கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7
கவியரசர் கண்ணதாசன் தமிழ்ப் பெருங்கடல் .
பள்ளியில் படிக்காதவற்றைத் தன் வாழ்க்கையில் படித்தார். வாழ்க்கை அனுபவங்களை உள்ளத்திலே நூலாக்கினார்.
தமிழைச் சுவைத்தார். தான் சுவைத்தவற்றைப் பாடல் வரிகளாக்கி நாமெல்லாம் சுவைப்பதற்கு வழி சமைத்தார்.
வாழ்வின் சூழல்களுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளின் வெளிப்பாட்டுக்கு பாடல் வரிகளை அள்ளி வீசினார்.
காதலாகட்டும், வீரமாகட்டும், சோகமாகட்டும் தனது பாடல் வரிகளிலே ஆங்காங்கு ஆன்மீகத்தைப் புதைத்து வைத்தார்.
இந்தப் பதிவினிலே நாம் பார்க்கப் போகும் பாடல், கவியரசரின் அருமையான பாடல்.
“பார்த்தால் பசி தீரும் ” எனும் படம். இதிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடித்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு பெறும் ராணுவ வீரர்களாக நடித்திருப்பார்கள்.
இடம்பெற்ற பல சிக்கல்களினால் தெரிந்த உண்மையைச் சொல்ல முடியாத ஒரு நிலைக்கு நடிகர் திலகம் தள்ளப்படுகிறார்.
அவரது இந்த நிலையை விளக்கும் பாடல் ஒன்றினை அவர் பாடுவதான காட்சிக்குப் பாடல் வரிகளை கவியரசர் யாத்திருந்தார்.
பாடல் ” உள்ளம் என்பது ஆமை ” , டி.எம்.எஸ் ஐயா அவர்கள் அற்புதமாகப் பாடியுள்ளார்.
உள்ளம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் கதாசிரியர்கள், கவிஞர்கள் பலரும் வித்தியாசமான விளக்கங்களை அள்ளி வீசியுள்ளார்.
மலர் என்றார்கள். ஆனால் அந்த உள்ளம் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. வேறு சிலரோ அலையடிக்கும் கடல் என்றார்கள். ஆனால் அந்தக் கடல் எப்போது பொங்கிப் பிரவாகிக்கும் என்று சொல்ல முடியுமா ?
உள்ளம் குரங்கு போன்றதென்றால் மரத்துக்கு மரம் தாவும் செயல் போல மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் நாயகன் தன் சூழலில் மனத்துக்கு ஒரு கட்டளை இடுகிறான். அதாவது அது நினைப்பதை வெளியே சொல்ல முடியாத நிலை.
இங்கே கவியரசர் உள்ளத்தை ஆமைக்கு ஒப்பிடுகிறார். ஆமை என்ன செய்யும்? ஆபத்தைக் கண்டவுடன் மெதுவாகத் தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு விடும்.
பாதுகாப்புக்கு மட்டுமல்ல சோர்விலோ இல்லை தளர்விலோ இல்லை அயர்விலோ கூட உள்ளே தான் ஓட்டுக்குள்ளே ஒதுங்கிக்கொள்ளும்.
உண்மையைப் பேசுவதனால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. பாதிப்புத்தான் அங்கு ஏற்படும் எனும் போது அந்த உண்மையை நெஞ்சிலே தாலாட்டுப் பாடி தூங்கத்தானே வைக்க முடியும்.
இது எத்தகைய ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.
உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
என்கிறார் கவியரசர். கவியரசருக்கு நிகர் கவியரசரே தான்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது அன்றிலிருந்து இன்றுவரை எமக்குள்ளே விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தக் கேள்வியைச் சாதுரியமாக எம்மை.நோக்கியே திருப்பி விடுகிறார் கவியரசர்.
கருங்கல்லொன்று நாம் போகும் பாதையில் கண்களில் தட்டுப்படுகிறது, ஒரு கல் கிடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதைக் கடந்து சென்று விடுகிறோம்.
அதே கல் ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைகளில் கிடைக்கிறது. ஆன்மீக உணர்வு கொண்ட அவன் அதைச் செதுக்கி அதனுள்ளிருக்கும் ஒரு தெய்வத்தின் உருவத்தை வெளிக்கொணர்கிறான்.
அந்தச் சிலை ஆலயத்தின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அதைக் கல் என்று கடந்து சென்றவர்கள் இப்போ ஆலயத்தினுள் கருவறையின் முன் நின்று தெய்வமென்று வணங்குகிறார்கள்.
திருமூலரின் வரிகளில் இதை அழகாக இரு வரிகளுக்குள் அடக்கியிருப்பார் திருமூலர்.
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”
என்பார் திருமூலர்.
இவை மிக இலகுவாக பாமரனுக்கும் புரியக்கூடிய எளிமையான வரிகளில் பதிப்பதுதானே கவியரசரின் முழு ஆற்றலே! விடுவாரா சும்மா?
இங்கே சூழலின் தன்மைகளினால் உண்மையைப் பகிர முடியாமல் தவிக்கும் நாயகன் ஆன்மீகப் பின்னணியில் தன் தன்மையை விவரிக்கிறான்
தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இதைவிட அர்த்தம் பொதிந்ததாகவும், எளிமையாகவும் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் ஆன்மீகத்தையும் யாரால் இணைக்க முடியும்?
இதை எவ்வாறு அவன் தன் நிலையைச் சித்திரிப்பதற்கு உபயோகிக்கிறான் ? என்று வாசகர்கள் எண்ணக்கூடும்.
இந்தத் திரைப்படத்தின் கதைப் பின்னனியை அறிந்திருந்தால் இலகுவாகப் புரியும்.
சந்தர்ப்பச் சூழ்நிலையால் தீயவனாக எண்ணப்படும் அவன், உண்மையைச் சொன்னால் பலருடைய வாழ்வு பாதிக்கப்படும்.
ஆனால் அதே இடத்தில் அவன் நல்லவன் என்பதை அறிந்தோரும் உண்டு.
அவனை நல்லவன் என்று பார்த்தால் நல்லவனே! தீயவன் என்று பார்த்தால் தீயவனே !
இதையே அழகாக ஆன்மீக வரிகளில் விளக்கும் கவியரசரின் ஆன்மீக அறிவியலே அற்புதம்தான்.
அடுத்த சரணத்தில் எதை வைக்கப் போகிறார் ? பார்ப்போம்
தண்ணீர் தணல் போல் எரியும் – செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் – அது
நாட்பட நாட்படப் புரியும்
எங்காவது தண்ணீர் சாதாரணச் சூழலில் தணலைப் போலச் சுடுமா?
இல்லையெனில்
தணலாகத் தகித்துக் கொண்டிருக்கும் விறகுக் கட்டை குளிர் நீரைப் போலக் குளிருமா ?
நடக்கும் என்கிறார். அதாவது இக்கதாநாயகன் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதால் அவனுள் எழும் உணர்வுகளின் தாக்கத்தை அவற்றுக்கு ஒப்பீடு செய்கிறார் எம் கவியரசர்.
அது ஏன் நடக்கிறது? ஏனென்றால் காலம் அவனின் நண்பனுக்குக் கூட அவனைப் பகையாளியாகக் காட்டுகிறது.
ஆனால் அந்நாயகன் உண்மையின் மீதும் நல்வினை விதைத்தோர் நல்வினையையே அறுவடை செய்வார் என்பதில் இன்னும் அசையாத நம்பிக்கையோடு பொறுமையாக இருக்கிறான் என்பதை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையே ,
அது
நாட்பட நாட்படப் புரியும் என்கிறார்.
இங்கு இதை ஒரு திரைப்படச் சூழலுக்கு எழுதப்பட்ட பாடல் என்று பார்ப்பதோடு அன்றாடம் வாழ்க்கைச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் பலரும் ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தில்.இதனைப் பார்ப்பதன் மூலம் மனத்தின் சாந்திக்கு வழி வகுக்கலாம்.
இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவியல் மேலோங்குவதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஆத்திகம், நாத்திகம் எனும் பேதங்களைக் கடந்த ஓர் ஆன்மீக அறிவியலின் அவசியத்தைப் புரிய வைக்கிறார்.
மீண்டும் அடுத்த பாகத்தில்
சக்தி சக்திதாசன்