குறளின் கதிர்களாய்…(469)

செண்பக ஜெகதீசன்
எச்சமென்று என்ணெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
-திருக்குறள் -1004 (நன்றியில் செல்வம்)
புதுக் கவிதையில்…
வாழ்வில் பிறர்க்கேதும்
வழங்கி உதவாத காரணத்தால்
ஒருவராலும்
விரும்பப்படாதவன்,
தன் மரணத்துக்குப்பின்
தன்னை
நினைவுபடுத்தி நிற்கப்போவது
என்று
எதனை எண்ணுவானோ…!
குறும்பாவில்…
பிறர்க்கொன்றும் ஈயாததால் ஒருவராலும்
விரும்பப்படாதவன், சாவுக்குப்பின் தன்னை நினைவுபடுத்தி
நிற்பதென எண்ண எதுவுமில்லை…!
மரபுக் கவிதையில்…
உதவி வேண்டி வருமெவர்க்கும்
உதவி யேதும் செயாதவனை
அதனால் யாரும் விரும்பாரே,
அவனின் காலம் முடிந்தபின்னே
எதனா லேனும் இவ்வுலகோர்
எண்ணி யவனை நினைத்திடவே
அதற்கே தக்க தானதேதும்
அவனுக் கில்லை எண்ணிடவே…!
லிமரைக்கூ…
ஈயாதவன்மீது கொள்வதில்லை விருப்பம்
இவ்வுலகில், அவன்காலம் முடிந்ததுமவனை நினைவுகொள்ளத்
தக்கதேது மிலாததே திருப்பம்…!
கிராமிய பாணியில்…
ஒதவணும் ஒதவணும்
அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
ஒதவின்னு கேக்கிறதக்
குடுத்து ஒதவணும்..
அடுத்தவங்களுக்குக்
குடுத்து ஒதவாததால
ஒருத்தராலயும் விரும்பப்படாதவன்,
தனக்க மரணத்துக்குப் பெறகு
தன்ன நெனவுல வச்சிக்கிறதுக்கு
என்ன இருக்குண்ணு
நெனச்சிப் பாக்க மாட்டானோ..
அதால
ஒதவணும் ஒதவணும்
அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
ஒதவிண்ணு கேக்கிறதக்
குடுத்து ஒதவணும்…!