கதை வடிவில் பழமொழி நானூறு – 7
நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 15
சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே; – விரிபூ
விராஅம் புனலூர! வேண்(டு); ‘அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்‘.
பழமொழி – ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்’
நம்ம செல்வம் சார் எவ்வளவு மாறிட்டார் பாத்தியா. முன்னயெல்லாம் நாம ஸ்கூல் படிக்கும்போது எச்சில் கையால காக்கா ஓட்ட மாட்டாரு. போனவாரம் நான் ஷாப்பிங் மால் ல பாத்தப்போ ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாரு. அவர் கூட அவர் வளர்ப்புப் பையனையும் கூட்டிக்கிட்டு வந்திருந்தாரு. பையன் பாக்க நல்லா லட்சணமா இருக்கான். அவருக்கு ரொம்ப பெரிய மனசு. நான்தான் இவ்ளோநாள் புரிஞ்சுக்காம என்னென்னமோ பேசியிருக்கேன். அதுக்காக இப்போ வெக்கப்படறேன். என் திருச்சி நண்பன் வருத்தப்பட்டான்.
நீ பேசும்போது அவுங்க மனைவி கூட இருந்தாங்களா இது நான்.
சிறிது யோசித்த என் நண்பன் தொடர்ந்தான். தொடக்கத்துல கூடதான் நின்னுட்டிருந்தாங்க அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சம் தள்ளி நின்னு புடவைக் கடைய வேடிக்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா ஏன் கேக்கற.
அதானே பாத்தேன். நீ திருச்சியிலேந்து இப்பதான் வந்திருக்க. நானும் ஷண்முகமும் கோயம்புத்தூரிலயே தானே இருக்கோம். அடிக்கடி சந்திச்சிகிறது தான். ஆனா நேத்தைக்கு நான் பேசினப்போதான் அவன் செல்வம் சாரப் பத்தி சொன்னான். இப்ப நாலைந்து வருசமா அவன் அவர் வீட்டுப்பக்கத்துலதான் குடியிருக்கான் போல. அதனால அவரப் பத்தி கதையாச் சொன்னான். அவன் சொன்னதச் சொல்றேன் அப்ப உனக்குப் புரியும்.
செல்வம் சாருக்கு குழந்தை இல்லனு எனக்குத் தெரியும்டா. பல வருசமாவே அவர் நிறைய டாக்டர்கிட்டயும் போய்வரதக் கேள்விப்பட்டேன். அதுல ஒண்ணும் அவருக்குப் பெரிசா வருத்தம் இருந்தாமாதிரி தெரியல. தினமும் பக்கத்துல இருக்கற பார்க்குக்கு காலையில வாக்கிங் போகும்போது பேசிக்கிடறதுதான். பாக்கப் பாக்க அவங்க மனைவிதான் வேதனையில மெலிஞ்சிக்கிட்டே போனாங்க.
அவங்க வற்புறுத்தலாலதான் நெறைய டாக்டரப் பாத்திருக்காரு போல. அதுக்கு செலவழிஞ்சத நெனச்சிதான் அவர் அதிகமா வருத்தப்பட்டிருக்கார். அப்பறம் திடீர்னு ஒருநாள் ஒரு வளந்த பையன தத்து எடுத்துக்கிட்டதாச் சொன்னாரு.
பிறகுதான் தெரிஞ்சது அவரோட திட்டம். பேச்சுவாக்குல கல்லூரி முதலாமாண்டு படிக்கற பையன தத்து எடுத்து தொடர்ந்து படிக்கவைக்கறேன். அப்பதான் செலவு கம்மி ஆகும்பாரு. ஏன்னா பள்ளிக்கூடப்படிப்புக்குக் கட்டவேண்டிய பணம் மிச்சம். கொஞ்ச வருசத்துல அவன் உங்கள மாதிரி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பறம் கைப்பிடித்தம் வராது. மனைவிக்கும் ஒரு குழந்தை வந்ததிலே சந்தோசம். எல்லா வகையிலும் இது எனக்கு லாபம்தான்னு பெருமப்பட்டார் போல.
நான் நிறுத்தியவுடன் என் நண்பனுக்குத் தலையே சுற்றிவிட்டது போல. முன்நெற்றியை அழுத்திவிட்டுக்கொண்டே பெருமூச்சுடன்பேச ஆரம்பித்தான்.
நான்கூடஅவரப் பத்தி பெரிசா நெனச்சிட்டேன். சின்ன மீனைத் தூண்டில்ல கோத்துவிட்டு பெரிய மீனைப் பிடிக்கறமாதிரி இல்ல இருக்கு அவர் வேல. இதெல்லாம் ஒரு பொழப்பா. இவரப்போல மனுசங்களுக்குத்தான் ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்‘ அப்டிங்குற பழமொழியே இருக்குபோல.
அதச் சொல்லிக்குடுத்ததே அவர்தான். சரி அவர விடு. வேற ஏதாவது பேசலாம். தொடர்ந்தேன் நான்.
பாடல் 16
நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்; – நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
‘அயிலாலே போழ்ப அயில்‘.
பழமொழி – ‘அயிலாலே போழ்ப அயில்’.
என்ன கைலாசம் எப்ப ஊர்லேந்து வந்த கேட்டுக்கொண்டே அவனருகே நடந்த என்னை இடைமறித்து
ஆமா நம்ம ஊர்ல பல மாறுதல்கள் வந்துருக்கு போல. வருசம் கழிச்சு வந்ததால ஒண்ணும் சரியாப் புரியல. ஊரப்பத்தி தொலைக்காட்சி செய்தியில பாத்து தெரிஞ்சுக்கிடறதுதான். ஆரம்பித்தான் அவன். .
தொலைக்காட்சியில எல்லாம் நம்ம ஊரப்பத்தி சொல்றாங்களா. இந்தத் தேர்தல்ல சிவசாமி ஐயா செயிச்சது எவ்வளவு நல்லதாப் போச்சு. நம்ம ஊருக்காக அவர் எவ்வளவு நலத்திட்டங்கள உருவாக்கிட்டு வராரு பாத்தியா. மாணவர்கள்லேந்து வீட்ல இருக்குற குடும்பப் பெண்கள் வரை எல்லாருக்கும் அவங்கவங்க தேவைக்கு ஏத்தமாதிரி செஞ்சிட்டுவராரு.
மொதல்ல நம்ப ஊருக்கு மேல்நிலைப்பள்ளி கொண்டு வந்தது பெரியவிசயம். பசங்க எவ்வளவு தூரம் போய் படிச்சிட்டு இருந்தாங்க. அடுத்தது கல்லூரியும் வந்துரும். தென்னையிலிருந்து கிடைக்குற பொருட்கள உபயோகமான சாமன்களா மாத்தறதுக்காக பயிற்சியும் குடுக்கப் போறாங்களாம். அப்பறம் சின்னதா ஒரு தொழிற்சாலையும் வந்துடும். உன்னைய மாதிரி பூவிளைவிக்கிற விவசாயிகளுக்கு உள்ளூர்லயே சென்ட் தொழிற்சாலை வரப்போகுதாமே. கேள்விப்பட்டயா. நீ எங்க. சென்னைவாசி அரசாங்கச் சம்பளக்காரன். நிலம்தான் உன் பேர்ல இருக்கு. கஷ்டப்பட்டாதானே அது சரியாகும்போது சந்தோசமும்வரும். உனக்குத் தெரிய நியாயம் இல்ல. சரி வந்ததுலேந்து ஊர்க்கதையப்பத்தியே பேசறேன். அப்பறம்உங்க சென்னை எப்டி இருக்கு. பிள்ளைகள் எல்லாம் நல்லாப் படிக்கிறாங்களா? .
அட என்னப்பா நீ. நான் சொல்ல வந்ததே வேற. என்னமோ இந்த ஊர சிவசாமி ஐயா சொர்க்கபுரியா மாத்திட்ட மாதிரி இல்ல பேசிக்கிட்டிருக்க. அவர் கட்சியில கிட்சியில சேந்திட்டயா. நிறுத்தினான் கைலாசம்.
ஏன்னா வெளியில அவரப்பத்தி நல்லமாதிரி சொல்லலயே. நம்ம தெக்குத்தெரு சொக்கன் தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டிய போனவாரம் பாத்தேன். அதென்னமோ பதவி ஆசையில ஓட்டு சேகரிக்க அவர் மக்கள திசை திருப்பி விடறார்னுல சொன்னான். நீ சொன்னியே அந்த மேல்நிலைப்பள்ளியில காசு வாங்கிட்டு ஆசிரியர்கள வேலைக்கு அமர்த்தியதாவும், குடும்பப் பெண்கள மாதர் சங்கம்னு சொல்லி அப்பளம் இடற சாக்குல ஊர்வம்பப் பேசவச்சி ஊர் ஒற்றுமையக் குலைக்க முற்படறாராமே. இன்னும் என்னமோ நிறைய சொன்னார். அதப் பத்திதான் கேக்கவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அரசியல் மேடைப் பேச்சு மாதிரி முழ நீளத்துக்கு ஒரு பட்டியல் போட்டுட்ட அங்கலாய்த்தான் நண்பன்.
ஓ அப்டியாசேதி. நான் என்னமோ நீ நம்ம ஊரப்பத்தி நல்லவிதமா கேள்விப்பட்டதா நெனச்சு மூச்சுவிடாம பேசிட்டேன். எப்படியிருந்தாலும் அதுதான் உண்ம. சொக்கன் சந்தர்ப்பவாதி. இடத்துக்கேத்த மாதிரி பேசுவான். தான் காரியம் நடக்கணும்னா நா கூசமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான். நீ கேட்டியே அரசியல்ல சேரரதப்பத்தி. அவன்தான் எதிர்க்கட்சியில சேந்திருக்கான்.
அயிலாலே போழ்ப அயில் னு நீ கேட்டதில்லயா. இரும்பைப் பிளக்க இன்னொரு கூரிய இரும்பு தேவை. நல்லவரப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா அவரைவிட நல்லவங்ககிட்டதான் கேக்கணும். சொக்கன் மாதிரி கெட்டவன்கிட்ட கேட்டா இப்டித்தான் ஆகும். கெட்டவனுக்கு பாக்கற நல்லவங்களும் கெட்டவங்களாத் தான் தெரியுவாங்க. என் நண்பனுக்கு உணர்த்திய பெருமிதத்தில் நான் விடைபெற்றேன்.