திருச்சி புலவர்  இரா. இராமமூர்த்தி

மாரிக் காலத் திரவினில் வைகியோர்
தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்ல மடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

(அவ்வாறு நண்ணிய காலமாகிய) மாரி … இரவினில்- மழைக்காலத்தில் ஒரு நாள் இரவிலே; வைகி – (உறக்கமின்றி) விழித்திருந்து; ஒர் தாரிப்பின்றி – வேறு ஓர் ஆதரவு மில்லாமையினாலே; பசி … பாரித்து – மீதூர்வதாகிய பசி மேலும் அதிகரிக்கப் பெற்று; இல்லமடைத்தபின் – வீட்டுக் கதவினைத் தாழிட்டு அடைத்த பின்னர்; பண்புற – உற்ற பண்பினாலே; வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன் – தேன் பொருந்திய மாலையணிந்த மாறனார் (நண்ணிய நற்றவராகிய) விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

மாரிக்காலத்து இரவினில் – மழைக்கால நாட்களில் இரவு மிக்க இருள் கொண்டிருக்கும். மழையும் இருளும் கூடி, மக்கள் வெளிச் செல்லக் கூடாதபடி தடுக்கும் என்பது குறிப்பு. நாயனார் பேறடைந்த திருநாள் ஆவணி மாதத்து மக நாளாதலும் காண்க.

வைகி – இரவினிற் படுத்துறங்க வேண்டுவோர் அவ்வாறுறங்காமல் விழித்திருந்தனர் என்பது. பட்டினி யிருந்து என்பாருமுண்டு. வைகித் தாரிப்பின்மையால் பாரிக்கப்பெற்று அடைத்தபின் – எனக் கூட்டுக. ஓர்தாரிப்பு இன்றி -ஓர் ஆதரவு மில்லாமையினாலே. இன்றி இன்மையால். தாரிப்பு – தரிப்பு – என்றது முதல் நீண்டது. தரிக்கும் ஆதரவு உதவி. தம்மைத் தாங்கக் கூடியவர் யாவருமின்றி என்க. விருந்துபசரிக்க எவ்வகையானும் உதவி பெறாமை குறித்தது. இதனைப் பசி என்றதனுடன் கூட்டி அடக்க முடியாத – தாங்க முடியாத பசி என்பாரு முண்டு. இப்பொருட்கு இன்றி – இன்றிய – இல்லாத – முடியாத என்று பெயரெச்சமாக்கிக் கொள்வர். பசிதலைக் கொள்வது பாரித்து  பாரித்து – பாரிக்க – அதிகரிக்க என்க. பசிமீதூரும் நிலை மேன்மேலும் அதிகரிக்க. செய்ய என்பது செய்து எனத் திரிந்து நின்றது. பெற்று – என ஒரு சொல் வருவித்துரைக்க.

பாரித்தல் – அதிகரித்தல். “சைவ நெறி பாரித்தன்றி“ -இதனைப் பரித்து என்பதன் முதனீண்ட விகாரமாகக் கொண்டு, தாங்கிக் கொண்டு என்றுரைப்பாரு முண்டு. இஃது தாமே பசிமீதூரப் பெற்றார் தம்மையடைந்த விருந்தினரை ஊட்டல் அமையாதென்பது குறித்தது.

இல்லம் அடைந்த பின் – இது நாயனார் விருந்தெதிர் கொண்ட நேரங் குறித்தது. இரவு முதிர்ந்து நள்ளிரவாகிய மிக்க அகாலத்தில் வேறு எவரும் விருந்து புறந்தரார் என்பது குறித்தது. தமது இல்லமேயன்றி ஊர் அடங்கிய நிலையும் குறிப்பிட்டபடியாம். இல்லம் அடைத்தபின் நண்ணினார் என மேற்பாட்டுடன் கூட்டியுரைப்பர் இராமநாதச் செட்டியார்.

வேரித்தாரான் – வேரி – தேன்; தார் – இங்கு வேளாளர்க்குரிய குவளை மலராலாகிய அடையாளமாலை குறித்தது. காகிதம் முதலிய இயற்கைமண மில்லாத போலியான பொய்ம் மாலைகளை அணிந்து மகிழும் இந்நாட் போலிமாக்கள் வேரித்தாரான் என்ற இதனைக் குறிக்கொண்டு திருந்துவார்களாக. இதில் மேலும் ஒருநுட்பம் உள்ளது! தமக்கு வந்த சோதனையைத்தாங்கி வெற்றியடைந்த காட்சியைச் சேக்கிழார் பெருமான் மனக்கண்ணிற் காண்கிறார்! இவ்வாறு இளையான்குடிமாறனார்  வேரித்தாரானாய்த்  தேன் பிலிற்றும் வெற்றி மாலையை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்வது கவிஞர்களின் உரிமை! கம்பராமாயணத்தில் வீடணனைத் ‘’தார்க்கோல மேனிமைந்த’’ என்துயர் தவிர்த்தியாயின் கார்க்கோல   மேனியானைக் கூடுதி’’  என்று கும்பகர்ணன் வேண்டும்போது,  வீடணன் இறுதியில் வெற்றி மாலையுடன்  காட்சியளிப்பதாகக்  கற்பனைசெய்தான் என்பர்!

விருந்து எதிர் கொண்டனன் – இல்லக்கதவுதாழிட்டு அடைத்த பின் நண்ணிய நற்றவர், ‘பசித்து விருந்துவந்தேம்’ எனக் கதவைத் தட்டினார் எனவும், நாயனார். இத்தனை இன்னல்களுக்கு மிடையிலே கதவுதிறந்து, வந்த விருந்தினை உள்ளமும் முகமும் மலர்ந்து உரிய உண்மைவகையிலே வரவேற்று எதிர்கெண்டார் எனவும் வருவித்துரைத்துக் கொள்க. பண்புற – விருந்தோம்பலுக்கு ஏற்ற பண்பு பொருந்தும்படி. அகனமர்ந்த அன்போடு முகமும் மலர்ந்து உரிய பண்பினாலே வரவேற்றல் குறித்தது. இதன் இயல்புகளெல்லாம் நீதிநுல்களுட் காண்க.

பண்பு உற – வீடுபெறும் பண்பு தன்மை உறும்படியாக – அத்தன்மை தம்மை உற்றதனாலே – என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம். இல்லம் அடைந்த பின் என்பது பாடமாயின் நண்ணிய தவசியார், ஓர் தயாரிப்புமில்லாது பசி தலைக்கொண்டு அதிகரிக்கப் பெற்றாராய் நாயனாரது இல்லத்தையடையவே அவர் பண்புற அவ்விருந்தை எதிர் கொண்டனர் என்றுரைத்துக் கொள்க. இப்பொருளில் தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது என்பன நற்றவத்தவர் நிலைகுறித்தது. இது பின்னர்த் தீரவே பசித்தார் (449) என்றதனோடும் பொருந்துமாறும் காண்க. இப்பொருள் சிறந்ததாகக் காண்கின்றது. ஆயினும் பெரும்பான்மை கொண்டுள்ள பாடத்துக் கேற்ப முன்னர் உரைக்கப் பெற்றது.

விருந்து – புதுமை; புதியராய் வந்தார்மே னின்றது. இங்கு முன் எந்நாளும் கண்டிராத புதுநிலைமை குறித்தது. “இம்மடத்திற் காணும் படியிலாத நீர்“ – (அமர்நீதி – புரா – 10) என்றது காண்க. முன்னெல்லாம் அடியாருடன் கலந்து வந்தனரேயன்றித் தனித்துத் தாமே எழுந்தருளியதில்லையாதலின் இது புதுமை என்பார் விருந்து என்றார். எதிர்கொண்டு வரவேற்றலை ஆவாகனம் என்பது வழக்கு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.