படக்கவிதைப் போட்டி 267இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
கூரான இரும்பின்மீது ஜோராகக் காலை மடக்கி வைத்து வாழைப்பழம் உண்ணும் குரங்கினை ’க்ளோஸ்-அப்’பில் அழகாகப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 267க்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றி!
வாகாக உட்கார்ந்துகொண்டு வாழைப்பழத்தை வகையாக உண்ணும் இந்தக் கவி (கவி/கபி – குரங்கு) குறித்து நம் கவிகள் என்ன கருத்துக் கூறவிரும்புகின்றார்கள் என்பதை அறிந்துவருவோம்! புறப்படுங்கள்!
*****
”பாடுபட்டு விவசாயி வளர்த்த வாழையைக் கேடுகெட்ட குரங்கே நீ திருடி உண்ணலாமா?” என்று உரிமையோடு குரங்கைக் கண்டிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
மனித விளையாட்டு…
பாடு பட்டு விவசாயி
பயிராய் வளர்த்த வாழையிலே
கேடு கெட்டக் குரங்கேநீ
கெடுதல் செய்து விட்டாயே,
காடு சென்று தேடாமல்
களவு செய்து தின்றாலே
வாடுமே உழவன் குடும்பமதே
வேண்டாம் மனித விளையாட்டே…!
*****
”வானரங்களே! தருமம் செய்யாதவர்களிடம் பழங்களைத் தட்டிப்பறியுங்கள்; தருமம் செய்பவரை அன்போடு கட்டிப்பிடியுங்கள்!” என்று அழகாக ஆலோசனை சொல்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
எளிதில் கிடைக்கும் கனியென்பதால்
உங்களுக்கும் மிகவும் பிடிக்குமா ராமா?
அன்பால் கொடுத்தால் பெறுவீர்!
பறித்துப் பெறாதீர்!
இது மனிதர்க்கும் பொருந்தும்
ஏனெனில் உங்களிடமிருந்து பிறந்தவர்கள் நாங்கள்
இக்குணம் இருக்கத்தானே செய்யும்
நீங்கள் திருந்தி விடுவீர்கள்
நாங்கள் சற்றே கடினம்தான்!
ஆலயங்களில் மரங்களில் நீங்கள்
தர்மம் செய்யாதவரிடம் தட்டிப் பறியுங்கள்
தர்மம் செய்பவரைக் கட்டிப்பிடியுங்கள்
அனுமனின் ஆசியென நினைத்துக் கொள்வோம்
ஏனெனில் நீங்கள் ராமாயணத்தில் ஒரு நாயகனல்லவோ?
*****
”மானிடா! இயற்கை விவசாயம் நீ துறந்ததால் பாதிப்பைப் பழத்தின் சுவையில் காண்கிறேன்; உள்ளே போகமறுக்கும் பழத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன் ஓரத்தில்!” என்று மனிதர்க்கு நற்புத்தி கற்பிக்கும் குரங்கைக் காண்கிறோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.
குரங்கின் கேள்வி!
மானிடா இதென்ன வாழைப் பழமா?
இயற்கையில் பழுத்ததா
செயற்கையில் மாறியதா?
கனிவதற்குமுன் பொறுமை இல்லையோ?
முன்பெலாம் கனி கனியாக இருக்கும்
நிறம் கண்டு ஏமாறி விட்டேனடா
சுவையில்லை
வாய்க்குள் போக மறுக்கிறது
ஒதுக்கி வைத்து இருக்கிறேன் ஓரத்தில்
இயற்கை விவசாயம் நீ துறந்த தால்
பாதிப்பைச் சுவையில் காண்கிறேன்
எதை வைத்துப் பளபள மஞ்சள் நிறம்
காம்பு கூட மஞ்சள் நிறமா?
நீ உண்ணுவது பழமா விசமா?
பழ வகைகள் உற்பத்தியில் பாரதம்
உல அளவில் இரண்டாம் இடமாமே?!
தர அளவில் இருக்கணும் முதலிடம்
முன்பெலாம் பருவத்திற்குப்
பருவமே காணலாம் பழங்களை
இப்போதோ எல்லாப் பருவத்திலும்
இயற்கை உரத்தில் பழங்கள் ஆரோக்கியம்
செயற்கை முறையில் பழங்கள் துர்ப்பாக்கியம்
*****
”வாக்குரிமையை விற்று, பாடுபட்டுக் கிட்டிய கனியமுதை எறிந்துவிட்டுத் தோலை வைத்திருக்கும் கழுமீதமர்ந்த இக்குரங்குபோலவே நாமும் உழல்கின்றோம்” என்று இன்றைய மக்களாட்சியில் மக்களின் அவல நிலையைத் ’தோலுரித்து’க் காட்டியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
கழு மேலமர்ந்த குரங்கு
ஜாதிமத அபிமானத்தாலும்
கையூட்டுப் பணத்திற்கும்
மதுபோதை மோகத்திற்கும்
வெற்று விளம்பரத்திற்கும்
சிற்றின்பக் கவர்ச்சிக்கும்
கற்றகல்வி தனைமறந்து
பட்டறிவும் தானிழந்து
மக்களாட்சித் தந்துவைத்த
வாக்குரிமையை விற்றுவிட்டு
பாடுப்பட்டுக் கிட்டிய கனியமுதை
எட்டித் தூரம் எறிந்துவிட்டு
தோலைமட்டும் வைத்துக்கொண்டு
செய்வதறியாது திகைத்து நின்று
கூர்முனைக் கழுமரம்
மேலமர்ந்த குரங்கெனக்
கலங்கிநின்று உழலுகின்றோம்.
*****
குரங்கின் செய்கைக்குப் பொருத்தமாக அருமையான கற்பனைகளையும் அழகான உவமைகளையும் இணைத்துக் கவிதை விருந்து படைத்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…
பழப் பரிகாரம்!
பசிக்கு உணவாகப்
பழத்தினைத் தந்து
புசிக்கையில்
புகைப்படம் எடுத்த
புண்ணியவானை
விசித்திரமாகப் பார்ப்பதென்ன
வானரமே!?
ஐந்தறிவு உயிர்களைக்
கூண்டில் அடைத்து
வேடிக்கை பார்க்கும்
ஆறறிவு மனிதர்கள்,
மற்றவர் துயர் கண்டு
மனமிரங்கும் மனிதராய்
மாறிவிட்டதெப்படி என்று
மயங்குகின்றாயோ
மாருதியே!?
அன்று எங்களவர்
செய்த பாவம்
இன்று வீடென்னும்
கூண்டில்
அடைபட்டுக் கிடக்க
தொற்று நோய்
கொரோனாக்
கற்றுத் தந்த பாடம்!
பழத்தினைக்
கொடுத்துப்
பரிகாரம் செய்கின்றோம்!
பகைவர்கள்
பறித்துச் செல்லும் முன்
புசித்துப் பசியாறு!
”பசிக்குப் பழம் தந்து வானரம் அதனைப் புசிக்கும் வேளையில் படமெடுத்த புண்ணியவானின் தருமத்துக் காரணம், ஐந்தறிவுயிரின் பசியைப் போக்கினாலாவது ஆறறிவுயிர்கள் படும் கொரோனா துன்பத்துக்கு விடிவு கிடைக்காதா என்ற சுயநலமே” என்று மாந்த மனத்தைப் பாந்தமாகத் தம் கவிதையில் படம்பிடித்துக் காட்டியிருக்கும் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
தங்களின் வல்லமை கவிதை தளத்தில் இந்த கவிதையின் மூலம் மீண்டும் என்னைக் கவிஞானாக பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்,
கோ.சிவகுமார்.
மண்ணிவாக்கம்.
சென்னை 48