Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

    இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.

    படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.

    இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.

    படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

    மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?

    இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.

    தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?

    படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?

    படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

    எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.

    முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.

    Share
  • வைரமுத்து சறுக்கிவிட்டாரா?

    வைரமுத்து சறுக்கிவிட்டாரா?

    அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சுகுமாரி’ பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள். அப்போதுதான் கவனித்தேன். இந்த வரிகள் என்னை உறுத்தின.

    காதலை மறைத்தால்
    கனம் தாங்காமல்
    என்னுயிர் செத்துப்போகும் இல்லையா!

    காதலைச் சொல்லி
    இல்லையென்று மறுத்தால்
    காதலே செத்துப்போகும் இல்லையா!

    காதலின் வலியைச் சொல்லும் இடத்தில், ‘செத்துப்போகும்’ என்ற வார்த்தை வந்திருக்கக் கூடாது. இது கேட்கும்போது, அமங்கலமாய் இருக்கிறது. மேலும், அந்தக் காதல் உணர்வுக்குப் பொருந்தும் வகையிலும் இல்லை. காதலி ஏற்க மறுத்தால், காதல் எப்படிச் செத்துப் போகும்? அது காதலனிடம் அப்படியே தானே இருக்கும்? வைரமுத்து இங்கே சறுக்கிவிட்டாரா?

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை

    முன்னுரை

    கவிஞர்கள் வறுமைக்கு ஆட்பட்டிருந்தபோது கவிதைகள் செழுமையாய் இருந்தன. அவர்கள் கொஞ்சம் வசதியாய் வாழ்கிறபோது கவிதைகள் வாடிப்போயிருக்கின்றன. இது பெரும்பான்மை பற்றிய கருத்து. ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்பது பொருளற்ற தொடர் அன்று. மகாகவி பாரதியைத் தொடர்ந்து பாவேந்தர் தமிழ்க்கவிதையுலகைத் தன்னாட்சிக்கு உட்படுத்தினார். அவருக்குப் பிறகு பெருஞ்சித்திரனார், சுரதா, வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், கம்பதாசன், தமிழ்ஒளி ஆகியோர் தமிழ்க்கவிதையுலகைத் தம் கவிதைகளால் அலங்கரித்தனர். ஆட்சி செய்தனர். அவர்களுக்கும் பின்னாலே அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல்ரகுமான், மீரா, முருகுசுந்தரம், தமிழன்பன், மேத்தா, சிற்பி, பொன்னிவளவன், தணிகைச் செல்வன், தாராபாரதி வரை இது நீண்டது. கலைஞர் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக இருந்து கொண்டே தமிழ்க்கவிதையின் சாரங்களை அவ்வப்போது தாம் தலைமையேற்கும் கவியரங்கங்களுள் பிழிந்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்க் கவிதைகளுக்கு அஸ்தமன காலமாகியிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் என்றால் ஏழு கோடி கவிஞர்கள் இருக்கிறார்கள். எட்டு கோடி பட்டங்கள் இருக்கின்றன. ஏழரைக்கோடி விருதாளர்கள் இருக்கின்றன. கவிதைதான் ஒன்று கூடக் கண்டபாடில்லை. “இந்த நிலையை மாற்ற வேண்டும்.  மீண்டும் தமிழ்க்கவிதை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்” என்று எண்ணுபவர்கள் எண்ணிக்கையில் சிலர். அந்தச் சிலருள் நாகை பொன்மணிதாசனும் ஒருவர். இவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து முகநூலில் படித்து வருகிறேன். அவருடைய கவியாளுமையை ஒரு சில சான்றுகளால் இந்தக் கட்டுரை விளக்க முற்படுகிறது.

    கவிதைகள் அருகிப் போனது ஏன்?

    கவிஞர்கள் அருகிக் கவிதைகள் சிறக்குங்காலம் கவிதைக்கு வசந்த காலம். கவிஞர்கள் பெருகிக் கவிதைகள் அருகிப்போவது நசிந்த காலம். இலக்கணத்தைச் செய்யுள் வழியாகக் கற்ற காலம் ஒன்றிருந்தது, மக்கட்தொகை குறைந்த காலத்து, ஆழ்ந்த படிப்பும் தெளிவான சிந்தனையும் உடையவர்கள் கவிதைகளுக்கான சட்ட வரம்புகளைத் தகுந்த தகுதியான சான்றோர்களிடம் கற்றறிந்த காலம் அது. கவிதைகளுள் செழுமையும், அடர்த்தியும் அழகியலும் ஆழ்ந்த கருத்தும் பன்முக நுண்ணியமும் கலந்து கவிதை மிளிர்ந்ததற்கு அந்தச் சூழல்தான் காரணம். அந்தப் பழக்கம் சிறுகச் சிறுகக் குறைந்து பின்னாலே அதாவது தற்காலத்தில் யாப்பறிந்த சிலபேர் பொருள்நோக்கத்தோடு யாப்பிலக்கணத்தை முழுமையான பார்வையின்றி, விதிவிலக்குகள் பற்றி அறியாது, ஒழிபியலை நோக்காது தங்களுக்குத் தோன்றியவாறே இலக்கணம் என்ற பெயரில் எதையெதையோ கற்பித்து வருகின்றனர். இதனைவிடக் கொடுமை என்றால் யாப்பிலக்கணந்தான் கவிதை அதாவது ஒரு கருத்து யாப்பில் வந்து அமைந்து விடுமானால் அது கவிதையாகிவிடும் என்ற தவறான புரிதல் காழ்கொண்டு விட்டதாகும். யாப்பு ஒரு கருவி என்னும் நிலைப்பாட்டிலிருந்து விலகி அதுதான் மூலப்பொருள் என்ற நிலைக்குச் சென்று விட்டது, படிக்கின்ற பழக்கம் குறைந்து போனது. மலிந்து போன உணர்ச்சிகளைப் பாடுபொருளாக்குவது. தலைவர்களைப் பாடுவதையே பிறவிப்பயன் என எண்ணிவிடுவது இப்படிப் பல காரணங்களால் கவிதைகள் சவலைகளாகிவிட்டன.  இயற்கை அசைவுகளுக்கும கவிதைகளுக்கும் இருக்கும் இசைவை உணர்ந்து அனுபவித்தவர்கள் எண்ணிக்கையில மிகவும் குறைவு என்பதும் ஒரு முக்கியமான காரணம்.  ‘அழகின் சிரிப்பு’ போல ஒரு பாவியத்தை இனித் தமிழில் காணமுடியுமா என்பது விடைகாண முடியாத வினாவாக நிற்கிறது. சிறந்த தத்துவஞானியாக இல்லாதவன் கவிஞனாக முடியாது என்னும் கோட்பாட்டைப் புறக்கணித்ததும், தத்துவப் பார்வையே இல்லாமல் போனதும் கவிதைகள் அருகிப் போனதற்கு இன்றியமையாக் காரணிகள் ஆகும். பட்டினத்தாரையோ, பாரதியையோ பாரதிதாசனையோ, கண்ணதாசனையோ தமிழ்க்கவிதை உலகம் எதிர்காலத்தில் காணும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எல்லாவற்றையும் விட தலைமைக் காரணம் ஒன்றுண்டு. அது தற்புகழ்ச்சி!. தஙகளைத் தாங்களே புகழ்ந்து கொள்வதும் அல்லது தங்களைப் புகழ்வதற்காகவே முகநூலில் ஒரு குழுமத்தை உருவாக்கிக் கொள்வதும் வெகுசாதாரணம். இவரை அவர் பாராட்டுவதும் அவரை இவர் பாராட்டுவதுமாகப் போய்விடுவதால் கவிதையின் கசடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தூர்வாராக் கேணிகள் சுரப்பது எப்படி;?

    முகநூலில் பொன்மணிதாசன்

    பொழுதின் பொன்னான நேரங்களைக் கவிதையில் கழிக்கிறார், கவிதைக்காகவே கழிக்கிறார் பொன்மணிதாசன். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள் பல இருப்பினும் நாளும் முகநூலில் அவர் கவிதைகள் வெளிவருவது தடைபடுவதில்லை. தனக்குத் தெரிந்ததைத் தெரிந்து என்று ஒத்துக் கொள்வதைவிடத் தனக்குத் தெரியாததைத் தெரியாது என ஒத்துக் கொள்வதில் அவரிடம் ஒரு பக்குவத்தைக் காணமுடிகிறது.  மரபுவழியான சந்தங்களையும் புதிய சந்தங்களையும் தமது கவிதையாக்கத்தில் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி வருபவர். யார் தம்முடைய படைப்பினை எப்படித் திறனாய்வு செய்தாலும் மெய்ப்பொருள் காணுகிற தெளிவு இவருக்கே உரிமை. எழுபது வயது நிரம்பிய இந்த இளைஞரின படைப்புக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கும் வல்லமை கொண்டவை.

    வித்தியாசமான தமிழ்த்தாய் வணக்கம்

    தமிழ்க்கவிஞர்கள் பொதுவாகப் பாடுவது தமிழ்த்தாய் வணக்கம்! தமிழைக் கன்னித் தமிழ் ;என்றாலும் அவளைத் தாயாக எண்ணிப் போற்றுவதே தமிழ்க்கவிதை மரபு.

    “பொன்னும் ;பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயே! — கேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    என்பது கவிக்கோ துரை வசந்தராசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். தாயும் காதலியும் பெண்ணாக இருந்தாலும் தாயன்பிற்கு முன்னால் அவள் பாசத்திற்கு முன்னால் அவள்மீது கொணட பக்திக்கு முன்னால், அவள் தன்மீது வைத்திருக்கும் நேசத்திற்கு முன்னால் கன்னிப் பெண் கடைக்கண் பார்வை எடுபடுவதில்லை என்பதை அழகியல் மீது{ரப் பாடியிருக்கிறார் துரை.வசந்தராசன். அந்த மரபைப் பின்பற்றி,  மரபு வழிச் சிநதனையாளரான பொன்மணிதாசன

    “ஆசையில் மிதக்குமென் அழகான உள்ளத்தை
    நேசிக்கும் நெஞ்சம் கொண்டாள்
    ஓசைக்கும் நயத்துக்கும் ஓருங்கிய உள்ளத்தில்
    உறையத்தான் ஆசை கொண்டாள்”

    தமிழைப்பாடும் பேரவா கொண்ட தன்னுடைய அழகான கள்ளம் கபடமற்ற உள்ளத்தைத் தமிழ்த்தாய் நேசிப்பதாகவும் சந்த நயமும் பொருள் நயமும் நிறைந்த தம் பாடல்களில் தமிழ்த்தாய் விரும்பி வந்து உறைகிறாள் என்று பாடுகிறார். தமிழைத் தேடிப் பாடிவரும் உலகில், தமிழை முன்னிலைப்படுத்திப் பாடிவரும் உலகில், கவிஞனைத் தேடித் தமிழ்த்தாய் வருகிறாள் என்பது கொஞ்சம் வேறுபட்ட சிந்தனை. “தசைநாறு என்புக்கும் தானமாய் தன்னையே தமிழாளும் தந்து நின்றாள்” என்னும் அடியில் தன் எலும்பிலும் சதையிலும் தமிழே கரைந்து நிற்கிறது என்பதை உணர்ச்சி மேலிடப் பாடுவதைக் காணமுடிகிறது.

    காலந்தோறும் வேண்டும் கவிஞர்கள் 

    பரந்துபட்ட உள்ளம் கொண்ட கவிஞன் இயற்கையை நேசிப்பதிலும் மானுடத்தை மதிப்பதிலும் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். அப்படி வேறுபட்டால்தான் அவன் கவிஞன். அவன் கவிதையில் அவன் உள்ளம் எதிரொளிக்க வேண்டும்.  தனக்கான வேண்டுதலை ஒழித்துச் சமுதாயத்திற்காக வேண்டிக்;கொள்ளும் பரிணாமம் அவனுக்குப் படிப்படியாகக் கிட்டுகிறது, சமுதாயத்தின் கரிசுகளைத் தன்னுடைய பாவங்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு வந்துவிடுகிறது, குழந்தைக்கு எது தேவை என்பதறிந்து ஊட்டும் தாயைப் போலத் தான் வாழும் சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து கொடுப்பவனே கவிஞனாவான்.  கணவனால் வணங்கப்பட்ட காரைக்காலம்மையார் இறைவனிடம்

    “இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டுகின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும்!”

    என வேண்டுகிறார். இதனைத் தொடர்ந்து வந்து சமரச சுத்த சன்மார்க்கம் கண்ட வளளற் பெருமான்

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும் !
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!”

    என மானுடம் மனமாசினின்று விடுதலையடைய வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கூறுவதைக் காணமுடிகிறது. பல்லாயிரம் கவிதைகளை எழுதிக் குவித்த மகாகவி பாரதி தனக்கு என்ன வேண்டும் என்பதையும் கேட்கிறான். உலகியல் வாழ்க்கைக்கான

    “மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்!
    நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
    கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி  வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
    மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.”

    மனிதன் கவிஞனாக முடியாமல் இருக்கலாம். ஆனால் கவிஞன் மனிதனாக இருந்தே ஆக வேண்டும். மனிதனாகவே ஆக முடியாதவன் கவிஞனாகவே முடியாது. மகாகவியின் கூரிய தீஞ்சொற்கள் ஒவ்வொரு தனிமனிதனின் சமுதாயக் கடமையைப்; பட்டியலிடுவதாகவே கருத வேண்டும்.

    இந்த நெடிய மரபில் வந்த பாவேந்தர்  அவர் காலத்திய சமுதாய நிலை நோக்கி மனம் வருந்திப் பாடுகிறார்.

    “வீழ்ச்சியுறு தமழகத்தில் எழுச்சி வேண்டும்
    விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
    சூழ்ச்சிதனைப் பொறாமைதன்னை வஞ்சகத்தைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
    காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
    கடல்போலச செந்தமிழைப் பெருக்க வேண்டும்

    எனத் தன் உள்ளத்து வேணவாவைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். மேலே சுட்டப்பட்ட கவிஞர்கள் மாறுபட்ட சமுதாயச் சூழல்கள நிலவிய காலங்களைச சார்நதவர்கள். அவர்கள் படைப்பின் நோக்கமும் மாறுபட்டது. இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மானுடம் பாடுவதில் ஒன்றுபட்டு நிற்பதைக் காணமுடிகிறது. இந்த இழைதான் மரபு. இதுதான் மரபியல் சிந்தனை.

    “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் — இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
    வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை – நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”

    தன்னை மனிதனாகவும் கவிஞனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் மானுடப் பரப்பின் நலம் நோக்கியதே கவிஞனின் பார்வையாக அமைந்திருக்கிறது . அமைய வேண்டும்.  அந்த வழியில் பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உள்ளறை அழுக்கது உறையாது நீக்கிட
    உணர்வினில் தூய்மை வேண்டும்

    கல்லுறை வல்லமை கலவாது இருந்திட
    கனிவுறும் மனமும் வேண்டும்

    முள்ளது தைக்காது மொழிந்திட சொற்களை
    முனைப்போடு தேட வேண்டும்

    வெள்ளமாம் இன்பம் விழல் நீருமாகாமல்
    வினையது ஆற்ற வேண்டும்!

    நல்லதோர் தோழமை நாடியே நாமதன்
    நலமாக நடத்தல் வேண்டும்

    பல்லதும் தெரிந்திடின் பலரதும் போற்றவே
    பணிந்தது கொள்ள வேண்டும்

    உள்ளமா கோவிலில் உறையவே தெய்வமும்
    உத்தமத் தெளிவு வேண்டும்

    நல்லறம் தழைத்திட நமதறம் செழித்திட
    நமக்கென பொறுப்பு வேண்டும்!

    வாழுதற் கரியஓர் வாழ்வினை பெற்றநாம்
    வாழ்வதை வாழ்த்த வேண்டும்

    ஊழ்வினை பயனதை உணர்ந்தது வரமென
    உளமார ஏற்றல் வேண்டும்

    தாயுமானவரின் பராபரக் கண்ணிபோல் அமைந்த இந்த அடிகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்பு நலன்களைத் தன்னுடைய வேண்டுதலாகக் கூறும் ஒரு மானுடக் கவிஞனைக் காணமுடிகிறது. இன்றையச் சமுதாயச் சூழலில் எந்த மனநிலையில் கவிஞன் இருந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  உணர்வினில் தூய்மை, அறிவினில் தெளிவு, பழக்கத்தில் பணிவு, நல்ல நட்பு, வினைத்தூய்மை, பொறுப்புணர்வு என்பனவற்றையெல்லாம் வற்புறுத்திய கவிஞன்  இந்த வாழ்க்கையை வாழத்த வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறியிருப்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இந்த வாழ்க்கை மிகவும் இனியது என்பது மகாகவியின் பார்வை.  பாரதிக்கு முன்பே அப்பர் பெருமான் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறார்.  “மானுடம் வென்றதம்மா” என்பது கவச்சக்கரவர்த்தியின் வியப்பு! தமிழின் நீண்ட நெடிய கவிதை மரபில் மானுடத்தைப் போற்றுவதும் அதன் பெருமை பேசுவதும் அதனை வாழ்த்துவதும் அதனை வலியுறுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து வருவதைக் காணவேண்டும். தமிழிலக்கியத்தின் சாரம் மானுடம் பாடுவதே! பொன்மணிதாசன் அதனைத்தான் செய்திருக்கிறார்.

    பொன்மணிதாசனின் தத்துவப் பார்வை

    தத்துவஞானி கவிஞனாயிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் கவிஞன் உறுதியாகத் தத்துவஞானியாகத்தான் இருக்க வேண்டும். தத்துவஞானியாய் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. “No man was ever yet a great poet without being at the same time a profound philosopher” – Coleridge)

    குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
    குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
    தட்டுகெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்;தம்

    என்னும் வரிகளை ஒரு இருபத்தேழு வயதுடைய இளைஞன் எழுதியிருப்பான் என்பதை எத்தனைப் பேர் நம்புவார்கள்? பிறவியிலேயே கவித்துவமும் தத்துவப்பார்வையும் இணைநதவன் எழுதிய வரிகள் இவை.

    “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா! என்
    இதயத்தோலை உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா!”

    என்று ஒரு சாதாரண திரையிசைப்பாடலிலேயே மாபெரும் தத்துவத்தைப் பதிவு செய்யும் ஆற்றல் கண்ணதாசனுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.  “தொட்டபின் பாம்பு என்றும்  சுட்டபின்நெருப்பு என்றும் பட்டபின் தேறலே” கண்ணதாசனின் பழக்கமென்றானதால் வந்த முதிர்ச்சி அவனை ஒரு தத்துவ ஞானியாக்கியது.

    “எத்தனை பேருக்கு இரவு விடியும்
    இதற்கு விடையேது?
    அத்தனை பேருக்கும் அமைந்த இரவும்
    அதனை அறியாது!”

    எனத் தத்துவம் பேசுகிறார் பொன்மணிதாசன்! விடியலை நோக்கியதுதான் இரவின் பயணம்! ஆனால் வாழ்வியலில் எத்தனைப் பேருக்கு எப்போது விடியும் என்பதே தெரியவில்லை. அது மட்டுமன்று அந்த விடியல் எப்போது வருமென்று பயணிக்கிற இருட்டுக்கே தெரியவில்லை.

    “இறப்பு பிறப்பு இதனதன் மறைப்பு
    இயல்பின் பெருங்கூற்று
    சிறப்பு என்பது இறப்பின் பின்னே
    பிறக்குமொரு ஊற்று!
    மறக்கும் நிலையே மனித குலத்துக்கு
    மருந்தெனில் பொய்யில்லை
    மறக்கா நிலையில் மனிதன் வாழ்வெனில்
    மனிதம் மெய்யில்லை!”

    கடந்த காலத்தை மறந்து எதிர்கால இலட்சிங்களோடு பயணிப்பதுதான் மானுடத் தத்துவம். அந்த மறதி இல்லாவிடின் வாழ்க்கை தடுமாறும். கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருந்தால் நிகழ்காலமும் குழம்பும். எதிர்காலமும் விளங்காது.  நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை இந்த அடிகள் காட்டுகின்றன. படித்துத் தத்துவம் பேசுவது வேறு. பட்டறிந்து தத்துவம் பேசுவது வேறு. பொன்மணிதாசன் பட்டறிந்து தத்துவம் பேசுகிறார். மானுடத்தின் மீது கொண்ட தான் கொண்டிருக்கும் மாறாக் காதலால் தத்துவம் பேசுகிறார். தத்துவம் பேசுகிற கவிஞனைத் தத்துவக் கவிஞன் என்று அழைப்பதே பொருத்தமற்றது. கவிஞனே தத்துவஞானிதான்.

    சாதிப்பிணக்குகளும் தமிழ்க்கவிஞன் தத்துவமும்

    இனக் குழுக்களே சாதிகளாகப் பிரிந்தன என்பதுதான் ஆய்வாளர் முடிவு. தெளிவாகச் சொன்னால் சமயத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லை. இருந்திருக்குமானால் தொடர்பற்ற பல சாதி மக்கள் எப்படி ஒரே சமயத்தைப் பின்பற்ற முடியும்? சாதிக் கரணைகளைச் சமயச் சங்கிலி பிணைத்திருப்பதன் பின்னனி என்ன? சாதிக்குப் பின்னால்தான் சமயம் ஒளிந்து கொள்கிறது. அகச்சமயங்களில் நிலவிய இந்தக் கொடுமை புறச்சமயங்களிலும் இன்று ஊடுருவியிருப்பதும் பொருளதார மற்றும் வேலை வாய்ப்புக்காகச் சாதிகளையே மாற்றிக் கொள்வதும் மதங்களையே மாற்றிக் கொள்வதும் நேர்மை என்னும் உயரிய பண்பின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். “சாதிகள் இல்லையடி” என்னும் பாரதியின் வாக்கில் ‘இல்லை’ என்னும் சொல் வெகு ஆழமானது, உள்பொருள்களான மனிதநேயத்தைப் புறந்தள்ளி, இல்பொருளான அதாவது அருவப்பொருளான சாதியை முன்னெடுப்பது ஒரு வளர்நிலைச் சமுதாயத்தின் பின்னடைவுக்குக் காரணமாகும் என்பதுதான் பாரதியின் சாரம்

    ஓரிடம் பிறந்து ஓடும் ஒப்பற்ற நதிகளெல்லாம்
    வேறிடம் சென்றபோதும் சேர்வது ஓரிடந்தான்!
    ஆறுடன் சென்ற நீரும் அதனிலே பிரிந்த நீரும்
    மாறியே நடந்தால் கூடமறவாமல் கடலைக் கூடும்!

    என எல்லாரும் அறிந்த இனிய எளிய உவமத்தால் சாதி வேறுபாடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். சாதி ஒரு வகையான தற்காலிக அமைதியைத் தரலாம். உலகின் எதிர்காலம் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதால் சாதி என்னும் அருவப்பொருள் நடப்பியல் வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்துவிட முடியாது. பாவ புண்ணியம் என்பன மறுமைக்கு உரியது. மகாகவி பாரதி குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றதன் மூலம் அதனை மறுமைக்குரிய பாவமாகவே கருதுகிறான் ஒரு மரபுவழிச் சிந்தனையாளரான பொன்மணிதாசன் அதனை வழிமொழிகிறார் எனலாம்.

    மரணம் மட்டுமே உண்மை!  

    இந்த உலகில் யாராலும மறுக்க முடியாத நடப்பியல் என்பது மரணந்தான். மரணத்தை வென்றவர் எப்படி இல்லையோ அப்படியே மரணத்தைத் தடுத்தவரும் இல்லை. “மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்நதிடலாம் கண்டீர்” எனக் கூறிச்சென்ற வள்ளற் பெருமானும் இளம் வயதிலேயே மறைந்தார் என்பதுதான் வரலாறு. மரணத்தை நிஜமாக்கியதற்குப் பின்னால் புரியாத பல உண்மைகள் உண்டு. ஆனால் அது நிஜமெனத்  தெரிந்தும் மனிதனின் ஆணவம் குறைந்தபாடில்லை. தான் என்னும் அகப்பற்றும் தனது என்னும் புறப்பற்றுமே மானுடச் சிதைவுக்கான காரணங்கள். இந்த இரண்டு காரணங்களையும் அகற்றுவதற்கான ஒரே வழி மரணம் பற்றிய  உண்மையை உணர்வதுதான். காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே எனச் சித்தர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். நந்த வனத்தில் ஓராண்டி அவன நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்று அவர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். பத்ரகிரியார், பட்டினத்தார் போன்ற பெருமக்கள் உலகியலைத் துறந்து போனதற்கும் அவர்கள் மரணம் பற்றிய தெளிவைப் பெற்றிருந்தனர். “இருப்பது போய் போவது மெய்”

    “அஞ்சினால் விலகிப்போமோ?  அகற்றவும் செய்யவாமோ?
    நெஞ்சிலே பாரம்கூடும் நினைவிலே மரணம்நின்றால்
    கெஞ்சினால் தரவாக் கூடும்?  கேட்டுயிர் நிலைப்பதற்கு
    விஞ்ஞானம்கூடத் தோற்கும் விந்தையே மரணமென்பேன்!

    மரணமே இல்லாவாழ்வு மண்ணுயிர்க்கேது உண்டு
    பிறப்பது உள்ளமட்டும் இறப்பது இருந்தேதீரும்
    வரவது அறியாவண்ணம் வாழ்க்கையில் சிறப்பே என்றால்
    இறப்பது ஒன்றேயன்று இல்லையே சொல்லுதற்கு!

    நடப்பதை நடத்தத்தானே நாயகன் உள்ளானிங்கு!
    நடைபேறும் நாடகத்தில் நாளுமே முடிவும் உண்டு!
    கிடைத்தது அரியதென்று கிடைத்ததை மகிழ்ச்சியாக்கு
    உடைகின்ற நாளும் வந்தால் பானையும் உடைந்திடாதா?

    நேற்று இருந்தது இன்றைக்கு இல்லை என்பது நிலையாமை அன்று. முற்கணம் பிறந்தது இக்கணம் இல்லாது ஒழிவதுதான் நிலையாமை. இந்த வாழ்க்கையை நீர்க்குமிழி என்றதற்கும் அதுதான் காரணம். ‘இருப்பது போய் போவது மெய்’ என்பார்கள் சித்த்ர்கள். ‘நான்கு விலங்குகளில் நாட்டியமாடுகிறோம்’ எனபார் கண்ணதாசன்! பிறப்பு இறப்பை நோக்கியது என்பது உண்மை இந்த உண்மை தெரிந்த பின்னும் மானுடப் பண்புகள் ஏதுமின்றி, மானுடம் சிறக்க வேண்டிய நோக்கங்கள் இன்றி ‘வெந்தது தின்று விதிவந்தால் மரணம்’ என்பது பொருளுடையது அன்று.  பிறந்த நாள்கள் என்பன கழித்தல். பலபேர் அதனைக் கூட்டல் என்று கருதி மயங்குகிறார்கள். பிறந்த நாள் தெரிந்தவர்களுக்கு இறக்கப்போகும் நாள் தெரியாமல் போனதுதான் இறைவனின் சூத்திரம். அல்லது இயற்கையின் மந்தணம். நீண்ட நெடிய தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கச்சாரமே நிலையாமைதான். பொன்மணிதாசனும் தன் கவிதையில் அந்தச் சாரத்தைப பிழிந்திருக்கிறார

    வாழ்வியல் சூழல்

    மனிதன் ஒரு சமுதாய விலங்கு. இச்சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அது நேர்முகமாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவனைப் பாதிக்கிறது, படித்த அறிவாலும் பட்டறிவாலும் பக்குவப்பட்ட எவனுக்கும் தானே தனித்துச் செயல்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான நம்பிக்கையான ஒரு வாழ்வியல் சூழல் இங்கே நிலவவில்லை. எதிர்மறைப் பண்புகளை அறிமுகம் செய்து கொள்வதும். அதற்கு நியாயம் கற்பிப்பதும் பின்னால் அதனையே வழக்கமாக்கிக் கொள்ளுவதும் இங்கே வாழ்வியல் நெறி ஆகிப்போனது. பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உண்ண உணவு உடுத்த உடை
    இன்னும் கிடைக்கல
    எண்ணப்படி இன்னு மிங்கே
    எதுவும் நடக்கல
    கன்னம் சாத்தும் கால மிங்கு
    இன்னும் மறையல
    கண்ணு முன்னே கற்ப ழிப்பு
    ஒண்ணும் தொலையல!”

    “ஆட்கள் வளர்ந்த அளவுக் கின்னும்
    அறிவு வளரல
    ஆளுக்காளு அமுக்க நினைக்கும்
    ஆசை மறையல
    சொல்லும் செயலும் வேறு வேறு
    சொல்ல முடியல
    சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல
    ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    மக்களோடு மக்களாகப் பழகி, பாமரத் தமிழறிவு இருந்தாலே உணர்ச்சியுள்ள எவனும் கவிஞனாகலாம் என்பதை  நிருபித்திருக்கிறார் பொன்மணிதாசன்.!

    “நீ அமுதசுரபியைத்தான்
    கொடுத்துவிட்டுச் சென்றாய்!
    எங்கள் கையில் இருப்பதோ
    பிச்சைப் பாத்திரம்”

    என்பார் மேத்தா. அது புதுக்கவிதை என்பார்கள்.

    “சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    என்று இன்னும் ஆழமாகச் செதுக்கியிருக்கும் இந்தக் கவிதை மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல!

    நாடு விடுதலையடைந்ததிலிருந்து அண்ணல் காந்தி அவர்கள் படமும் இந்த நாடும் மட்டுந்தான் சட்டத்திற்குள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கானது என்றால் இன்னும் சட்டம் ஏன்? எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் சட்டம், நாளையும் சட்டம் என்றால் வாழ்வியலில் அமைதி நிலவுவது எப்போது என்னும் விடைகாண முடியாத வினாவிற்குப் பதில் சொல்லப்போவது யார்? எப்படி ஆள்வது என்று ஆள்வோருக்குத் தெரியவில்லை! எப்படி வாழப்போகிறோம் என்பது மக்களுக்குத் தெரியவில்லை!.

    “ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    நடப்பியல் அரசியலை இதனைவிடத் தெளிவாக்கிவிட முடியுமா? அதுவும் கவிதையில்! ஆள்வதற்காகக் கட்சி தொடங்கியவர்களுக்கு ஆளத் தெரியவில்லையாம்!. தெரிந்து அதிகாரத்திற்கு வந்து விட்டவர்களுக்கு அந்த அதிகாரப் போதையிலிருந்து விடுபட முடியவில்லையாம்! யோக்கியனாகத்தான் ஒருவன் வாழ எண்ணுகிறான். சூழல் எதிர்மறையாகிப போனது. பத்தினியாகத்தான் வாழ நினைக்கிறாள். சூழல் எதிர்மறையாகிப் போனது. பொதுப்பணி செய்யத்தான் விரும்பி வருகிறான். வந்தபின் அறிந்து கொள்கிறான் சூழல் தனக்கு எதிராக இருப்பதை.

    காலத்தால் அழியாத காதல்

    கவிதையின் பாடுபொருளை அகம் புறம் எனச செம்பாதியாகத் தமிழ்ச் சான்றோர்கள் பிரித்திருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு இலக்கியங்கள் அகம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. அல்லது அது சார்ந்த பாடல்களே கிட்டியிருக்கின்றன. காதல் மிகவும் மென்மையான பாடுபொருள். பிரிவு துன்பம் தரும். ஆனால் அதுபற்றிய கவிதை இன்பம் தரும். மலரினும மெல்லிது காமம் என்பார் வள்ளுவர்.  இங்கே காமம் என்பது பருப்பொருளால் நுகர்கின்ற காம இன்பத்தினையும் உணர்வுகளால் நினைக்கப்படும் காதல் நினைவுகளையும் குறிக்கும். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் பறறித் திருக்குறள் பேசுவதால் அது பருப்பொருளால் நுகரப்படும் இன்பம். ‘நெஞ்சத்து காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து எனத் தலைவி தயங்குவதால் அது ஓர் தனித்த உணர்வு. இரண்டையும் ஒரு சேரக் கலந்து கவிதை படைப்பாரும் உண்டு ஒரு பாடல் கண்டேன்!

    “எங்கே உனைக் கூடடிச் செல்ல?
    சொல்வாய்! என்றன் காதில் மெல்ல!”

    “என் பெண்மையும இளைப்பாறவே
    உன் மார்பில் இடம் போதுமே!”

    உன்னை எங்கே கூட்டிச் சொல்ல வேண்டும் சொல் என்று தலைவன் கேட்கிறான். எங்கேயும் வேண்டாம். என் பெண்மை இளைப்பாற மார்பு போதும் என்று தலைவி விடைதருகிறாள்.  ஆபாசமில்லாமல் காதலைப் பாடுவது சங்கச் சான்றோர்களுக்கு கைவரப் பெற்றதாக இருந்தது. அதற்குப் பின்னால் அந்த நிலை இன்று வரை கைகூடுவதற்கு அருமையாக இருக்கிறது.  ஈர்ப்பு, மோகம், காதல், பக்தி, வழிபாடு, பித்து, மரணம் என்னும் உணர்ச்சிகளின் பரிணாமம்தான் காதல். உண்மைக்காதல்  இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிகிறது. இத்தகைய பாடல்களைச் சிந்தித்து எழுதுவதற்குப் பொன்மணிதாசன் முயல்கிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது, கொஞ்சம் சிரமமான வேலைதான். ஏனைய பாடுபொருள்களைக் கவிஞன் பாதிக்கிறான். ஆனால் காதல் என்னும் உணர்வுதான் கவிஞனைப் பாதிக்கிறது. அனுபவம்தான் கவிதை என்பது காதலுக்குப் பொருந்துவதைப் போல மற்ற பாடுபொருளுக்கு அவ்வளவாகப் பொருந்துவதில்லை. தொடர்பில்லாத உணர்வுகளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தலைவனாகவும் தலைவியாகவும் தன்னை எண்ணிக் கொண்டு காதல் பாடல்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றன்று.

    “நின்னை நினைக்கும் நினைவை விதைத்தாய்
    நிறைய விளைச்சல் ஏக்கம
    நின்னால் நித்தம் நீங்கிப் போனது
    நிலவில் தானடி தூக்கம்!
    கண்களில் நிறைய கனவுகள் வந்தன!
    கனலாயத் தானே மூசசும்!
    கன்னா பின்னா காதல் மொழிகள்
    கணக்கில் அடங்காப் பேச்சும்!
    தப்பும் தவறும் கூடிப் போச்சு
    தவிப்பில் இப்ப நானும்!
    தப்பித் தவறி உண்ணுகிறேன் என்
    தழைத்த உடலைக் காணோம்!
    எப்போதிருந்து இப்படி என்றே
    என்னை  மருத்துவர் கேட்டார்!
    எப்படிச் சொல்வேன நீதான் என்று
    இடிப்பார் எங்கள் வீடடார்!
    …………………………………………………………………………………………
    இலலையெனக்கு வாழ்வே இலலை
    இதுதான் முடிவு! தோழா!
    கடிதம் இதனைக் கண்ணீர் கசிய
    காணாதாரும் எழுதி
    விடியுமுனே விடுத்தேன் அஞ்சல்
    விடையும் உடனே தருக!
    இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்!

    எனத் தனிமனிதக் காதல் உணர்ச்சிகளை மந்தணமாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்ற பொன்மணிதாசன் சமுதாய மட்டத்தில் பெண்ணின் பெருமையைத் தூக்கிப் பிடிப்பதில் ஒரு மாபெரும் சமுதாய ஆர்வலராகவே காட்சியளிக்கிறார்.

    “ஆசை வச்சேன் உம்மேலே! அரளி வச்சேன் கொல்லையிலே!
    பாத்தேனடா ஒம்மொகத்த! பகைச்சேனடா எஞ்சனத்தை!”

    என்பது வாய்மொழி இலக்கியம். படைப்பிலக்கியங்களைவிட காதல் உணர்ச்சி சற்று தூக்கலாக இருப்பது நாட்டுப்புற இலக்கியங்களில்தான் என்பது ஆய்வாளர் கருத்து, உணர்வுப்பூர்வமான காதலை வாய்மொழி இலக்கியங்கள் உணர்த்துவதுபோலப் படைப்பிலக்கியங்கள் உணர்த்துவதில்லை. காரணம் படைப்பிலக்கியங்களில் உணர்வுக்கு மொழியின் வரி வடிவம் ஊடகமாகப் பயன்படும் போது, கூச்சமும் தயக்கமும் ஏற்படுவது இயல்பு. அவ்வாறின்றி உணர்வுகளுக்கு ஆடைகட்டாமல் அப்படியே பாடப்படும் வாய்மொழி இலக்கியங்கள் நேராக நெஞ்சுக்குள் சென்று தைக்கின்றன.  எனவேதான் படைப்பிலக்கியக் கரத்தாக்களும் வாய்மொழி இலக்கிய வடிவத்தைத் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்துகிறார்கள். பொனமணிதாசன்

    “இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்”

    என்று வாயமொழி இலக்கியச் சாயலில் பாடுவதற்கு இதுதான் காரணம். பெண்ணைக் காதற் கருவி என்று மட்டும் கருதாமல் வணங்கத்தக்க மானுடத்தின் அடையாளம் என்பதிலும் பொன்மணிதாசன் உறுதியாய் இருக்கிறார்.

    “பெண்ணை நீ போற்றிப் பாடு!
    பெருமையைத் தூக்கிப் பாடு!
    பெண்ணிலா தேசந்தன்னைப்
    பெயர்த்துமே கடலில் போடு!
    பெண்களே நமது கண்கள்!
    பெண்ணின்றேல் ஆண்கள் இல்லை!!
    பெண்களே குடும்பச் சொத்து
    பெண்ணன்றோ இன்ப முத்து!

    பெண்ணின் பெருமையைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைநடையில் பேசியதைப் பொன்மணிதாசன் கவிதையில் பேசுகிறார்.  தனிமனித உணர்ச்சிகளை எளிய தமிழில் பாடும் பொன்மணிதாசன் சமுதாயச் சிந்தனைகளையும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளையும் கவிதையில் கொண்டுவருவதில் சுணக்கம் காட்டுவதில்லை. அங்கதமும் அழகியலும் காதலும் கடமையுணர்வும் மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் இறையுணர்வும் தத்துவப் பார்வையும் அவருடைய முகநூல் கவிதைகளில்  அங்கிங்கெனாதபடி எங்கும் இழையோடுகின்றன.

    நிறைவுரை

    கவிதை யாப்புக்குள் இல்லை! சமுதாயத்திலிருந்து இதயத்திற்குப் பயணமாவது. பாதிப்பிலிருந்து தன பயணத்தைத் தொடங்குவது. ஒப்பாரிக்கும் தாலாட்டுக்கும் தகுதி தேவைபடாதது போலவே எழுதப்படுகிற கவிதைக்கும் ஏந்தத் தேவையில்லை. தன்னைப் பாதிக்கின்ற அலலது தான் பாதிக்கின்ற பொருண்மைகளைப் பாடுவதுதான் கவிதையின் நதிமூலம். பாதிப்பின்றிக் கவிதை வராது. வந்தால் அது கவிதை இல்லை.  வாசலில் அழகிய கோலம் இடுவதற்கும் அதற்கு அடிப்படையான புள்ளிகளை வைப்பதற்கும் அடிப்படை வரைபடப் புலமை தேவையில்லை. அழகியல் உணர்ச்சி மட்டுமே!.  அளவுகோலை வைத்துக் கொண்டு புள்ளிகளை வைத்தால் கோலம் அலங்கோலமாகும். முகநூல் கவிதைகளும் படைப்பிலக்கிய வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுதலின் பிழையின்றி எழுதினால் போதும். எந்தப் பொருளைப் பற்றியும் எழுதலாம். இன்றைக்கு முகநூல் வெகுமக்களை இணைக்கின்ற சமுதாய ஊடகமாகப் பெரிதும் பயன்படுகிறது, பொன்மணிதாசனின் கவிதைகள் இணைப்புச் சங்கிலியாகவும் பயன்படுகிறது. தன்னுடைய கவியாளுமை மூலம் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்க்கவிதை உலகிற்கு இவரை அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ பெருமைப் பட போதுமான காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்!

    (தொடரும்)

    Share
  • தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்

    தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்

    அண்ணாகண்ணன்

    நுகர்வோர் ஆணையிட்ட பொருள்களைக் கொண்டு சேர்க்கும் (டெலிவரி) துறையில் ஒரு புது நிறுவனத்தின் பெயரைக் கண்டேன். பின்னால் பெரிய பெட்டியுடன் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஓட்டி வந்தார். அருகில் உள்ள வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்திருந்தார். அந்த இளைஞரிடம் பேசினேன். ஆச்சரியம், அவர் 12ஆம் வகுப்புப் படிப்பதாகக் கூறினார்.

    இன்னும் 18 வயது ஆகியிருக்காதே. இந்த நிறுவனத்தில் எப்படிச் சேர்ந்தீர்கள் என்று கேட்டேன். என் அண்ணனின் சான்றிதழ்களைக் கொடுத்துச் சேர்ந்துவிட்டு, அன்றாடப் பணிகளை நான் எடுத்துச் செய்கிறேன் என்றார். பள்ளி முடிந்த பிறகு, மாலையில் இவ்வாறு டெலிவரி செய்யப் போவதாகக் கூறினார்.

    ஓர் இடத்தில் டெலிவரி செய்தால் தனக்கு 28 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 40 டெலிவரி செய்தால் 1120 கிடைக்கும் என்றார். சுவிக்கி, ஸொமேட்டோ போன்று உணவும் டெலிவரி செய்வது உண்டு. அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு எனக் கொடுக்கிறார்கள் என்றார். அது சற்றே குறைவாக இருக்கும் என்றார்.

    பெரிய டெலிவரி நிறுவனங்களுக்குக் கீழே அவர்களின் பணிகளை எடுத்துச் செய்ய, சிறு நிறுவனங்கள் பலவும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. இவர்கள், துணை ஒப்பந்தம் (சப்-கான்ட்ராக்ட்) மூலம் பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். இப்படி உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய, ஆட்கள் அதிகம் கிடைப்பதில்லை. எனவே தான் அவர்கள் வாகனம் வைத்திருக்கும் துடிப்பான பள்ளி மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள்.

    பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே மாதம் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடிவதைத் திறமை என்பதா? இதைத் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதா? இப்படிச் சம்பாதிக்க வேண்டிய குடும்பச் சூழல் இருக்கிறது எனக் கருதுவதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    Share
  • போட்டோகிராப் – திரை விமர்சனம்

    போட்டோகிராப் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

    கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

    நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

    பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

    சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

    நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

    படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

    இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் – 55

    அண்ணாகண்ணன் யோசனைகள் – 55

    அண்ணாகண்ணன்

    முன்னர் ஒரு யோசனை தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு நெல்மணிக்கும் பருப்புக்கும் விளைபொருளுக்கும் அது விளையும் இடத்திலேயே குறியீடு கொடுத்து, பின்தொடர வேண்டும் என்பதே என் யோசனை. ஒரு பொருள் எங்கே, எப்போது விளைந்தது, பயிரிட்டவர் யார், எந்த எந்த விற்பனையாளர்கள் வழியே வாடிக்கையாளரை அடைகிறது, வாடிக்கையாளர் வீட்டில் அது எவ்வளவு காலமாக இருக்கிறது என யாவற்றையும் கண்டறிய வேண்டும். அது இயற்கை உரத்துடன் அல்லது செயற்கை உரத்துடன் வளர்ந்ததா? அதன் மேலே செயற்கைச் சாயம் பூசப்பட்டள்ளதா? விளைபொருளின் தரம் என்ன? அது கெட்டுப் போகாமல் இருக்கிறதா? என அறிய வேண்டும். ஒரு ஸ்கேன் செய்தாலே அதன் மரபணுச் சோதனை நிகழ வேண்டும். அந்தப் பொருளின் உண்மை விவரங்கள், நுகர்வோருக்குத் தெரிய வேண்டும்.

    ஒரு பொருளின் வடிவம் மாறும்போது, இந்தக் குறியீடு அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய்யாக மாறும்போது தரப் பரிசோதனை செய்து, வேறு குறியீடு உருவாக்கலாம். இத்தகைய சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளையும் விளைபொருள்கள் கொண்டிருக்கலாம்.

    காய்கறி, பழம், கீரை உள்ளிட்டவை எப்போது பயிரிடப்பட்டன என்பதுடன் எப்போது அறுவடை செய்யப்பட்டன? எந்த இடத்திலிருந்து இங்கே வந்திருக்கின்றன? என்றெல்லாம் அறிய வேண்டும். இப்போது, இந்த யோசனையைக் கஞ்சாவுக்கும் விரிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

    கஞ்சா வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்திப் பலரும் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம். இந்தச் சிக்கலைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு கஞ்சா இலைக்கும் செடிக்கும் அடையாளக் குறியீடு உருவாக்க முடிந்தால், அதன் வரலாறு முழுவதையும் அதிலிருந்து எடுத்துவிட முடியும். அது எங்கே பயிரானது, எந்த இடங்களுக்குப் பயணித்தது என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறியலாம். இன்னார் வீட்டுக்கு அது எப்போது வந்தது என்பது வரை பின்தொடரலாம். குறிப்பிட்ட நாளில் அது வந்தது எனில், அது எப்படி வந்தது, யார் மூலம் வந்தது என்பதையும் ஒரு மோப்ப நாயின் உதவியுடன் கண்டறியலாம்.

    மேலும், கஞ்சா வைத்திருந்தார் என்பது ஒரு பகுதி குற்றச்சாட்டு தானே? அந்தக் கஞ்சாவை அவர் யாரிடமிருந்து, எப்போது, எப்படிப் பெற்றார் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தகவல் இல்லாவிட்டால், குற்றத்தை நிரூபிப்பது எப்படி? கஞ்சா விற்றவருக்குத் தண்டனை பெற்றுத் தருவது எப்படி? எனவே, மேற்சொன்ன வேரினைத் தேடல், காவல் துறைக்கும் பெருமளவு உதவும்.

    மனிதர் அனைவருக்கும் மரபணுச் சோதனை நடத்தலாம் என முன்னர் தெரிவித்திருந்தேன். வயது வந்தவர் எனில் அவரது இசைவு அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் எனில் அவரது பெற்றோரின் இசைவு பெற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகச் சேர்க்கலாம் என்றேன். இதிலாவது மனிதர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது.

    ஆனால், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இதர உயிர்கள் அனைத்திற்கும் மரபணுக் குறியீடு உருவாக்குவது நீண்ட கால நோக்கில் பயனுள்ளது. கலப்படத்தைத் தவிர்க்கவும் உண்மையைக் கண்டறியவும் சில சிக்கல்களின் வேரினைக் கண்டறியவும் இந்த மரபணு அடையாளம் நமக்கு உதவும்.

    இது மிகப் பெரிய பணிதான். ஆனால், செய்ய முடியாத பணி இல்லை. முயன்றால் முடியும். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • விசேஷம் – திரை விமர்சனம்

    விசேஷம் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

    நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

    ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

    கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

    புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

    Share
  • கிண்டியில் மிகப் பெரிய பூங்கா

    கிண்டியில் மிகப் பெரிய பூங்கா

    அண்ணாகண்ணன்

    கிண்டியில் ரேஸ்கோர்ஸிடமிருந்து திரும்பப் பெற்ற 118 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய பூங்காவும் பசுமை வெளியும் அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கே நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தில் பேருந்து நிலையத்தைக் கொண்டு வர முன்பு யோசனை தெரிவித்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து சென்றால், இதன் சுற்றுவட்டாரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, அது பரிசீலிக்கப்படவில்லை.

    பூங்கா அமைப்பதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அதே நேரம் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வந்து செல்லலாம். நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். சுற்றுலாத் தலமாகவும் வளரும்.

    அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, ராஜ் பவன், ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பகுதிகள், ஆயிரக்கணக்கான மரங்களுடன் பசுமையாகப் பராமரிக்கப்படுகின்றன. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இருந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.

    கிண்டிக்கு அருகில் தாங்கல் ஏரி, வேளச்சேரி ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மிக அருகில் அடையாறு நதி ஓடுகிறது. அடையாற்றின் கரை முழுவதையும் நீண்ட பூங்காவாக, வனமாக வளர்த்தெடுக்கலாம். இதன் மூலம் கரைகள் பலப்படும். மண் சரிவு ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம்.

    புதிதாக அமைய உள்ள ரேஸ்கோர்ஸ் பூங்காவுடன் இணைத்து, இதர பசுமை வளங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பெருந்திட்டத்தை முன்னெடுக்கலாம். கேபிள் கார் முதலானவற்றை அமைக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, இதர இடங்களை மேலிருந்தும் சுற்றிப் பார்க்கலாம்.

    ரேஸ்கோர்ஸ் இடத்தில் மிகப் பெரிய கூட்ட அரங்கினை உருவாக்கலாம். சென்னையில் பெரிய அரங்குகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கலாம்.

    இந்த இடத்தின் ஒரு பகுதியில், சேப்பாக்கத்தைப் போல் ஒரு கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கலாம்.

    இந்த இடத்தினை வேறு எந்த வகையில் பயன்படுத்தலாம்? உங்களுக்கு ஏதும் யோசனை தோன்றுகிறதா?

    Share
  • வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    அன்பு நண்பர்களுக்கு,

    வணக்கம்.

    வல்லமை மின்னிதழ், 15ஆம் ஆண்டில் நடை பயில்கிறது. இது வரை 19,735 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவற்றுக்கு 13945 பின்னூட்டங்கள் வரப் பெற்றுள்ளோம். ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வறிஞர் மதிப்புரையுடன் வெளியிடும் தமிழின் முதல் ஆய்விதழ் என்ற பெருமையைப் பெற்றுள்ளோம். தொடர்ந்து பங்களித்து வரும், ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், தங்கள் படைப்புகளை மனமுவந்து அனுப்பி வருகிறார்கள். ஆய்வறிஞர்கள், மதிப்பாய்வு செய்து உதவுகிறார்கள். முனைவர் சுரேஷ், ஆக்கங்களை வெளியிடுவதில் உதவி வருகிறார். எல்.கார்த்திக், வலைமேலாண்மை செய்து வருகிறார். தன்னார்வலர்களின் உதவியுடன், ஒத்துழைப்புடன் வல்லமையை எளிமையாக நடத்தி வருகிறோம். இதைத் தொடர்வதற்கு உங்கள் உதவி தேவை.

    வல்லமையின் வழங்கிக் கட்டணத்தை 2026 ஆகஸ்டு வரை கட்டியுள்ளதால், இப்போது உடனடிச் செலவு இல்லை. கடந்த ஆண்டு பெற்ற நன்கொடையில் எஞ்சிய தொகையில், வல்லமையின் தளப்பெயரை மேலும் ஓராண்டுக்குப் புதுப்பித்துள்ளோம். இப்போது, வல்லமையின் வலைமேலாளருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டியிருக்கிறது.

    வல்லமைக் குழுமத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்ட உடன் பேராசிரியர் கண்மணி, ரூ.2500 அனுப்பியுள்ளார். முனைவர் நா.கணேசன், ரூ.5,000 அனுப்ப இசைந்துள்ளார். இந்த ஆண்டுச் செலவுக்கு இன்னும் ரூ.4500 தேவை. அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    உங்கள் நன்கொடைகளைக் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள்.

    Account Name: Annakannan K
    Account No: 602701508602
    Bank Name: ICICI Bank
    Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600102
    IFSC Code: ICIC0006027
    Swift Code: ICICINBBNRI

    PhonePe / Google Pay / UPI மூலமாகப் பணம் அனுப்ப: annakannan@okicici

    உங்கள் பங்களிப்பு மூலமாக வல்லமையை வலிமைப்படுத்துங்கள்.

    அன்புடன் என்றும்
    அண்ணாகண்ணன்
    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்
    வல்லமை மின்னிதழ்
    செல்பேசி: 9841120975

    Share
  • ஜமா – திரை விமர்சனம்

    ஜமா – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

    இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

    இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

    நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

    கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

    எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    Share
  • நம் கல்வித் துறையின் போதாமைகள்

    நம் கல்வித் துறையின் போதாமைகள்

    அண்ணாகண்ணன்

    கண்டுமூட்டே (Gantumoote) என்ற கன்னடப் படத்தைப் பார்த்து முடித்தேன் (Amazon Prime). இயல்பான, அழகான, உணர்வுப்பூர்வமான காதல் கதை. நாயகியாக நடித்த தேஜூ பெலவாடி, இதில் வாழ்ந்திருக்கிறார்.

    இதில் ஒரு வசனம் வருகிறது. பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ‘தேர்வில் நீங்கள் பர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை பர்ஸ்ட் கிளாஸாக இருக்கும். நீங்கள் செகண்ட் கிளாஸ் மார்க் எடுத்தால், உங்கள் வாழ்க்கை செகண்ட் கிளாஸாக இருக்கும்’ என்று. இந்த மாணவன், ‘நான் பெயில் ஆகிவிட்டேன். வாழ்க்கையிலும் இனி நான் பெயில் தான்’ என்று தவறான முடிவு எடுத்துவிடுகிறான்.

    ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, மதிப்பெண்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. அவர்கள் போகிற போக்கில் சொல்லும் ஒரு சொல் கூட, மாணவர்களிடம் மிக அழுத்தமான பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும், நிஜ வாழ்க்கையில் மதிப்பெண்கள் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை.

    ஒருவர், 60 சதம் எடுத்தாலே முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். இப்படி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முதல் நிலையிலும் இல்லை. குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவரும், வாழ்க்கையில் கீழ் நிலையிலும் இல்லை. எனவே, இந்தக் கண்ணோட்டத்தை எந்த இடத்திலும், நிலையிலும் விதைக்கக் கூடாது.

    இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை வேடிக்கையாக ஒப்பிடுவதோ, பொதுமைப்படுத்துவதோ கூடாது. மதிப்பெண் பெற்றால் தான் இதைச் செய்வேன் எனப் பேரம் பேசக் கூடாது. மேலும், அடிக்கடி தேர்வுகள் வைத்து மன அழுத்தத்தை உருவாக்குவதும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வை வளர்ப்பதும் மதிப்பெண்களைச் சாதனை எனக் கொண்டாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

    மாணவர் மனம் என்பது பச்சை மண். அதில் எதை விதைத்தாலும் அழுத்தமாகப் பதிந்துவிடும். எனவே, ஆரோக்கியமான செய்திகளை மட்டுமே சிந்திக்க வேண்டும். சில பாடங்களை மட்டும் முன்வைத்து, அதில் இவர் இன்ன மதிப்பெண் என அறிவிக்கும் முறையை மாற்ற வேண்டும். ஒவ்வொருவரிடமும் என்ன திறமை இருக்கிறதோ, அதைக் கண்டறிந்து வளர்த்து, இன்னார் இன்ன திறமை கொண்டிருக்கிறார் எனச் சான்றிதழ் அளிக்க வேண்டும். இவரிடம் இன்ன திறமை இல்லை எனச் சான்றிதழ் அளிப்பதைக் கைவிட வேண்டும். கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதே இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

    #gantumoote #amazonprime #education

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இலக்கணத்திலும் கவிதைகளிலும் பேரார்வம் நிறைந்தது என் வாழ்வு. இந்த எண்பது வயது காலத்தில் கவிதை எனக்கு அமைதியைத் தருகிறது. என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கும் கவிதைகளே தலையாய காரணம். என்னைப் பொருத்தவரையில் அது ஒரு வினைவேக மாற்றியாகவே செயல்படுகிறது. அதனால்தான் கவிதைகளை அடையாளம் காண்பதில் என் மனம் அவ்வளவு எளிதாக அமைதியடைவதில்லை. எந்தக் கவிதையொடும் நான் எளிதாகச் சமரசம் செய்து கொள்வதில்லை.  நூல்களில் படிப்பதைக் காடடிலும் முகநூல் கவிதைகளைக் கண்டு மகிழ்வதில் எளிமையை உணர்கிறேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த முகநூலில் கவிதைப் பணி செய்துவருவோர் பலர். அவருள் என்னுள்ளம் கவர்ந்த படைப்பாளர் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களாவார். படைப்புவழி என்னால் அடையாளம் காணப்பட்டவர். கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘இதுதான் கவிதை’ என்று சாதிப்பவர் அல்லர். கவிஞனாகப் பிறந்ததால் கவிதை எழுதுகிறவர். அண்மையில் முகநூலில் அவர் எழுதி என்னுள்ளம் கவர்ந்த ‘சுருக்குப்பை’ என்னுந் தலைப்பில் அமைந்த கவிதைபற்றிய கலையியல் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    பாடுபொருளால் சிறக்கும் ‘சுருக்குப்பை’

    தற்காலக் கவிதைகளில் பெரும்பாலன காதல் சார்ந்தன அல்லது தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்ப்பன. கண்ணாகிய உறுப்பின் தொழில் பார்வை. அது மனத்தோடு இயைந்தவழி நோக்காக மாறுகிறது. ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ என்றுதான் வள்ளுவர் பாடுவார். ‘பார்த்தாள் பார்த்து இறைஞ்சினாள்’ என்று எழுதமாட்டார். பார்வையில் இறைஞ்சுவது தெரியாது. நோக்கத்தில் புலப்படும். கவிஞர்கள் நோக்கிற் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தான் வாழுகிற சமுதாயத்தை உற்று நோக்காத யாரும் கவிதையாக்கத்தில் வெற்றிபெற முடியாது. ‘சந்திர மணடலத்தியல் கண்டு தெளிவோம் தெரு சந்திப் பெருக்கும் நல்ல சாஸ்திரம் கற்போம்’ என்னும பாரதி வரி அவன் தெருப்பெருக்கும் தொழிலாளியைக் கூட நோக்கியிருக்கிறான் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

    தற்காலக் கவிஞர்களைப்போல் அக்காலக் கவிஞர்களுக்குப் பாடுபொருள் பஞ்சம் வந்ததில்லை. ஐவகைத் திணைகளிலும் உள்ள கருப்பொருள்களை அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். பாரதிதாசன் பூசணிக்காயைப் பாடியிருக்கிறார். சுரதா வாழைத்தண்டைப் பாடியிருக்கிறார். பொன்னடியான் சோப்பைப் பாடியிருக்கிறார். காமராசன் திருநங்கைகளைப் பாடியிருக்கிறார். மேத்தா அரளிப்பூவைப் பாடியிருக்கிறார். சிற்பி கிராமத்து நதியைப் பாடியிருக்கிறார். வைரமுத்து பல்லாங்குழியைப் பாடியிருக்கிறார். கவிமணி சொறிசிரங்கைப் பாடியிருக்கிறார். காளமேகம் நாயைப் பாடியிருக்கிறார். ஔவை எருமை மாட்டைப் பாடியிருக்கிறார். கவித்துவத்தால் பாடுபொருள் சிறப்படைகிறதே தவிர பாடுபொருளால் கவிஞன் சிறப்படைவதில்லை.

    உற்று நோக்குந் திறனை இயல்பாகவே கொண்ட கவிஞர் வசந்தராசன் மூதாட்டியொருத்தியின் சுருக்குப்பையை நோக்கியிருக்கிறார். அவளுக்கும் அந்தப் பைக்குமான உறவை நோக்கியிருக்கிறார். அதற்குள் புதைந்து கிடந்த “புதையலை” நோக்கியிருக்கிறார். அந்த மூதாட்டி கவிஞரின் அப்பத்தாவாக இருக்கலாம். அம்மாச்சியாகவும் இருக்கலாம். உறவுக்காரராகவும் இருக்கலாம். சந்தையில் கண்டிருக்கலாம். சாலையில் சென்றிருக்கலாம். இவரிடத்திலெல்லாம் கவிஞன் அவர்தம் இடுப்பிலிருந்த அந்தச் சுருக்குப் பையைத்தான் நோக்கியிருக்கிறான். இளம்பெண்ணின் இடுப்புச் சுருக்கங்களைப் பாடுகிறவருக்கிடையே இந்தக் கவிஞன்தான் மூதாடடியின் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையைப் பாடியவனாக இருக்க வேண்டும். கவிதையின் வெற்றிக்குப் பாடுபொருள் தேர்வு செம்பாகம் அன்று, பெரிது.

    உத்திகளால் சிறக்கும் சுருக்குப்பை

    இந்தக் கவிதை ‘சுருக்குப்பை தன்வரலாறு எழுதுவதாகப்’ படைக்கப்படவில்லை. மூதாட்டியின் சுயசரிதையாக அமையவில்லை. கவிதைக் களத்தில் படைப்பாளனே முன்னிற்கிறான். இந்தக் கவிதையை வேறு உத்தியில் சொல்லியிருந்தால் ‘இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கும்’ என்னும் உவமம் பயின்றுவந்திருக்காது. ‘மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் என்னும் சுருக்குப்பையின் நுரையீரல் வெளிப்பட்டிருக்காது. என்னதான் சுருக்குப்பையும் மூதாட்டியுமே பேசியிருந்தாலும் படைப்பாளனின் கற்பனைகளையும் உத்திகளையும் படிமங்களையும் சொல் நேர்த்தியையும் கவிதையில் கொண்டு வந்திருக்க முடியாது. வடிவமும் ஓர் உத்திதான். வெளிப்பாட்டு முறையும் ஓர் உததிதான். மூதாட்டியின் உள்ளத்திலும் சுருக்குப்பைக்கு உயிரூட்டிய உள்ளத்திலும் புகுந்துகொணடு பேசுவதைவிட தானே கண்டு வியந்த சுருக்குப்பைக் களஞ்சியத்தைக் கவிஞனே நேரடியாகப் பாடியிருப்பது மிகப் பொருத்தமாகும்.

    உணர்ச்சியின் மொழிவடிவமே கவிதை

    கவிதைக் கூறுகள் நான்கனுள் தற்காலக் கவிதைகளில் உணர்ச்சி தலையாயது. சங்கக் காலத்தில் அதனைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்ளடக்கம் தலையானதாகக் கருதப்பட்டது. பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின் கவிதை இலக்கியங்களில் உணர்ச்சியே கண்காணிக்கப்பட்டது. வியப்பிடைச் சொற்களே கவிதையாகும் விந்தையைக் கம்பன் செய்து காட்டினான். தனிப்பாடல்கள் சிலவும் இயல்பு நவிற்சியணியால் உணர்ச்சியைக் காட்சிப்படுத்தின. கவிதையாக்கின. பின்னாலே வந்த வள்ளற்பெருமானும் மகாகவி பாரதியும் பாரதிதாசனும் கண்ணதாசனும் உணர்ச்சியின் பிழம்பாகவே கவிதையுலகில் அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் சுருக்குப்பையைக் காணவேண்டியதிருக்கிறது.

    மன்னரின் மணிமகுடத்தைப் பாடுபொருளாக்குவதைவிட ஒரு வீரனின் கைவாளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞனின் நோக்கு புலப்படும். கவிதையின் வெற்றி உறுதி செய்யப்படும். கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்துள் இராசபாரம்பரியம் என்னும் மன்னரின் வரலாற்றுப் பகுதியைவிட போர்பாடியது, களம்பாடியது என்னும் பகுதிகளே அந்த இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன என்பதை அறியலாம்.

    கவிஞன் இந்தக் கவிதையில் நவநாகரிக மங்கையின் கைப்பையைப் பாடாமல் முடிந்துபோன நீண்ட நெடிய மரபின் இறுதி அடையாளமாகிய மூதாட்டியின் சுருக்குப்பையைப் பாடியிருக்கிறான். அதாவது அவன் நோக்கை அந்தச் சுருக்குப்பை ஈர்த்திருக்கிறது. ‘சுருக்குப்பை’ என்னும் சொல்லே நமக்கு அவலத்தைத் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால் தலைப்பிலேயே அவலச்சுவையை பரிமாறிவிடுகிறார் எனலாம்.

    “அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!”

    சுருவாட்டுக் காசில் வாங்கிய பொடி நகைகளையெல்லாம் அடகு வைக்கும் அவலம். சுருக்குப்பையில் நகையாக இருந்தவை (உண்மையில் அவை நகைகள் அல்ல. மூக்குத்தியைச் சங்கிலிக்கு ஈடாக யாரும் கருதுவதில்லை. பெண்ணுக்குச் சீதனம் கொடுக்கிறபோது கூட கம்மல், மூக்குத்தி, கால்கொலுசு இவைகளைத் தனியாகக் கணக்கிடுகிற பழக்கம் தமிழ்நாட்டில் இல்லை) நகைகள் அடகுச் சீட்டுக்களாக!. அந்த அடகுச்சீட்டுக்களைக் காணுகிறபொழுதெல்லாம் வைத்த நகைகள் அல்லவா நினைவுக்கு வரும்? அவள் எவ்வளவுக்கு வைத்திருப்பாள் சுருக்குப்பைக் காலத்தில்? அதிக பட்சம் ஐம்பது ரூபாய்க்கு வைத்திருப்பாளா? அவ்வளவுதான்! அதனால்தான் கவிஞன் அடகுப் பொருளைக் ‘கல்கம்மல்’ என்கிறான். கல்வைத்த நகைக்கு மதிப்பு குறைவு. கவிஞன் கண்ட கிழவியின் கம்மல் தங்கத்தில் வைக்கப்ட்ட வைரக்கல் நகையன்று. கண்ணாடிக் கல் நகை. எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால் ‘அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையாளங்கள்!’ என்னும் வரியில் அடங்கியிருக்கும் வலியை உணர முடியும்.

    சுருக்குப்பை சுவாசிக்கிறதாம்.

    சுருக்குப்பையின் சுவாசத்தை இப்படிப் பாடுகிறார் கவிஞர். .“மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்” மூதாட்டி திறந்து மூடும் நொடிக்குள் சுவாசித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதாம் சுருக்குப்பை. சுருக்குப்பைக்கு பிராணவாயு தருவதே மூதாட்டியின் விரல்கள்தானாம். “எப்போது திறப்பாள்? என்னும் சுருக்குப்பையின் ஏக்கத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தனக்கு வாழ்வளிக்கும் சுருக்குப்பைக்குத் தான் வாழ்வளிக்கிறாளாம் மூதாட்டி! அருமையான அழகியல் கற்பனை!

    தன்மை நவிற்சி அணி

    புனைந்துரை ஏதுமின்றி உள்ளதை உள்ளவாறே கவிதையில் பதிவு செய்வதனைத் தன்மை நவிற்சியணி அல்லது இயல்பு நவிற்சியணி என்பார்கள் இலக்கணக்காரர்கள். சிலப்பதிகாரத்தில் உயர்வு நவிற்சியணியும் தன்மை நவிற்சியணியும் ஒரே இடததில  இயல்பாக அமைந்திருக்கும் இலக்கிய அதிசயத்தைக் காணலாம்.

    பாண்டியனின் அரண்மனை வாயிற்காவலன் கண்ணகியைக் காண்கிறான். அவன் பார்வைக்கு அவளுடைய தோற்றம் எப்படி இருந்தது என அவன்  பாண்டியனிடத்தில்  காட்சிப்படுத்தியதை அடிகள் இப்படிப் பதிவு செய்கிறார்.

    “அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
    பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
    வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;
    அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
    கானகம் உகந்த காளி, தாருகன்
    பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;”

    காளியாகக் காவலனுக்குக் காட்சியளித்த கண்ணகி பாண்டியனுக்கு எப்படித் தோன்றினாள் என்பதை இயல்பு நவிற்சியால் காட்சிப்படுத்துகிறார் அடிகள்.

    மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
    கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர் ‘

    பாண்டியன் தோற்றத்தில் காணப்படும் கண்ணகியின் வண்ணனையில் அடிகள் எதனையும் புனைந்துரைக்கவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சில நொடிகள் இடைவெளியில் வாயிற்காவலன் பார்வைக்கும் நாட்டு மன்னனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாட்டினை அடிகள் புலப்படுத்து:ம் திறன் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது. சுருக்குப்பையில் புதையுண்ட பொருட்களைக் கவிஞன் காட்சிப்படுத்துகிறான்.

    “பல்குச்சி, வெற்றிலைப்பாக் குச், சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு, பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! “

    நோக்கின் சிறப்புப்பற்றி முன்னரே கூறப்பட்டது. இங்கே கவிஞன் சுருக்குப்பையின் அடைக்கலப் பொருள்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடைச்சொற்களை நோக்கினால் அவனுடைய கவிநோக்கு புலப்படும்.

    பல்குச்சி, வெற்றிலை சுண்ணாம்பு” என்கிறார். வெற்றிலை என்பது வெற்றிலை பாசிலையைக் குறித்ததன்று. வெற்றிலைச் சருகைக் குறித்தது. சுண்ணாம்பு என்பது சுண்ணாம்பு கரண்டவத்தைக் குறித்தது. தகரத்தினால் ஆன மிகச் சிறிய குழல்வடிவத்தில் இருப்பதுதான் சுண்ணாம்பு கரண்டவம். இந்தத் தெளிவு இல்லாமல் போனால் கவிதையை உள்வாங்கிச் சுவைக்க முடியாது. .

    ‘புகையிலையின் சிறுதுண்டு’ என்கிறார். ஒன்றரை அங்குல புகையிலைத் துண்டை ஒருவாரம் வைத்துப் பயன்படுத்துகிறவர்தான் அந்த மூதாட்டி. புகையிலைக்குத் தேய்பிறை உண்டு. வளர்பிறை கிடையாது. அந்தத் தேய்பிறைப் புகையிலையைத்தான் சிறுதுண்டு என்கிறார். ஊக்கைக் கூட ‘பழைய ஊக்கு’ என்கிறார். சுருக்குப்பையின் கயிறு இற்று அறுந்துவிடுமானால் அந்த ஊக்கு கயிறாக அவதாரம் எடுக்கும். கீழே கிடந்த ஊக்காகவும் இருக்கலாம். மூதாட்டி தமிழச்சியாதலாலும் சுருக்குப்பை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் ஆனதாலும் பாடுபொருளோடு அனைவரும் ஒன்ற வேண்டும் என்பதாலும் தாக்குறவுக்கு ஆளாகவேண்டும் என்பதாலும் HOOK  என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார் என்று அமைதியடையலாம். .

    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! அந்தச் சுருக்குப்பையில் இருந்ததாம். KEY CHAIN அறிந்த இன்றைய சமுதாயத்திற்குச் சாவிக்குத் தாலிகட்டிய அந்தச் சடங்கு தெரியாது.

    உயிர்பெற்று எழுந்துவரும் இறந்தகாலம்

    இறந்து போன காலத்திற்குத்தான் இறந்தகாலம் என்று பெயர். மூதாட்டியின் உடைமைகளும் அவைசார்ந்த சிந்தனைகளும் வரலாறுகளும் இறந்த காலம். ஆனால் அவை அந்தச் சுருக்குப்பையில் இருப்பதால் நிகழ்காலம்.

    “முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!”

    இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையோடு முந்தானை முடிச்சையும் துணையாக்குகிறார் கவிஞர் அந்த முடிச்சில் காசுகள் இருக்கலாம். சாவிகள் தொங்கலாம். சில நேரம் நோட்டுக்களும் இருக்கலாம். அந்தச் சுருக்குப்பையும் இந்த முந்தானை முடிச்சும் மூதாட்டிக்குப் பெடடகங்களாகத் தோன்றுகின்றன. சுருக்குப்பை காணாமல் போனாலோ, முந்தானை முடிச்சவிழ்க்கப்பட்டிருந்தாலோ மூதாட்டியின் உயிர் போய்விடும். அவற்றுக்குள் இருக்கும் பொருள்கள் அவருடைய உயிர். எனவே அந்தப் பெட்டகங்களில்தாம் அவள் உயிர் இருக்கிறது. அவள் உயிரை அந்தப் பெட்டகங்கள் பூட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.

    கீழடியாய் மாறிய சுருக்குப்பை

    படைப்பாளனுக்குச் சமகாலச் சமுதாயப் பார்வையும் சமுதாயச் சிந்தனையும் வரலாற்று நோக்கும் இயல்பாகவே இருத்தல் வேண்டும். வரலாற்று நோக்கில் இன்று இந்தியாவை அசைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடடில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள். கீழடி முதலிய இடங்களில் கிடைக்கும் சில பொருள்கள் ஒரு பழைமையான நாகரிகத்தை வரலாற்றின் முன் கிடத்திக்கொண்டிருக்கின்றன. மூதாட்டியின் சுருக்குப்பை இறந்த காலப் பெட்டகம். இறந்த காலச் செல்வங்களைத் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கும் கீழடியாய்த் தோன்றுகிறது கவிஞனுக்கு.

    “உடைமைகளின் கீழடிகள்!”

    மூதாட்டியின் சுருக்குப்பையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கீழடி. அதனால்தான் கவிஞன் கீழடிகள் எனப் பன்மையில் கூறுகிறான்.

    “தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்! “

    இந்தக் கவிதையைக் காலத்துக்கும் தூக்கி நிறுத்தும் தொடர் இது. மிக இலாவகமாகக் கவிஞர் கையாண்டிருக்கிறார். வேறுவகையாகச் சொன்னால் அவரையும் அறியாமல் வந்து விழுந்த சொற்கள்.

    பொதுவாகத் தோண்டுதல் என்ற சொல்லை இரண்டு இடங்களில்தாம் பயன்படுத்துவார்கள். ஒன்று ஏதாவது ஒன்றினைப் புதைக்கத் தோண்டுவார்கள். இரண்டு ஏதாவது ஒன்றினைக் கண்டெடுக்கத் தோண்டுவார்கள்.  தெளிவாகச் சொன்னால் பிணத்தைப் புதைக்கத் தோண்டுவார்கள். புதையல் இருக்குமிடத்தைக் கண்டறியத் தோண்டுவார்கள். கீழடியில் இறந்து போன எச்சங்களைத் தோண்டுகிறார்கள். ஆனால் அங்கே கிடைக்கும் பொருள்கள் உயிருள்ள ஒரு நாகரிகத்தின் அடையாளங்கள். என்ன அதிசயம்? இறந்த காலத்தை அறியத் தோண்டுகிறார்கள். நிகழ்காலமல்லவா கிடடுகிறது? இறந்து போய்த்தான் அவை கிடந்தன. தோண்டுவதனாலே உயிர் பெற்றனவாம். :தோண்டத் தோண்ட உயிர்பெற்று எழுந்தது”! நிலச்சரிவில் சிக்கி மாண்டுபோயிருப்பான் என நம்பப்பட்ட ஒருவன் மண்ணை அப்புறப்படுத்தும்போது உயிரோடு வந்தால் என்ன அனுபவம் கிட்டுமோ அந்த அனுபவமல்லவா நமக்கு? கவிதை இப்படி இருக்க வேண்டும்!

    “படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்! “

    எல்லாராலும் கைவிடப்பட்ட மூதாட்டி எதிர்காலத்தின் திசையறிய முடியுமா என்ன? நடப்பது நடக்கட்டும் என்னும் நம்பிக்கையோடு நாள்களைக்; கடத்துகிறாள். கடத்துகின்ற நாள்களுக்கு அவளுக்குத் துணையாக வருவது அந்தச் சுருக்குப்பையாம். வாழ்க்கைக் கவலைகளில் அவள் விட்ட பெருமூச்சுக்கள் கடற்கரைக்குப் போயிருந்தால் கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்!. அந்த வாழ்க்கைக் கவலைகள் எல்லாம் எதிர்நாட்டுப் படைகளாம். இவள் தனனந்தனியே அவற்றை எதர்க்கிறாளாம். கையில் ஆயுதம் வேண்டுமல்லவா? அந்த ஆயுதம்தான் ;இந்தச் சுருக்குப்பையாம்! அதனுள் பள்ளிகொண்டிருக்கும் பொக்கிஷங்களாம். அவை தருகின்ற நம்பிக்கைகளாம்! அச்சுறுத்தும் எதிர்காலமாகிய எதிரியைத் தனியொருத்தியாகக் களம் காண்பதற்கு அவளுக்குத் துணையாக இருப்பது இந்தச் சுருக்குப்பை தரும் நம்பிக்கையாம்! எவ்வளவு அழகான படிமம்?

    “கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் !

    ஜீபூம்பா என்பது கடந்த கால நினைவுகளுக்கான குறியீடு. அந்நினைவுகள் நேர்முகமாகவோ எதிர்மறையாகவோ மகிழ்ச்சியைத் தருவனவாகவோ வருத்தத்தைத் தருவனவாகவோ அமைந்திருக்கலாம். அத்தனையையும் பூட்டி அந்தப் பைக்குள் கட்டி வைத்திருக்கிறாளாம். மூதாட்டியின் வாழ்நாள் டைரியே அதுதான் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    அங்கத்தின் உறுப்பில் ஒன்று

    வாழ்க்கையின் அவலப் பகுதிகளைப் பாடுகிறபோது அழகியலும் கற்பனையும் சற்று தூக்கலாக அமையும் அமையவேண்டும். . சிலப்பதிகார மதுரைக்காண்டத்தின் இறுதிப்பகுதியும் கம்பராமாயணத்தின் யுத்தகாண்டமும் இந்தக் கருத்தினை உறுதி செய்யும். விரிப்பின் பெருகும். முதுமை வாழ்க்கையின் இறுதிப் பருவம். சுருக்குப்பை அதன் அடையாளம். இவை அவலப்பகுதிகள். அவலக்கூறுகள். இவற்றைப் பாடுகிறபோது அங்கே கற்பனையும் அழகியலும் கவிஞனுக்குத் தெரியாமலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்  அது நல்ல கவிதையாக இருந்தால்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!

    உலகத்தை உறறு நோக்கியிருக்கிறார் வசந்தராசன்! ‘கையறி மடமை’ என்பார்கள். சமையல் செய்யும் போது மற்றவர்களிடம் பேசிக்கொண்டே சமையற் பொருளுக்கான அளவைப் பார்க்காமலேயே எடுத்துப் போடுவதைப் பாரத்திருக்கலாம். கண்ணின் துணையிலலாமலேயே கை செய்யும் பணி அது. ஓட்டுநர் கண் சாலையில் இருக்கும். அவருடைய கால்கள் பிரேக்கில் இருக்கும். அது தானாகச் செயல்படும். தட்டச்சு செய்வர்கள் திரையைத்தான் பார்ப்பார்கள். விசைப் பலகையை விரல்கள்தாம் பார்க்கும். பூக்கடடுகிற பெண்களைப பார்த்திருக்கலாம். விரல்கள தொடுக்கும். விழிகள் அலைபாயும். இவைபோலவேதான் மூதாட்டி சுருக்குப்பையின் திறப்புவிழா நடைபெறுகிறது. ‘கைவிரலே கயிறவிழ்க்கும்! விரல்கள் கண்ணாய் மாறும்! சுருக்குப்பையின் திறப்புவிழாவில் நேரில் கலந்து கொள்ளாதவர்கள இந்த வரியை அவ்வளவாகச சுவைக்க முடியாது.

    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!

    தேடிவைத்த செல்வங்கள் இருக்கின்ற சுருக்குப்பை அது!. மயிலிறகு குடடிப் போடுகிறதா என்று பார்க்கும் குழந்தைகள் போல அந்தப் பையை அடிக்கடி திறந்து மூடுதற்குக் கவிஞன் ஒரு காரணத்தைச் சொல்கிறான். அவள் உயிர் அதற்குள் இருக்கிறதாம். பைக்குள் இருக்கிற உயிரைப் பாதுகாக்கிறாளாம் மூதாட்டி. உயிர் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல திறக்கிறாளாம். பாரக்கிறாளாம் மூடுகிறாளாம். தற்குறிப்பேற்ற அணியை விளக்கம் ஆசிரியப் பெருமக்களின் கவனத்திற்கு வரவேண்டிய வரிகள்.

    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ் வெல்லாமே அதனுள் வாழும்!

    தூக்கத்தில் கூட தன்னையறியாது தன்னருகில் தன் குழந்தை படுத்திருக்கிறதா என்று கைதடவி அறிந்து கொள்ளும் தாயைப் போலச் சுருக்குப்பையைத் தடவிக்கொண்டு உறங்குகிறாளாம் மூதாட்டி! இறந்தகாலத் துக்கமும் நிகழ்கால் மகிழ்ச்சியும் அந்தப் பைக்குள்ளே வாழுகிறதாம். மூதாட்டியின் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சுருக்குப்பையின் புதையல்கள் அடையாளப்படுத்துகின்றனவாம். ‘துக்கமகிழ்வெலலாமே அதனுள் வாழும்!

    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!
    என்னும் வரிகளில் சுருக்குப்பையின் உள்ளீட்டை அடிபபடையாகக் கொண்டு அதனை அருங்காட்சியகம் என்கிறார். ‘அருங்காட்சியகம் என்னும் சொல் ஏதோ மோனைக்காககப் போடப்பட்டதன்று. பொருள் பொதிந்த சொல். அருங்காட்சியகம் என்பது கழிந்தவைகளின் மண்டபம். பழைமைப் பெட்டகம். இன்று கரண்டவம் கிடையாது. வெற்றிலைச் சருகு கிடையாது. புகையிலைக் காம்பு கிடையாது. எட்டாக மடிக்கப்பட்ட நோட்டு கிடையாது. சிலலரைக் காசுகள் கிடையாது. ஊக்கு கிடையாது. பல்குச்சி கிடையாது. சுருக்குப் கிடையாது இவ்வளவு ஏன்? மூதாட்டிகளே கிடையாது. இருப்பார்களேயானால் அவர்கள முதியோர் இல்லத்தில் அல்லது காப்பகத்தில்! எனவேதான மேற்கண்டவற்றைப பார்க்க வேண்டுமென்றால் எங்கோ ஓர் மூதாட்டியிடம் தான் காணமுடியும். அதனால் அது அருங்காட்சியகம். கீழடிக்கு நாம் சென்றுதான் பார்க்க வேண்டும் கீழடி நம்மை நோக்கி வராது.

    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    என்னும் இரண்டு வரிகளும் முதல் விருத்தத்தில் இருந்தாலும் மாலை மாற்று என்பதுபோல இறுதி வரியாகவும் கொள்ளலாம். இங்கே ஒரு வித்தையைச் செய்து காட்டுகிறார் கவிஞர். கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல். பெருக்கலின் சுருக்கம் கூட்டல் அன்று. ஆனால் பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை போடுகிற கிழ முதுமை” என்கிறார்.  இளமை முதுமையாகும். ஆனால் முதுமை இளமையாகாது. சுறுசுறுப்பாகச ;செயல்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று அது பின்னமாகி நிற்கிறது. சில நொடிகளில் திறக்க வேண்டிய சுருக்குப்பையைத் திறக்க இரண்டு நிமிடம் தேவைப்படுகிறது. ஒரு வெற்றிலைச் சருகின் காய்ந்து போன காம்பினைக் கிள்ள சில நிமிடம் தேவைப்படுகிறது. கரண்டவத்தைத் திறந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பு தடவிக்கொள்ள சில நிமிடங்கள். இப்படி முதுமையில் ஒவ்வொரு நொடிச்செயலையும் நிமிடக்கணக்கில் நிகழ்த்துகிறார் மூதாட்டி. இங்கே பெருக்கல் கூட்டலாகிறது. நிமிடங்கள் நொடிகளாவது இளமை. நொடிகள் நிமிடங்களாவது முதுமை. அதனால்தான் பெருக்கலின் சுருக்கம் கூட்டல் ;என்று முரணமைத்துக் காட்டுகிறார் கவிஞர்!. அழகான ஆழமான சிந்தனையல்லவா? எண்ணிப் பார்க்கத் தூண்டும் கற்பனையல்ல்வா? என்னதான் திறனாய்வு என்றாலும் கத்தியால் அறுக்கப்பட்ட மாம்பழத் துண்டைவிட பற்களால் கடித்துத் தின்னும் மாம்பழத்தின சுவையே தனி. வாசகர்கள் சுருக்குப்பை பற்றிய இந்த நான்கு விருத்தங்களையும் படித்து உணர வேண்டும். உணர்ந்து படிக்க வேண்டும். உள்ளத்தில் இருத்த வேண்டும். கவிதையைச் சுவைப்பது பசு அசைபோடுவதைப் போல!

    சுருக்குப்பை வாய்திறந்தால் வேர்வை வாசம்!
    சுண்டுகிற ‘நாணயங்கள்’ நின்று பேசும்!
    கருக்கல்வாய்த் தாம்பூலப் புதையல் கொஞ்சம்
    இருட்டுக்கடை அல்வாபோல் இனிக்கும் நெஞ்சம்!
    சுருக்கிவைத்த செலவினத்தின் எச்சம் மிஞ்சும்!
    சுற்றளவில் இடைசிறுத்து இடுப்பில் தொங்கும்!
    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    பல்குச்சி வெற்றிலைப்பாக் குச்சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி!
    மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்
    மூவுலகை முடக்குகின்ற திறவு கோல்கள்!

    முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!
    உடைமைகளின் கீழடிகள்!தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்!
    படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்!
    கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் ! சுருக்குப் பைகள்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!
    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!
    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ்ச்சி எல்லாமே அதனுள் வாழும்!
    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!

    நிறைவுரை

    பாடுபொருளின் தேர்ச்சியும் ஒரு கவிதை வெற்றி பெறுவதற்கான காரணிகளில் ஒன்று என்பதை இந்தக் கவிதை உறுதி செய்திருக்கிறது. அகம் புறம் என்னும் பழந்தமிழ்க் கவிதைப் பாகுபாட்டிலும் முதுமை ஒரு பாடுபொருளாக இருக்கவில்லை. நீதிகளை மையமாக வைத்த காப்பியங்களிலும் முதியவர்கள் பாத்திரங்களாக வந்து போனார்களே தவிர, முதுமையின் அவலம் பாடுபொருளாகவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகுதான் பருவநிலைகள் பாடுபொருளாக்கப்பட்டன. நல்குரவு என்று ஒற்றைச் சொல்லில் வள்ளுவர் பாடினார். இளமையின் பரப்பினைப் பாடிய அளவுக்கு முதுமையின் சுருக்கங்களைத் தமிழ்க்கவிதையுலகம்  பாடவில்லை.  சிலம்பு, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சிந்தாமணி என்று மங்கையின் உறுப்பணிகளைப் பெயர்களாக வைத்த புலவர் பெருமக்கள் பார்வையில் சுருக்குப்பை படவேயில்லை! அவர்களுக்கு இடுப்பின் மேகலை தெரிந்தது. சுருக்குப்பை தெரியவில்லை. அவலம் என்பது இந்தச் சுருக்குப்பையின் படிமம்.  “கிழ முதுமையின் மாங்கல்யப் பை’ என்னும் படிமத்தில் சுருக்குப்பையை மணமகளாகவும் கயிற்றை மாங்கல்யமாகவும் காடடியிருக்கும் கவித்திறன் எண்ணி வியக்கத்தக்கது. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைக் கூறுகள் நான்கனுள் எண்சீர் விருத்தம் என்பது மிகச் சாதாரணமான வடிவம். ஏனைய மூன்று கூறுகளிலும் முழுமை பெற்று நிற்கும் இந்தக் கவிதையில் கவிஞனின் கூரிய நோக்கும் புதுமை பாடும் போக்கும் சமுதாய தாக்குறவும் கலந்த நிலையில் ஓர் அழகியல் தன்னையே ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதைக் காணலாம்.

    (தொடரும்)

    Share
  • வஞ்சியின் நெஞ்சறிய…

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவியோடு தினைப்புனம் காக்கப் புறப்பட்டாள் அவள் ஆருயிர்த் தோழி. வழியெல்லாம் பேசிக்கொண்டு கலகலப்பாக வரும் தலைவி சில நாட்களாக அதிகம் பேசுவதில்லை; தோழி பேசியவற்றுக்கு மறுமொழியாகச் சில வார்த்தைகளை உதிர்ப்பதோடு சரி! தவிரவும் எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பதை அவள் முகக்குறிப்புக் காட்டுகின்றது. ஏன்… உணவு உண்பதில்கூட நாட்டம் அதிகமில்லை அவளுக்கு. இதன் காரணம் என்னவாக இருக்கும்? துறுதுறுப்பான பெண் திடீரென்று சோர்வாய்த் தெரிவதும், சிந்தனையில் ஆழ்வதும் புதிராக அல்லவா இருக்கின்றது? என்று சிந்திக்கலானாள் தோழி.

    அப்போது அவளது எண்ணத் திரையில் வண்ண ஓவியமாய்த் தோன்றினான் அந்த எழில்மிகு இளைஞன். தான் தேடிவந்த யானை அந்தப் பக்கமாக வந்ததா என்று தலைவியும் தோழியும் நின்றிருந்த இடத்தருகே வந்து சில நாட்களுக்கு முன்பு கேட்டான் அவன். தலைவியைக் கண்டதும் அவன் பார்வை அவள்மீதே நிலைக்குத்தி நின்றது; தலைவியும் அவனைக் கண்டு நாணத்தோடு தலைகுனிந்தாள். அதன்பிறகு அவன் அடிக்கடி இந்தத் தினைப்புனத்தருகே தென்படுகின்றான். ஒருவேளை நான் தலைவியோடு தினைப்புனக் காவலுக்கு வாராத சமயங்களில் இவர்களுக்குள் காதல் அரும்பத் தொடங்கிவிட்டதோ? எதுவாக இருந்தாலும் இன்றைக்கு அதைக் கண்டுபிடித்துவிடுகின்றேன் என்று தீர்மானித்தாள். அப்போது தினைப்புனக் காவலுக்காக வழக்கமாகத் தலைவியும் தோழியும் அமரும் மரத்தின் பரணருகே அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.

    பரணில் ஏறி இருவரும் அமர்ந்த சற்றுநேரத்தில் ’கீக்கீ’ என்று கத்திக்கொண்டு கிளிக்கூட்டமொன்று தினைகளைக் கவர்வதற்காகப் பறந்து வந்துகொண்டிருந்தது. தட்டை, குளிர், தழல் ஆகிய கிளி கடியும் கருவிகளை முழக்கிக் கிளிகளை விரட்டினர் இருவரும். வஞ்சியரின் கருவிகள் எழுப்பிய ஒலியால் அஞ்சிப் பறந்தன கிளிகள்.

    தலைவி ஏதாவது பேசுவாள் என்று தோழி எதிர்பார்த்தாள்; ஆனால் அவளோ  பேசாமடந்தையாய் அமர்ந்திருந்தாள். அவளின் அழகிய முகத்தில் அங்குமிங்கும் பிறழும் நீலமலர்போன்ற கண்களின் வனப்பில் இலயித்த தோழி, ஒரு வேடிக்கை செய்து இவள் உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வரவழைத்துவிடுகின்றேன் என்று நினைத்துக்கொண்டு தலைவியைப் பார்த்து, ”உன்னிடம் ஒரு விசயத்தைச் சொல்லவேண்டும் என்று சில நாட்களாகவே நினைக்கிறேன்; ஆனால் தயக்கத்தின் காரணமாகத் தவிர்த்துவிடுகின்றேன்” என்றாள் பீடிகையோடு.

    ”தன்னைப் பற்றி ஏதேனும் சொல்லப்போகிறாளோ” எனும் பதற்றம் தலைவியைத் தொற்றிக்கொண்டது. அதனை மறைத்தவளாய், “என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? தயங்காமல் உடனே சொல்!” என்றாள் சிறிது தடுமாற்றத்தோடு.

    ”அதுவந்து…அழகாகத் தொடுக்கப்பட்ட கண்ணியை அணிந்தவனாய்க் கையில் வில்லோடு, வலிமையான விலங்கின் காலடியைத் தேடிக்கொண்டு வருவதுபோல் இப்பக்கமாக இளைய ஆடவன் ஒருவன் வந்துபோகிறான்…” என்று சொல்லி நிறுத்தினாள் தோழி.

    கேட்டுக்கொண்டிருந்த தலைவிக்கு உள்ளூற உதறல் எடுத்தது; அதை மறைத்துக்கொண்டு, ”மேலே சொல்!” என்றாள்.

    ”நான் வரும் வழியில் என்னையே எதிர்நோக்கி நிற்பவன்போல் நிற்கிறான் அவன்; அதை வெளிப்படையாக வாய்விட்டுச் சொல்கிறானா என்றால் இல்லை; அவனுடைய முகக்குறிப்பை வைத்து அவனுக்கு என்னால் ஏற்பட்டிருக்கும் காதல்நோயை அறிந்தேன்; இவ்வாறே பல நாட்களாக ஏதும் சொல்லாமல் வந்துபோகிறான்” என்று சொல்லிவிட்டுத் தலைவியின்மீது பார்வையைச் செலுத்தினாள் தோழி. தலைவி ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

    விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தவள், ”ம்ம்ம்…எனக்கும் அவன் நினைவால் பாயில் படுத்தால் உறக்கமில்லை; காதல்நோயால் நெஞ்சில் நிம்மதியில்லை. ஆணாக இருந்துகொண்டு அவனே தன் காதலை உரைக்காதபோது பெண்ணான நான் எப்படிச் சொல்வது? எனினும், எனக்கும் அவன்பால் அன்பு உண்டு என்பதை அவன் அறியாமல்போனால் எங்கே என்னைவிட்டு நீங்கிவிடுவானோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது; அவன் நினைவால் என் தோளும் மெலிந்தது; இதற்கொரு முடிவுகாண வேண்டும் என்று எண்ணினேன்; அதனால் நாணத்துக்கு விடைகொடுத்துவிட்டுத் துணிச்சலாய் ஒரு காரியம் செய்தேன்” என்றாள் தோழி.

    தலைவியின் இதயத்துடிப்பு எகிறியது. அதனை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு, “என்ன செய்தாய்?” என்று கேட்டாள் மெல்லிய குரலில்.

    ”அதுவா?” என்று நகைத்த தோழி, ”நம் தினைப்புனத்தருகே கட்டப்பட்டிருக்கின்றதே ஊஞ்சல், அதிலேறி நான் ஆடிக்கொண்டிருந்தேன்; அப்போது அவன் அங்கே வந்தான். ”ஐய! நான் ஆடுவதற்கு வசதியாக இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டிவிட முடியுமா?” என்று அவனைக் கேட்டேன்; அதற்காகவே காத்திருந்தவன்போல் ”நல்லது, இதோ ஆட்டிவிடுகிறேன்” என்று விரைந்துவந்து ஊஞ்சலை ஆட்டினான். அப்போது கைப்பிடி நழுவி வீழ்வதுபோல் நான் அவன் மெய்மீது மெய்யாகவே விழுந்தேன்!” என்றாள் தலைவியைக் குறும்பாய்ப் பார்த்தபடி.

    ”ஐயோ…அப்புறம்?” என்றால் தலைவி திகிலோடு!

    ”அப்புறமென்ன? ஊசலாட்டத்தால் நான் தலைசுற்றி மயங்கி விழுந்துவிட்டதாக நினைத்த அவன், என்னை விரைந்து அள்ளிக்கொண்டான். நானோ உணர்விழந்தவள்போல்  நடித்துக்கொண்டு அவன் மார்பின்மீது நெடுநேரம் சாய்ந்திருந்தேன். பின்னே? நான் தன்னுணர்வோடு இருப்பதை அவனறிந்தால் என்னைத் தன் மார்பில் தாங்கிக்கொள்வானா? பண்பாடு மிக்கவனான அவன், பெண்ணே! எழுந்திரு…விரைவாக வீடுசெல்! என்றல்லவா, பிறரறியாமல், என்னை அனுப்பியிருப்பான்!” என்று தன் திறமையைத் தானே வியப்பவள்போல் கூறிவிட்டுத் தலைவியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.

    தலைவியின் கண்களில் கண்ணீர்முத்துக்கள் திரண்டு வெளியில் விழக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்ட தோழி அதனைத் தாளாமல், ”அடி கள்ளி! உன் உள்ளத்தை உணரத்தான் இவ்வாறு இட்டுக்கட்டிச் சொன்னேன்; அதனை மெய்யென்று நம்பிவிட்டாயா? என்று கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

    தலைவி அவளைத் திகைப்போடு பார்க்கவே, ”நீயும் அந்த ஆண்தகையும் காதலிப்பது எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்? அதனை உன்மூலம் அறியவே இந்தத் திருவிளையாடல்!” என்றுகூறிவிட்டுத் தலைவியின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினாள்.

    தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை அறிந்த தலைவி வெட்கத்தோடு தோழியின் தோளில் சாய்ந்தாள்.

    இந்தச் சுவையான நிகழ்வைத் தாங்கியிருக்கும் கலித்தொகைப் பாடலிது.

    கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
    வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
    கண்ணியன் வில்லன் வரும்என்னை நோக்குபு
    முன்னத்திற் காட்டுதல் அல்லது தானுற்ற
    நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்
    பாயல் பெறேஎன் படர்கூர்ந்து அவன்வயின்
    சேயேன்மன் யானும் துயருழப்பேன் ஆயிடைக்
    கண்ணின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்
    பெண்ணன்று உரைத்தல் நமக்காயின் இன்னதூஉம்
    காணான் கழிதலும் உண்டென்று ஒருநாளென்
    தோள்நெகிழ் புற்றதுயரால் துணிதந்து ஓர்
    நாணின்மை செய்தேன் நறுநுதால் ஏனல்
    இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
    ஊசலூர்ந்து ஆட ஒருஞான்று வந்தானை
    ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத்
    தையால் நன்றென்று அவனூக்கக் கைநெகிழ்பு
    பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் வாயாச்செத்து
    ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்
    மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ஆயிடை
    மெய்யறிந்து ஏற்றெழுவேன் ஆயின்மற்று ஒய்யென
    ஒண்குழாய் செல்க எனக்கூறி விடும்பண்பின்
    அங்கண் உடையன் அவன்.
    (குறிஞ்சிக்கலி – 37: கபிலர்)

    இங்கே தலைவியின் களவொழுக்கத்தை (காதல்) அறிந்து அவளுக்கு உதவுவதற்காகவே தோழி பொய் சொல்கின்றாள். எனவே, நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்ட இந்தப் பொய்யும் மெய்யின் இடத்தைப் பெறுகின்றது எனலாம்.

    ”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்
    ” (292) என்பது வள்ளுவமன்றோ?

    தலைவியின் நலன்கருதித் தோழி அவளிடமும் தலைவனிடமும் இன்னபிற அகத்திணை மாந்தரிடமும் இவ்வாறு கற்பித்துச் சொல்வதை (fabrication) ’படைத்து மொழிதல்’  என்கின்றது தமிழிலக்கணம்.

    [படம், செய்யறிவு மென்பொருளின் துணையோடு நான் உருவாக்கியது.]

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
    2. https://vaiyan.blogspot.com/2017/01/37-kalittogai-37.html
    3. https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-kalithokai-37-65-kurinji/
    4. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    Share
  • சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

    சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பக்தி என்னும் கருவினை எந்த மொழியும் இலக்கியம் ஆக்கியதே இல்லை. ஆனால் பக்தியை உயர்வாக்கிப் பார்த்து அதனை இலக்கியமாய் காட்டிய பெருமை எங்கள் அன்னைத் தமிழ் மொழிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. “பக்தி இலக்கியம்” என்று ஒரு பெரும் பகுதியை தமிழ் மொழியானது தன்னுடை இலக்கிய வரலாற்றில் கொண்டிருக்கிறது என்பதும் முக்கியம் எனலாம். பக்தி இலக்கியம் என்னும் பெருவெளியில் ஆண்களும் வருகிறார்கள். பெண்களும் வருகிறார்கள். பக்தி இலக்கியப் பாதையில் முகிழ்த்த பாடல்கள் அத்தனையும் – இறையருளைப் பற்றியன வாக இருந்த பொழுதும்; அவை அத்தனையும் அன்னைத் தமிழின் அழகோவியமாய், அருங்கருத்துக்களை அடக்கியவனாவாய், இலக்கியச் சுவைகளை ஈவதாய், புலவர்க்கெல்லாம் நல்விருந்தாய், தமிழுக்கே பெரும் பொக்கிஷமாய் வாய்த்த நல் வரமென்றே எண்ண வேண்டி இருக்கிறது. அந்தப்பக்தி இலக்கிய வெளியிலே காலத்துக்காலம் ஆண்டவன் அருளால் பல அருளாளர்கள் வந்து இணைகிறார்கள். அந்தவகையில் ஈழத்தில் நல்லை நகரில் நாவலர் பெருமான் வருகின்றார். அவரின் அடிபற்றி  எங்கள் சைவத்தின் கொழுந்து, சைவ வழி பற்றிட வருகின்றார் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்கள்.

    காரைக்கால் அம்மையார், திலகவதியார், மங்கையற்கரசியார், வழியில் பயணப்பட வந்தமைகின்றவராய்  எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பார்க்கின்றோம். முன்னவர்கள் வாழ்ந்த காலமும், சூழலும் வேறாகும். அதனால் அவர்களின் செயற்பாடுகளும் அக்காலத்துக்கு இயைபானதாக ஆகியிருந்தது. ஆனால் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் வாழ்ந்த காலமும், சூழலும் – அவரின் செயற்படுகின்ற பாங்கினைத் தீர்மானித்தது என்பதை மனமிருத்துவது முக்கியமாகும்.

    சாதாரண குடும்பத்தில் சாதாரண பிள்ளையாகவேதான் தங்கம்மா அவர்கள் பிறக்கிறார்கள். அவர் பிறக்கும் வேளை எந்தவொரு அதிசயங்களோ, அற்புதங்களோ நிகழ வில்லை. சாதாரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே படித்தார். சாதாரணமாகவே ஒரு ஆசிரியர் வேலையும் பார்த்தார். ஆனால் அவர் மற்றவர்களைப்போல்  “சாதாரண மானவர் அல்ல, சாதிக்கப் பிறந்த சன்லே எழுதி வைத்துவிட்டான் என்பதுதான் யதார்த்தமாகும். இப்படியானவர்களைத்தான்  “கருவிலே திருவுடையார்”, “வரம்பெற்று வந்தவர்”, என்று வியந்து நிற்கிறார்கள் போலும். வரம் பெற்மார்க்க நங்கை என்பதை இறைவன் ஏற்கனவே அவரின் பிறப்பிறு வந்த காரணத்தால், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் – தம் காலத்தில் செய்ய வேண்டிய சிறப்பான அத்தனையும் செய்து பயன் மிக்கவராய் ஒளிவிட்டு நின்றார் என்றால் அஃது மிகையாகாது.

    தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பல பரிணாமங்களில் பார்ப்பதுதான் உகந்ததாகும். சைவத்தை நன்கு கற்று சைவப் புலவர் ஆகுகின்றார். தமிழை முறையாகக் கற்று தமிழ்ப் பண்டிதர் ஆகுகின்றார். அத்துடன் ஆசிரிய பயிற்சியையும் பெற்று நல்லா சிரியராகவும் மிளிர்கிறார். 

    இலங்கையின் பல பகுதிகளில் கற்பித்து யாவரையும் நன்கு அறிந்தும் கொள்ளுகின்றார். கற்பிக்கும் வேளை கருத்தூன்றிக் கற்பித்து கற்கின்றவர்கள் மனத்தில் நற்கருத்துக்களையும் ஊன்றுகின்றார். வேலைபார்த்த இடமெல்லாம் வேலையெனக் கருதாமல் அதனை ஆத்மார்த்தப் பணியாக அகமிருத்தி மேற்கொள்ளுகின்றார். ஆசியரியப் பணியை அகமிருக்கும் அழுக்குகளை அகற்றிடும் பணியாகவே எண்ணிச் செயற்படுகின்றார். இதனால் அன்னையாய், அறிவூட்டும் ஆசானாய் மதிக்கவும்படுகிறார் என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

    அழகானவர் தங்கம்மா அவர்கள். அறிவானவர் தங்கம்மா அவர்கள். இளமையில் அவரைப் பார்த்தவர்கள் அவர் வசம் ஈர்க்கவே படுவார்கள். சாதாரண பெண்தானே அவரும். ஆனால் அவர் மனத்தில் லெளகீகம் பற்றிய சிந்தனைக்கே இடம் இல்லாமல் போய் விடுகிறது. அவர் சிந்தனை எல்லாம் – சைவம் பற்றியும், சன்மார்க்கம் பற்றியும், சமூகம் பற்றியுமே சென்று விடுகிறது. இல்லறத்தில் தங்கம்மா அவர்கள் இணைந்திருந்தால் – சாதாரண ஒரு குடும்பத் தலைவியாய், பிள்ளைச் செல்வங்களுடன் வாழும் நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரிடம் எழுந்த அரிய சிந்தனையால் – அனைவருக்கும் அன்னையாய், அநேக குழந்தைகளின் வழிகாட்டியாய், சமுதாயத்தின் சேவகியாய், சைவத்தின் காவலராய், தமிழ் பெரும் ஆளுமையாய், யவரும் வியந்து பார்த்து வாழும் வாய்ப்பு வாய்த்தது என்பதை எவருமே மறுத்து ரைத்து விடல் முடியாது.

    தெல்லிப்பளையில் பிறந்தவர்தான் தங்கம்மா அவர்கள். அவரின் முன்வினைப் பயனாகவேதான் சாதாரண சிறிய கோவிலான துர்க்கை அம்மன் கோவில் தென்படுகிறது. அந்தத் துர்க்கை அம்மாதான் எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மாவின் வாழ்வி னையே மாற்றப் போகிறது என்பதை எவருமே எதிர்பார்க்கவே இல்லை. ஏன்.. தங்கம்மா அவர்களே எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். இதைத்தான் திருவருள் என்று எண்ணத் தோன்றுகிறது. தெல்லிப்பளையில் பிறந்தவரின் சமய, சமூக, ஆன்மீக, அறப்பணிகள் தமிழ்ப்பணிகள், அத்தனையும் ஆரம்பிக்கும் இடமாக அன்னை துர்க்கையின் ஆலயமே நிலைக்களனாக அமைகிறது அமைந்தது என்பதை அனைவரும் அகமிருத்துவது மிக மிக அவசியமாகும். சாதாரண தமிழ்ப்பண்டிதர், சைவப்புலவர், பயிற்றப்பட்ட ஆசிரியர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் “துர்க்கா துரந்தரி” என்று போற்றப்படுவதற்கும் நிலைக்களனே தெல்லிப்பளையில் சாதாரணமாய் இருந்த துர்க்கை அம்பாளின் சிறிய கோவிலே ஆகும். தங்கம்மா அவர்கள் துர்க்கை அம்பாள் கோவிலைக் கண்டதுதான் அவரின் வாழ்வில் மிகப் பெரிய தருணம், மிகப்பெரிய திருப்பு முனை என்று எண்ண முடிகிறதல்லவா !

    நாவலரை நன்றாகவே மனத்தில் பதித்திருக்கிறார் தங்கம்மா அவர்கள். அதனால் அவரின் தடம் பற்றி நடக்க முற்பட்டிருக்கிறார். நாவலர் பெருமானின் பின்னர் – புராணங்கள், திருமுறைகள், சைவசமயச் சிந்தனைகளைக் கோவில்களில் யாவரும் கேட்டிடப் பிரசங்கம் செய்யும் பாங்கு இல்லாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய சூழலில் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அந்தப் பணியை ஆத்மார்த்தமாய் அகமிருத்தி ஆலயங்கள் தோறும் இடைவிடாமல் பிரசங்களை அழகு தமிழால் தக்க எடுத்துக் காட்டுக்களுடன் மிகவும் பக்குவமாய் செய்தமை மீண்டும் நாவலர் யுகம் தோன்றி விட்டதோ என்றே எண்ணிட வைத்தது. தங்கம்மா அவர்களின் சைவப் பிரசங்கங்கள் இலங்கையில் எல்லாக் கோவில்களிலும் இடைவிடாது இடம் பெற்றன. இலங்கை மட்டும் அல்லாது – இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளிலும் அவரின் பிரசங்கங்கள்  இடம் பெற்றன என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

    பேச்சுடன் நின்று விடாமல் எழுத்திலும் தன்னுடைய ஆளுமையினைப் பதித்தும் நின்றார். “கந்த புராணச் சொற்பொழிவுகள்” நூல் மிகவும் கருத்தாளம் மிக்க நூல். இந்த நூலின் பெறுமதியை வியந்து பாராட்டி இலங்கை அரசாங்கம் 1978 ஆம் ஆண்டு ” சாகி த்திய மண்டல விருதினை”  வழங்கியது. 

    தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சைவசமயத் தொண்டினையும் சொற்பெருக்காற்றும் ஆற்றலையும் வியந்து மதுரை ஆதீனத்தால் “செஞ்சொற் செம்மணி” பட்டம் வழங்கப்பட்டது. காரைநகர் மணிவாசக சபையினால் “சிவத்தமிழ் செல்வி”, தமிழ் நாடு இராகேசரி பீடாதிபதியினால் “சைவதரிசினி”, சிலாங்கூர் மலேசியா இலங்கைச் சைவச் சங்கத்தினால் “திருவாசகக் கொண்டல்”, வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தினால் “திருமுறைச் செல்வி”, ஈழத்துச் சிவனடியார் கூட்டத்தால் ‘சிவமயச் செல்வி” அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் “சிவஞான வித்தகர்”, “தெய்வத் திருமகள்” ஆகிய இரண்டு விருதுகள், துர்க்காதேவி தேவஸ்தானத்தால் “துர்க்கா துரந்தரி”, மாதகல் நுணசை முரு கமூர்த்தி தேவஸ்தானத்தினால் “செஞ்சொற் கொண்டல்”, இணு வில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானத் தினால் “திரு மொழி அரசி” கொழும்புக் கம்பன் கழத்தால் “கம்பன் புகழ் விருது”, என எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை நாடிப் பட்டங்கள் வந்து குவிந்தன. அம்மா அவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைப்புகள் அத்தனையும் – பட்டங்களை வழங்கியதால் பெரும் பேற்றினைப் பெற்றதாகவே எண்ணிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களுக்குப் பல பட்டங்கள் வந்து அமைந்தாலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தால் வழங்க ப்பட்ட “சிவத்தமிழ் செல்வி” என்னும் பட்டந்தான் மிகவும் சிறப்பானதாய் ஒளி விட்டு விளங்கியது எனலாம். தங்கம்மா என்றால் “சிவத்தமிழ் செல்வி” என்றே அனைவர் அகத்திலும் பதிந்து விட்டது என்பதை எவருமே மறுத்துரைக்க மாட்டார்கள். சிவ மயமாய் சிந்தித்து, சைவத்தைக் காத்திடும் அன்னையாய், காலத்தின் வருகையாய், ஏன் காலத்தின் காவலராய், விளங்கினார் என்பதுதான் உண்மையாகும். 

    அம்மா அவர்கள் தன்காலத்தில் சைவத்தின் குரலாகவே ஓங்கி ஒலித்தார். சைவத்தின் வளர்ச்சியை இளையவர் விளங்கிடவும், சைவ நம்பிக்கை தளர்ந்தவர் நிமிர்ந்திடவும், துணிவாய் அதேவேளை மிகவும் பக்குவமாய் யாவரும் பக்குவத்தைப் பெறும் வண்ணம் பல வற்றை ஆற்றினார். பலருக்கும் நல் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

    ஆன்மீகம் என்பது ஆலய வழிபாட்டுடன் மட்டும் நின்று விடுவதில்லை. ஆன்மீகம் என்பது அறம் சார்ந்ததாகும் என்று அம்மா அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். புராணங்கள் படிப்பதும், திருமுறைகளைப் போற்றுவதும், திருக்கோவில்களை வழிபடுவதும், நற்சிந்தனைகளக் கேட்பதும், அத்தியாவசியம் என்று அம்மா அவர்கள் கூறினார்கள். அதேவேளை ஆதரவற்றோரைக் காப்பதும், பசிப்பிணி போக்குவதும், கல்விக்கண்ணைத் திறப்பதும், நலத்தினைக்காக்க வழி வகுப்பதும் அவசியமானது என்பதையும் எங்கள் தங்கம்மா அவர்கள் எடுத்து உரைத்தார். உரைத்தோடு நின்று விடாமல் – தானே முன் வந்து “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” என்னும் அமைப்பினை நிறுவினார். “அன்னபூரணி அன்னதான மண்டபத்தை” அமைத்தார். அத்துடன் அமையாது  “கல்யாண மண்டம்” ஒன்றையும் அமைத் தார்கள். குறைந்த செலவில் கல்யாணங்களை நடத்துவதற்கு அதாவது வசதிகள் குறைந்தோரும் இல்லறமாம் நல்லறத்தில் இணைந்து இன்பமுற – அம்மாவின் இம்முயற்சி பெரும்பயனை அளித்தது எனலாம். இவை அத்தனையும் ஆன்மீகமே என்பதை நாமனைவரும் மனமிருத்துவது மிக மிக அவசியமாகும்.  

    எங்கள் தமிழ்ச் செல்வி யாழ் மண்ணின் மாசில்லா மங்கை, சைவத்தின் காவலர், சன்மார்க்க வழிகாட்டி, செந்தமிழ்ப் புலவர் சிறப்புடை ஆசானுக்கு – அமெரிக்க ஹவாய் சிவாயசுப்பிரமணிய சுவாமி ஆசிரிமம் 2005 ஆம் ஆண்டுக்கான “சிறந்த இந்துப் பணி ” விருதும். 2003 இல் வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் இலக்கியப் பெருவிழாவில் “வட கிழக்கு மாகாண ஆளுனர் விருதும்” வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கத்தால் “கலாசூரி” விருதும் வழங்கப்பட்டது. அம்மா அவர்களின் அனைத்துப் பணிகளையும் கருத்தில் கொண்டு கல்வி நிலையில், கற்பித்தல் நிலையில் உயர்ந்தோங்கி நிற்பது என்று எல்லோர் மனத்திலும் இடம் பெற்றிருக்கின்ற பல்கலைக்கழகமானது அதாவது யாழ் மண்ணில் பொன்னம்பலம் இராமநாதப் பெரியோனின் கனவாய் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாய் பேருருப் பெற்ற பல்கலைகழகம் எங்கள் சிவத்தமிழ்ச் செல்விக்கு “கலாநிதிப் பட்டத்தினை” வழங்கி கெளரவப்படுத்தியது. இந்தப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கியதால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமே பெரும் பேற்றினைப் பெற் றுக் கொண்டது எனலாம்.

    சைவத்தின் காவலராய், தமிழ் மொழியின் ஆளுமையாய், எங்கள் நாவலர் பெரு மான் திகழ்ந்தார். அவரின் தடம்பற்றி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களும் – சைவத்தையும் தமிழையும் கண்ணாகவே கருதினார். நாவலர் பெருமான் சமயப்பணி யோடு சமுகப்பணி யினையும் மேற்கொண்டார். அம்மாவும் அவ்வழியில் பயணப்பட்டார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். 

    நாவலர் பெருமானைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அவர் நடந்த மண்ணில் நடந்தும் இருக்கிறோம். அவரின் ஆற்றல்களை அவரின் வரலாற்றால் அறிந்தும் இருக்கிறோம். அவர் இம்மண்ணில் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கும் பாக்கியம் எமக்கெல்லாம் வாய்க்கவில்லை. ஆனால் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் காலத்தில் நாமெல்லோரும் வாழ்ந்தோம், அவருடன் பழகினோம், அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டோம், அவரின் ஆன்மீகப் பணிகளை அறப்பணிகளை, கண்டோம் வியந்தோம் என்பதே பெரும் பேறு என்றுதான் எண்ண வேண்டும். சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் களுக்குப் பின் அவரைப்போல் ஒரு ஆன்மீக, அறச்சிந்தனை மிக்க அருள் நிறைப் பெண்மணி யாழ்மண்ணுக்கு வாய்க்கவே இல்லை என்பதை எவருமே மறுத்து உரைத்திடல் முடியாது. 

    சைவத்தின் வழிநடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் ஆண்டவன் அருள் பெற்ற அருளாளர். சைவத் தமிழ் வரலாற்றில் சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்க ப்படுவது மிக மிக அவசியமானதாகும். 

    Share
  • வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைக் காலப் படை என்றதுமே நமக்கு நினைவில் வருவது தேர்ப்படை, யானைப்படை,  குதிரைப்படை, கால் ஆட்படை இவையே. இதற்கு மேல் படை குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. நாற்படைகள் இருந்தாலும் படை வீரர் அத்தனை பேரும் ஒரே சமமான அந்தஸ்தில் இருந்தனரா என்றால் இல்லை என்பதே விடை. தேர்ப்படை, யானைப் படைகள் பெரும்பாலும் வேந்தர், மன்னர், அரையர், படைத் தளபதிகள் போன்றோரால் செலுத்தப்பட்டன. அடுத்ததாக குதிரைப்படை. இதில் தகுந்த பயிற்சி உடைய போர் வீரர்கள் மட்டுமே குதிரை ஏறிப் போர் புரிந்தனர். எல்லா வீரரும் குதிரை ஏற முடியாது. இந்தியாவில் குதிரைகள் அரேபியாவில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன. இங்கே குதிரை இனப்பெருக்கச் சூழல் இல்லை என்பதே இதற்கு காரணம். இந்த குதிரைப் படை வீரர்களை விட மிக எளியோர் காலாட் படைவீரர்கள். இவர்கள் ஈட்டி, வேல், வாள், கோடாலி ஏந்திப் போரிட்டனர். இவர்கள் தான் போர்க்களத்தில் தேர், யானை, குதிரை வீரர்களுக்கு சூழ்காவலாய் இருந்தவர்கள் என்ற போதும் அந்தஸ்தில் அவர்களைவிட தாழ்ந்தவர்கள். இன்றும் கூட படையில் மேல் பதவிகள் கீழ்ப் பதவிகள் என்று இருப்பதை அறியலாம். இந்த அந்தஸ்து படையின் செயற்பாட்டிற்கும் மதிப்பிற்கும் தக்கவாறு அமைந்தது. இந்த அந்தஸ்து பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் தொழிலுக்கு தரப்பட்ட முக்கியத்துவ அடிப்படையில் அமைந்தது. படையில் இருந்த இந்த அந்தஸ்து நிலை தான் பின்னாளில் இந்தியச் சமூக நிலையிலும் மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கியது.

    இப்படி படையில் சேர்ந்து போர்க்களத்தில் நேரடியாகப் போரில் பங்குபெறுவோர் என்று இல்லாமல் படைக்கு தேவையான சில துணைத் தொழில்களும் இருந்தன. காட்டாக, ஆயுதம் செய்யும் கம்மியத் தொழிலான உலைக்களப் பணி, குதிரைச் சேணம், அம்பாரி செய்யும் பணி, தேர் செதுக்கும் பணி என்று சில துணைத் தொழில்களும் இருந்தன. இது போக படை மக்களுக்குத் சமையல் செய்வோர், நீர் மொண்டு வருவோர், பாதையில் குறுக்கிடும் புல், பூண்டு, செடி, கொடிகளை அகற்றுவோர், குதிரை இலத்தி யானை இலண்டம் அள்ளுவோர், குதிரை யானைகளுக்கு புல், தழை இடுவோர், போரில் காயமுற்றோர் இறந்தோரை களத்தில் இருந்து அகற்றுவோர், வீரர்கள், குதிரைகள், யானைகளின் போர்க் காயம் ஆற்ற மருத்துவர்கள், மூலிகை பறிப்போர் எனப் பல பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் போரிடாவிட்டாலும் படைக்கு மிக இன்றியமையாதவர்கள். இவர் இல்லாவிடின் படையை நடத்துவதோ பேணுவதோ மிகக் கடினம். ஆனாலும் போரில் உயிர் துறக்கும், வெற்றி தேடித் தரும் வீரர்களை விட குறைவாகவே இவர்கள் மதிக்கப்பட்டனர். மன்னர்களும், படைத் தளபதிகளும் இவர்கள் பணியைக் குறைவாகவே மதிப்பிட்டனர். ஒரு படை வீரனும் காவல் காப்போனும் தகுதியால், மதிப்பால் ஒன்றல்ல என்பதையே கல்வெட்டுகள் காட்டுகின்றன. காவல் காப்போரிலும் வாயில் காப்போர், சிறைக் காப்போர், அரண்மனை உட் காவலர் ஆகியோரில் தகுதியும் மதிப்பும் வேறுபட்டிருந்தன. அரண்மனைக் காவலர் உயர்குடியினராக நம்பிக்கைக்கு உரிய தம் சாதி மக்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் வாயில் காப்போருக்கு குறைவான மதிப்பே இருந்தது.

    இந்நாளில் ஒரு தொழிலகத்தில் பணிபுரியும் மேலாளர், பணியாளர் பதவியால் பொறுப்பால் வேறுபட்டாலும் பணி முடிந்த பின் இருவரும் ஒரே நாட்டின் சம அந்தஸ்துள்ள குடிமக்கள் என்று கருதி நடத்தப்படுகின்றனர். ஆனால் அந்நாளில் இப்படியான நிலை இருக்கவில்லை. பணி முடிந்த பின்னும் ஒரு கீழ்நிலைப் பணியாளர் மேல்நிலை அதிகாரிக்கு எந்நேரமும் கட்டுப்பட்டவர். இதற்கு வேலைநேர வரம்பு இன்மையே முகமைக் காரணம் ஆகும். பணியாளர் மட்டுமல்ல அவன் குடும்பத்தாரும் அதிகாரிக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலை தான் இருந்தது.

    ஒரு அரசன் தன் குடிமகன் என்ற அளவிலாவது தன் படை, காவல் கீழ்நிலைப் பணியாளரை நல்ல முறையில் நடத்த வேண்டும், நல்ல கருத்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பார்க்கப்பட்டது. ஆனால் 13 ஆம் நூற்றாண்டளவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடுநாடு எனப்படும் வாணகோப்பாடியை ஆண்ட வாணகோவரையரும் கிளியூரில் இருந்து ஆண்ட மலையமான்களும் தம் படையினரில் கீழ்நிலைப்பணியாளரை தரக்குறைவாக எண்ணியதும் நடத்தியதும் அவர்களுடைய புனிதமான கோவில்களில் கல்வெட்டாக பதிவாகி உள்ளன என்பது அவர்களது அதிகாரத் திமிரையும் ஆணவத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. படைப் பணியாளருக்கே இப்படியானால் இன்னும் உள்ள படைச்சாரா பணியாளரை அவர்கள் எப்படி நடத்தியிருப்பர்? இத்தகு தரக்குறைவான கல்வெட்டுகள் நடுநாடு தவிர்த்து தொண்டை நாட்டிலோ கொங்கு நாட்டிலோ சோழ நாட்டிலோ அல்லது பாண்டிய நாட்டிலோ காண்பதற்கு அரிதாகவே உள்ளன. மன்னர்கள், அரையர்களின் இத்தகு நடக்கை உடனே அடுத்த நிலை அதிகாரத்தவர், படைத் தளபதிகளுக்கும் பரவி உள்ளது. பின்பு அது மெல்ல சமூகத்தில் புலையர், வெட்டியான், பறையருக்கு இழிவான அந்தஸ்தை ஏற்படுத்தியது. படைத்துறையில் கீழ்நிலைப்பணி அதனால் தான் இந்த இழிவு என்றால் சமூகத்திற்கு அதனால் என்ன பாதிப்பு வந்தது? ஏன் அந்த இழி கருத்தை சமூகமும் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இழி கருத்து அடுத்தடுத்த நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி ஆளும் அதிகாரத்தாரால் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று வளர்ந்த போது இந்த சமூகத்தால் அதை எதிர்க்க முடியாமல் போனது. இறுதியில் அது தீண்டாமையாக 16 – 17 ஆம் நூற்றாண்டில் அயல் மொழியார் ஆட்சியில் வடிவம் கொண்டது. அதற்கு முன் இவர்களுக்கு தீண்டாமைக் கொடுமை இல்லை. எந்த மன்னராட்சியிலும் சமத்துவம் இருந்ததில்லை. வேட்டைச் சமூகத்தோடு சமத்துவம் ஒழிந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் புரட்டி உருட்டுவது என்னவோ மதமும் மதசுயநலவாதிகளும் தான் வேற்றுமையை விதைத்தனர் என்பர் நிலவுடமை சாதியார்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த முக்காலமும் அறிந்த சப்தரிஷிகளான பிரபாது ரஞ்சன் சர்க்கார், ஈசுவர பட்டர் ஆகியோர் இன்றைய எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் நாடாண்ட மன்னவர்களே காரணம் என்றனர். கீழ் உள்ள கல்வெட்டுகளையும் விளக்கத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு முகவுரையாகவே மேற்கண்ட தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாவிட்டால அதை விட அவமானம் வேறு இல்லை. அயல் மொழியாரின் பொய்களுக்கு காலம் எல்லாம் கட்டுண்டு கிடக்க வேண்டியது தான். இனி கல்வெட்டுகள்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதிரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியன ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 27 வது பாண்டியநாடு கொண்டானான சம்புவராயநும்
    2. செங்கேணி அத்திமல்லந் வீராண்டானாந எதிரிலி சோழச் சம்புவராயநும் அத்திமல்லந் பல்லவாண்டானான குலோத்துங்க சோழச் சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான  இராசராசச் சேதிராயநும் கிளி
    3. யூர் மலையமான் ஆகாரசூரந்நான இராசகம்பீரச் சேதிராயனும் குந்தந் நம்பூரலான இராசராச நீலகங்கரையனும் அம்மைஅப்பந் மருந்தந்நான  இராசராச மூவேந்தரையனும் பாவந்தீத்தாநான இராஜேந்திர சோழச் சம்புவராயன் மலையன் நரசிங்க பந்மனான கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வானும்
    4. சோமன் திருவெண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கநும் சோமந் வரந்தருவானான சோளேந்திரசிங்கப் பிருதிகங்கனும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து கல்வெட்டினபடியாவது நாங்கள் ஒருகாலமும் இராஜகாரியத்துக்குத்  தப்பாமே நின்று சேதிராய தேவர் அருளிச் செய்தபடியே பணி
    5. செய்யக்கடவோமாகவும் இப்படி செய்யும் இடத்து மகதை நாடாழ்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழ வாணகோவரையனும் பக்கல் ஆளாதல் ஓலையாதல் போகக் காட்டுத்தல் உறவுபண்ணுதல் அறுதிசெய்தல் செய்யக்கடவோ மல்லாதோமாகவும் இவர்கள் அநுதாரத்துள்ளார் ப
    6. க்கல் ஆளாதல் ஓலையாதல் போகக்காட்டி சில காரியம் பார்த்தல் உறவு அறுதி செய்தல் செய்யக் கடவோமல்லாதோமாகவும் இவர்களும் யிவர்கள் ளநுதாரத்துள்ளார் பக்கலி நின்றும் ஆளாதல் ஓலையாதல் வந்த துண்டாகில் தேவர் சீபாதத்திலே போகக் காட்டக் கடவோமாகவும் இராசராச சேதிராயர் பக்கல் இரா
    7. சகாரியத்துக்கும் சேதிராயதேவர் கருமங் எங்களில் ஒருவர் காரியத்துக்கு விரோதமாயிருப்பன சொல்லி ஆளாதல் ஓலையாதல் போகவிடக்கடவோ மல்லாதோமாகவும் இவரும் அனுதாரத்துள்ளார் பாடு நின்றும் இப்படி சொல்லி வந்ததுண்டாகில் இப்படிக்கு இசையாதே சேதிராயதேவர் _ _ _ ட்டக்கடவோ
    8. மாகவும் நாங்கள் அனைவரும் எங்களில் ஒருகாலமும் ஒருவர் வேறுபடாதே இராஜகாரியத்துக்கு தப்பாதே நின்று சேதிராயதேவர் அருளிச்செய்தபடி பணி செய்யக்கடவோமாகவும் எங்களில் ஒருவர் வேறுபட நின்று இராஜகாரியத்துக்கும் சேதிராயதேவர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச்  சில காரியம் பார்த்தாருண்டாகில் _ _ _
    9. ய்து தேவரும் நாங்களும் இவனை அறச்செய்யக்கடவோமாகவும் எங்களிலே ஒருவரை வாணகோவரையனாதல் குலோதுங்க சோழ வாணகோவரையனாதல் இராசராச காடவராயனாதல் வினை செய்தாருண்டாகில் படையுங் குதிரையும் முதலுக்கு நேராகக்கொண்டு _ _ _ _
    10. தக்கடவோமாகவும் இப்படிக்கு ஒருகாலமும் தப்பாதே நின்று செய்யக்கடவோமாகவும் இப்படி செய்திலோமாகில் வாணகோவரையனுக்கு கடை கா _ _ _ பறையற்க்கு செருப்பு எடுக்கிறோம். இப்படி சம்மதித்து
    11.  உடையார் திருவண்ணாமலை உடைய னாயனார் கோயிலிலே கல்வெட்டிக் குடுத்தோம் இவ்வனைவோம்.

    தப்பாமே – பிசகாமல்; அருளிச்செய் – சொல்லி ஏற்படுத்திய; பக்கல் – பக்கம் சாய்தல்; அனுதாரம் – பின்பற்றிகள், followers; அற – இல்லாமல் போ; வினை – போர்; கடைகாக்கும் – வாயில் காக்கும்

    விளக்கம்: மதுரையும் ஈழமும் கருவூரும் ஆள்பவரை வென்று பாண்டியன் மணிமுடியும் கைப்பற்றி மன்னித்து அருளின மூன்றாம் குலோத்துங்கனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு1205 இல் பாண்டியநாடு கொண்டனான சம்புவராயனும் செங்கேணி அத்திமல்ல எதிரிலிச் சோழச் சம்புவராயனும் அத்திமல்லன் பல்லவாண்டனான குலோத்துங்க சோழ சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான இராசராச சேதிராயனும் கிளியூர் மலையமான் ஆகாரச்சூரண் இராஜகம்பீரச் சேதிராயனும் குந்தன் நம்பூராலான இராசராச நீலகங்கரையனும் அம்மையப்ப மருந்தனான இராசராச மூவேந்தரையனும் பாவம் தீர்த்தானான இராசேந்திர சோழ சம்புவராயனும் மலையன் நரசிங்கபன்மனான கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் சோமன் திருவாண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிரிதிகங்கனும் சோமன் வரம்தருவானான சோழேந்திரசிங்க பிரிதிகங்கனும் ஆக 11 அரச குலத்தோர் ஒன்றுகூடி இந்த அனைவரும் கருத்தொற்றுமையுடன் கல்வெட்டிக்கொண்டது யாதெனில், “நாங்கள் ஒருகாலமும் மன்னனது அரசியல் செயற்பாட்டிற்கு பிசகாமல் உறுதியாகத் துணை இருந்து சேதிராயர் ஏற்படுத்தியபடி வேலையாற்றுவோம் இப்படி பணியாற்றும் போது மகதை ஆளும் வாணகோவரையன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் பக்கம் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், நன்மை தீமைகளுக்கு உறவு காட்டுதல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். வாணகோவரையரை பின்பற்றுவோர், நன்மதிப்பை விரும்புவோர் பக்கமும் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், சில வேலைகள் செய்து கொடுத்தல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். இவர்களுக்கு மட்டுமல்லாது இந்த பின்பற்றிகளின் பின்பற்றிகளாவோர், நன்மதிப்பு கொண்டோர் பக்கத்தில் இருந்து நம் பக்கம் சேருவதற்கோ, ஓலை பெறவோ சமயம் உண்டானால் சேதிராயர் திருக் கால்களில் போகும்படி காட்டுவோம். இராசராச சேதிராயரிடம் இருந்து அரசு காரியம் செய்வது சேதிராயர் வேலை, எங்களில் ஒருவரது வேலைக்கு பகையாய் இருப்பதைச் சொல்லி பக்கம் சேரல், ஓலை அனுப்பல் செய்யவிட மாட்டோம். இவர்களும் தம் பின்பற்றிகள் பக்கம் நின்று அதற்கு ஆதரவாக சொல்லிவருவது உண்டானால் அவ்வண்ணம் செய்யாதே சேதிராயரிடம் போகும்படி காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் கருத்து வேறுபடமால் இருந்து அரச காரியத்தில் பிசகாமல் இருந்து சேதிராயர் காரியத்திற்கு எங்கள் காரியத்திற்கும் எதிராக சிலர் வேலை செய்தால் சேதிராயரும் நாங்களும் இவரை இல்லாமல் அழிப்போம். எங்களில் ஒருவரை மகதை வாணகோவரையனோ அல்லது குலோத்துங்க சோழ வாணகோவரையனோ அல்லது இராசராச காடவராயனோ போருக்கு அழைத்தால் படை, குதிரையைக் கொண்டு நேராக போர் தொடுப்போம். இதை ஒருகாலமும் பிசகாமல் செய்வோம். இப்படி செய்யாமல் போனோமானால் மகதை வாணகோவரையனின் அரண்மனை வாயிலைக் காக்கும் பறைய காவலருக்கு காலில் அணிந்து கொள்ள செருப்பு தூக்குவோம். இதற்கு ஒப்புக்கொண்டு திருவண்ணாமலை இறைவன் கோவிலில் கல்வெட்டுவித்தோம் இந்த அனைவரும் என்று சூளுரைத்தனர்.

    இதில் எந்த சேதிராயன் சார்பாக இவர்கள் இருக்கின்றனர் என்பதை பெயர் சொல்லித் தெளிவாகக் கல்வெட்டில் குறிப்பிடவில்லை. இவர்கள் வாயிற்காவல் பறையருக்கு செருப்பு தாங்குகிறேன் என்றதன் மூலம் பறையரை இழிக்கின்றனர் இன்பத்தை உணர முடிகிறது. சேதிராயனுக்கும் வாணகோவரையனுக்கும் ஏதோ பகை உள்ளதை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. அதனால் இவர்கள் இன்றைய NATO படை அமைப்பு போல போர்ப் படை ஒப்பந்தம் போட்டுவிட்டனர்.

    அரண்மனை என்பது பல நாட்டவர், பண்டிதர், தூதுவர், அரச பிரதிநிதிகள் என பலரும் வந்து போகும் ராஜ வீதியில் அமைந்திருக்கும். அது காட்டிலோ அல்லது ஒதுக்குபுரத்திலோ அமைந்திருப்பதல்ல நகரத்தின் நடுவே அமைந்திருக்கும். எனில் அந்த அரண்மனையின்  வாயில் காக்கும் பறையர் தாமும் அதே ராஜவீதி வழியாகவே வந்தாக வேண்டும். இது 13 ஆம் நூற்றாண்டில் பறையர் தீண்டாமை இருந்ததில்லை என்பதற்கு வலுவான சான்றாகிறது. ஆனாலும் சாதிமுறையாக அல்லாமல் தொழில்முறையாக பறையர் இழிவு அரசர்களால் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 106 (Ariep 516 of 1902)

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறையின் முன்புற மண்டபத்தின் கிழக்குபுறச் சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 35 வது ஐய்யர்
    2. பொன்பரப்பின வாணகோவரையர்க்கும் ஐய்யர் குலோத்துங்க சோழ வாணகோவரையர்க்கும்
    3. மைச்சுனனார் காடவராயர்க்கும் செங்கேணி அம்மைஅப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் ச
    4. ம்புவராயநேன் ஆறகளூரில் திருக்காமீசுரமுடையார் கோயிலிலே தப்பாமைக்கு அடர்முறைமை சொல்
    5. லிக் கல்லு வெட்டிக்குடித்த பரிசாவது என்னக்கும் என் த_ _ _ றைக்கும் இவர்கள் விரோதமாய்த் தப்பின் ஒழி
    6. ய்தல் செய்வித்தல் செய்யாதேய் என்னை நோக்கக் கடவர்களாகவும், இவர்களுக்கு நான் உள்ளதனையு
    7. ம் ஒருநாளும் தப்பாதே இருக்க கடவேனாகவும் தப்பினேநாகில் எங்களுக்கு இன்னாதாராய் வ
    8. ருகிற மும்மலராயர்களுக்கும் மற்றும் என் சத்துருக்களாயிருப்பார்க்கும் செருப்பும் தம்பலமு
    9. ம் எடுத்தேநாகிறேன். பல்லவரையன் சத்தியமேய் இப்படி தப்பினேநாகில்  அப்பாண் 
    10. டார்க்கு பிறந்திலேநாகிறேன். இப்படிக்கு கல்லு வெட்டிக்குடுத்தேன் எதிரிலி சோழச் சம்
    11. புவராயனேன்.

    தப்பாமை – பிசகாமை; அடர்முறைமை –  மாறாமை, பிடிப்பு; பரிசு – ஏற்பாடு; இன்னாதார் – பகைவர்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆட்சி ஆண்டு 1213 இல் பொன்பரப்பின வாணகோவரையனுக்கும் குலோத்துங்க சோழ வாணகோவரையனுக்கும் இவர் மைத்துனர் காடவராயருக்கும் செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழ சம்புவராயன் அறகளூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் செய்து கொடுத்த சூளுரை இது. கொண்டநிலை பிசகாமல் மாறாதிருக்கும் முறையை அறிவித்து இக் கல்வெட்டுவித்த ஏற்பாடு யாதெனில் எனக்கும் என் தலைமுறைக்கும் இவர்கள் எதிராக திறம்பி அழிக்காமல் என்னை நட்புடன் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நான் உயிருடன் உள்ள வரை ஒருநாளும் பிசகாமல் உண்மையாய் இருப்பேன். அப்படி பிசகினேனாயின் எமக்கு பகைவராய் உள்ள மும்மல ராயர்களுக்கும் என் பகைவர்களுக்கும் காலில் அணிய செருப்பும் வாயில் மெல்ல வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தவன் ஆவேன். இது பல்லவராயன் சத்தியம் நடக்கும். இப்படி செய்யாமல் போனால் நான் என் தந்தைக்கு பிறவாமல் வேறு ஒருவனுக்கு பிறந்தவன் ஆவேன் என்று கல்வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழ சம்புவராயன். முதல் கல்வெட்டில் சம்புவராயர்கள் சேதிராயனுக்கு ஆதரவாக வாணகோவரையனுக்கு எதிராக இருந்ததைக் கண்டோம். ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சம்புவராயன் இன்னொருவன் வாணகோவரையனை ஆதரிப்பதை இந்த கல்வெட்டில் காண்கிறோம். அணி மாறுவது தான் மன்னராட்சி அரசியல்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், ஆசிரியர் வில்லியனூர் ந. வெங்கடேசன், பக்.66 & AR No  453 of 1913; சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள் பக்.34

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 17 வது ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராஜராஜ தேவன் வாணகோவரையனேன்
    2. உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்க்குத் திருமடைப்பள்ளிப்புறமாக நாயநார் பொன்பரப்பின பெருமாளுக்கு நன்றாக பொன்பரப்பின பெருமாள் ச
    3. ந்திக்கும் எடுத்ததுவல்ல பெருமாள் திருநாளைக்கும் முடலாக விட்ட ராஜராஜ வளனாட்டு வாணகோப்பாடி பெண்ணை தென்கரை மேல் குந்றாநாட்டு கூவனூர் நா
    4. ற்பா லெல்லைக்குள்ளும் ஏந்தல் தாங்கல் உட்பட்ட நன்சை நிலமும் மேனோக்கின மரமுங் கீழ்நோக்கின கிணறுந் தரியிறை தட்டார்பாட்டம் ஆள்அமஞ்சி  யெற்சோறு
    5. குற்றத்தெண்டம் பட்டிதெண்டமும் மற்றும் எப்பேற்பட்ட பல்லாயங்களும் உட்பட உடைய நாயநாற்கு தேவதானமாக சன்திராதித்தவரை செல்வதாக விட்டேன்
    6. வாணகோவரையனேன். மாறுவான் சிவத்துரோகியுமாய் மோவாய் புக்கு முலை யெழுன்தானுமா யொருவனுக்கும் யொருத்திக்கும் பிறன்தானு மல்லாதானாய் கோமாங்கிசத்தை 
    7. பூஜிப் பானுமாய் கெங்கையிடை குமரியிடை குரால்பசு கொன்றான் பாவம் கொழ்வான் . இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பெருமாள் – மன்னன், வேந்தன்; உடலாக – மூலதனமாக; விட்ட – கொடுத்த; ஏந்தல் – ஆழமில்லா ஏரி, முலை எழுந்தான் –  அலி;  கோமாங்கிசம்  – ஆவின் புலால்;

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 1233 இல் ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராசராச தேவ வாணகோவரையன் இறைவன் திருவண்ணாமலை உடைய அப்பனுக்கு திருமடைப்பள்ளி அன்றாட்டுக்கு தலைவர் பொன்பரப்பின மன்னனுக்கு உடல்நலம் நன்றாகும் பொருட்டு பொன்பரப்பின மன்னர் பெயரில் அமைந்த சந்தி பூசைக்கும் எடுத்ததுவல்ல மன்னன் பெயரில் அமைந்த திருநாளுக்கும் மூலதனமாகக் கொடுத்த ராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி வடபெண்ணையாற்று தென்கரையில் உள்ள மேற்கு குன்றானாட்டு கூவனூரின் நான்கு பக்க எல்லைக்குள்ளே ஆழமில்லா ஏரி, தேக்கம் உட்பட நஞ்செய் நிலமும் அதில் மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு தறியால் வந்த வரி, தட்டார் தந்த வரி, நீர்நிலை பேணும் கட்டாய ஊழியம் (ஆளமஞ்சி), பொது ஊழியருக்கு பகலில் கொடுக்கும் சோறு (எச்சோறு), குற்றத்தால் வரும் தண்டத் தொகை, பசுக் கொட்டில் வரி, இன்னும் எப்பேர்பட்ட பல வரிகளும் உட்பட இறைவருக்கு தேவதானமாகச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை இருக்கக் கொடுத்தேன் வாணராயன். இதை இல்லாமல் செய்பவன் சிவத்துரோகி ஆவான். வாயுள் புகும் முலை எழும்பிய அலி ஆவான். முறையாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறவாத பரத்தை மகன் ஆவான். ஆவின் புலாலைப் பூசனை செய்பவன் ஆவான்.  கங்கைக்கும் குமரிக்கும் இடையே குரால் பசுவைக் கொன்ற பாவம் கொள்வான். இதை சிவனடியார் காக்க வேண்டும்.

    இந்த மன்னன் அலியை இகழ்கிறான். அலிக்கு பாலுணர்வு ஏற்படும் போது முலை எழும் என்று குறிப்பதை வைத்து இவனது அரண்மனையில் அலிகள் இருந்துள்ளனர் என்று தெளிவாவதோடு அரசர் அலிகளுடன் பாலுறவு கொள்பவர் என்றும் தெரிகிறது. அரசர் என்போர் இப்படித்தான் நடத்தை கெட்டவராய், ஒழுக்கம் கெட்டவராய் (debauch) இருந்தனர். ஒருவரது சிந்தையும் செயலுமே ஒருவரது பேச்சில் வெளிப்படும் என்பது இந்த மன்னனது ஏச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 80, AR No  490 of 1902

    திரு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் இரண்டாம் பிரகாரம் நடுவிடம் 8 வரிக் கல்வெட்டு

    1. 13 வது ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையணயற்குத் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் எ
    2. ங்களில் நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும் கிழக்கு நாடு நிற்குமிடத்துக் கல்லியா
    3. டவதாகவும் எங்களிலிருவோமும் நாங்களுள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியஞ் செய்யினும் வன்னியஞ் செய்யினுங் கூடவே செய்யக் க
    4. டவோமாகவும். இவற்கு வினையுண்டாகுல் என் முதலிகளும் படையுங் குதிரையும் புகவிட்டு என் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவேனாகவும் இ_
    5. வனாகவும் எனக்கு வினையுண்டா _ _ கில் இவருந் தம் முதலிகளும்  ப_ _ குதவிட்டுத்  தம் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவராகவும். இத்தாலும்  நோ _ _
    6. ழ மலையகுலராயன் வினையிடைப்பாட்டம் என்னுடனே கூட நோக்கித்தகடவராகவும் என் _ _ மென்று  சொன்னாரை முதல்மையாக்கி  பரிசரிக்கக் _ _  
    7. காமையானுக்கு என் பெண்டுகளைக் குடுத்தேனாவேன். இப்படிக்கு ஆறகளூரில் உடையார் திருக்காமீசுரமுடைய கோயிலிலே கல்வெட்டுக் கு _ _ _
    8. குலராயன் எழுத்து

    நிற்க – எல்லையாகக் கொண்டு ஆள; பிழையாதே – பிழறாது; வினை – போர்; முதலிகள் – படைத்தலைவர்கள்; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; முதல்மையாக்கி – முன்னிலைப்படுத்தி; பரி – குதிரை; சருக்க / sarga  – குதிரை இலத்தி (சாணம்), ஸர்க என்பது  சமசுகிருத சொல்.

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு 13 ஆம் ஆட்சி ஆண்டு 1191 இல் ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையருக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அறிக்கை இது. எங்களுடைய ஆளுகையானது அழ்வினை யாற்றுக்கு (தென்பெண்ணை) தெற்கே மலையமானுக்கு செல்லவும் இந்த ஆற்றுக்கு வடக்கே எனக்கு செல்வதாகவும் இருக்கட்டும். கிழக்கு நாடு எல்லையாகும் இடத்தே கல் பாவிய பாதை அமைப்பதாகவும் ஒப்புக்கொண்டோம். எங்களில் ஒவ்வொருவரும் நாங்கள் உயிருடன் உள்ள வரை பிழறாது எங்கள் பகுதியிலேயே இருந்து அரச வேலை செய்யும் போதும், ஆட்சி செய்யும் போதும் ஒன்று சேர்ந்தே செய்வோமாக உறுதி பூண்டோம். இவர் ஆளுகையில் போர் உண்டானால் என் படைத் தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க்களத்தில் புகவிட்டு அதை எனது போர் போலவே ஏற்றுக்கொண்டு பார்ப்பேன். அதே நேரம் என் மீது போர் உண்டானால் மலையமானும் இவருடைய படைத்தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க் களத்தில் புகவிட்டு அதை தம் போராகவே ஏற்றுக் கொண்டு பார்க்க வேண்டும். இத்தோடு மலையமான் போர்ச்செய்யக் கொள்ளும் வரியையும் என்னோடு உடன் இருந்து கவனிக்கவேண்டும். என் சொல்லை நான் தவறினால் என்னை இகழ்பவரை முன்னிறுத்தி என் மனைவிமாரை குதிரை இலத்தி அள்ளும் காமையானுக்கு கொடுத்தவன் ஆவேன் என்கிறான் வாணகோவரையன். இப்படியாக ஆறகளூருடைய காமீசுவரர் கோவிலில் கல்வெட்டிக் கொடுத்தேன். இது (வாண) குலராயன் எழுத்து. இது NATO உடன்பாடு போல ஒரு போர் ஒற்றுமை ஒப்பந்தம் ஆகும். பாகூர் புலவர் செ  குப்புசாமியின் “வரலாற்று வடிவங்கள்” என்ற நூலில் பக். 147 இல் எலவானாசூர் சிவன் கோவில் கல்வெட்டு எண் 46 இல் குலோத்துங்க சோழனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் ஏற்பட்ட இதே படை உடன்படிக்கையை காண முடிகிறது. அதில் மலையமான் சூரிய தேவர் நீரேற்றானும் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையனும் தமது நாடு எல்லை இது என்று வரையறுக்கின்றனர். ஆனால் தந்தையர் காலத்தில் ஏற்பட்ட இந்த உடன்படிக்கை மலையமான் மகன்கள் ஆட்சியில் தகர்ந்து போனதை முதலில் விளக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அறிந்து கொள்ள முடியும்.

    இங்கே குதிரை சாணம் அள்ளும் காமையான் எந்த சாதி என்பதை அறிய முடியாமல் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதை பிற கல்வெட்டுகளைப் பார்த்து ஊகிக்கலாம்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், பக். 67, வில்லியனூர்  ந. வெங்கடேசன் AR No 440 of 1913 & சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 49, எண் 38, அ. கிருட்டினன்

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீழுர் வீரட்டானேசுவரர் கோவில் வடக்கு சுவர் 13 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச் சக்கரவத்திகள் சீ குலோத்துங்
    2. க சோழ தேவற்கு யாண்டு 33 வது ஆற்றூர் கூ
    3. ற்றத்து ஆறகளூருடைய மகதேசந் இராசராச தேவந்
    4. பொந்பரப்பிநாந் வாணகோவரையந்நேந் உடையார்
    5. திருவீரட்டாநமுடைய  நாயநாற்கு திருமேற்ப்பூச்சுக்கும் திருப்ப
    6. ரி சட்டத்துக்கும் திருக்கோயிலுக்கும் திருமடை விளாகத்திலும் உள்ள குற்ற
    7. தெண்டமும் தறியிறை காசும் கடையிறையும் கந்நாரிறையும் ஆசு
    8. வி காசும் படித்தெண்டமும் திருநாளில் சீ பாதம் தாங்க வாரா
    9. த ஆட் தெண்டமும்  விளக்காள் தெண்டமும் உடையாற்கு விட்
    10. டு கல்வெட்டிநேன் வாணகோவரையநேன் இது இறங்குவா
    11. ந் குரால் பசுத் திந்றார் பாவமும் கொண்டு நாந் ஏறுகிற குதிரைக்கு பு
    12. ல் போடுகிற பறையநுக்கு தந் மணாட்டியை குடுப்பாந் இக்
    13. _ _ _ _ ஸ்வர ரக்ஷை.

    பரிசட்டம் – இறைவனுக்கு உடுத்தும் ஆடை; இறக்குவான் – அழிப்பான்; மணாட்டி – மனைவி

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 33 ஆம் ஆட்சி ஆண்டு 2011 இல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகளூரில் இருந்து ஆளும் மகதேசன் இராசராச தேவன் பொன்பரப்பினான் வாணகோவரையன் இறைவன் திருவீரட்டானமுடைய அப்பனுக்கு திருமேனியில் பூசவும், ஆடை சாற்றவும், திருக்கோவிலுக்கும் திருமடைவிளாகத்தில் வாழ்வோரிடம் திரட்டப்படும் குற்ற தண்டனைக் காசு, தறி வரியும், கடை வரியும், கல்நார் வரியும், ஊர்காவல் ஆசுவிகள் கொள்ளும் காசும், படிக்கடப்போர் செலுத்தும் தண்டம், ஊரில் விளக்கு ஏற்றி அணையாமல் காப்போர் கட்டணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்துக் கல்வெட்டுவித்தேன் வாணகோவரையனேன். இதை அழிப்பவர் குரால் பசு தின்றவன் கொள்ளும் பாவத்தைக் கொள்வதோடு நான் ஏறுகிற குதிரைக்குப்  புல் போடுகிற பறையனுக்குத் தன்னுடைய மனைவியை கலவிக்கு கொடுப்பான் ஆவான். இது சிவனடியார் காப்பு.

    மன்னன் கூறும் இந்த பறையர் இழிவு பிறந்த சாதியால் வந்த இழிவல்ல மாறாக அவர் செய்யும் கடைநிலைத் தொழிலால் வந்த இழிவு ஆகும். பிற்காலத்தில் இதுவே மேட்டுக்குடிப் படைசாதிகளால் சாதிப்பிறப்பு இழிவாக ஆக்கப்பட்டது. ஆனால் வாளோ வேலோ ஏந்தாத பிராமணர் படை நடத்தி வந்து தமிழகத்து புத்த மக்களை இந்துக்களாக மாற்றியதாகவும் ஆனால் இந்துவாக மாறாமல் புத்த மதத்தவராகவே இருந்த பறையரை தீண்டாமைக்கு உட்படுத்தி சேரியில் தள்ளிவிட்டனர் என்றும் அசோக மௌரியர் ஆட்சி தமிழகத்தில் பரவாததால் இங்கு பரவாத புத்த மதம் பரவி இருந்ததாக கற்பனையாக எழுதி பிராமணர் வெறுப்பை வளர்த்தும் தம் இனத்தார் கிருத்துவ மதத்தை தழுவவும் தவறாக வழிநடத்திச் சமூகக் கேடு (social disservice) செய்தவர் கற்பனை எழுத்தாளர் அயோத்திதாசர். இவரது கற்பனைக்கு கல்வெட்டு, செப்பேடு சான்று ஏதும் இல்லை என்பதே உண்மை. இப்படி தம் இனத்தாரை தவறாக வழிநடத்தியதால் பட்டியலின மக்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வீண் விரையம் ஆயின, பொன்னான காலம் பாழாய்ப் போனது. உண்மையாக பறையர் தாழ்விற்கு படைச்சாதி ஆண்ட பரம்பரை நிலவுடமை சாதியே காரணம் என்று சொல்லி இருந்தால் போராட்டம் அவர்களை எதிர்த்து நடந்திருக்கும். இதனால் இன்னும் பல கீழ்வெண்மணி நிகழ்வுகள் நடந்திருத்தாலும் வெற்றி உறுதி என்ற இலக்கை நோக்கி நகர்ந்திருக்க முடியும். இதை நடக்க விடாமல் செய்தார் அவர். தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு சொந்த சிந்தனை ஏதும் கிடையாது. திராவிடவிய, தலித்திய கருத்தியல் கற்பனைக் கதைகளைக் கடன் பெற்றுத் தான் அரசியல் பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த கல்வெட்டுகளைப் படித்தாவது கற்பனையை விட்டு உண்மையின் பக்கம் வருகின்றாரா என்று பார்க்கலாம். பழி ஒரு பக்கம் குற்றம் ஒரு பக்கம் என்பதை இவர்கள் உணரட்டும்.

    click https://www.facebook.com/reel/1505189110410648

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 912, AR 288 of 1902

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் முக்குடீஸ்வரர் கோவில் தென்புறச்சுவர் 23 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ
    2. இராஜராஜ தேவற்கு யாண்டு 25 வது 100 நூ
    3. று அபர பக்ஷத்துப் புதன் கிழமையும் பெற்ற திருவோ
    4. ணத்து நாள் ஸ்வஸ்திஸ்ரீமநு மஹாப்ரதானி
    5. குமரதேவண்ண தண்ட நாயக்கநேன் வ
    6. ன்னாட்டு பேரவூருடையார் திருமுக்கூடலு
    7. டைய நாயனார் தேவதாநம் நன்செய் புன்
    8. சை செம்பை இராஜராஜ தேவனான வாண
    9. கோவரையன் விட்டப
    10. டியே 25 ஆவது ஆனி மாதம் முதல் சந்
    11. திராதித்தவரையும் செல்லக் கடவதாக
    12. இறையிலியாக விட்டோம். இந்தச் சிவகா
    13. ரியத்துக்கு விக்நம் நிநைத்தாருண்டாகி
    14. ல் சிவத்துரோகியும் நாட்டுத்துரோகியு
    15. மாய் என் குதிரைக்குப் புல்லிடும் பறைய
    16. னுக்குத் தன் மினாட்டியை குடுப்பான்
    17. இப்படிக்கு _ _ _ _
    18. தேவதானம் கல்வெட்டிக் குடுத்தே
    19. ன் குமார தேவண்ண தெண்டநாயக்
    20. கநேன். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
    21. சிவமஸ்து. அறஞ்செய்தான் செய்தா
    22. ன் அறங்காத்தான் பாதடி திறம்பாம
    23. ல் சென்னிமேல் வைத்து. ஸிவமஸ்து.

    அபரபக்ஷம் – தேய்பிறை; விக்கினம் – தடை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 25 ஆம் ஆட்சி ஆண்டு 1241 இல் நாள் நூறு தேய்பிறை புதன்கிழமை அன்று திருவோண நாளில் படைத்தலைவர் குமார தேவண்ண தண்ட நாயக்கன் வன்னாட்டு பேரவூருடைய இறைவன் வெள்ளாறு, கல்லாறு, உப்பாறு கூடும் திருமுக்கூடலூருடைய அப்பனுக்கு தேவதானமாக நஞ்செய், புஞ்சை நிலங்களை செம்பை இராசராச தேவனான வாணகோவரையன் கொடுத்தபடியே இராசராச சோழனின் 25 ஆம் ஆண்டு ஆனி மாதம் சந்திராதித்த வரை தொடரட்டும் என்று இறையிலியாக கொடுத்தோம். இந்த சிவகாரியத்திற்கு எவரேனும் தடை ஏற்படுத்த நினைத்தால் அவர் சிவத்துரோகியும் ஊர்த்துரோகியும் ஆவார். என் குதிரைக்கு புல் போடும் பறையனுக்குத் தன் மனைவியை புணர்வதற்கு அனுப்புவான் ஆவார். இப்படியாக தேவதானத்தை கல்வெட்டிக் கொடுத்தேன் குமார தேவண்ண தண்ட நாயக்கனேன். இது சிவனடியார் பாதுகாப்பு. சிவமாகுக. இந்த அறம் செய்தானே தக்கது செய்தவன். இந்த அறங்காத்தன் பாதஅடியை பிழறாமல் என் தலைமேல் வைத்துக் கொள்வேன். சிவமாகுக.

    கன்னடப் படைத் தளபதியும் பறையரை இழிவு செய்கிறார்.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 44

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு இருப
    2. த்தேழாவது வாணகோவரையன் செம்பை இராஜராஜ தேவனேன் கல்
    3. வெட்டிக் குடுத்த பரிசாவது வாலிகண்டபுரத்து உடையார் திருவா
    4. லீஸ்வரமுடைய நாயனாற்கு திருநாமத்துக் காணி இறையிலியாக
    5. ப்ரஹ்மதேசம் நன்செய் புன்செய் நான்கெல்லையும் சந்திராதி
    6. த்தவரையும் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தேன் செம்பை இராஜராஜ தே
    7. வனேன் இது மாறுவான் ஏழாநரகத்துக் கீழா நரகம் புகுவான் எ
    8. ன் குதிரைக்குப் புல்லிடுகிற பன்மையானுக்கு தன் மிணாட்டியைக்
    9. குடுப்பான். இது வல்லவரையன் சத்தியம். இப்படி மாஹேஸ்வர ரக்ஷை.

    பரிசு – ஏற்பாடு, வகை, விதம்; திருநாமத்து காணி – நேரடியாக இறைவன் பெயரில் நிலம்; பன்மையான் – பருத்தவன், தடியன்

    விளக்கம்: மூன்றாம் இராசராச  சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் செம்பை (ஜம்பை) இராசராச தேவ வாணகோவரையன் கல்வெட்டிக் செய்து கொடுத்த ஏற்பாடாவது வாலிகண்டபுரத்து இறைவர் திருவாலீசுவரமுடைய அப்பனுக்கு அவர் பெயரில் நிலத்தை இறையிலியாக பிரம்மதேசம் என்னும் ஊரில் நஞ்செய், புஞ்சை நிலங்கள் நான்கு எல்லையும் சுட்டினேன். இது சந்திர சூரியர் உள்ள காலம் வரை போவதாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் செம்பை இராசராச தேவன். இதை மாற்றுபவன் ஏழாம் நரகத்திற்கும் கீழான நரகத்திற்கு போவான். மேலும் என் குதிரைக்கு புல் போடுகிற தடியனுக்கு தன்னுடைய மனைவியை கூட்டிக் கொடுப்பான் ஆவான். இது வல்லவரையன் சத்தியமாக நடக்கும். இதை சிவனடியார் கூட்டம் காக்க வேண்டும். தடியன் எந்த சாதி என்ற குறிப்பு கல்வெட்டில்  இல்லை.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 234

    பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையார் கோயில் கருவறை வடக்கு மேற்கு குமுத பீடம், அர்த்த மண்டப வடக்கு சுவர் குமுத பீடம் 5 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஏழாவது மேஷநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் திங்கள் கிழமையும் பெற்ற சோதி நாள் வடகரை கரிகால கன்ன வளநாட்டு மேல்கரை நாட்டு உடையார் திருஆலந்துறையுறை உடைய நாயனார்ச் சித்திரைத் திருநாள் எழுந்தருளுகையில் இரா(ஜ)ரா(ஜ) தேவன் வாணகோவரையனேன் கும்பிட்டு திருவோலக்க மண்றபத்தே வினோ
    2. தேவாசிரியன் திருவுறைக்கூட வாசலாலே ஒரு சற்பம் திருவோலக்க மண்டபத்தே புகுந்து இதுக்குப் பட்டர்களை அழைத்து ப்ராயச்சித்தங் கேட்க உடையாற்க்கு சில தேவதானமும் மஹாயேசுரற்க்குச் சில பூமிதானமும் பண்ணவேணுமென்று விதிக்கையில் உள்ளூர்த் தேவதான இறையிலியாகையாலே மேல்கரை நாட்டவரை அழைத்து உங்கள் நாட்டு நாயனார் திருஆலந்துறை உடைய னாயனாருக்கு உங்களூர்கள்
    3. கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர்_ _ _  புன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக கு
    4. டுத்தோம் இராராதேவரான வாணகோவரையனேன். இவ்வூர் (தந்மத்துக்கு யாதாமொருவன் அகிதம் செய்தால் என்) குதிரைக்கு புல்லிடும் வெட்டியானுக்குத் தன் பெண்டாட்டியைக் குடுத்தவனாவான். இது பன்மாஹேச்வர ரக்ஷை.
    5. இவை வாணகோவரையன் எழுத்து. ஸ்வஸ்திஸ்ரீ

    மேழ நாயாற்று  – சித்திரை மாதம்; பூர்வபக்ஷம் – வளர்பிறை;  சோதி நாள் – சுவாதி நட்சித்திரம்; பட்டர் – குருக்கள்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 1185 இல் சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் திங்கட்கிழமை சுவாதி நட்சத்திரத்து அன்று வடகரை கன்னவளநாட்டில் மேல்கரை நாட்டின் இறைவர் திருவாலந்துறையில் இருக்கும் அப்பன் சித்திரைத் திருநாளில் எழுந்தருளிய போது இராசராச தேவன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் இறைவனை கும்பிட்டு வந்த போது திருவோலக்க மண்டபத்தே வினோ தேவாசிரியன் திருவுறைக் கூட வாயிலில் ஒரு பாம்பு திருவோலக்க மண்டபத்தே புகுந்து போனது. இதற்கு குருக்களிடம் கழுவாய் என்ன என்று கேட்ட போது இறைவனுக்கு சில ஊர் தானமும் மகேசுவரர்களுக்கு பூமி தானமும் கொடுக்க வேண்டும் என்று சொல்லினர். இது உள்ளூரில் கொடுக்க வேண்டிய தேவதான இறையிலி ஆவதால் மேல்கரை நாட்டவரை வரவழைத்து உங்கள் நாட்டின் இறைவன் திருவாலந்துறை ஈசனுக்கு உமது ஊர்கள் கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர் ஆகிய ஊர்களில் புஞ்சை நஞ்சை நிலங்களில் 200 குழி வாங்கி இறையிலி தானமாக கொடுத்தேன் இராசராச தேவ வாணகோவரையன். இந்த கொடைக்கு யாரேனும் ஒருவன் கேடு செய்தால் என் குதிரைக்கு புல் போடும் வெட்டியானுக்கு தன் மனைவியை புணரக் கொடுத்தான் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும். இது வாணகோவரையன் நேரடி எழுத்து. நன்மங்கலம் உண்டாகட்டும்.

    இந்த கல்வெட்டில் வெட்டியான் அகப்பட்டுக் கொண்டான். எத்தனையோ பல சாதிகள் இருக்க புலையர், பறையர், வெட்டியான் போன்றோர் மட்டும் இவ்வாறு இழிவு படக் காரணம் என்ன? ஆரியக் குதிரைக்கு புல் போட்டதே காரணம். இவர்கள் இதில் இருந்து தப்பி இருந்தால் வேறு ஏதோ ஒரு சாதிமார் குதிரைக்கு புல் போட்டு இவ்வாறு அகப்பட்டிருப்பர். நாடாண்ட மன்னனை ஞாயத்திற்கு உட்படுத்தாமல் அவன் வீரத்தையும் கொடையையும் புகழ்ந்துவிட்டு மதத்தையும் பார்ப்பானையுமா கேள்வி கேட்பது? இது தமிழர்க்கு  அறிவுடைமையா?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 12 & பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்,பக். 128/129 இல. தியாகராஜன்

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் ஆலந்தூர் நகர் வௌவால்கரட்டின் மேல் பாறையில் உள்ள 16 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன் மங்கல
    2. ம் சிறக்க திரிபுவனச் சக்கரவர்திகள்
    3. திரு வீரராஜேந்திர சோழ தேவற்கு
    4. யாண்டு ஆறாவது சேல நாட்டு
    5. பொன்பரப்பியில் நக்க சோழங்க தேவர்
    6. முதலிகளில் நங்கள்மரான சோழகோனே
    7. ன் ஆலந்தூரில் ஈசான தேவர் நாயனாற்கு
    8.  என்னேரியில் கழனியிலே பத்துக் கழனி
    9. நாயனாற்கு விட்டேன் சோழங்க தேவர்
    10. திருமேனிக்கு நன்றாக விட்டேன். இத்தன்ம
    11. ம் இறங்காமே கொண்டு பெருகுமவன்
    12. அவன் சீ பாத மிரண்டும் என் தலைமேல்
    13. யித்தன்ம மிறங்கப் படுத்துவனுக்கு
    14. என் குதிரைக்கு புல் சுமக்கும் 
    15. பறையனுக்கு தன் மிணாட்டியைக்
    16. குடுப்பான்  

    முதலி – படைத்தலைவன்; பெருகு – வாழ், வளர்;

    விளக்கம்: கொங்கு சோழன் வீரராஜேந்திரன் கோநேரின்மை கொண்டான் என்ற பட்டம் உடையவன் ஆதலால் இந்த வீரராசேந்திரன் மூன்றாம் குலோத்துங்கனையே குறிக்கிறது எனக் கொள்ளப்படுகிறது. அவனது ஆறாம் ஆட்சி ஆண்டு 1184 இல் சேலம் நாட்டில் பொன்பரப்பியில் நக்கசோழங்க தேவர் என்ற அரையனுக்கு படைத்தலைவர்களாக உள்ளவர்களில் நங்கள்மரான சோழகோன் என்பவர் ஆலத்தூரில் ஈசானதேவ இறைவனுக்கு அவரது ஏரியில் அமைந்த கழனியில் பத்து கழனி நிலம் இறைவனுக்கு தானமாகக் கொடுத்தார். இதை தன் அரையன் சோழங்க தேவன் உடல்நலம் தேறும் பொருட்டு கொடுத்தார். இந்த கொடையை அழிக்காமல் வாழ்பவன் திருப்பாதம் இரண்டும் என் தலைமேல் வைப்பேன். இதை அழிப்பவன் என் குதிரைக்கு புல் சுமந்து வரும் பறையனுக்கு தன் மனைவியை புணரக் கொடுக்கட்டும் என்று சபிக்கிறான்.

    இக்கல்வெட்டில் ஒரு படைத்தலைவன் தன் குதிரையை பேணுபவன் மீது கொண்ட இழிவுக் கருத்து வெளிப்பட்டுள்ளதானது பொதுவாகவே படை மேல்மட்டத்தாரிடம் தொழில் ஏற்றத்தாழ்வு எண்ணம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த படையினர் பிள்ளைகள் குதிரை பேணுபவர் பிள்ளைகளை இதே முறையில் தானே ஏளனம் செய்வர்? இந்த தொழில்முறை இழிவு தான் பிறப்புவழி இழிவாக காலப்போக்கில் 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் மாறியது. ஆனால் சனாதனம், மனுதர்மம் தான் பிறப்பு இழிவை  ஏற்படுத்தியதாக ஆதாரம் இன்றி பொய் உரைக்கின்றனர். இந்த பொய் எழுந்த தமிழ்நாட்டிலேயே இந்த பொய்க்கு கல்வெட்டுகள் சம்மட்டி அடி கொடுக்கின்றன என்பது பிரகிருதியின் விளையாட்டு தானே.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 30, எண் 17, அ. கிருட்டினன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்து திருவாலீசுவரர் கோவில் மகாமண்டபத் தென்பகுதி மேற்கு சுவரில் (1008 லிங்கம் உள்ள அறை) பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  போசள வீரசோமீஸ்வர தேவரைசர் ஓலை வன்னாட்டு வா
    2. லிகண்டபுரத்து உடையார் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோயில் தா
    3. னத்தார் கண்டு திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு 27
    4. வதில் தாதி பதுமவ்வை நமக்கு நன்றாக ஒரு சந்தி அமுது செய இன் நா
    5. ச்சியார் ஸ்ரீ கத்தத்து நீர்வாத்து இந்நாட்டு சிறுகூடல் ஏரிகீழ் நஞ்செய் நில
    6. த்து தேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை. இந்நிலம் அரை
    7. க்கும் திருச்சூல தாபனம்பண்ணித் திருக்கற்றளியிலே நம் சாதனப்
    8. ட்டி கல்வெட்டி கொள்வதே. இதுமாறுவான் தந் மிணாட்டியை பு
    9. லையற்கு குடுப்பாந். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.

    கண்டு – பார்வைக்கு; தானத்தார் – கோவில் பொறுப்பாளர்; தாதி – வைப்பாட்டி; ஸ்ரீ கத்த – கெண்டி; சாதனப்படி – ஆவணப்படி; மாகேஸ்வரர் – சிவனடியார்

    விளக்கம்: போசள வேந்தன் வீர சோமேஸ்வரனின் நேரடி ஓலை ஆணை இது. வன்னாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து ஈசர் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோவில் பொறுப்பாளர் பார்வைக்கு வைப்பது யாதெனில் மூன்றாம் இராசராச தேவரின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் சொல்லியது. என் வைப்பாட்டி பதுமவ்வை என் உடல் நன்றாக ஒரு சந்திக்கு அமுது படைக்க வேண்டி இவளது கெண்டியால் நீர்வார்த்து இந்நாட்டில் சிறுகூடல் ஏரியின் கிழக்கே நஞ்செய் நிலத்தை தேவதான இறையிலியாக கொடுத்த நிலம் அரை மாவா? என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த அரை நிலத்துக்கும் திருசூலக் கல்நாட்டி கோவிலிலே என் ஆவண ஓலைப்படி கல்வெட்டிக் கொள்க. இந்த ஏற்பாட்டில் இருந்து திறம்புபவன் தன் மனைவியை புலையர்களுடன் கலவி கொள்ள அனுப்புபவன் ஆவான். இது சிவனடியார் பாதுகாப்பு.

    நலிந்து போன சோழப் பேரரசு போசள வேந்தனால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட இரட்டை ஆட்சிக் காலம் இது. இங்கே கன்னட போசள வேந்தன் புலையரை இழித்து பேசுகிறான். இதே நூலில் பக்கம் 233 – 234 இல் இடம் பெறும் கல்வெட்டு எண்: 293 இல் “அழித்தாருண்டாகில் எங்கள் குதிரைக்கு புல்லிடும் புலையர்க்கு தங்கள் மினாட்டிகளை குடுப்பார்களாகவும்” என்று உள்ளது. இது புலையர் படைக் குதிரையைப் பேணியதைச் சுட்டுகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்; இல. தியாகராஜன், பக். 235

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகுபாடி காசி விசுவநாதர் கோயில் முன் கிடக்கும் கல் பலகையில் உள்ள 15 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 2 வது திருப்பழனத்து உடையார்
    2. தொண்டைமானார் பூசற் செய்ய விட்டு கிடு இருந்து இடத்து இராவினையாக பாண்
    3. டியராயன் வந்து வளைந்தவிடத்து ஒளியன் பெற்றாந் ஆரியனை வெட்டிப்
    4. பிடித்து கிடு வந்து தொண்டைமானாரோடுங் கூட குலோத்துங்க வாணக வ
    5. ரையர்  சீ பாதத்தேய்  கண்டா இடத்து இவனுக்கு தண்டேறு வரிசையுங் குடுக்கப் புக்
    6. க இடத்து இவ் ஒளியின் பெற்றான் தெண்டனிட்டு அடியேனுக்கு இவை
    7. வேண்டாம் தண்டலையிற் பொய்கை ஈசுவரமுடைய நாயனார் கோ
    8. யில் திருக்கற்றளிச் சாத்த அன் நாயநாற் திருநாமத்துக் காணியில் பண்
    9. டாரத்துக் கிறுக்கிற சீகாரியப் பேறும் தூதவரி அடியேனுக்குத் தந்தருள
    10. வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய அப்போதேய் புரவரி முதலிகள் நால்வரு
    11. ம் எழிதிய எழுத்திட்டு திருவெழுத்துஞ் சாத்தி திருமுகப் பிரசாதம் பெற்று விடை கொ
    12. ண்டு போந்தேன் ஒளியன் பெற்றாநேன் இந்த திருநாமத்துக் காணிக்கு ந
    13. ன்செய் புன்செய் நத்தம் இதுக்கு விலங்கல் சொல்லுவான் தங்களம்மைக்கு
    14. த் தாநே மிணாளன் தன் உடன் பிறந்தாள் முந்தானை பிடிச்சாநாவான் இதுக்கு வி
    15. லங்கல் சொல்லாதவன் சீபாத மென் தலைமேலய்

    பூசல் – போர்; உடையார் – மன்னர்; கிடு – படைக்கலப் பாசறை; இராவினை – இரவுப்போர்; வளைந்த – சூழ்ந்த; தண்டு ஏறு – படை கடத்தல், படைக்குள் புகல்; திருச்சுற்றளி – பிரகாரம்; திருநாமத்துக் காணி – இறைவன் பெயரில் வழங்கிய நிலம்; விலங்கல் – இடர், இன்மை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு 1218 இல் திருப்பழனத்து மன்னன் தொண்டைமான் என்வன் பாண்டியப் படையெடுப்பை எதிர்த்துப் போர் புரிகிறான். அவன் தன் படையினரை போர் செய்யவிட்டு படைக்கலப் பாசறையில் ஓய்வு கொண்ட போது இரவுப்போரில் பாண்டியன் அப்பாசறையை வளைத்து சூழ அப்போது ஒளியின் பெற்றான் என்ற படைத்தலைவன் பாண்டியப் படை ஆரியனை வெட்டிச் சிறைபிடித்து படைக்கலப் பாசறைக்கு பிடித்துவந்து தொண்டைமானோடு கூட குலோத்துங்க வாணராயரையும் பாதம் தொழுது நின்ற நேரத்தில் இவனுக்கு படையை கடந்ததற்கு பரிசு கொடுக்கப் போகும் நேரத்தில் இந்த ஒளியன் பெற்றான் தலைதாழ்த்தி அடியேனுக்கு இவை வேண்டாம் மாறாக தண்டலையில் (வரகுபாடி) உள்ள பொய்கை ஈசுவரமுடைய இறைவன் கோவிலில் பிரகாரம் கட்ட அந்த இறைவனுடைய திருநாமத்துக் காணியில் இருந்து கருவூலத்திற்கு செலுத்துகிற திருக்காரிய கட்டணமும், தூதவரியும் எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று வேண்டீடு செய்த போது அப்போதே அரசாங்க வரித்துறை அதிகாரிகள் நால்வர் எழுதிக் கையெழுத்திட்ட ஓலையில் மன்னர் கையெழுத்தும் இட்டு மன்னனின் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு விடை பெற்று வந்தேன் என்கிறான் ஒளியன் பெற்றான். இந்த திருநாமத்துக் காணியில் அடங்கும் நஞ்செய் புஞ்செய் நத்த நிலங்களுக்கு இடர் ஏற்படுத்துபவன் தன் தாயைத் தானே புணர்ந்தவன் ஆவான். தன் அக்காள் தங்கையின் முத்தானையை உருவியவன் ஆவான். இந்த அறத்திற்கு தடை சொல்லாதவன் திருப்பாதம் என் தலைமேல் வைக்கப்படும். ஒரு படைத்தலைவன் இவ்வாறு நாக்கூசும்படி சொல்வது படை உயரடுக்கில் ஏற்பட்டிருந்த எண்ணக் கேட்டையே வெளிப்படுத்துகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள், பக். 183/184, இல. தியாகராஜன்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் கோபுர இடது நுழை வாயிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்க்கு யாண்டு 20 உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்கு
    2. ஆறகளூர் சதிரன் வாணராயனேன் தேவதானமாக விட்ட பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு கங்க நல்லூர் நாற்பாற்க்கெல்லைக் குள்ளும் நஞ்
    3. சை புஞ்சை யகப்பட விட்டேன் சதிரன் வாணராயனேன். இது மாறுவான் மிணாட்டியை பறையனுக்குக் குடுப்பான். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    அகப்பட – உட்பட, include; மாறுவான் – திறம்புபவன்

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டு 1198 இல் இறைவன் திருவண்ணாமலை நாயகனுக்கு ஆறகளூர் சதிரன் வாணராயன் தேவதானமாக பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்த செங்குன்ற நாட்டின் கங்க நல்லூரில் நாற்பால் எல்லைக் உள்ளே நஞ்செய், புஞ்செய் நிலங்களை கொடுத்தேன் இந்த சதிரன் வாணராயன் என்கிறான். இதை திறம்புபவன் தன் மனைவியை பறையன் கலவி கொள்ளக் கொடுப்பவன் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும் என்கிறான். இந்த வாணன் பறையர் குறித்து இழிவான கருத்து கொண்டிருந்தால் மட்டுமே இப்படி கூற முடியும். இது இவனது நேரடிக் கல்வெட்டு.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 139, AR No 548 of 1902

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜ மலையகுலராயநான நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயநுக்கு
    2. இவ்வேளக்காறியான தேவப்பெருமாளேன், எதிரிகள் நாயனுக்குப் பின்பு இருந்தேநாகில் என் மாடு ஓட்டிமாற்கு  மண்டைய்யுமிட்டு இ
    3. வர்களுக்கு நீருங்குடுத்து இவர்கள் கலச் சோற்றையும் உண்கிறேன். என் மிணாளன் ஒடு என்னைச் சாவவேண்டாமென்பார் என் மி
    4. ணாளன் ஏறுகிற குதிரைக்குப் புல்லு இடும் காமிகந் எதிரிகன் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியையுங் குடுப்பான். நா
    5. ந் செயாதிருந்தேநாகில் என்னை நெருப்பில் கட்டி புகடுதல் கொல்லுதல் செய்தவன் தன் னோட்டயாற்கு தந் மிணாட்டியையுங்  குடுத்து என் 
    6. மிணாளன் ஏறுகிற குதிரைக்கு புல்லு இடுகிற காமிகநான எதிரிகள் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியை குடுப்பான் என்னைக் கண்டால் கொல்லாதான்.

    வேளக்காரி – காவற் பெண்டு; மண்டையிட்டு – தலையால் பாதம் தொட்டு; ஓட்டையார் – மாடு அல்லது குதிரை ஓட்டி, driver; புகடுதல் – புகுத்துதல்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கிளியூர் மலையமான் சூரியன் நீரேற்றானான எதிரிகள் நாயனான இராஜராஜ மலையகுலராயனின் காவல் பணிக்கு சேர்ந்த தேவப்பெருமாள் என்ற பெண் உறுதி ஏற்கும் போது எதிரிகள் நாயன் இறந்த  பின்னும் நான் உயிர் வாழ்வேனாயின் எனது வேலைக்காரர்களான என் மாடு ஓட்டிமார்க்கு மண்டியிட்டு வணங்கி அவர்கள் கைகால் கழுவ நீர் மொண்டு கொடுப்பேன். அவர்கள் எச்சில்பட உண்ட கலத்தில் மிகுந்து எஞ்சிய சோற்றை உண்பேன். இதே காவல் பணியில் சேர்ந்த அவள் கணவனோடு தானும் சாவேன் என்று உறுதிமொழி தருமிடத்து என்னை அவ்வாறு சாகவிடாமல் தடுப்பவர் தம் மனைவியை என் கணவன் ஏறும் குதிரைக்கு புல் போடுகிற காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுடன் கலவி கொள்ள தன் மனைவியை அனுப்பினவன் ஆவான். நான் அவ்வாறு சாகாது இருந்தேன் என்றால் என்னைக் கட்டி நெருப்பில் புகவிட்டுக் கொல்பவன் தன் மனைவியை தன் வண்டி ஓட்டிமார் கலவி கொள்ள அனுப்பினவன் ஆவான். என்னை உயிருடன் கண்டால் கொல்லாமல் விட்டுச் செல்லுகிறவன் தன் மனைவியை என் கணவன் ஏறுகிற குதிரைக்கு புல் போடும் காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுக்கு கலவி துய்க்க அனுப்பினவன் ஆவான்.

    இந்த காவற்பெண்டு நெருப்பில் இட்டு கொன்றாலும் திட்டுகிறாள் கொல்லாமல் விட்டாலும் திட்டுகிறாள். இங்கு தான் குழப்பம் உண்டாகிறது. அப்படியானால் தன்னைக் குத்தியோ வெட்டியோ சட்டென்று கொன்றுவிட வேண்டும் நெருப்பில் மட்டும் இட்டால் அது பெருந் துன்பம் என்ற யாரோ ஒருவரது உடன்கட்டை ஏறிய துன்பத்தைப் பார்த்த அனுபவத்தில் இப்படி சொல்லி இருக்கலாம். தூங்குதலை கல்வெட்டுகளில் தன் தலைவன் இறந்தால் வீரன் தானும் சூளுரைத்தபடியே தலையை அரிந்து சாகிறான். அதே போல இந்த வேளக்காரப் பணிக்கும் தம்  மன்னன் இறந்தால் இந்த அந்தரங்க காவல் பணிமக்களும் இறக்க வேண்டும் அதுவே நம்பிக்கைக்கு உரிய செயல் என்பதால் இப்படி உறுதி ஏற்கின்றனர் என்று தெரிகின்றது. ஒரு காவல் பெண்டு தன் பணியைவிட மாட்டு வண்டி ஓட்டும் பணியும் குதிரைக்கு புல்லிடும் பணியும் மிகத் தாழ்வானது என்பதை இங்கே உணர்த்துகிறாள். தானே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குற்றமும் புரியாத இன்னொருத்தன் மனைவியை அடுத்தவனுடன் கலவி கொள்வாள் என்று இவள் உரைப்பது இவளுக்கு ஞாய உணர்வு இல்லை என்பதையே உணர்த்துகிறது. ஒரு காவல் பெண்டே இப்படி என்றால் இதற்கும் மேல் பணியில் உள்ளோர், மன்னர், அரையரும் இப்படி தான் தாழ்வாக எண்ணி இருப்பார்கள் என்றே உணர்த்துகிறது இக்கல்வெட்டு. இது சாதிவழி வந்த இழிவு அல்ல மாறாக கீழ்மைத் தொழில் வழி வந்த இழிவு. இதை தான் மேட்டிமை மனநிலை என்பது. இந்த மேட்டிமையை மதமும் பிராமணருமா வளர்த்தனர்? இல்லையே. இது படை – காவல் (rank and file)  ஏற்றத் தாழ்வு மேட்டிமை மனநிலை அன்றோ?

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 54  பக். 153, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of  1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயன் வேளக்காறன் திரிகை உடையான் எதிரிகள் நாயனுக்கு பி
    2. ன்பிருப்பான் தங்களமைக்குத் தாநே மிணாளன் எதிரிகள் ணாயனை தவிர
    3. என்னை சேவகங் கொள்வாந் தம் மிணாட்டிக்கு என்னை மிணாளநாக கொ
    4. ள்வான்

    வேளக்காரன் – காவல் மகன்; மிணாளன் – கணவனைக் குறித்தாலும் இங்கு தவறான உறவு உள்ளவர் என்ற பொருள்; திரிகை – சக்கரம்

    விளக்கம்: மலையமான் எதிரிகள் நாயனுடைய வேளக்காரன் திரிகை உடையான் எடுத்த உறுதி மொழி, “மலையமான் எதிரிகள் நாயன் சாவுக்குப் பின் சாகாமல் உயிருடன் இருப்பவன் தன் தாயுடன் கலவி கொண்டவனாவான். எதிரிகள் நாயனைத் தவிர்த்து என்னை வேறு ஒருவருன் பணியாளாகக் கொள்வானாயின் அவன் தன் மனைவியை என்னிடம் கலவிக்கு அனுப்பியவன் ஆவான்”.

    ஒரு அகராதி வேளக்காரப்படை என்பது சோழரின் ஒரு படைப் பிரிவு என்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி அரசர்கள் போரில் அடிமை கொண்டு சிறைப்படுத்திய பகை நாட்டு அரசகுல பெண்டிரை காவல் காப்பவர் என்கிறது. இந்த கல்வெட்டிற்கு அரசனது அரண்மனை அல்லது அந்தரங்க இடத்து காவல் பெண், காவல் மகன் என்று கொள்வதே பொருத்தமானது.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 50,  பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ எதிரிகள் நாயனுக்கு மொட்டயராய் வேளை புக்கு சாவாதே
    2. போவார். மிணாட்டி மிணாளந் தேவப்பிள்ளை எதிரிகள்
    3. நாயனுக்கு பிந்பு  இருந்தேன்நாகில் எங்கள் அம்மைக்கு னானே
    4.  மணாளன் 

    மொட்டையர் – மணமாகாதார் அல்லது ஆண்மை நீக்கியவர். மொட்டை என்றால் பொட்டை. ஆண் குறியும் விதையும்  மழுக்கப் பட்ட அலி.

    விளக்கம்: “மலையமான் எதிரிகள் நாயனுக்கு ஆண்மை நீக்கியவராக காவல் பணிக்கு போகிற அலிகள் அவன் இறந்த பின்னும் சாகாமல் உயிர் வாழ்வார். ஆனால் மனைவி கொண்ட கணவனாக தேவப்பிள்ளை நானோ எதிரிகள் நாயனுக்கு பின்னர் சாகாமல் உயிர் வாழ்ந்தால் என் தாயிடம் நானே கலவி செய்தவன் ஆவேன்” என்று உறுதி ஏற்கிறான்.

    இப்படியான உறுதிமொழி அக்காலத்தே கட்டாயம் போலும். அதற்காக இப்படி நாக்கூசும் சொல்லாட்சி தேவையற்றது. மேலே உறுதி ஏற்கும் பெண்ணின் கணவன் இவன் என்று தெரிகிறது. அதோடு மன்னவர் அந்தப்புரத்தில் அலிகள் காவலுக்கு இருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே தேவப்பிள்ளை என்பவன் நான் அலிகளைப் போல் அல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்று அலிகளை மட்டம் தட்டுகிறான். அரண்மனைகளில் அலிகள் காவல்புரிவது முதன்முதலாக மேலை ஆசிய சுமேரியாவில் இருந்ததாகப் பதிவுள்ளது. காவலில் அலிகளை இந்தியாவிலும் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியோர் மேலை ஆசிய வந்தேறி ஆட்சியாளர்களே என்பதில் ஐயம் இல்லை. கண்ணன் வழிகாட்டலில் அகத்தியருடன் தென்னகம் வந்த வேளிரில் மலையமான்களும் உண்டோ?

    மீசை இல்லாதவரை பறையர்தாம் பெரும்பாலும் பொட்டை என்று திட்டுவர். ஒரு மீசையா வீரத்தையும் ஆண்மையையும் தீர்மானிக்கிறது, அதிலும் பிள்ளை பெற்றவனை பொட்டை எனத் திட்டுவது என்றால் இல்லை உயரமும் எடையும் தான் தீர்மானிக்கிறதே அன்றி மீசை அல்ல வீரத்தைத் தீர்மானிப்பது என்று சொல்லிவிட முடியும். என்றால் இப்படி மீசை இன்மையை இழித்துப் பழித்துப் பொட்டை என்று வாயாடுதல் அறிவுக்குறை அன்றோ? ஆம்! அது அறிவுமந்தம் தான். ஆயினும் ஒரு மூலம் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக பொட்டை என இழிக்கும் வழக்கம் பறையர்களிடம் தலைமுறை தலைமுறையாக வந்திருக்காது அல்லவா? மூலத்தை ஆராயுங்கால் இந்த வேளக்கார அலிகள் பறையரைத் தொழிலால் தாழ்த்தி இழுவுபடுத்தியதன் காரணமாகவே அந்த அலி வேளக்காரர்களை பதிலுக்கு பறையர் பொட்டை என்று இழிவுபடுத்துவாராயினர் எனக் கொள்ளமுடிகிறது. இப்படித் தான் பொட்டை என்று திட்டும் வழக்கம் அவர்களிடம் வழிவழியாக வேரூன்றி உள்ளது. இன்று அந்த அரண்மனைகள் இல்லை அதே நேரம் அலிகள் வேளக்காரராய் அல்லாமல் பிச்சைக்காரராய் உள்ளனர். எனவே பறையரின் இந்த அறிவுக் குறையை போக்க எவரேனும் அறிவுரை கூற முன் வரவேண்டும். அவர்களை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

    மீசை இல்லா அலெக்சாண்டர் படை மூன்று கண்டங்களில் தடுப்பார் இன்றி வெற்றிக் கொடி நாட்டியது. அதேபோல மீசையில்லா மங்கோலிய இன சப்பானியர் வீரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் முட்டாள்தனமாக “மீசை உள்ளவன் ஆம்பள, மீசை இல்லாதவன் பொட்டை” என்று வம்பு பேசி திரிகின்றனர். மீசை ஒன்றும் கிழிக்காது. நரம்பு வலுவும் தசை வலுவமே வீரனுக்கு காப்பு.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 51, பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிக னாயனுக்கு வேளைபுக்கு எதிரிக னாயனுக்கு பிந்பு  இ
    2. ருக்கும் வேளைக்காற மிணாட்டி மிணாளந் ஆள்ளுடையாந்நேன்
    3. நானும் எதிரிக நாயகநுக்கு பிந்பு இருந்தேநாகில் எந்நுடப் பிறந்
    4. தாளுக்கு நாநே மிணாளந். மொட்டையாய் கல்லு வெட்டி _ _ _ திருக்  _ _ _ (கல்வெட்டு சிதைந்து விட்டது)

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணியாகப் போய் எதிரிக நாயன் சாவிற்கு பின்பும் உயிரோடு இருக்கும் காவல் பணி மனைவி, கணவன்மார்களே ஆளுடையான் நான் சொல்வதைக் கேளுங்கள், நானும் உறுதி மொழி ஏற்கிறேன் “எதிரிக நாயன் மாண்ட பின்பு உயிரோடு இருந்தேனாகில் நான் என் உடன் பிறந்தாளோடு கலவி செய்தவனாவேன். நான் விதைகளும் தண்டும் மழித்து அலி ஆகிடுவேன் என்று கல்வெட்டி (கொடுத்தேன்) என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டதால் மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த உறுதிமொழியை இறவாத காவல் பணி இணையர் முன்பு ஆளுடையபிள்ளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.  இவனும் அலியை இகழ்கிறான். பெண்மை இல்லாதவனை நங்கை என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லால் திருநங்கை என்று குறிப்பது தவறு. திருநங்கை என்ற சொல்லாக்கம் தவறு. அலியே போதும்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 52,  பக். 152, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயநுக்கு  வேளைபுக்கு எதிரி நாயநுக்கு பிந்பு இருக்கும்
    2. வேளைக்காறர் மிணாளந் சூரியநேன் நானும் எதிரிக நா
    3. யகனுக்கு பிந்பு இருந்தேனாகில் எந்
    4. உடன் பிறந்தாளுக்கு நாநே மிணாளன்  

    புக்கு – போகும், சேரும்

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணிக்கு போகும் எதிரிக நாயன் சாவுக்கு பின்னும் வாழப்போகும் வேளக்காரர்காள் நான் சொல்வது கேளுங்கள், “ஒரு பெண்ணுக்கு கணவனான சூரியன் எனும் பெயருடைய நான் எதிரிக நாயன் இறந்த பின் நான் உயிர் வாழ்வேனாகில் என் உடன் பிறந்தாளுடன் நான் கலவி கொண்டவனாவேன்” என்று உறுதிமொழி ஏற்கிறான்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், எண் 53, பக்.153, புலவர் சு. குப்புசாமி

    திருகோவிலூர் வட்டத்தில் வசந்தகிருஷ்ணபுரம் மேட்டுக்கொல்லைப் பாறை 5 வரிக் கல்வெட்டு

    1. உய்யக்கொண்டி வேளைக்காற தொண்ட
    2. மாற் படைச்சந் இவனுக்கு பின் இருப்பேனாகில்
    3. தம்மைக்குத்  தாநேய்  மிணாளன்
    4. கொண்டி வேளக்காறந் வாளி தொண்டமாந்
    5. இவநுக்கு பின்பு இருப்பார் தங்களம்மைக்கு மிணாளர்

    கொண்டி – சிறப்பான, அடங்காத; படைச்சன் – படையாள்

    விளக்கம்: மன்னர் பெயரும் ஆண்டுக் குறிப்பும் இல்லாத 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. உய்யக்கொண்டி என்னும் அடங்காத, சிறப்புடைய காவல் பணிக் குழுவை நடத்தும் தொண்டமானின் படையாள் இந்த தொண்டமான் இறப்பிற்கு பின் தான் உயிர் வாழ்ந்தேனாயின் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன் என்று சூளுரைக்கிறான். அடங்காத சிறப்புடைய காவல் பணிக்குழுவை நடத்தும் வாளி தொண்டைமான் இறந்தபின் உயிருடன் இருப்பவர் அவர் தம் அம்மைக்கு தாமே கலவியாளர் ஆவார். இங்கே தொண்டைமான் என்பவர் அரசன் அல்லன் ஆனால் ஏதோ ஒரு மன்னனின் காவல்பணிக் குழுவிற்கு தலைவன் ஆவான். அவன் மீது புதிதாய் சேரும் காவலர் சத்தியம் செய்கின்றனர். இரண்டு செய்திகளும் வெவ்வேறு காலத்தில் பொறித்தன போல உள்ளன.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 21

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தென் பக்கத்தில் உள்ள முதல் பிரகாரத்தில் தரையில் பதித்த பலகைக் கல்லில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கி யாண்டு 13
    2. ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
    3. லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்புலியூர்
    4. நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரமதேயம் புலி
    5. யூர் நாடி ஸதுர்வ்வேதி மங்கலத்து ஏரிக்கு அறமாக குடு
    6. த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு துளைபொன் காற் ப
    7. லிசையால் ஆட்டு ஐங்கழஞ்சு பொன் பங்கினி பட்ட தலையா _ _

    குணமந்தன் – குணக்குன்று; கொடுக்கன் – மகன்;

    விளக்கம்: சோழன் முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டு 884 இல் வாணகோவரையர் குணம் நிறைந்தவன் குறும்பர் தம் தலைமைக் செங்கோலைக் கொண்டவன் வாணகோப்பாடி மன்னன் வயிரமேக வாணரைசன் மகன் சிற்றண்புலியூர் நாடன் திருவண்ணா நாட்டின் தேவதானப் பிரம்மதேச ஊர் நாடி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள ஏரியைப் பேண தர்மமாகக் கொடுத்த பொன் மூலதனம் 20 கழஞ்சு துளைப் பொன்னாகும். அதற்கு ஆண்டுக்கு கால் பொன் வட்டியாக ஐந்து கழஞ்சு பொன் பங்கு  என்பதுடன் கல்வெட்டு சிதைந்துவிட்டது. அதனால் முழு விவரம் தெரியவில்லை.

    இக்கல்வெட்டு முகமையாக தெரிவிக்கும் செய்தி வாணர் ஆடு மேய்க்கும் குறும்பர் இனத்தவர் என்பதே. வாணர் கோலாரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட கன்னடர் ஆவர். தமிழகத்தில் பல்லவர், முத்தரையர் கன்னியாகுமரி வரை பரவி ஆண்டது போல பரவி ஆண்டவர் வாணர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 65, பக். 32

    இன்னும் சில கல்வெட்டுகளை காண click  https://groups.google.com/g/vallamai/c/I8OUSI1Ipa8/m/3-GYDO4tAQAJ

    Share