சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதிலும் வல்லர் என்றுஅறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்தொறும் மாறிவந்து
ஒல்லையில்வறு மைப்ப தம்புக உன்னினார் தில்லை மன்னினார்!
உரை :
செல்வங்கள் மிகுந்திருக்கும் காலத்திலே இச்செய்கைகள் செய்வதன்றியும், மெய்யினாலே துன்பம் தரும் தரித்திரம் வந்த காலத்திலும் இச்செயல் செய்ய இவர் வல்லராவர் என்ற உண்மையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டாகவே; செழித்து நீடிவந்த அச்செல்வங்கள் மெல்ல மறைந்துபோய் நாடோறும் மாறி வந்து, பின் விரைவிலே வறுமையாகிய நிலை வந்து சேருமாறு தில்லையில் மன்னிய இறைவனார் திருவுளஞ்செய்தனர்.
விளக்கம்
அடியார் பூசையின் நன்மையாற் செல்வம் வந்து பொருந்திய. அது காரணமாக (அருள் காரணமாக) வறுமை வந்து பொருந்திய காலத்திலும் செல்வமும் வறுமையும் திருவருளினாலே வந்ததென்துவன; இவற்றுள் எது வந்தெய்தினும் தமது நிலையினின்றும் பிறழாது உண்மைக் கொள்கையில் நிற்றல் உணர்ந்தோர் கடன் என்பது நூல் துணிபு.
செல்வம் வந்த காலத்து அடியார் பூசை செய்வதற்கு அடியார் திறத்து நிறைந்து திருந்திய சிந்தை வேண்டும்; நல்குரவு வந்தபோது அது செய்தற்கு அதனினும் பெரியதோர் வன்மைவேண்டும் என்பார், ‘வல்லர்’ என்றார்.
அடுத்து இப்பாடலில் ‘’அறிவிக்கவே’’ என்ற சொல்லின் விளக்கம்
அடியார்களுக்கு வரும் வறுமை முதலிய துன்பம்போலக் காண்பனவெல்லாம் இறைவனருளால் இவ்வாறு ஒவ்வொரு நற்காரணம் பற்றி வருவனவேயன்றி வேறன்று. பிராரத்த முதலியவற்றை அனுபவிப்பித்துக் கழிக்குமுகத்தானும் அல்லது அன்பினை வலிமையுடையதாக்கு முகத்தானும், இன்ன பிறவாற்றானும் வருவன. இவ்வாறு வரும் இன்னல் போன்ற தோற்றங்களைக் கண்டு மயங்கி அடிமைத்திறத்திலே அபசாரப் படாதிருத்தல் அறிவோர் கடன் என்று குறிக்க இங்கு ‘’அறிவிக்கவே’’ என்றறிவித்தார் ஆசிரியர்.
மல்லல் நீடிய என்ற தொடர், வளம் பெருகி நிலைத்த என்ற பொருள் தந்தது.
அடுத்து ‘மெல்ல மறைந்து’
மெல்ல மறைந்து – நாடொறும் மாறி வந்து; மெல்ல மறைதலாவது மறைந்துபோம் தன்மை அறிய இயலாதபடி ஒவ்வொன்றாக மறைதல்; நாள்தோறும் மாறி – மறைந்த செல்வம் திரும்பிவருதல் என்பதின்றி நாள்தோறும் செல்வம் போய் வறுமையாய் மாற்றப்பெற்று என்பது குறித்தது. வந்து – அங்ஙனம் மாறுதல் தொடர்பாய் நிகழ்ந்தது என்றதாம்.
ஒல்லையில் – விரைவிலே. இஃது மெல்ல என்பது முதலாகக் குறித்தவற்றோடு முரணாமோ வெனின் முரணாது; என்னை?; விரைவில் வருவது வறுமைப் பதமே யன்றி வறுமை யன்று; செல்வம்
மறைந்த செயலுடனே சார்ந்து வறுமைப்பதமும் விரைவில் ஒட்டியே நிகழ இறைவன் நினைத்தமையே இங்குக் கூறினார். வறுமை வந்த நிலை வரும் பாட்டிற் கூறினார். வறுமைப்பதம் – செல்வஞ் சுருங்குநிலை.
உன்னினார் தில்லை மன்னினார் – பிரபுவின் சிருட்டி காரியம் அவனது நினைப்பு யாத்திரையானே நிகழும் என்பது வேதம். ஆதலின், உன்னினார் என்றார். தில்லை மன்னினார் – அம்பலத்தில் அருளாகிய ஐந்தொழிற் கூத்தியற்றுபவர். மன்னினார் – நிலைத்துள்ளார். படைத்தல் முதல் அருளல் வரை இவ்வைந் தொழிலுமுடையானாதலின் முதலிற் செல்வம் மேவச் செய்த அவனே அச்செல்வத்தை மாறவும் செய்தனன் என்பது குறிப்பு.
ஆரம் – என்பு புனைந்த – (442) என்ற இடத்தும் தழைத்தலாகிய ஆத்தியும் வறட்சியாகிய எலும்பும் உடன் கூறிய குறிப்பும் காண்க.