந்து மரம் வெட்டுவது,தீப்பந்தம் பிடிப்பது ஆகியவற்றையும் செய்து வந்தவர். ’ஐக்கடேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    “உதயத்தில் உற்பத்தியாகி, பகலில் நிலையாகி
    அந்தியில் அழிகின்ற உடல் சுமந்து மீண்டும்
    அமைதியில் நின்று துன்பம் நீக்கும் இடம் காட்டுவாய்
    பகலில் பசிதாகம், இரவில் புலன்களின் செயல்
    என உடல் சுமந்து
    ஐம்பொறிகளுக்கு உடலானாயன்றோ
    ஐகடேஸ்வர இலிங்கமே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    திருச்சி புலவர்  இரா. இராமமூர்த்தி

    மாரிக் காலத் திரவினில் வைகியோர்
    தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
    பாரித் தில்ல மடைத்தபின் பண்புற
    வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

    (அவ்வாறு நண்ணிய காலமாகிய) மாரி … இரவினில்- மழைக்காலத்தில் ஒரு நாள் இரவிலே; வைகி – (உறக்கமின்றி) விழித்திருந்து; ஒர் தாரிப்பின்றி – வேறு ஓர் ஆதரவு மில்லாமையினாலே; பசி … பாரித்து – மீதூர்வதாகிய பசி மேலும் அதிகரிக்கப் பெற்று; இல்லமடைத்தபின் – வீட்டுக் கதவினைத் தாழிட்டு அடைத்த பின்னர்; பண்புற – உற்ற பண்பினாலே; வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன் – தேன் பொருந்திய மாலையணிந்த மாறனார் (நண்ணிய நற்றவராகிய) விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மாரிக்காலத்து இரவினில் – மழைக்கால நாட்களில் இரவு மிக்க இருள் கொண்டிருக்கும். மழையும் இருளும் கூடி, மக்கள் வெளிச் செல்லக் கூடாதபடி தடுக்கும் என்பது குறிப்பு. நாயனார் பேறடைந்த திருநாள் ஆவணி மாதத்து மக நாளாதலும் காண்க.

    வைகி – இரவினிற் படுத்துறங்க வேண்டுவோர் அவ்வாறுறங்காமல் விழித்திருந்தனர் என்பது. பட்டினி யிருந்து என்பாருமுண்டு. வைகித் தாரிப்பின்மையால் பாரிக்கப்பெற்று அடைத்தபின் – எனக் கூட்டுக. ஓர்தாரிப்பு இன்றி -ஓர் ஆதரவு மில்லாமையினாலே. இன்றி இன்மையால். தாரிப்பு – தரிப்பு – என்றது முதல் நீண்டது. தரிக்கும் ஆதரவு உதவி. தம்மைத் தாங்கக் கூடியவர் யாவருமின்றி என்க. விருந்துபசரிக்க எவ்வகையானும் உதவி பெறாமை குறித்தது. இதனைப் பசி என்றதனுடன் கூட்டி அடக்க முடியாத – தாங்க முடியாத பசி என்பாரு முண்டு. இப்பொருட்கு இன்றி – இன்றிய – இல்லாத – முடியாத என்று பெயரெச்சமாக்கிக் கொள்வர். பசிதலைக் கொள்வது பாரித்து  பாரித்து – பாரிக்க – அதிகரிக்க என்க. பசிமீதூரும் நிலை மேன்மேலும் அதிகரிக்க. செய்ய என்பது செய்து எனத் திரிந்து நின்றது. பெற்று – என ஒரு சொல் வருவித்துரைக்க.

    பாரித்தல் – அதிகரித்தல். “சைவ நெறி பாரித்தன்றி“ -இதனைப் பரித்து என்பதன் முதனீண்ட விகாரமாகக் கொண்டு, தாங்கிக் கொண்டு என்றுரைப்பாரு முண்டு. இஃது தாமே பசிமீதூரப் பெற்றார் தம்மையடைந்த விருந்தினரை ஊட்டல் அமையாதென்பது குறித்தது.

    இல்லம் அடைந்த பின் – இது நாயனார் விருந்தெதிர் கொண்ட நேரங் குறித்தது. இரவு முதிர்ந்து நள்ளிரவாகிய மிக்க அகாலத்தில் வேறு எவரும் விருந்து புறந்தரார் என்பது குறித்தது. தமது இல்லமேயன்றி ஊர் அடங்கிய நிலையும் குறிப்பிட்டபடியாம். இல்லம் அடைத்தபின் நண்ணினார் என மேற்பாட்டுடன் கூட்டியுரைப்பர் இராமநாதச் செட்டியார்.

    வேரித்தாரான் – வேரி – தேன்; தார் – இங்கு வேளாளர்க்குரிய குவளை மலராலாகிய அடையாளமாலை குறித்தது. காகிதம் முதலிய இயற்கைமண மில்லாத போலியான பொய்ம் மாலைகளை அணிந்து மகிழும் இந்நாட் போலிமாக்கள் வேரித்தாரான் என்ற இதனைக் குறிக்கொண்டு திருந்துவார்களாக. இதில் மேலும் ஒருநுட்பம் உள்ளது! தமக்கு வந்த சோதனையைத்தாங்கி வெற்றியடைந்த காட்சியைச் சேக்கிழார் பெருமான் மனக்கண்ணிற் காண்கிறார்! இவ்வாறு இளையான்குடிமாறனார்  வேரித்தாரானாய்த்  தேன் பிலிற்றும் வெற்றி மாலையை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்வது கவிஞர்களின் உரிமை! கம்பராமாயணத்தில் வீடணனைத் ‘’தார்க்கோல மேனிமைந்த’’ என்துயர் தவிர்த்தியாயின் கார்க்கோல   மேனியானைக் கூடுதி’’  என்று கும்பகர்ணன் வேண்டும்போது,  வீடணன் இறுதியில் வெற்றி மாலையுடன்  காட்சியளிப்பதாகக்  கற்பனைசெய்தான் என்பர்!

    விருந்து எதிர் கொண்டனன் – இல்லக்கதவுதாழிட்டு அடைத்த பின் நண்ணிய நற்றவர், ‘பசித்து விருந்துவந்தேம்’ எனக் கதவைத் தட்டினார் எனவும், நாயனார். இத்தனை இன்னல்களுக்கு மிடையிலே கதவுதிறந்து, வந்த விருந்தினை உள்ளமும் முகமும் மலர்ந்து உரிய உண்மைவகையிலே வரவேற்று எதிர்கெண்டார் எனவும் வருவித்துரைத்துக் கொள்க. பண்புற – விருந்தோம்பலுக்கு ஏற்ற பண்பு பொருந்தும்படி. அகனமர்ந்த அன்போடு முகமும் மலர்ந்து உரிய பண்பினாலே வரவேற்றல் குறித்தது. இதன் இயல்புகளெல்லாம் நீதிநுல்களுட் காண்க.

    பண்பு உற – வீடுபெறும் பண்பு தன்மை உறும்படியாக – அத்தன்மை தம்மை உற்றதனாலே – என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம். இல்லம் அடைந்த பின் என்பது பாடமாயின் நண்ணிய தவசியார், ஓர் தயாரிப்புமில்லாது பசி தலைக்கொண்டு அதிகரிக்கப் பெற்றாராய் நாயனாரது இல்லத்தையடையவே அவர் பண்புற அவ்விருந்தை எதிர் கொண்டனர் என்றுரைத்துக் கொள்க. இப்பொருளில் தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது என்பன நற்றவத்தவர் நிலைகுறித்தது. இது பின்னர்த் தீரவே பசித்தார் (449) என்றதனோடும் பொருந்துமாறும் காண்க. இப்பொருள் சிறந்ததாகக் காண்கின்றது. ஆயினும் பெரும்பான்மை கொண்டுள்ள பாடத்துக் கேற்ப முன்னர் உரைக்கப் பெற்றது.

    விருந்து – புதுமை; புதியராய் வந்தார்மே னின்றது. இங்கு முன் எந்நாளும் கண்டிராத புதுநிலைமை குறித்தது. “இம்மடத்திற் காணும் படியிலாத நீர்“ – (அமர்நீதி – புரா – 10) என்றது காண்க. முன்னெல்லாம் அடியாருடன் கலந்து வந்தனரேயன்றித் தனித்துத் தாமே எழுந்தருளியதில்லையாதலின் இது புதுமை என்பார் விருந்து என்றார். எதிர்கொண்டு வரவேற்றலை ஆவாகனம் என்பது வழக்கு.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்—19

    தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
    பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
    விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
    ‘
    அரிவாரைக் காட்டார் நரி‘.

    பழமொழி – ‘அரிவாரைக் காட்டார் நரி‘

    கவிதா எனும் பெயர்கொண்ட டீச்சருக்கு மனசு சரியில்லையென இந்த ஸ்டாப் ரூமே பேசிக்கொள்கிறதே. அப்டியென்ன பிரச்சினையாக இருக்கும். ஒன்றிரண்டாகக் காதில் விழுந்தவைகளை வைத்து யூகித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஏதோ மாணவர்களால பிரச்சினைனு மட்டும் புரியுது.

    என்னவோ இன்னிக்கு நோட்புக் திருத்த மனசே வர மாட்டேங்குது. முப்பது நாப்பது நோட்டுக்களைக் கொண்டுவந்து மேசைமேல் வைத்துவிட்டு என் முன் அமர்கிறாள். ஒரு ஆசிரியை.

    ஆமாம் நீங்க இன்னிக்கு புதுசா சேர வந்திருக்கீங்க இல்ல. மிஸஸ் விமலா டிஜி.டி. ரைட்.

    ஓ இவர்களும் என் டிபார்ட்மெண்ட் போல. மனதிற்குள் நினைத்துக்கொண்டே ஆமாம். இன்னும் தலைமை ஆசிரியரப் பாக்கல என ஆங்கிலத்தில் மொழிந்தேன். தொடர்ந்து பேசுவதற்குள். வாங்க மேடம். உங்கள தலைமை ஆசிரியர் கூப்பிடறார். பியூன் அழைக்க அவரைப் பின் தொடர்ந்தேன்.

    என்ன பேச வேண்டும் என் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாலும் ஒரு சிறு உதறல். ஒருவேளை இந்தப் பசங்களால தலைமை ஆசிரியர் எரிச்சலா இருப்பாரோ. நாம ரொம்ப கவனமாப் பேசணும். ஆங்கில ஆசிரியையா சேரப்போரதால ஆங்கிலத்தில் சரளமா பேசி அவரோட நன்மதிப்பைப் பெற்றுடணும்.

    யோசித்துக்கொண்டே பியூனைப் பின் தொடர்ந்ததில் சட்டென அவர் அறை அடைந்தது போல் தோன்றியது.

    எதிர்பார்த்ததுக்கு மாறாக மிக அமைதியான முகம். லேசான திருநீற்றுப்பட்டை முகத்தில்.

    ஓ அவரின் அறை வாசலில் நிற்கும் இந்த மூணு பேரும்தான் கவிதா டீச்சரை தொந்தரவு செஞ்சவங்களா. ஒருவேளை இந்தப் பசங்க இன்னும் இவர்கிட்ட பேசவேயில்லையோ.

    யோசித்துக்கொண்டு இருக்கும்போதே. வாங்க மேடம் உக்காருங்க. இந்தப் பசங்கரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட பேசிட்டு உங்களக் கேக்கறேன்.

    அவர் அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். திருவள்ளுவர் ஓவியம் அவரின் நாற்காலிக்குப் பின்னால். தமிழ்ப் பற்று மிக்கவர் போல. நேர்த்தியாக அடுக்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் அவரின் இடப்புறமிருந்த மர அலமாரியின் கண்ணாடி வழியே தெரிந்தது.

    வாங்கப்பா. மூன்று மாணவர்களையும் உள்ளே அழைக்கிறார். என்னப்பா இதுல ஷ்யாம் யாரு.

     சார்.. குனிந்த தலையுடன் கையை முன்னே உயர்த்துகிறான் ஒரு மாணவன்.

    சரி. விமல் ….துஷ்யந்த்.

    நல்லதுப்பா. இப்ப சொல்லுங்க. என்ன நடந்துதுன்னு.

    சார் நாங்க வேணுமின்னே செய்யல. அந்த அண்ணன் சொன்னாரு. தெனமும் ஒரு சைக்கிள லவுட்டித் தந்தேன்னா நான் உங்க மூணு பேருக்கும் சினிமா டிக்கெட் எடுத்துக் குடுக்கறேன்னு. ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவொடனே சைக்கிள மெதுவா எடுத்துட்டு வந்து பின் பக்கத்துல ஒடஞ்சிருக்கிற மதில் சுவத்து வழியா வெளிய போட்டிரு மத்ததநான் பாத்துக்கறேன்னு. செய்யறதுக்கு ரொம்ப த்ரில்லிங்க இருந்ததால தப்புனு தோணல.

    ரெண்டாவது நாள் அப்டி போடும்போது ரோந்து வந்த போலீஸ் எங்களப் புடிச்சிட்டாங்க. அந்த அண்ணன் ஓடிப்போயிட்டாரு. அவரு யாருனு கூட எங்களுக்குத் தெரியாது. இது உண்ம சார். துஷ்யந்த்முடித்தவுடன்

    மூணு பசங்களூம் குமுறிக் குமுறி அழுகிறார்கள்.

    என்ன ஆச்சரியம். அவர் ஏதோ பெரிசா பனிஷ்மண்ட் குடுக்கப்போறார்னு நெனச்ச எனக்கு.

    எப்போ நீங்க கண்ணீர் உட்டு வருத்தப்படறீங்களோ அப்பவே தப்ப உணர்ந்துட்டீங்கனு அர்த்தம்.  கவிதா டீச்சரும் உங்களப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னாங்க. இனிமே நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணும்னு இல்ல. இருந்தாலும்

    நான் இப்ப சொல்லப்போற பழமொழிய அதோட அர்த்தத்தோட ஐந்து முறை எழுதிட்டு வாங்க. உங்க வகுப்புலஇருக்கற எல்லா மாணவர்களுக்கும் அதச் சொல்லிக்குடுங்க. பழமொழி இதுதான். ‘அரிவாரைக் காட்டார் நரி’

    நல்லபடியா நெல்ல அறுவடை செய்யறவங்க முன்ன அவங்க வேல கெடறமாதிரி யாரும் கவனத்த திசைதிருப்ப மாட்டாங்க.  அதுமாதிரிதான் படிக்கிற பசங்க நீங்க நல்லவங்க கூட்டத்தோடதான் சேரணும். இந்த மாதிரி மனசக் கெடுக்கற கூட்டத்துக்கூட சேர நெனைக்கவே கூடாது. இந்த விசயத்த இத்தோட உட்ருங்க. படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க. புரிஞ்சுதா.

    அதன்பிறகு என்னிடம் கேள்விகள் தொடர்கின்றன. ஒப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுக்க அவர் அந்தப் பசங்ககிட்ட காட்டின பரிவு நிறைந்து இருந்தது. கண்டிப்பா இந்தப் பள்ளியில பல வருசம் வேலை பார்க்கணும். தீர்மானித்தேன்.

    பாடல்- 20

    முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
    விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
    இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
    ‘
    அழகொடு கண்ணின் இழவு‘.

    பழமொழி – ‘அழகொடு கண்ணின் இழவு‘.

    நான் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கிறேன். வயிற்றுப்பசி காதை அடைக்கிறது. என்ன செய்ய. எங்கயும் சாப்பாடு கெடைக்கல. கொஞ்ச நேரம் பிரயாணம் பண்ணினதுல ஊர் வந்து சேந்தது கூடத் தெரியல. இனிமே எனக்கு நல்லா வழி தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு  வேப்பமரக் காத்துல ஒரு தூக்கம் போட்டா அசதி போயிடும்.

    பர்க்கர் போடும் வேலு கடையைத் தாண்டறதுக்குள்ள வயிறு குய்யோ முறையோனு கத்துது. அவங்கிட்ட வாய்விட்டுக் கேக்க முடியாது. இல்லனு விரட்டிட்டா அவமானமாப் போயிடும். கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போயிடலாம்.

    பசிய அடக்கிப் பறந்து பறந்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு. பையன்கிட்ட சாப்பாடு கேக்கறதுல என்ன இருக்கு, இல்லன்னா சொல்லப்போறான். சத்தம் போட்டுக் கேட்டதுதான் மிச்சம். தொண்ட வறண்டு போச்சு.

    மருமக யார்கிட்டயோ பேசிட்டிருக்கா. அவ தோழி வந்திருக்கா போல. மேசை மேல சமோசா, டீ யெல்லாம் வச்சிருக்கு. என் பசிக்கு ஒருவாய் தர மாட்டேங்குறா.

    மயக்கமாய் அமர்ந்திருந்தேன். லேசான குரலில் அவளின் பேச்சுச் சத்தம்.

    எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்ல. பாத்தையில்ல. வீட்ட வசதியா இடிச்சுக் கட்டிக்கிட்டோம். பையனையும் ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல போட்டாச்சு. வெளியில இறங்கினா கார்தான். இப்போ டிரைவர வரச்சொல்லியிருக்கேன். வந்தவொடனே கெளம்பலாம். ஐந்து மணி ஷோவுக்குதான் டிக்கெட் வாங்கியிருக்கேன்.

    அப்பறம் நீ சொல்லு. உங்க வீட்ல எப்டி. உனக்கு நேரம் கெடைக்குமா. அவளின் தோழி தொடர்கிறாள்.

    உனக்கென்னப்பா நீ புண்ணியம் செஞ்சவ. நல்ல மாமனார் சொத்து சுகத்த உட்டுட்டுப் போய்ச் சேந்துட்டார். அனுபவிக்கிற. என் மாமனார் என்கூடவே இருக்கறதால வயசான அவர உட்டுட்டு நெனச்ச நேரத்துக்கு என்னால வெளியில வர முடியாது. இப்ப நீ வற்புறுத்திக் கூப்பிட்டதால வந்தேன் அவ்வளவுதான்.

    சரி. நீ டிரஸ் மாத்திட்டுவா. ரொம்ப நேரமா பால்கனியில காக்கா கத்திக்கிட்டே இருக்கே. தினமும் சாப்பாடு போட்டுப் பழக்கியிருக்கியா.

    எங்க மாமனார் ஒரு பணக்காரக் கஞ்சன். கோடிகோடியா சொத்து இருந்தாலும் உசிர் இருக்கற வர எச்சிக்கையால காக்கா விரட்ட மாட்டாரு. சிரித்துவிட்டு டிரஸ் மாத்தச் சென்றுவிட்டாள் என் மருமகள்.

    உங்க மாமனார் ‘அழகொடு கண்ணின் இழவு’.ங்கற பழமொழிக்கு எடுத்துக்காட்டாயில்ல வாழ்ந்திருக்கிறார். அம்சமா அழகா இருக்கற ஒரு பெண் பார்வையற்று இருந்தா அந்த அழகால பெருமையில்லங்கற மாதிரி அவரோட பணத்தால அவருக்கு ஒரு பிரயோசனமும் இருந்திருக்காது..

    உண்மதான். இருந்தவர எதையும் அனுபவிக்கல. இப்ப எந்த உலகத்துல போய் சொத்து சேக்கறதப் பத்தி பேசிக்கிட்டிருக்காறோ சிரித்துக் கொண்டிருக்கிறாள் என் மருமகள்.

    எனக்கு இப்டி ஒரு நிலைமை வரும்னு நான் நெனச்சிக்கூட பாக்கல சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையிழந்த நான் என் வீட்டு வேப்பமரத்தை நோக்கி சிறகுவிரித்துப் பறக்கிறேன். வேப்பம்பழமாவது கிடைக்குமா எனும் ஏக்கத்தோடு.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 2

    பரிமேலழகர் உரைத் திறன் – 2

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

    முன்னுரை

    உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

    “என்பிலதனை வெயில் போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”  77

    சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

    • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
    • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

    இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

    உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

    மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

     வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
    அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

    குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

    விளக்கவுரை

    பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

    “என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

    மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

    பரிமேலழகர் உரையாழம்

    • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
    • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
    • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
    • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
    • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
    • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
    • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
    • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

    “கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
    மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
    அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
    இல்லிருந்து தீதொழுகு வாள்”

    என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

    பரிமேலழகரின் உரை அருமை

    ‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

    சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

    “தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
    கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

    இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 17

    உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
    புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
    நிரையிருந்து மாண்ட ‘அரங்கினுள் வட்டு,
    கரையிருந் தார்க்கெளிய போர்‘.

    ‘அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர்‘

    அமெரிக்காலேந்து என் பேத்தி வரப்போறா. என்ன அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா. பாட்டி தன் அனைத்து பொக்கை வாய்த் தோழிகளிடமும் சொல்லியாயிற்று.

    நாலு நாட்களாக பாட்டியோட அளப்பற தாங்க முடியல. அவ வந்தா என்னவெல்லாம் பண்ணிக்குடுக்கணும்னு லிஸ்ட் வேற.

    ஒருவழியாக வந்து சேர்ந்த பேத்தி பாட்டியை விரட்ட ஆரம்பித்தாள்.

    இவ்ளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தீங்க பாட்டி.

    இப்பவாவது சரியாப் பாத்து புடவை சட்டை எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க. அங்க வாங்கவும் முடியாது. சட்டை தைக்கறதும் கஷ்டம். உங்களோட முக்கிய தேவைகளைச் சொல்லுங்க. பல்செட்டு, மூக்குக் கண்ணாடி. கோபால் பல்பொடி, சந்திரிகா சோப்பு, தலை தோட்டிக்கறதுக்கு குற்றாலத் துண்டு லிஸ்ட் நீண்டுகொண்டே போனது.  அதோடமறக்காம என்னோட முறுக்குக்குத் தேவையான உளுந்துமாவுப் பொட்டலம் இருக்கு. அத எடுத்துக்கணும். அரிசி உங்க ஊர்ல கிடைக்குமில்ல.

    இந்தப் பாட்டியத் திருத்த முடியாது பேத்தி சௌம்யா தலையில் அடித்துக்கொண்டாள். உள்ளூரில் அவள் பாட்டிக்கு முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் னு பட்டம் வேற. இப்ப சொன்னா கேக்கவா போறாங்க. வேற வழியில்லாம எடுத்துவைக்க வேண்டியதுதான். இருந்தாலும் சொல்லிப்பாக்கறேன். பாட்டி அமெரிக்காவுல யாரும் முறுக்க விரும்ப மாட்டாங்க. பல்லு ஒடைஞ்சுபோயிடும்னு பயப்படுவாங்க. யாருக்கு செஞ்சுகுடுக்கப்போறீங்க. இருக்கற பத்து முறுக்கு எனக்குப் போதும். ரெண்டு மாசம் கழிச்சு நீங்க திரும்ப வரும்போது செஞ்சிக்கலாம்.

    பாட்டி காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. உன்னோட அமெரிக்க ப்ரெண்ட் எல்லாம் கூட்டிட்டு வா. நான் சுலபமா கடிக்கறாமாதிரி மொறுமொறுனு தேங்காய் எண்ணெயில பொரிச்சுத்தரேன். ஒருதடவை சாப்பிட்டாங்க அப்பறம் என்ன இந்தியாக்கு திரும்பிப் போகவேண்டாம்னு சொல்லிருவாங்க.

    எப்படியோ என்னோட முறுக்குப்பாட்டியக் கூட்டிக்கிட்டு அமெரிக்காவும் வந்தாச்சு. இங்க இருக்கற இந்திய நண்பர்கள்கிட்ட பேசறதுக்கு முன்ன பாட்டியோட முறுக்குக்குத் தடை போட்டுறணும். முடிவோடு பேச ஆரம்பித்தாள் சௌமியா.

    பாட்டி முறுக்கு சுத்தறது என்ன பெரிய விசயமா. இப்பல்லாம் எப்படிச் செய்யணும்னு மொபைல்ல வீடியோ பாத்தே தெரிஞ்சுக்கலாம். என்ன அதிசயம் பாட்டி ஒன்றுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டாள்.

    அடுத்தநாள் காலை எழுந்த சௌமியாவுக்கு ஆச்சர்யம். பாட்டி முறுக்கு மாவு பிசைந்து ரெடியாக வைத்திருந்தாள். என்னடா தர்மசங்கடம். வந்த ரெண்டாம் நாள்ல அதுக்குள்ள இங்க யார ப்ரெண்ட் புடிச்சிருப்பாங்க. ஒருவேள யாராவது வீட்டுக்கு வரப்போறாங்களோ.

    பாட்டி ஆரம்பித்தாள். இங்க யாரும் வரப்போறதில்ல. திருதிருனு முழிக்காத. இப்போ உனக்குதான் முறுக்கு சுத்தற போட்டி. நேத்திக்கு சொன்னையில்ல. யார் வேணும்னாலும் செய்யலாம்னு. இப்போ இந்த மாவ எடுத்து ஒடையாம மூணு வட்டம் முறுக்கு சுத்து.

    இதென்ன பெரிய விசயமான்னு உக்காந்த எனக்கு அரை மணி நேரம் ஆகியும் ஒரு முறுக்கு ஒழுங்கா சுத்த முடியல. ஒண்ணு புரி சரியான இடைவெளியில வர மாட்டேங்குது. அப்படியே புரி வந்தாலும் இரண்டாவது சுத்துலயே முறுக்கு விண்டுக்கிட்டு நிக்குது. பொறுமையா பாட்டி திரும்பத் திரும்ப கலைந்த முறுக்கு மாவை எடுத்து மீண்டும் உருட்டி எண்ணை தொட்டு என்னிடம் கொடுக்கிறாள்.

    கடைசியில் என்னால முடியல…. அப்டினுஒத்துக்க வேண்டியதாயிற்று. எங்கள் வீட்டு முறுக்கு சாம்பியன் முந்தினநாளே அரைத்துத் துணியில் நீர் வடிவதற்காகக் கட்டி தொங்கவிடப்பட்டதிலிருந்து சிறிது எடுத்துப் பிசைந்து எண்ணெய் தோய்த்து லாவகமாக வெள்ளைத் துணியின்மேல் சுற்றுகிறாள். இப்பொழுது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. செய்யறவனுக்குத்தான் அதோட சிரமம் தெரியும். வெளியில நின்னு விமர்சிக்கறது ரொம்ப சுலபம். பழமொழி நானூறுல  ‘அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்‘ இதத்தான் சொல்லுது. அரங்குல உக்காந்து பாக்கறவங்களுக்கு உள்ள வட்டாடறது எளிதாத் தோணுமாம். ஆனா உள்ள இருக்கறவனுக்குத்தான் அதப்பத்தின சிரமம்தெரியும்ங்கறது அதோட அர்த்தம். முன்னால படிச்ச ஞாபகம்.

    சரி இருந்தாலும் நான் முறுக்குப்பாட்டியின் பேத்தியாச்சே. முயற்சியோட கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன். மனதினுள் சொல்லிக்கொண்டே பாட்டியின்முன் உட்கார்ந்தாள் சௌமியா.

    பாடல் 18

    பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
    இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
    விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
    ‘
    அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு‘.

    ‘அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு‘

    கைபேசியின் அழைப்பு ஒலி. இப்பொழுதுதான் வீட்லேந்து கடைக்குப் போனான். அதுக்குள்ளயா கூப்புடறான். சாமான்கள ஒழுங்கா லிஸ்ட் போட்டு எழுதிட்டுப் போன்னு சொன்னா கேக்கறதே இல்ல. எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் இந்தப் பிள்ளைக்கு மனதில் நினைத்துக்கொண்டே வசைபாடுபவதற்காக கைபேசியை எடுத்தேன். என்ன ஆச்சர்யம். இது கடைக்குப்போயிருக்கும் என் பிள்ளை இல்ல. என் ப்ரெண்ட் விசாகாவோட அழைப்பு. பாம்பேய விட்டு வந்து ஒரு வருசம் ஆகியாச்சு. இன்னிக்குக் கூப்பிடலாம் நாளைக்குக் கூப்பிடலாம்னு நெனச்சி நாட்கள் கழிந்ததுதான் மிச்சம். எந்த பழைய ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவே இல்ல. கடைசியில அங்கு பக்கத்துவீட்டில் குடியிருந்த தமிழ்பேசும் விசாகா கூப்பிட்டே விட்டாள்.

    என்ன சுலோசனா சென்னை போனதில எங்கள எல்லாம் மறந்துட்ட போல. என்னதான் உங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க இருந்தாலும் ஒருவருசமா உனக்குப் பேச நேரமே கெடைக்கலனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ஆமா வீடு எங்க. கோயமேடு பஸ்டேண்ட் பக்கமா. அமக்களமான எடம். நல்ல அனுபவிக்கற போல. அங்கே ஒரு வீடு வாங்கிற வேண்டியதுதானே.

    சிறிதுநேரம் விசாகாவைப் பேசவிட்டு பின் நான் தொடர்ந்தேன். நல்ல எடம் தான் பொழுது எல்லாம் நல்லாவே போகுது. வீடுகீடு வாங்கறதப்பத்தி யோசிக்கவே முடியாது. இங்க வீடுகள்லநிறைய பிரச்சினை. முக்கியமானது கரையான். கொஞ்ச நாள் துணிமணிகள நகத்தாம வச்சா அதுலயே கரையான் பத்திக்கிது. நல்ல வேள நான் குடியிருக்கிற வீட்ல அவ்வளவா இல்ல. வாசல் கதவுல மட்டும் கரையான் அரிச்சிருக்கு. மூலையில மண்சேத்து வைக்கும். அப்பப்ப அங்க மட்டும் மருந்து அடிச்சு கட்டுப்படுத்தி வச்சிருக்கோம். அக்கம்பக்கத்து வீடுகள்ல எல்லாம் அலமாரிகள் வரை அரிச்சிடுச்சு. மொத்தமா எடுத்துட்டு திரும்ப மரவேலை பண்றாங்க.

    நான் நீண்ட நாள் பேசாததால் கோபத்துடன் ஆரம்பித்த விசாகா கரையான் எனக் கேட்டவுடன் அடப்பாவி, நீ நெனைக்கிற மாதிரி கரையான அழிக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. கட்டுப்படுத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்க. புதுசா மரவேலை பண்ணிட்டா திரும்ப வராதுனு உங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க நினைக்கிறாங்க. எல்லாமே தப்பு. பெஸ்ட் கன்ட்ரோல் ஆட்களக் கூப்பிட்டு வீடு முழுக்க மருந்து அடிக்க வை. அவங்க சுவரோட அடிப்பக்கத்துல குறிப்பிட்டஇடைவெளி விட்டு சின்னச் சின்ன ஓட்ட போட்டு மருந்து அடைப்பாங்க. அதனால கரையான் பரவாம அழிஞ்சு போகும். போனவாரம் பொதிகை டிவியில பழமொழி பத்தின ஒரு நிகழ்ச்சி பாத்தேன். அதுல அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு‘ னு ஒரு பழமொழிக்கு வயல்ல கதிரை அரிந்து வச்ச அரிதாளையும் விடாம உழுது தண்ணிக்குள்ள அமிழ்த்தி அழுகச்செய்வான் உழவன். அப்டியே உட்டுவச்சா அதுலேந்து வளமில்லாத பயிர் வர ஆரம்பிச்சுடும்னு அர்த்தம் சொன்னாங்க. உண்மைதானே. அரைகுறையா எத உட்டு வச்சாலும் ஆபத்துதான்.

    சரிதான் என் தோழி சொன்னத செயல்படுத்திடவேண்டியதுதான். முடிவெடுத்தேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 26

    பழகத் தெரிய வேணும் – 26

    நிர்மலா ராகவன்

    (வாய் எதற்கு?)

    “அம்மா! ஆத்திலே நீ பேசக்கூடாதுங்கறே. ஸ்கூல்லே பேசினா டீச்சர் திட்டறா. வாய் எதுக்கு வேஸ்ட்?” வாய்கிழியக் கேட்டது என் நான்கு வயது மகள்.

    அவள் ஒன்றரை வயதிலிருந்தே ஏதேதோ பேசுவாள். கேட்பவருக்கு ஒன்றும் புரியாது. அது நிராசையில் கொண்டுவிட, சுவற்றில் முட்டிக்கொள்வாள்.

    அவளை எப்படி அடக்குவது என்றே புரியாமல், ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டினேன்.

    ‘இன்னொரு தடவை, இன்னொரு தடவை,’ என்று அவள் கெஞ்ச, ஒரே கதையை பதினான்கு முறை இடைவிடாது படித்தேன். அதனால் அவளுடைய ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது.

    அதிகமாக எழுதவோ படிக்கவோ தெரியாத வயதில் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி பேசுவதுதான்.

    எட்டு வயதுப் பெண்குழந்தைகள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அந்தப் பிராயத்தில் சற்று கண்டிக்காவிட்டால், `மௌனத்தின் எதிரி நான்!’ என்பதுபோல் ஆகிவிடுவார்கள்.

    பதினைந்து வயதில், நான் வகுப்பில் நிறைய பேசியதற்காக, நான் மட்டுமின்றி, எங்கள் வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒரு மணி நேரம் திறந்தவெளியில் நிற்கவேண்டும் என்ற தண்டனை அனுபவித்தோம். என்னை ஊக்குவித்து, என் பேச்சை ரசித்துக் கேட்டதற்காக அவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை.

    படிப்பதில் எனது ஆர்வம் பெருகப் பெருக, எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது., பேச்சு குறைந்துபோயிற்று.

    எப்போது பேசலாம்?

    ஒருவர் நமக்குத் தீமை இழைக்கிறார். அதைப் பொறுத்துப்போகலாமா? அவரை எதிர்க்க வேண்டும்.

    எவ்வளவு வதையை அனுபவித்தாலும், தமக்கே உதவி செய்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை பரிந்து பேசலாம்.

    உதாரணமாக, ஒரு மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்துகொள்வதைப் பார்த்தபின்னரும், ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்காது, அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது.

    கணவனிடம் பல ஆண்டுகள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வதைபட்டு, சாகும்வரை பொறுத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும் பெண்கள்தாம் அவர்களுக்காக குரலெழுப்ப முடியும்.

    இப்படிப்பட்ட செய்கைகளால் பல துன்பங்கள் வரலாம். ஆனால், ஒவ்வொருவரும் சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஒதுங்கினால், இவ்வுலகில் தவறுகள் மலிந்துவிடாதா!

    மௌனத்தைக் கடைப்பிடி

    நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரைப்பற்றியோ, அல்லது தெரியாத ஒரு சமாசாரத்தைப்பற்றியோ பேசாது இருப்பது நல்லது. நாமே நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்வானேன்!

    ஒரு முட்டாள் தலைவராக இருந்தால், அவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நமக்கே நாம் செய்துகொள்ளும் நன்மை.

    சில சமயங்களில், நேர்மையைவிட மௌனமே சிறந்தது.

    கதை

    ஒருவன், ‘என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்,’ என்று ஒரு முனிவரிடம் கெஞ்சிவிட்டு ஒளிந்துகொள்கிறான். அவனுடைய எதிரிகள், ‘இப்படி ஒருவனைப் பார்த்தீர்களா?’ என்றபோது மௌனம் சாதிக்கிறார்.

    அவர் பொய்யுரைக்கவில்லை. உண்மையை மறைக்கவே வாய்பேசாது இருந்துவிடுகிறார்.

    நாம் பேசுவதால் பிறரை நோகடிப்போம் என்றால், எதற்காகப் பேசுவது?

    பிறர் சொல்வதைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதைவிட தாம் அதையடுத்து என்ன கூறலாம் என்றே யோசிப்பார்கள். பிறர் பேசுவதைக் கேட்கப் பொறுமை இராது.

    உரத்த குரலில் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால்தான் அறிவாளியா?

    அறிவாளிகள் தம் அறிவைப் பறைசாற்றிக் கொள்வதில்லை.

    ‘நீங்கள் பேசுவதேயில்லையே!’ என்று குற்றம் சாட்டுவார்கள் பலர்.

    மௌனமாக இருப்பவர்களுக்குப் பழகத் தெரியாது, அல்லது கர்வம் கொண்டவர்கள் என்பதில்லை. இவர்கள் சாதிப்பவர்கள். அவசியம் வந்தால் பேசலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே அமைதியாக இருப்பார்கள்.

    பிறருக்கும் அவரிடம் தம் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.

    கவுன்சிலர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம்: ஒருவர் தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், குறுக்கே பேசாது, மௌனமாக கேட்டுக்கொள்வது. அவசியம் என்றால், தெளிவு ஏற்பட சில கேள்விகளைக் கேட்கலாம்.

    நாம் மௌனமாக இருந்தாலும் நம்மைப் புரிந்துகொள்கிறவரே உற்ற துணை.

    ஏன் தனிமை?

    தனிமையில்தான் நம்மைப்பற்றி நிறைய யோசிக்கமுடிகிறது – நாம் செய்த தவறுகளை, பொறுத்த அவமதிப்புகளை, நம் எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களை. அப்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்ள இயலும்.

    “ஒரு முட்டாளை அவன் பேசுவதிலிருந்து அறியலாம். புத்திசாலியை அவனுடைய மௌனத்திலிருந்து அறியலாம்” (ஒரு தத்துவ ஞானி).

    புரிதலால் அமைதி

    நமக்குப் புரியாதது ஆத்திரத்தை உண்டாக்கும். புரிந்துவிட்டாலோ அமைதியாக இருக்க முடிகிறது.

    கதை

    வீடுகள் நிறைந்த தெருவில் முன்னாலிருக்கும் கார் மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னால் இருக்கும் காரோட்டிக்கு ஆத்திரம் எழ, திட்ட ஆரம்பித்தார்.

    முன்னால் இருப்பவருக்குக் காது கேட்கப்போவதில்லை என்றாலும், தனக்கே அமைதி ஏற்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான்.

    (பெண்கள் இப்படி ஆத்திரப்படுவதில்லை).

    “ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்க, “எனக்கு நிம்மதி கிடைக்கிறது,” என்றார்.

    பிறரது மனநிலை புரியும்போது ஆத்திரம் எழாது.

    இப்படியும் யோசிக்கலாமே! காரோட்டி அந்த இடத்திற்குப் புதிது. யார் வீட்டையோ தேடுகிறார்.

    தனிமையும் கற்பனையும்

    கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ள தனிமையைப்போல் வேறில்லை.

    “நான் 99 தடவை யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. யோசிப்பதை விடுத்து, அமைதியாக இருந்தபோது, உண்மை தானே என்னிடம் வந்தது” (ஐன்ஸ்டீன்).

    அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனைப்பற்றி அறிவோம். பன்னிரண்டு வயதிலேயே அவர் காது செவிடாகிவிட்டதாம். தனிமைதான் துணை என்ற நிதரிசனத்தில், நிறைய பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்தது. பல ஆராய்ச்சிகளில் வெற்றிபெற்றார்.

    எழுதுவதும் ஒரு தனிமையான செயல்தான். தனிமையை ரசிக்கத் தெரியாதவர்களுக்கோ அது ஒரு தண்டனை.

    கோயிலுக்குப் போய் கடவுளை வேண்டினால் அமைதி கிடைக்கும் என்பார்கள். அங்கும் வீண்வம்பு பேசுகிறவர்கள் இல்லாமலில்லை. அதனாலேயே, சில கோயில்களில் `இங்கு அநாவசியமாகப் பேசக்கூடாது’ என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்களோ!

    பிரார்த்தனை, தியானம் – இதெல்லாம் மனதை அமைதிப்படுத்துவது. பூஜை அறையில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டு, வெளியில் என்ன நடக்கிறது என்று காதைத் தீட்டியபடி இருந்தால், அவ்வப்போது குரலை எழுப்பி, வெளியில் உள்ளவர்களுக்கு `ஆலோசனை’ கூறத்தான் தோன்றும். அப்புறம் மௌனமாவது, அமைதியாவது!

    மௌனமாக இருந்தால்தான் பிறரை மட்டுமின்றி, நம்மையும் நாமே புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்வில் வெற்றிபெற்றவர்களிடம் எப்போதும் இருப்பது: புன்னகை, மௌனம். பேசாமலிருப்பதும் ஒரு மொழிதான் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    “மௌனம் என்கின்ற மரத்தின் பழம்தான் அமைதி” என்று சரியாகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 15

    சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
    பெரிய பொருள்கருது வாரே; – விரிபூ
    விராஅம் புனலூர! வேண்(டு); ‘அயிரை விட்டு
    வராஅல் வாங்கு பவர்‘.

    பழமொழி – ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்’

    நம்ம செல்வம் சார் எவ்வளவு மாறிட்டார் பாத்தியா. முன்னயெல்லாம் நாம ஸ்கூல் படிக்கும்போது எச்சில் கையால காக்கா ஓட்ட மாட்டாரு. போனவாரம் நான் ஷாப்பிங் மால் ல பாத்தப்போ ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாரு. அவர் கூட அவர் வளர்ப்புப் பையனையும் கூட்டிக்கிட்டு வந்திருந்தாரு. பையன் பாக்க நல்லா லட்சணமா இருக்கான். அவருக்கு ரொம்ப பெரிய மனசு. நான்தான் இவ்ளோநாள் புரிஞ்சுக்காம என்னென்னமோ பேசியிருக்கேன். அதுக்காக இப்போ வெக்கப்படறேன். என் திருச்சி நண்பன் வருத்தப்பட்டான்.

    நீ பேசும்போது அவுங்க மனைவி கூட இருந்தாங்களா இது நான்.

    சிறிது யோசித்த என் நண்பன் தொடர்ந்தான். தொடக்கத்துல கூடதான் நின்னுட்டிருந்தாங்க அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சம் தள்ளி நின்னு புடவைக் கடைய வேடிக்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா ஏன் கேக்கற.

    அதானே பாத்தேன். நீ திருச்சியிலேந்து இப்பதான் வந்திருக்க. நானும் ஷண்முகமும் கோயம்புத்தூரிலயே தானே இருக்கோம். அடிக்கடி சந்திச்சிகிறது தான். ஆனா நேத்தைக்கு நான் பேசினப்போதான் அவன் செல்வம் சாரப் பத்தி சொன்னான். இப்ப நாலைந்து வருசமா அவன் அவர் வீட்டுப்பக்கத்துலதான் குடியிருக்கான் போல.  அதனால அவரப் பத்தி கதையாச் சொன்னான். அவன் சொன்னதச் சொல்றேன் அப்ப உனக்குப் புரியும்.

    செல்வம் சாருக்கு குழந்தை இல்லனு எனக்குத் தெரியும்டா. பல வருசமாவே அவர் நிறைய டாக்டர்கிட்டயும்  போய்வரதக் கேள்விப்பட்டேன். அதுல ஒண்ணும் அவருக்குப் பெரிசா வருத்தம் இருந்தாமாதிரி தெரியல. தினமும் பக்கத்துல இருக்கற பார்க்குக்கு காலையில வாக்கிங் போகும்போது பேசிக்கிடறதுதான். பாக்கப் பாக்க அவங்க மனைவிதான் வேதனையில மெலிஞ்சிக்கிட்டே போனாங்க.

    அவங்க வற்புறுத்தலாலதான்  நெறைய டாக்டரப் பாத்திருக்காரு போல. அதுக்கு செலவழிஞ்சத நெனச்சிதான்  அவர் அதிகமா வருத்தப்பட்டிருக்கார். அப்பறம் திடீர்னு ஒருநாள் ஒரு வளந்த பையன தத்து எடுத்துக்கிட்டதாச் சொன்னாரு.

    பிறகுதான் தெரிஞ்சது அவரோட திட்டம். பேச்சுவாக்குல கல்லூரி முதலாமாண்டு படிக்கற பையன தத்து எடுத்து தொடர்ந்து படிக்கவைக்கறேன். அப்பதான் செலவு கம்மி ஆகும்பாரு. ஏன்னா பள்ளிக்கூடப்படிப்புக்குக் கட்டவேண்டிய பணம் மிச்சம். கொஞ்ச வருசத்துல அவன் உங்கள மாதிரி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பறம் கைப்பிடித்தம் வராது.  மனைவிக்கும் ஒரு குழந்தை வந்ததிலே சந்தோசம். எல்லா வகையிலும் இது எனக்கு லாபம்தான்னு பெருமப்பட்டார் போல.

    நான் நிறுத்தியவுடன் என் நண்பனுக்குத் தலையே சுற்றிவிட்டது போல. முன்நெற்றியை அழுத்திவிட்டுக்கொண்டே பெருமூச்சுடன்பேச ஆரம்பித்தான்.

    நான்கூடஅவரப் பத்தி பெரிசா நெனச்சிட்டேன். சின்ன மீனைத் தூண்டில்ல கோத்துவிட்டு பெரிய மீனைப் பிடிக்கறமாதிரி இல்ல இருக்கு அவர் வேல. இதெல்லாம் ஒரு பொழப்பா. இவரப்போல மனுசங்களுக்குத்தான் ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்‘ அப்டிங்குற பழமொழியே இருக்குபோல.

    அதச் சொல்லிக்குடுத்ததே அவர்தான். சரி அவர விடு. வேற ஏதாவது பேசலாம். தொடர்ந்தேன் நான்.

    பாடல் 16

    நல்லார் நலத்தை உணரின் அவரினும்
    நல்லார் உணர்ப; பிறர் உணரார்; – நல்ல
    மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
    ‘
    அயிலாலே போழ்ப அயில்‘.      

    பழமொழி – ‘அயிலாலே போழ்ப அயில்’. 

    என்ன கைலாசம் எப்ப ஊர்லேந்து வந்த கேட்டுக்கொண்டே அவனருகே நடந்த என்னை இடைமறித்து

    ஆமா நம்ம ஊர்ல பல மாறுதல்கள் வந்துருக்கு போல. வருசம் கழிச்சு வந்ததால ஒண்ணும் சரியாப் புரியல. ஊரப்பத்தி தொலைக்காட்சி செய்தியில பாத்து தெரிஞ்சுக்கிடறதுதான். ஆரம்பித்தான் அவன். .

    தொலைக்காட்சியில எல்லாம் நம்ம ஊரப்பத்தி சொல்றாங்களா. இந்தத் தேர்தல்ல சிவசாமி ஐயா செயிச்சது எவ்வளவு நல்லதாப் போச்சு. நம்ம ஊருக்காக அவர் எவ்வளவு நலத்திட்டங்கள உருவாக்கிட்டு வராரு பாத்தியா. மாணவர்கள்லேந்து வீட்ல இருக்குற குடும்பப் பெண்கள் வரை எல்லாருக்கும் அவங்கவங்க தேவைக்கு ஏத்தமாதிரி செஞ்சிட்டுவராரு.

    மொதல்ல நம்ப ஊருக்கு மேல்நிலைப்பள்ளி கொண்டு வந்தது பெரியவிசயம். பசங்க எவ்வளவு தூரம் போய் படிச்சிட்டு இருந்தாங்க. அடுத்தது கல்லூரியும் வந்துரும். தென்னையிலிருந்து கிடைக்குற பொருட்கள உபயோகமான சாமன்களா மாத்தறதுக்காக பயிற்சியும் குடுக்கப் போறாங்களாம். அப்பறம் சின்னதா ஒரு தொழிற்சாலையும் வந்துடும். உன்னைய மாதிரி பூவிளைவிக்கிற விவசாயிகளுக்கு உள்ளூர்லயே சென்ட் தொழிற்சாலை வரப்போகுதாமே. கேள்விப்பட்டயா. நீ எங்க. சென்னைவாசி அரசாங்கச் சம்பளக்காரன்.  நிலம்தான் உன் பேர்ல இருக்கு. கஷ்டப்பட்டாதானே அது சரியாகும்போது சந்தோசமும்வரும். உனக்குத் தெரிய நியாயம் இல்ல. சரி வந்ததுலேந்து ஊர்க்கதையப்பத்தியே பேசறேன். அப்பறம்உங்க சென்னை எப்டி இருக்கு. பிள்ளைகள் எல்லாம் நல்லாப் படிக்கிறாங்களா?  .

    அட என்னப்பா நீ. நான் சொல்ல வந்ததே வேற. என்னமோ இந்த ஊர சிவசாமி ஐயா சொர்க்கபுரியா மாத்திட்ட மாதிரி இல்ல பேசிக்கிட்டிருக்க. அவர் கட்சியில கிட்சியில சேந்திட்டயா. நிறுத்தினான் கைலாசம்.

    ஏன்னா வெளியில அவரப்பத்தி நல்லமாதிரி சொல்லலயே. நம்ம தெக்குத்தெரு சொக்கன் தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டிய போனவாரம் பாத்தேன். அதென்னமோ பதவி ஆசையில ஓட்டு சேகரிக்க அவர் மக்கள திசை திருப்பி விடறார்னுல சொன்னான். நீ சொன்னியே அந்த மேல்நிலைப்பள்ளியில காசு வாங்கிட்டு ஆசிரியர்கள வேலைக்கு அமர்த்தியதாவும், குடும்பப் பெண்கள மாதர் சங்கம்னு சொல்லி அப்பளம் இடற சாக்குல ஊர்வம்பப் பேசவச்சி ஊர் ஒற்றுமையக் குலைக்க முற்படறாராமே. இன்னும் என்னமோ நிறைய சொன்னார். அதப் பத்திதான் கேக்கவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அரசியல் மேடைப் பேச்சு மாதிரி முழ நீளத்துக்கு ஒரு பட்டியல் போட்டுட்ட அங்கலாய்த்தான் நண்பன்.

    ஓ அப்டியாசேதி. நான் என்னமோ நீ நம்ம ஊரப்பத்தி நல்லவிதமா கேள்விப்பட்டதா நெனச்சு மூச்சுவிடாம பேசிட்டேன். எப்படியிருந்தாலும் அதுதான் உண்ம. சொக்கன் சந்தர்ப்பவாதி. இடத்துக்கேத்த மாதிரி பேசுவான். தான் காரியம் நடக்கணும்னா நா கூசமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான். நீ கேட்டியே அரசியல்ல சேரரதப்பத்தி. அவன்தான் எதிர்க்கட்சியில சேந்திருக்கான்.

    அயிலாலே போழ்ப அயில் னு நீ கேட்டதில்லயா. இரும்பைப் பிளக்க இன்னொரு கூரிய இரும்பு தேவை.  நல்லவரப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா அவரைவிட நல்லவங்ககிட்டதான் கேக்கணும். சொக்கன் மாதிரி கெட்டவன்கிட்ட கேட்டா இப்டித்தான் ஆகும். கெட்டவனுக்கு பாக்கற நல்லவங்களும் கெட்டவங்களாத் தான் தெரியுவாங்க. என் நண்பனுக்கு உணர்த்திய பெருமிதத்தில் நான் விடைபெற்றேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    செல்வம்  மேவிய நாளில்  இச்செயல்  செய்வ  தன்றியும்  மெய்யினால்
    அல்லல்   நல்குரவு  ஆன போதிலும்  வல்லர் என்றுஅறி   விக்கவே
    மல்லல்   நீடிய   செல்வம்  மெல்ல   மறைந்து நாள்தொறும்  மாறிவந்து
    ஒல்லையில்வறு   மைப்ப   தம்புக   உன்னினார்  தில்லை  மன்னினார்!

    உரை :

    செல்வங்கள் மிகுந்திருக்கும் காலத்திலே இச்செய்கைகள் செய்வதன்றியும், மெய்யினாலே துன்பம் தரும் தரித்திரம் வந்த காலத்திலும் இச்செயல் செய்ய இவர் வல்லராவர் என்ற உண்மையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டாகவே; செழித்து நீடிவந்த  அச்செல்வங்கள் மெல்ல மறைந்துபோய் நாடோறும் மாறி வந்து, பின்  விரைவிலே வறுமையாகிய நிலை வந்து சேருமாறு தில்லையில் மன்னிய இறைவனார் திருவுளஞ்செய்தனர்.

    விளக்கம்

    அடியார் பூசையின் நன்மையாற் செல்வம் வந்து பொருந்திய. அது காரணமாக (அருள் காரணமாக) வறுமை வந்து பொருந்திய காலத்திலும் செல்வமும் வறுமையும் திருவருளினாலே வந்ததென்துவன; இவற்றுள்  எது வந்தெய்தினும் தமது நிலையினின்றும் பிறழாது உண்மைக் கொள்கையில் நிற்றல் உணர்ந்தோர் கடன் என்பது நூல்   துணிபு.

    செல்வம் வந்த காலத்து அடியார் பூசை செய்வதற்கு  அடியார் திறத்து நிறைந்து திருந்திய சிந்தை வேண்டும்; நல்குரவு  வந்தபோது அது செய்தற்கு அதனினும் பெரியதோர் வன்மைவேண்டும் என்பார்,  ‘வல்லர்’ என்றார்.

    அடுத்து இப்பாடலில்  ‘’அறிவிக்கவே’’  என்ற சொல்லின் விளக்கம்

    அடியார்களுக்கு வரும் வறுமை முதலிய துன்பம்போலக் காண்பனவெல்லாம் இறைவனருளால் இவ்வாறு ஒவ்வொரு  நற்காரணம் பற்றி வருவனவேயன்றி வேறன்று.  பிராரத்த முதலியவற்றை அனுபவிப்பித்துக் கழிக்குமுகத்தானும் அல்லது அன்பினை வலிமையுடையதாக்கு முகத்தானும், இன்ன பிறவாற்றானும் வருவன. இவ்வாறு வரும் இன்னல் போன்ற  தோற்றங்களைக் கண்டு மயங்கி அடிமைத்திறத்திலே அபசாரப் படாதிருத்தல் அறிவோர் கடன் என்று குறிக்க இங்கு ‘’அறிவிக்கவே’’ என்றறிவித்தார் ஆசிரியர்.

    மல்லல் நீடிய  என்ற தொடர், வளம் பெருகி நிலைத்த என்ற பொருள் தந்தது.

    அடுத்து ‘மெல்ல மறைந்து’

    மெல்ல மறைந்து – நாடொறும் மாறி வந்து; மெல்ல மறைதலாவது மறைந்துபோம் தன்மை அறிய இயலாதபடி ஒவ்வொன்றாக மறைதல்; நாள்தோறும் மாறி – மறைந்த செல்வம் திரும்பிவருதல் என்பதின்றி நாள்தோறும் செல்வம் போய் வறுமையாய் மாற்றப்பெற்று என்பது குறித்தது. வந்து – அங்ஙனம் மாறுதல் தொடர்பாய் நிகழ்ந்தது என்றதாம்.

    ஒல்லையில் – விரைவிலே. இஃது மெல்ல என்பது முதலாகக் குறித்தவற்றோடு முரணாமோ வெனின் முரணாது; என்னை?; விரைவில் வருவது வறுமைப் பதமே யன்றி வறுமை யன்று; செல்வம்
    மறைந்த செயலுடனே சார்ந்து வறுமைப்பதமும் விரைவில் ஒட்டியே நிகழ இறைவன் நினைத்தமையே இங்குக் கூறினார். வறுமை வந்த நிலை வரும் பாட்டிற் கூறினார். வறுமைப்பதம் – செல்வஞ் சுருங்குநிலை.

    உன்னினார் தில்லை மன்னினார் – பிரபுவின் சிருட்டி காரியம் அவனது நினைப்பு யாத்திரையானே நிகழும் என்பது வேதம். ஆதலின், உன்னினார் என்றார். தில்லை மன்னினார் – அம்பலத்தில் அருளாகிய ஐந்தொழிற் கூத்தியற்றுபவர். மன்னினார் – நிலைத்துள்ளார். படைத்தல் முதல் அருளல் வரை இவ்வைந் தொழிலுமுடையானாதலின் முதலிற் செல்வம் மேவச் செய்த அவனே அச்செல்வத்தை மாறவும் செய்தனன் என்பது குறிப்பு.

    ஆரம் – என்பு புனைந்த – (442) என்ற இடத்தும் தழைத்தலாகிய ஆத்தியும் வறட்சியாகிய எலும்பும் உடன் கூறிய குறிப்பும் காண்க.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 13

    அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
    நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
    கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
    ‘
    அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு‘.

    பழமொழி- அம்பு விட்டு ஆக்கறக்குமாறு‘

    அப்பா இந்த செய்தித்தாளப் பாத்தீங்களா. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைனு போட்டிருக்கு. பத்தாம் வகுப்பு படிக்கும் என்மகன் செல்வனின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

    முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லதான். பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு மறந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தமாதிரி செய்திகள் மனச உலுக்குது.

    எங்க முழுச்செய்தியையும் வாசி மகனுக்குக் கட்டளையிட்டுவிட்டு முகச்சவரம் செய்ய கண்ணாடி முன் அமர்ந்தேன்.

    செல்வன் வாசிக்க ஆரம்பித்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்துகொண்டான். ராஜஸ்தான் மாநிலம் ரேவடி எனும் கிராமத்தில் வசிப்பவர் சதீஷ் சவுகான். அவர் தன் மகனை ஐ.ஐ.டியில்படிக்கவைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து கோட்டா நகரின் அருகேயுள்ள மனஸ்வாத் எனும் பெயர் போன பயிற்சிப்பள்ளியில் தன் மகனைச் சேர்த்துவிட்டார்.  பத்தாம் வகுப்பிற்குப் பின்அங்கு சேர்ந்த ஹேப்பி என்ற பெயர்கொண்ட அம்மாணவன் பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்புடன் சேர்த்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்தார். நுழைவுத் தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியிடப்படும் எனும் அறிவிப்பைக் கேட்டதிலிருந்து ஹேப்பி சரியாக உணவு உண்ணாமலும் நண்பர்களுடன் பேசாமலும் இருந்திருக்கிறார். கடைசியில் மன அழுத்தம் அதிகமாகி இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணைப்படி அம்மாணவன் அமைதியானவர், ஒழுக்கமானவர். கடுமையாக முயற்சித்துப் படிப்பவர் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும், சகமாணவர்கள் அவர் பரோபகாரி. கோபப்படவே மாட்டார் எனப் பாராட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் இப்படி ஒரு கொடுமையான முடிவை எடுக்கக் காரணம் என்ன?

    அவர் கடைசியாக எழுதி வைத்திருக்கும் டயரி குறிப்பில் முன்பெல்லாம் பாசமாக இருந்த என் அப்பா  நான் என்ன மதிப்பெண் எடுத்தாலும் இன்னும் முயற்சி வேண்டும் எனக் கடுமையாகவே பேசுகிறார். வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. என் உயிரே போனாலும் கடுமையாக முயற்சித்து ஐ.ஐ.டி க்குள் நுழைந்து என் அப்பாவின் அன்பை மீண்டும் பெறுவேன் என்று எழுதியுள்ளார்.

    செல்வன் வாசித்துமுடித்தவுடன் என் மனம் கனத்தது. அந்தத் தவறை நான்  செய்யக்கூடாது என எனக்குள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வெளியில் பேசலானேன்.

    கன்னுக்குட்டிய குடிக்கவிட்டுட்டு பாலக் கறந்தாதான் பசுமாடு நல்லா பால் கொடுக்கும். அது இல்லாம அது மேல அம்ப விட்டு துன்புறுத்திப் பால் கறந்தா எப்டி இருக்குமோ அப்படித்தான் ஹேப்பியோட வாழ்க்கையில அவங்க அப்பா செஞ்ச வேல. அன்பா பேசி ஊக்குவிச்சிருந்தா இந்த நெலமை வந்திருக்குமா. பாவம் அந்தப்பையன். நான் இப்போ சொன்னது உன் தமிழ் பாடத்துல பழமொழி நானூறுல இருக்குற பழமொழிதான். அம்பு விட்டு ஆக்கறக்குமாறு‘.

    சொல்லிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.

    பாடல் 14

    முயலலோ வேண்டா; முனிவரை யானும்
    இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
    கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
    ‘
    அயலறியா அட்(டு)ஊணோ இல்‘.

    பழமொழி – ‘அயலறியா அட்டூணோ இல்‘

    செண்பகம் உன்னைய இத்தன வருசத்துக்குப் பிறகு பாத்ததுல ரொம்ப சந்தோசம். நம்ப ரெண்டுபேரும் பக்கத்துப்பக்கத்து வீட்ல இருக்கறப்போ உம் பிள்ள சுரேஷ் எங்க வீட்லயே கெடயா கெடப்பான். இப்போ எப்படி இருக்கான்? நான் ஆரம்பித்தேன்.

    என் புள்ளயா?  சென்னையில கல்யாணத்துக்கு உதவற கம்பெனி வச்சு நடத்தறான். வருமானம் நல்லா வந்துக்கிட்டுருக்கு. வயசுதான் ஏறிக்கிட்டே போகுது. ஏதாவது தெரிஞ்ச வரன் வந்தாச் சொல்லு. அவன் எவ்ளோ சாதுனு உனக்குத் தெரியுமே. இப்பவும் அந்தக் குணம் மாறல. யார்கிட்டயும் அதிகம் பேசமாட்டான். தான் உண்டு தன் வேல உண்டுனு இருக்கான். இது செண்பகம்.

    ஆச்சர்யமா இருக்கே. அவன் குணத்துக்கு அந்த வேலய அவன் எப்டிப் பாக்கறான். ஒரு ஜோடியச் சேத்து வைக்கறதுன்னா சும்மாவா. எவ்ளோ பேச்சு பேசணும்.

    சரி அந்த வேல பாக்கற அவனுக்குத் தனக்கு ஒரு பொண்ணு பாத்துக்க முடியாமலா போச்சு. ஒண்ணும் சரியா பிடிபடல. உங்கிட்ட அவன் ஏதொ மறைக்கறான்னு மட்டும் தெரியுது. இது நான்.

    என்ன நீ வார்த்தைக்கு வார்த்த அந்த வேல அந்த வேல ங்கற படபடக்கத் தொடங்கினாள் செண்பகம். அவன் என்ன மாமா வேல பாக்கறானா இல்ல தரகர் வேல பாக்கறானா. ஒரு அறைக்குள்ள கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து பாக்கற வேல. அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு.

    கல்யாணம் பண்ணிக்க விரும்புற பெண்ணோ அல்லது ஆணோ மத்தவங்களப்பத்தி சரியான தகவலத் தெரிஞ்சிக்கிறதுக்காக இவன் கம்பெனிக்கு வருவாங்க.

    இப்பல்லாம் முகநூல், ட்விட்டர் இந்த மாதிரி சோஷியல் மீடியாக்கள் இருக்குல்ல. அதுல அவுங்க எழுதற தகவல்கள் சரியானதானு ஒத்துப் பார்ப்பான். அந்த நபருக்கு எந்த மாதிரி நண்பர்கள் இருக்காங்க அவங்களோட பொழுது போக்கு என்ன இதையெல்லாம் தொடர்ந்து ஒருமாதம் கண்காணிச்சுச் சொல்லுவான். தேவைப்பட்டா அந்த நபரையோ அவருடைய நண்பர்களையோ பின் தொடர்ந்தும் கண்காணிப்பாங்க. இதிலேந்து வேலை பாக்கற அலுவலகம். மாதச் சம்பளம், பொழுதுபோக்கு, இதையெல்லாம் தெரிஞ்சுக்க முடியறதோட மட்டுமில்லாம நண்பர்கள் குழுவ வச்சு பொறுப்பான நபரா அல்லது ஊதாரியா, ஒழுக்கமுள்ளவராங்கற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.

    ‘அயலறியா அட்டூணோ இல்‘ ங்கற பழமொழி மாதிரிதான் இந்த வேலயும். மீனைப் பக்கத்து வீட்டுக்குத் தெரியாம எப்டி சமைத்துச் சாப்பிட முடியாதோ அது மாதிரி நண்பர்களப் பாத்தா போதும் ஒருத்தங்களோட இயல்பு எப்டினு கணிச்சிடலாம்னு அப்டிப் பண்றாங்க.

    ஓ இதுல இப்டி வேற ஒரு விசயம் இருக்கா. மீன்வாசத்துக்கு இப்படி ஒரு பழமொழியா. நம்ம முன்னோர்கள் அறிவுரை சொல்லணும்னாலும் சாப்பாட்ட வச்சிதான் பேசுவாங்க போல.

    புதிய விசயம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் செண்பகத்திடமிருந்து விடைபெற்றேன் நான்.

    Share