குறளின் கதிர்களாய்… (470)
செண்பக ஜெகதீசன்
இரவார் இரப்பார்க்கு ஒன்றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
-திருக்குறள் -1035 (உழவு)
புதுக் கவிதையில்…
தம் கைகளால்
உழவுத் தொழில் செய்து
உணவு உண்ணும்
இயல்புடையோர்
இரவார் பிறரிடம் சென்று,
இரக்கத் தம்மிடம் வருவோர்க்கு
இல்லையெனச் சொல்லாமல்
ஈந்திடும் குணமுள்ளோர் அவரே…!
குறும்பாவில்…
தம்கையால் உழுதுண்டு வாழ்வோர்
பிறரிடம் சென்றே இரவார், தம்மிடம்
இரப்போர்க்கு இல்லையெனாது ஈவர்…!
மரபுக் கவிதையில்…
தமது கையால் உழுதுண்ணும்
தன்மை கொண்டோர் வாழ்வினிலே
தமக்கே வறுமை வந்தாலும்
தடுக்க இரவார் பிறரிடமே,
நமராய் எண்ணி இரந்திடவே
நாடி வருவோர்க்கு இலையெனாதே
சுமக்கும் அளவில் கொடுத்தனுப்பும்
சொந்தக் குணமாம் அவருக்கே…!
லிமரைக்கூ…
தம்கையால் உழுதே உண்பார்
தாழ்விலும் பிறரிடம் இரவார், இரப்போர்க்கு
இலையெனாது ஈந்திடும் பண்பார்…!
கிராமிய பாணியில்…
ஒசந்தது ஒசந்தது
தொழிலுல ஒசந்தது,
ஒலகத்துக்கு ஒணவுதருற
ஒழவுத்தொழிலே ஒசந்தது..
சொந்தக் கையால வயலுல
ஒழச்சிச் சாப்புடுற
கொணம் உள்ளவுங்க
ஒருநாளும் அடுதவங்ககிட்ட
எரந்து சாப்புடமாட்டாங்க,
அவுங்ககிட்ட வந்து
எரக்கிறவங்களுக்கு
இல்லண்ணு சொல்லாமக்
குடுத்தனுப்புற
கொணந்தான் அவுங்களுக்கு..
அதால
ஒசந்தது ஒசந்தது
தொழிலுல ஒசந்தது,
ஒலகத்துக்கு ஒணவுதருற
ஒழவுத்தொழிலே ஒசந்தது…!