இலக்கியம்கவிதைகள்

சீக்கிரம் அருள்வாய் கந்தா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஆஸ்திரேலியா

கருவிலே கருணை வேண்டும்
கல்வியில் உயர்வு வேண்டும்
தெருவெலாம் அலையா வண்ணம்
தினமெனைக் காக்க வேண்டும்
ஒருமனம் கொண்டு உன்னை
உவப்புடன் வணங்க வேண்டும்
பெருமனம் கொண்டு என்னை
பேணுவாய் கந்த வேளே

கருணைகூர் முகங்கள் ஆறும்
காத்திட வேண்டும் ஐயா
வறுமையில் வாடி நாளும்
வதங்கிடா திருக்க வேண்டும்
தரமுடை மனத்தைப் பெற்று
தரணியில் வாழ வேண்டும்
சிரமதில் அகந்தை போக
சீக்கிரம் அருள்வாய் கந்தா

நரை திரை வந்திடாமல்
நலமுடன் வாழ வேண்டும்
நாளுமுன் நாமம் சொல்லி
நானுனைப் பாட வேண்டும்
குறையுடை வாழ்க்கை தன்னை
குமராநீ அகற்ற வேண்டும்
நெறியுடன்  நின்று வாழ
நீயெனக் கருள்வாய் ஐயா

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க