விமல் சொக்கநாதன் – ஒரு சகாப்தம்

0

சக்தி சக்திதாசன்

இன்று 24.08.2023 ஈழத்திலே தமிழ் ஊடகத்துறையின் அடையாளமாக விளங்கி லண்டனிலே மெளனமித்த ஒரு ஆளுமையின் சகாப்தம் ஒரு சரித்திரமானது.

இன்று காலை தெற்கு லண்டனில் உள்ள அடிங்டன் எனும் இடத்திலுள்ள அடிங்டன் பலஸ் எனும் பிரபல்யமான மண்டபத்தில் கார்கள் நிறுத்த முடியாத அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தார்கள்.

அன்றும், இன்றும் தங்கள் செவிகளில் கணீரென்று ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்களின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிப் பயண வழிய்னுப்புதலுக்காக.

ஈழத்தின் வடபுலத்தில் கொக்குவில் எனும் இடத்தில் தம்பு சொக்கநாதன் என்பவருக்கும் விமலாதேவி என்பவருக்கும் 1944 யூன் மாதம் 30ம் தேதி பிறந்தார்.

கலையாற்றல் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவ்ராகையால் இள வயதிலேயே இலங்கை தமிழ் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும், மேடை நாடகங்களிலும் நடித்த அனுபவம் உள்ளவர்.

இளவயதில் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் தனது கல்வியை முடித்து இலங்கை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.

சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பத்மா என்பவரை காதலித்து மணமுடித்தார்.

இவரின் அசலான உச்சரிப்புடன் கூடிய வெண்கலக்குரல், சட்டக்கல்லூரியில் மாணவராக இருந்த போதே இலங்கை தமிழ் ஒலிபரப்பு சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியை ஈட்டிக் கொடுத்தது.

திருமணமாகிய பின்பு 1975ம் ஆண்டு குடும்ப சகிதமாக இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார்.

இங்கிலாந்திலே சட்ட வல்லுனராக பணியாற்றிய இவரின் அளப்பரிய ஆற்றல் பி.பி.ஸி தமிழோசை இவரைத்தேடி தன்னோடு இணைத்துக் கொள்ள வைத்தது.

ஈழத்து தமிழ் வானொலி சேவையின் மூலம் ஈழத்தமிழர்கள் இதயத்தில் மட்டுமின்றி தமிழக நேயர்களின் நெஞ்சத்திலும் இடம் பிடித்தவரின் குரல் பி.பி.ஸி தமிழோசையின் மூலம் உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் செவிவழி நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

இங்கிலாந்தில் ஆரம்பித்த இவரது எழுத்து வன்மை வானோலிக்கலை மட்டுமின்றி இவர் ஒரு பன்முக வித்தகர் என்பதையும் பறைசாற்றி நின்றது.

மேடை நாடகம் மட்டுமின்றி ஈழத்து தமிழ்த் திரைப்படமான “நான் உங்கள் தோழன்” எனும் படத்தின் மூலம் திரைப்பட நடிப்புலகத்தில் கால் பதித்தார்.

லண்டனில் அண்ணன் ஈழநாடு புகழ் ராஜகோபால் அண்ணன் அவர்களின் ” புதினம் ” பத்திரிகையில் ” விமலின் பக்கம் ” எனும் தலைப்பில் மாதந்தோறும் ஐனரஞ்சகமான படைப்புகளின் மூலம் வாசகர்களைக் கவர்ந்தார்.

ஈழத்து முன்னனி தமிழிதழ் வீரகேசரியின் வாரமலரில் ” இங்கிலாந்திலிருந்து விமல் ” எனும் தலைப்பில் வாரந்தோறும் சுவையான செய்திகளுடன் வலம் வந்தார்.

2023 ஆகஸ்ட் 1ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்த அண்ணன் விமலின் கடைசிப் பதிவு வீரகேசரி 2023 ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவந்த வாரமலரில் இடம் பெற்றிருந்தது.

இது அண்ணன் விமல் கடைசி மூச்சு இருக்கும்வரை ஒரு கலைஞனாக வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.

அண்ணன் விமல் தனது வானொலி அனுபவங்களைத் திரட்டி அக்கலையின் நுணுக்கங்களை வளரும் வானொலிக் கலையில் ஆர்வமுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் ” வானொலிக்கலை ” எனும் நூலை 2007ம் ஆண்டு சென்னையில் காந்தளகம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து லண்டன் புதினம் பத்திரிகையில் அவர் எழுதிய விமலின் பக்கங்கள் எனும் படைப்பை அதே பெயரில் புதினம் பத்திரிகை வெளியீடாக சென்னையில் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து வீரகேசரி வாரமலரில் வெளிவந்த அவர் படைப்புகளை ” லண்டனிலிருந்து விமல் ” எனும் பெயரில் நூலாக்கி சமீபத்தில் ஈழம் சென்று யாழ்நகர், மற்றும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வந்திருந்தார்.

இதே நூலை வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் கனடா, அவுஸ்திரேலியா நகரிலும் டிசம்பர் 10ம் தேதி லண்டன் நகரிலும் வெளியிட தீர்மானித்திருந்தார்.

அண்ணன் விமல் அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறையை உலுக்கியுள்ளது.

அண்ணனுடன் சமகாலத்தில் இலங்கை தமிழ் ஒலிபரப்புச் சேவையில் மற்றொரு உன்னத ஆளுமையாக திகழ்ந்த இன்றும் தமிழ் ஊடகத்துறையில் புகழேந்திக் கொண்டிருக்கும் அண்ணன் அப்துல் ஹமீது அவர்களின் துயர் பகிர்வை இன்றைய நிகழ்வில் அவர் குரலிலேயே கேட்டபோது அவருள்ளத்து வேதனையை உணரக்கூடியதாக இருந்தது.

அண்ணன் விமல் அவர்களாலும், அண்ணன் அப்துல் ஹமீது அவர்களாலும் செதுக்கப்பட்டு இன்றும் வெண்கலக்குரலோச்சிக் கொண்டிருக்கும் எஸ்.கே.ராஜன் அவர்களின் துயர் பகிர்வு அண்ணன் விமலின் பல பெருமைகளை அள்ளித்தந்தது.

அண்ணனுடன் பல நிகழ்வுகளிலும், தொலைபேசியிலும் உரையாடிய தருணங்களை மறக்க முடியாது.

தான் எத்தனை பெரிய கலைஞனாக இருந்தாலும் அடுத்தவர்களை அணைத்துப் பாராட்டும் அண்ணனின் பண்பின் ஆழத்தை நேரடியாக அனுபவித்தவன் நான்.

எனது எழுத்துகளைச் செதுக்குவதில் அண்ணன் பங்கெடுத்தார்.

புதினம் பத்திரிகையில் அண்ணனோடு அவர் எழுதும் காலத்தில் எனக்கும் அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைத்தது எனது பாக்கியம்.

எனது ஆக்கங்களைப் படித்து தட்டிக் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.

எனது முதலாவது நூலான ” தமிழ்ப்பூங்காவில் வண்ண மலர்கள் ” வெளியீட்டு விழாவில் கலந்து அண்ணன் சிறப்பித்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

வேறோர் முக்கியமான நிகழ்வு இருந்தும் எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவ்விழாவுக்கு வருகை தந்த அண்ணனின் பெருந்தன்மைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவன்.

எனது சிறுகதைத் தொகுப்பைப் படித்த அண்ணன் விமல் அதிலே ஒரு கதை தன்னை மிகவும் பாதித்தாகக் கூறி அக்கதையை சகோதரி யோகா தில்லைநாதன் அவர்களின் வானொலியில் இசையும், கதையுமாக்கி தானே ஒலிபரப்பியது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லுவேன்.

இதுவரை அண்ணனின் கலை வாழ்க்கையைப் பார்த்தோம்.

அதற்கு அப்பால் ஒரு திறமையான சட்டத்தரணியாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக,உறவினனாக, நண்பனாக, சமுதாயத் தூணாக அண்ணன் வகித்த பாத்திரங்கள் அத்தனையும் வியந்திடப் பண்ணும்.

தமிழன்னை தன் புகழ்பாட பல மைந்தர்களை ஈவதுண்டு அவர்களுள் சிலரை அவையில் முன்னிருப்பச் செய்வாள். அத்தகையவர்களில் அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்கள் முன்னனியில் இருந்தார், இனியும் இருப்பார்.

அண்ணனின் ஆத்மசாந்திக்காய் அவரின் கும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் பிரார்த்திப்போம்.

ஓம் சாந்தி !

ஒரு ஆளுமை மிக்க குரல்
அவசரமாய் மெளனித்துக் கொண்டது !

அன்றெனது வாலிப வனப்பில்
ஈழத்து வானலைகளில்
வெண்கலமாய் ஒலித்தது
விமல் அண்ணனின் சிருங்கார
உச்சரிப்புக் கலந்த ஓங்கிய குரல்

இசையும், கதையுமென
இதயத்தின் ராகங்களை
இயல்பாகவே தட்டியெழுப்பி
வாலிப காலத்து உணர்வுகளில்
வசந்தமாய்க் கலந்தவர் விமலண்ணன்

ஈழத்தில் தொடங்கிய குரலோசை
இங்கிலாந்திலும் தொடர்ந்தது
இனியதோர் தமிழோசையாய்

தமிழர் நிகழ்வுகள் சிறக்க
தயக்கமின்றி ஒலித்தது
தங்கக்குரல் விமலண்ணா வழியாக
தாயகச் செய்திகளை விமலண்ணன்
தந்திடும் வகையே ஒரு தனிவகையே !

உடலை விட்டுங்கள் ஆன்மா
உயரப் பறந்தோடியிருக்கலாம்
தமிழ் உலகில் வாழும்வரை
தமிழர்கள் வாழும் இடமெல்லாம்
தங்கத்தமிழன் விமல் சொக்கநாதன்
தங்களின் குரலும் நினைவுகளும்
தமிழர் இதயங்களில் நிலைத்திருக்கும்

போய்வாருங்கள் அண்ணா !
ஓங்கி ஒலித்தவுங்கள் குரலுக்கும்
ஓயாமல் எழுதிய உங்கள் விரல்களுக்கும்
ஓய்வு தேவையென்று தானோ
அனைவர்க்கும் பொதுவான
அருளீயும் இறையுங்களை
தன்னோடு அழைத்துக் கொண்டானோ ?

ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையுடன்
அன்பர்கள்  இழப்பினை பகிர்ந்து
கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *