கதை வடிவில் பழமொழி நானூறு – 6
நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 13
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
‘அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு‘.
பழமொழி- அம்பு விட்டு ஆக்கறக்குமாறு‘
அப்பா இந்த செய்தித்தாளப் பாத்தீங்களா. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைனு போட்டிருக்கு. பத்தாம் வகுப்பு படிக்கும் என்மகன் செல்வனின் குரல் கேட்டுத் திரும்பினேன்.
முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லதான். பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு மறந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தமாதிரி செய்திகள் மனச உலுக்குது.
எங்க முழுச்செய்தியையும் வாசி மகனுக்குக் கட்டளையிட்டுவிட்டு முகச்சவரம் செய்ய கண்ணாடி முன் அமர்ந்தேன்.
செல்வன் வாசிக்க ஆரம்பித்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்துகொண்டான். ராஜஸ்தான் மாநிலம் ரேவடி எனும் கிராமத்தில் வசிப்பவர் சதீஷ் சவுகான். அவர் தன் மகனை ஐ.ஐ.டியில்படிக்கவைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து கோட்டா நகரின் அருகேயுள்ள மனஸ்வாத் எனும் பெயர் போன பயிற்சிப்பள்ளியில் தன் மகனைச் சேர்த்துவிட்டார். பத்தாம் வகுப்பிற்குப் பின்அங்கு சேர்ந்த ஹேப்பி என்ற பெயர்கொண்ட அம்மாணவன் பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்புடன் சேர்த்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்தார். நுழைவுத் தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியிடப்படும் எனும் அறிவிப்பைக் கேட்டதிலிருந்து ஹேப்பி சரியாக உணவு உண்ணாமலும் நண்பர்களுடன் பேசாமலும் இருந்திருக்கிறார். கடைசியில் மன அழுத்தம் அதிகமாகி இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணைப்படி அம்மாணவன் அமைதியானவர், ஒழுக்கமானவர். கடுமையாக முயற்சித்துப் படிப்பவர் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும், சகமாணவர்கள் அவர் பரோபகாரி. கோபப்படவே மாட்டார் எனப் பாராட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் இப்படி ஒரு கொடுமையான முடிவை எடுக்கக் காரணம் என்ன?
அவர் கடைசியாக எழுதி வைத்திருக்கும் டயரி குறிப்பில் முன்பெல்லாம் பாசமாக இருந்த என் அப்பா நான் என்ன மதிப்பெண் எடுத்தாலும் இன்னும் முயற்சி வேண்டும் எனக் கடுமையாகவே பேசுகிறார். வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. என் உயிரே போனாலும் கடுமையாக முயற்சித்து ஐ.ஐ.டி க்குள் நுழைந்து என் அப்பாவின் அன்பை மீண்டும் பெறுவேன் என்று எழுதியுள்ளார்.
செல்வன் வாசித்துமுடித்தவுடன் என் மனம் கனத்தது. அந்தத் தவறை நான் செய்யக்கூடாது என எனக்குள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வெளியில் பேசலானேன்.
கன்னுக்குட்டிய குடிக்கவிட்டுட்டு பாலக் கறந்தாதான் பசுமாடு நல்லா பால் கொடுக்கும். அது இல்லாம அது மேல அம்ப விட்டு துன்புறுத்திப் பால் கறந்தா எப்டி இருக்குமோ அப்படித்தான் ஹேப்பியோட வாழ்க்கையில அவங்க அப்பா செஞ்ச வேல. அன்பா பேசி ஊக்குவிச்சிருந்தா இந்த நெலமை வந்திருக்குமா. பாவம் அந்தப்பையன். நான் இப்போ சொன்னது உன் தமிழ் பாடத்துல பழமொழி நானூறுல இருக்குற பழமொழிதான். அம்பு விட்டு ஆக்கறக்குமாறு‘.
சொல்லிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.
பாடல் 14
முயலலோ வேண்டா; முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
‘அயலறியா அட்(டு)ஊணோ இல்‘.
பழமொழி – ‘அயலறியா அட்டூணோ இல்‘
செண்பகம் உன்னைய இத்தன வருசத்துக்குப் பிறகு பாத்ததுல ரொம்ப சந்தோசம். நம்ப ரெண்டுபேரும் பக்கத்துப்பக்கத்து வீட்ல இருக்கறப்போ உம் பிள்ள சுரேஷ் எங்க வீட்லயே கெடயா கெடப்பான். இப்போ எப்படி இருக்கான்? நான் ஆரம்பித்தேன்.
என் புள்ளயா? சென்னையில கல்யாணத்துக்கு உதவற கம்பெனி வச்சு நடத்தறான். வருமானம் நல்லா வந்துக்கிட்டுருக்கு. வயசுதான் ஏறிக்கிட்டே போகுது. ஏதாவது தெரிஞ்ச வரன் வந்தாச் சொல்லு. அவன் எவ்ளோ சாதுனு உனக்குத் தெரியுமே. இப்பவும் அந்தக் குணம் மாறல. யார்கிட்டயும் அதிகம் பேசமாட்டான். தான் உண்டு தன் வேல உண்டுனு இருக்கான். இது செண்பகம்.
ஆச்சர்யமா இருக்கே. அவன் குணத்துக்கு அந்த வேலய அவன் எப்டிப் பாக்கறான். ஒரு ஜோடியச் சேத்து வைக்கறதுன்னா சும்மாவா. எவ்ளோ பேச்சு பேசணும்.
சரி அந்த வேல பாக்கற அவனுக்குத் தனக்கு ஒரு பொண்ணு பாத்துக்க முடியாமலா போச்சு. ஒண்ணும் சரியா பிடிபடல. உங்கிட்ட அவன் ஏதொ மறைக்கறான்னு மட்டும் தெரியுது. இது நான்.
என்ன நீ வார்த்தைக்கு வார்த்த அந்த வேல அந்த வேல ங்கற படபடக்கத் தொடங்கினாள் செண்பகம். அவன் என்ன மாமா வேல பாக்கறானா இல்ல தரகர் வேல பாக்கறானா. ஒரு அறைக்குள்ள கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து பாக்கற வேல. அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு.
கல்யாணம் பண்ணிக்க விரும்புற பெண்ணோ அல்லது ஆணோ மத்தவங்களப்பத்தி சரியான தகவலத் தெரிஞ்சிக்கிறதுக்காக இவன் கம்பெனிக்கு வருவாங்க.
இப்பல்லாம் முகநூல், ட்விட்டர் இந்த மாதிரி சோஷியல் மீடியாக்கள் இருக்குல்ல. அதுல அவுங்க எழுதற தகவல்கள் சரியானதானு ஒத்துப் பார்ப்பான். அந்த நபருக்கு எந்த மாதிரி நண்பர்கள் இருக்காங்க அவங்களோட பொழுது போக்கு என்ன இதையெல்லாம் தொடர்ந்து ஒருமாதம் கண்காணிச்சுச் சொல்லுவான். தேவைப்பட்டா அந்த நபரையோ அவருடைய நண்பர்களையோ பின் தொடர்ந்தும் கண்காணிப்பாங்க. இதிலேந்து வேலை பாக்கற அலுவலகம். மாதச் சம்பளம், பொழுதுபோக்கு, இதையெல்லாம் தெரிஞ்சுக்க முடியறதோட மட்டுமில்லாம நண்பர்கள் குழுவ வச்சு பொறுப்பான நபரா அல்லது ஊதாரியா, ஒழுக்கமுள்ளவராங்கற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.
‘அயலறியா அட்டூணோ இல்‘ ங்கற பழமொழி மாதிரிதான் இந்த வேலயும். மீனைப் பக்கத்து வீட்டுக்குத் தெரியாம எப்டி சமைத்துச் சாப்பிட முடியாதோ அது மாதிரி நண்பர்களப் பாத்தா போதும் ஒருத்தங்களோட இயல்பு எப்டினு கணிச்சிடலாம்னு அப்டிப் பண்றாங்க.
ஓ இதுல இப்டி வேற ஒரு விசயம் இருக்கா. மீன்வாசத்துக்கு இப்படி ஒரு பழமொழியா. நம்ம முன்னோர்கள் அறிவுரை சொல்லணும்னாலும் சாப்பாட்ட வச்சிதான் பேசுவாங்க போல.
புதிய விசயம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் செண்பகத்திடமிருந்து விடைபெற்றேன் நான்.