குறளின் கதிர்களாய்… (471)

செண்பக ஜெகதீசன்
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
-திருக்குறள் -1042 (நல்குரவு)
புதுக் கவிதையில்…
வறுமை என்னும் பாவி
ஒருவனிடம்
வந்து சேர்ந்தால்
அவன்
வருபவர்க்கு ஈவதால் பெறும்
மறுமை இன்பமும்,
மண்ணில் தாமே அனுபவிக்க
ஏதுமின்மையால்
ஏற்படும்
இம்மை இன்பமும்
இல்லாமல் போகுமே…!
குறும்பாவில்…
வறுமையாம் பாவியொருவனிடம் வந்தால்
ஈகையால் பெறும் மறுமை இன்பமும், இல்லாமையால்
இம்மையின்பமும் இல்லாமல் போய்விடும்…!
மரபுக் கவிதையில்…
வறுமை என்னும் பாவியது
வந்து விட்டால் ஒருவனிடம்,
மறுமை இன்பம் பெறும்வழியாம்
மற்றோர்க்கு ஈய ஏதுமிலா
வெறுமை நிலையே வருவதுடன்
வேண்டு மட்டும் அனுபவிக்கும்
உறுதி குலையப் பொருளில்லா
உண்மை நிலைதான் இம்மையிலே…!
லிமரைக்கூ…
இன்பம் தந்திடும் மறுமை
இலாதுபோகும் ஈயாததால், இன்பமில்லை இம்மையிலும்
ஒருவனிடம் வந்தால் வறுமை…!
கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
வறும கொடியது,
மனுச வாழ்க்கயில
வறும கொடியது..
வறுமங்கிற பாவி
வந்திட்டா ஒருத்தங்கிட்ட
அடுத்தவங்களுக்குக் குடுக்கிறதுக்கு
ஒண்ணுமில்லாததால அவனுக்கு
மேல் ஒலக இன்பம் இல்ல,
ஓலகத்தில ஆண்டு அனுபவிக்க
எதுவும் இல்லாததால
இந்த
ஓலக இன்பமும்
இல்லாமப் போவுமே..
அதால
கொடியது கொடியது
வறும கொடியது,
மனுச வாழ்க்கயில
வறும கொடியது…!