ஒரிசா பாலு மறைந்தார்

அண்ணாகண்ணன்
வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுனரான ஒரிசா பாலு (உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி) (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘நெய்தலோடு ஒரு பொழுது’ என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.
தமிழர் வரலாற்றைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என்ற அவர் குரல், தனித்த ஒற்றைக் குரல். வேறு எவருக்கும் இதைச் சொல்லும் துணிவும் வரலாற்றுப் பார்வையும் அனுபவமும் இருந்ததில்லை. கடலுக்கடியில் நீந்துவோருக்கு வழிகாட்டியாக, பாலு இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், மறைந்த குமரிக் கண்டத்தைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என அவர் துணிவுடன் கூறினார்.
ஆமையைப் பின்தொடர்ந்து தமிழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டான் என்ற கருத்துருவை அவர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். இது குறித்து நான் விமரிசித்து எழுதியிருக்கிறேன். எனினும் என் கருத்துகளை அவர் ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக்கொண்டார்.
உலகம் முழுதும் தமிழில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் விவரங்களைத் தேடித் திரட்டினார். இங்கெல்லாம் தமிழர்கள் சென்று வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காகக் கடுமையாக உழைத்தார். தமிழர் வரலாற்றைக் கற்பனைக் கதையாக இல்லாமல், தக்க சான்றுகளுடன் நிறுவ வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது.
பாலசுப்பிரமணியம் B+ என்றே அவர் பெயரை எப்போதும் எழுதி வந்தார். ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்டேன். B+ என்பது என் குருதி வகை. யாருக்கேனும் இந்தக் குருதி தேவையெனில் என்னை அணுகலாம். அவர்களுக்கு இது உடனே ஞாபகம் வர வேண்டும். அதற்காகவே என் பெயருடன் இதைச் சேர்த்து எழுதுகிறேன் என்றார். முதலெழுத்துகளை நாம் அத்தனைப் பேரும் எழுதும்போது, குருதி வகையை எழுதி, சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். மேலும், இது குருதிக் கொடை விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
நேற்று மாலை, அவருடன் பேஸ்புக் மெசெஞ்சரில் உரையாடினேன். எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்டேன். மாலை 4 – 6 வரலாம் என்றார். இன்று மாலை அவரைப் பார்க்கக் கிளம்பினேன். இடைவழியில் அவரை அழைத்தேன். 4.15க்கு அவர் மறைந்துவிட்டதாக அவர் மகன் தெரிவித்தார்.
ஒரிசா பாலுவுடன் அவரது அலைபுரளும் மனக்கடலும் ஓய்ந்தது. அவரது உந்திச் செலுத்தும் ஊக்கமும் அயராத உழைப்பும் பரபரக்கும் ஆர்வமும் துடிப்பும் கூடவே ஓய்ந்தன. அவரது ஏராளமான திட்டங்களுள் சிலவற்றைத் தக்கவர்கள் யாரேனும் எடுத்துச் செய்யலாம். அவர் அரூபமாகக் கூடவே நின்று உதவுவார்.
நற்பணிகள் பல புரிந்த நண்பர் ஒரிசா பாலுவின் ஆன்மா, அமைதி பெறுக.