அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 268

 1. படைப்புகளை எந்த மின்னஞ்சல் க்கு அனுப்ப வேண்டும்

 2. மடலில் அனுப்ப வேண்டாம். இதே பக்கத்தின் கீழ் உள்ள உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க என்ற பெட்டியில் உங்கள் கவிதைகளை மறுமொழியாக இட்டால் போதும்.

 3. படக்கவிதைப் போட்டி-268
  வளையல்

  வானவில் வண்ணங்களை
  தனித்தனியாக பிரித்தெடுத்து
  நிலா வட்டமாக்கி
  நட்சத்திரதுருவல்
  முக்கால் பாகம் சேர்த்து
  உலர்த்தி மெருகேற்றிய
  திருவிழா தேவதைகள்,
  நாகரீக லாந்தரின்
  மேற்பார்வையில்
  ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  எதெடுத்தாலும் இருபது
  கடையில்
  உத்திரம் ஆடும்
  இவர்களுக்கு தனி விலை.

  பெண்கள் கடக்கையில்
  போட்டிப் போட்டு
  சிணுங்குகிறார்கள்.

  தலைவிதியோ தலைக்கனமோ
  காற்றிடம் வீரம் பேசும்
  இவர்கள்
  திருடியின் கூடைக்குள்
  விழுந்தால் மட்டும்
  சத்தமிடுவதில்லை.

  -ரா.விஜயகுமாரி
  திசையன்விளை
  திருநெல்வேலி.

 4. வாழும் வழி…

  நகைகள் பற்பல வீட்டி லிருந்தும்
  நல்ல நாளிலும் போட்டுச் செல்ல
  வகையே யில்லை வெளியே போக
  வந்திட விருந்தை யழைக்க வழியிலை,
  பகையாய் வந்த நுண்ணிய கிருமி
  பறித்துச் சென்றதே சுதந்திர மெல்லாம்,
  அகத்தில் ஆசையைப் பூட்டி வைத்தே
  அடங்கி வாழக் கற்றுய் வோமே…!

  செண்பக ஜெகதீசன்…

 5. கைவளைகளின் கவலை

  கலை வண்ணக் கைவளைகள்
  கண்கவரக் கடை லிரிக்கும்
  காட்சி கண்ட கைவிரல்கள்
  கவிதை எழுதத் தூண்டியதே!

  மங்கையர்களின் கைகளிலாட
  மனங்கவரும் வடிவங்களில்
  தொங்கும் வண்ண வளையல்களே,
  உங்கள் முகங்கள் பொலிவிழந்து
  மங்கிய காரணம் நானறிவேன்.

  விண்ணில் செல்லும் ராக்கெட்டாய்
  மண்ணில் தங்கம் விலையேற்றம்
  நங்கையர் கண்டு மனம் மாறி
  உங்களை நாடி வருவார்களென்னும்
  நம்பிக்கை மனங்களில்
  இருந்தாலும்
  காட்டில் பரவும் தீயாக
  நாட்டில் பரவும் கொரோனாவால்
  வீட்டில் முடங்கிக் கிடப்பார்களோ,
  என்று தானே எண்ணுகின்றீர்?

  காலம் மாறும்
  காட்சிகள் மாறும்!
  கலங்காதிருங்கள்
  அதுவரை நாளும்!

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம்
  சேன்னை

 6. தங்க நிற வளையல் தொகுதி

  எண்ணிக்கையில் 11
  வெள்ளை நிற தொகுதி பார்த்து
  உங்களை விட ஒன்று அதிகம்
  நாங்கள் உயரத்தில்
  நீங்கள் எங்கள் கீழே

  ஜன்நாயகத்தில்
  எண்ணிக்கை வைத்தே ஆட்சி
  கொள்கை கோட்பாடுகளை வைத்தல்ல

  பத்து எண்ணிக்கையில் உள்ள வெள்ளைநிற தொகுதி வளையல்

  நீங்களும் விற்பனைக்கு
  நாங்களும் விற்பனைக்கு
  எங்களின் ஒருவன் விற்பனையாகி விட்டான்

  இங்கே இருப்பு
  குறைய குறைய சிறப்பு

  எந்த இட த்தில் இருக்கிறோம்
  என்ன நிலையில் இருக்கிறோம்
  என்று தெரியாமல் தான்
  உன்னைப் போல பல பேர்

  அரசியல் பேச ஆரம்பித்தாலே
  அடிப்படை உண்மை தெரியாதோ

 7. படக்கவிதைப் போட்டி 268

  கலகல சத்தம் கைகளின் வளையல்
  சலசல சத்தம் மனதில் அருவி

  பிறந்ததும் முதல் காப்பு அத்தையினுடையதே
  அடுத்து வம்சத்தோட அம்சக் காப்பு பாட்டியினுடையதே
  பருவமடைந்திட்டதும் மாமன் காப்பு
  மகவு சுமக்கையிலே கொண்டவன் காப்பு

  நாச்சியார் கையில் நாரணன் காப்பு
  ஆடித் திங்களில் அம்மன் காப்பு

  அரசியல்வாதி கயவர்கள் கையில்
  இரும்பால் காப்பு
  சட்டத்தின் தண்டனை அதுவே ஏற்பு

  காப்பு என்றாலே நம்மைக் காக்கும் காப்பு
  வேப்பிலை காப்பு வசம்பில் காப்பு மலரிலும் காப்பு அணிகலணிலும் காப்பு

  தங்கத்தில் காப்பு தாங்கொணா விலையே
  வெள்ளிக் காப்பும் அதனுடன் துணையே
  வண்ணக் கண்ணாடிக் காப்பே நிரந்தர மகிழ்ச்சி
  மனதிற்குத் தருமே தாங்கொணா நெகிழ்ச்சி

  சுதா மாதவன்

 8. வளைவி சொல்லும் சரிதம்

  கடைவீதி மாடத்திலே
  குலுங்கிச் சிரிக்கும் வளைவி
  சொல்லிடுமே வலையோசை
  சிறப்பதனின் சரிதம்

  கருவினிலே வளர்கையிலே
  தாயின் தியாகம் சொல்லும் – தூளி
  தொட்டிலிலே உறங்குகையில் – அவள்
  அண்மைக் காட்டிக் காக்கும்…

  கைக்குழவிக் கைகளிலே
  கருவளையாய்க் காக்கும்
  சின்னஞ்சிறு சிறுமிகளின்
  குறும்பில் துள்ளி நகைபுரியும்…

  பெண் பூவாய் மலர்கையில் – அவள்
  கைகளில் பூத்துக் குலுங்கும்
  கன்னிப் பெண்ணின் கரங்களிலே
  கணீரென்று ஒலிக்கும்…

  மணமேடை மங்கைக் கையில்
  மங்களமாய் முழங்கும்
  மணவாளன் தொடுகையிலே
  நாணம் கொண்டுச் சிணுங்கும்

  கட்டில் விளையாடலிலேக்
  கைகொட்டிச் சிரிக்கும்
  இடைஞ்சல் ஏதும் செய்திடாமல்
  உடைந்து உயிர் நீக்கும்

  புதுபிறப்பு எடுத்து மீண்டுமவர்
  பூங்கரங்கள் ஏறும்
  இல்வாழ்க்கை இன்னிசையின்
  இன்பமதைக் கூட்டும்

  உயிரற்றப் பொருளென்ற
  உதாசீனம் வேண்டாம்
  உணர்வுகளின் உரைகல்லாய்
  உலவி நிற்கும் வளைவி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *