Nallur_Kandasamy_front_entrance

Nallur Kandasamy Temple

மீனாட்சி பாலகணேஷ்

  1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

          இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

  1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

          இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

          வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

          சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

          முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

          இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

          இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

          புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                 பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

         பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                 பேசும் தெய்வம் எனநின்றாய்!

         குகப்பா குமரக் குருபரரும்

                 கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

         குழந்தை நீயே என்பதுவும்

                 கொஞ்சும் தமிழுக் காசானாய்

         அகப்பா கண்ட உன்றனுயர்

                 அழகே குழந்தை வடிவன்றோ! 

         இட்டும் தொட்டும் அழைந்தாடி

                 இல்லம் அமைத்து விளையாடும்

         மகப்பா மடவார் மனத்துறையும்

                 மயிலோய் சிற்றில் சிதையேலே!

         வண்ணச் சிறுவர் மனமோங்க

                 வரையும் சிற்றில் சிதையேலே!

                                        — என்பது பாடல்.

                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

          சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

          கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

          காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

          செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

          உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

          மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                          வண்டார் நின்றாட

                 மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                          மந்தாரஞ் சாரத்

         சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                          ருண்டுசு ருண்டாடத்

                 தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                          துற்றதே னச்சூ ரன்

         சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                          ரிந்துநி தம்வா டத்

                 திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                          சிறுவியர் முத்தா ரச்

         செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                          செங்கோ செங்கீ ரை

                 செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                          செங்கோ செங்கீ ரை.

          இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  1. மாவைப் பிள்ளைத்தமிழ்

          இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

          மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

         ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

          மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

          மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

          பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

          கீரி மாமலை வாரிதி யாடியே

                 கிரீச னாநகு லேசனை நாடியே

         சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                 றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

         மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                 வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

         தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                 செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

          இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

          மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

          மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

          மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

          பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                          பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                 பேசாப் பொருள்பே சியகுழவிப்

                          பெருமான் வருக! பெருந்தவத்தோர்

         விருந்தே வருக! நகுலமுனி

                          விரூப முகமும் மாருதப்ர

                 வீக வல்லி மாமுகமும்

                          விலகாப் பெருநோய் விலக்குமலை

         மருந்தே வருக! மலைமடந்தை

                          மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                 வையம் வாழ வாழ்ந்தபெரு

                          வாழ்வே வருக! வாழ்வறியாத்

         திருந்தா வசுரர் செருக்கொழித்த

                          தேவே வருக! வருகவே!!

                 சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                          திருவே வருக! வருகவே!!

          என்பது பாடல்.

                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

          பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

          விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

          இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

          அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

          ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

          ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

         தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                          சடைவிரித் தாடி நாற்றத்

                 தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                          தாயோ பெருத்த நீலி

         முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                          மூன்றுமத வடுவு டையவன்

                 முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                          முலையுண்டு உயிரு முண்டோன்.

         வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                          வழிகோத் திரங்க ளெல்லாம்

                 வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                          வந்திக்கும் அன்பர் வினைகள்

         சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                          சிறுபறை முழக்கி யருளே

                 திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                          சிறுபறை முழக்கி யருளே.       

என்பது பாடல்.

          இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

 

 (வளரும்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 பார்வை நூல்கள்:

  1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.