இலக்கியம்கட்டுரைகள்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 5

-மேகலா இராமமூர்த்தி

தேவர் தலைவனான இந்திரனுக்கு வியாழன் (பிரகஸ்பதி) குருவாக வாய்த்ததுபோல் தயரதனுக்கு வசிட்டர் வாய்த்திருந்தார். ஆசனத்தில் அமர்ந்தபடி தயரதனின் வாழ்வியல் கருத்துக்களையும், இராமனுக்கு முடிபுனைய அவன் விரும்புவதையும் அறிந்த அவர் தயரதனை நோக்கி, ”மன்னவா! உன்னுடைய குலத்தில் இதுவரை எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றார்கள். அவர்கள் யாருக்கும் இராமனைப் போன்ற உயர்ந்த மகன் பிறக்கவில்லை. அத்தகு உத்தமபுத்திரனைப் பெற்ற நீ அவனுக்குச் செய்யக் கருதும் கருமம் தருமத்தின் பாலதே ஆகும். எனவே அதனைத் தயக்கமின்றிச் செய்வாய்” என்றார்.

உயர்ந்த தவசீலரும் அறிஞருமான வசிட்டர் தன் மகனைப் புகழ்ந்துரைத்ததைக் கேட்டு தயரதன் அடைந்த மகிழ்ச்சியின் அளவைப் பிற தருணங்களில் அவன் அடைந்த மகிழ்ச்சியோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றார் கம்பர்.

மற்று அவன் சொன்ன
     வாசகம் கேட்டலும் மகனைப்
பெற்ற அன்றினும்
     பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும் எறி
     மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும்
     பெரியது ஓர் உவகையன் ஆனான். (கம்ப: மந்திரப் படலம் – 1440)

வசிட்ட முனிவன் சொன்ன சொற்களைக் கேட்டவுடன் நெடுங்காலம்
மகப்பேறு இல்லாதிருந்து வேள்விசெய்து இராமனை மகனாகப் பெற்ற அந்த நாளினும்,  தலைக்கோலமுடைய சிவபிரான் ஏந்திய, பிறரால் வளைத்தற்கு அரிய, அந்தப் பெரிய வில்லானது  இராமன் ஆற்றலுக்குப் போதாமல் கணத்தில் ஒடிந்த நாளினும்,  அரசர்களை வெட்டி வீழ்த்திய மழு என்னும் படை ஏந்திய பரசுராமன் தோல்வியடைந்த நாளினும் உற்ற உவகையைக் காட்டிலும் கூடுதல் உவகையுற்றான் தயரதன்.

திருக்குறளில்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(குறள்: மக்கட்பேறு – 69) என்பார் பேராசான் வள்ளுவர்.

மகனைச் சான்றோன் என்றும், உயர்ந்தவன் என்றும் கேட்கும்போது தாய் மட்டுந்தானா மகிழ்வாள்? அதற்குச் சற்றும் குறையாத வகையில் தந்தையும் மகிழ்வான் என்பதை இப்பாடலில் நமக்குப் புலப்படுத்துகின்றார் பெரும்புலவர் கம்பர்.

அமைச்சர்களும் வசிட்டரும் இராமன் முடிசூடுவதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இராமனை அழைத்த தயரதன், மகனே! அரசர்கள் அணியும் முடிபுனைந்து அரசாட்சியாகிய நல்லறத்தை வளர்த்திட நீ இசைந்திடல் வேண்டும்; இதுவே நான் உன்னிடம் வேண்டுவது என்று அவனிடம் சொல்லவும், அதைக்கேட்ட இராமன் அரச பதவியின்மீது காதலுறவும் இல்லை; அதை இகழவும் இல்லை. தாதை சொல்லை ஏற்று நடத்தல் தனயனின் கடனென அதற்கு இசைந்தான் என்கின்றார் கம்பர்.

இராமனின் சம்மதம் கிடைத்ததும் சோதிடர்களை அழைத்து இராமன் முடிசூட நல்லநாள் சொல்லுமின் என்று தயரதன் கேட்க, நாளையே நல்லநாள் என்று அவர்கள் நன்மொழி நவின்றமையால் நனிமகிழ்ந்த தயரதன், சிட்டரான வசிட்டரை அழைத்து நாளை அரசனாகப் போகும் இராமனுக்கு அரசியல் அறங்களை உரைமின் என்று வேண்டினான்.

தன் மகன் அரசனானால் போதும் மற்றவற்றைப் பற்றிக் கவலையில்லை என்று எண்ணாது, அவன் பார்போற்றும் நல்லரசனாக வேண்டும், ’அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ எனும் ஆன்றோர் வாக்குக்கிணங்க அவன் ஆட்சிசெய்யவேண்டும் என்ற தயரதனின் உட்கிடையை அவன் இராமனுக்கு நல்லாட்சி நடத்தத் தேவையான அறங்களையெல்லாம் வசிட்டரிடம் பயிற்றுவிக்க முனைவதிலிருந்தே நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகின்றது. 

வால்மீகியின் காப்பியத்தில் இளவரசுப் பட்டம் சூட்டப்படும்போது இராமனுக்குத் தயரதன் அரசியல் அறங்களை உரைப்பதாக வருகின்றது. ஆனால் கம்பர், இராமனுக்கு அரசியல் அறங்களைத் தயரதனின் குலகுருவும், ஆசானுமாக விளங்கக்கூடிய வசிட்டர் உரைப்பதாக மாற்றி அமைத்துள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

தயரதன் விருப்பத்தை ஏற்ற வசிட்டரும் ஓர் அரசன் கைக்கொள்ள வேண்டிய நன்னெறிகளை இராமனுக்கு 15 பாடல்களில் விரிவாக விளக்கத் தொடங்குகின்றார்…

அறவுணர்வும் நடுவுநிலைமையும் அருளும் இல்லையானால் கடவுளர்களாகவே இருந்தாலும் பயனொன்றுமில்லை. எனவே இம்மூன்று குணங்களையும் தவறாது கைக்கொள்வாயாக என்று இராமனுக்கு அறிவுறுத்திய வசிட்டர் தொடர்ந்து,

ஒரு மன்னன் எவர் ஒருவரோடும் பகை கொள்ளவில்லையானால் அவனுக்குச் சண்டை இல்லாமற்போகும்.  அதனால் புகழ் குன்றாது; நிறையவே செய்யும். அம்மட்டோ? அவனுடைய படை கெடாது. அவ்வாறு படைகெடாது வளருமாயின் அவனைப் பகைப்போர் அழிதல் என்பது தானே நடக்கும். அதாவது பலத்தால் பகைவனை வெல்லுதலைவிட நற்பண்பாகிய அன்பினால் பகைவெல்லுதலே சிறந்தது என்பது இங்கே வசிட்டர் கூற விரும்பும் கருத்தாகும்.

யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
தன்
தார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.
(கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1508)

”பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்”
என்ற பாரதியின் பாடலிலும் கம்பனின் இக்கருத்து எதிரொலிக்கக் காண்கின்றோம்.

நம் தமிழ் மன்னர்களும்,

போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப”
(புறம் – 8) அனைத்து நிலப்பகுதிகளையும் தாமே அடிப்படுத்தவேண்டும் எனும் எண்ணத்தைத் தவிர்த்து, தமக்கிருப்பதில் நிறைவு க(கொ)ண்டிருந்தார்களேயானால், எத்தனையோ போர்களைத் தவிர்த்திருக்கலாம். அவர்களிடம் போதுமென்ற நிறைவும், நல்ல நட்பும் இல்லாத காரணத்தினால்தான் ஒருவரோடு ஒருவர் மோதி அழிந்ததோடு அல்லாமல், தமிழகத்தைக் களப்பிரர், பல்லவர் போன்ற தமிழரல்லாத பிறர் கைப்பற்றவும் வழிவகுத்தனர் என்பதை நாம் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.
அவ்வகையில் வசிட்டரின் இவ் அறிவுரை மிகவும் பொருள்பொதிந்த அனுபவ மொழியாகவே இருக்கின்றது.

எப்போது ஓர் அரசனை யாரும் வீழ்த்தமுடியாது என்ற இரகசியத்தையும் அடுத்து இராமனுக்கு விவரமாக விளம்புகின்றார் அந்த அறிஞர் பெருந்தகை.

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதி நெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ
. (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1513)

ஓர் அரசன் இனிய சொல்லை இயம்புபவனாகவும், நல்ல கொடைத்திறம் கொண்டவனாகவும், ஆராயும் அறிவும், முயற்சியும் பெற்றவனாகவும், தூய்மையும், சிறந்த பண்புகளும், வெற்றிக்கான திறமும் கொண்டிருப்பதோடு, நீதிநெறி கடவாதவனாகவும் திகழ்ந்தால் அவனுக்குக் கேடு பயப்போர் அகிலத்தில் எவருமில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் வசிட்டர்.

வசிட்டரின் அறவுரைகளைச் செவியில் மட்டுமல்லாது சிந்தையிலும் ஏற்றிக்கொண்டான் இராமன்.

மறுநாள் இராமன் மௌலி புனைகின்றான் என்ற மங்கலச் செய்தி அயோத்தி மாநகர் முழுவதும் வள்ளுவரால் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. அந்நற்செய்தி கேட்ட மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்; தயரதனை வாழ்த்தினர். வானவர்கள் வசிக்கும் அமராவதிப் பட்டினமோ எனும்படியாக நகரை அலங்கரித்தனர்.

மக்களின் ஆரவார ஒலிகளைக் கேட்டு ஊரில் என்ன விசேடம் என அறியும்பொருட்டு அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள் ஒருத்தி.
அவள் தோற்றம் எப்படியிருந்தது என்பதைக் கம்பரின் மொழியிலேயே காண்போம்.

அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்னகர் இயல்புஎனப் பொலியும் ஏல்வையில்
இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னஅருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.
(கம்ப: அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1534)

உலகிற்குத் துன்பம் செய்கின்ற  இராவணன் செய்த தீமைபோல,  அணுகுதற்கரிய கொடிய மனம் படைத்த,  கூனி என்னும் மந்தரை  வெளியில் வந்து நகரைப் பார்த்தாள். இராமன் நாளை முடிசூடப் போகிறான் எனும் செய்தியையும் அறிந்தாள். அவள் அடைந்த சினத்துக்கும் சீற்றத்துக்கும் ஓர் அளவில்லை. முகம் வெறுப்பைக் காட்ட, கண்களோ நெருப்பைக் கக்கின.

கோசல நாட்டில் கற்றவரும் கற்றிலா தவரும் உண்ணும் நீரினும் உயிரினும் அதிகமாக உவக்கும் இராமன்மீது ஏனிந்த மந்தரைக்கு இத்தனை கோபமும் வெறுப்பும்?

அதற்கும் ஓர் காரணம் இருந்தது!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 600 017.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க