சேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
மாது கூறுவள் “மற்றொன்றுங் காண்கிலேன்;
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை;
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை;
தீது செய்வினை யேற்கென் செய?“ லென்று;
அதற்கு அம்மையார் விடை கூறுவாராய் “அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக் கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும் சென்று தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை;தீவினையேனுக்கு இனி யென்ன செயலுளது?“ என்று சொல்லிப் பின்னரும்.
விளக்கம்: மற்றொன்றுங் காண்கிலேன் – மற்று ஒன்றும் -என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் – என்பது, அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார். அவ்வொன்றினையன்றி மற்ற வழிகளாக எண்ணக்கூடியவற்றை எல்லாம் இப்பாட்டில் தனித்தனி கூறிக் கழித்து அவ்வொன்றினையே முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு காண்க.
ஏதிலார் – அயலார். வேறு ஏதும் தொடர்பு இல்லாதவர். இனி – இதுவரைத் தன்னை மாறி யிருக்க உள்ள கடன்கள் தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் கடன் வாங்க இயலாமை குறித்தவாறு.
போதும் வைகிற்று – வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை குறித்தது. போது – பொழுது. அகாலமாயினமை வேறிடம் போகக்கூடாமைக்குக் காரணமாம். இடம் வேறு – இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம்.
தீதுசெய் வினையேற்கு என் செயல்? – தாமும் தம் நாயகரும் மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க இயலாமையின், இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த தீவினையின் பயனாகவே கருதி மனைவியார் வருந்துகிறார்.
மேம்போக்காக இப்பாடலின் பொருள், ஓர் எளிய இல்லறத்தலைவி தம் நிலைமையைக் கூறுதலும், வருந்துதலும் எனஅமையும்! ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் நம்மை வியப்பின் எல்லைக்கே கூட்டிச் சென்று விடும்!
‘’பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்! – புவி
பேணி வளர்த்திடும் ஈசன் !’
என்பார் மகாகவி பாரதியார்! இந்த ஞானம் மிக்க பெண்ணின் பேச்சு அவர்தம் அறிவின் எல்லையை நமக்குக் காட்டுகிறது. இராமாயணத்தில் சீதையைக் கண்டு அவர் பேச்சிக்கு கேட்ட அனுமன் அடைந்த வியப்பை இங்கே நினைவு கூரவேண்டும்.
‘’வெங்கனல் வீக்கியும் புனலின் மூழ்கியும்
நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்குளர்? கற்பின் வந்து இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற்பாலதோ?
என்ற அனுமன் வாக்கிலே, கற்புடன் இல்லறம் நடத்தி அதனையே தவமாகச் செய்யும் சிறப்பு, பெண்களுடையது! என்கிறான். மேலும் கனலில் நின்றும், புனலில் நீராடியும், உண்பன, அருந்துவனவற்றை நீக்கியும் காட்டில் நோற்கின்ற ஆடவர் தவம், இச்சீதையின் மனத்தவத்தின் முன் எளிதே என்கிறான்!
கொங்கணவன் என்ற ஒரு முனிவன் தவம் செய்து கொண்டிருந்த போது. அவன் தலைமேல் ஒரு கொக்கு எச்சமிட்டு விட்டது. சற்றே சினத்துடன் அவன் மேலே பார்த்தான்; உடனே கொக்கு எரிந்து விழுந்து விட்டது! தம் தவத்தின் வலிமை இதுவோ? என்றெண்ணிய அவன் . ஒரு வீட்டில் வந்து ‘’பவதி பிட்சாந்தேகி!‘ என்று கேட்டான். உள்ளிருந்து, ‘’சற்றே பொறுங்கள். என்கணவனுக்குப் பணிவிடை செய்து விட்டு வந்து உணவிடுகிறேன்‘’ என்று ஓர் இல்லத்தரசி கூறினாள். சற்றே கோபமடைந்த முனிவன், அவள் வெளியே வந்தவுடன், அந்தக் கொக்கை நினைத்து, அப்பெண்ணை வெகுண்டு நோக்கினான்!. அந்த இல்லத்தரசியின் தவமோ இந்த முனிவனின் தவத்தை விட மேலானது. அவள் அமைதியாகக் ‘’கொக்கென்று நினைத்தாயோ , கொங்கணவா?’’ என்றாள். முனிவன் திடுக்கிட்டான். என்னை அந்தக் கொக்கு போல் எரித்து விடலாம் என்று நினைத்தாயோ? என்ற அப்பெண்ணின் மனத் தவம் எத்தகையது? என்று வியந்தானாம்!
இங்கே ஏதுமறியாத மாறனார் மனைவியார் கூறிய எளிய சொற்கள் சிறந்த ஞானத்துடன் நிகழ்ந்ததை நாம் காண்கிறோம்! மாது கூறுவள் – அந்த இல்லத்தரசி கூறுகிறாள். மற்று ஒன்றும் காண்கிலேன் – இங்கு வேறெந்த அருட்செயலையும் காண்கிலேன்! ஏதிலாரும் – வேறே எவரும் . இனித் தருவார் இலர் – நமக்கு நற்கதி அளிப்பார் இலர்; இவரே தருவார்! போதும் வைகிற்று – நமக்கு நற்பேறடையும் காலமும் வந்து விட்டது! போமிடம் வேறிலை – நாம் செல்லும் இடம் கைலாயமன்றி வேறில்லை! தீது செய் வினையேற்கு இனி என் செயல்? ‘’நமக்கு தீமைபுரியும் வினைகள் இனி இல்லை!‘’ என்கிறாள்! ஞானத்தின் திருவுருவாக விளங்கிய அம்மையாரின் அருளுரை நம்மை வியந்து போற்ற வைக்கிறது.
இவ்வாறு ஞானவழியில் விளங்கிய அம்மையாரின் சொல், எளிய இல்லத்தரசி, மனத்தவத்தால் பெற்ற பெரு ஞானத்தை நமக்குக் காட்டி அவர்களின் பெருமையை உயர்த்துகிறது. சேக்கிழார் பெருமானின் பாடல் நயம் இத்தகையது!