Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • மம்மர் அறுக்கும் மருந்து

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்த வாழ்வு வசதி படைத்ததாய், இவ்வுலக இன்பங்களை நுகரக்கூடியதாய் அமையப் பொருள்வளம் அவசியமான ஒன்று. அதனால்தான் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவப் பேராசானும் அக்கருத்தை ஆமோதித்தார். ஆயினும், பொருள் என்றும் நம்மைவிட்டு நீங்காமலிருக்கும் தன்மைத்தா என்றால் இல்லை என்றே பதிலிறுக்க வேண்டிவரும்.

    நிலையாத இயல்புடையவை எவை என ஆராய்ந்த நம் முன்னோர் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நிலையாத்தன்மை கொண்டவை என்று தம் பட்டறிவின் வாயிலாய் உணர்ந்து அவற்றை உலகுக்கு உரைத்தனர்.

    பொருளின் சிறப்பைப் போற்றிய வள்ளுவரும் அதன் இயல்பை வரையறுத்தபோதில், ’அற்கா இயல்பிற்றுச் செல்வம்’ என்றும், ’கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்’ என்றும் உரைத்து அதன் நிலையாத்தன்மையை அழுத்தமாய் அவனிக்கு அறியத்தந்தார்.

    செல்வத்தின் இயல்பை வள்ளுவர் கூத்தாட்டு அவையில் சேரும் கூட்டத்துக்கு ஒப்பிட, நாலடியாரோ வண்டியின் சகடக்காலுக்கு ஒப்பிடுகின்றது.

    துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.
    (நாலடி – செல்வம் நிலையாமை – 2)

    ”மக்களே! குற்றமற்ற செல்வம் உண்டானால், அது தொடங்கி வயலில் ஏறு நடந்ததால் கிடைத்த உணவை அனைவரோடும் பகிர்ந்து உண்க; ஏனெனில், செல்வம் என்றும் ஒருவர்மாட்டு நிலைத்திருப்பதில்லை. அதன் இயல்பு வண்டியின் சக்கரம்போல் மேலும் கீழும் புரள்வது; இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வமானது நாளை வேறொருவரிடம் சென்றுவிடும்” என்கின்றது.

    எளிதில் அழியக்கூடிய பொருட்செல்வத்தின் இயல்புக்கு நேரெதிரான அழியாச்செல்வம் ஒன்றுண்டு; அதுதான் கல்வி.

    செல்வத்தின் நிலையாத்தன்மையை விளம்பிய அதே நாலடியார் கல்விகுறித்துப் பேசும்போது, ”இப்பிறவிக்கு நன்மை பயப்பதாய், பிறருக்கு ஈவதால் குறைவுபடாததாய், கற்போர் தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச்செய்வதாய், தாம் உள்ளபோது அழியாது விளங்கி, அறியாமை எனும் மயக்கத்தை (மம்மர்) நீக்கும் கல்வியெனும் மருந்தினையொத்த பிறிதொன்றை யாம் எவ்வுலகத்திலும் காணவில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கின்றது.

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.
    (நாலடி: கல்வி – 132)

    நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களில் காலத்தால் மூத்ததான தொல்காப்பியம், கல்வி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் நேரடியாகப் பேசாவிடினும், தலைவன் தலைவியைப் பிரிந்துசெல்வதற்கான காரணங்களுள் முதலாவதாக ஓதலைக் குறிக்கின்றது. ஓதல் என்பதனை வேதம் ஓதுதல், கல்வி கற்றல் ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாக நாம் கருதலாம்.

    ஓதல் பகையே தூதிவை பிரிவே. (தொல்: அகத்திணையியல் – 2)

    கல்விக்கான தலைவனின் பிரிவு மூன்றாண்டுகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்ற வரையறையையும் தொல்காப்பியர் தருவதைக் காண்கையில் நிச்சயம் இது உயர்கல்வியையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

    மனிதனுக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கான நான்கு காரணங்களைப் பட்டியலிடுகின்றார் தொல்காப்பியர். அவை, கல்வி, வீரம், புகழ், கொடை ஆகியவை. இந்நான்கிலும் கல்வியை முதலாவதாக வைத்திருப்பது கல்வியால் கிடைக்கும் பெருமிதம் மற்றவற்றினும் உயர்ந்தது எனும் குறிப்புப் பொருளைத் தருகின்றது.

    கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
    சொல்லப் பட்ட பெருமிதம்
     நான்கே. (தொல்: மெய்ப்பாட்டியல் – 253)

    வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பெருந்தகை, ’கல்வி’ என்றோர் அதிகாரம் வகுத்து அதில், அழியாது நிலைத்திருக்கும் விழுச்செல்வம் கல்வியே என்றும், கற்றோரே முகத்தில் கண்பெற்றோர் என்றும் அழுத்தந்திருத்தமாய்ப் பதிவுசெய்திருப்பது கல்வி குறித்த அவரின் உயரிய பார்வையை உலகுக்கு உணர்த்துகின்றது.

    பிற்கால ஔவையார் தம்முடைய கொன்றை வேந்தன் எனும் அறநூலில், கையிலிருக்கும் பொருளைவிட மெய்ப்பொருளாய்ப் போற்றத்தக்கது கல்வியே என்கின்றார்.

    ”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.”

    அம்மட்டோ? மன்னனைவிடவும் கல்வியாளன் பெருமைக்குரியவன்; மன்னனுக்கு அவனுடைய நாட்டில் மட்டுமே பெருமையும் சிறப்பும்; ஆனால், கல்வியாளனுக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று கற்றோனின் சிறப்பைக் கடலளவு உயர்த்துகின்றார் இம்மாதரசி தம்முடைய மூதுரையில்.

    ”மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
    தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
    சென்றஇட மெல்லாம் சிறப்பு.”
    (மூதுரை – 26)

    புலவர்களும் அறிஞர்பெருமக்களும் கல்வியைப் போற்றுவதில் பொருளிருக்கின்றது. ஏனென்றால் அரசர்களிடத்தும் வள்ளல்களிடத்தும் தம் புலமைச் சிறப்பை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு பொருள் கிடைக்கும்; அழியாப் புகழ் கிடைக்கும். ஆனால், செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அக்காலத்தில் விளங்கிய அரசர்களுங்கூடப் பொருட்செல்வத்தைப் போற்றாது கல்வியைப் போற்றியிருப்பதும் கற்கும் முறைகளைச் சாற்றியிருப்பதும் கருதத்தக்கது.

    வடவாரியப் படையை வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பெயர்பெற்ற பாண்டிய மன்னனொருவன், கல்வியின் சிறப்பை விரிவாய்ப் பதிவுசெய்திருக்கும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    அப்பாடல், ”மாணவன் ஒருவன் தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் காலத்தில் உதவியும், மிகுதியான பொருளை குருதட்சணையாகக் கொடுத்தும், வெறுப்பின்றிக் கல்விகற்றல் நல்லது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள் கல்வியில் சிறந்திருக்கும் பிள்ளைபால் அந்தத் தாய்க்குச் சற்றுக் கூடுதல் அன்பிருக்கும். ஒரே குடியில் பிறந்த பலருள் வயதில் மூத்தவனை வருக என்றழைக்காது அறிவில் பெரியவனையே அரசனும் வருக என்றழைத்துத் தனக்கு உற்றதுணையாக்கிக் கொள்வான். வேறுபட்ட நான்கு குலங்களுள் கீழ்க்குலத்தோன் என்று கருதப்படும் ஒருவன் கல்வியில் மேம்பட்டால் மேற்குலத்தோன் எனப்படும் ஒருவனும் அவனிடம் கல்விகற்கச் செல்வான்” என்கின்றது.

    ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.”
    (புறம்: 183)

    நெடுஞ்செழியனின் கருத்துக்களை அப்படியே அடியொற்றி 16/17ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னனான அதிவீரராம பாண்டியன் என்பவனும் கல்வியின் சிறப்பை நறுந்தொகை (வெற்றிவேற்கை என்ற பெயருமுண்டு) எனும் தன்னுடைய நூலில் வடித்துத் தந்திருக்கின்றான்.

    ”கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே
    நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
    கற்றில னாயின் கீழிரு ப்பவனே
    எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
    அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்
    அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்”
    என்கிறான்.

    வள்ளுவம்,

    மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.
    (குறள்: 409) என்றுரைப்பதும்,

    நாலடியார்,

    …கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத்
    தலைநிலத்து வைக்கப் படும்.
    (நாலடி – கல்வி: 133) என்றுரைப்பதும் பாண்டிய மன்னர்கள் இருவரின் கருத்தையும் அரண்செய்வதாய் அமைந்திருக்கின்றன.

    இப்பாடல்களின் வாயிலாக நாமறிகின்ற மற்றொரு செய்தி, தொழிலின் அடிப்படையிலான குல வேறுபாடுகள் சங்க காலத்திலேயே தோற்றம் கொண்டுவிட்ட போதினும் அவை மாந்தரின் கற்றலுக்குத் தடையாக இல்லை என்பதே.

    இடைக்காலத்தில் தமிழகத்தில் நுழைந்த பிற சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்த்திய வாழ்வியல் மாற்றங்களால், அனைவர்க்கும் பொதுவாயிருந்த கல்வியானது ஒருசிலர்க்கு மட்டுமே உரித்தானதாகவும், பெண்கல்வி தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் ஆகியிருக்க வேண்டும். அதன்பிறகு ஆண் பெண் இருபாலர்க்குமான கல்வி என்பது ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கே சாத்தியப்பட்டிருக்கின்றது. அப்போதும்கூடப் பெண்கள் கல்விபெறுவதை நம் சமூகம் ஆதரிக்கவோ வரவேற்கவோ இல்லை என்பது கண்கூடு.

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான மகாகவி பாரதி பெண்கல்விக்கு ஆதரவாக முதலில் உரிமைக் குரலெழுப்பினார்; விடுதலைக் கும்மி கொட்டினார்.

    ”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
    எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி”

    பாரதியின் சிந்தனைகள்மீது கொண்ட விருப்பத்தால் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட புரட்சிக்கவியான கனகசுப்புரத்தினமும்,

    ”பெண்கட்குக் கல்வி வேண்டும்
    குடித்தனம் பேணு தற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    மக்களைப் பேணுதற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    உலகினைப் பேணுதற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    கல்வியைப் பேணுதற்கே

    கல்வியில் லாத பெண்கள்
    களர்நிலம் அந் நிலத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை

    …வானூர்தி செலுத்தல் வைய
    மாக்கடல் முழுத ளத்தல்
    ஆனஎச் செயலும் ஆண்பெண்
    அனைவர்க்கும் பொதுவே…”

    என்று பெண்கல்வியின் அவசியத்தையும், ஆணும் பெண்ணும் நிகராய் நின்று பணிகள் அனைத்தையும் பால்வேறுபாடின்றிச் செய்யவேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டினார்.

    சாதி, மத வேற்றுமையின்றி ஆண், பெண் பேதமின்றி அனைவர்க்கும் கல்வி கிட்டவேண்டும் எனும் விழிப்புணர்வைக் கவிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னரும், சாதி அடிப்படையில் மாணவர்களின் கல்விக்குத் தீ மூட்டும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் தொடர்வது வேதனையின் உச்சம். ஆதிக்க மனோபாவத்தில் ஒடுக்கப்பட்ட சாதியாரின் கல்வியையும் நல்வாழ்வையும் ஒழித்துக்கட்ட நினைக்கும் புல்லறிவினர்க்குக் கடுமையான தண்டனையைக் காவல்துறையும் நீதிமன்றங்களும் வழங்கவேண்டும் என்பதே சமூக நல்வாழ்வில் அக்கறை கொண்டோரின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

    மாந்தர்களே! மம்மர் அறுத்து இம்மை வாழ்வைச் செம்மையாக்கும் கல்வியைப் போற்றுவோம்; வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை
    1. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    2. தொல்காப்பிய மூலமும் இளம்பூரணர் உரையும்.
    3. நாலடியார் மூலமும் மகாதேவ முதலியார் அரும்பொருள் விளக்கமும்.
    4. புறநானூறு மூலமும் உ.வே.சாமிநாதையர் உரையும்.
    5. நறுந்தொகை மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    6. பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்.
    7. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

     

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-10

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-10

    மீனாட்சி பாலகணேஷ்

              ஈழத்தில் எழுதப்பட்ட மற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்களும் பார்வைக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று திருமால் மீதானது. மற்றவை நாவலர் பிள்ளைத்தமிழ், பாரதி பிள்ளைத்தமிழ், சுந்தரர் பிள்ளைத்தமிழ் முதலியனவாம். இவற்றின் பெருமைகளைக் காண்போம்.

                                            “””””””””””””””””””””””””””””””””””””””

    1. வல்லிபுர மாயவன் பிள்ளைத்தமிழ்

              இதனை இயற்றியவர் மு. கந்தையா என்னும் புலவர். 1989ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டுள்ளது. இப்புலவர் பெருமான் பிள்ளைத்தமிழ் பாடுவதில் வல்லவர். மாவை பிள்ளைத்தமிழ், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார் என முன்பே கண்டோம்.

              முதலில் வல்லிபுரத்தைப் பற்றிய சில விவரங்களைக் காண்போம். வல்லிபுரத் திருக்கோவில் ஈழத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. சிங்கை மன்னர்களால் ஆளப்பட்டு சிங்கைநகர் எனப் பெயர் பெற்ற இடம்தான் வல்லிபுரம். புராதனமான க்ஷேத்ரம் எனவும் பெருமை பெற்றது. வள்ளிபுரம் எனவும் சில குறிப்புகளில் காணப்படுகின்றது. வல்லிபுரத்துடன் தொடர்புடைய சில வரலாற்றுக் குறிப்புகள், புராணக்கதைகள், மக்களது வாழ்வியல் குறிப்புகள் ஆகியன இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

              பிள்ளைத்தமிழிலக்கணப்படி காப்புப்பருவத்தில் பிள்ளையைக் காக்க முதலில் திருமாலை வேண்டித் துவங்கியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பத்துப்பருவங்களில் பருவத்திற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டமைந்தது.

              அனைத்துப் பருவப் பாடல்களும் யாப்பும், சந்தமும், பொருளும் நயமும் இனிதமைந்து விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு வருகைப் பருவப் பாடலைக் காண்போம்.

              முதலையின் வாயிலகப்பட்டு ஆதிமூலமே எனவழைத்த யானைக்கும் வல்லிபுரத்தில் வாழ்ந்த பக்தை ஒருத்திக்கும் (இவர் வரலாறு அறியக் கிட்டவில்லை) மோட்சத்தை அருளிய அமலப் பிரான் வருக! அன்றொருநாள் காத்திருந்த சிசுபாலனை வென்று ருக்மிணியை அணைத்த (மணம் கொண்ட) கண்ணாளனே, வருக! பக்திச்செங்கனி ரசம் எனும் தேனைப் பொழியும் தமிழ்ப் பாகாய்க் கனிந்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் பாடல்களை (ஆழ்வார்கள் எனும் உன் அடியார்கள்) இயற்ற அருள்பாலித்த பரமனே வருக!

              வல்லிபுரம் வனமும் புனங்களும் மலிந்தது; அங்கு தலையைக் கொத்திச் சிதறச் செய்யும் மயிலும் அதன் பகையான அரவும் குலவி விளையாடும் புதர்கள் உண்டு; கொல்லைப்புறங்களில் மான் புல்லினை மேயும். அவ்வல்லிபுரத்தின் நாதனே வருக. வேதத்தின் மூலம் அறியவொண்ணாதது; ஆதலால் அது வித்தில் விளையாதது எனப் போற்றப்பட்டது. அந்த வேதத்தின் மூலம் அவ்விறைவனே. அவனே வித்து, முளை, விளைவு, அதன் பயன் என யாவுமாகப் பரிணமிப்பவன். அவனே முதல் விகிர்த வேதகன். அவனை வருகவே என விளிக்கிறார்.

             அத்திக்கும் வல்லிபுர பக்தைக்கும் முத்தியருள்

                              அமலப்பிரான் வருகஅன்

                     றண்ணாந் திருந்தவன் அயிர்க்கருக் மிணியையணை

                              கண்ணாளன் வருகவருக

             பத்திச்செங் கனிரசத் தேன்பிலிற் றித்தமிழ்ப்

                              பாகாய்க் கனிந்தஞ்சானப்

                     பரவசத் தீஞ்சுவைப் பாடல்நா லாயிரம்

                              பாலித்த பரமவருக

             கொத்திச்சி ரங்குதறு மயிலயல் கோளராக்

                              குலவியா டும்புதர்கொள்

                     கொல்லையம் புறவுமான் புல்லுமேய் புனமுமலி

                              வல்லிபுர நாதவருக

             வித்தில்விளை யாததோர் வேதமூ லம்வருக

                              விமலப் பிரான்வருகவே

                     வித்துமுளை விளைவுபயன் யாவுமாய் மெத்துமுதல்

                              விகிர்தவே தகவருகவே.

              மேலும் பலப்பல பாடல்கள். வாசகர்கள் படித்து மகிழ வேண்டும்.

                                  “””””””””””””””””””””””””””””””””””””””

    1. நாவலர் பிள்ளைத்தமிழ்

              இந்த பிள்ளைத்தமிழ் நூலானது மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1979ம் ஆண்டு முதற்பதிப்புக் கண்டுள்ளது,

              ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணியை அறியாத தமிழ் மக்கள் இல்லை எனலாம். இவர் ஒரு இலங்கைத் தமிழர். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழுக்கும் சைவத்துக்கும் இவர் செய்த பணிகள் அளப்பரியன. முதல்முறையாகத் தமிழ் நூல்களை நல்ல முறையில் பதிப்பித்தவர். இவற்றுள் திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூல் காண்டிகையுரை, திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் இவற்றைச் சிறப்பாகக் கூறலாம்.

              நாவலர் தமிழ் மட்டுமன்றி வடமொழியாகிய சமஸ்கிருதம், ஆங்கிலம் இவற்றிலும் கூட நன்கு தேர்ச்சி பெற்றவர். இவரது தமிழ், சைவப்பணி இலங்கையில் மட்டுமின்றித் தமிழகத்திலும் பரவியிருந்தது.  சென்னையில் தங்கசாலை எனுமிடத்தில் வித்தியானுபாலன இயந்திரசாலை எனும் அச்சகம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். இவர் நினைவாக இவரைப் போற்றும் வகையில் இலங்கை அரசு தபால்தலை ஒன்றினை வெளியிட்டது.

              இவர்மீது பெருமதிப்புக் கொண்டிருக்கும் பெரியோர்களும் அறிஞர்களும் பலர். அவர்களுள் ஒருவரே இப்பிள்ளைத்தமிழினையும் இயற்றியுள்ளார். இந்நூலில் அன்னார் தமிழுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

              பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்குட்பட்டு காப்பு முதல் சிறுதேர்ப்பருவம்வரை பத்துப்பருவங்களும் பாடப்பட்டுள்ளன. நாவலரின் கம்பீரமான தோற்றமானது பலராலும் போற்றப்பட்டது. இதனைப் பிள்ளைத்தமிழ்ப் புலவர் பொருளாலும் செய்யுளின் சந்தத்தாலும் ஒரு செங்கீரைப்ப்ருவப் பாடலில் அழகுற விவரிக்கிறார்.

              பொங்கியெழும் சிவப்பொலிவு எங்கும் விரிந்து பரவி நிற்கின்ற தன்மையுள்ளவனே செங்கீரையாடுக; இந்தப் பூமியில் மலிந்துள்ள தீதுகளைனின்றும் நம்மைக் காக்கும் பொருளானவனே செங்கீரையாடுக; கங்கையைச் சடையிலணிந்த சிவபெருமான் தந்தருளிய மதலைக் கனியானவனே செங்கீரை; கனிரசம் நிரம்பிய கரும்பே, கரும்பினின்றும் கிட்டும் கற்கண்டே செங்கீரையாடுக; சிவநெறியினை இகழ்பவர்களையும் பழந்தமிழ்ப் பண்பாட்டை இகழ்பவர்களையும் அவர்கள் படாடோபங்கள் ஒடுங்கும்படிக்கு குற்றங்கள் களைந்து அவர்களெதிரே சென்று சிங்கமெனத் திகழும் நாவலனே செங்கீரையாடுக! தெய்வ நலம் பெருக விளங்கும் சைவ குலாதிபனே செங்கீரையாடுக!

                       பொங்கு சிவப்பொலி வெங்கு மெழுந்தொளிர்

                                      பொற்பே செங்கீரை

                              பூதல மிசைமலி தீதற நமையருள்

                                      பொருளே செங்கீரை

                     கங்கை புனைந்த சிவன்தரு மதலைக்

                                      கனியே செங்கீரை

                              கனிரச மல்கு கரும்பே கரும்பமர்

                                      கண்டே செங்கீரை

                     பங்க மறச்சிவ நெறியிகழ் பரிசினர்

                                      பழந்தமிழ்ப் பண்பிகழ்வார்

                              படாடோ பங்க ளொடுங்க எதிர்செல்

                                      பயங்கர கெம்பீர

                     சிங்க மெனத்திகழ் துங்கநன் னாவல

                                      செங்கோ செங்கீரை

                              தெய்வ நலங்கிளர் சைவ குலாதிப

                                      செங்கோ செங்கீரை.

    எனும் இப்பாடல் வரிகள் நாவலருக்குரிய மிடுக்குடன் தாமும் நடந்து செல்வதாக அணிந்துரை எழுதியுள்ள யாழ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. வித்தியானந்தன் கூறுகின்றார்.

              இது போலும் பல இனிய பாடல்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். அனைவரும் படித்து இன்புற வேண்டும்.

                                  “””””””””””””””””””””””””””””””””””””””””””

    1. பாரதி பிள்ளைத்தமிழ்

              இந்த பிள்ளைத்தமிழ் நூல் அரச பொற்கிழிப் புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களால் இயற்றப்பட்டு 1983ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

              பாரதியார்மீது சில பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழ்நாட்டுப் புலவர்களாலும் எழுதப்பட்டுள்ளது.

              இந்த நூலில் வாழ்த்துரையாக ஒரு பாடலில்,

                        ஞானப் பிரகாசம் நலிந்ததமிழ் தானுயர

                     வானப் புகழ்தந்த வல்லவனைத்- தானப்பேர்

                     பிள்ளைத் தமிழ்பாடிப் பெட்பாம் அறம்பாடி

                     வள்ளல் அமிழ்தீந்தான் வாழ்த்து, எனக் காணலாம்.

              செவிக்கு மிகவும் இனிமையான பாடல்களாலமைந்த பிள்ளைத்தமிழ் நூலிது.

              எடுத்துக்காட்டாக முத்தப்பருவத்துப் பாடலொன்று:

              வெண் தாமரைமலரில் வீற்றிருக்கும் கலைமகளின் வீணையிசை காதினை அள்ளுகிறது; (தமிழை வளர்த்த) மூவேந்தர்களாகியோரின் சபை தனிலே சாமரை வீசும் (தமிழினை வளர்க்கும் அரசர்களை தமிழ்ப் புலவர்கள் மரியாதை செய்வர் எனக் கொள்ளல் வேண்டும்) கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவர்களின் கூட்டம் அனைத்தும் வாழ்த்துகின்றனர். அரச சிம்மாசனத்தினில் தமிழ் இவ்வாறு அழகாக கொலு வீற்றிருக்கின்றது. அந்தத் தமிழை பாரதி எனும் குழந்தை கவர்ந்து வந்து விட்டது; பின் என்ன செய்கின்றது? உள்ளமெனும் தாமரையில் வைத்து வீரம் முதலான சுவைகளையும் நயங்களையும் அதில் ஏற்றி, மென்மையான பட்டுத்துகிலைச் சாற்றி, அணிகளால் அலங்காரங்கள் செய்து (இலக்கிய நயங்களான அணிகள் முதலியவற்றால் அலங்கரித்து) வீதியில் வருவோர்கள் அனைவரும் தங்கி இளைப்பாறும் அரசமரத்தின் கீழே வைத்துக் காப்பாற்றியது. இது எத்தகைய உயர்வான செயல்! அதனுடைய பொன்வாயின் முத்தத்தைப் புலவர் வேண்டுகிறார். புதுமையான இலக்கியங்கள் எனும் கடலில் புகுந்து முத்தான பாடல்களைக் கொடுத்தவனே! உன் பொன்வாயால் ஒரு முத்தம்தர வேண்டும் எனக் கேட்கிறார்.

             வெள்ளைமலர்க் கஞ்சமிசை வீற்றிருந் திடுதெய்வ

                              வீணையிசை காதை யள்ள

                     வேல்வேந்தர் மூவர்செங் கோலேந்து வேத்தவையில்

                              வீசுசா மரை யிரட்ட

             கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவோர்தங்

                              கூட்டமெலாம் வாழ்த் தெடுப்பக்

                     கொற்றமுறு சிம்மாச னந்தனிலே கோலமொடு

                              கொலுவீற் றிருந்த தமிழை

             மெள்ளவே கவர்ந்துவந் துள்ளமெனுங் கமலத்தில்

                              வீரசுவை நயங்க ளேற்றி

                     மென்பட்டுச் சாத்தியணி யலங்காரச் சரமிட்டு

                              வீதிவரு வோர்கள் தங்கும்

             புள்ளுலவும் அரசமரத் தடிவைத்துப் புரந்தவா!

                              பொன்வாயின் முத்த மருளே:

                     புத்திலக்கி யக்கடற் புகுந்துமுத் தெடுத்தவா!

                              பொன்வாயின் முத்த மருளே.

              புதுமையான கருத்தமைந்த பாடல்! இதுபோலும் பற்பல. நூலைப் படித்துச் சுவைக்க வேண்டும்.

                                  “”””””””””””””””””””””””””””””””””””””

    1. சுந்தரர் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர்  சோ. தியாகராச பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 1982ம் ஆண்டில் முதற்பதிப்பைக் கண்டுள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணத்தின் வெளியீடாகும் இது.

              சைவக் குரவர்கள் நால்வரில் சுந்தரரை மட்டுமே ஏன் பாடினார் என நாம் வியக்கலாம். அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில் கூறியுள்ளார். சுந்தரர் தேவாரத்தில் முப்பது ஆண்டுகளாக ஈடுபட்டவர் அதனால் எழுந்த ஆவலால் சுந்தரர் பிள்ளைத்தமிழைப் பாடினார். சுந்தரரின் வாழ்க்கை வரலாறு தனக்கு மிகவும் இனிப்பானது எனக் கூறுகிறார். கயிலையிலிருந்தவர் இறைவன் திருவுள்ளத்தால் பூவுலகில் பிறந்து, வாழ்ந்து பின் கயிலைக்கே திரும்பியது அவர் சரிதம்.

              திருவாரூர்ப் பதிகத்தில்,

                        ‘கயிலையில் மாயங்காட்டினார்

                     திருநாவலூரில் பிறவி காட்டினார்;

                     திருவெண்ணெய் நல்லூரில் மறவா மனங்காட்டினார்

                     ஆரூரில் கண்ணீர் கொண்டார்,’ எனத் தமது வரலாற்றை சுந்தரரே கூறியுள்ளார்.

              இதனால் புலவர் சுந்தரர்மீது ஒரு பிள்ளைத்தமிழை ஆவலாக இயற்றியுள்ளார் எனக் காண்கிறோம்.

              பிள்ளைத்தமிழின் அமைப்பு சிறிது வேறுபட்டுள்ளது. ஆக்கியவர் கூற்றில் ‘காப்புப்பருவத்தை வேறுவிதமாகப் பாடப்பட்டுள்ளது. இறைவர் தந்த நம்பிக்கு வேறு காப்பு மிகையாதலின் அவ்வத்தலத்து ஈசரையே காக்க என வேண்டிக் கொள்ளப்பட்டது,’ என்கிறார். அருமையான கருத்து.

              அவ்வண்ணமே திருவெண்ணெய்நல்லூர்ப் பெருமான், அதிகைப்பரமன், த்ில்லையீசர், பிரமபுரத்தீசர், ஆரூர்ப்பிரான், திருமுதுகுன்றத்தீசர், ஆதிபுரி நாதர், கச்சியேகம்பத்தீசர், அவிநாசிப்பிரான், அஞ்சைக்களத்தீசர் அனைவரையும் வேண்டியே காப்புப் பருவம் பாடப்பட்டுள்ளது.

              அம்புலிப்பருவம் கடினம் விடப்பட்டது என்கிறார். அதாவது ‘பிள்ளைக்கவிக்கு அம்புலி புலியாம்’ என்பது வழக்கு.    அம்புலிப்பருவத்தை சாம தான, பேத, தண்ட உபாயங்களுடன் அம்புலியை அழைத்துப்பாட வேண்டும். இதில் அவ்வாரு கடினத்தன்மை இல்லை என்கிறர் போலும். ஒரு பாடலைக் காண்போமே!

              ‘இந்த நம்பி ஓரிடத்தில் இட்டபொன் வேறோர் இடத்தில் ஆற்றில் எடுக்கக் கிட்டியது; ஓரிடத்தில் இவன் கூறிய ஓர் சொல்லினால் நெல் மலையாகக் குவிந்தது. மற்றோரிடத்தே ஒரு பொய்கையில் ஒரு முதலை தன் வாயில் இட்ட பிள்ளையைக் கரையினில் இவனுடைய ஒரு சொல்லால் உயிருடன் கொண்டுவந்து தந்தது. இவர் வேண்டிக் கொண்டதனால் ஈசனும் திருவாரூர் வீதிகளில் அலைந்து திரிந்தான் (பரவையிடம் சுந்தரருக்காகத் தூது சென்றலைந்தான் சிவபிரான்) இதெல்லாம் நீ அறியாத செய்திகளோ? ஒரு சொல்லைக் கூறியதனால் நீ படும் பாடும் கொஞ்சம் தானோ? அதனை உரைக்கவும் இயலாது. ‘வா’ எனும் ஓர் சொல்லால் இவன் உன்னை மகிழ்ச்சியாக அழைக்கின்றான். விளையாட வாராய். உலகம் புகழ்ந்தேத்தும் திருநாவலூர் நம்பியுடன் நீ விளையாட வாராய்,’ என்பது பாடலின் பொருள்.

             ஓர்சொலால் நதியொன்று உலவவழி விட்டது

                              ஒருநதி பொன் சுமந்தே

                     ஒருபொய்கை தன்னிலே கொடுவந்து தந்தது

                              உயர்ந்தகோ ளிலி தன்னிலே

             ஓர்சொலால் நென்மலை உவந்தே சொரிந்தது

                              உலகமும் காண நின்றே

                     ஒருபொய்கை முதலைவாய்ப் பிள்ளையைக் கரைதனில்

                              உய்ந்திடக் கொடுவந் ததால்

             ஓர்சொலால் இறைவனும் ஆரூ ரலைந்தனன்

                              உண்மைநீ அறியா ததோ

                     ஓர்சொலால் நீபடும் பாடுதான் கொஞ்சமோ

                              உரைக்கவும் முடியாது காண்

             ஓர்சொலால் உன்னையே உவந்தழைக் கின்றனன்

                              உவப்புடன் ஆட வாவே

                     ஒருநாவ லூர்வளரு முலகுபுகழ் நம்பியுடன்

                              உவப்புடன் ஆட வாவே.

                                  “”””””””””””””””””””””””””””””””

              ஆக, அத்துணை நூல்களிலும் பலவிதமான நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். காலத்திற்கேற்ப சில ஆசிரியர்கள் எளிய இன் தமிழிலும் இந்நூல்களை இயற்றியுள்ளனர். நாம் அவற்றைப் படித்து ரசித்து மகிழலாம்.

              இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கிறேன். லண்டனில் வசிக்கும் திரு. பத்மனாபன் ஐயர் மூலமாக ‘நூலகம்’ இணையதள’ நூற்தொகுப்பினின்றும் எனக்குக் கிட்டிய பிள்ளைத்தமிழ் நூல்களைக் கொண்டே இக்கட்டுரைத்தொடர் எழுதப்பட்டது. அன்னாருக்கு எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

                                                      (நிறைந்தது)

    Share
  • கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் எனும் கவிதைப் பெருங்கடலின் உள்ளே நீச்சலடிக்கும் ஒரு தருணமிது .

    ஆயிரமாய்ப் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் படைப்புகளின் அத்தனை அங்கங்களினுள்ளும் தனது முத்திரையைப் பதித்தவர் எம் கவியரசர்.

    ஆண்டுகள் பல பத்து கடந்து போயிடினும் தமிழர் மனங்களில் அழியாது நிலைத்திருக்கும் வகையான படைப்புகளைத் தந்தவர் கவியரசர்.

    அன்றாட வாழ்க்கையிலே ஆண் , பெண் இருபாலருக்கும் இடையில் ஏற்படும் விரக தாபங்கள் , விரக்தி இந்த உணர்வுகளை அதற்குரிய அழுத்தங்களோடு எமக்கு எளிமையான வரிகளில் தந்தவர் கண்ணதாசன்.

    இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் பாடல் இல்லறம், துறவறம் என இரண்டுக்கும் இடையிலான ஒரு விவாதக் களம் போன்று அமைத்திருக்கிறார் கவியரசர்.

    அன்றைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரை அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் அருமையான பாடல்.

    குணச்சித்திர வேடங்களைத் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் மிளிர வைத்த ஏ.வி.எம் ராஜன் அவர்களின் பாத்திரம் பங்கு பற்றும் ஒரு பாடல் காட்சி.

    தரிசனம் எனும் படம். ஏ.வி.எம் ராஜன் அவர்கள் இரட்டை வேடமேற்று நடித்த ஒரே ஒரு திரைப்படம்.

    இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் இசையமைப்பாளர் சிறந்த பாடகியான சூலமங்கலம் ராஜேஸ்வரி என்பதே !

    அற்புதப் பாடகர் அமரர் ஐயா டி.எம்.எஸ் அவர்களும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்த பாடலிது.

    இல்லறத்துக்குள் துறவறத்தைப் புகுத்த முடியுமா? எனும் கேள்விக்கு முடியும் என ஆன்மீக அறிவியலின் மூலம் பதிலளித்திருக்கிறார் கவியரசர்.

    எங்கே பாடலைப் பார்ப்போமா ?

    விரக தாபத்தில் துடிக்கும் ஒரு பெண்ணின் நிலையை, இல்லற சுகத்தின் அனுபவத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் நிலையை விரசமின்றி வழங்குகிறார் கவியரசர்.

    மாலை நேரத்தை ஒரு பெண்ணின் காதல் மயக்கத்திற்கான காலம் என்று கூறுவதன் மூலம் ஒரு பெண் தன் மனநிலையை, காதல் தாபத்தை ஆணிடம் கூறுவதாகக் கவியரசர் வடித்திருக்கும் வரிகள்.

    பெண்: இது மாலை நேரத்து மயக்கம்
    பூமாலை போல் உடல் மணக்கும்
    +
    இதழ் மேலே இதழ் மோதும்
    அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
    இது மாலை நேரத்து மயக்கம்

    அதைக் கேட்டதும் அதற்கான ஆணின் பதில் எவ்வாறு இருக்கும்?

    சாதாரண மனநிலையைப் பார்த்தால் நெருப்பிடம் பஞ்சு என்னை அணைத்துக்கொள் என்று கேட்பது போலத் தென்படும்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவின் தாக்கம் வெளிப்படுகிறது.

    வாழ்க்கையைத் தத்துவ ரீதியில் பார்க்கும் அந்த ஆணின் பதில் எப்படியிருக்கிறது ?

    ஆண்:இது காலதேவனின் கலக்கம்
    இதை காதல் என்பது பழக்கம்
    ஒரு ஆணும் ஒரு பெண்னும்
    பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
    இது காலதேவனின் கலக்கம்

    ஆனால் அவள்தான் விரக தாபத்தில் தவிக்கிறாளே! அவனுடைய தத்துவ வார்த்தைகளில் ஆற்றுப்படுத்தக்கூடியதா அவளுடைய காதல் தாபம்.

    பனியும் நிலவும் பொழிகிறதாம் அந்தப் பொழுது எப்படி இருக்கும் ?

    காதல் செய்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு மென்மையான பொழுது என்பதை அக்காதல் வயப்பட்ட பெண் கூறுவதாகக் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம்.

    பனியும் நிலவும் பொழியும் நேரம்
    மடியில் சாய்ந்தாலென்ன

    பசும் பாலை போல மேனி எங்கும்
    பழகிப் பார்த்தாலென்ன?

    ஏக்கத்தோடு கேட்கிறாளாம் அந்தப் பெண்.

    அதற்கு அந்த ஆணின் ஆன்மீகம் சார்ந்த பதிலை எத்தனை அழகாக எடுத்து இயம்பியிருக்கிறார் கவியரசர் பாருங்கள்.

    உடலும் உடலும் சேரும் வாழ்வை
    உலகம் மறந்தாலென்ன
    தினம் ஓடியாடி ஒயுமுன்னே
    உன்மை உணர்ந்தாலென்ன

    வெறும் உடல் மயக்கத்தால் சேர்வதுதான் காதல் என்று வாழ்க்கை கூறியதா என்ன? இதுவெல்லாம் வெறும் மாயை தானென்று எப்போது உணரப் போகிறோம் ? என்று கேட்கிறான் போலும்.

    காதலுக்கும் ஆன்மீகத்துக்கும் நடக்கும் விவாதமல்லவா? அவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளுடைய அந்தப் பருவத்தில் தேவையானது காதல் தானே விட்டுவிடமாட்டாளே சும்மா.

    உறவுக்கு மேலே சுகம் கிடையாது
    அணைக்கவெ தயக்கமென்ன

    என்று விடுகிறாள் .

    அவனும் தனது நிலையிலிருந்து இறங்கி வருவதாயில்லை . அவனது பதிலைப் பார்ப்போம்.

    இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
    இதற்குள்ளே ஆசையென்ன

    போட்டானே ஒரு போடு! வெறும் ஒன்பது ஓட்டைகளைக் கொண்ட ஒரு கூடுதானே எமது உடம்பு. இந்த மூச்சுக்காற்று அந்த ஒன்பது ஓட்டைகளில் ஒன்றால் வெளியேறிவிட்டால் பின்பு விழுந்துவிடப் போகிறோம். இதற்குள்ளே ஏன் வீணாக ஆசை கொள்கிறாய் என்கிறான்.

    அவளோ இலேசுப்பட்டவள் இல்லை. தன்னுடைய வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் தான் விரக தாபத்தின் வீரியத்தைத் தர்க்கம் செய்கிறாள்.

    ஆனானப்பட்ட முனிவன் அவன் கூட ஒரு அழகு மோகினியின் வடிவில் மயங்கிய பூமி ஐயா இது, இதன் முன்னே நீ எல்லாம் என்ன சும்மா ஆன்மீகப் பிதற்றல் செய்கிறாய் என்கிறாள்.

    முனிவன் மனமும் மயங்கும் பூமி
    மோக வாசல் தானே
    தினம் மூடி மூடி ஓடினாலும்
    தேடும் வாசல்தானே

    ஆகா ஆன்மீக வழியாக வந்து என்னைத் தாக்குகிறாளே என்ற அங்கலாய்ப்போடு அவனின் பதில் வெளிப்படுகிறது.

    பாயில் படுத்து நோயில் விழுந்தால்
    காதல் கானல் நீரே
    இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
    போகும் ஞானத் தேரே

    ஏதோ மரணம் எனும் கதவு எமக்குத் திறக்காது என்பது போலல்லவா பேசுகிறாய் , பெண்ணே நோய் எனும் ஒரு வலை எம்மைப் பிடித்துப் பிணைத்துவிட்டால் பாயில் விழுவது காதல் செய்வதற்காக அல்ல அதை மறந்துவிடாதே என்கிறான்

    என்னையே தருவதற்குச் சித்தமாக இருக்கிறேன் என்று என் காதலை வெளிப்படுத்தியும் பணிய மாட்டேன் என்கிறானே சரி நானாவது பணிந்து போய் விடுவோம் என்று எண்ணுகிறாள் போலும்

    இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
    இதயமே மாறி விடு

    நான் காதலைக் கேட்கிறேன். நீயோ ஆன்மீக வாசலைக் காட்டுகிறாய். உனது இதயத்தை எனக்காக மாற்றிக்கொள்ள மாட்டாயா? என்று தனது கடைசி ஆயுதமான கெஞ்சலை எடுத்து விடுகிறாள்.

    ஆன்மீகத்தின் அறிவியலின் உச்சத்தில் இருக்கும் அவன் இதையெல்லாம் கடந்தவனாயிற்றே. அவனது இதயம் இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன ?

    இது ஆடி ஓடிச் சாய்ந்த தென்னை
    உன்னை நீ மாற்றி விடு

    நான் உலகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பயணித்து அனுபவங்களைச் சேகரித்தவன். ஆன்மீகமே எனது வேதம் நான் மாறப் போவதில்லை. நீ உன்னை மாற்றிக்கொள் என்கிறான் அவன்.

    கவியரசர் கண்ணதாசனுக்கு இத்திரைப்படத்தில் காட்சியைக் கொடுத்து, அதற்குக் கேட்ட பாடலுக்கான வரிகளை யாத்துக் கொடுத்துள்ளார்.

    இங்கே நான் சொன்ன விளக்கங்களும் அந்தத் திரைப்படத்துக்கான காட்சியின் விளக்கமும் மாறுபடலாம். கவியரசரின் ஆன்மீக அறிவியலின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதற்காகவே நான் எனது விளக்கங்களை குறிப்பிட்டேன்.

    மீண்டும் சந்திப்பேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது. 
    2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி 
    3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல் 
    4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ 
    5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு 
    6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ
    7. த்தோர்பட்டி   

    ஞான்று  – பொழுது; எறிந்த – அழித்த; கோயிற்றமன் – அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் – இராகுத்தான். குதிரை வீரர்.

    விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐந்நூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையைக் குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரச் சாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத்  தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.

    வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையைப் பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, எதிரிப் படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து “எட்டி” என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று ‘செட்டி’ ஆனது. அப்படிப்பட்ட  நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக  வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனைத் தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ?  இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும்  எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ  ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ  தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _   / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன  மஹா / புவந வீரர்க _ மஹா / வீர  ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள்  மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந்  _ _ /  (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந்  திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும்  அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும்  கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும்  சத்துருகண்ட மாயி / லெட்டியும்  பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந்  நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும்  பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம்  இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம்  மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய  வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _                        

    மக்களான – படைவீரரான; பணிசை – பணிசெய்; கண்டழி – துணை நிற்கும் படை; எறி – தங்கும்  அல்லது காக்கும்; மாயிலெட்டி – எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் – பெருந் தலைவன்; ஸமயம் –  படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற – அச்சுறுத்திய; தறித்து – வெட்டி; கிட – ஆயுத சாலை;  வீரபட்டணம் – வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி – அகமகிழ்ந்து; இயம்ப – சொல்ல

    விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம்  ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும்  இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில்  வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுகத் துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப்  படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமையப் படையும் சூழ்ந்து இருக்க, “நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன்  மாளனைக் கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமையப் படையின் ஆயுதக் கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயல்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வுகொள்ள, தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்” மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் எனக் குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.

    பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையைப் பேணியதைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: ஒன்றியத் தொல்லியல்  துறையால் 1926இல் முன்பக்கம்  மட்டும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்கக் கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்குச் சுவரில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திருபுவனச்  சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _ 
    2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து 
    3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக்  கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _ 
    4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய  நாய[னா] _
    5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]
    6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்  
    7. _ _ _ க்குத்  திருப்பள்ளியறை நாச்
    8. சியாரை  எழுந்தருளிவித்து இன்னாச்சியார் 
    9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட
    10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்     

    பழனம் – வயல், பொய்கை ;  நாயனார் – இறைவன்; 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 1208இல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 30ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. நிகரிலி சோழ மண்டலத்தில் அடங்கிய தகடூர் நாட்டின் எயில் நாட்டு கலிஞ்சிறைப் பற்றில் காகைகறையில் கோவில் கொண்ட திருப்பழனமுடைய  நாயனார்க்குத் திருக்கோவிலூரில் கோவில் கொண்ட திருவீரட்டானம் ஈசுவரர் கோவில் தேவரடியாரில் ககையாழ்வியின் மகள் ஆளுடைய நாச்சியார் இங்கத்து திருபள்ளியறை இறைவியை எழுந்தருளச் செய்து  இத்தேவிக்குத் திருஅர்த்த சாம பூசைக்கு அமுதூட்ட, குட்டையூரில் காடு திருத்தி, சாகுபடிக்குக் கொண்டு வந்த நிலத்தில் நாற்பது அளவு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தனர். கல்வெட்டு அதற்கு மேல் சிதைந்துவிட்டது. ஆளுடையநாச்சியாரின் தாய்ப் பெயர் ககையாழ்வி என்பதும் காகைகறை என்பதும் ஒலித் தொடர்பு கொண்டுள்ளதால் இவள் தன் தாய் ஊர் இது என்று  வந்தனளோ?  ககை, காகை இரண்டில்  ஒன்றில் ஏதோ எழுத்துப் பிழை உள்ளது?

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX, பக்கம் 238

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அகத்தீசுவரர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் பட்டிகையில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார்  மாதருங் கலை மாதருங் சீர்மாதருங் போர்மாதரும்  வந்து வாழ  நாற்கடல் சூழ் புவி ஏழும் பாற்கடல் சூழ் புகழ் பரப்பச் சோதிமணிமுடி  புனைந்தருளி அறு சமயமு மைம்பூதமு  நெறியில் வந்து பாரிப்பத்  தென்னவருஞ் சேரலருந்  சிங்களரு முதலாய 
    2. மன்னவர்  வந்திறை சூழ்த்து சேவிப்ப  ஊழி  ஊழி ஒரு செங்கோலேழு  பாருமினி  தளிப்பச் செம்பொன் வீரஸிம்மாஸனத்து உலகுடை முக்கோக் கீழாநடிகளோடும்  வீற்றிருந்தருளிய கோ ராஜகேசரிபந்மரான  திரிபுவனச்சக்ரவத்திகள்  ஸ்ரீ இராஜாதிராஜா தேவர்க்கு யாண்டு  நாலாவது  ஐயங்கொண்
    3. ட சோழ மண்டலத்து  ஒய்மா நாடான   விஜையராஜேந்த்ர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி  அப்பன் சாத்தநும் வெண்குன்றக் கோட்டத்து உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் பரிவேட்டை போன இடத்தில் ஒரளி உதையன்  பெருமாள் புல்வாயை எய்த அம்பு பிழைத்து இவ்
    4. வப்பன் சாத்தனை அம்புபட்டு பட்டமையில் இதுக்குப் பெருமக்களும் பெரிய நாட்டாரும் பன்னாட்டாரும் கூடி இருந்து பிராயச்சித்தம் விதித்தபடி  இம்மண்டலத்து  உலக்கை ஊராந ராஜேந்த்ர நல்லூர்த் திருவகத்தீஸ்வர முடைய மஹாதேவர் கோயிலில் வாதாபி விடங்கர்க்கு இ(வ்)வப்பன் சாத்
    5. தனுக்காகப் பகைநீங்க இவ்வொ(ர)ளி உதையன் பெருமாளேன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் திருவுண்ணாழிகை ஸபையோம் உபையமாகக் கைக்கொண்ட  பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றுங் கைக்கொண்டு  இத்திரு நுந்தா விளக்கு ஒன்றுஞ் சந்திராதித்த வரை எரிக்கக் கடவோம் ஆகச் சம்ம
    6. தித்தோம்  திருவு(ள்)ணாழிகைச் ஸபையோம்.            

    பரிவேட்டை – வேட்டைச் சுற்று; புல்வாய் – கலைமான்; பெருமக்கள் – பிரமாண ஊர் மன்ற உறுப்பினர்; பெரிய நாட்டார் – நாட்டாண்மை தலைவர்; பிழைத்து – தவறுதலாக;  பன்னாட்டார் – பல்குழு வணிகராக இருக்குமோ?;  வாதாபி விடங்கர் – உளியால் செதுக்கப்படாத லிங்கம்; உண்ணாழிகை – கருவறை 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசாதிராசன் மெய்க் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இது அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170இல் வெட்டப்பட்டது. தொண்டைநாடு என்னும்  செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஓய்மா நாடெனும் விசய ராசேந்திர வளநாட்டு எயில்நெடுங்கல் நாட்டில் உள்ள நெடியம் கிராமத்தில் வாழும் பள்ளியான அப்பன் சாத்தனும் வெண்குன்றக் கோட்டத்தில் அடங்கிய உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் சுற்று வேட்டைக்குப் போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் கலைமானை நோக்கி விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தனைத் தைத்து அவன் இறந்து போகிறான். இதன் காரணமாகப் பிராமண ஊர் மன்றத்தாரும், பெரிய நாட்டரும், பன்னாட்டு வணிகரும் ஒன்று கூடி, கொன்ற பாவத்திற்குக் கழுவாய் விதித்து இம்மண்டலத்தில் உள்ள உலக்கை ஊரான இராசேந்திர நல்லூர் என்னும் இன்றைய ஒலக்கூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வாதாபி விடங்கர் சிவலிங்கத்திற்கு, இறந்த அப்பன் சாத்தன் கொலைப் பழிநீங்க இந்த ஒரளி உதையன் பெருமாள் ஏற்படுத்திய நந்தா விளக்கு எரிப்பு ஒன்றுக்கு இக்கோயில் கருவறை பிராமணர் நன்கொடையாக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் பெற்றுக்கொண்டு இத்திரு நந்தா விளக்கை ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை எரிப்போம் என்று உறுதி கூறி, கல்வெட்டினர் கருவறைப் பணி செய்யும் பிராமணர்கள்.

    இங்கு நியாயத்தாரின் நீதிமன்றம் தவிர்க்கப்பட்டதோ? எல்லாம் மிரட்டல் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதையன் பெருமாள் நந்தா விளக்கு எரிக்கும் அளவிற்குச் செல்வ செழிப்புள்ள குடியில் பிறந்தவன் என்பதை அவன் சுற்று வேட்டையால் விளங்கிக்கொள்ள முடிகிறது. உரத்தி ஓர் ஊர் பெயர். ஒரளி ஊராளி என்பதன் கொச்சைத் திரிபா எனத் தெரியவில்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 8

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் உப்புவேலூர் கிராமம் திருவிருத்தப் பெருமாள் கோயில் வாசலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. இக்கோயில் திருவாசல்
    2.  பறயன் திருவாசல்

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டினது எனக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் தெய்வீக வாசல் ஒரு பறையனால் செய்விக்கப்பட்டதனால் அவன் பெயரில் பறையன் திருவாசல் எனக் குறிக்கப்பட்டது.

    பறையர்கள் கோவிலுக்குச் சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டுகள் பல உள. ஆனால் இது சந்தி விளக்கை விட அதிகச் செலவாகும் திருப்பணி என்பது இப்பறையன் செல்வச் செழுமையும் பதவியும் பெற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. உண்மை இப்படி இருக்க, தலித்தியர் தம்மை இச்சமூகம் 2,000 ஆண்டுகளாக ஊரில் வரவிடாமல் ஒடுக்கியதாக பொய்யை  நம்பிப் பழிக்கின்றனர். எல்லாக் கோயிலும் ஊர் நடுவே தான் அமைந்துள்ளன. ஒருவர் கோவிலுக்குச் செல்ல வேண்டுமெனில் பிராமணர் வாழும் தெருவைக் கடந்து தான் கோவிலுக்குச் செல்ல முடியும். இத்திருவாசல் அமைத்த பறையன் ஊருக்குள் வந்து தானே இதைச் செய்திருக்க முடியும்? திருவாசல் செய்தவன் கோவிலில் சாமி கும்பிடாமலா இத்திருப்பணியைச் செய்திருப்பான்? எனவே பறையர் ஒடுக்குமுறை என்பது 16-17 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாக ஒடுக்கு முறை ஆகும். நிர்வாக ஒடுக்குமுறைக்கும் மதத்திற்கும் மனுதர்மத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. விசயநகர ஆட்சிக்கு முன் பறையர் ஒடுக்கு முறை இருந்ததில்லை என்பதே உண்மை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 153.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடியில் உள்ள 8 வரி நடுகல் கல்வெட்டு.

    1. கோவிசைய மயேந்திர பருமற்கு 
    2. யாண்டு பதினொன்றாவது கீழ் வேணாட்
    3. டுத் துடரி மேல் விலக்குமிறை
    4. யார் வந்த ஞான்று பெரும்பா
    5. ண்ணரையர் மருமக்கள் அம்கோ
    6. ட்டையர் சேவகன் சாக்கை ப
    7. றையனார் இளமகன் ஏறன்
    8. எறிந்து பட்டான். 

    ஞான்று – போது; மருமக்கள் – பெண் கொடுத்த உறவால் வந்த உறவினர்; சேவகன் – படைத்தலைவன்; இளமகன் – பயிற்சி பெறும் கன்னி வீரன்; எறிந்து – வென்று; பட்டான் – வீரச் சாவடைந்தான்.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு பல்லவன் முதலாம் மகேந்திர வர்மனின் 11ஆம் ஆட்சி ஆண்டு 601இல் வெட்டப்பட்டது. கிழக்கு வேணாட்டு துடரி மீது விலக்குமிரையார் படையெடுத்து வந்த போது பெரும்பாண அரசர் மருமக்களான அம்கோட்டையர்க்குப் படைத்தலைவன் சாக்கைப் பறையனிடம் பயிற்சி பெரும் கன்னி வீரன் ஏறன் என்பவன் எதிரிப் படையை வென்று வீரச் சாவடைந்தான்.

    துடரி இன்றைய பெரிய கோளப்பாடியாக இருக்கலாம். பறையர்கள் போர்வீரர்களாக, தொன்முது காலம் முதல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தம் இன மக்களைத் திரட்டிப் பயிற்சி தந்து போரிட்டதால் அப்படைக்குத் தளபதிகளாகவும் இருந்துள்ளனர். சாக்கைப் பறையன் ஆடவும் தெரிந்தவனோ? ஏறு என்றால் காளை ஏறன் என்றால் காளையன். இப்படித்தான் அக்கால மக்கள்  தமிழில் பெயர் வைத்தனர்.

    பார்வை நூல்: செங்கம் நடுகற்கள் க.எண் 1971/96

       

    திண்டுக்கல் மாவட்டம் உடும்பகுடி வேட்டைக்காரசாமி கோவில் 13 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ 
    2. இரணசிங்க 
    3. த் துவராவதி வெள்ளார்
    4. பளி 
    5. நாயகன் கா
    6. ரி சாத்தன்   
    7. உடும்பகு
    8. டி நிரை கொள்ள 
    9. பின்பு சென்று 
    10. எறிந்து பட்டான் 
    11. பள்ளி வே
    12. ளா(ந்) சாரிகன் சி
    13. ய்    

    வெள்ளார் / வெள்ளாளர் – வெள்ளைத் தோல் ஆரியர்; பள்ளி – வன்னியர்; நிரை – கால்நடை கூட்டம்; கொள்ள – கொள்ளையிட; எறிந்து – வென்று; வேளாண் – அரசகுடி உறவினன், அரசகுடி ஆள்; சிய் – சேய், மகன்.

          

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. இதில் வேந்தர் பெயர் ஏதும் குறிக்காமல் அங்கத்துக் குறுநில அரசன் பெயர் குறிக்கப்படுவது பல்லவர் ஆட்சிக் குலைவின் காரணமாக இருக்கலாம். இரணசிங்க துவராபதி வெள்ளாளர்க்குப் படைத் தலைவனான சேவகன், பள்ளிசாதித் தலைவன் காரி சாத்தன் என்பவன் உடும்பகுடி கால்நடைகளைக் கொள்ளையிட்ட போது அதைத் தடுக்கப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று போரில் வென்று வீரச் சாவடைந்தான் பள்ளி வேளாண் சாரிகன் என்ற அரசகுடி உறவினன். அவன் மகன் இந்நினைவுக்கல் எடுப்பித்தான். இன்று இது வேட்டைக்காரச் சாமியாக வணங்கப்படுகிறது.

    வெள்ளாளர் என்பவர் வெள்ளைத்தோல் ஆரியர் என்பதால் தான் வெள்ளாளர் என்று குறிக்கப்பட்டனர். தொண்டை மண்டலத்தில் இருந்து கைக்கோளர், பறையர் ஆகியோர் படைவீரர்களாகத் தெற்கே சென்று தனியே படைப்பற்று குடியிருப்பு அமைத்தது போலவே பள்ளி என்னும் வன்னியரும் தெற்கே சென்று திண்டுக்கல்லில் படைப்பற்று அமைத்து வாழ்ந்ததற்குச் சில நடுகற்கள் சான்றாக உள்ளன. இது அதில் ஒன்று.

    பார்வை நூல்: இது வரலாற்றுத் தேடல் குழுவால் புதிதாக அறியப்பட்ட நடுகல் கல்வெட்டு. இன்னும் நூலில் அச்சேறவில்லை.

    மதுரை பழங்காநத்தம் மேற்கே உள்ள மாடக்குளம் ஊர் குளத்தின் வடக்கு மடைத்தூண் 12 விரிக்க கல்வெட்டு.

    1. விறோதி வருஷம் 
    2. ஆவணி மாத
    3.  ம் 29 தேதி திருவா
    4. லைவாயன் ம
    5. டைக் கல்லு 
    6. எடுத்து நாட்டி 
    7. வித்தான் திரு
    8. வாலை வாச்சி 
    9. அதிகாரி மகன் 
    10. ஆரியர் புத்திர
    11. கணக்கு நாய
    12. ன் பிள்ளை.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு விரோதி ஆண்டு 1709 அல்லது 1769இல் ஆவணி மாதம் 29ஆம் தேதி வெட்டப்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம் ஊர்க்குளத்தின் திருவாலைவாயன் எனும் மடைக்கல் சாய்ந்து சரிந்து கிடந்ததைத் தூக்கி அதே இடத்தில் நிறுத்தினான் திருவாலை மன்ற அதிகாரி மகன் ஆரியர் புத்திரக் கணக்கு நாயன் பிள்ளை என்பவன். 18ஆம் நூற்றாண்டு வரை ஆரியர், இதாவது உயர்ந்தோன் என்ற பட்டத்தைத் தாங்கியவர் வெள்ளாளர் ஆவர். ஆனால் அடுத்த 19 ஆம்  நூற்றண்டில் அதைப் பிராமணர் பக்கம் திரும்பிவிட்டனர் அதே வெள்ளாளர்.

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக்கம் 120

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! –  27

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

    மாதவரத்தார் நனைத்த மழை!

    முனைவர் ச.சுப்பிரமணியன்

     

    முன்னுரை

    வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல்  பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள்.  அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழிலக்கணத்தில் மழை

    நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது.  கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.

    1. ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”

     

    1. ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)

    இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.

    பத்துப்பாட்டில் மழை

    அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம்.  சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத்  தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை  கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம்  கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.

    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)

    கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.

    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
    கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    எட்டுத் தொகையில் மழை

    எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை.  நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

     

    முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ

    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

    “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
    “பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.

    பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்

    என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

    பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்

    என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

    என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது.  கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.

     

    சிலப்பதிகாரத்தில் மழை

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக  அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

    மேல் நின்று தான் சுரத்தலான்!”

     

    என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.

    பாவை இலக்கியங்களில் மழை

    மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

    “ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
    ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய்”

    எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.

    மகாகவியும் மழையும்

    தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்

    “திக்குகள் எட்டும் சிதறி தக்கத்

    தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

    பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட

    தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்

    சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு

    தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட

    தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட

    வெட்டியடிக்குது மின்னல் – கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

    கொட்டியிடுக்குது மேகம் – கூ

    கூவென்று விண்ணைக் குடையுது காற்று

    சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

    தாளங்கொட்டிக் கனைத்தது வானம்

    எட்டுத் திசையும் இடிய மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

     

    அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான்.  ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன்.  சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.

    புதுக்கவிதைகளில் மழை

    மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    “நீ இல்லாத இடத்தில்
    கருகி போயின விவசாயம்..
    நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
    விவசாயம்!
    நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”

    என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.

    “அடைமழையைக் கண்டு

    ஆனந்தம் கொள்ளாமல்

    தவிக்கிறது

    அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”

     

    கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!

    “கண்ணாடிப் பூக்களாய்

    மண்மீது உடைகின்றாய்!

    கண்மூடித் திறக்குமுன்னே

    காணாமல் மறைகின்றாய்!”

     

    என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.

    “இப்போதெலலாம்

    எப்போதாவது பெய்யும் மழையால்

    காளான்கள் கூட முளைப்பதில்லை

     

    விளைச்சலுக்குப் பயன்படாமல்

    வீணே கொட்டித் தீர்க்கும்

    மழையில்

    ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன

    கவிதைகள்!

     

    அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்

    பொருள் போல

    மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது

     

    பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது

    மழையின் பயணத்திட்டத்தில்

    அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”

     

    திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து  கொள்ளலாம். அருமை!

    மருதகாசி நனைந்த மழை

    மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.

    1. “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே

    துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”

    1. “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
    2. “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”

    மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

    அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்

    அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான்  பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.

    “காற்றுக்குக் கண்ணில்லை! அது

    புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!

     

    மேலே வந்தவுடன்

    புகைக்குத் தலைகால் புரியவில்லை!

    அது சூரியனையும் சந்திரனையும்

    கர்வத்தோடு பார்த்தது!

     

    நானும் உங்களைப் போன்றவன்!

    இனிமேல் உங்கள் ராஜவீதியில்

    நானும் பவனி வருவேன் என்றது

     

    அது  மேகத்தைப் பாரத்துச் சொன்னது!

     

    “உன்னைப் போலவே உயரம்!

    உன்னைப் போலவே நிறம்!

    உன்னைப் போலவே உருவம்!”

    இனிமேல் நானும் மேகந்தான் என்றது

     

    புகையை மேகம் என்று நம்பிய

    சில முட்டாள் மயில்கள்

    தோகை விரித்தாடின!

     

    மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு

    மழையாய் இறங்கியது!

     

    நனைந்து சிலிர்த்த பூமி  சொன்னது!

    பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!

    கீழே இறங்குவதிலே இருக்கிறது!

     

    மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

     

     

     

    வசந்தராசன் கவிதைகளில் இயற்கை

    கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார்.  எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

    “வானத்தைச் சுருட்டி

    முற்றத்தில் விரித்தேன்

    வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!

     

    என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!

    “வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?

    வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?

    மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?

    மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?

    வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?

    பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “

     

    என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.

    “மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்

    முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்

    தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே

    தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!

    சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!

    சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!

    நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்

    நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”

     

    என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து.  இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான  ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    காம்பணிந்த வெளவால்கள்

    ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும்.  கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும்.  நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும்  மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலை?  வசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது. 

    “காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க”

     

    மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம்.  கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.

     

    ‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’

     

    குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,

     

    “கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”

     

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.

    முகம் திருத்தும் செடிகொடிகள்

     

    புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான்.  ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும்.  செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.   

     

    “தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த”

     

     

    என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்!  எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.

     

    தசைப்பிடிப்பும் மின்னலும்

     

     

    இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்

     

    “பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க”

     

    மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.

     

    மண் செய்த மாதவம்

     

    ‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிது’ என்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.

     

    “நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”

     

    மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.

     

    மழை நனைந்த மண்மகள் கோலம்

     

    மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு.  மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.

     

    “நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “

     

    என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்

     

    “வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது.  மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர்.  “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!

     

    கற்பனைக் களஞ்சியம்

    பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த  நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.

     

    “விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட”

     

    மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!

     

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

     

    மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது.  காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.

    “தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க”

     

    தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

     

    “தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க”

     

    அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

     

    “அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த”

     

    மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்  சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.

    “முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “

     

    ‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!

     

    நிறைவுரை

     

    மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு   கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில்  தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    (தொடரும்)

    Share
  • ஒரிசா பாலு மறைந்தார்

    ஒரிசா பாலு மறைந்தார்

    அண்ணாகண்ணன்

    வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுனரான ஒரிசா பாலு (உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி) (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘நெய்தலோடு ஒரு பொழுது’ என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.

    தமிழர் வரலாற்றைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என்ற அவர் குரல், தனித்த ஒற்றைக் குரல். வேறு எவருக்கும் இதைச் சொல்லும் துணிவும் வரலாற்றுப் பார்வையும் அனுபவமும் இருந்ததில்லை. கடலுக்கடியில் நீந்துவோருக்கு வழிகாட்டியாக, பாலு இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், மறைந்த குமரிக் கண்டத்தைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என அவர் துணிவுடன் கூறினார்.

    ஆமையைப் பின்தொடர்ந்து தமிழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டான் என்ற கருத்துருவை அவர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். இது குறித்து நான் விமரிசித்து எழுதியிருக்கிறேன். எனினும் என் கருத்துகளை அவர் ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக்கொண்டார்.

    உலகம் முழுதும் தமிழில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் விவரங்களைத் தேடித் திரட்டினார். இங்கெல்லாம் தமிழர்கள் சென்று வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காகக் கடுமையாக உழைத்தார். தமிழர் வரலாற்றைக் கற்பனைக் கதையாக இல்லாமல், தக்க சான்றுகளுடன் நிறுவ வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது.

    பாலசுப்பிரமணியம் B+ என்றே அவர் பெயரை எப்போதும் எழுதி வந்தார். ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்டேன். B+ என்பது என் குருதி வகை. யாருக்கேனும் இந்தக் குருதி தேவையெனில் என்னை அணுகலாம். அவர்களுக்கு இது உடனே ஞாபகம் வர வேண்டும். அதற்காகவே என் பெயருடன் இதைச் சேர்த்து எழுதுகிறேன் என்றார். முதலெழுத்துகளை நாம் அத்தனைப் பேரும் எழுதும்போது, குருதி வகையை எழுதி, சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். மேலும், இது குருதிக் கொடை விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

    நேற்று மாலை, அவருடன் பேஸ்புக் மெசெஞ்சரில் உரையாடினேன். எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்டேன். மாலை 4 – 6 வரலாம் என்றார். இன்று மாலை அவரைப் பார்க்கக் கிளம்பினேன். இடைவழியில் அவரை அழைத்தேன். 4.15க்கு அவர் மறைந்துவிட்டதாக அவர் மகன் தெரிவித்தார்.

    ஒரிசா பாலுவுடன் அவரது அலைபுரளும் மனக்கடலும் ஓய்ந்தது. அவரது உந்திச் செலுத்தும் ஊக்கமும் அயராத உழைப்பும் பரபரக்கும் ஆர்வமும் துடிப்பும் கூடவே ஓய்ந்தன. அவரது ஏராளமான திட்டங்களுள் சிலவற்றைத் தக்கவர்கள் யாரேனும் எடுத்துச் செய்யலாம். அவர் அரூபமாகக் கூடவே நின்று உதவுவார்.

    நற்பணிகள் பல புரிந்த நண்பர் ஒரிசா பாலுவின் ஆன்மா, அமைதி பெறுக.

    Share
  • கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டுகள் வெறும் கல்வெட்டுகள் அல்ல அவை உண்மையின் உரைகற்கள் ஆகும். ஏனெனில் ஓலைகளில் இடைச் செருகலைச் செய்ய முடியும் ஆனால் கல்வெட்டில் ஒருமுறை பதித்தால் அதை மாற்றவே முடியாது. அப்படி மாற்றி இடைச்செருகினால் அது தெள்ளத் தெளிவாகத்  தெரிந்துவிடும். இனி வாரும் நாமும் சில கல்வெட்டுகளை உரசிப் பார்த்து உண்மையை அறிவோம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருவூர் வட்டம்  கருவூர் பசுபதி ஈசுவரர் கோவில் மொட்டை கோபுர வலது நுழைவாயிலில் உள்ள  9 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவனச்  சக்கரவத்திகள் கோ நேர்மேல் கொண்டான் வெங்கால நாட்டுக் 
    2. கருவூர் ஆள் (உ)டையார் திருவாநிலை (ஆ)ளுடையார் கோயில் காணி உடைய சிவப்பிரா 
    3. மணர்க்கும்  ஆண்டார்களுக்குந் தேவரடியார் கைக்கோளர்க்கும்  வெள்ளாள(ர்)க்கு
    4. ம் உவச்ச(ர்)க்கும் ஓலை குடுத்த பரிசாவது, இவர்கள் நம்மை தின்மைகளுக்கு இரட்டை சங்கு   
    5. ஊதவும் பேரிகை கொட்டவும் தங்கள் வீடுகள் இரண்டு நிலை எடுத்துச் சாந்து இட்டுக்கொள்
    6. ளவும்  இரட்டை கதவு இட்டுக் கொள்ளவும் செங்கழுநீர் பூவால் வாசிகை தோள் இடவும் இ
    7. வர்கள் நம் சரக்குக்கு தருவதான அச்சு நாற்பதுங்  கொண்டு இவர்கள் மக்கள் செ(ய்)து
    8. கொள்வார்கள் ஆக நம் ஓலை பிடிபாடாக கொடுத்தோம் (3) ஆண்டு நாள் 2(100)8(10)7 நந்தபன்ம
    9. ன் எழுத்(து) வை(யிராத்)தராயன் எழுத்து தொண்டை(மான்  எழுத்து) காலிங்கரா(ய)ன் எழு(த்து). 

    திருவானிலை – கருவூர் சிவன் கோவில்: ஆளுடையார் – செயற்பாடுகளை நிர்வகிப்போர்; காணிஉடையார் – பரம்பரை உரிமை உடையவர்; ஆண்டார் – அடியார், பக்தர்; உவச்சர் – மத்தளம் கொட்டுவோர்; ஓலை – ஆணை ஓலை; பரிசு – விவரம்; சாந்து – சுண்ணாம்பு; இரண்டு நிலை – முன், பின் என இரு வாயில் கால்; வாசிகை தோள் – வாயில் அரண்வளை இருபுறம்: சரக்கு – பண்டாரம், கருவூலம்; அச்சு – பொற் காசு; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; கதவு – கதல் என்றால் பக்கவாட்டில் நகர்தல் (to slide aside), நகர்தல் அசைதல். இதை வேராகக் கொண்டு கதல் + வு = கதவு என்ற சொல் உண்டானது.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, கொங்குச் சோழன் கோ நேரின்மை கொண்டான் வீரராசேந்திரனின் 3ஆம் ஆட்சி ஆண்டில் 1210 இல் நாள் 287 இல் வெட்டப்பட்டுள்ளது. வெங்கால நாட்டில் அடங்கும் கருவூர் நகரை நிர்வகிப்போர், அங்கத்து சிவன் கோவிலை நிர்வகிப்போர், பரம்பரை உரிமை உடைய சிவப் பிராமணர், அடியார்கள், தேவரடியார்கள், கைக்கோளர்கள், வெள்ளாளர்கள், மங்கல இசைஞர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை ஓலையில் கொடுத்த சலுகை விவரம் யாதெனில், “இவர்கள் குடும்ப நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு ஊதிடவும், முரசு கொட்டவும், தமது வீடுகளில் இரண்டு நிலை வாயில் நிறுத்தவும், சுவருக்கு சுண்ணாம்பு பூசவும், வாயிலுக்கு இரண்டு கதவுகள் பொருத்தவும்  வாயில் அரண்வளையின் இரு புறமும் செங்கழுநீர்ப் பூ தொடுத்த மாலையை அணிவிக்கவும் உரிமை தரப்படுகிறது. மேலும் இவர்கள் என் கருவூலத்திற்கு ஆண்டாண்டு செலுத்துகின்ற 40 பொற்காசுகளை இனி தராமல் அதைக் கொண்டு இவர்கள் பிள்ளைகளை வளர்க்கட்டும் என்று இந்த ஆணை ஓலைப்படி பற்றி ஒழுகக் கொடுத்தோம். இது நந்தபன்மன் ஒப்புதல் எழுத்து, வயிராதராயன் எழுத்து, தொண்டைமான் எழுத்து, காலிங்கராயன் எழுத்து என்று உள்ளது.

    இப்படி சமூக நிலையை உயர்த்தும் உரிமை தரும் கல்வெட்டுகள் கொங்குப் பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன.  இதன் மூலம் இந்த உரிமைகள், மக்களுக்கு இதற்கு முன்னம் மறுக்கப்படிருந்தன என்ற உண்மை விளங்குகிறது. கொங்கில் போலவே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் 12 ஆம் நூற்றாண்டு வரை இந்த உரிமைகள் மக்களுக்கு மறுக்கப்படிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. இப்படியான உரிமைகளை  அரச குடும்பத்தவர், படைத்தலைவர்கள் ஏற்கனவே அனுபவித்து இருந்தால் மட்டுமே பின்னீடு அதே போன்று பிறரும் வாழ வகை செய்யும் எண்ணம் தோன்ற முடியும். அக்காலத்தில் ஒருவரது உடை, வீடு ஆகியவற்றை வைத்தே அவரது சாதி, சமூக நிலை எல்லார்க்கும் தெரியும்படியான நிலை தான் இருந்துள்ளது. இப்படி சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவ ஆட்சி ஆண்ட அரசர்களும் படைத் தலைவர்களுமே  முழுக் காரணமாக இருந்துள்ளனர். தமக்கு என்று தனி அந்தஸ்து, கெளரவம் இருப்பதாக எண்ணிய ஆட்சியாளர்கள் இந்த வேற்றுமையை தமது ஆட்சிப் பகுதியில் நிலைப்படுத்தி இருந்துள்ளனர். இதனால் சமத்துவம் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த வரலாற்று உண்மைக்கு மாறாக இந்து மதம், சனாதன தர்மம், மனு தர்மம், பார்ப்பனியம், பார்ப்பனர் தான் எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் காரணம் என்று பொய் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பொய்யை இக்கல்வெட்டு, சுக்கு நூறாக உடைக்கின்றது.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 173 & 174 of South Indian Inscriptions,  Vol  39

    வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா வட்டம்  குடிமல்லூர்  பூமீசுவரர் கோவிலின் நடுக் கோவில் வட சுவரில் உள்ள  11 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திருபுவனச்  சக்கரவத்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு  12 பன்னிரண்டாவது மேஷ  நாயற்றுப் பூர்வ பக்ஷத்து சதுத் தேசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிடத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து கலவைப்பற்று கரைவழி  
    2. வல்லியூர் உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயினார் கோயில் கெங்கைகொண்ட சோழன் திருக்காவணத்து கலவைப்பற்று  ஆந்திநாடு அத்திப்பற்று முறுகன்மங்கலப்பற்று  நாட்டாரும் அகம்படியாருமான மற்றும் வலங்கைக்கடைத்த சாதியுள்ளாரும் இடங்கைக்கடைத்த சா
    3. தி(யிலுள்ளாரும்) நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து  எங்களிலிசைந்து  _ _ _ நாயனாற்கு  உபய நிச்சயித்துக் குடுத்தபடி  இராசத் துரோகியுமாய் நாட்டுத் துரோகியுமான  (கொல்லத்) தரையனை கொல்வதாக நாடாகக் குவிந்து வருகையில் இவன் 
    4. இன்னாயனார் திருக்கோயில் திருமலையில் மேலேறியிருக்கையி லிவநைக் கொல்லுமளவுக்குத்  திருமலையை (இறக்கி) கொல்ல வேண்டுமென்று சொல்லுகையில். இக்கோ(யி)ல் மாகேசுரர், தானத்தார், கவரிப்பிணா பொற்கோயிற்  கைக்கோளரும் 
    5. திருமலையை இறக்கவொண்ணாதென்று சொல்லுகையில் திருமலை(யிறக்கி) கொன்றால்த்  திருமலைகு சென்றாலே இழிந்து வெள்ளியிலே புரிக்  கட்டவும் பூசைக்கு _ _ _ 
    6.  (ணக்க) நாங்கள் வைத்த உபையஞ் சந்திராதித்த வரையு நடத்தக் கடவதென்று  சம்மதித்து அறுதி பண்ணிக்  குடுத்தபடி ஆண்டொன்று(க்கு  வேலி) ஒன்றுக்கு  கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏர் ஒன்றுக்குக் கல(தானியம்)  
    7. யெறு சாத்திறங்கு சாத்து பாக்கு மிளகு பொதிக்கு பொதிஒன்றுக்கு ஒரு பணமு முப்புப்பொதிக்கு எள்பொதிக்கு பொதிஒன்றுக்கு  அரைப்பணமு _ _ _  நெல்லு  _ _  _ _ கால்ப்  பணமு _ _ _   ஒன்றுக்கு _ _ _ (சால்)தறி ஒன்றுக்கொரு பணமு வாணிகர் செக்கு வாணிகர் (செ)
    8. கொள்ளக் கடவதாகவும். இப்படி சம்மதித்து இந்த உபையஞ்  சந்திராதித்த வரை நடத்திக் குடுக்க  _ _ _ 
    9. டுத் துரோகியுமான  கொல்லத் தரையனைக் கொல்ல திருமலை  இறக்கி யிவனையுங் கொன்று இந்த _ _ _ 
    10. மெடுத்துத் தண்டிக் கொள்ளும்படிக்கு உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயனார்  
    11. _ _ உருத்திர ஸ்ரீ  மாயேசுரர் ஸ்ரீ காரியஞ் _ _ _ (த்தாரும்)  கவரிபிணா பொற்கோயில் கைக்கோளர்க்கும்  ஸ்ரீ வீரபத்திரர்க்கும் இப்படி (ச)ம்மதித்து  

    நாயிற்று – ஓரை, ராசி; நாட்டார் – ஊரவர், அடைத்த – அடங்கிய; உபயம் நிச்சயித்து – கோவிலுக்குக் கொடை உறுதி ஆக்கி; நாடாக குவிந்து – ஊரே கூடி, திருமலை – போர்த்திய விமான கவசம்; இறக்கி – நீக்கி, கலைத்து; கவரிப்பிணா – கவிழ்த்துக் கட்டிய; இழிந்து – அவிழ்ந்து, சேதம், damage; புரி – முறுக்கிய கயிறு, twine; தண்டி – திரட்டு, வசூலி, collect.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 12ஆம் ஆட்சி ஆண்டு 1279இல் வெட்டப்பட்டது. மேழ ஞாயிற்று(ராசி) சந்திர மாதத்தின் முதல் பாதி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடிய அவிட்ட நாண் மீன் நாளன்று செயங்கொண்ட சோழமண்டலத்தின் படுவூர் கோட்டத்தில் அடங்கிய கலவைப்பற்று கரைவழி வல்லியூர் உடைய கிடாரங்கொண்ட சோழீசுவரமுடைய இறைவன் கோயிலில் கங்கைகொண்ட சோழன் திருகாவணத்து கலவைப்பற்று, ஆந்திநாட்டு அத்திப்பற்று, முருகன் மங்கலப்பற்று ஊராரும், அகம்படியாரும், இடங்கை வலங்கையில் அடங்கிய சாதியாரும் ஒன்று கூடித் தாமே விரும்பி நன்கொடை உறுதி செய்து கொடுத்தது யாதெனில், “இராசத் துரோகியும், நாட்டுத் துரோகியுமான கொல்லத்து அரையனைக் கொல்வதற்கு நாட்டினர் திரண்டு வரும்போது அவன் இந்த இறைவன் கோவிலில் விமானத்தில் ஏறி அதை போர்த்திய கவசத்தில் ஒளிந்து கொண்டான். அப்போது அந்த போர்த்திய கவசத்தை நீக்கி அவனைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிற போது இக்கோயில் மகேசுவரர், பொறுப்பாளர், கவித்துக் கட்டிய பொற்கவசக் கைக்கோளரும் சேர்ந்து விமானக் கவசத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். மீறி விமானக் கவசத்தில் ஏறிக் கொன்றால் கவசம் சேதமாகிவிடும். அதை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் வெள்ளி முறுக்குக் கயிறால் தான் கட்ட முடியும் என்று கூறுவதோடு மீண்டும் அதற்குப் புதிதாகப் பூசை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். இதற்கு இணங்க நாங்கள் செய்கின்ற நன்கொடை சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை நடத்திச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டு முடிவாக அறிவித்தபடி “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேலி நெல்லில் இருந்து ஒரு கலநெல்லும் அரைப்பணமும் புன்செய்  நிலத்தில் இருந்து ஏர் ஒன்றுக்குக் கல தானியமும், ஏறும் பாக்கு மரத்தில் சாத்துப் பாக்கும், மிளகு பொதியில் பொதி ஒன்றுக்கு ஒரு பணமும், உப்பு பொதி, எள் பொதியில் பொதி ஒன்றுக்கு  அரைப்பணமும் (கல்வெட்டு சிதிலமடைந்து படிக்க முடியவில்லை) தறி ஒன்றுக்கு ஒரு பணமும் இப்படி சம்மதித்து இது சந்திர சூரியர் உள்ள வரை நடப்பதாகுக. இதற்கு ஈடாக இராச துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆன கொல்லத்தரையனைப்  பிடித்துக் கொல்வதற்கு  விமானக் கவசத்தை நீக்கிக் கொன்று, இந்த ஒப்புதல்படி பணத்தைத் திரட்டிக்கொள்ளுமாறு கிடாரம் கொண்ட சோழீசுவரமடைய இறைவன் கோவில் உருத்திரர், மாகேசுவரர், கோவில் பணியாளர், கவிழ்த்துக் கட்டிய தங்கக் கோவில் கைக்கோளருக்கும் வீரபத்திரருக்கும் இப்படியாக நடந்து போக ஒப்புக்கொண்டோம் என்று உறுதி தந்தனர்.

    கொல்லத்தரையன் நாடே சினந்து திரண்டு கொல்லும் அளவிற்கு வரிப் பணத்தைத் திரட்டி அதைக் கருவூலத்தில் செலுத்தாமல் கவர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதனால் தான் கல்வெட்டில் இதை இராச துரோகம், நாட்டுத் துரோகம் என்று  குறிப்பிட்டுள்ளனர். ஒரு மனிதனை தம் கோவம் அடங்குவதற்காக உடனே கொல்வதென்பது தேவையற்றது. அவன் இரண்டு நாள்கள் மேலாக சோறும் தண்ணீரும் இன்றி விமானக் கவசத்திலேயே ஒளிந்து இருக்க முடியாது. அப்படி இருந்தால் பட்டினிச் சாவு தான் அல்லது அவன் தானே கீழே இறங்கிவிடுவான் அப்போது அவனை பிடித்துக் கொல்ல முடியும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதே உலக நடப்பு.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 228 & 229 of South Indian Inscriptions,  Vol  39.

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்  குளத்தூரில்  சிதிலமடைந்த சிவன் கோவில் கிழக்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  இத்திருக்கற்றளியிலும் திருவக்ர மண்டபத்திலும் 
    2. எழுத்து வெட்டாதொழிக; வெட்டில் இராசத்துரோபியும் 
    3. சிவத்துரோபியு மினத்துரோபியுமாவான்  

    அக்ர மண்டபம் – முக மண்டபம்

    விளக்கம்:  இக்கல்வெட்டு சுந்தர சோழீசுவரமுடைய நாயனார் கோவிலில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோவில் சன்னதியிலும் முகமண்டபத்திலும் கல்வெட்டு ஏதும் வெட்டக் கூடாது அப்படி மீறி வெட்டுவோர் அரச துரோகியும், சிவத் துரோகியும் சிவபிராமணத் துரோகியும் ஆவான் என்று இனத்தைச் சுட்டி எச்சரிக்கிறது.

    இதன் மூலம் அறிய வரும் உண்மை யாதெனில் எல்லா அரச ஓலையிலும் “கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறினாலும் அந்த எல்லா ஓலை ஆணையும் அவ்வாறு கல்லில் வெட்டப்படவில்லை, சிவாச்சாரியார் அவற்றில் எதை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டாரோ அதுவே கல்வெட்டானது மற்றையவை ஓலையாகவே இருந்து அழிந்தன. மேற்படியான கொள்கையில் சில பிராமணர் இருந்தாலும் கிடைத்த மொத்த தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 இல் நடுகல் கல்வெட்டு, ஊர்க் கல்வெட்டு என 1,000 கல்வெட்டுகள் போக எஞ்சிய 59,000 கல்வெட்டுகள் கோவிலில் பொறிக்கப்பட, கோவில் சிவ பிராமணரும் பட்டாச்சாரிகளுமே காரணம் ஆவர். இந்த 59,000 கல்வெட்டுகள் வெட்டப் பெறாமல் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்திருந்தால் இன்று நமக்கு எந்த வரலாறும் கிடைத்திருக்காது. இதற்குத் தமிழ் உலகம் பிராமணருக்கு நன்றி கூற வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள்  – மடலம் 34, பக்கம் 347

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  வட்டம் ஒழுகூரில் தனியார் வீட்டின் எதிரே உள்ள 7 வரி வீரர் கல்வெட்டு. 

    1. மதிரை கொண்ட கோப்பர கேசரி ப
    2. ன்மற்கி  யாண்டு பதினாறாவதில் 
    3. படுவூர் கோட்டத்து ஒழுகையூர் னாட்டு 
    4. ஒழுமூர் தேர் வய நசரரும
    5. த்தி கோசத்தாரு மவை வீரக்
    6. கைச் சிறப்பு  இவகாவலாய் இவ
    7. களே ரக்ஷிப்பார்கள். 

    ஒழி > ஒழு – ஒய்வு, leisure; வய – வழி, via; நசரர் – கண்காணிப்பாளர், உயர் பொறுப்பு அதிகாரி( நல்/ நய் > நச் – வெண்மை கருத்து வழி ஒளி, காட்சி கருத்துக்கு வேரானது. காண்க > நளி – வெள்ளைச் சாரணை. நய் > நயனம் – ஒளிபடைத்த கண். யகர சகர திரிபில் இந்த நய > நச ஆகி இந்தி, உருது  போன்ற மொழிகளில் நசர் என்று பார்வையை குறிக்கிறது. ஆக நயனம் என்பதும் தமிழ் வேர் உடையது என்பது இக்கல்வெட்டால் அறிய முடிகிறது; அத்தி – நெடுமைக் கருத்தில் யானை, மரம், மலையை குறித்தது; ஹஸ்தி என்ற சமசுகிருத சொல் அத்தி என்று ஆகவில்லை என்பதைக் கருத்தில் கொள்க. அத்தி தூய தமிழ்ச் சொல்லே. கோசத்தார் – போர்க்களத்தில் யானைக்கு ஊறு நேராமல் கவசமாக இருந்து பேணுவோர்; வீரக்கை – வீரச்செயல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதற் பராந்தக சோழனின் 16ஆம் ஆட்சி ஆண்டு 923இல் வெட்டப்பட்டது. படுவூர் கோட்டத்தில் அடங்கிய ஒழுகையூர் நாட்டின் ஒழுமூரில் மண்ணில் அழுந்தி விடாமல் தேருக்கு வழிக் காவல் போகும் பொறுப்பு அதிகாரிகளும், யானைப் பேணுவோரும் அவை வீரச்செயலின் சிறப்பு என்று கருதி அவற்றுக்குக் காவலாய் இவர்களே இருந்து காக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இங்கு  வீரச்செயல் என்ன என்பது பற்றித் தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. 4-5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோயத்தார் என்று குறிக்கப்பட்டது இங்கே அது கோசத்தார் என்று யகர சகர திரிபாக குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு  ஆணைக் கல்வெட்டு ஆகும். அன்றைய ஒழுமூர் தான் இன்றைய ஒழுகூர். ஒழு என்றால் ஒய்வு இதாவது, யானை, குதிரை ஆகியன போரில்லாத போது ஒய்வு கொள்ளும் இடம் என்று பொருள். இதனால் ஒழுகூரில் பராந்தகன் காலத்தில் யானைப் படைக்கும், தேர்ப் படைக்கும் இங்கே நிலை இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 2019, பக்கம் 12

    கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் பெரும்பாலை பூவாலை சிவன் கோவில் அருகில் உள்ள 26 வரிக் கல்வெட்டு,

    ஸ்வஸ்தி ஸ்ரீ வீரவல்லாள தேவர் ப்ரிதிவி இரா / ச்சியம் பண்ணியருளா நின்ற யு(வ) ஸம்வத்ஸ / ரத்து சித்திரை மாஸத்து (அத) பூர்வபக்ஷத்து / சதுர்தி திங்கட்கிழமை பெற்ற நாள் (சிமிளில்) கண் / டர  ஹனுமன் செம்பொந் தியாகப்பெருமாள் ப / வழத்தூரில் இருக்கையில் தண்டியதேவர் பவழ / த்தூரிலே புது படையாக்குகையில் தம்முடைய (ச) / ( மூ) கத்தில்  தந்திரிமாரை யழைத்து வேட்(ட)டினவர்  / களுக்கு ஊர்களுங் குடுத்து  வேண்டும் வரிசைகளு / (ங்) குடுக்கக் கடவேனாகவும் என்று குறுப்பு நாட்டில்  வி / சையன் மங்கலத்து முடக்கோழி வேட்டுவரில் செங் / குன்றந் மகன் சோழங்க தேவர் வேட்டி இரண்டு / குதிரையும் பிடித்துக் களத்திலே தாமும் படுகையி / ல் தம்முடைய தம்பி செம்பொன் தியாகப் பெருமாள் / திருமுன்பே குதிரை யிரண்டு மொப்பித்து குடுத்த / வளவில் சொன்னமை பாஷைக்குத் தப்புவராயர் கண் / டர் கண்டர்  ஹனுமன் பல வடகரை வஞ்சி நாட்டில் வா / ள கைகாட்டும் பெரும்பாலி பூவாலங்  காணியாட்சி / யாகக் குடுத்தேன் மதன வம்சத்து மத்தளி வகாரா _ _  /  ர் சூரியன் தட்டுக்(கு தட்டை) சிங்காரம் மலை கலங் / கிலு மனங் கலங்காத கண்டன் சோழங்கத் / தேவனுக் குடுத்தோம். இக்காணியாட்சிக்கு அல்லல் / பேசினார் உண்டாகில் கங்கை(மாக்) கரையிலே ப்ராஹ்ம / ணனை வதஞ் செய்தான் பாவம், குரால் பசுவை  / கொன்றான் பாவம் புகக்கடவார்களாகவும்  இ கா /  ணியாட்சி குடுத்தவனை  தே _ _ 

    பிரிதிவி இராச்சியம் – மண்ணுலக அரசியம்; சிமிலில் – குடுமியில்; சமூகத்தில் – அருகில், சமீபம்; தந்திரி – படைத் தலைவன். பண்டு படைத் தலைவரே அமைச்சராகவும் இருந்தனர். வேட்டாடினவர் – போரில் விலங்குகளைப் பிடித்தோர்; வரிசை – அரசனின் பாராட்டு, மதிப்பு; ஒப்பித்து – ஒப்படைத்து; தட்டுக்கு தட்டை – அடிக்கிற அடியில்; சிங்காரம் – அழகு; காணியாட்சி – நில உரிமை.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, போசள வேந்தன் வீர வல்லாளனின் 41ஆம் ஆட்சி ஆண்டில் இதாவது, யுவ ஆண்டில் மண்ணுலக அரசை ஆளுகின்ற போது சித்திரை மாதம் முதல் பாதி நாலாம் நாள் திங்கட்கிழமையில் குடுமியில் கண்டர அனுமனை சூடிய அரசர் செம்பொன் தியாகப்பெருமாள் பவழத்தூரில் தங்கி இருந்த போது தண்டியத் தேவர் பவழத்தூரில் புதிய படைத்தளத்தைக் கட்டிய போது தன் அருகே படைத் தலைவர்களை அழைத்து, போர்க்களத்தில் விலங்குகளைப் பிடித்தோருக்கு ஊர்களும் அளித்துச் செய்ய வேண்டிய மதிப்பும் செய்வேன் என்று சொல்ல, அப்போது குறுப்பு நாட்டில் விசையன் மங்கலத்தை சேர்ந்த முடக்கோழி வேட்டுவரில் செங்குன்றம் மகன் சோழங்க தேவன் போர்க்களத்தில் இரண்டு குதிரைகளைப் பிடித்து அக்களத்திலேயே வீரச் சாவடைந்தான். அவன் தம்பி செம்பொன் தியாகப்பெருமாள் முன்னே அந்த இரண்டு குதிரையையும் ஒப்படைத்த போது சொன்னபடியே பேச்சு தவறாமல் கண்டர் அனுமன் வடகரை வஞ்சிநாட்டில் நீள கைகாட்டிய பெரும்பாலையில் உள்ள பூவாலை ஊரை உரிமை நிலமாக கொடுத்தான். மதன வம்சத்து மத்தளியினர் இதை அனுபவிக்கட்டும், வெய்யில் அடிக்கிற அடியில் ஒரு மலை தன் எழில் குலைந்து கலங்கினாலும் கலங்கும் ஒழிய எதற்கும்  கலங்காத கண்டன் சோழங்க தேவனுக்காகக் கொடுத்தேன். இந்த நில உரிமையைச்  செல்லாது என்று பேசுவோர் இருப்பராயின் கங்கைக் கரையில் பிராமணனைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் குரால் பசுவைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் அடைவர். இந்த நில உரிமை கொடுத்தவனை என்பதற்கு மேல் கல்வெட்டு சிதைந்துவிட்டது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 98 & 99

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் 40 வரி வணிகக் கல்வெட்டு 

    ஸ்வஸ்தி ஸ்ரீ சம / ஸ்த பு(வ)ன விக்யாத வீர /ர் வீரஸாஸன அனேக கு / ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே / ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை / சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ / மர்ஹதாரி மக்களாகிய எ / யிநாட்டு திருப்பெறு மாடப்ப / ள்ளித் தளத்தை ஞூற்றுவரோம் அ / ய்ங்குன்றத்து அய்கமநான மும் / முறி தன்மசெட்டிக்கு வீரதாவள / மாக வைத்தபடி, இவன் இருந்த ஊ / ரில் நமக்கள் வீரபெரு நிரவிமா / ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன / றுமெய் கண்டு சோறு உண்பதாக / வும் பணமென்றும் பாவாடை / கொங்கவாரெழுநூறும் கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை (பின்பக்கம்) / நாநாதேசியும் / கொற்றக்குடைப் படை முன் / நூறும் / யென்றும் கொள்ளப் பெறு / தார்களாகவும். இப்பரிசல்ல / து செய்வார் கெங்கை இடை / குமரியிடைப்பட மாப்ப / ட்ட பாவத்தில் படுவார். இவ / ந் சிறிய தம்பநு தமைய / நும் தொறு மீட்டுப்பட்ட / நன்மை கண்டு வைத் / தோம். இவன் பரியுடைமை / கண்டு வைத்தோம், தி / ருப்பெறு மாடப்பள்ளித் தளதை / ஞூற்றுவரோம். பதிலழிவாந் / நமில் வே / ரு வந் / ந் / பழவரி இவீர / நும் அப்பி / த் தம்பலமும்.   

    பொருள்: சமஸ்த பு(வ)ன– அனைத்து உலகும்; விக்யாத –  அறிந்த;  வீரஸாஸன – வீரர்  ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித – எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி – வாய்மை, சிறப்பு, ஒழுக்கம்; ஸாரித்ரய – ஒழுக்கம் மூன்றும்; ஸமை – பொறையுடைமை, forgiveness; சம்புன்ன –  திறமை; மர்ஹதாரி – புகழ்மிக்க; தளதை – படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் – நூற்றுவர்; அய்கமநான –  உயர் தலைவனான (ஐ – தலைமை, கமனம் – செலுத்தல்), high commander; மும்முறி – மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக  – வீரர்க்குரிய ஆதரவாக, army base; வைத்தபடி – கொடுத்தபடி; நிரவிமார் – மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு – நன்மை (goodness) கண்டு; பாவாடை – மதிப்புறு ஆடை; வார் -கயிறு; கண்டழி மூலபத்திரர் – துணைநிற்கும் மூலப்படை; ஐய்யன் போய் – இமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று, in no time, ஐ கண்ணை குறிக்கும் வழக்கொழிந்த தமிழ்ச் சொல் ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் Eye என்றே வாழ்குகிறது; களமடக்கி – வென்று போர்முடித்து; காக்கை – காப்பதற்கு; பரிசு – நற்செயல்; பரியுடைமை – இரங்குகை, பாதுகாப்பு; பதிலழி – பதிலாகச் செல், மாற்றாள், go as a substitute. பதில் தமிழல்ல என்போர் தம் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கல்வெட்டு இது.

    விளக்கம்: இக்கல்வெட்டு 12 – 13 நூற்றாண்டினதாகும். எல்லா உலகும் அறிந்த வீரர்தம் வீர ஆவணமாவது பல குணம் கொண்ட கணத்தால் அணி செய்யப்பட்டு வாய்மை, சிறப்பு, நல்லொழுக்கம் என மூன்று ஒழுக்கமும் பொறைமையும்  திறமையும் அமையப்பெற்ற வளஞ்சிய வணிகக் குழு என்று வணிகரின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது. “வளஞ்சிய வணிகக் குழுவின் புகழ்மிக்க மக்களாகிய எயிநாட்டு திருப்பெறு மாடப்பள்ளிப் படைத்தளத்தைச் சேர்ந்த நூற்றுவர் நாம் ஒன்றுகூடி ஐங்குன்றத்துப் படைத்தலைவரும் மும்முறை எதிரிகளின் தாக்குதலை முறியடித்தவரும் ஆன தன்மசெட்டிக்கு வீரர்க்குரிய ஆதரவை  (support) கொடுத்தபடியாவது, இவன் இருந்த ஊரில் நம் மக்களான வீரபெரு மதிப்பீட்டாளரும் நாட்டுச் செட்டிகளும் வருபவரின் நன்மை கருதி சோறு உண்பதற்குப் பணமாகவும் மதிப்புறு ஆடையாகவும் கொங்குநாட்டின் கயிறு எழுநூறும் கொடுத்தனர். துணைநிற்கும் மூலப் படையினர்  விரைந்து போய் போர் முடித்து, கிழக்கு மேற்கு திசையைக் காப்பதற்கு  நாநாதேசி குழு வணிகரும் அரசகுடையும், படை முந்நூறு எண்ணிக்கையையும் கொள்ளப் பெறுவார்களாக” என்று ஏற்பாடு செய்கின்றனர்.  இந்த நற்செயலை இல்லாமல் அழிப்பவர் கங்கை இடை குமரியிடை வாழ்பவர் செய்த பாவத்தில் வீழ்வார். திருப்பெறு மாடப்பள்ளித் படைத்தள நூற்றுவராகிய நாம் “இவனுடைய சிறிய தம்பியும்,  தமையனும் கால்நடை மீட்டு இறந்த நற்செயல் கண்டு இதை கொடுத்தோம்”. “இவனுடைய பெருமை கண்டு இதை கொடுத்தோம்”.  இறுதி வரி விளங்கவில்லை. (பதிலழிவான் என்றால் மாற்றாள் (substitute) என்று கொண்டால் நம்மிடையே மாற்றாளுக்கு உரிய பழைய கட்டு (வரி) போலவே இவ்வீரனுக்கும் அவ்வழியாக கிட்டட்டும் ( தம்பலம்).

    வணிகர் நெடுவழியில் தம்மை ஆரலைக் கள்வர் தாக்கி அழித்து தம் பொருளை கவர்ந்து செல்லா வண்ணம் தமக்குத் தாமே ஒரு படை கட்டிப் போரிட்டுத்  தம்மையும் தம்பொருளையும் பேணிக் காத்துக்கொண்டனர். அவ்வாறு ஒரு நிகழ்வில் வளஞ்சிய வணிகர் தன்ம செட்டியின் போர்ச் செயலை கேள்வியுற்று அவனைப் பாராட்டி அவனுக்கு மேலும் படை ஆதரவைக் கூட்டி வழங்கினர் என்பதே இக்கல்வெட்டு செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2019

    கேரள மாநிலம்  பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள பட்டணம்புதூரில் காணப்படும் 20 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு. 

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸமஸ்த புவ / நாச்ரய பஞ்ச சத வீர / சாஸனஞ் செய்த பரிசாவ / து நாடாழ்வானை எறிஞ்ச கொங்க ம / ண்டலமுய்யக் கொண்டானும் நாடாழ் / வானை எறிஞ்ச அய்யபொழில் நம் / பியும் (பசும்பை நுவக்கியை) எறி / ஞ்ச எழுமடி கொங்கரிளஞ் சிங் / கமும் களக்காடுடையானை எறிஞ்ச  / அஞ்ஞூற்றுவ பேரரையனும் வீரர்கள் ம / _ _ _ பொன் வில்லார் புத்திரனும் / திகை மாணிக்கச் செட்டியும் அறை / ஞாட்டுப் பொரத்தி  நிரந்த வீ / ர பெரு நிரவித் திகை ஆயிரத்த / ஞ்ஞூறவரோம் பொரத்திக்குந் தான் / றிக்கும் வீரப்பட்டனஞ் செய்து / குடுத்தோம். பணிசெய் மக்களானா / ர்  மெய்க்கண்டு சோறுண்க.  பண்டை கோ / ரவி வீரமாணிக்க செ(ட்)டி _ _ _ / (ளச்சரப் பேரையே) 

    ஆஸ்ரய – அடைக்கலம், ஆதரவு, புகலிடம்; பரிசு – விவரம்; எறிஞ்ச – வென்ற, கொன்ற; திகை – திசை; பொரத்தி – பொறுமை, ஓய்வு, தங்கில், rest house < பிற சொற்களில் இருந்து பெற்ற ஊகம் தான் இதற்கு நேரடிப் பொருள் இல்லை; நிரந்த – நிறைந்த; வீரபெரு – வீரம்மிகுந்த; தான்றி – எல்லை வேலி; வீர பட்டணம் – வீரர் தங்கும் சிற்றூர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. சேர அரசர் ரவி பெயர் இறுதியில் குறிக்கப்படுவது இதற்குச் சான்று. உலகுக்கெல்லாம் புகலிடமான ஐந்நூற்றுவ வணிகர் குழு தம் வீர ஆவணத்தில் செய்திட்ட விவரம் யாதெனில், “நாடாழ்வானை வென்ற கொங்க மண்டலம் உய்யக் கொண்டானும், நாடாழ்வானை வென்ற ஐயம்பொழில் நம்பியும், பசும்பை நுவக்கியை வென்ற ஏழு மடங்கு கொங்கர் இளஞ் சிங்கமும், களக்காடுடையானை வென்ற ஐநூற்றுவ பேரரையனும், _ _ _ பொன் வில்லார் மகனும், திசை மாணிக்கச் செட்டியும் அறை நாட்டு பொறுமை நிறைந்த வீரம் மிகுந்த நிரவியைச் சேர்ந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் சேர்ந்து ஓய்வு இல்லத்திற்கும் அதன் எல்லை வேலிக்கும் அடங்கிய வீர பட்டணம் (குடியிருப்பு) செய்து கொடுத்தனர். இங்குப் பணி செய்யும் மக்கள் உண்மையை அறிந்து பின் சோறு இட வேண்டும். பண்டு அரசன் ரவி (பாஸ்கர ரவி அல்லது தாணு ரவி) வீர மாணிக்கச் செட்டிக்கு என்பதோடு கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது.

    இன்றைய பட்டணம் புதூரே பண்டைய நிரவி ஆகும். இங்கு தான் போரில்லாத காலத்தில் அல்லது நோயுற்ற காலத்தில் ஓய்வு கொள்ள வீர வணிகருக்கு என்று தங்கில் அமைந்தனர் திசை ஆயிரத்து ஐநூற்று வணிகர். பிராமணர் தான் தமிழில் சமசுகிருதம் திணித்தனர் என்பதை பொய்யாகும் விதமாக வணிகரும் தமது மெய்க்கீர்த்தியை சமசுகிருதத்தில் எழுதி வைத்துள்ளனர் என்பது அதை பொய்யாக்குகிறது.  மனுஸ்ம்ரிதி சத்திரியருக்குத் தான் போர்த் தொழிலை உரித்தாக்குகிறது ஆனால் நாடோடும் வணிகரும் போர்த் தொழில் புரிந்தது மனுஸ்ம்ரிதி மீறல் அன்றோ? இது மநுஸ்மிருதி நடைமுறையில் இல்லாத ஏட்டுச் சுரைக்காய் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 9 & 10

    திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்புள்ளி என்னும் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள கன்னிமார் கோவிலுக்குச் செல்லும் வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த நிலையில் கல்வெட்டுகளைத் தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.

    1.ஸ்ரீ அரையரெள்

    2 ளி கோய்த்திர

    3 னான மதுரா

    4 ந்தகப் பள்

    5 ளி வேளான் ப

    6 ள்ளி நாட்டு நி

    7 ரை போகயில்

    8.பட்டான்

    விளக்கம்: அரையர் எள்ளியின் கோத்திரத்தைச் சேர்ந்த மதுராந்தகப் பள்ளி வேளாண் என்பவன் பள்ளி நாட்டின் நிரைகள் கொள்ளை போகையில் அதை மறித்து வீரச் சாவடைந்தான் என்பது கல்வெட்டின் பொருள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வேள் என்ற சங்க காலச்சொல் அரையர் என்ற மாற்றுச் சொல்லால் கைவிடப்பட்டாலும் அச்சொல் வேளுடைய ஆள்  என்ற பொருளில் வேளாண் என்ற மற்றொரு சொல்லால் அழியாமல் தொடர்ந்து புழங்கி வந்துள்ளது. வேளாளன் = வேள்  + ஆள் + அன். வேளாண் என்போர் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பங்காளிகள், சொந்தக்காரர்கள் என்பதையே இக்கோத்திரக் குறிப்பு குறிக்கின்றது. வேள், அரையன் ஆகிய சொற்கள் duke என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானவை. வேந்தனுக்கு (emperor) படைத் தளபதியாக மன்னன் (king) இருந்தான். மன்னனுக்கு படைத் தளபதியாக அரையன்/வேள் (duke) இருந்தான். இந்த அரையனுக்குப் படைத் தளபதியாக கிழான் (knight) இருந்தான். ஆக இந்த படைத் தளபதிகள் அமைத்த சாதிகள் தான் ஆண்ட பரம்பரை என்னும் இன்றைய நிலவுடைமைச் சாதிகள்.

    இந்த வேளாண்களே பண்டு நிலவிற்பின் போது உடன் இருந்து கண்காணித்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.  இதே வேளாண்களிடம் தான் நீதி வழங்கும் நியாயத்தர் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வேளாண்கள் தான் சில இடங்களில் வெள்ளாளராகவும், சில இடங்களில் பள்ளிகளாகவும் சில இடங்களில் அம்பலக்காரர் என்றும் உள்ளனர்.

    ஆவணம் , இதழ் – 18,  2007, பக். 21 மற்றும் கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40.

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

    1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

              இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

              வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

              சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

              முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

              இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

              இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

              புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                     பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

             பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                     பேசும் தெய்வம் எனநின்றாய்!

             குகப்பா குமரக் குருபரரும்

                     கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

             குழந்தை நீயே என்பதுவும்

                     கொஞ்சும் தமிழுக் காசானாய்

             அகப்பா கண்ட உன்றனுயர்

                     அழகே குழந்தை வடிவன்றோ! 

             இட்டும் தொட்டும் அழைந்தாடி

                     இல்லம் அமைத்து விளையாடும்

             மகப்பா மடவார் மனத்துறையும்

                     மயிலோய் சிற்றில் சிதையேலே!

             வண்ணச் சிறுவர் மனமோங்க

                     வரையும் சிற்றில் சிதையேலே!

                                            — என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

              சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

              கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

              காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

              செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

              உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

              மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                              வண்டார் நின்றாட

                     மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                              மந்தாரஞ் சாரத்

             சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                              ருண்டுசு ருண்டாடத்

                     தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                              துற்றதே னச்சூ ரன்

             சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                              ரிந்துநி தம்வா டத்

                     திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                              சிறுவியர் முத்தா ரச்

             செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                              செங்கோ செங்கீ ரை

                     செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                              செங்கோ செங்கீ ரை.

              இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மாவைப் பிள்ளைத்தமிழ்

              இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

              மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

             ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

              மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

              மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

              பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

              கீரி மாமலை வாரிதி யாடியே

                     கிரீச னாநகு லேசனை நாடியே

             சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                     றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

             மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                     வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

             தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                     செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

              இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

              மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

              மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

              மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

    சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

              பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                              பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                     பேசாப் பொருள்பே சியகுழவிப்

                              பெருமான் வருக! பெருந்தவத்தோர்

             விருந்தே வருக! நகுலமுனி

                              விரூப முகமும் மாருதப்ர

                     வீக வல்லி மாமுகமும்

                              விலகாப் பெருநோய் விலக்குமலை

             மருந்தே வருக! மலைமடந்தை

                              மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                     வையம் வாழ வாழ்ந்தபெரு

                              வாழ்வே வருக! வாழ்வறியாத்

             திருந்தா வசுரர் செருக்கொழித்த

                              தேவே வருக! வருகவே!!

                     சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                              திருவே வருக! வருகவே!!

              என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

              பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

              விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

              இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

              அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

              ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

              ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

             தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                              சடைவிரித் தாடி நாற்றத்

                     தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                              தாயோ பெருத்த நீலி

             முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                              மூன்றுமத வடுவு டையவன்

                     முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                              முலையுண்டு உயிரு முண்டோன்.

             வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                              வழிகோத் திரங்க ளெல்லாம்

                     வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                              வந்திக்கும் அன்பர் வினைகள்

             சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                              சிறுபறை முழக்கி யருளே

                     திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                              சிறுபறை முழக்கி யருளே.       

    என்பது பாடல்.

              இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

     

     (வளரும்)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     பார்வை நூல்கள்:

    1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    சக்தி சக்திதாசன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ்ப் பெருங்கடல் .

    பள்ளியில் படிக்காதவற்றைத் தன் வாழ்க்கையில் படித்தார். வாழ்க்கை அனுபவங்களை உள்ளத்திலே நூலாக்கினார்.

    தமிழைச் சுவைத்தார். தான் சுவைத்தவற்றைப் பாடல் வரிகளாக்கி நாமெல்லாம் சுவைப்பதற்கு வழி சமைத்தார்.

    வாழ்வின் சூழல்களுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளின் வெளிப்பாட்டுக்கு பாடல் வரிகளை அள்ளி வீசினார்.

    காதலாகட்டும், வீரமாகட்டும், சோகமாகட்டும் தனது பாடல் வரிகளிலே ஆங்காங்கு ஆன்மீகத்தைப் புதைத்து வைத்தார்.

    இந்தப் பதிவினிலே நாம் பார்க்கப் போகும் பாடல், கவியரசரின் அருமையான பாடல்.

    “பார்த்தால் பசி தீரும் ” எனும் படம். இதிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடித்துள்ளார்கள்.

    இவர்கள் இருவரும் ஒன்றாக இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு பெறும் ராணுவ வீரர்களாக நடித்திருப்பார்கள்.

    இடம்பெற்ற பல சிக்கல்களினால் தெரிந்த உண்மையைச் சொல்ல முடியாத ஒரு நிலைக்கு நடிகர் திலகம் தள்ளப்படுகிறார்.

    அவரது இந்த நிலையை விளக்கும் பாடல் ஒன்றினை அவர் பாடுவதான காட்சிக்குப் பாடல் வரிகளை கவியரசர் யாத்திருந்தார்.

    பாடல் ” உள்ளம் என்பது ஆமை ” , டி.எம்.எஸ் ஐயா அவர்கள் அற்புதமாகப் பாடியுள்ளார்.

    உள்ளம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் கதாசிரியர்கள், கவிஞர்கள் பலரும் வித்தியாசமான விளக்கங்களை அள்ளி வீசியுள்ளார்.

    மலர் என்றார்கள். ஆனால் அந்த உள்ளம் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. வேறு சிலரோ அலையடிக்கும் கடல் என்றார்கள். ஆனால் அந்தக் கடல் எப்போது பொங்கிப் பிரவாகிக்கும் என்று சொல்ல முடியுமா ?

    உள்ளம் குரங்கு போன்றதென்றால் மரத்துக்கு மரம் தாவும் செயல் போல மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

    ஆனால் நாயகன் தன் சூழலில் மனத்துக்கு ஒரு கட்டளை இடுகிறான். அதாவது அது நினைப்பதை வெளியே சொல்ல முடியாத நிலை.

    இங்கே கவியரசர் உள்ளத்தை ஆமைக்கு ஒப்பிடுகிறார். ஆமை என்ன செய்யும்? ஆபத்தைக் கண்டவுடன் மெதுவாகத் தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு விடும்.

    பாதுகாப்புக்கு மட்டுமல்ல சோர்விலோ இல்லை தளர்விலோ இல்லை அயர்விலோ கூட உள்ளே தான் ஓட்டுக்குள்ளே ஒதுங்கிக்கொள்ளும்.

    உண்மையைப் பேசுவதனால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. பாதிப்புத்தான் அங்கு ஏற்படும் எனும் போது அந்த உண்மையை நெஞ்சிலே தாலாட்டுப் பாடி தூங்கத்தானே வைக்க முடியும்.

    இது எத்தகைய ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.

    உள்ளம் என்பது ஆமை – அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி

    என்கிறார் கவியரசர். கவியரசருக்கு நிகர் கவியரசரே தான்.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது அன்றிலிருந்து இன்றுவரை எமக்குள்ளே விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தக் கேள்வியைச் சாதுரியமாக எம்மை.நோக்கியே திருப்பி விடுகிறார் கவியரசர்.

    கருங்கல்லொன்று நாம் போகும் பாதையில் கண்களில் தட்டுப்படுகிறது, ஒரு கல் கிடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதைக் கடந்து சென்று விடுகிறோம்.

    அதே கல் ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைகளில் கிடைக்கிறது. ஆன்மீக உணர்வு கொண்ட அவன் அதைச் செதுக்கி அதனுள்ளிருக்கும் ஒரு தெய்வத்தின் உருவத்தை வெளிக்கொணர்கிறான்.

    அந்தச் சிலை ஆலயத்தின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    அதைக் கல் என்று கடந்து சென்றவர்கள் இப்போ ஆலயத்தினுள் கருவறையின் முன் நின்று தெய்வமென்று வணங்குகிறார்கள்.

    திருமூலரின் வரிகளில் இதை அழகாக இரு வரிகளுக்குள் அடக்கியிருப்பார் திருமூலர்.

    “மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை”

    என்பார் திருமூலர்.

    இவை மிக இலகுவாக பாமரனுக்கும் புரியக்கூடிய எளிமையான வரிகளில் பதிப்பதுதானே கவியரசரின் முழு ஆற்றலே! விடுவாரா சும்மா?

    இங்கே சூழலின் தன்மைகளினால் உண்மையைப் பகிர முடியாமல் தவிக்கும் நாயகன் ஆன்மீகப் பின்னணியில் தன் தன்மையை விவரிக்கிறான்

    தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலை என்றால் வெறும் சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    இதைவிட அர்த்தம் பொதிந்ததாகவும், எளிமையாகவும் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் ஆன்மீகத்தையும் யாரால் இணைக்க முடியும்?

    இதை எவ்வாறு அவன் தன் நிலையைச் சித்திரிப்பதற்கு உபயோகிக்கிறான் ? என்று வாசகர்கள் எண்ணக்கூடும்.

    இந்தத் திரைப்படத்தின் கதைப் பின்னனியை அறிந்திருந்தால் இலகுவாகப் புரியும்.

    சந்தர்ப்பச் சூழ்நிலையால் தீயவனாக எண்ணப்படும் அவன், உண்மையைச் சொன்னால் பலருடைய வாழ்வு பாதிக்கப்படும்.

    ஆனால் அதே இடத்தில் அவன் நல்லவன் என்பதை அறிந்தோரும் உண்டு.

    அவனை நல்லவன் என்று பார்த்தால் நல்லவனே! தீயவன் என்று பார்த்தால் தீயவனே !

    இதையே அழகாக ஆன்மீக வரிகளில் விளக்கும் கவியரசரின் ஆன்மீக அறிவியலே அற்புதம்தான்.

    அடுத்த சரணத்தில் எதை வைக்கப் போகிறார் ? பார்ப்போம்

    தண்ணீர் தணல் போல் எரியும் – செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    நண்பனும் பகை போல் தெரியும் – அது
    நாட்பட நாட்படப் புரியும்

    எங்காவது தண்ணீர் சாதாரணச் சூழலில் தணலைப் போலச் சுடுமா?

    இல்லையெனில்

    தணலாகத் தகித்துக் கொண்டிருக்கும் விறகுக் கட்டை குளிர் நீரைப் போலக் குளிருமா ?

    நடக்கும் என்கிறார். அதாவது இக்கதாநாயகன் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதால் அவனுள் எழும் உணர்வுகளின் தாக்கத்தை அவற்றுக்கு ஒப்பீடு செய்கிறார் எம் கவியரசர்.

    அது ஏன் நடக்கிறது? ஏனென்றால் காலம் அவனின் நண்பனுக்குக் கூட அவனைப் பகையாளியாகக் காட்டுகிறது.

    ஆனால் அந்நாயகன் உண்மையின் மீதும் நல்வினை விதைத்தோர் நல்வினையையே அறுவடை செய்வார் என்பதில் இன்னும் அசையாத நம்பிக்கையோடு பொறுமையாக இருக்கிறான் என்பதை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே ,
    அது
    நாட்பட நாட்படப் புரியும் என்கிறார்.

    இங்கு இதை ஒரு திரைப்படச் சூழலுக்கு எழுதப்பட்ட பாடல் என்று பார்ப்பதோடு அன்றாடம் வாழ்க்கைச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் பலரும் ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தில்.இதனைப் பார்ப்பதன் மூலம் மனத்தின் சாந்திக்கு வழி வகுக்கலாம்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவியல் மேலோங்குவதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

    ஆத்திகம், நாத்திகம் எனும் பேதங்களைக் கடந்த ஓர் ஆன்மீக அறிவியலின் அவசியத்தைப் புரிய வைக்கிறார்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சான்றோர் போற்றும் செல்வம்

    -மேகலா இராமமூர்த்தி

    வாழ்வின் உறுதிப்பொருள்களாகக் கருதப்படுபவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன. வீடு என்பது உலக வாழ்வில் பற்றறுத்தவர்கள் அடையும் நிலைத்த இன்பம் நல்கும் இடமாய்க் கருதப்படுவது. ”அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்பார் நம்மாழ்வார். ஆனால், உலகப்பற்றை விட்டுவிட இயலாத சாமானிய மக்களுக்கு வீடுபேற்றுக்கான வழியைவிடவும் உலக வாழ்க்கையைச் செம்மையாக நடாத்துதற்கான வழிகாட்டலே தேவையானது. அவர்கள் கவனம் செலுத்தவேண்டியவை அறம், பொருள், இன்பம் எனும் மூன்றுமே. இம்மூன்றிலும் எது சிறந்தது என்று கேட்டால் ஒவ்வொருவரும் அவரவர்க்கு எது சிறந்தது என்று தோன்றுகின்றதோ அதற்கேற்ப விடை பகர்வர்.

    வாழ்வினைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் நன்கறிந்த அறிஞர் பெருமக்கள் இதுகுறித்து என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.

    ஈரடியில் வாழ்க்கையின் நீள அகலங்களை அளந்தவரான வான்புகழ் வள்ளுவர்,

    ”அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்”
    (754) என்றும்

    ”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு”
    (760)

    என்றும் கூறித் தீதில்லா நல்வழியில் ஈட்டிய பொருளாகிய செல்வத்தைக் கொண்டு ஒருவன் அறத்தைச் செய்யலாம்; இன்பத்தையும் அடையலாம் என்று நமக்குத் தெரிவிக்கின்றார்; மனத்தைத் தெளிவிக்கின்றார். ஆக, நாம் அறத்தைச் செய்வதாக இருந்தாலும் இன்பத்தைத் துய்ப்பதாக இருந்தாலும் இரண்டுக்குமே அடிப்படைத்தேவை பொருளே என்பதனை இக்குறட்பாக்கள் வலியுறுத்துகின்றன.

    ஈரடிக் குறட்கருத்தை நாலடியில், சற்று விரிவாய், விளக்கும் நாலடியார் எனும் நன்னூலும், ”குற்றமில்லா இவ்வுலகில் இன்றியமையாத மூன்றாய்த் திகழ்கின்ற அறம் பொருள் இன்பம் என்பவனவற்றுள் நடுவில் நின்றதான பொருளை ஒருவன் அடைவானாகில் அதன் இரு பக்கத்தனவான அறம் இன்பம் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவணதை எய்தானாகில் கொல்லன் உலையில் இரும்பையிட்டுக் காய்ச்சுவதுபோல் வறுமைத் துன்பத்தில் நலிவான்” என்று வள்ளுவரின் கருத்தையே வழிமொழிந்து பேசுவதனைக் காணலாம்.

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலுந் துயர்.
    (நாலடி – 114)

    பொருட்செல்வமே அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரம் என்பதனை வள்ளுவமும் நாலடியும் தெளிவுபடுத்தக் கண்டோம்.

    அதன் தொடர்ச்சியாய், ”பொருள் மட்டுந்தான் செல்வம் என்ற பெயருக்கு உரியதா?” என்று வள்ளுவரைக் கேட்டால், ”இல்லை, வேறு செல்வங்களும் உள” என்றுரைத்து ஒரு பட்டியலைத் தருகின்றார். அவை வருமாறு:

    1) பணிவென்னும் அடக்கமுடைமை அனைவர்க்குமே நன்மை பயப்பது; அவருள்ளும் செல்வம் படைத்தவர்க்கு மற்றொரு செல்வமாய்த் திகழ்வது என்கிறார் குறளாசான்.

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
    (125)

    2) பொருளென்னும் செல்வம் இழிந்தோரிடத்திலும் காணக்கிடைப்பது; [அதனால்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்வது இந்தப் பொருட் செல்வம் என்றார் ஆசான் பிறிதோர் இடத்தில்.] ஆனால், அருட்செல்வம் உயர்ந்தோரிடத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் உயரிய செல்வமாகும் என்று அதன் மேன்மையை எடுத்தியம்புகின்றார்.

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
    (241)

    3) மனிதர்க்கு அழிவில்லாத சிறந்த செல்வமாய்த் திகழ்வது கல்வியே; மற்றவையெல்லாம் செல்வங்கள் ஆகாவென்பது கல்வி என்னும் அதிகாரத்தில் பொய்யில் புலவர் பதிவுசெய்திருக்கும் மெய்ம்மொழியாகும்.

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    (400)

    ஈண்டுச் செல்வம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக ’மாடு’ என்பது பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்க.

    மாடு என்றால் செல்வமா?

    ஆம்! மாடுகளே ஒரு காலத்தில் மக்களின் செல்வமாய்த் திகழ்ந்தன. மாந்தர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுற்று அவர்கள் தமக்கென வாழிடங்களை உருவாக்கிக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டபின் ஆடு மாடுகளை வீட்டு விலங்குகளாய்ப் பழக்கினர். பசு, எருமை போன்றவற்றின் பாலிலிருந்து கிடைத்த பால்படு பொருட்களை விற்றுப் பொருளீட்டினர். இவர்களையே நாம் முல்லை நிலத்தவர் என்று திணை அடிப்படையில் அடையாளப்படுத்துகின்றோம். இத்திணை மாந்தர்களை ஆயர், ஆய்ச்சியர் என்று தொழிலடிப்படையில் வகைப்பாடு செய்துள்ளது தமிழிலக்கண நூலான தொல்காப்பியம்.

    ஒரு குடும்பம் எத்துணை மாடுகளைச் சொந்தமாய் வைத்துள்ளது என்பதன் அடிப்படையில் அவர்களின் செல்வ வளம் தீர்மானிக்கப்பட்டது. அதை மனத்தில் வைத்தே தம் குறட்பாவிலும் ’மாடு’ என்ற சொல்லைச் செல்வத்துக்கு மாற்றாய்ப் பயன்படுத்தியுள்ளார் ஐயன் வள்ளுவர்.

    செல்வத்தைக் குறிக்க ’மாடு’ என்ற சொல்லைத் திருமூலரும் திருமந்திரத்தில் பயன்படுத்தியிருக்கக் காணலாம்.

    ”தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
    என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
    …” (திரு: செல்வம் நிலையாமை – 214)

    ”வெயிலால் ஏற்படும் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளத் தமது நிழல் உதவாமை கண்டும், அறிவிலார், தமது செல்வம் (மாடு) தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர்” என்று மக்களின் அறிவின்மையையும் செல்வப்பற்றையும் இப்பாடலில் ஏளனம் செய்கின்றார் திருமூலர்.

    இனி, வள்ளுவர் பட்டியலிடும் பிற செல்வங்களையும் நோக்குவோம்.

    4) கல்வி எனும் செல்வத்தைப் பெற விரும்பும் அனைவர்க்கும் அதற்கான வாய்ப்பும் வசதியும் அமைந்துவிடுவதில்லை; அப்படிப்பட்டோர் தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது (செவியால் கேட்டலாகிய) கேள்விச் செல்வம். அதனால் அதுவே செல்வங்களுள் தலையாய செல்வம் என்பது வள்ளுவரின் கருத்து.

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை.
    (411)

    கேள்வி என்பது காதால் கேட்டலை (hearing by ear) குறிக்கும் சொல்லாகவே அந்நாளில் பயன்பட்டது; இந்நாளில் அது வாயால் கேட்பதற்கும் (oral questioning) உரிய சொல்லாகப் பொருள்விரிவு கண்டிருக்கின்றது. எனினும், வாயால் கேட்பதைக் ’கேள்வி’ என்று சொல்வதைவிட ’வினா’ என்று சொல்வதே பொருத்தம்.

    5) வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையான செல்வம் ஒன்றுண்டு. அதுதான் தோல்வியிலும் நிலைகுலையாத ஊக்கம். அவ்வூக்கமே ஒருவனுக்கு உண்மையான உடைமையாகும் (சொத்து); பொருட்செல்வமாகிய உடைமை நிலைத்திருக்கும் இயல்புடையது அன்று; (போகூழ் வந்தால்) அது நில்லாது நீங்கிவிடும் தன்மைத்து என்று ஊக்கத்திற்கு உயர்வு தருகின்றார் வள்ளுவர்.

    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    (592)

    மேற்கண்டவை எல்லாம் உலகியல் பற்றுடையோர்க்குத் தேவையான செல்வங்கள். இதனினும் மாறுபட்ட செல்வம் ஒன்றுண்டு. அதுதான் அவாவின்மை எனும் அருஞ்செல்வம். எதன்மீதும் பற்றற்ற பெருஞ்செல்வம். அதற்கு இணையான செல்வம் இங்குமில்லை; வேறெங்குமில்லை என்பது வள்ளுவப் பெருந்தகையின் துணிபு.

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    யாண்டும் அஃதொப்பது இல்.
    (363)

    அருளாளராகவும், சிறந்த அறிஞராகவும் திகழ்ந்த குமரகுருபரர், தம்முடைய சிதம்பர மும்மணிக் கோவையில், ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அல்கா நல்குரவு அவா எனப்படுமே” என்றுரைக்கின்றார்.

    தம் பெயரில் நோபல் பரிசுகளை உருவாக்கிப் பல்துறை அறிஞர்களுக்கும், சமாதான விரும்பிகளுக்கும் அளித்த சுவீடன் நாட்டு அறிவியலாளரும் பெருங்கொடையாளருமான ஆல்பிரட் நோபலும் (Alfred Nobel) இதே கருத்தை, ”Contentment is the only real wealth” என்று மொழிந்திருக்கின்றார்.

    ஆனால், இருப்பதே போதுமென்ற நிறைவும் அவாவின்மையும் இல்லறத்தில் உள்ளோனுக்கு எளிதில் சாத்தியப்படாது; அவன் வாழுங்காலம்வரை தன் ஆசைகளையும் தன்னைச் சார்ந்தோரின் ஆசைகளையும் நிறைவேற்ற ஓடிக்கொண்டேதான் இருந்தாகவேண்டும். அதனால் இல்லறம் கடந்து, மனத்துறவு கொண்டுவிட்டவனுக்கே வேண்டாமை எனும் விழுச்செல்வம் கிட்டும்.

    சங்க அகநூல்களுள் ஒன்றான நற்றிணையும் செல்வம் என்பதற்கு அழகானதொரு விளக்கத்தைத் தருகின்றது. அதனை அடுத்துக் காண்போம்.

    தலைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டிருந்த தலைவன் சிறிது காலத்திற்குப் பிறகு பரத்தையரை நாடிச் சென்றான்; மீண்டும் மனந்திருந்தித் தலைவியைத் தேடி வருகின்றான். தலைவன்மீது ஊடல் கொண்டிருந்த தலைவி அவனிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை; அதுகண்ட தலைவன் தோழியிடம் சென்று எப்படியாவது தலைவியை மறுபடியும் தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் என்று இரந்து வேண்டுகின்றான். தலைவன் தன்னிடமிருக்கும் செல்வத்தின் செருக்கினால்தானே மனம்போன போக்கில் நடக்கின்றான் என்றெண்ணிய தோழி உண்மையான செல்வமென்பது என்ன என்பதை அந்தச் செல்வனுக்கு உணர்த்த விரும்பியவளாய்,

    ”நெல்லறுத்து முடித்த அழகிய அகலமான வயலில் மறுபடியும் உழுத ஈரமுடைய சேற்றில் விதைப்பதற்காக விதையோடு சென்ற கடகப் பெட்டியானது, பிடித்துப் போடப்பட்ட மீன்களோடு வருகின்ற புதிய வருவாயினை உடைய ஊரைச் சேர்ந்தவனே! அரசனால் விருதளித்துப் பாராட்டப்படுதலும், விரைந்து செல்லக்கூடிய குதிரையிலும் தேரிலும் யானையிலும் பெருமிதத்தோடு செல்வதும் செல்வம் அல்ல. அவையெல்லாம் ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைகளின் பயனால் கிடைப்பன. [வடமொழியில் இதனைப் ”பதவி பூர்வ புண்யானாம்” என்பர்.] ஆனால், சான்றோர்கள் செல்வம் என்று சிறப்பித்துக் கூறுவது எதைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

    தலைவன் திருதிருவென விழித்தான்.

    ”சொல்கிறேன் கேள்!” என்றவள், ”தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சி, அவற்றைப் போக்கி அவர்களைக் கைவிடாமல் இரக்கத்தோடு நடந்துகொள்ளும் பண்பே சான்றோர் போற்றும் செல்வம்” என்றாள்.

    தன்னை நம்பிவந்த தலைவியைக் கைவிட்டுச் சென்ற தன் இழிசெயலைத்தான் தோழி இங்ஙனம் குத்திக்காட்டுகின்றாள் என்றுணர்ந்த தலைவன் தன் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தான்.

    இப்பாடல் நமக்குத் தரும் செய்தி, பதவிகளும் பிற ஆடம்பரங்களும் ஒருவனுக்கு நிலையான செல்வங்கள் அல்ல; தன்னைச் சார்ந்தோர் மனவருத்தம் அடையா வண்ணம் அவர்கள்பால் கருணையோடு நடந்துகொள்வதே சான்றோர் போற்றும் உயரிய செல்வம் என்பது.

    இவ்வினிய பொருள்பொதிந்த பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார் எனும் புலவர். இனி, பாடலைக் காண்போம்.

    அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்
    மறுகால் உழுத ஈரச் செறுவின்
    வித்தொடு சென்ற வட்டி பற்பல
    மீனொடு பெயரும் யாணர் ஊர
    நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புன்கண் அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.
    (நற்: 210)

    செல்வம் குறித்து இதுகாறும் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் நாம் நம் வாழ்வை கீழ்க்கண்ட வகையில் அமைத்துக் கொள்ளலாம்:

    இளம் பருவத்தில் கல்வியெனும் செல்வத்தையும், அதைத் தொடர்ந்து பொருளென்னும் செல்வத்தையும் மனிதர்களாகிய நாம் தேடவேண்டும்; செல்வத்தினால் செருக்கடையாமல் பணிவோடிருப்பது சிறப்பு; முறையான கல்விபெற இயலாதவர்கள் கேள்விச் செல்வத்தால் தம் அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்வில் துன்பங்கள் தோல்விகள் ஏற்படுங்காலை அவற்றுக்காகச் சோர்ந்துவிடாமல் ஊக்கமெனும் செல்வத்தின் துணையோடு அவற்றை வென்று முன்னேற வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணியொழுகும் அருளென்னும் செல்வத்தை மனிதர்கள் தொலைக்காது எப்போதும் வைத்திருக்கவேண்டும்.

    இளமை கழிந்து முதுமையின் வாயிலுக்கு வந்துவிட்டவர்கள் மெல்லமெல்லப் பற்றுக்களையும் ஆசைகளையும் விட்டொழித்து அவாவின்மை எனும் தன்னேரிலாத செல்வத்தை அடைந்து தம் வாழ்க்கைப் பயணத்தை நன்முறையில் நிறைவுசெய்ய வேண்டும்.

    சான்றோர் காட்டிய இப்பாதையில் பயணித்தால் பயணம் சுகமாகும்; வாழ்க்கை இனிதாகும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

    2. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயண சாமி ஐயர் உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

     

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    வாழ்க்கை என்பது நாம் அனைவரும் எண்ணியது போல நடப்பது இல்லை.

    ஏதேதோ இலட்சியங்களை வகுத்துக்கொண்டு எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும் அது அனைத்தையும் அடைந்துவிடுவது என்பது முடியாத காரியம்.

    ஓட்டப் போட்டியில் ஓடும்போது இருவர் ஒரே கோட்டில் ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் திறமை மிக்கவர் யாரோ அவர் வென்று விடுகிறார்.

    வென்றவர் திரும்பி, தோற்றுப் போனவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது ஓட்டப் பந்தயத்தில் வேண்டுமானல் நிகழலாம் ஆனால் வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் ஒருமுறை ஜெயித்தவர் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருப்பார் என்பதுவோ இல்லையானால் தோற்பவர் எப்போதும் தோற்றுப் போவது என்பதோ விதி அல்ல.

    வாழ்க்கை எனும் பயணத்தில் அனுபவங்களை அள்ளிப் பருகியவர் எமது கவியரசர்.

    வாழ்வின் பாடங்களை ஆன்மீகப் பார்வை கலந்து எமக்கு அள்ளித் தருவதில் கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான்.

    ஆன்மீகத்தின் உண்மை வடிவம் இனம், மதம், மொழி எனும் அனைத்துப் பேதங்களுக்கும் அப்பாற்பட்டது.

    வாழ்வின் நிகழ்வுகளின் யதார்த்தமும் அத்தகைய எல்லைக் கோடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகப் பயணத்தை ஒத்ததே.

    நாமனைவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இவ்வுலகத்தில் பிறப்பெடுக்கிறோம்.

    பிறப்பின் நோக்கத்தை பிறந்ததும்  மறந்து விடுகிறோம். மறந்ததை நினைவூட்ட மூச்சின் துணை கொண்டு தியானத்தின் துணையோடு ஆன்மாவைத் தொடவேண்டும்.

    இந்தத் தேடலின் வழி செல்லும்போது கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல்களில் ஏதாவது ஒரு வரியிலாவது ஆன்மீகத்தைப் புதைத்து வைத்திருப்பார்.

    அந்த முத்துகளைக் குடைந்து அவர் பாடல்களுக்குள் தேடுவதற்கான தேடல் கூட ஆன்மீகப் பாதையே !

    எதிர்காலம் எனும் 1970ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

    ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த படம்.

    கவியரசர் வரிகளுக்கு எம்.எஸ்.வி. ஐயா உயிரூட்ட, டி.எம்.எஸ். ஐயா அவர்களின் குரல் வளத்தில் ஒலித்த அற்புதமான பாடலிது.

    ஆன்மீகப் பாதயின் இலக்கின் திசைகாட்டும் பலகை போல எமக்குள் எம்மைப் பயணிக்க வைக்கும் வரிகள்.

    சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி எம்மை நாமே புடம் போட்டுப் பார்க்க வைக்கும் ஆழ்ந்த கருத்துக் கனத்துடன் நெஞ்சத்தை நிறைக்கும் வரிகள்.

    கவியரசருக்கே உரித்தான காட்சிக்கான பாடலிது என எண்ணத் தோன்றும் வகையில் யாத்திருக்கிறார் இவ்வரிகளை

    அள்ளித் தருகிறார் பாருங்கள் அவர்தம் வரிகளை.

    கல்லுக்கு நீதி சொல்ல முடியாது – வெண்
    கானலில் மீன் பிடிக்க முடியாது
    பாறையில் நெல் விதைக்க முடியாது – உன்
    பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஓட்டப் பந்தயத்தில் ஜெயிப்பது போலல்ல வாழ்வில் இன்று நீ ஜெயித்தது போல் தென்படலாம் ஆனால் பொறுத்திரு மகனே எனக்கும் ஒரு காலம் வரும் என்று கூறுவது மட்டுமல்ல பாவத்தின் மூலம் அடையும் வெற்றி என்பதன் உதாரணமாக என்னவெல்லாவற்றையும் எடுத்து வீசுகிறார் பாருங்கள்.

    வாழ்வின் உச்சத்திலிருக்கும் போது கீழேயிருப்பவர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்று அழகாகப் புரிய வைக்கிறார்.

    ஆற்றுக்குள் நாணல் இட்டால்
    காட்டுக்குள் ஆட்டை விட்டால்
    என்னவென்று முடிவாகும்
    ஆசையை முன்னே வைத்துத்
    தர்மத்தை பின்னே வைத்தால்
    என்னென்ன விளைவாகும்

    ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதையும், காட்டுக்குள் தனியே விடப்பட்ட ஆடு எப்படி ஒரு புலிக்கோ அன்றிச் சிங்கத்துக்கோ இரையாவது போல் தர்மத்தை மதிக்காமல் அதர்மம் எனும் காட்டுக்குள் நுழைபவரும் அவ்வாட்டின் நிலையை அடைவார்கள் என்று சொல்கிறாரோ எம் வித்தக வினைஞர்.

    வாழ்வென்பது ஒரு ஆறானால் அதிலே காலத்தின் கோலத்தால் நாணலைப் போல நாம் வீசப்படலாம் அப்போ மனிதாபிமானம் மிக்கவர்களின் கடமையென்ன என்று சிந்திக்க வைக்கும் முயற்சியாக உதிக்கப்பட்ட வரிகளிவை.

    நாடகமேடை ராஜாவானால்
    அங்கென்ன அதிகாரம்
    நாணயமாக வாழ்வதில்தானே
    யாருக்கும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    நாளுக்கு நாள் மாறிடும் இவ்வுலகம் எனும் நாடகமேடையில் நான் செல்வந்தன் என்று எப்படி இறுமாப்புக் கொள்வது ? அதுகூட ஒரு நாடக மேடையில் ராஜா வேஷம் போடுவது போல ஒரு மாயைதானே ! அகங்காரம் கொண்டவர் தான் இந்த வேசத்தில் கூட அதிகாரத்தைக் காட்டுவார்கள் என்கிறார் எம் கவியரசர். ஒரு மனிதனின் செல்வாக்கும் செல்வந்தத்தனமும் அவன் காட்டும் நாணயமிக்க நடத்தையில் என்கிறார் தமிழன்னையின் தவப்புதல்வன்

    ஓடத்தைப் பார்த்த பின்னும்
    வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
    சொந்தத்தில் அறிவேது ?
    பட்டுத்தான் தேறுமென்றால்
    கெட்டுத்தான் மாறுமென்றால்
    புத்திக்கு விலையேது

    ஒரு மன்னிதனுக்கு இதுதான் சரியான வழி என்று காட்டலாமே தவிர அவனை அவ்வழியில் தள்ளி விட முடியாது. அதை அழகாக எவ்வளவு எளிமையாக ஓடத்தைக் கண்டும் நீந்தித்தான் போகிறான் என்று எடுத்தியம்புகிறார் கவியரசர். இத்தகைய வரிகள் அவர் எண்ணத்திலிருந்து சுரக்க வேண்டுமானல் எத்தனை குடம் குடமாக அனுபவநீரை அவர் அள்ளிக் குடித்திருக்க வேண்டும் ?

    “ இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு ஏனெனில் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்” என்று சொல்லும் தைரியம் கொண்டவர் எம் கவியரசர். அதனால் தான் என்னவோ அவர் சிந்தையெல்லாம் அனுபவ முத்துகளாய் முதிர்ந்திருக்கின்றன.

    உள்ளத்தில் கோழை
    ஊருக்கு வீரன்
    இது உந்தன் நிகழ்காலம்
    உண்மையைத் தேடி
    ஓர்நாள் வந்தால்
    ஒளிவிடும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஆகா ! எத்தனை யதார்த்தமான ஒரு கருத்தை இத்தனை எளிமையாய்க் கூறுகிறார். வாழ்வில் நான் கண்ட அனுபவங்களில் வீரனைப் போல் ஜனத்துக்கு மத்தியில் கத்துவோர் பலரின் உள்ளக் கோழைத்தனத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தனது உள்ளத்துக்கு உண்மையை மறைத்து பொய்மையாய் வாழ்பவரே முதல் கோழைகள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லக்கூடியவர் “வனவாசம்” , “மனவாசம்” என்று தன்னை பகிரங்கமாக அலசி எடை போட்ட கவியரசர் ஒருவரே.

    காதல் மன்னன் ஜெமினி கணேசன், பத்மினி அவர்களின் நடிப்பில் வெளிவந்த எதிர்காலம் எனும் திரைப்படத்தில் அமரர்கள்~ டி.எம்.எஸ். இன் குரலிலும், எம்.எஸ்.வியின் இசையிலும் உருவான பாடலுக்கு வரிகளைக் கொடுத்து வண்ண ஓவியத்துக்குக் கண்ணைத் தீட்டுவது போல வடித்துக் கொடுத்தவர் எம் கவியரசர்.

    என் இனிய அன்பு உள்ளங்களே ! கவியரசரின் மற்றொரு முத்துடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • விமல் சொக்கநாதன் – ஒரு சகாப்தம்

    விமல் சொக்கநாதன் – ஒரு சகாப்தம்

    சக்தி சக்திதாசன்

    இன்று 24.08.2023 ஈழத்திலே தமிழ் ஊடகத்துறையின் அடையாளமாக விளங்கி லண்டனிலே மெளனமித்த ஒரு ஆளுமையின் சகாப்தம் ஒரு சரித்திரமானது.

    இன்று காலை தெற்கு லண்டனில் உள்ள அடிங்டன் எனும் இடத்திலுள்ள அடிங்டன் பலஸ் எனும் பிரபல்யமான மண்டபத்தில் கார்கள் நிறுத்த முடியாத அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தார்கள்.

    அன்றும், இன்றும் தங்கள் செவிகளில் கணீரென்று ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்களின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிப் பயண வழிய்னுப்புதலுக்காக.

    ஈழத்தின் வடபுலத்தில் கொக்குவில் எனும் இடத்தில் தம்பு சொக்கநாதன் என்பவருக்கும் விமலாதேவி என்பவருக்கும் 1944 யூன் மாதம் 30ம் தேதி பிறந்தார்.

    கலையாற்றல் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவ்ராகையால் இள வயதிலேயே இலங்கை தமிழ் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும், மேடை நாடகங்களிலும் நடித்த அனுபவம் உள்ளவர்.

    இளவயதில் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் தனது கல்வியை முடித்து இலங்கை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.

    சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பத்மா என்பவரை காதலித்து மணமுடித்தார்.

    இவரின் அசலான உச்சரிப்புடன் கூடிய வெண்கலக்குரல், சட்டக்கல்லூரியில் மாணவராக இருந்த போதே இலங்கை தமிழ் ஒலிபரப்பு சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியை ஈட்டிக் கொடுத்தது.

    திருமணமாகிய பின்பு 1975ம் ஆண்டு குடும்ப சகிதமாக இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார்.

    இங்கிலாந்திலே சட்ட வல்லுனராக பணியாற்றிய இவரின் அளப்பரிய ஆற்றல் பி.பி.ஸி தமிழோசை இவரைத்தேடி தன்னோடு இணைத்துக் கொள்ள வைத்தது.

    ஈழத்து தமிழ் வானொலி சேவையின் மூலம் ஈழத்தமிழர்கள் இதயத்தில் மட்டுமின்றி தமிழக நேயர்களின் நெஞ்சத்திலும் இடம் பிடித்தவரின் குரல் பி.பி.ஸி தமிழோசையின் மூலம் உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் செவிவழி நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

    இங்கிலாந்தில் ஆரம்பித்த இவரது எழுத்து வன்மை வானோலிக்கலை மட்டுமின்றி இவர் ஒரு பன்முக வித்தகர் என்பதையும் பறைசாற்றி நின்றது.

    மேடை நாடகம் மட்டுமின்றி ஈழத்து தமிழ்த் திரைப்படமான “நான் உங்கள் தோழன்” எனும் படத்தின் மூலம் திரைப்பட நடிப்புலகத்தில் கால் பதித்தார்.

    லண்டனில் அண்ணன் ஈழநாடு புகழ் ராஜகோபால் அண்ணன் அவர்களின் ” புதினம் ” பத்திரிகையில் ” விமலின் பக்கம் ” எனும் தலைப்பில் மாதந்தோறும் ஐனரஞ்சகமான படைப்புகளின் மூலம் வாசகர்களைக் கவர்ந்தார்.

    ஈழத்து முன்னனி தமிழிதழ் வீரகேசரியின் வாரமலரில் ” இங்கிலாந்திலிருந்து விமல் ” எனும் தலைப்பில் வாரந்தோறும் சுவையான செய்திகளுடன் வலம் வந்தார்.

    2023 ஆகஸ்ட் 1ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்த அண்ணன் விமலின் கடைசிப் பதிவு வீரகேசரி 2023 ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவந்த வாரமலரில் இடம் பெற்றிருந்தது.

    இது அண்ணன் விமல் கடைசி மூச்சு இருக்கும்வரை ஒரு கலைஞனாக வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.

    அண்ணன் விமல் தனது வானொலி அனுபவங்களைத் திரட்டி அக்கலையின் நுணுக்கங்களை வளரும் வானொலிக் கலையில் ஆர்வமுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் ” வானொலிக்கலை ” எனும் நூலை 2007ம் ஆண்டு சென்னையில் காந்தளகம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து லண்டன் புதினம் பத்திரிகையில் அவர் எழுதிய விமலின் பக்கங்கள் எனும் படைப்பை அதே பெயரில் புதினம் பத்திரிகை வெளியீடாக சென்னையில் வெளியிட்டார்.

    அதைத் தொடர்ந்து வீரகேசரி வாரமலரில் வெளிவந்த அவர் படைப்புகளை ” லண்டனிலிருந்து விமல் ” எனும் பெயரில் நூலாக்கி சமீபத்தில் ஈழம் சென்று யாழ்நகர், மற்றும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வந்திருந்தார்.

    இதே நூலை வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் கனடா, அவுஸ்திரேலியா நகரிலும் டிசம்பர் 10ம் தேதி லண்டன் நகரிலும் வெளியிட தீர்மானித்திருந்தார்.

    அண்ணன் விமல் அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறையை உலுக்கியுள்ளது.

    அண்ணனுடன் சமகாலத்தில் இலங்கை தமிழ் ஒலிபரப்புச் சேவையில் மற்றொரு உன்னத ஆளுமையாக திகழ்ந்த இன்றும் தமிழ் ஊடகத்துறையில் புகழேந்திக் கொண்டிருக்கும் அண்ணன் அப்துல் ஹமீது அவர்களின் துயர் பகிர்வை இன்றைய நிகழ்வில் அவர் குரலிலேயே கேட்டபோது அவருள்ளத்து வேதனையை உணரக்கூடியதாக இருந்தது.

    அண்ணன் விமல் அவர்களாலும், அண்ணன் அப்துல் ஹமீது அவர்களாலும் செதுக்கப்பட்டு இன்றும் வெண்கலக்குரலோச்சிக் கொண்டிருக்கும் எஸ்.கே.ராஜன் அவர்களின் துயர் பகிர்வு அண்ணன் விமலின் பல பெருமைகளை அள்ளித்தந்தது.

    அண்ணனுடன் பல நிகழ்வுகளிலும், தொலைபேசியிலும் உரையாடிய தருணங்களை மறக்க முடியாது.

    தான் எத்தனை பெரிய கலைஞனாக இருந்தாலும் அடுத்தவர்களை அணைத்துப் பாராட்டும் அண்ணனின் பண்பின் ஆழத்தை நேரடியாக அனுபவித்தவன் நான்.

    எனது எழுத்துகளைச் செதுக்குவதில் அண்ணன் பங்கெடுத்தார்.

    புதினம் பத்திரிகையில் அண்ணனோடு அவர் எழுதும் காலத்தில் எனக்கும் அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைத்தது எனது பாக்கியம்.

    எனது ஆக்கங்களைப் படித்து தட்டிக் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.

    எனது முதலாவது நூலான ” தமிழ்ப்பூங்காவில் வண்ண மலர்கள் ” வெளியீட்டு விழாவில் கலந்து அண்ணன் சிறப்பித்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    வேறோர் முக்கியமான நிகழ்வு இருந்தும் எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவ்விழாவுக்கு வருகை தந்த அண்ணனின் பெருந்தன்மைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவன்.

    எனது சிறுகதைத் தொகுப்பைப் படித்த அண்ணன் விமல் அதிலே ஒரு கதை தன்னை மிகவும் பாதித்தாகக் கூறி அக்கதையை சகோதரி யோகா தில்லைநாதன் அவர்களின் வானொலியில் இசையும், கதையுமாக்கி தானே ஒலிபரப்பியது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லுவேன்.

    இதுவரை அண்ணனின் கலை வாழ்க்கையைப் பார்த்தோம்.

    அதற்கு அப்பால் ஒரு திறமையான சட்டத்தரணியாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக,உறவினனாக, நண்பனாக, சமுதாயத் தூணாக அண்ணன் வகித்த பாத்திரங்கள் அத்தனையும் வியந்திடப் பண்ணும்.

    தமிழன்னை தன் புகழ்பாட பல மைந்தர்களை ஈவதுண்டு அவர்களுள் சிலரை அவையில் முன்னிருப்பச் செய்வாள். அத்தகையவர்களில் அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்கள் முன்னனியில் இருந்தார், இனியும் இருப்பார்.

    அண்ணனின் ஆத்மசாந்திக்காய் அவரின் கும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் பிரார்த்திப்போம்.

    ஓம் சாந்தி !

    ஒரு ஆளுமை மிக்க குரல்
    அவசரமாய் மெளனித்துக் கொண்டது !

    அன்றெனது வாலிப வனப்பில்
    ஈழத்து வானலைகளில்
    வெண்கலமாய் ஒலித்தது
    விமல் அண்ணனின் சிருங்கார
    உச்சரிப்புக் கலந்த ஓங்கிய குரல்

    இசையும், கதையுமென
    இதயத்தின் ராகங்களை
    இயல்பாகவே தட்டியெழுப்பி
    வாலிப காலத்து உணர்வுகளில்
    வசந்தமாய்க் கலந்தவர் விமலண்ணன்

    ஈழத்தில் தொடங்கிய குரலோசை
    இங்கிலாந்திலும் தொடர்ந்தது
    இனியதோர் தமிழோசையாய்

    தமிழர் நிகழ்வுகள் சிறக்க
    தயக்கமின்றி ஒலித்தது
    தங்கக்குரல் விமலண்ணா வழியாக
    தாயகச் செய்திகளை விமலண்ணன்
    தந்திடும் வகையே ஒரு தனிவகையே !

    உடலை விட்டுங்கள் ஆன்மா
    உயரப் பறந்தோடியிருக்கலாம்
    தமிழ் உலகில் வாழும்வரை
    தமிழர்கள் வாழும் இடமெல்லாம்
    தங்கத்தமிழன் விமல் சொக்கநாதன்
    தங்களின் குரலும் நினைவுகளும்
    தமிழர் இதயங்களில் நிலைத்திருக்கும்

    போய்வாருங்கள் அண்ணா !
    ஓங்கி ஒலித்தவுங்கள் குரலுக்கும்
    ஓயாமல் எழுதிய உங்கள் விரல்களுக்கும்
    ஓய்வு தேவையென்று தானோ
    அனைவர்க்கும் பொதுவான
    அருளீயும் இறையுங்களை
    தன்னோடு அழைத்துக் கொண்டானோ ?

    ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையுடன்
    அன்பர்கள்  இழப்பினை பகிர்ந்து
    கொள்கிறேன்.

    Share
  • இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

    இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

    சி. ஜெயபாரதன், கனடா

    2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில ஆய்வித் தொடர்பு அறுந்து போனது. ஆயினும் இன்றும் இயங்கிவரும் சந்திராயின் -2 விண்சுற்றி உதவியால், சந்திராயின் -3 நில ஆய்வி மெதுவாகத் தடம் வைத்து, அதிலிருந்து நில ஊர்தி இறங்கி இயங்க ஆரம்பித்துள்ளது.

    இதுவரை எந்த நாடும் துணிந்து செய்யாத தென் துருவ தடவைப்பை, திட்டமிட்டு செய்து காட்டி உள்ளது. மேலும் தென்துருவப் பிரதேசத்தில் பல்வேறு தாதுக்கள், பனிக் குன்றுகள் காணப் படலாம் என்ற எதிர் பார்ப்பும் இருந்துள்ளது.

    அடுத்து இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குறிக்கோள்கள் என்ன ? மனிதர் இயக்கும் விண்வெளிப் புவிச்சுற்று பயணப் பயிற்சி, நிலவில் குடியேற, சர்வ தேச நிலாச் சுற்று நிலையக் கூட்டமைப்பு. மேலும் சூரியனைச் சுற்றி பருவநிலை, சூழ்வெளி நிலை அறிய ஒரு விண்சிமிழ் இஸ்ரோ [ISRO] [INDIAN SPACE RESEARCH ORGANIZATION] ஏவப் போவதாகவும் திட்டங்கள் உள்ளன.

    image.png

    A series of images sent by Chandrayaan-3 show the craters on the lunar surface getting larger and larger as the spacecraft gets closer

    image.png
    Chandn -3 Rover moves out to explore the Moon’s surface near the South Pole area

    image.png

    image.png

    Reference
    1. https://www.livemint.com/news/how-india-pulled-off-its-frugal-moon-landing-11692982290717.html
    2. https://en.wikipedia.org/wiki/Chandrayaan-3#:~:text=Chandrayaan-3%20Integrated%20Module%20in%20a%20cleanroom%20%20,%20%2057320%20%2026%20more%20rows%20
    3.  https://en.wikipedia.org/wiki/File:Chandrayaan-3_Integrated_Module_in_clean-room_02.webp

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசர் கண்ணதாசன் எனும் காவியப் பெருங்கடலினுள் விழுந்து நீச்சலடிப்பது என்பது உள்ளத்தை எப்போதும் ஆனந்தமயமாக வைத்திருக்கக்கூடிய செயலாகும்.

    தமிழர்கள் நெஞ்சங்களிலெல்லாம் தனக்கென ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவர் கவியரசர் என்றால் அது மிகையாகாது.

    தன்னுள்ளத்தில் விழுந்த காலத்தின் வடுக்களை கவிதை வரிகளாக்கினார். திரைத்துறை விற்பன்னர்கள் கொடுத்த கதைகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப தனது அனுபவங்களின் மூலம் தான் பெற்ற வாழ்வின் ஞானத்தை அக்காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளாக்கினார்.

    கவியரசர் ஆன்மீகத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர். அனைத்து மதங்களின் சாரத்தையும் அறிந்து கொண்டவர்.

    வாழ்க்கையெனும் ஆழியிலே நாத்திக அலைகளைக் கடந்து அமைதியான பகுதியான ஆத்திக பரப்பினிலே மிதந்தவர். கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அனைத்தையும் அழகக உள்வாங்கிக் கொண்டவர்.

    இந்தப் பதிவிலே என்றும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு பாடலைப் பகுத்துப் பார்த்து அதை எந்தக் கோணத்தில் அவர் பார்த்து எழுதியிருப்பார் என்பதை எனது கோணத்திலே பார்க்கத் தலைப்படுகிறேன்.

    மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி அவர்கள் நடத்தும் கச்சேரிகளில் முதல் பாடலாக ஒலிக்க வேண்டும் என்று கவியரசரே விரும்பிய,

    “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்று ஒலிக்கும் இனிமையான பாடலே அது.

    ஒரு பாடலுக்குள் எத்தனை விஷயங்களைப் புகுத்தலாம் என்பதற்கு இந்த ஒரு பாடலே கவியரசரின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

    கண்ணனின் தாசனல்லவா கண்ணதாசன் அவர் கண்ணனைப் பற்றிப் பாடாத பொழுதுகள் இல்லையென்றே கூறிவிடலாம். தத்துவப் பாடலாகட்டும், பக்திப் பாடலாகட்டும், காதல் பாடலாகட்டும் அனைத்தினுள்ளும் கண்ணனைப் புதையல் போன்று புதைத்து வைத்திருப்பார் கவியரசர்.

    மேலும் கண்ணனைப் பற்றிப் பாட வேண்டும் என்று எண்ணுகிறார் கவியரசர். அவர் நினைவில் நிறைந்திருக்கும் கண்ணனின் கைகளில் எப்போதும் தவழ்ந்திருப்பது என்ன ?

    புல்லாங்குழல் அல்லவா ?

    துணைக்கு அழைக்கிறார் புல்லாங்குழலை. கண்ணனின் கைகளில், உதடுகளில், இடுப்பில் என்று அந்த மாயக் கண்ணனுடன் அனுதினமும் இணைந்திருப்பது புல்லாங்குழல் அல்லவா ?

    அந்தப் புல்லாங்குழலையே கண்ணன் அதாவது தேவகியின் மைந்தன் புருஷோத்தமன் என்று புகழப்படும் கண்ணனைப் பாடும்படி பணிக்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழலைத் தொட்டவர் ஆன்மீக வித்தகராயிற்றே கங்கைக்கரைத் தோட்டத்தை விட்டு விடுவாரா என்ன ?

    புல்லாங்குழலைக் கொடுத்த மூங்கில்களை அழைத்து பாட வைத்து விடலாம் ஆனால் கங்கைக்கரைத் தோட்டத்தை எப்படி இங்கே கொண்௶டு வர முடியும் ?

    சிந்திக்கிறார் கவியரசர். உடனே அவருக்கு வந்து விடுகிறது கண்ணன் மாகாபாரதத்திலே கங்கைக்கரையில் நிகழ்த்திய லீலைகளில் ஒன்று.

    அது என்ன என்கிறீர்களா?

    வாருங்கள் கொஞ்சம் மகாபாரதத்துள் செல்வோம்.

    கங்கையிலே பிராமணகோடி என்று ஒரு இடம். அந்த இடத்திலே ஆழம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்விடத்தில் தான் பாண்டவர்களில் தருமனுக்கு அடுத்தவனான பீமன் குதித்துக் குளிப்பது வழக்கம்.

    தனக்குத் தலையிடியாக இருக்கும் பீமனை எப்படி ஒழிப்பது என்று தவித்துக் கொண்டிருந்த துரியோதனன் அவனை அழிப்பதற்கு ஒரு அருமையான திட்டம் தீட்டினான்.

    பீமன் வழமையாகக் குதிக்கும் இடத்தில் நீருக்கடியில் வெளியே காணமுடியாதபடி நுனிகளில் கடுமையன விஷம் பூசப்பட்ட ஈட்டிகளை நாட்டி வைத்தான்.

    பீமனும் குளிக்க வந்தான் அப்போது அங்கே வந்த கண்ணன் ” பீமா நீ குதிக்கப் போகும் இடத்தைப் பார் அங்கே சில வண்டுகள் மொய்க்கின்றனவே அவைகளின் மீது பாய்ந்து அவைகளைக் கொல்லாது அவற்றைத் தாண்டிக் குதித்து விடு “

    துரியோதனன் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. மனதில் இது திரைப்படம் போல ஓட விடுவாரா எமது கவியரசர் ?

    கொடுக்கிறார் அடுத்த வரிகளைப் பாருங்கள்

    வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே – எங்கள்

    மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார்.

    சரி கண்ணனோடு கங்கைக்கரைத் தோட்டத்தை இணைத்து விட்டோம் இனி அடுத்து எனச் சிந்தனைச் சுழல்கள் வட்டமிட ,

    “ஓ கண்ணனின் திருமேனியை முதலில் தரிசித்தது யார் ? மேகங்களல்லவா ? “

    சரி அவைகளைக் கொண்டு என்ன செய்விக்கப் போகிறார் எங்கள் கவிக்குயவர்.

    பெருமதிப்பிற்குரியவர்கள் எங்காவது வருகிறார்கள் என்றால் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் மீது பன்னீர் தெளித்து மரியாதை செய்யும் வழக்கத்தை நினைவில் கொள்கிறார்.

    சாதாரண மனிதர்களுக்கே பன்னீர்த்துளிகள் தெளிக்கப்பட்டால் உலகத்தின் உதாரணமாகத் திகழப்போகும் அக்குழந்தை கண்ணனை எப்படி வரவேற்கப் போகிறதாம்.

    மேகங்கள் கரைந்து பன்னீர்த்துளிகளாய் பரந்தாமன் மீது விழுகிறது என்கிறார் எங்கள் வித்தகக் கவி.

    பன்னீர் மலர்சொரியும் மேகங்களே – எங்கள்

    பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்

    என்று சித்தரிக்கிறார் வார்த்தை வித்தகர்.

    இதுவரையும் புகழ் பாடுங்களேன் என்றுதானே வரிகளை யாத்திருந்தார். இப்போது என்ன திடீரென மெய்யழகைப் பாடுங்களேன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

    கண்ணன் குழந்தையாகச் சிறையில் பிறந்ததும் தந்தை வாசுதேவனால் வெளியே எடுத்துச் செல்லப்படும்போது அக்குழந்தையின் மேனியழகை முதன் முதல் கண்ணுற்றது மேகங்கள் தானே ! அதனால் தான் மேகங்களை கண்ணனது மெய்யழகைப் பாடும்படி கேட்கிறார் போலும்.

    ஆசுகவியின் சிந்தையில் அடுத்து வருவது ராகங்கள். அதுவும் தென்கோடி ராகங்களை அழைக்கிறார். என்ன இது ? வடக்கே மதுராவில் பிறந்த கண்ணனைப் பாட தென்கோடி ராகங்களா ? சிந்திக்க வைக்கிறார் கவியரசர்.

    கண்ணனையே கணவனாக அடைய வேண்டி பாசுரங்கள் பாடிய ஆண்டாள், ஆதிசங்கரர்,ராமானுஜர்,வேதாந்த தேசிகர் என்போர் மட்டுமல்ல கண்ணனையே எண்ணிப் பல பாடல்கள் பாடிய மகாகவி பாரதியார் வரை அனைவரையும் ஈந்தது தென்திசை தானே !

    தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

    ஶஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

    என்று அழகுற வரிகளை அள்ளி வீசுகிறார் எங்கள் கவியரசர்.

    சரி ராகங்களை அழைத்து வந்து விட்டார். அவை கச்சேரியை ஆரம்பிக்க வேண்டாமா ?

    அவை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகின்றன? ஓ அவைகளும் கண்ணனின் குழந்தைப் பருவத்திலிருந்துதான் ஆர்ம்பிக்கின்றனவாம். அதுவும் அந்தக் குழந்தையாய் அவர் யாரைச் சித்தரிக்கின்றாரென்றால் குருவாயூரில் இருந்து பக்தர்களை ரட்சிக்கும் குருவாயூரப்பனைச் சொல்கிறார்.

    அதுவும் கண்ணனை குருவாயூரில் தவழ்ந்தவன் என்று சொல்லாமல் தவழ்கின்றவன் அதாவது இன்றும் அருள் பாலித்துக் கொண்டிருப்பவன் என்கிறார்,

    குருவாயூரில் தவழ்ந்து ரட்சிக்கும் அதே கண்ணன் தானே மதுராவையும் ஆள்கின்ற மன்னனாகக் காட்சியளிக்கிறான் இல்லையா ? அதை எப்படி இங்கே இணைக்கிறார் பாருங்கள்,

    குருவாயூர் தன்னில் அவன்

    தவழ்கின்றவன்

    ஒரு கொடியோடு மதுராவை

    ஆள்கின்றவன்

    ஆகா, இதுதான் கவியரசருக்கேயுரித்தான தனி முத்திரை எனலாம்.

    அதுசரி ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்கிறார் ஏன் தெரியுமா? கண்ணனின் அரசாட்சியில் அவனுக்கு அங்கு எதிர்க்கட்சியே கிடையாது. மாற்றுக்கொடியில்லா மாநகரம். கன்ணன் எனும் அந்த மதுரகானம் இசைப்பவனின் மதுரத்தில் மயங்கி பேதமின்றி மக்கள் வாழ்கிறார்கள். என்கிறாரோ நம் கவியரசர் ?

    எல்லாவற்றையும் தன் கானத்துக்குள் வைத்தவருக்கு அடடே நாம் தரிசிக்கும் எங்கள் ஏழுமலையானின் உறைவிடத்தை உரைக்க வேண்டாமோ என்ற எண்ணம் வருகிறது போலும்.

    சரி மீண்டும் ஒரு சம்பவ சம்பாஷனைக்குள் நுழைவோம் வாருங்களேன், கண்ணா உன் அம்மாவான எனக்கு என் மகனின் திருமணம் ஒனறைக்கூட பார்க்க வாய்ப்பளிக்கவில்லையே என்றொரு குறையைக் கூறுகிறாள்.

    சரி கவலையை விடுங்கள் தாயே நான் கலியுகத்தில் ஸ்ரீனிவாசனாக அவதரிப்பேன் நீயே மறுபடியும் எனக்குத் தாயாக வருவாய் உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து உன் குறையைப் போக்குகிறேன் என்பார்.

    ஸ்ரீனிவாசப் பெருமாளாக கன்ணனும் அவரது தாய் வகுளமாலிகையாக யசோதையும் வந்து ஸ்ரீனிவாசக் கலியாணத்தில் யசோதையின் குறையும் தீர்க்கப்பட்டு திருப்பதியில் ஏழுமலையானாக வாசம் செய்கிறார்.

    இதையெல்லாம் கவியரசரின் அழைப்பின் பேரில் வந்து பாடிக் கொன்டிருக்கும் ராகங்கள் அட ஸ்ரீரங்கத்தை விட்டு விடலாமா என்று எண்ணி விட்டன. விடுவாரா கவியரசர் ? விளையாடி விட்டார் போங்கள். இரண்டையும் இணைத்து அழகாய்த் ராகங்களின் பாகமாகத் தருகிறார்.

    திருவேங்கடத்தில் அவன்

    அருள்கின்றவன்

    அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி

    கொள்கின்றவன்

    ராகங்களை பெண்களாகத்தான் பார்ப்பது வழக்கம். அப்படியான சூழலில் தன்னுடைய உதவிக்கு அபயக்குரல் கொடுத்த பாஞ்சாலியைப் பற்றிக் கூறாமல் விட்டுவிடலாகாது என்பதால் அடுத்த வரி வந்து விழுகிறது.

    பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்

    என்று சூதாட்டத்தில் தம்மையே இழந்து பின்னர் பாஞ்சாலியை இழந்த பாண்டவர்களினால் காப்பாற்ற முடியாத பாஞ்சாலியைக் காக்க தன்கையைக் கொடுத்த கண்ணனின் புகழை அவ்வரிகள் உள்ளடக்குகின்றன.

    அது மட்டுமா ? அச்சம்பவமே போரின் ஆரம்பம் என்பதை சூசகமாகக் குறிப்பிடுவதற்கு ஏதுவாக பரந்தாமன் சங்கை எடுத்தான் என்று கூறுகிறார்.

    சங்கை என்பது இரண்டு வகையாக அர்த்தப்படுத்தப்படும். பகாப்பதமாக எடுத்தால் அது பயத்தையும், சந்தேகத்தையும் குறிக்கும். பகுபதமாக எடுத்தால் சங்கை எடுத்து முழக்கினான் என்று கொள்ளலாம்.

    பாஞ்சாலியின் பயத்தையும் , சந்தேகத்தையும் போக்கினான் கண்ணன் என்பதோடு போரின் ஆரம்பத்தை அறிவிக்கும் வகையில் சங்கை முழக்கினான் என்றும் பொருள்படக் கூடிய வகையில் அடுத்த வரிகள் அமைகின்றன.

    அன்று பாரதப்போர் முடிக்க

    சங்கை எடுத்தான்

    என்ன இது அடாவடித்தனமாக இருக்கிறதே துரியோதனின் நாட்டின் பகுதியைப் பறித்தல்லவா கண்ணன் பாண்டவர்களுக்கு கொடுத்தான் என்று எண்ணினால் அதற்கு கூட பதில் வருகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக்

    கொடுத்தான்

    என்று கண்ணன் முறையற்ற செயல் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்தும் விடுகிறார்

    சரி இதுவெல்லாம் சரிதான் இத்தனை விடயங்களையும் கண்டு, கேட்டு, படித்தவர்களுக்காய் எதைக் கொடுத்தான் கண்ணதாசனின் கண்ணன் என்று பார்த்தால்,

    நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம்

    கொடுத்தான்

    என்று கூறி எமக்குக் கிடைத்ததுதான் அளப்பரிய பரிசு கண்ணனுக்கு பெரிய பாராட்டுப் பத்திரமே தந்து விடுகிறார்.

    கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக அறிவியல் ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்.

    அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை

    Share
  • ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

    ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

    2023 ஆகஸ்டு 11 ஆம் தேதி ரஷ்யா நிலவு நோக்கி ஏவிய லூனா -25 நிலா தளச் சிமிழ்.
     
    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் முயலும் முதல் விண்வெளித் திட்டம். நிலாவின் தென் துருவத்தில் லூனா-25 நிலாசிமிழ் தடம் வைக்க வேண்டும், இந்தியச் சந்திரயான்-3 அதே தென் துருவப் பரப்பில் தடம் வைப்பதற்கு முன்னர்.  
     
    நிலாவின் தென் துருவப் பகுதியில் தான் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள், எரிசக்தி மூலக்கூறுகள். தனிமங்கள், தாதுப் பொருட்கள் இருக்கலாம் என்று இந்தியா, ரஷ்யா போட்டி போட்டுக் கொண்டு முயல்கின்றன.  
     
    ரஷ்ய முன்னறிப்பு லூனா-25 விண்சிமிழ் 800 கி.கி.எடையுள்ள நிலாத்தளச் சிமிழில் பழுது ஏற்பட்டு எதிலோ மோதி, அதன் தொடர்பு அறுந்து போய் இருப்பிடம் தெரியாமல் போனது,
     
    இந்தியாவின் சந்திரயான்-3 தளவுளவி நிலவின் தென் துருவத்தில் 2023 ஆகஸ்டு 23 இல் மெதுவாக இறங்கி தடம் வைக்கும், அடுத்து அதிலிருந்து ஒரு தளவூர்தி நகர ஆரம்பிக்கும்; அது ஒரு வாரம் தவழ்ந்து நிலவின் தகவல் அனுப்பும் என்று இந்தியா திட்டமிட்டு  எதிர்பார்த்து உள்ளது.  
     
    3900 கி.கி. எடையுள்ள சந்திரயான்-3 விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தியில் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. ஏவிய பிறகு 40 நாட்கள் கழித்து, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தடம் வைக்கும். ரஷ்யன் லூனா-25 விண்தளச் சிமிழ் 7 நாட்களில் நிலவில் இறங்க டிசைன் செய்யப் பட்டது. 
    1. The Luna-25 craft blasted off from far-east Russia on August 11, 2023 was crash-landed on Moon BBC News
    Share