Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    அண்ணாகண்ணன்

    வலது கையை முன்னே நீட்டி உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் பாணி. நாஜிக்கள், வாழ்க ஹிட்லர் என்று கூறியபடி, இதே போல் வலது கையை நீட்டி வணங்கினார்கள். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் இவ்வாறு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இது வெறுப்புணர்வைத் தூண்டும் செயலாகக் கருதப்படுகிறது.

    தமிழ்கூறு நல்லுலகில் ஹிட்லரின் தாக்கம் ஆழமானது. துரை வைகோவின் முட்டிப் பட்டை, மிக அண்மைக் காலச் சான்று. ஹிட்லர் பாணியில் சீமானும் நாம் தமிழர்களும் உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிட்லர் பேசுவது போலவே வீராவேசமாகச் சீமான் பேசுவதும் தற்செயலானது இல்லை. வைகோவும் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கின்றனர். பள்ளி நிகழ்ச்சிகளிலும் இதைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

    இவ்வாறு கைநீட்டி உறுதி ஏற்பதன் வரலாற்றுப் பின்னணி, பலருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான நாஜிக்கள், இவ்வாறு ஹிட்லரை வணங்கினார்கள். தங்கள் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றார்கள். 60 லட்சம் யூதர்களையும் யூதர் அல்லாத மேலும் 60 லட்சம் பேரையும் நாஜிக்கள் கொன்றுள்ளார்கள். சுமார் ஒன்றே கால் கோடிப் பேரைக் கொன்ற கொடுங்கோல் ஆட்சித் தலைவரைப் போற்றும் ஒரு குறியீடு இது.

    இந்தப் பின்னணி குறித்து இன்று பலரும் மறந்துவிட்டார்கள். உறுதிமொழி என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இது வந்துவிட்டது. நமது மரபுக்கு ஏற்ற வகையிலான சைகையை, உடல்மொழியை நாம் பின்பற்ற வேண்டும். நாம் சத்தியம் செய்யும்போது, கையடித்துச் சத்தியம் செய்வோம். ஆனால், இவ்வாறு கைநீட்டிச் செய்வதில்லை. ஒரு கையை நெஞ்சருகில் வைத்து, இன்னொரு கையை அதன் மேல் வைத்து, சத்தியம் செய்வது போன்று உறுதிமொழி ஏற்பது நம் மரபுக்கு, வழக்கத்திற்கும் ஏற்றது. அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் இதைப் பரிசீலித்துத் தகுந்த வழிகாட்ட வேண்டும்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 2

    பவள சங்கரி

    தில்லைவாழ் அந்தணர்

    தில்லைவாழ் அந்தணர் என்பது தனி நபர் எவரையும் குறிப்பதல்ல. தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகிற அத்தனைப் பேரையும் சேர்த்து தில்லைவாழ் அந்தணர் என்று நம்பியாரூரர் குறிப்பிடுகிறார். ஒரு சாதியில் பிறந்தவர் அந்தணர் அல்லர். அப்படியானால் அந்தணர் என்பவர் யார்?

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.

    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அந்தணத் தன்மை என்பது பிறப்பால் வருவது அன்று. வாழ்வு நெறியால் வருவது என்பர் பெரியோர். அதனாலேயே தமது திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகப் பெருமான்,

    அந்தணன் ஆவது காட்டி வந்தாண்டாய்

    ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

    என்று பாடியருளுகிறார். எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் சத்திய வாழ்வுடன், தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணித் தியாகச் சீலர்களாக, கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே அந்தணர் என்பது தமிழர்தம் நெறியாகும்.

    ஆரூரர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கும் பொருட்டு ஆராத காதலொடு திருக்கோவிலின் வாயிலில் நுழைந்தவர் அங்கு முன்புறம் அமைந்துள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார் பெருமக்கள் அனைவரும் கூடி இறைவனின் புகழ் பாடி மகிழ்ந்திருந்ததைப் பார்த்து பரவசம் எய்தியவர் இந்த அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அந்நாள் எந்நாளோ என்ற ஏக்கத்துடனேயே உள்ளே சென்றார். அடியவர்களின் பெருமையை, ‘ஆரூரா நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக’ என்கிறார் இறைவன். அடியவர்களின் பெருமையைப் புகழும் இறைவன், அவர்கள் உள்ளத்து ஒருமையால் உலகையே ஆள்பவர்கள் என்றும், இம்மை, மறுமை எனும் இரண்டையும் கடந்த இவர்கள் வீடு பேற்றைக்கூட வேண்டாம் என ஒதுக்கும் அளவிற்கு பலன் கருதாது பக்தி செலுத்தும், குறையேதுமிலாத உன்னதத் தொண்டர்கள். அத்தகைய அடியவர்களின் முன்னர் என் பெருமையும் சற்றுக் குறைவுதான். அந்த குற்றமற்ற அடியவர்களைச் சென்றடைந்து அவர்தம் பெருமையைப் பாடு என்று பணிக்கிறார். ஆண்டவனே அடியவர் பெருமையை,

    பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலாம் எம்மைப் பெற்றார்;

    ஒருமையால் உலகை வெல்வார்; ஊனமேல் ஒன்றும் இல்லார்;

    அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;

    இருமையுங் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்

    என்று புகழ்கிறார்.

    இவ்வாறு இறைவனாரே புகழ்கின்ற அந்த ஒப்பிலாத அடியவர்தம் புகழைப் பாடும் வல்லமையை இறைவனே தந்தருள வேண்டும் என்று உளமார வேண்டுகிறார். அப்போது புற்றிடம் கொண்ட பெருமானார், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க நம்பியாரூரரும்,

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

      திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

      இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

      விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    என்ற பாடலில் தொடங்கி பதினொரு பாடல்களில் குறிக்கப்பெற்ற 60 அடியார்களைப் பற்றியும், மூன்று தொகையடியார்கள் பற்றியும் பாடி அருள்கிறார். இதற்குத் திருத்தொண்டத் தொகை என்ற பெயராகும். அடுத்து நம்பி ஆரூரர் பாடிய முதல் அடி, முதல் அடியார் திருநீலகண்ட நாயனார் ஆவார். இறைவன் தில்லைவாழ் அந்தணர் என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தமையால் தில்லையில் தோன்றிய அடியவர் திருநீலகண்டரை முதலில் கூறுகிறார்.

     

    2. திருநீலகண்ட நாயனார் புராணம்

    திருநீலகண்ட நாயனார் - சாய் ...

    தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி

    தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று

    சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

    துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

     

    கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க

    ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை

    மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி

    விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

    அடிக்கடி ‘திருநீலகண்டம், திருநீலகண்டம்’ என்று கூறிக்கொண்டிருந்ததால் மக்கள் இந்த நாயனார் பெருமானாரை திருநீலகண்டர் என்றே அழைத்தனர். திருநீலகண்டம் எதைக்குறிக்கிறது என்றால், அனைவரும் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது அதனைத் தான் உண்ட சிவபெருமானாரின் கண்டம் கறுத்ததால் அன்பர்கள் திருநீலகண்டம் என்று போற்றினர். பிறர் துன்பத்தை ஏற்றுக்கொண்டு இன்பத்தைப் பிறர்க்குக் கொடு என்பதே இதன் குறியீடு.

    எதையும் துறத்தல் எளிது என்றாலும் இளமையிலேயே கொண்ட கொள்கைக்காகத் தியாகம் செய்த திருநீலகண்டர் புராணம் பற்றி முதலில் கூறப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய இவர் தம் வாழ்க்கையில் பொய் சொல்லல் என்பதே சிறிதுமின்றித் தரும நெறியில் வாழ்கின்றவர். இல்லறமே நல்லறமாகவும், சிவ பக்தியில் சிறந்தவருமாக வாழ்ந்து வந்த தொண்டர் இவர். தம் மரபுத்தொழிலான மட்கலங்களை வனைந்து விற்றுப் பிழைத்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வாழ்ந்து வந்தாலும் விதிவசத்தால் அவர் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் அவரை பக்குவப்படுத்தி மேன்மை நிலைக்கு உயர்த்தியுள்ளது.

    ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர் பெருமான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மக்கள் ஆசையால் துன்பக் கடலில் வீழ்கின்றனர். ஆசையால் வரும் துன்பங்கள் யாவும் ஆசை அறுக்க ஆனந்தமாகும் என்கிறார் திருமூலர். பெண்ணாசையைப் போன்றல்லாது மற்ற ஆசைகள் அறிஞர் பெருமக்களின் அறவுரைகளால் கட்டுக்குள் இருந்தாலும், சில நேரங்களில் பெண்ணாசையோ, துறவு நிலையில் இருப்பவர்களுக்கும்கூட எளிதாக நீங்கி விடுவதில்லை. உயிர்க்குலம் தோன்றியபோதே தோன்றியது இப்பெண்ணாசை. அதனைத் துறத்தல் எளிதன்று என்றாலும் அந்த ஆசையையே திருநீலகண்டம் என்ற இறைவனின் திருநாமத்திற்காக தம் இளமையையும் துறந்தவர் இந்நாயனார். தெய்வ நலமே ஆகச்சிறந்த நலம் என்று கருதி வாழ்ந்தவர். இல்லறத்தையும் செம்மையாகவே நடத்தி வாழ்ந்தார். அச்சமயத்தில்தான் நாயனார் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவத்தால் அமைதியான அவர் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.

    ஒருநாள் அவர் அவ்வூரில் ஒரு பரத்தையிடம் மையல் கொண்டு அவளிடம் சென்று வீட்டுக்குத் திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து கடுங்கோபமுற்றார். சேக்கிழார் பெருமான் அந்த அம்மையாரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்றும், திருமகளைப் போன்று பேரழகுப் பெட்டகம் என்றும் குறிக்கும் வகையில்,

    ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
    மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
    ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
    தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.

    என்று பாடுகிறார். இத்துணை அழகும், சிறந்த பண்பும் இருக்கும் மனைவியை விடுத்து ஒரு பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் ஒருவர் எங்கனம் நாயன்மார்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார் என்ற ஐயம் நம்மைப்போன்ற எளியோருக்குத் தோன்றுவது இயல்புதானே?

    அவமானத்திற்குரிய இச்செயலை செய்துவிட்டு வந்து நிற்கும் கணவனின் மீது மாளாதக் கோபம் கொண்டார் அம்மையார். நாளுக்கு நாள் பிரச்சனை நீண்டு கொண்டு வருகிறது. ஆனாலும் இல்வாழ்க்கைக்குரிய தன்னுடைய அத்தனைக் கடமைகளையும் தடையற நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் கணவனை மன்னிக்கவோ, அவரைத் தம்மை நெருங்கவோ அனுமதிக்கவோ தயாராக இல்லை அவர். இப்பிரச்சனையை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவர முயன்றார் திருநீலகண்டர். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு தனிமையானப் பொழுதில் தம் மனைவியாரைப் பல வகையிலும் சமாதானம் செய்ய முயன்றார். அம்மையாரின் கோபம் சற்றேனும் தணிந்தபாடில்லை. ஆனாலும் அவர் கட்டிய மனைவிதானே என்ற உரிமையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்று அவரை அணைக்க முற்படுகிறார். அதுவரை அமைதி காத்த அம்மையார் கோபத்தின் உச்சம் சென்று, ‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். சேக்கிழார் பெருமானின் கவிதையில்,

    மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
    பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
    வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
    ‘
    தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

    தம்முயிரினும் மேலாகக் கருதித் தாம் போற்றும் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற தம் மனைவியாரின் வார்த்தைகளைக் கேட்டவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதனை விளக்கும் சேக்கிழார் பெருமான்,

    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    பரமசிவனுடைய திருநீலகண்டத்தில் தாம் வைத்த அந்த அதீத பக்தி குன்றாவண்ணம் மனைவியாரைத் தொடாமல் நீங்கி விலகி நிற்கிறார். அதற்கும் மேலாக அவர் ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் திரு நீலகண்டர் தம் மனைவியை மட்டுமில்லாமல்  ஏனைய மற்றப் பெண்களையும் தான் மனத்தினாலும் நினைத்தலும் செய்வேனல்லேன் எனும் உறுதி பூண்டார். அதனைச் சிரமேற்கொண்டு காக்கவும் செய்தார்.    இதன் காரணம்கொண்டே சேக்கிழார் பெருமான் அதுகாறும் இல்லாத வகையில் அவரை, ‘பெரியவர்’ என்று விளித்துப் போற்றுகிறார்.

    இளமைப்பருவத்திலும் இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்துகொண்டு பல ஆண்டுகள் கடந்து அவர்களின் யெளவனம் நீங்கி, முதுமையும் நெருங்கியபோதும் அவர்கள் சத்திய வாழ்வையே மேற்கொண்டிருந்தனர். தளர்வொடு சாய்ந்தும் உற்றும் சிவபக்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள். இப்பெருமக்களின் சத்திய வாழ்வினை உலகறிய முடிவு செய்த கூத்தபிரான் தில்லையில் கூத்தாடுபவன் என்றாலும் அடியவர்களின் இல்லந்தோறும் சென்று அவர்தம் செவ்விய வாழ்வின் திறத்தை எடுத்துக்காட்ட அடியவர் உருவில் இல்லம் நோக்கி வருபவர் அன்றோ. வந்தவரை வணங்கி எதிர்கொண்டு வீட்டினுள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் இருத்தி, ஆகம விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, தாம் செய்ய வேண்டிய பணி யாது என்று பணிவன்புடன் கேட்க, அவரும் “தனக்கு வேறொப்பில்லாததும், தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதும், பொன்னிலும் இரத்தினத்திலும் செய்தவொன்றைக் காட்டிலும் சிறப்பாகக் காப்பாற்றப்படத்தக்கதுமாகிய ஒன்று என்று கூறி ஒரு திருவோட்டை அளித்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து தாம் கேட்கும்போது தர வேண்டும் என்கிறார். அதைக் கேட்ட அடியவர் அவரை வணங்கிவிட்டு அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டினுள் ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு திரும்பி வந்து அவரிடத்தில் விடைபெற்றுத் திரும்பினார்.

    நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் மீண்டும் திரும்பி வந்த அந்த சிவனடியார் நீலகண்டரிடம் கொடுத்த அந்த திருவோட்டைக் கேட்டு உடனே அதை எடுத்து வந்து கொடுக்கும்படியும் பணித்தார். நீலகண்டரும் அதை வைத்த இடத்திற்குச் சென்று தேடியவர் அதைக் காணாமல் திரும்ப வந்து சிவனடியாருக்கு என்ன விடையளிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றார்.

    சிவனடியாரோ உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, “நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் கடந்தும் வாராமல் நிற்கின்றாய்” என்று கேட்கிறார். நீலகண்டர் வந்து சிவனடியாரை வணங்கி, அடியார் பெருமகனார் அளித்த அந்தத் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. பழையதாகிய அந்தத் திருவோட்டை விட புதிதாக வேறொரு திருவோடு தருவேன், அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்றும் பணிந்து வணங்கி சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவனடியாரும் அவரைக் கோபத்துடன் பார்த்து, தனது மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாலும் வாங்க மாட்டேன் என்றும் தான் முன்னர் அவரிடத்தில் தந்த அந்த மண் ஓட்டையே கொண்டுவந்து தரவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    நீலகண்டரும் அடியவரிடம், அவர் அளித்த அந்த மண்ணோட்டை எங்கு தேடியும் காணவில்லை, வேறு நல்ல ஓடு தருகிறேன் என்று  மன்றாடிக் கேட்டும் உடன்பட மறுத்தால் தான் என்ன செய்ய இயலும் என்று கலங்கி நிற்கிறார்.

    ஆனால் அந்த சிவனடியாரோ சட்டென்று, அவரிடத்தில் கொடுத்த அந்த அடைக்கலப் பொருளைத் தாம் கவர்ந்துகொண்டு பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய ஓட்டை திரும்பப் பெறாமல் அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றும் உறுதியாக நிற்கிறார்.

    நீலகண்டரும் அடியவரின் பாதம் பணிந்து, எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுத்தால் தன்னால் என்ன செய்ய முடியும். வேறு எப்படி தான் களவாடவில்லை என்பதை அவருக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லையே என்று நொந்து போனார்.

    அப்போது அந்த சிவனடியாரும், நீலகண்டரிடம் அவருடைய அருமைப் புதல்வனை வைத்து குளத்தில் மூழ்கி தான் களவாடவில்லை என்று சத்தியம் செய்தால் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். அதற்கும் நீலகண்டர் தனக்கு புத்திரன் எவரும் இல்லையே என்று கூறி வருந்துகிறார். அப்படியானால்  தன் மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கிறார் அந்த சிவனடியார். அப்போது நீலகண்டர், தானும் தன் மனைவியும் தங்களுக்குள்ளிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது என்பதால் தான் மட்டும் குளத்தில் முழுகிச் சத்தியம் பண்ணித் தருவதாகக் கூறுகிறார். அதற்குச் சிவனடியாரும், தான் முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் தன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் செய்து தராமலும், மனம் வேதனைப்படச் செய்திருப்பதால் தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையில் இவ்விசயத்தைக் குறித்துப் பேசப் போவதாகச் சொல்லி அவரையும் உடன் வரப்பணிக்கிறார். அந்தச் சபைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு திருநீலகண்ட நாயனாரும் அவருக்குப் பின்னே செல்கிறார்.

    சிவனடியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தரவும் இல்லை. அதனை இழந்திருப்பின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தரவுமில்லை” என்றார். உடனே பிராமணர்கள் திருநீலகண்டரிடம் நடந்த சமாசாரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அவரும் சிவனடியார் தந்த திருவோடு தான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது என்றும் தான் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றார். அதற்குப் பிராமணர்கள், “ஒரு வேளை இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து கொடுத்தலே நீதி” என்றார்கள்.

    நீலகண்டரும் அதைக்கேட்டு, தாம் தம் மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக் குறித்துப் பேச முடியாதவராகி,  அவர் கேட்பதற்குத் தகுந்தபடி குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து தரும்படிச் சொல்லி, சிவனடியாரோடு தம்முடைய வீட்டுக்குச் சென்று, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திற்குச்  சென்றவர், ஒரு மூங்கிற்தண்டை எடுத்து ஒருபுறத்தில் மனைவியார் பிடிக்க, மறுப்புறத்தில் தாம் பிடித்துக்கொண்டு இறங்கினார். அதைக் கண்ட சிவனடியாரும், “உன் மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு” என்று பணிக்க, திருநீலகண்ட நாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளில் தாம் தவறான பரத்தையிடம் சென்றதையும், அதனால் உண்டாகிய சபதமும் அதன்படி தவறாமல் நடந்து வருதலும் தெளிவாகச் சொல்லி முழுகினார்.

    ‘மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்’ என்பார் பட்டினத்தார். அடியவர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் அதனை உலகறியச் செய்ய அனைத்தையும் சொல்ல வைத்து ஆட்கொண்டருளினார்.

    அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. முழுகிக் கரையிலேறிய திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும் மூப்புப்பருவம் முற்றாக நீங்கி இளைமைப் பொலிவோடும், அழகோடும் எழுந்தார்கள்.  தேவர்களும் முனிவர்களும் அவர்கள்மீது ஆகாயத்தினின்றும் பூமாரிப் பொழிந்து அவரது பெருமையை உணரச் செய்தார்கள். எம்பெருமான் பிராட்டியாரோடு விடையின்மேல் தோன்றி என்றும் இவ்விளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இனிது இருப்பீராக என்று கூறியருளினர். பக்தி வலிமையையுடைய திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.

    திருச்சிற்றம்பலம்

     

    திருநீலகண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிதானதொன்று அல்ல. அது ஆண், பெண் என இரு பாலருக்கும் சமமான ஒன்று என்பதை தெளிவுற விளக்கும் புராணம் என்றே கொள்ள முடிகிறது. அந்தக் கற்பை கேள்விக்குறியாக்குவதே காமம் என்பதாம். அதாவது காமம் என்பது பிறவிப் பிணியைத் தீர்த்து இறைவனை அடைவதற்குத் தடையாக உள்ள ஒன்று. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்ணல் முதலிய பல்வேறு பாவங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமைவதோடு, எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அக்காமமே ஆன்மாக்களை நரகங்களில் எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. மேலிடம், பொழுது, குணம், குலம், ஒழுக்கம் போன்றனைத்தும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. பல நேரங்களில் கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தினில் தலைப்படினும், அவ்வுள்ளம் இடம், பொருள், ஏவல் என எதையும் ஆராய விடாமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் தெய்வ நலமே சிறந்த நலம் என்றும் இல்லறத்தில் இனிதே வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், அழகிற் சிறந்த தம்முடைய மனைவி இருப்பவும் தம் மனத்தினில் தலைப்பட்ட காம மிகுதியினால் பரத்தையைச் சேர்ந்தார். மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைச் சமாதானம் செய்ய முயன்றபொழுது அவர், “நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்ட உடனே அவரைத் தீண்டாமல் நீங்கி விடுகிறார். அதுமட்டுமின்றி அம்மையார் தன்னை மற்றும் ஒருமையில் சொல்லாமல், ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் தம் மனைவியாகிய இவரை மட்டுமல்லாமல் மற்றைய பெண்களையும் மனத்தினாலும் நினைத்தலும் செய்யேன் என்று உறுதி கொள்கிறார். அந்த வகையில் நீலகண்டருடைய மனதில் காமம் தலைப்பட்டபோதும் சிவபக்தி அதனினும் அதிகமாகத் தலைப்பட்டிருந்த  காரணத்தால் அவருடைய சிவபக்தியானது பின் ஒருபோதும் இவர் மனதில் காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தாண்டுகொண்டதும் ஈண்டு உணரத்தக்கது.

    இந்திரன் அகலிகை மீதும், சந்திரன் தாரையைக் கண்டும் மையல் கொண்டனர். மாபெரும் முனிவர் விசுவாமித்திரர் மேனகையிடம் மோகம் கொண்டார். ஆனால் திருநீலகண்டரோ கட்டிய மனைவியை உடன் வைத்தும் பெண்ணாசையைத் துறந்தார்.

    காமம் என்ற ஒன்று மனதில் சிறிதளவேனும் எழவிடாமல் அடக்கல் வேண்டும் என்பர் பெரியோர். அங்கனம் சிறிது எழுந்தாலும் சிவனடியாரோடு கலத்தல், சிவசாத்திரம் பற்றிச் சிந்தித்தல், சிவநாமம் கேட்டல் போன்ற நற்செய்கைகளால் அதுபற்றிய சிந்தையே எழாவண்ணம்  மனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் சாத்தியமாகும் என்பது உணரத்தக்கது.

    அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்

    வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்-வெம்பிக்

    கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம

    மவற்றினு மஞ்சப் படும்.

    என்கிறது நாலடியார்.

     

    திருச்சிற்றம்பலம்.

    தொடருவோம்

    Share
  • கவியரசரின் பாடல்களின் ஆன்மீகக் கோணம் – 12

    கவியரசரின் பாடல்களின் ஆன்மீகக் கோணம் – 12

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் ஒரு ஆன்மீக சித்தரோ எனும் உணர்வு எமது உள்ளத்தில் அவ்வப்போது ஏற்ப்டும் வகையில் அவரது பாடல்கள் அமைந்து விடுவதுண்டு.

    ஆன்மீகம் என்பது அவருக்குப் புறக்கணிக்கப்படும் மதவாதம் அல்ல.

    அது உணர்வின், அனுபவத்தின், சிந்தனையின் வழியாக உள்ளார்ந்த உண்மையைத் தேடும் பயணம்.

    பாடல்களில் ஆன்மீகப் புதையல்கள் பல உண்டு.

    “எதிர்காலம்” திரைப்பட பாடலில், “உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல, என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல” எனும் வரிகள், வாழ்வின் யதார்த்தம் மற்றும் தர்மத்தின் ஆழம் பற்றி பேசுகின்றன.

    நாத்திகத்திலிருந்து ஆத்திகம்: தனது வாழ்க்கையின் முற்பகுதியில் நாத்திகராக இருந்தவர்,பின்னர் காஞ்சிப் பெரியவரின் அருளுடன் ஆத்திகராக மாறினார்.

    ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூல்: இந்த நூலில், பாமர மக்களுக்காக ஆன்மீகத்தை எளிய தமிழில் விளக்கியுள்ளார்.

    இது அனுபவத்தின் வழியாக ஆன்மீகத்தை அணுகும் ஒரு முயற்சி.

    கண்ணனும் காதலும் ஒரு கலந்த கலை என்பதனை கவியரசர் பல பாடல்கள் மூலம் பறைசாற்றியுள்ளார்.

    காதல் பாடல்களிலும் கண்ணன் ஒரு உள்ளார்ந்த காதலனாக வருகிறார்.

    இது பக்தி – காதல் – ஆன்மீகம் என்பவற்றின் மூன்றுமையும் ஒன்றாக்கும் கண்ணதாசனின் தனிச்சிறப்பு.

    “காதலிக்க நேரமில்லை” என்ற பாடலில், கண்ணனை காதலனாக வர்ணிக்கிறார்.

    “மனதில் உறுதிப்பாடு வேண்டும்” போன்ற பாடல்களில், கண்ணன் வழிகாட்டியாக வருகிறார்.

    கவியரசர் கண்ணதாசனின் தனிச்சிறப்பே ஆன்மீக அறிவியலின் தனிச்சிறப்பு.

    கண்ணதாசனின் ஆன்மீகம் என்பது,
    மதவாதம் அல்ல, மனவாதம்.
    புத்திசாலித்தனமல்ல, புலனுணர்வு.
    பயப்படுத்தும் தெய்வம் அல்ல, பேசும் நண்பன்.

    அவர் பாடல்களில், தர்மம், ஆசை, பாவம், வாழ்க்கையின் சுழற்சி ஆகியவை பழமொழி போல நெஞ்சில் பதியும் வகையில் வகுத்துள்ளார்.

    “ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள்”.

    ஆன்மிக கோணமும் கண்ணபிரானும்
    கவியரசர் பாடல்களில் கண்ணபிரானை கொண்டு வருவது ஒரு பாரம்பரிய புனித உந்துதல்.

    “லட்சுமி கல்யாணம்” படத்தில்:

    “பிருந்தாவனத்துக்கு” என்ற பாடலை எடுப்போம்

    பி. சுசீலா அம்மாவின் பாடல்.

    இது கண்ணபிரானின் பிருந்தாவன லீலைகளை நினைவூட்டும் பாடல்.

    ஆனந்தம், பக்தி, மற்றும் பாசம் கலந்து ஒரு பக்தி கவிதை போல அமைந்துள்ளது.

    “பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! – என்
    பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
    கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? – என்
    கேள்விக்கு பதில் என்ன கேலியோ?”

    கவியரசர் கண்ணதாசன் இங்கு பக்தியின் உச்சநிலையை மிக நுட்பமாகவும், ஆன்மீக சிந்தனையின் ஆழத்துடன்வும் வெளிப்படுத்துகிறார்.

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல; ஒரு ஆன்மாவின் அழைப்பு, ஒரு பாவியின் பரிதாபம், ஒரு பக்தனின் புலம்பல்.

    இந்த வரிகளில், கண்ணதாசன்
    பிருந்தாவனம் என்ற இடத்தை ஆன்மீக மையமாக எடுத்துக்கொள்கிறார்.

    அது கண்ணனின் வாசஸ்தலம், பக்தியின் புனித நிலம்.

    “நான் ஒரு பாவியோ?” என்ற கேள்வி, தன்னைத் தாண்டி ஆன்மீக சுயவிமர்சனத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    “பதில் என்ன கேலியோ?” என்பது கண்ணனின் லீலைகளையும், மௌன பதில்களையும் குறிக்கிறது.

    கேலியாக பதிலளிக்கும் கண்ணன், பாவத்தையும், பக்தியையும் ஒரே பார்வையில் பார்க்கும் தெய்வீக சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.

    கவியரசரின் கண்ணன்
    தண்டிப்பவன் அல்ல, தாங்குபவன்.
    தெய்வம் அல்ல, தோழன்.
    பாவத்தைப் பார்த்து வெறுப்பவன் அல்ல, பாவியைக் கேட்டு சிரிப்பவன்.

    இது பக்தி – பாவம் – பரிசுத்தம் என்ற மூன்றின் இடையே உள்ள ஆன்மீக உரையாடல்.

    கண்ணதாசன், பாவம் என்ற உணர்வை தண்டனையின் பயமாக அல்ல, தெய்வத்தின் அருளுக்கான வாய்ப்பாக பார்க்கிறார்.

    என் பார்வையில்…
    இந்த பாடல், உ
    இலக்கிய நோக்குகளுக்கு மிகச் சிறந்த ஆதாரம்.

    இங்கு:
    பக்தியின் மொழி காதலின் மொழியைப் போலவே உணர்வுமிக்கது.
    பாவம் என்பது தர்மத்தின் எதிரி அல்ல, தெய்வத்தின் அருள் பெறும் வாய்ப்பு.
    கேலியோ? என்ற வார்த்தை, கண்ணனின் லீலையை மட்டுமல்ல, பக்தியின் சிரிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    சரி இனி அடுத்த வரிகளைப் பார்ப்போமா ?

    கீதையில் உன் குரல் கேட்டேனே! – என்
    கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
    பாதையில் உன் துணை வரவில்லையே!
    பகவான் திருவருள் தரவில்லையே!”

    இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் பரிதாபமும், தெய்வத்தின் மௌனமும், வாழ்க்கையின் சிக்கல்களிலும் கண்ணனின் அருளைத் தேடும் மனதின் அழைப்பும் மிக நுட்பமாக வெளிப்படுகின்றன.

    ஆன்மீகக் கோணத்தில் கேட்கும் குரலும், கிடைக்காத அருளும்

    வரி வரியாகப் பார்த்தால்

    – “கீதையில் உன் குரல் கேட்டேனே!”

    பகவத்கீதை என்பது தர்மத்தின் உச்சபாடம்.

    இங்கு, கவிஞர் தெய்வத்தின் வாக்கியங்களை கேட்டுள்ளார் ஆனால், அவை வாழ்க்கையில் செயல்படுவதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    “கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!”

    தெய்வத்தின் தரிசனம் என்பது பக்தியின் உச்சநிலை.

    ஆனால், அந்த தரிசனம் வாழ்க்கையின் சிக்கல்களில் துணையாக வரவில்லை என்பதே பின்வரும் வரிகளின் சோகமூட்டம்.

    “பாதையில் உன் துணை வரவில்லையே!”

    பக்தி என்பது துணை தேடல். இங்கு, தெய்வம் வழிகாட்டியாக இல்லாதது ஒரு ஆன்மீக ஏமாற்றம்.

    “பகவான் திருவருள் தரவில்லையே!”

    அருள் என்பது பக்தியின் பரிசு. ஆனால், அருள் கிடைக்காதது, பாவியின் புலம்பலாக வெளிப்படுகிறது.

    –

    இவை கண்ணதாசனின் பார்வையில்: பக்தியின் சிக்கலான உணர்வுகள்

    இங்கு, கவியரசர்:
    பக்தியின் உணர்வுகளை மௌனமான தெய்வத்தின் எதிராக புலம்பலாக வெளிப்படுத்துகிறார்.
    தெய்வத்தின் தரிசனமும், வாக்கும் இருந்தபோதிலும், அருள் இல்லாதது என்பது ஆன்மீக சிக்கல்.
    இது பாவம் – பக்தி – பரிசுத்தம் என்ற மூன்றின் இடையே உள்ள மனதின் போராட்டம்.

    இதெயே என் பார்வையில் , பாமரனாக

    இந்த வரிகள், இலக்கிய நோக்குகளுக்கு ஒரு ஆழமான சிந்தனைக் களமாக அமையும்.

    இங்கு:
    பகவத்கீதையின் வாக்கியங்கள் வாழ்க்கையில் எப்படி செயல்படுகின்றன? என்பதற்கான பக்தியின் கேள்வி.
    தெய்வத்தின் தரிசனம் என்பது அருள் பெறும் உத்தரவாதமல்ல என்பதற்கான ஆன்மீக உண்மை.
    பாதையில் துணை இல்லாதது, பகவானின் மௌனம், பக்தியின் சோகமூட்டம்.

    இவை அனைத்தும் பாடலின் உள்ளார்ந்த அழுத்தம்.

    சரி இனி அடுத்த வரிகளுக்குள் நுழைவோமா ?

    “குங்குமம் அணிந்தால் உன் தேவி! – தன்
    கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
    சங்கமம் என்பது எனக்கில்லையோ? – அந்த
    மங்கல மரபுகள் உனக்கில்லையோ?”

    இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் காதல் புலம்பலையும், தர்மத்தின் கேள்வியையும், தெய்வத்தின் மௌனத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன.

    இவை பக்தியின் உரிமை உணர்வும், தெய்வத்தின் மறைபாடும் கொண்ட ஒரு ஆழமான உரையாடல்.

    ஆன்மீகக் கோணத்தில் தர்மம், திருமணம், தெய்வத்தின் மௌனம்

    வரி வரியாகப் பார்த்தால்

    – “குங்குமம் அணிந்தால் உன் தேவி!”

    குங்குமம் என்பது திருமணத்தின் சின்னம். இங்கு, தேவி (ருக்மிணி, சத்யபாமா) கண்ணனின் தர்மபத்னியாக குங்குமம் அணிந்திருப்பதைப் பக்தன் நினைவுகூர்கிறார்.

    “தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!”

    பாஞ்சாலி (திரௌபதி) தனது துயரத்தின் முடிவில் கூந்தலை முடித்தாள் .இது தர்மத்தின் வெற்றியும், கண்ணனின் அருளும் குறிக்கும்.

    “சங்கமம் என்பது எனக்கில்லையோ?”

    சங்கமம் என்பது பகவானுடன் ஆன்மீக இணைப்பு. இங்கு, பக்தன் தன்னைத் தாண்டி தெய்வத்துடன் இணைவதற்கான உரிமையை கேட்கிறார்.

    “மங்கல மரபுகள் உனக்கில்லையோ?”

    மங்கல மரபுகள் என்பது திருமண தர்மம், பக்தியின் பரிசு. இங்கு, தெய்வம் பக்தனுக்கு அருள் தர மறுக்கிறதா? என்ற புலம்பல்.

    இதைக் கண்ணதாசனின் பார்வையில் பார்த்தால்
    பக்தியின் உரிமை உணர்வு

    கவியரசர் இங்கு,
    பகவானின் திருமண வாழ்க்கையை ஒரு பக்தன் தனது தனிமையுடன் ஒப்பிடுகிறார்.
    பாஞ்சாலியின் கூந்தல் முடிதல் என்பது தர்மத்தின் வெற்றி. ஆனால், பக்தனுக்கு அந்த வெற்றி ஏன் கிடைக்கவில்லை? என்பது ஆன்மீக கேள்வி.
    சங்கமம் என்பது பக்தியின் உச்சநிலை. ஆனால், அது தெய்வத்தின் மரபில் இல்லையா? என்ற பக்தியின் உரிமை உணர்வு.

    இதை நான் இப்படியும் பார்க்கிறேன் ,

    இந்த வரிகள், இலக்கிய நோக்குகளுக்கு ஒரு பக்தி – தர்மம் – தெய்வம் என்ற மூன்றின் உரையாடலுக்கான களமாக அமையும்.

    இங்கு:
    பகவானின் திருமண மரபுகள் பக்தனின் ஆன்மீக ஏக்கத்துடன் ஒப்பிடப்படுகின்றன.
    பாஞ்சாலியின் கூந்தல் என்பது தர்மத்தின் முடிவு, ஆனால் பக்தனின் பாதை இன்னும் முடிவடையவில்லை.
    சங்கமம் என்பது பக்தியின் பரிசு, ஆனால் அருள் கிடைக்காதது, தெய்வத்தின் மௌனமாக வெளிப்படுகிறது.

    சரி இனி நிறைவான வரிகளைப் பார்ப்போமா ?

    “கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
    இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
    கண்ணனின் மனமும் கல் மனமோ
    எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ?”

    இந்த வரிகளில், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீகக் கோணத்தில், பக்தியின் புலம்பலும், தெய்வத்தின் மௌனமும், தர்மத்தின் சிக்கல்களும் மிக ஆழமாக வெளிப்படுகின்றன.

    இவை பக்தியின் உரிமை உணர்வும், தெய்வத்தின் பதில் இல்லாமையும் கொண்ட மனதின் உரையாடல்.

    ஆன்மீகக் கோணத்தில் கண்ணீர், கல் மனம், சம்மதம்

    வரி வரியாகப் பார்த்தால்

    “கங்கையின் வெள்ளம் தண்ணீரோ”

    கங்கை என்பது புனிதம், பரிசுத்தம், தெய்வ அருள். ஆனால் இங்கு, அதன் வெள்ளம் உணர்வற்றதா? என்ற கேள்வி எழுகிறது.

    “இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ”

    கன்னியர்கள் விடும் கண்ணீர் என்பது தர்மம் மீறப்பட்ட பெண்களின் துயரம்.

    இங்கு, தெய்வ அருள் என்பது உணர்வற்றதா, அல்லது அந்த கண்ணீரின் வடிவமா? என்ற ஆன்மீக சிந்தனை.

    “கண்ணனின் மனமும் கல் மனமோ”

    கண்ணன் என்பது அருள், கருணை, லீலை. ஆனால் இங்கு, அவர் மனம் கல்லா? என்ற பக்தியின் புலம்பல்.

    “எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ?”

    மன்னன் என்பது தெய்வத்தின் தர்மபாதி. இங்கு, தர்மம் மீறப்பட்டதற்கும், துயரங்களுக்கும் தெய்வம் சம்மதிக்கிறதா? என்ற ஆழமான கேள்வி.

    இதை கண்ணதாசனின் பார்வையில் பார்த்தால்
    பக்தியின் சிக்கலான உரிமை

    கவியரசர் இங்கு:
    தெய்வத்தின் அருள் என்பது புனிதம் மட்டுமல்ல, உணர்வும் இருக்க வேண்டும் என்பதைக் கேட்கிறார்.
    பெண்களின் கண்ணீர் என்பது தர்மத்தின் மீறல். அதற்கு தெய்வம் பதிலளிக்க வேண்டுமென்று பக்தன் வலியுறுத்துகிறார்.
    கண்ணன் என்பது கருணையின் உருவம். ஆனால், அருள் இல்லாத போது, அவர் மனம் கல்லா? என்ற பக்தியின் சோகமூட்டம்.
    தெய்வ சம்மதம் என்பது தர்மத்தின் ஒப்புதல். இங்கு, அது உணர்வற்றதா? என்ற ஆன்மீக சிந்தனை.

    இதையே நான் பார்க்கையில்.

    இந்த வரிகள்,
    இலக்கிய நோக்குகளுக்கு ஒரு பக்தி – தர்மம் – தெய்வ பதில் என்ற மூன்றின் உரையாடலுக்கான உச்சநிலை.

    இங்கு:
    புனிதம் என்பது உணர்வற்ற வெள்ளமா, அல்லது உணர்வுள்ள கண்ணீரா?தெய்வத்தின் மௌனம் என்பது பக்தியின் சோகமூட்டம்.
    தர்மம் என்பது அருள் தரும் பதில் அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    கவியரசர் கண்ணதாசன் எனும் ஆன்மீக ஆழியின் கரையிலிருந்து, நாங்கள் ஒரு வாளிக்குள் நீர் அள்ளினோம்.

    அந்த நீரில் பக்தியின் நுரையும், பாவத்தின் பசுமையும், தர்மத்தின் ஒளியும், தெய்வத்தின் மௌனமும் கலந்திருந்தன.

    அவரது பாடல்களில் ஒவ்வொரு வரியும், ஒரு உளவியல் சுழற்சி,

    ஒரு ஆன்மீக சிந்தனை, ஒரு பக்தியின் உரிமை.

    நாம் பார்த்தது ஒரு புலம்பலின் அழகு, ஒரு கேள்வியின் கருணை, ஒரு தெய்வத்தின் நெருக்கம்.

    இது ஒரு முடிவு அல்ல .அவர் பாடல்களின் புனித பாதையில் நம்மை அழைத்துச் செல்லும் அடுத்த படி.

    அந்த பாதையில், பாடல்களும் பிரார்த்தனைகளும் ஒன்றாக ஒலிக்க, நம்மால் முடிந்த அளவிற்கு அர்த்தம் தேடி, அருள் நாடி, அழகு காணும் பயணம் தொடரும்.

    Share
  • இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    அண்ணாகண்ணன்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    ஒரு மகத்தான ஆளுமையுடன் இவரை ஒப்பிடுவது அணுவளவும் பொருந்தாது என்றாலும் ஒரே ஒரு மனநிலைக்காக இந்த ஒப்பீடு.

    காங்கிரஸ் கட்சியில் இராஜாஜி இருந்தபோது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் உள்துறை அமைச்சர் என அதி உயர் பதவிகள் பலவற்றை வகித்தார். பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காங்கிரசிலிருந்து விலகினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967 தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகத் தலையெடுக்கவே இல்லை. ஒரே ஒரு காய்நகர்த்தலில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தையே மாற்றினார் இராஜாஜி.

    அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறைகள் இருந்தார். துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய வலது கரமாக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தீய சக்தி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவரின் மகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்துள்ளார். “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று வேறு கூறியுள்ளார். தன்னை மதிக்காத அதிமுக, பாஜக கட்சிகளுக்குப் பாடம் புகட்ட, தி.மு.க. அணியில் அவர் இணையக்கூடும். தேர்தல் பரப்புரையில் திமுகவுக்காக ஓ.பன்னீர்செல்வம் வாக்குக் கேட்பது, அரசியலில் விநோதமான காட்சி. இது வாக்குகளாக மாறுவது ஐயமே என்றாலும் அதிமுக – பாஜக அணிக்கு கருத்தியல் ரீதியாக ஒரு பின்னடைவாக அமையலாம்.

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது, தாங்கள் கொலு வீற்றிருந்த கட்சியை அழிக்க, நேரெதிர் அணிக்கும் மாறத் துணிகிற மனநிலை. இந்தக் கசப்பு, மிகக் கடுமையானது. நான் அழிந்தாலும் பரவாயில்லை, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற அளவுக்குத் தீவிரமானது.

    Share
  • பெண் மடலேறுதல்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    E.mail.Kumaritathithan@gmail.com

    பக்தி இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களுள் தனித்த இடம் பெறுகின்றன. அவற்றுள் சைவத் திருமுறைகளும், வைணவ நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் பக்தியின் ஊற்றாய் விளங்குகின்றன.  இவற்றுள் சங்ககால அக இலக்கிய மரபுகள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன.  அதேநேரம் அகமரபுகளின் புதிய மரபுத்தோற்றம் இப்பக்தி இலக்கியங்களில் நிகழ்ந்துள்ளன.

    அன்பின் ஐந்திணையில் தலைமக்களின் பெயர் சுட்டப்படாதது சங்க மரபு. அதில் இருந்து மாறுபட்டு பக்தி இலக்கியக்கால இலக்கியங்களில் சுட்டும் மரபினைக் காணலாம். அதேபோல பெண்பாற் கைக்கிளையும் பெண் மடலேறுவேன் எனக்கூறும் கூற்றுகளும் இடம்பெற காணலாம்.  இவை பக்தி இலக்கியக் காலக்கட்டத்தில், இலக்கிய அமைப்பில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சி எனலாம்.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மடலேறுதல் என்பது தலைவியை மணம்புரிந்து கொள்ள ஆசைப்பட்டு தலைவியின் ஓவியத்தைத் தாங்கி பனை மரத்தின் கருக்குமட்டைகளால் செய்யப்பட்ட குதிரையின் மீது ஏறி ஊர்ந்து செல்வதாகப் பாவிப்பதாகும்.  பிற்கால இலக்கண நூல்கள் இதனை மடல் ஏற்றம், மடல் கூற்று என இரண்டாகப் பகுத்து விவரிக்கின்றன.  பனையின் கருக்கு மட்டைகளால் ஆன குதிரையின் மேல் ஏறி தான் விரும்பும் தலைவியின் ஓவியத்தைத் தாங்கி ஊரறிய வலம் வந்து, அவளின் பெயரைச் சொல்லிப் புலம்பும் நிலையானது மடல் ஏற்றம் என்றும், மடலேற முயல்வதாக மட்டும் கூறும் வகையில் அமைவதனை மடல் கூற்று எனவும்  வழங்கப்படுகின்றன.

    நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

    “யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
    தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
    ………………………………………………..”

    என்னும் பாடலில் பெண் மடலேறுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தாம் மடலேறப் போவதாக இறைவன் மீது ஆசைகொண்ட தலைவி சொல்வதாக அமைந்தது இப்பாடல்.  திருமங்கையாழ்வார் ஒருபடி மேலே சென்று சிறிய திருமடல், பெரியத் திருமடல் என்று தனித்த சிற்றிலக்கிய வகை என்று கூறும் வகையில் பாடியுள்ளார்.

    சங்க மரபில் பெண் மடலேறுதல் இல்லை என்றாலும், திருமங்கையாழ்வார் மடலேறத்துடிக்கும் பெண்ணை அறிமுகப் படுத்தியிருக்கும் பாங்கு சுவையுடையது, தமது பாசுரத்தின் நாயகியான பரகாலநாயகி இறைவனை அச்சுறுத்தும் வகையில் மடலேறப் போவதாக அச்சுறுத்தும் பாடல்கள் நயம் மிகுந்தவை.

    இறைவன் மீது தணியாத, காதல் கொண்ட பரகாலநாயகி திவ்யதேசங்கள் அனைத்திற்கும் மடலேறிச் செல்வேன் என்கின்றாள்.  நாராயணன் தவம் புரிந்த திவ்ய தேசங்களுக்கெல்லாம், அவனது பெருமைகளுக்குரிய ஆயிரம் திருநாமங்களையும் கூறிக்கொண்டே மடலேறுவேன்

    “ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான்
    வாரார்பூம் பெண்ணை மடல்”

    என்பதனால் ஊரார் அனைவரும் பழித்தாலும் விடேன். அழகிய பனைமட்டையினைக் கொண்டு மடலேறிச் செல்வதை விடமாட்டேன் என பரகால நாயகி கூறுவதை அறியலாம்.  அதே நேரம் சிறிய திருமடலாக இருந்தாலும், பெரிய திருமடலாக இருந்தாலும் அவற்றில் மடலேறப் போவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மடலேறியதாகக் குறிப்பிடப்படவில்லை.  இவ்வாறு மடல் நூல்களிலும் தலைவியின் துன்பத்தைக் கருவியாகக் கொண்டு, இறைவனின் புகழையும் இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களின் சிறப்புக்களையும் எடுத்துரைப்பது தனிச்சிறப்பாகும்.

    இங்கு மக்களிடையே பக்திநெறி பரவ, அகமரபினை மீறி மடல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  இதனை நுணுகி ஆராயுமிடத்து இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.

    Share
  • நடிகைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா?

    நடிகைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா?

    அண்ணாகண்ணன்

    நடிகைகளை, திரைக் கலைஞர்களைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா? அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பேசக் கூடாதா? இது, திரைக் கலைஞர்களைக் குறைத்து மதிப்பிடுவது. அத்துடன், அவர்களை அவமதிப்பது.

    நாகை புத்தகத் திருவிழாவில் (2025 ஆகஸ்டு 1 – 11), புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தனித் தனித் தலைப்புகளில் பேச இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சி, ஆடல், பாடல், பல்வகை இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளன. நாகப்பட்டினம் ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் (Nagapattinam Collector) விரிவான விவரங்கள் உள்ளன.

    கலைத் துறைகள் பலவற்றிலிருந்தும் புகழ்வாய்ந்த வல்லுனர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள் புதுமுகங்கள் அல்லர். தங்கள் துறையில் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை இரண்டு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும். முதலாவது, மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது. இரண்டாவது, இந்தக் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பது. இரண்டு தரப்பாருக்கும் இதில் நன்மை இருக்கிறது. புத்தகக் காட்சியாக முன்வைக்காமல், புத்தகத் திருவிழாவாக முன்னெடுக்கிறார்கள். சுற்றுவட்டார மக்களை வர வைக்க வேண்டும், அவர்களை ஈர்க்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள்.

    புத்தகத் திருவிழா என்றவுடன் எழுத்தாளர்களே முக்கிய விருந்தினர்களாக இருக்க வேண்டும் என்பது பழங்கால எதிர்பார்ப்பு. புத்தகத் திருவிழாவில் உள்ள மொத்த நூல்களில் இன்று வாழும் எழுத்தாளர்களின் நூல்களின் எண்ணிக்கை, சொற்ப விழுக்காடே இருக்கும். இதற்கு முன் வாழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்களின் ஆக்கங்களே மிகுதி. மேலும், ஜோதிடம், சமையல், வணிகம், அரசியல், ஆன்மீகம், திரைப்படம் போன்று பல துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. எனவே, புத்தகக் காட்சி என்றவுடன் இலக்கியவாதிகள் இது தங்கள் இடம் எனத் நினைத்துக்கொள்ளக் கூடாது. இது, எல்லோருக்குமான இடம்தான்.

    புத்தகக் காட்சி என்பது, அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்று கே.என்.செந்தில் எழுதியதைப் படித்தேன். இது, பழைய நம்பிக்கை. இது உண்மையாக இருந்தால், புத்தகங்கள் படித்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்களே. நாம் படிக்கும் புத்தகங்கள் பலவற்றை நாம் மறந்துவிடுவோம். நினைவில் இருக்கும் சிலவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புத்தக ஆசிரியர் எழுதிய அனைத்தையும் வாசகர் ஏற்றுக் கடைப்பிடிக்க மாட்டார். அப்படி இருந்தால், திருவள்ளுவரின் கருத்துகளை அதைப் படித்த பலரும் ஏற்று நடந்திருப்பார்களே. தாம் எழுதியபடி எழுத்தாளர்களே நடந்துகொள்வதில்லை. புத்தகம் ஒருவர் வாழ்வில் பெரிய மாற்றம் எதையும் நிகழ்த்திவிடாது. அப்படி ஒருவரிடம் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால், அதற்கு அந்தத் தனி மனிதரே காரணம். அந்தப் புத்தகம் இல்லை. இந்தத் தூண்டுதலை அவரது மனம், வேறு எதனிடமிருந்தும் பெற்றிருக்க முடியும். மாறுவதற்கு உரிய மனநிலை, அவரிடம் இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம்.

    புத்தகங்களால் அறிவை மழுங்கடிக்கவும் முடியும். மூட நம்பிக்கையை, வெறுப்பை, காழ்ப்பை வளர்க்கவும் முடியும். புத்தகங்களால் பொய் பேச முடியும். பொய்யை உண்மை என்று நம்ப வைக்க முடியும். எனவே, ஒட்டுமொத்தமாகப் புத்தகம் படித்தால் அறிவு வளரும் என்று கூற முடியாது. புத்தகக் காட்சிகளை அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்றும் கூற முடியாது.

    நாகை புத்தகக் காட்சியில் நீயா நானா கோபிநாத் பேசுகிறார். அவருடைய ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! என்ற புத்தகம், விற்பனையில் ஐந்து லட்சம் பிரதிகளை நெருங்குவதாக அதன் அட்டையிலேயே அச்சிட்டிருக்கிறார்கள். முழுநேர எழுத்தாளர்களே நினைத்துப் பார்த்திராத விற்பனை இது. இவரிடமிருந்து எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள ஏதும் இருக்கிறதா? இல்லையா?

    பதிப்பாளர்களுக்குப் புத்தகக் காட்சி என்பது பெரிய வணிகச் சந்தை. எது தேவையோ, எதை வெளியிட்டால் விற்குமோ அதை வெளியிடுவார்கள். இதர நுகர்பொருள்களைப் போல், புத்தகங்களையும் ஒரு நுகர்பொருளாகக் கருதுவது, இயல்பான வணிகக் கண்ணோட்டம். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
    எழுத்தாளர்கள் பலருக்குச் சுவையாகப் பேசத் தெரியாது. அப்படிப் பேசத் தெரிந்தவர்களின் உதவி, அவர்களுக்குத் தேவை. தங்கள் படைப்பின் மீது, புத்தகத்தின் மீது சிறிதளவு வெளிச்சமாவது விழாதா என்ற அந்தரங்க ஏக்கம், பலருக்கும் உண்டு. சிறிய அங்கீகாரம், பாராட்டு அல்லது விமர்சனம், அவர்களின் இருப்பை நினைவூட்டும்.

    திரைப்பட நட்சத்திரங்களை உரிய விதத்தில் பயன்படுத்தினால், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பயன் கிட்டும். நட்சத்திரத்திடம் பேசி, இன்னும் ஒரு மணி நேரம் அரங்கில் இருங்கள் எனக் கேட்கலாம். ஐந்நூறு ரூபாய்க்கு அல்லது ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினால், திரைப்பட நட்சத்திரத்துடன் சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம் என ஒரு திட்டத்தை அறிவிக்கலாம். இதன்வழியே ஒரு சிறிய உடனடிப் பயன் கிட்டும்.

    எழுத்தாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது. தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் மிதக்கக் கூடாது. படிப்பவர்கள் யாரும் இல்லை என்றால், எழுதுவது யாருக்காக?

    பேச வரும் நட்சத்திரங்களுக்கு அரசு தரும் சன்மானம் எவ்வளவு என்று தெரியாது. இது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவர்கள் இந்தச் சன்மானத்திற்காக இந்த அழைப்பை ஏற்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அரசு அழைப்பு என்பதை ஒரு பெருமையாகக் கருதியே வருவார்கள் என நினைக்கிறேன்.
    நட்சத்திரங்களின் வலிமை, செல்வாக்கு, ஆளுமை என்பது அரங்கில் பேசுவதோடு முடியாது. ஊடகங்களில் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதை ஆக்கப்பூர்வமான ஒன்றாகவே பார்க்க வேண்டும். இந்த நிகழ்வில் பங்கேற்காத, இதற்குச் சற்றும் தொடர்பில்லாத, இதனால் எந்த ஆதாயமும் பெறாத ஒருவனாகவே இதைச் சொல்கிறேன்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 38

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 38

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    38. இனிமை + எளிமை = தாரமங்கலம்

    முன்னுரை    

    வாய்பாடுகளை முன்னெழுதித் தளைகளைப் பின்னியெடுத்துக் கவிதைகளைச் சிக்கலுக்கும் சிணுங்கலுக்கும் முக்கலுக்கும் முனகலுக்கும் ஆளாக்குபவர் பலர். அவர்களிடம் மூன்று வினாக்களை நான் தொடர்ந்து முன் வைக்கிறேன். பொறுப்பான விடையிறுத்தார் ஒருவரும் இலர்.  வாய்பாடுகளையும் தளைகளையும் மட்டுமே கவிதை என்று நான் கருதிக் கொள்ளலாமா? கவிதையில் இவற்றைத் தேடுவதையே “கவிதை தேடுதல்”  எனக் கருதிக் கொள்ளலாமா? இரண்டும் இல்லை. கவிதையில் கவிஞனைத் தேடுவதைத்தான் கவியனுபவம் எனலாமா? இவைதாம் அந்த வினாக்கள். என் சங்கடம் தீர்ப்பார் இல்லை.  சஞ்சலம் தீர்ந்தபாடுமில்லை. அவர்கள் கவிதை எழுதியபாடுமில்லை. இந்த நிலையில் ‘உள்ளத்து உள்ளது கவிதை’ என்றாற்போல விளைவுகளைப் பற்றி எண்ணாது, எண்ணுவதை எல்லாம் எழுத்தில் வடித்துக் காட்டும் அன்பர்கள் சிலர் அவ்வப்போது முகநூலில் காட்சி தருகிறார்கள். வைத்துக் கொண்டு வஞ்சனை செய்யாத எளிய உள்ளத்தை இயல்பாகவே பெற்றவர்கள். அவர்களுள் தாரமங்கலத் தமிழாசிரியர் கவிஞர் முத்துசாமியும் ஒருவர். ‘உதடு ஒட்டாத குறள் வெண்பா’ என்றும் ‘கட்டளைக் கலித்துறை’ என்றும் ‘கொச்சக ஒருபோகு’ என்றும் ‘மூன்றடிக் குறள் வெண்பா’ என்றும் கவிதைத் தளவாடங்களால் கவிதையையும் என்னையும் கலவரப்படுத்தாமல் எழுதக் கூடிய அன்பர் முத்துசாமி. அன்னாருடைய படைப்புக்களில் நாட்டுப் புற வடிவங்களைக் கொண்ட சில பாடல்களை அறிமுகம் செய்வதையே கட்டுரையின் இந்தப் பகுதி தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது. உடல்நிலையும் மனநிலையும் தளர்நிலை காணும் இந்த எண்பது வயதில், அவ்வன்பருடைய கவிதைகளைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ துணையை நான் எதிர்பார்க்கிறேன்.

    நாட்டுப்புறப்பாடல்களின் வரலாற்றுப் பின்புலம்     

    ‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கும் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து தமிழிசைப் பாடல்கள் உருவாகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் குரவை, வரிப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றியவை. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனும் மங்கல வாழ்த்துப் பாடலும் நாட்டுப்புறப் பாடல் வடிவைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். ‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகின்றது. ஏராளமான சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. குறவஞ்சி, சிந்து, அம்மானை, ஊசல், பள்ளு, தாலாட்டு, ஏசல், ஏற்றம், தெம்மாங்கு முதலான ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைத்து, நாட்டுப்புற இலக்கியங்களை ஒரே இலக்கியமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கருதிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்கள் உருவாக்கப்பட்ட போக்கினை அறியமுடிகிறது. நீதிக் கருத்துகளோ பக்திச் செய்திகளோ, தொன்மக் கதைப்பகுதிகளோ மக்களைச் சென்றடைவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

    நாட்டுப் புறப்பாடல்களின் தனித்தன்மை

    கவிதையின் தலையாய பணிகள் இரண்டனுள் ஒன்று காட்சிப்படுத்துவது. மற்றொன்று அனுபவத்தை உணர்த்துவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் கவிதை என்பது அனுபவச் சித்திரிப்பு. சொற்களின் சரளி வரிசை அல்ல. பாட்டெழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் நினைவில் கொள்ளாத கருத்து இது. பாசிமணி கோப்பது போலக் கவிதையைக் கோக்க முடியாது. ‘ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! என்று வரிகள் நம்மை ஓடைக்கு அழைத்துச் செல்கிறதா இல்லையா? ‘பருத்தி எடுக்கையிலே என்ன பலநாளும் பாத்த மச்சான்’ என்ற தொடர் காதிலே விழுகிற போது கேட்பவர் மனக்கண்கள் பருத்தித் தோட்டத்திற்குச் செல்கிறதல்லவா? ‘ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே’ என்றவுடன் ஒரு பெண் தனிமையில் படும் விரகதாபம் கண்ணுக்குள் விரிகிறதா இல்லையா? இதுதான் கவிதையின் பணி. இந்தப் பணியினை முழுமையாகச் செய்வதுதான் நாட்டுப் புறப்பாடல்கள். அதனால்தான் அவற்றை நாம் ‘மக்கள் இலக்கியம்’ என்று போற்றுகிறோம்.

    நாட்டுப் புறப்பாடல் தளங்கள்

    தமிழில் யாப்புக்கும் பாடுபொருளுக்கும் தொடர்பு உண்டு. இன்ன  பாடுபொருளை இன்னவகை யாப்பில்தான் பாடவேண்டும் என்ற விதியும் மரபும் தமிழிலே இருக்கிறது. பெரும்பாலும் அந்தாதி கட்டளைக் கலித்துறையில் அமையும். புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை என்னும் நான்கும் மருட்பாவில் அமையும். பாடல் சான்ற புலனெறி வழக்கச் செய்யுட்கள் எல்லாம் கலிப்பா, பரிபாடல் என்னும் பாவகையில் அமையும். (பரிபாடல் என்பது ஒரு பா வகை)  ஆனால் இத்தகைய வரையறை நாட்டுப்புறப் பாடல்களுக்கு இல்லை. குழந்தையின் பெற்றவள் பாடும் தாலாட்டில் தொடங்கி உற்றாரும் உறவினரும் வைக்கும் ஒப்பாரிவரை எந்தப் பாடுபொருளும் அதற்கு இசைந்ததே. ஏனைய இயற்பா வகைகள் மக்கள் வாழ்வியலோடு அந்நியப்பட்டு நிற்க நாட்டுப் புறப்பாடல்கள்தாம் மக்களோடு கைகோத்து நிறகின்றன.  வள்ளற் பெருமான்  தொடங்கி வைரமுத்து வரை யாப்பியலை நான்குணர்ந்தறிந்தோரும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைக் கையாள்வதும் அவை அவர்களுடைய யாப்பியல் பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்திருப்பதும் யாவரும் அறிந்ததே. எளிமையான மொழியமைப்பு, யதார்த்தமான வண்ணனை, இயல்பான அழகியல் நோக்கு, உயர்நிலை கற்பனைகள், வாழ்வியலோடு இரண்டறக் கலந்து நிற்கும் உணர்ச்சிகள் இவற்றின் ;கலவையாக இருப்பதே நாட்டுப் புறப் பாடல்கள் ஏனைய இலக்கியங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்குத் தலையாய காரணம். சீர்களும் தளைகளும் புலமையின் அடையாளம். நாட்டுப் புறபபாடல்கள் கவிதையின் அடையாளம்.

    கவிதையும் காட்சியும்

    கவிதை, ஒன்றினைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று குறிக்கப்பட்டது. ‘தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்க’ என்னும் கம்பர் பாட்டில் மருதநிலக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதல்லவா? குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலமிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்’ எனச்  சஞ்சீவி பர்வதத்தின் சாரலைப் பாவேந்தர் காட்சிப்படுத்தியிருப்பதைக் காணலாம். இவைகளெல்லாம் வெறும் காட்சிகள் என்றால் மானுட உணர்வுகளையும் கவிதை காட்சிப்படுத்த வேண்டும். ‘மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்தது’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற எடுத்துக்காட்டுக்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் முத்துசாமி தன் உறவுப் பெண்ணின் புற அழகை விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    “கண்ணுல மைய வச்சுக் கார்குழலைத் தலையில் வச்சு
    மண்ணிலே நடந்து வரும் மங்கம்மா – ஓம்
    மனசுக்குள்ளே நான் வரவா சொல்லம்மா!

    கக்கத்திலே கூடை வச்சுக் காட்டுமல்லி தலையில் வச்சு
    வெக்கத்தை நெஞ்சில் வச்ச வெள்ளையம்மா  – ஓம்
    விருப்பத்துக்கு நான் வரவா சொல்லம்மா!

    ஆசைய மனசில் வச்சு அத்தை மவன நெனப்பில் வச்சு
    பாசங்கொண்ட பைங்கிளியே பொன்னம்மா! – ஓம்
    பக்கத்தில நான் வரவா பொன்னம்மா!

    நெத்தியிலே பொட்ட வச்சு நெடுவிழியில் பத்தவச்சு
    புத்தம் புது மலரான பூவம்மா! ஓம்
    பொடவையாக நான் வரவா பொன்னம்மா!

    “என்னடிமுனியம்மா ஒங் கண்ணுல மையி” என்னும் வெளிப்பாட்டைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாட்டுப்புற வடிவத்திள் எளிமையாக அமைந்தாலும் ஒரு பெண்ணின் ஒய்யாரத்தைக் காட்சிப்படுத்திவிடுகிறது. இந்தப் பாட்டின் உள்ளடக்கத்தை யாப்பில் கொண்டுவரலாம். அதில் கவிஞர்களின் இலக்கணத் திறன் வெளிப்படுமே தவிர பெண்ணின் ஒய்யாரம் இருக்காது.

    பாசத்தாலே அள்ளியவள்

    நாட்டுப்புறப்பாடல்கள் தணிக்கைக்கு உட்பட்டதன்று. தற்கால இலக்கணப் புலிகள் நாட்டுப் புறப்பாடல்களுக்கும் தேமாஙகாய் புளிமாங்காய் என இலக்கணம் வகுத்து விருதுகளுக்கு விண்ணப்பம் போடுவார்கள்.  பாமரனுக்கு ஏது இலக்கணம்? அவனுக்குத் தளைகளும் இல்லை. விகற்பங்களும் இல்லை. உணர்ச்சியில் வந்து விழும் மீயுயர் கற்பனைகளும் காதல் பாடல்களில் சற்றே விரசமல்லாத விரசமும் அழகியல் நீரோட்டமும் நிறைந்தவையே நாட்டுப்புறப் பாடல்கள். மாமன் மகள் பாடுகிறாள்.

    “ஆத்துக்கு அக்கரையில்
    அத்த மவன் ஒருத்தனுண்டு
    வாய் திறந்து பேசலையே
    வாட (டை) பட்டுச் சூலானேன்!

    ஒரு முறைப்பெண்ணின் காதலையும் விரகதாபத்தையும் பாமரத்தனமான வெளிப்பாட்டையும் இந்த வரிகள் காட்டுகின்றனவல்லவா? தான் அவனைச் சந்திப்பதற்கு ஆறு தடையாக இருக்கிறதே என்னும் வருத்தம், அத்தைமகன் வாய் திறந்து பேசவில்லையே என்னும் ஏக்கம், தாம்பத்யம் இல்லாமலேயே கருத்தரிக்க வேண்டும் என்னும் விரகதாபம் இத்தனையையும இந்த எழுதா இலக்கியத்தில எழுதப்பட்டிருப்பதைக் காணீர்.  அத்தை மகள் பாடுவதாக முத்துசாமி எழுதுகிறார்.

    “வட்டவட்டப் பாறையிலே
    வந்து நிற்கும் ஆசமச்சான்!
    கிட்ட வந்து பேசினாலே
    கிறுக்குப் புடிச்சுப் போகுதையா!

    அத்தை மகளுக்கு இப்படிக் கிறுக்குப்பிடிக்க  மாமன் மகன் பாடுகிறான்

    ‘வெத்தலைய மடிச்சு கொடுக்க
    வௌஞ்ச கதிர ஒடிச்சு கொடுக்க
    பத்தலேன்னு சொல்லி – என்ன
    பாசத்தாலே அள்ளி
    தூண்டில் போடும் கண்ணு – என்
    துணைக்கு வாடி கண்ணு

    இந்த உறவின் வெளிப்பாடும் துடிப்பும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏக்கமும் இன்றைய இளைஞர் சமுதாயம் இழந்து நிற்கிறது என்பது ஒரு காலத்தின் சோகம். அவள் பாடுகிற பாடலில் வருகிற கிறுக்குப் புடிச்சுப் போச்சு என்கிற வரியைப் பின்னாலே வந்தவர்கள் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். முருகன் மீது காதல் கொண்ட ஒருத்தி அவனுக்குக் காதல் கடிதம் எழுதுகிறாள். அவன் மீது கொண்ட மையலால் கடிதத்தில் எழுத்து சரியாக அமையாமல் கிறுக்கிவிடுகிறதாம். அதுமட்டுமன்று. அவள் உள்ளமும் கிறுக்காகிவிடுகிறதாம்.

    “மாலை வடிவேலவர்க்கு
    வரிசையாய் நான் எழுதும்
    ஓலை கிறுக்காச்சுதே – கிளியே
    உள்ளமும் கிறுக்காச்சுதே!”

    அம்பா சமுத்திரம் சுப்பராயசாமி எழுதிய இந்த நாட்டுப் புறப்பாடல் சிந்தனையை ஆசிரிய வசனமாகக் கொண்ட பாங்கு இது. சந்திக்க முடியாத அத்தை மகளின் ஏக்கம் இதுவென்றால், ஒரு மாமன் மகளின் ஏக்கத்தைக் கண்ணதாசன் இப்படிப் பாடியிருக்கிறார்.

    “மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா?
    மாலை இளந் தென்றல் தன்னைத் தூது விடவா?
    நல்லதோர் நாள் பார்த்துச் சேதி சொல்லவா?
    நாட்டோரைச் சாட்சி வைத்து வந்துவிடவா?”

    “நீ வந்து பெண்கேட்டு என்னை மணம் முடிக்கும் வரை எனக்குப் பொறுமையில்லை. நானே வந்துவிடுகிறேன். ‘நான்; என் மாமன் மகனிடம் செல்கிறேன் என்று சான்றோர்களைச் சாட்சி வைத்து வந்துவிடுவாளாம். கண்ணதாசனின் இமாலய வெற்றிக்கு அவருடைய செட்டி நாட்டுப் பின்புலம் இன்றியமையாத ஒன்று.

    தமிழ்நாட்டின் செல்வம் தாய்மாமன் சீர்வரிசை

    தாய்மாமன் சீர்வரிசை என்பது தமிழ்நாட்டின் மரபுவழிப் பண்பாடு. பெண்ணுக்கு உரிமை பூண்டவன் தாய்மாமன். மாற்றானுக்கு அவன் முறைப்பெண் வாழ்க்கைப்படும் போது தாய்மாமன் இசைவு என்பது பின்பற்றப்பட்டு வந்த மரபு. செட்டிநாட்டுப் பாடல்களில் இந்தத் தாய்மாமன் மரபு பரவலாகப் பேசப்படுகிறது. ‘தாய்க்குத் தாயான தாய்மாமன் வாரானடி’ என்றெல்லாம் மாமன் பெருமை பேசப்படும். அவன் தன்பெருமையைச் சீர் வரிசையில் காட்:டுவான்

    “ஒக்காந்து பால் கறக்க முக்காலி பொன்னாலே
    அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே”

    எனச் சீர்வரிசையைச் சிம்மாசனம் ஏற்றியவன் தாய்மாமன். அவனுடைய வேட்டியைத்தான் தாய் தன் பேரப்பிள்ளைக்கு முதல் தூளியாகக் கட்டுவாள். செட்டி நாட்டுக் கவிஞர் கண்ணதாசன்

    “தங்க கடியாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார் – மாமன்
    தந்து மணம் பேசுவார் – மாமன்
    தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார் !”

    என்று எழுதியிருப்பார். அதற்கு முன்பே காமாட்சி சுந்தரம் அருமையான தாலாட்டில் மாமன் சீர்வரிசை பற்றி எழுதியிருப்பார்.

    “கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
    கோமளத் தாமரைப் பூவே
    கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
    கோமளத் தாமரைப் பூவே – ஒரு
    வஞ்சமில்லா முழு மதியே – இன்ப
    வானில் உதித்த நல்லமுதே

    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

    மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
    வாழ்வளிக்க வருவார் – உனக்கு
    மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
    வாழ்வளிக்க வருவார் – உன்
    மாம்பழக் கன்னத்திலே – முத்த
    மாரி பொழிந்திட வருவார் – உன்
    மாம்பழக் கன்னத்திலே – முத்த
    மாரி பொழிந்திட வருவார்”

    மாணிக்கப் பாலாடை – பச்சை
    மாமணித் தொட்டிலுடன்
    மாணிக்கப் பாலாடை – பச்சை
    மாமணித் தொட்டிலுடன் – வெள்ளை
    யானையும் வாகனமாய் – மாமன்
    தருவார் சீதனமாய் – உன்தன் மாமன்
    தருவார் சீதனமாய்

    வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
    வைர எழுத்தாணி கொண்டு
    வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
    வைர எழுத்தாணி கொண்டு
    தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத – உன்னைப்
    பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்
    அள்ளி அணைத்திட வருவார்

    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

    இது ஒரு தாலாட்டுப் பாடல்தான். ஆனால் தாய்மாமன் சீர்வரிசை கற்பனைக்கெட்டாத அளவுக்குத் தன் உடன்பிறப்புக்களின் மேல் வைத்த ஒரு தங்கையின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகச் சீர்வரிசைகளின் தொகுப்பாக இருப்பதைக் காண முடிகிறது. அன்பர் முத்துசாமி இந்த மரபுவழி வந்த கவிஞர் அவர் எழுதுகிறார்.

    “பூவொன்று பூத்திருக்க
    புதுமணமும் கலந்திருக்க
    பச்சவோலை பின்னிக்கிட்டுப்
    பயந்த மாமன் பாயஞ்சு வந்தான்!
    ஊரெல்லாம் கூட்டி வந்து
    உறவையெல்லாம் அழைச்சுகிட்டு
    ஆரவார முழக்கோடு
    ஆட்டையுமே ஓட்டி வந்தான்
    தங்கத்தில கொடிசெய்து
    தாய்மாமன் சீராக
    அங்கமெலாம் மின்னும்படி
    அலங்கரித்துப் பார்த்திருந்தான்

    சீர் செய்யாமல் போனாலோ மனம் நிறைவாகச் செய்யாமற் போனாலோ ஊர்ப்பழிக்கு ஆளாகிவிடக் கூடாது என்று பயந்து வந்தானாம் தாய்மாமன். பயந்து பயந்து சீர் செய்தானாம் தாய்மாமன். இது ஒரு அனுபவச் சித்திரிப்பு.

    தாய்மாமன் சீர் வரிசையும் தகப்பன்வீட்டுச் சீர் வரிசையும்

    பொதுவாகத் தமிழ்நாட்டில் செய்யப்படும் சீர்வரிசைகள் தாய்வீட்டுச் சீர்வரிசை மற்றும் தாய் மாமன் சீர்வரிசை. இவற்றுள் தாய் மாமன் சீர்வரிசை பெண் பருவத்திற்கு வரும்போதும் அவள் புகுந்தவீடு செல்லும் போதும் செய்யப்படுவன. இன்றையச் சட்டங்களும் நீதிமன்றங்களும் சீர்வரிசைக்கும் வரதரட்சணைக்கும் வேறுபாடு தெரியாது தடுமாறுவது தனிக்கதை. வரதட்சணை என்பது உயர்சாதி மக்களிடையே நிலவிய ஒரு கொடுமையான  கேவலமான அருவெருக்கத்தக்க பழக்கம். அது போலிச் சமுதாயக் கட்டமைப்பில் எல்லாவகையிலும் தாழ்ந்த மக்களையும் ஊடுருவிப் பற்றிக் கொண்டது காலத்தின் கோலம். தாய்வீட்டிலிருந்து மணமகளாகப் புகுந்த வீடு செல்வதும் புகுந்த வீட்டின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டுப் பிணமாக வெளியே வந்து விழுவதும் ஒரு சமுதாய அவலம். வரதட்சணை தடைச் சட்டத்தை இருபாலாருமே மீறுகிறார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். இதுபோக வரதட்சணை என்பது மந்தணமாகக் கொடுக்கப்படுவது கறுப்புப்பணத்தைப் போல. சீர்வரிசை ஊர் அறிய உலகறிய ஊர்வலமாய்ச் சென்று பெண்ணை வழியனுப்புவது. இரண்டும் ஒன்றல்ல. அந்தச் சீர்வரிசையில் தாய்மாமன் செய்யும் சீர்வரிசையை இப்படிப் பட்டியலிடுகிறது ஒரு பழம்பாடல்.

    “கொத்துபடா நெத்தும் கோதுபடா மாங்கனியும்
    பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும்
    அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவெட்டும்
    காய்ச்சிய பாலும் கற்கண்டும் செந்தேனும்
    ஏலம் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்
    சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளை வெற்றிலையும்

    மாமன் சீர்வரிசையாக வருமாம். தன் உடன்பிறப்பின்மீது அந்தத் தாய்க்கு உள்ள நம்பிக்கை. பிறந்த வீட்டுப் பாசம். இயல்பாக வந்தமையும் தொடைவிகற்பங்களும் எண்ணுதற்கு இனிக்கும் இலக்கிய நயங்களும் அனுபவ முத்திரைகளும் வாழ்வியலின் நிலைத்த உண்மைகளும் பழகுதமிழை மட்டுமே பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் உவமங்களும் அழகிய சொலலாட்சியும் தடையில்லா நடைப் பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிடுவதுதான் சரியான திறனாய்வு நெறி. இந்தப் பெருமையை இன்னும் தெளிவாக உணர வேண்டுமானால் நிலைபெற்ற ஏனைய இலக்கியங்களோடு நாட்டுப் புறப்பாடல்களை ஒப்பிட்டுக் காணவேண்டும்.

    “ஏலவல்லியும் இருங்கறி வல்லியும்
    கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
    தெங்கின் பழமும் தேமாங்கனியும்
    பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
    காயமும் கரும்பும் பூமலிக் கொடியும்
    கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும்
    பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்”

    கொண்டு வந்து கொடுத்து சேரனை வழிபட்டார்களாம் மலைவாழ் மக்கள் என்று ஆசிரியர் ;இளங்கோவடிகள் பாடுகின்றார்.  திருக்குறள் போன்ற உயர் பனுவல்களின் உள்ளீடுகள் எல்லாம் மக்கள் வாழ்வியலில் கண்டவையே. சென்ற விருந்தினை ஓம்பி வருகின்ற விருந்தினை எதிர்பார்க்கும் ஓரு பண்பாட்டுக் குடி தமிழர் குடி.

    “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு”

    என்னும் திருக்குறளுக்கு மூலம் எங்கேயிருக்கிறது  தெரியுமா?

    “வாழை இலைபரப்பி வந்தாரைக் கையமர்த்தி
    வருந்தி விருந்தழைக்கும் மகராசர் பெயரனோ?
    தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்த்தித்
    தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

    என்ற மக்கள் இலக்கியத்தில் இருக்கிறது. மொழியின் எளிமை இலக்கியத்தை எளிமையாக்கி அழகியலுக்கு ஒளி கூட்டுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி நிரல் படுத்தும் தகப்பன் சீட்டுச் சீதனத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. தாய்வீட்டுச் சீதனம் என்னும் சிந்தனையைக் கொஞ்சம் மாற்றி தகப்பன் வீட்டுச் சீதனமாய்ப் பாடியிருக்கும் மரபு மாற்றத்தைத் தமிழ்க் கவிதையுலகம் தளர்வில்லா பூரிப்போடு வரவேற்கிறது.

    “பெரியப்பன் பொழச்சா என்ன? பெருநெல்லி காச்சா என்ன?
    சித்தப்பன் பொழச்சா என்ன? சிறு நெல்லி காச்சா என்ன?”

    எங்கப்பன் பொழச்சாதான் எனக்கெல்லாம் தேடிவரும்!
    நாலுவண்டி பருப்பு வரும் நாவிரும்பும் பருப்பு வரும்”

    இந்த இரண்டு கண்ணிகளில் இரண்டு உண்மைகளைப் பதிவு செய்கிறார் முத்துசாமி. ஒன்று சித்தப்பன், பெரியப்பன் உட்பட எல்லா உறவுகளும சடங்குகளுக்கானவை. பெத்தப்பன் உறவு ஒன்றுதான் கடைசிக்காலம் வரை தொடரும். அடுத்ததாக இந்தப் பெண் தாயைப் பின்னுக்குத் தள்ளித் தந்தையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தந்தைக்கு மகள் மீது இயல்பாகவே இழையும் பாசத்தினைக் குறிப்பாகக் காட்டுகிறார். இன்னுஞ் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் தாய்வீட்டுச் சீதனம் என்பதைத் தந்தை வீட்டுச் சீதனமாக மாற்றிக் காட்டுகிறார். நாட்டுப் புறப்பாடல்களிலும் இயல்பான மரபு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை முத்துசாமி உறுதி செய்கிறார்.

    “மளிகைப் பொருளனைத்தும் மற்ககாமல் வீடுவரும்!
    சின்னமனூர் சேலைவரும்! சிலுக்குத்துணி கூட வரும்!
    கண்ணாடி வளையலொடு கால்கொலுசு சிணுங்கவரும்!
    கண்மையும் பவுடரொடு  கழுத்துக்கு ஆரம் வரும்!
    வெள்ளாடு ரெண்டு வரும்! வெடக்கோழி மூணு வரும்!
    மாவாட்டக் கிரைண்டர் வரும்! மிளகரைக்க மிக்சி வரும்!
    பூவாட்டம் இட்ளிசுட்டுப் புதினா சட்னி கூடவரும்!
    மாவு வைக்க பிரிட்ஜ் வரும் மனங்குளிர ஏசி வரும்!
    ஆடலுடன் பாடலுக்கு அறுபது இன்ச்சி டிவிவரும்!
    வண்ணத்திலே பீரோவரும் வகவகையாய் சேர்கள் வரும்!
    என்ன பெத்த கடனுக்கு எங்கப்பா எனக்குத் தரும்!

    மகள் கை நோகுமென்றுதாய்வீட்டிலிருந்தே சமைத்து வருகிறதாம்! மரபு சார்ந்த நாட்டுப் புறப்பாடல்களின்; கற்பனையை விஞ்சியது இது.

    சரி! பாட்டிலே எங்கே கவித்துவம் இருக்கிறது? பாட்டின் இறுதிச் சீரில் இருக்கிறது. என்னப்பா எனக்குத் தருவார் என்றிருந்திருந்தால் பெத்தவனுக்கு மரியாதை கிடைத்திருக்கலாம். நமக்குக் கவிதை கிடைத்திருக்காது. என்றைக்குத் தமிழ்நாட்டில் பெற்றோர்களை ‘நீங்க வாங்க’ என்று அழைக்கப் பழக்கினோமோ அன்றைக்கே பாசம் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. ‘ஆத்தா சொல்லுச்சு காசு குடு’ என்பதுதான் பண்பாட்டு வெளிப்பாடு. தற்காலத்தில் புழக்கத்தில் இருப்பது போலிப் பண்பாடு. குழந்தையைக் கொஞ்ச வேண்டிய ‘செல்லம்’ என்ற சொல்லால் எருமை மாட்டுக் கணவனை அழைப்பார்கள். சிலம்பிலே இளங்கோவடிகள் குறவர் கொண்டு வந்ததாகச் சொல்லிய சீர்வரிசைகளுக்குக் குறையாத சீர்வரிசை தந்தை கொடுத்தது.  அந்தத் தந்தையைப் பாசம் கொப்பளிக்க ‘தரும்’ என அஃறிணை வினைமுடிபால் முடித்துக்காட்டியிருப்பது இந்த மண்ணின் மணம் வீசும் ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. தமிழில் இறைவனை யாரும் ‘நீங்கள்’ என மரியாதையோடு அழைத்திருப்பதாகப் பதிவுகள் இல்லை. காரணம் இறைவனை அவ்வாறு அழைக்கிறபோது உரிமை பறிபோகிறது. நெருக்கம் குறைகிறது இறைவன் அந்நியப்பட்டுப் போகிறான்.

    மயங்க வைக்கும் மரபு

    அசலைப் பார்த்து நகலெடுப்பது மரபாகாது. திட்டமிட்டு மாற்றுவதும் மரபாகாது. ‘நான் மரபை மீறுகிறேன்’ என்பதெல்லாம் அறியாதவர் புலம்பல். மரபு என்பது தாக்கம். அதன் தாக்குவுறவுக்கு நாம் ஆளாகலாம்.  அல்லது அதற்கு நாம் மயங்கலாம்.  இங்கே சில மயக்கங்களைக் காணலாம். படைப்பொன்றின் சொல், தொடராக்கம், பாடலின் இசையமைப்பு, வடிவத்தில் நிலவும் தாளகதி இவற்றுள் ஏதேனும் ஒன்றில் நம் மனம் லயித்துவிடுமானால் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதும் மரபே.

    1. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்கள் பின்னாலே வந்த படைப்பாளர்களைத் தாக்குறவுக்கு ஆளாக்கின. அவர்களும் ஆளானார்கள். பல பாடல்களை எடுத்துக்காட்ட இயலும்.
    1. ‘சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ‘ராதே உனது கோபம் ஆகாதடி’ என்ற பாடலின் ;இசை பின்னாளில் குலமகள் ராதையில் சௌந்தரராசனைப் பாடவைத்திருக்கிறது.
    1. 1956இல் வெளியான காலம் மாறிப் போச்சு என்னும் திரைப்படத்தில் வந்த ஏரு பூட்டிப் போவாயோ அண்ணே என்ற நாராயண கவியின் பாடலின் இசை மதுரைவீரன் படத்தில் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் ஜி.இராமநாதனையும் கட்டிப் போட்டது.
    1. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே’ என்னும் மகாகவியின் பாடல் ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே’ என்று கண்ணதாசனை எழுதத் தூண்டியது.
    1. கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களும் வள்ளற் பெருமான் பாடல்களும் பாரதியாரைப் பாதித்திருக்கின்றன என்பது அவருடைய படைப்புக்களிலிருந்து தெரியவரும் உண்மையாகும்.
    1. ‘எந்நாள்?’ என்பதற்கும் ‘எந்நாளோ?’ என்பதற்கும் உணர்ச்சி வேறுபாடுகள் உண்டு. எந்த நாள் என்பதும் எந்த நாளோ என்பதற்கும் இது பொருந்தும். பத்ரகிரியார் புலம்பலை ‘எக்காலக்கண்ணி’ என்றே அழைக்கிறார்கள். இந்த எந்நாள் கண்ணிகள் மரபு வழியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன முத்துசாமி உட்பட.
    1. ‘திருநீலகண்டர்’ என்னும் திரைப்படத்தில் பாபநாசம் சிவன் எழுதி ஜி.இராமநாதன் இசையமைத்த ‘தீனகருணாகரனே நடராஜா! நீல கணடனே” என்னும் பாடலின் தாக்கம் மதுரை வீரன் திரைப்படத்தில் ‘ஏச்சுப் பிழைக்கும தொழிலே சரிதானா என்னைப் பாருங்க’ என்னும் பாடலில் தெரிந்தது.
    1. ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய்போட’ என்று கவச இசையினைக் காதல் பேசும் திரைப்படப்பாடலுக்குப் பயன்படுத்தினார் இளையராஜா.

    இத்தகைய மரபுவழித் தாக்கம் முத்துசாமியின் பாடல்களிலும் இழைவதை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்க முடியும்.

    தாயுமானவர் – பத்ரகிரியார் – பாரதிதாசன் – முத்துசாமி

    ஏகாரமும் ஓகாரமும் உணர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் எழுத்தொலிகள் ஆகும். ஏகாரம் மொழிக்கு முன்பும் பின்பும், ஓகாம் மொழிக்குப் பின்பும் நின்று இந்தப் பணியைச் செய்கின்றன. பத்ரகிரியாரின் பாடல் வடிவமும் உணர்ச்சியும் தாயுமானவர் பாடலில் இப்படி அமைந்திருக்கிறது.

    “வெஞ்சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை
    அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ?
    அஞ்சு முகம் காட்டாமல் ஆறுமுகம் காட்டவந்த
    செஞ்சரணச் சேவடியைச் சிந்தை வைப்பது எந்நாளோ?”

    பத்ரகிரியார் பாடலின் இந்த நாட்டுப் புற வடிவம் தாயுமானவர் பாடலில் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    “புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
    எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

    “கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
    புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

    “போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
    காக்குமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம்”

    “புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
    எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

    “கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
    புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

    போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
    காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம் 181

    திருவாசகச் சிவபுராணத்தின் உள்ளடக்கத்தை நாட்டுப் புறப் பாடலின் வடிவ வெற்றி கருதிப் பத்ரகிரியார் இவ்வாறு எழுதியிருக்கலாம். இந்தப் பாடல்களின் சொல்லாட்சியிலும் ஒலி நயத்திலும்  இதயத்தைப் பறிகொடுத்த பாவேந்தர் தமிழ், தமிழினம் இவற்றின் ஆக்கத்தையும் ஆதங்கத்தையும் பாடுகிறபோது பயன்படுத்திக் கொள்கிறார்.

    (தமிழர்கள்)

    உன்னத இமம  லைபோல்
    ஓங்கிடும் கீர்த்தி எய்தி
    இன்புற்றார் என்று மற்றோர்
    இயம்பக்கேட் டிடல் எந்நாளோ,?

    (தமிழர்களைக்)

    கள்ளத்தால் நெருங்கொணாதே
    என வையம் கலங்கக் கண்டு
    துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம
    சொக்கும் நாள் எந்த நாளோ?

    (தமிழர்கள்)

    ஆட்டும்சுட்டு விரல் கண்டே
    ஆடிற்று வையம் என்றே
    கேட்டுநான் இன்ப ஊற்றுக்
    கேணியில் குளிப்பதெந்நாள்?

    என்று பாடுகிறார். ஏக்கத்தை வெளிப்படுத்தும் இந்த ஒலிநயமும் சொல்லாட்சியும் வடிவச் சிறப்பும் முத்துசாமியைப் பாதித்திருக்கிறது. ஆனால் என்ன ஒரு மாற்றம்? ஆன்ம விசாரணைக்காகப் பத்ரகிரியார் கையாண்ட இந்த வடிவத்தை மொழிக்காகவும் இனத்திற்காகவும் கையாண்டிருக்கிறர் பாவேந்தர். இவ்விரு பாடுபொருளையும் தவிர்த்துக் காதல் ஏக்கத்தையும எதிர்பார்ப்பையும் பதிவிட முத்துசாமிக்கு இந்த வடிவம் கைகொடுத்திருக்கிறது.

    “ஒத்தைவிழிப் பார்வையிலே உலகளந்த நாயகியே!
    கத்தைக் குழல்பற்றிக் கரைசேர்வ தெந்நாளோ?

    பாதிமுகம் காணலியே! பாவி உனை மறக்கலியே!
    மாது முகம் காணுதற்கு மறுபிறப்பும் எந்நாளோ?

    தேன்வடியும் பூமுகத்தில் தென்றல் வந்து கிசுகிசுக்க
    நான் புரட்டிப் பார்க்கின்ற நன்னாளும் எந்நாளோ?

    கூந்தல் அலைபாய குதிகாலும் தாளமிடச்
    சேர்ந்து கதைபேசிச் சிலிர்த்திருப்பது எந்நாளோ?

    விடியக் கதைபேசி விடிந்தபின் கண்ணுறங்கும்
    முடியாத பொழுதெனக்கு நீளுவதும் எந்நாளோ?

    முந்தைய பத்தியொன்றில் குறித்தவாறு மரபு என்பது படிவது. ஆற்றில் மணல் படிவது போல. திணிப்பது அல்ல. சென்ற பத்தியிலே குறிப்பிடப்பட்ட கவிஞர்களையோ அவர்தம் படைப்புக்களையோ அவர் அறிந்திருக்கிற வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பெருமக்களுடைய கவிதைச் சாயல் அப்படியே இவர் பாடலில் படிந்திருக்கிறது. யாப்பிலே எழுதப்படுவதெல்லாம் மரபுக் கவிதை என்பது மூளைக் கோளாறு உள்ளவர்களின் ‘முதுமை உளறல்’.  பொருள் கட்டமைப்பு, வடிவ நேர்த்தி, உத்திச் சிறப்பு, சொல்லாட்சித்திறன் ;இவற்றில் மரபு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாயின் முகச் சாயல் மகளுக்கு என்றால் அது படிவதேயன்றி வெட்டி ஒட்டுவது அன்று. அப்போதுதான் அது மரபுக்கவிதை. முத்துசாமிக்கு மிக ஆழமான யாப்பறி புலமை  இருப்பதாகக் கருத முடியாது. அவர் கட்டளைக் கலித்துறை எழுதவில்லை. நேரிசை வெண்பாவில் காவியம் படைக்கவில்லை. மடக்கும் தெரியாது. கொச்சக ஒரு போகும் தெரியாது. சிற்றெண் தெரியாது. பேரெண் புரியாது. இருந்தாலும் அவர் கவிதை எழுதுகிறார். அவர் எழுதுவது கவிதையாகப் பரிணமிக்கிறது. காரணம் அவரிடம் கவியுள்ளம் இருக்கிறது. கவிதையை அவர் இனங்கண்டு கொள்கிறார். அதனைவிட யாரிடம் சேரவேண்டும் என்று தடம்பார்த்துக் கவிதை அவரிடம் சேர்ந்து விடுகிறது.

    திரிகூட ராசப்பக் கவிராயர் – கண்ணதாசன் – தாரமங்கலம்

    ஒரு பாட்டு ஏதோ ஒரு வகையில் கற்பவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அவனையும் அது போல எழுதத் தூண்டினாலும் அது மரபின் தாக்கமாகவே கருதப்படும். தொல்காப்பியத்தின் தாக்கத்தினால்  திருக்குறளில் வந்திருக்கும் பதிவுகள் பல. ஒரு இலக்கண நு}லுக்கே இத்தகைய தாக்கம் இயலுமெனின் இலக்கியத்திற்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. குற்றாலக் குறவஞ்சியில் நாட்டுவளம் கூறும் ஒரு பாடல்.

    ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்!!
    ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்!
    வாடக் காண்பது மின்னார் மருங்குல்!
    வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு!
    போடக்காண்பது பூமியில் வித்து!
    புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து!
    தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி!
    திருக்குற்றாலர்தென் ஆரிய நாடே!

    “குற்றால நாட்டிலிருந்து மக்கள் வெளியேற மாடடாரகள். ஆற்றில் வெள்ளந்தான் வெளியேறுமாம். யோகியரின் உள்ளங்கள் ஒடுங்கும். மக்கள் உள்ளம் விரிவடையும். கன்னியரின் இடை வாடுமே தவிர மக்கள் முகத்தில் வாட்டமில்லை. வருத்தமடைவதெல்லாம் கரு தரித்த சங்குகளேயன்றி மனிதர்கள் அல்லர். போடுவதெல்லாம் மண்ணில் வித்துக்களேயன்றிப் பயனற்றவர்கள் என யாரையும் கழிப்பதில்லை. காதில் அசைவதினால் ஒலியெழுப்பிப் புலம்புவதுபோல் வசப்படுத்துவது கிண்கிணியேயன்றி ஏழைமக்கள் அல்லர். இந்த மக்கள் தேடுவதெல்லாம் நல்ல அறத்தையும் அதனால் வரும் புகழையுமேயன்றி நிலையற்ற செல்வங்கள் அல்ல”

    என்னும் நாட்டுவளத்தைக் கூறும் அரிய பாடல் கண்ணதாசனைக் கவர்ந்திருக்கிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தப் பாட்டுக்கு முன்னர் ஒரு பாட்டு உண்டு. அது இதனைவிடச் சிறந்தது.

    நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்!
    நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்!
    தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து!
    சுழலக் காண்பது பூந்தயிர் மத்து!
    வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை!
    வெடிக்கக் காண்பது கொல்லையில் முல்லை!
    ஏங்கக் காண்பது மங்கலப் பேரிகை!
    ஈசன் ஆரியர் நாடெங்கள் நாடே!

    என்பது அந்தப் பாடல். இந்தப் பாடல்களில் உள்ள ‘காண்பது’ என்ற சொலலாட்சியில் மனம் பறிகொடுத்த கண்ணதாசன் தான் எழுதிய திரையிசைப்பாடலில் இந்தச் சந்தத்தைத் தனக்குச் சொந்தமாக்கியிருக்கிறார்.

    “ஆடக்காண்பது காவிரி வெள்ளம்
    அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
    ஓடக்காண்பது பருவத்துக் காற்று”

    நகலை அசலாக்கும் முயற்சி என இதனைக் கருதிவிடக் கூடாது. கவிதை மூளையைச் சீண்டிப் பார்க்கக் கூடாது. இதயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும். பிசைந்து  பார்க்க வேண்டும். திரிகூடராசப்பக் கவிராயரும் கண்ணதாசனும் முத்துசாமியின் இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். மனத்தைக் கொள்ளை கொண்ட இதே சந்தத்தில்  இன்றைய சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    ஓடக் காண்பது சாலையில் மக்கள்!
    ஒடுங்கக் காண்பது வீதியின் வெளிகள்!
    பாடக் காண்பது பாமரர் வயிறு!
    பழிக்கக் காண்பது பணக்காரர் தொப்பை!
    வாடக் காண்பது ஏழைகள் உள்ளம்!
    வதங்கக் காண்பது மழலைகள் முகங்கள்!
    தேடக் காண்பது தெருக்களில் வெறுமை!
    தெரியக் காண்பது மக்களின் வறுமை!

    ஆடக் காண்பது ஆட்சியர் நோக்கு!
    அடக்கக் காண்பது அதிகார வர்க்கம்!
    சூடக் காண்பது சாலையில் மரங்கள்!
    சுழலக் காண்பது வீட்டினில் விசிறி!
    நாடக் காண்பது நாட்டினில் ஓலம்!
    நடுங்கக் காண்பது நடுத்தர வாழ்க்கை!
    போடக் காண்பது பிச்சையில் சிறிது!
    பொலியக் காண்பது தொழிலாளர் கவலை !

    சந்தத்தையும் சொல்லாட்சியையும் பயன்படுத்திப் பாடுபொருளில் இன்றைய சமுதாயத்தின் அவல நிலையை அழகியல் குறையாமல் அங்கதம் பழுதுபடாமல் நாசுக்காகப் பதிவு செய்திருக்கிறார் முத்துசாமி. பொறுமையாக உட்கார்ந்து இந்தப் பாடல்களை ஒப்பிட்டு நோக்கினால் தொடர்ந்து வரும் கவிதை மரபினை முத்துசாமி எவ்வாறு தன் சமுதாயத்தைப் பாடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்குதடையில்லாத எளிய நடை கவிதையை இனிமையாக்குகிறது.

    கழிந்ததற்கு இரங்கல்

    இறந்த காலத்தை எண்ணி அசைபோடுவது எலலாருக்கும் இயல்பு. பெரும்பாலும் கவிஞர்கள் வாழ்க்கை வறுமையில் தொடங்கி வறுமையில் முடிகிறது. வேறு வாய்பாட்டில் சொன்னால் கவிஞர்களை வறுமை தின்ற போது, கவிதை வளமாக இருந்தது, கவிஞர்கள் வளமாக வாழ்கிறபோது கவிதை வாழாவெட்டியாகிவிடுகிறது. நான் முன்பே கூறியபடி ஒரு கவிதையின் வெற்றி இறுதிவரியில் ஒளிந்திருக்கும். தன் நண்பனை எண்ணி முத்துசாமி பாடுகிறார்.

    “கட்டணத்தில் படிக்கின்ற காலமொன்று இருந்ததாலே
    எட்டாவது மாதத்திலே கட்டுதற்குப் பணமில்லை!

    என்னைப்போல் ;இன்னொருவன் இணைந்திட்டான் என்னோடு!
    புன்னை மரநிழலில் பொழுதெல்லாம் கதைபேசி

    மணியடிக்கும் வேளையிலே படித்து முடித்ததைப்போல்
    தனியாளாய் வீடு வந்த சங்கடத்தை என்ன சொல்ல?

    எப்படியோ பள்ளிக்குள் எடுத்து  அடிவைத்தோம்!
    தப்பாமல் படித்துத் தனித்தனி ஆளானோம்!”

    இதுவரை பள்ளி வாழ்க்கையின் போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் முத்துசாமி, இறுதிவரியில் அவர்களுடைய இன்றைய நிலையைப் பதிவு செய்கிறார் இப்படி!

    “அள்ளிவந்த விதியாலே கோடீசுவரன் அவனாக
    எள்ளி நகையாட எளிய கவியானேன்!

    இந்த முழுப்பாடலிலும் பள்ளி நிகழ்வுகளின் ஆழம் வெளிப்பட்;டிருக்க வேண்டும். இதுபோன்ற கடந்த கால நினைவுகளைக் காலத்தால் அழியாக் கவிதையாக்குவது கவிஞர் கடன். முத்துசாமி இதில் போதிய வெற்றியை அடைய முடியாமற் போனதற்குக் கடந்த கால நிகழ்வை ‘அருமையான கவிதைக் கரு’ என அவரால் கருத முடியாமற் போனதுதான். இதே போன்ற ஒரு சாதாரண நிகழ்வைத் “தோழிமார் கதை” என்னும் தலைப்பில் கவிஞர் திரு வைரமுத்து பாடியிருப்பதையும் ‘அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?” என்னும்  தொடித்தலை விழுத்தண்டினார் வரிகளையும் இங்கே நினைவு கூறலாம். என்றாலும் சமுதாயத்தின் இரக்கத்திற்கு ஆளாகிப் போன ஒரு சாதாரண கவிஞனாக ஆன முத்துசாமி  தன்னுடைய விதியை நொந்து கொள்வது கவித்துவம் நிறைந்த அடியாகும்.!

    சுடுகின்ற நிஜமும் குளிர்கின்ற நிழலும்

    மரணம் இனிக்காது. மரணம் பற்றிய கவிதை இனிக்கும். பிரிவு  இனிக்காது. பிரிவு பற்றிய கவிதை இனிக்கும். நிஜம் சுடும். நிழல் தழுவும். ஒப்பாரி வேறு. ஒப்பாரியைக் கேட்டுக் கலங்கி நிற்பது வேறு. கலையின் வியத்தகு போக்கு இதுதான். தமிழ்க் கவிதைகளின்  சுற்றுவட்டப் பாதை என்பது காதல், மானுடம், சமுதாயச் சிந்தனை, இயற்கை என்னும் சிலவற்றுக்குள் அடங்கி விடும். இவை இணையான பகுப்புக்கள் அல்ல. விகிதாசாரம் மாறுபடும். காதல் தொண்ணூறு விழுக்காடு இடத்தை அடைத்துக் கொள்கிறது. காதலைப் பாடுபொருளாக்காத கவிஞன் மகாகவி பாரதி ஒருவனே. மாறாகப் பாரதிதாசன் அறுபது விழுக்காட்டு இடத்தைக் காதலுக்கு ஒதுக்கியவன். இது தமிழ்க் கவிதையியலின் நீண்ட நெடிய மரபின் பெருந்தாக்கமாக இருக்கலாம். சுற்றுவட்டப் பாதையின் நிறுத்தங்களில் ஒன்றான சமுதாயச் சிந்தனைகளை உள்ளுணர்வோடு பாடுங்கவிஞர்கள் எண்ணிக்கையில் குறைவு.

    சமுதாயம் பாதிப்பது கண்டு மனமுருகிப் பாடுவதும் சமுதாயச் சிந்தனைகளைப் பாடுவதுதான். நேரடியாகத் தன்னைப் பாதிப்பதைக் கவிதையில் வெளிப்படுத்துவதும் அத்தகையதே. 2019 – 2022 ஆகிய மூன்றாண்டுக் காலத்தில் இந்த மக்கள் உலகம் கொரானா என்னும் கொடிய நச்சுக்கிருமி நோயால் பட்ட பாடு பெரும்பாடு. தமிழ்க்கவிதை உலகினைப் பொருத்தவரையில் உதட்டளவில் பேசப்படும் ஈழப்போர் பற்றியும் அவ்வளவாகக் கவிதைகள் இல்லை. கொரானா பாதிப்புப் பற்றியும் அவ்வளவாகப் பாதிப்புக்கள் இல்லை. அன்பர் முத்துசாமி கொரானாவைப் பற்றிய தன் சுய அனுபவத்தை எளிய கிளிக்கண்ணிகளில் வடித்துக் காட்டியிருக்கிறார்.

    “கொரானா வந்ததனால் குதூகலம் போனதடி!
    குடும்பம் குலைந்ததடி – கிளியே
    கூறுகெட்டுப் போனோமடி!

    மாதம் பலவாக மனையடைத்துக் கிடப்பதனால்
    ஏதும் அறியோமடி! கிளியே!
    அறிந்தவர் யாரடியோ?

    சோற்றுக்கு வழியின்றிச் சோம்பிக் கிடந்தோமே!
    மாற்றுவழி காணோமடி! கிளியே!
    மந்தையாடு ஆனோமடி!

    வாழ வழியில்லை! வாழ்க்கை தெரியவில்லை!
    ஏழையாய் போனோமடி! கிளியே!
    எதிர்காலம் எங்கேயடி?

    ‘கிளிக்கண்ணி’ என்பது ஒரு எளிய நாட்டுப்புறக் கவிதை வடிவம்.  கல்லிடைக் குறிச்சி  சுப்பராயலு இதனை  இருபகுதிகளாகப் பாடியிருக்கிறார். ‘உத்தரகோச மங்கை கிளிக்கண்ணி என்று ஒரு நூல் உண்டு. சிவபெருமானைப் பாடும் அந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகாகவி பாரதியார் முருகனிடம் மையல் கொண்ட தலைவி, கருப்பொருள் சிறக்கக் கிளியைத் தூதுப் போருளாகப் பாடியிருக்கிறார்.

    “அல்லி குளத்தருகே — ஒரு நாள்
    அந்திப் பொழுதினிலே அங்கொர்
    முல்லைச் செடியதன்பால் – வினை
    முற்றும மறந்திடக் கற்றதென்னே  என்று
    சொல்ல வல்லாயோ கிளியே!”

    என்பது பாரதியின் பாட்டு, எல்லாரும் அறிந்து பெரும்புகழ் பெற்ற “நடிப்புச் சுதேசிகள்” என்னும் கவிதை ‘கிளிக்கண்ணி’ வடிவத்தில் அமைந்ததாகும். சமயப் பொருண்மை தழுவியும் சமுதாய மாந்தர் இழிநிலை தழுவியும் பெருங்கவிஞர்களால் பாடப்பெற்ற இந்தக் கிளிக்கண்ணியில் எளிய தமிழ் கொண்டு கொரானாவின் பாதிப்புக்களை உள்ள்ம் நெகிழுமாறு பாடியிருக்கிறார் முத்துசாமி. அவசரமாகக் கவிஞராக முயலும் அன்பர்கள் கொரானாவின் கொடுமைகள் பற்றி எத்தனைப் பேர் பாடியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கவிதையும் முத்துசாமியும்

    வறட்டு யாப்பிலக்கணத்தையே ‘கவிதை’ என்று எண்ணி மருளும் குருட்டுப் பேர்வழிகளில் ஒருவர் அல்லர் முத்துசாமி. தமிழில் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் கவிதை என்பது உணர்வின் வெளிப்பாடு. உணர்ச்சியின் உந்துதல், இயற்கை ரசிப்பின் எழிலான தோற்றம், இளகிய மனத்தின் அழகிய ஓவியம் என்று எண்ணிக் கவிதை புனைபவர். இந்தப் பொருண்மையில் என்னோடு முழுமையாக அவர் ஒத்துப் போகாவிட்டாலும் கவிதையை யாப்பிலக்கணத்தால் அளவிடுவது தவறு என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.

    பழம்பெரும் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தொகுத்துச் சாகித்திய அகாடமி வெளியிட்டிருக்கும் தமிழ்க்கவிதைக் களஞ்சியத்தில் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுப் பதிவாகியுள்ளன. ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன்; அந்த நூலை மட்டும் படித்தால் போதுமானது. அந்த நூலில் திரைப்படப் பாடல் ஒன்றினை இலக்கியத் தகுதிக்கு உயர்த்திப் பதிவிட்டிருக்கிறார் பிள்ளை. அந்தப் பாடல்

    “மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
    மணல் கூட சிலநாளில் பொன்னாகலாம்!
    ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
    அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?

    என்ற கண்ணதாசன் பாடல்தான் அது. பொருள் முரண்களையும் வாழ்வியல் முரண்களையும் அழகியல் மேம்பட கண்ணதாசன் பாடிய பாடல் அது. அந்தப் பாடலில் மனம் பறிகொடுத்த முத்துசாமி அதே வாய்பாட்டில் கவிதை எது என்பது பற்றி எழுதிய பாடல் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    வான்கோழி மயிலாகலாம்!
    வான்மழையும் புயலாகலாம்! வெறும்
    வார்த்தை கவியாகுமா? ‘சீர்’
    வரிசை எனையாளுமா?

    காளான் மரமாகலாம்! – சுவைக்
    கற்கண்டும் கசப்பாகலாம்!
    தேமா கவியாகுமா? – கனிச்
    சீரெல்லொம் கனியாகுமா?

    ஆர்ப்பாட்டம் கொண்டாடுதே! தினம்
    அரைகுறைகள் வென்றாடுதே!
    போர்ப்பரணி என்றாடுதே – குறைப்
    புலமையால் திண்டாடுதே!

    கலைஞர் சங்கத்தமிழ் மக்களிடம் சென்று சேரவேண்டும் எனக்கருதி எழுதியதுதான் சங்கத்தமிழ். அதில் அவர் புறநானூற்றை மீட்டுருவாக்கம் செய்யவில்லை. ஒரு நூறு சங்கப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தை வசனகவிதையில் தனக்கே உரிய அழகியல் உணர்வோடும் மொழியுணர்வோடும் புதுக்கவிதைப் போக்கில் எழுதிக்காட்டினார். இதற்கு மாறாக எழுத்தாளர் சுஜாதாவும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் புறநானூற்றையே வேறு வடிவத்தில் எழுதித் தடுமாறினர். வேறு சில பேர்வழிகளும் புறநானூற்றைத் தங்கள் வறட்டு மொழியில் வடிவமைத்தனர். இதில் கொடுமை என்ன வென்றால் அவர்கள் தங்களைக் கலைஞர் என்று எண்ணிக் கொண்டதுதான். அவர்களுக்குக் கலைஞர் என்ன செய்தார் என்பதையும் விளங்கிக் கொள்ளும் திறனும் இல்லை. ஒரு இலக்கியத்தை இன்னொரு வடிவத்தில் படைப்பதால் விளையும் பயனேதும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் திறனும் இல்லை.

    விருதுகளுக்காக அலைந்து திரியும் பலருக்குமான களமாகத் தமிழகம் மாறிவிட்டது. எத்தனை ஆயிரம் கவிஞர்கள்?. யாருடைய கவிதை பொதுவெளியில் பேசப்படுகிறது? பேசப்படாமல் போனதற்கு என்ன காரணம். ஆர்ப்பாட்டம் இசையாகாது! வாய்பாடுகளைக் கவிதை என்று எண்ணி மருகும் பரிதாப நிலை நீடிக்கும் வரை இங்கே கருப்பைக் குழந்தையாகவே கவிதை ஒடுங்கிவிடும். சிந்து போன்ற சந்தப்பாடல்களைப் பாட எத்தனிப்போர் தாம் எழுதியதை வாய்விட்டுச் சொல்லிப் பார்ப்பதில்லை. எழுதுகிற கவிதைகளிலும் ஒற்றுப் பிழைகள். வாங்குகிற விருதுகளிலும் வல்லினப் பிழைகள். ‘மலிவுப் பதிப்பு’ என்பதற்குப் ‘பிழை மலிவு பதிப்பு’ என்று பொருள் போலும்

    தண்டியலங்காரமும் தாரமங்கலமும்

    எந்த வகையிலும் தமிழிலக்கணத்திற்கோ, இலக்கியச் பயிற்சிக்கோ தமிழ்க்கவிதைக்கோ எள்ளின் முனையளவும் பயனளிக்காத நூல் தண்டியலஙகாரம். இதுபோன்ற நூல்களே தமிழில் அதுபோன்ற நூல்கள் இல்லை என்னும் போலிக் கருத்தியலை முன்னெடுக்கக் காரணமாகும். எழுத்து, சொல், பொருள் என்பதே தமிழ் நெறி. எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி என்பது வடமொழி மரபு. தமிழ்க்கவிதைகளில் அணியிலக்கணம் ஆராயப்படவில்லை. தமிழ்க்கவிதைகளுக்கும் அணிகளுக்கும் தொடர்பே இல்லை.  உவமம் அணியன்று. அது பொருட்பகுதி. அதனால்தான் தொல்காப்பியர் அதனைப் பொருட்பாலில் வைத்தார். அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியே உவமம். உவமம் புறம் சார்ந்ததன்று. அகம் சார்ந்தது. அகப்பொருளுக்குத்தான் உவமம். சங்க இலக்கியம் உட்பட பின்னாலே வந்த இலக்கியங்கள் உவமத்தைப் பொருள் விளக்கத்திற்காகவே பயன்படுத்தியிருக்கின்றனவேயன்றிச் செய்யுளின் அழகுக்காகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பிறமொழி அறிவும் தள்ளத்தக்கதன்று என்னும் விரிந்து பரந்த மனநிலை தமிழிலக்கணக் கற்றலிலும் நிலைபெற்றது. இதன் விளைவாகவே தண்டியலங்காரம் என்னும் வடமொழி நூல் பல்வகை அணியிலக்கணங்களை முன்னெடுக்கிறது. உவமம் அதில் ஒன்று. இந்தத் தண்டியலங்காரந்தான் உவமத்தை ‘உவமை’ என்று பிழையாகக் கூறியது. உவமம் தமிழ்ச் சொல். ‘உவமை’ உவமத்தின் பண்பைக் குறிக்கும் மையீற்றுப் பண்புப் பெயர்.  இந்த உவமத்துள் ஐயவுவமை என்பதும் ஒன்று. அதற்கான பொருள் பாட்டைத் தண்டியலங்கார ஆசிரியரே எடுத்துக்காட்டியுள்ளார்.

    “தாது அளவி வண்டு தடுமாறும் தாமரை கொல்?
    மாதர் விழி உலவும் வாள் முகம் கொல் – யாது என்று
    இருபால் கவர்வு உற்று இமை ஊசலாடி
    ஒருபடாது என் உளம்”

    இந்தப் பாட்டில் கண்களை வண்டுக்கும் முகத்தைத் தாமரைக்குமாக்கி ஐயப்பட்டது காண்க. இந்த மரபு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் இருந்திருக்கிறது.

    “ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
    அம்மா அரிவையோ அல்லள்!
    தெனாது ஆஅய் அணங்குடைச் சிலம்பில்
    கவிரம் பெயரிய உருகெழு கவான்
    ஏர்மலர் நிறைமலர் உறையும்
    சூரமகள் மாதோ? எனும் என் நெஞ்சே!”

    என்பது அகநூனூற்றில் “அரிவையோ அல்லள்”. என்றும் “சூரமகளிர் மாதோ?” என்றும் தலைவன் ஐயப்பட்டது காண்க. இதனை வழிமொழிந்த திருவள்ளுவர் கண்ட தலைமகன்

    “அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
    மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு”

    என்று ஐயப்படுகிறான். இந்த நெடிய மரபில் வந்த கவிஞன் ஒருவன் எழுதுகிறான்

    “பூவிடத்தில் வைகும் புதுவித பொன்வண்டோ?
    தாவிஎனைத் தாக்கும் கண் தான் இதுவோ? –ஆவிக்குள்
    சென்று அலைக்கழிக்கச் செய்வ தறியாது
    நின்று தவிக்கின்றேன் நீண்டு!”

    என்று. இந்தப் பாட்டில் கண்ணா? வண்டா என்பதுதான் தலைவனின் ஐயம். தன்னிகரற்ற திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் இதனை வேறு வாய்பாட்டில் பதிவு செய்திருக்கிறார்.

    பேசுவது கிளியா? இல்லை
    பெண்ணரசி மொழியா?
    கோவில் கொண்ட சிலையா?
    கொத்துமலர்க் கொடியா?

    பாடுவது கவியா? இல்லை
    பாரி வள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா?
    செந்தமிழர் நிலவா?..

    கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா? — இல்லை
    கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?

    வில்லேந்தும் காவலன்தானா?
    வேல்விழியாள் காதலன்தானா?
    சொல்லாமல் சொல்லும் மொழியில்
    கோட்டை கட்டும் நாவலன்தானா?

    மன்னாதி மன்னர்கள்
    கூடும் மாளிகையா?
    உள்ளம் வண்டாட்டம் மாதர்கள்
    கூடும் மண்டபமா?

    செண்டாடும் சேயிழைதானா?
    தெய்வீகக் காதலிதானா?
    செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
    செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

    இங்கே வாய்பாடு மாற்றம் என்பது மரபு மாற்றம். அல்லது மரபின் வளர்ச்சி. அதாவது பெண்ணைத்தான் ஆண் ஐயப்படுவான். தலைவியைத்தான் தலைவன் ஐயுறுவான். தலைவி தலைவனை ஐயுறுவது மரபன்று. இந்த மரபை உடைத்தவர் சேக்கிழார்.

    “முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகொளியால்
    தன்னேரில் மாறனோ? தார்மார்பின் விஞ்சையனோ?
    மின்நேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
    என்னே? என் மனம் திரிந்த இவன் யாரோ?

    என்று சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்ட பரவை நாச்சியார் ஐயுற்றதாகப் பாடிப் புதுமரபுக்குத் தடம் காட்டியிருக்கிறார். .கண்ணதாசன் பழந்தமிழ் மரபையும் சேக்கிழார் மரபையும் ஒரு சேரத் தழுவியிருக்கிறார். “பேசுவது கிளியா” என்ற இந்தப் பாடலில் தலைவனும் தலைவியும் ஒரே சூழலில் ஒருவொரையொருவர் ஐயப்பட்டுக் கொள்கிறார்கள் என்பது தமிழ்க்கவிதை உத்திக் களத்ததில் ஓர் புதுமை. இந்த மரபைத் தாரமங்கலத்தார் இப்படிப் பாடியிருக்கிறார். .

    “வானில் தவழும் தாரகையோ?இங்கே
    வந்தெனை வாட்டும் மேனகையோ?

    புன்னகை பூக்கும் புதுநிலவோ? இன்று
    புதிதாய்ப் பூத்த பூச்சரமோ?

    கண்ணில் ;இனிக்கும் கற்கண்டோ? – எனைக்
    கவர்ந்தே இழுக்கும் காரிகையோ?

    செவ்விதழ் பதித்த திருமுகமோ? என்
    சிந்தை கவர்ந்த திருக்குறளோ?

    கவ்வத் துடிக்கும் கன்னங்களோ? கனிச்
    சாறு நிறைந்த கிண்ணங்களோ?

    கண்களா? இல்லை மீனினமா? உயிர்க்
    கற்பைக் காப்பதில் மானினமா?

    கரிய கூந்தல் வான்முகிலா? அவள்
    கலைதவழ் முகமொரு வெண்ணிலவா?

    நெளியும் மின்னல் நேர்வகிடா? இவள்
    நிமிர்ந்து நடப்பது தேர்த்தடமா?

    இந்தக் கவிதையில் எதுவும் புதுமையில்லை.  ஆனால் இயல்பாக வந்த மரபின் தாக்கம் இது என்பதைத் தெளிவாக்குகிறது. இது மரபை மீறியதோ மீறுவதோ அன்று.. இயல்பாக அமைவது. மொழியின் எளிமை மரபுக்கு எதிரானது அன்று. உடன்போக்குக்கு உரியது. இதுதான் மரபுக் கவிதை. இரண்டு காய், நாலு கனி, மூன்று விளம், ஐந்து மா என்றெல்லாம் கணித வாய்பாடுகளை எழுதிவைத்துக் கொண்டு கவிதை என்று நம்ப வைக்க முயல்வார் ஏராளம்.  மரபு, மரபு மாற்றம், மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல், அதற்கேற்பப் படைத்துக் காட்டுதல் என்னும் சீரான கவிதைத் தொழிலைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் தாரமங்கலம்!

    மாலை மயக்கமும் மது மயக்கமும்

    தமிழ்நாடு எதிர்நோக்கும் சிக்கல்களில் தலையாயது இளைஞர்களிடத்தில் நிலை கொண்டிருக்கும் போதைப் பழக்கமாகும். இது சாராயத்தில் சொடங்கிக் கஞ்சா வரை நீளுகிறது. போதைப் பொருட்களின் பொருள்களுக்கு அகராதிகள் பொருள் தேடிக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் கள்ளத்தனமாகப் புழங்கும் இந்தத் தொழிலில் இருப்பவர் அதிகார வர்க்கத்துக்கு வேண்டியவர்களாக இருப்பதும் எண்ணிப்பார்க்க முடியாத சிக்கலாகும். எதனையும் அரசியலாகப் பார்க்கப் பழகிப் போன ஒரு அழுகிய சமுதாயத்தில் அந்த ஒட்டு மொத்த சமுதாயமும் அழிவுத் தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாகப் புரிந்து  கொள்ள முடியாது. இளங்குழந்தைகளுக்கு நாளும் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு அரசு எப்படிக் காரணமாக இருக்க முடியும்? அதே நேரத்தில் தெருவுக்கு மூன்று கடை திறந்து வைத்துவிட்டுக் குடிக்காதே என்றால் என்ன பொருள்? எந்த மட்டத்திலும் சமுதாய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சமுதாய இழிநிலைகளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞர்கள் ஈடுபாடு கொள்வதில்லை. பள்ளிமாணவன் பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனிப்பதைக் கூட அரசியல் கட்சிகள் அரசியலாக்கும் ஒரு பரிதாபமான நிலை இங்கே நிலவுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி மதுவின் கொடுமையைப் பாடியிருக்கிறார். குழந்தைகளுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    “எதுகுடித்தால் இன்பமெனில்
    மதுகுடித்தால் இன்பமென்பாய் !

    மதுகுடிக்கும் உன்னுயிரை
    மயக்கத்தில் நீயிருப்பாய் ;
    அதுகுடிப்பது உன்னுயிரை
    அடுத்தடுத்து உம்முறவை !

    இதுகுடித்து ஏப்பமிடும்
    எல்லையிலாத் துன்பம்தரும் ;
    மதுகுடித்த போதையிலே
    மயங்குகிற பேதையரீர்!

    சதிசெய்யும் சாத்தானாய்ச்
    சந்ததிக்கே ஊறுசெய்யும் ,
    மதிமயக்கி உமையழித்து
    மானமதைக் கெடுத்துவிடும் !

    விதிமுடிக்க வருமுன்னே
    விழித்துவிடு குடிமகனே !
    அதுவுன்னை முடிக்குமுன்னே
    நீ அதனை முடித்துவிடு!”

    கவிதையின் முதல் வெற்றி பாடுபொருள் தேர்வில் இருக்கிறது, காரணம் கவிஞனை முதலில் பாதிப்பது அதுதான். அந்தப் பொருளுக்கான வடிவம் அதன் முழுவெற்றியைத் தீர்மானிக்கிறது. பாமர வழக்கில் பாமரர்களுக்காகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிமையும் எளிமையும் இணைந்து தாரமங்கலத்தாரின் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துகிறது. கற்பனை குறைவான கவிதைதான். யதார்த்தங்களைப் பட்டியல் போட்டு மதுவின் கேடுகளை நிரல்படுத்தி எளிய தமிழில் எல்லார்க்கும் புரியும் வண்ணம் பாடியிருக்கும் சதுரப்பாடு போற்றத்தக்கதா, இல்லையா?

    எளிய தமிழில் இன்றைய வாழ்வியல்

    தமிழிலக்கியத்தின் சாரமே சமுதாய வாழ்வியலைப் பாடுவதுதான். வெற்றுச் சொல்லாடல்களை வெறுங் கற்பனைகளோடு கலந்து படைக்கப்பட்ட இலக்கியங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழின் அமுதவடிவமான ஆழ்வார்ப் பாசுரங்கள் கூட அவ்வளவாக மக்களால் பேசப்படவில்லை. பகதியை மக்கள் உணர்வுப் பூர்வமான நாட்கடமையாகக் கொண்டனரேயன்றி அதனை இலக்கியத்தில் காண்பதற்கு அவர்களுக்குக் காலமில்லை போலும்!. இடைக்கால இலக்கியங்கள் எல்லாம் அந்தப்புர அந்தரங்கங்களைப் பாடுவதாகவே அமைந்து போனதால் அவை இலக்கிய வரலாற்றிலன்றி மக்களின் இதயத்தில் இடம் பெறவில்லை. பழைய கணக்குப்படி அமைந்த தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களில் வெகுமக்கள் செல்வாக்கினைப் பெற்ற இலக்கியம் என்று ஒரு சிலவே இருக்கின்றன. திரையிலே கற்பனைக் கதாநாயகர்களையே பார்த்த மக்கள், பாரதிதாஜாவின் ‘பதினாறு வயதினிலே’ பார்த்த பிறகுதான் தங்களையே திரையில் கண்டார்கள். அந்தப் படத்திற்குப் பிறகு வந்த சிறு நூறு படங்கள் யதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டின. ஒரு வீடு கட்டுவதில் உள்ள நடைமுறைத் துன்பங்களைப் பாலுமகேந்திரா ‘வீட்டில்’ காட்டினார்’ அரசியல் வாதிகளின்  கொடூர மறுபக்கத்தை ‘நிழல்கள்’ காட்டின. மருத்துவமனைகளின் அவலநிலையையும் மருத்துவர்களின் பணத்தாசையையும் ‘ரமணா’ காட்டியது. கற்பனைகளைவிட நடப்பியல் உண்மைகளையே மக்கள் இலககியங்களில் தேடுகிறார்கள் என்பதை இதனால் உணர முடியும்.

    “கையில வாங்கினேன் பையிலே போடல
    காசு போன இடம் தெரியல”

    என்று பட்டுக்கோட்டை எழுதுகிற போது ஒரு தொழிலாளி தன் வாழ்க்கையை  அதில் காண்கிறான்.

    “காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
    கையும் காலுந்தானே மிச்சம்”

    என்று அவன் பாடுகிறபோது ஒரு விவசாயி தன் உருவத்தைத் தானே பார்த்துக் கொண்டான். நடப்பியலைப் பாடுவதுதான் மக்களைக் கவர்கிறது. இதனால் மற்றவைகளை வெறுக்கிறார்கள் என்று பொருளன்று.  முத்துசாமி

    “வெலவாசி ஏறிப்போச்சு! வௌஞ்ச பொருள் கொறஞ்சு போச்சு!
    மழைக்காலம் மாறிப்போச்சு மக்களுக்கு அவஸ்தையாச்சு!
    கலிகாலம் முத்திப் போச்சு! கடமை குணம் வத்திப்போச்சு!
    பிழையாக நடப்பதெல்லாம் பெருமையாக மாறிப்போச்சு!

    பணப்புழக்கம் கொறஞ்சு போச்சு! பாவச்செயல் பெருகிப் போச்சு!
    மனப்புழுக்கம் அதிகமாச்சு! மக்கள் மனம் அழுக்குமாச்சு!
    தினந்தோறும் கவலையாச்சு! திரிஞ்ச வாழ்வு வழக்கமாச்சு!
    அனல் மேல் புழுவுமாச்சு! அழுத கண்ணீர ஆறாச்ச!

    என்று எழுதுகிறார். யாப்பிலக்கணம் அறியாத பாடல் இது. வெண்டளை வெறுந்தளை ஆன தருணம். காய்ச்சீரும் கனிச்சீரும் இல்லாத இந்தப் பாட்டில் கவிதை இருக்கிறது. மக்களின் கவலை இருக்கிறது. கனிச்சீர் விரவி வருவதாலேயே ஒரு பாட்டு இனித்துவிடும் அல்லது இனித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் பிடிவாதம் செய்யாதவர் முத்துசாமி!.

    நிறைவுரை

    யாப்பிலக்கண வாய்பாடுகளே கவிதை என்னும் மயக்க, மாய உலகிலிருந்து இயற்கையிலேயே விடுபட்டவர் முத்துசாமி. இது  மேலே சுட்டப் பெற்றிருக்கும் அவர் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆழமான சிந்தனையுடையவனுக்குச் சொற்களஞ்சியப் பெருக்கம் தேவையில்லை. திருக்குறள் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு, ஆனால் சொற்களைத் தேடும் ஆவேசமும் தீவிர மனநிலையும் இயல்பாக இருப்பவனே கவிஞன். வண்ணமும் து{ரிகையும் கையில் வைத்தவனெல்லாம் எப்படி இரவிவர்மா ஆக முடியாதோ அதுபோல்தான் எழுத்துக்களையும் அசைகளையும் வாய்பாடுகளையும் அறிந்தவனெல்லாம் கவிஞனாகிவிட முடியாது. மனநேர்த்தி பெற்றவனே கவிஞனாக முடியும். அழகான புலக்காட்சிகள் எவனுக்கு இயல்பாகத் தோன்றுகிறதோ அவனே கவிஞன். மனித இனததின் இயல்பையும் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் வெளிப்படுத்தாதவனை நிகழ்காலமே நிராகரித்துவிடும். தாரமங்கலத்தார் கவிதைகளில் இழையும் இனிமையும எளிமையும் சமுதாயச் சிக்கல்களை ஒரு வகை மனிதநேயத்துடன் அணுகும் அணுகுமுறையும் பண்பாடு காக்கும் போர்க்குணமும் கவியுலகத்தால் நிராகரிக்கக் கூடியன அல்ல.  இனிமையும்  எளிமையும் கலந்த கலவையே கவிதை என்பது பாரதியின் தாரகமந்திரம்  அந்தத் தாரகமந்திரத்தைத் தனது கவிதைகளில் இழையவிட்டிருக்கும் முத்துசாமிக்கு வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    அண்ணாகண்ணன்

    கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? – உன்
    கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

    என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1962ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கண்கள் திரைப்படத்தில், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில், கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைக்க, பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார்.

    பிற்போக்கான பல கருத்துகள், இந்தப் பாடலில் உள்ளன.

    ஆடவர் எதிரே செல்லாதே
    அம்பெனும் விழியால் கொல்லாதே
    காரிருள் போல் உன் கூந்தலைக் கொண்டு
    கன்னி உன் முகத்தை மூடு – தமிழ்க்
    காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
    மேகத்துக்குள்ளே ஓடு

    என்றும்

    புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?

    என்றும்

    கண்ணாடி முன்னால் நில்லாதே – உன்
    கண்ணாலும் உன்னைக் காணாதே

    என்றும்

    இந்த
    மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
    தனியே வருவது பாவம்

    என்றும் இதில் வரும் வரிகள், பெண்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டும் வரிகள்.

    பெண்கள் வெளியே வரக் கூடாது, சிரிக்கக் கூடாது, தங்கள் அழகைக் காட்டக் கூடாது, ஆண்களின் எதிரே செல்லக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, முகத்தை மூட வேண்டும், தனியே வெளியே செல்லக் கூடாது என அன்று இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய சமூக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் பாடல். அதே நேரம் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத பாடல். நாம் கடந்து வந்த தூரத்தைக் காட்டும் பாடல்.

    சில பிரிவினருக்குள் இன்றைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பலவும் அப்படியே இருக்கின்றன. இது, செய்திகளின் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது. ஆயினும், இப்படியான கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெரும்பான்மைப் பெண்கள் இன்று வெளியே வந்துவிட்டார்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். வீறுகொண்டு விழித்தெழுந்த பெண்ணினத்தின் ஒப்பற்ற ஒளியின் முன்னால், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    Share
  • மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    அண்ணாகண்ணன்

    மாநிலங்களவை உறுப்பினராகக் கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பேற்ற காட்சியைக் கண்டேன். அவர்கள் வாசித்த உறுதிமொழி வாசகத்தையும் கவனித்தேன்.

    ஆங்கில உறுதிமொழி வாசகம் இதுதான்

    Form of oath or affirmation to be made by a member of Parliament:—

    “I, A.B., having been elected (or nominated) a member of the Council of
    States (or the House of the People) do swear in the name of God / solemnly affirm that I will
    bear true faith and allegiance to the Constitution of India as by law established,
    that I will uphold the sovereignty and integrity of India and that I will
    faithfully discharge the duty upon which I am about to enter.”]

    தமிழில் உறுதிமொழி ஏற்றவர்கள் அனைவரும் ஒரே வசனத்தையே கூறினார்கள். சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் மீது எனக் கூறினார்கள். இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது என இருக்க வேண்டும். I will bear true faith and allegiance என்பதை உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் என்றார்கள். முன்னர், இது நம்பிக்கையும் விசுவாசமும் என இருந்தது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.

    பற்றார்வமும் பற்றுறுதியும் எனத் திருகலாகச் சொல்லாமல், உண்மையான பற்றும் உறுதியும் கொண்டிருப்பேன் என்றாலே எல்லோருக்கும் எளிமையாகப் புரியும். இங்கு இரண்டு முறைகள் பற்று வர வேண்டிய தேவையில்லை.

    I will uphold என்பதையும் பற்றி நிற்பேன் என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். காத்து நிற்பேன் என எழுதலாம்.

    solemnly affirm என்பதற்கு formal and dignified manner என்றும் sincerity என்றும் பொருள் இருக்கிறது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர், உளமார உறுதி மொழிகிறேன் எனக் கூறியிருக்கிறார்கள். இன்று பொறுப்பேற்ற கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் என்றார்கள். இது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தது போல் செயற்கையாக உள்ளது. உளமார என்பதே உயர்வானது.

    இதை யார் இவ்வாறு மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் உரிய குழுவினர் இதைச் சரிபார்த்தே அங்கீகரித்திருப்பார்கள். அப்படியும் இதன் தரம் சிறப்பாக இல்லை.

    எனினும், இன்று பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவர்களின் பணி சிறக்கட்டும். அவர்களின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாய் ஆகட்டும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 307 )

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 307 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வாசக உள்ளங்களே !

    மற்றொரு மடலில் உங்களுடன் இங்கிலாந்திலிருந்து இணைவதில் மகிழ்கிறேன்.

    ஜூலை மாதம், இங்கிலாந்து அரசியல் அரங்கம் ஒரு பெரிய திருப்பத்தை கண்டது.

    லேபர் கட்சி, 174 இடங்களில் வெற்றி பெற்று, “நாம் வந்தோம், பார்த்தோம், வென்றோம்” என்ற ரோமன் பாணியில் ஆட்சி ஏற்றது.

    ஆனால் மக்களின் மனநிலை? “வந்ததா? வென்றதா? எதற்காக?” என்ற கேள்விகள்.

    புதிய பிரதமர் ஸ்டார்மர், “மாற்றம் தேவை” என்ற முழக்கத்துடன் வந்தார்.

    ஆனால் மக்கள், “மாற்றம் வந்ததா, மாறிவிட்டதா?” என்று குழப்பத்தில். ஒரு பக்கத்தில், NHS (தேசிய சுகாதார சேவை) சீரமைப்பு, மற்றொரு பக்கத்தில், குடியிருப்பு விலை உயர்வு. மக்கள், “நாம் வாக்களித்தது வீடு வாங்க, வீரம் வாங்க அல்ல!” என்று புலம்புகிறார்கள்.

    ஜூன் மாதத்தில் வெப்பநிலை 30°C தாண்டியது.

    லண்டனில், லிடோக்கள் (திறந்த நீச்சல் குளங்கள்) “நீர் இல்லாமல் நீச்சல்” என்ற நிலைக்கு வந்தன.

    மக்கள், “நாம் வெப்பநிலையை எதிர்பார்த்தோம், வெப்பமூட்டத்தை அல்ல!” என்று குளிர்பானம் குடித்தபடி புலம்பினர்.

    அதே சமயம், “பிரைடு” விழா ஜூலை 5ம் தேதி நடந்தது. லண்டன் நகரம், வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது.

    ஆனால் சிலர், “நாம் வண்ணங்களை கொண்டாடுகிறோம், ஆனால் வணிகம் அதை விற்பனை செய்கிறது” என்று விமர்சனம் செய்தனர்.

    இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    ஆனால் ரசிகர்கள், “நாம் கிரிக்கெட் பார்க்கிறோம், அரசியல் விளையாட்டு அல்ல!” என்று விளம்பர இடைவெளியில் புலம்புகிறார்கள்.

    இங்கிலாந்து தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2–1 என்ற முன்னிலையில் உள்ளது. இந்தியா, எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது.

    ஆனால் லீட்ஸ் மற்றும் லார்ட்ஸ் போட்டிகளில் தோல்வி கண்டது.

    நான்காவது டெஸ்ட் ஜூலை 23–27 வரை மாஞ்செஸ்டரில் நடைபெற உள்ளது, இது இந்தியாவுக்கான மிக முக்கியமான போட்டி எனக் கருதப்படுகிறது.

    ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் சேரும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் அவரது பங்கேற்பு தொடரை சமநிலைப்படுத்த உதவலாம்.

    தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும்.

    ஜூலை 8–10, 2025 வரை பிரெஞ்சு அதிபர் எம்யூவல் மக்ரோன் தனது மனைவி பிரிஜிட் மக்ரோனுடன் இணைந்து இங்கிலாந்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில விஜயத்தை மேற்கொண்டார்.

    இந்த விஜயம், பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் மாநில வருகையாகும்.

    வின்ட்சர் கோட்டையில் நடந்த வரவேற்பு விழா, அரச குடும்பத்தின் பம்பரமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.

    மக்ரோன், பாராளுமன்றத்தில் உரையாற்றி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

    பாதுகாப்பு, குடியேற்றம், செயற்கை நுண்ணறிவு, கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் கூட்டாண்மை தீவிரமாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    ஜூலை 10, 2025 அன்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து “ஒன்று வருகை, ஒன்று திருப்பி அனுப்பு” என்ற புதிய அகதி உடன்படிக்கையை அறிவித்தன.

    இங்கிலாந்து, சட்டவழியாக உறவுகள் உள்ள அகதிகளை ஏற்க, சட்டவிரோதமாக படகில் வந்தவர்களை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் இது.

    ஆரம்பத்தில், வாரத்திற்கு 50 பேர் வரை திருப்பி அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது அகதிகள் கடல் வழியாக வருவதை தடுக்கும் முயற்சியாகவும், ஐரோப்பிய ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஒரு பைலட் திட்டமாகவும் உள்ளது.

    ஜூலை 2025இல், லேபர் கட்சிக்குள் இடது சாரி உறுப்பினர்களிடையே மனநிலை மாறுபாடுகள் தீவிரமாக காணப்படுகின்றன.

    முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பன், லேபரின் தற்போதைய மையவாத போக்கை எதிர்த்து, புதிய இடதுசாரி கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    சாரா சுல்தானா உள்ளிட்ட சில சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், கோர்பனுடன் இணைந்து புதிய கட்சியை உருவாக்க உள்ளனர்.

    இந்த புதிய கட்சி, பாலஸ்தீன ஆதரவு, நலத்திட்ட விரிவாக்கம், பணக்காரர்களுக்கான வரி சீரமைப்பு போன்ற கொள்கைகளை முன்வைக்கலாம்.

    லேபர் கட்சியின் இடது பாகம், குறிப்பாக டயான் அபோட், அப்சானா பேகம் போன்றவர்கள், கோர்பனின் கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

    புதிய கட்சி, இளைய வாக்காளர்கள் மற்றும் சமூகநீதி ஆதரவாளர்களிடையே ஆதரவை பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இது லேபர் கட்சிக்குள் புதிய பிளவுகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    ஆனால், புதிய கட்சி தொடர்ச்சியான ஆதரவை பெறுமா?

    அல்லது ஒரு தாற்காலிக அலைதானா? என்பது இன்னும் தெரியவில்லை.

    ஜூலை 11ம் தேதி, இசைக்கவி ரமணன் லண்டன் வந்தார்.

    இம்மாத முடிவுவரை லண்டனில்.இருக்கும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    ஜூலை 17, 2025 அன்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் மற்றும் ஜெர்மனிய அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ் லண்டனில் முக்கியமான சந்திப்பை மேற்கொண்டனர்.

    இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றது.

    அவர்கள் கென்சிங்டன்ட்ரீட்டி (“Kensington Treaty”) எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இது பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்தும் திட்டமாகும்.

    ஜெர்மனியில் இருந்து UK-க்கு செல்லும் பயணிகள், விரைவில் இ கேட் (e-Gate) வசதியைப் பயன்படுத்த முடியும்.

    இது வணிக மற்றும் கல்வி பயணிகளுக்கு பெரும் நன்மை தரும்.

    இலஞ்சம் மற்றும் அகதி கடத்தல் தொடர்பான சட்டங்களை ஜெர்மனி கடுமையாக்கும் திட்டத்தை ஸ்டாமர் பாராட்டினார்.

    “சிறிய படகுகள்” வழியாக யூகே(UK)க்கு வருவதை தடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இரு தலைவர்களும் உக்ரைன் மற்றும் காசா நிலைமைகள் குறித்து உரையாடினர்.

    இருவரும் நட்பு மற்றும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

    இந்த சந்திப்பு, பிரெக்சிட்டுக்குப் பிறகு யூகே – ஈயூ (UK–EU) உறவுகளை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

    ஜூலை 2025இல், இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையிலான உறவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    இருவரும் பொதுவான அரசியல் நிலைப்பாடுகள் இல்லாதபோதிலும், தனிப்பட்ட உறவுகள் மற்றும் குடும்ப மதிப்பீடுகள் மூலம் நெருக்கம் வளர்த்துள்ளனர்.

    ஸ்டாமர், ட்ரம்ப் மீது “நான் அவரை விரும்புகிறேன்” என்ற அளவிற்கு நேர்மையான பாராட்டுகளை தெரிவித்தார்.

    “அவர் லிபரல் அல்ல, ஆனால் நல்ல ஒப்பந்தங்களைச் செய்தார்” என ட்ரம்ப் கூறினார்.

    இருவரும் பிரெக்சிட்டுக்குப் பிறகு UK–US வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஒப்பந்தம், UK கார் மற்றும் விமான உற்பத்தி துறைகளுக்கான அமெரிக்க வரிகளை குறைத்தது.

    ட்ரம்ப், ஜூலை 25–29 வரை ஸ்காட்லாந்தில் தனிப்பட்ட விஜயத்தில் இருப்பார்.

    அப்போது ஸ்டாமருடன் அபெர்டீனில் சந்தித்து, வர்த்தக ஒப்பந்தத்தை “refine” செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

    ஸ்டாமர், ட்ரம்ப் மீது “அவர் குடும்பத்தை நேசிக்கிறார், அதுவே அவரை நிலைநிறுத்தச் செய்கிறது” எனக் கூறினார்.

    இது, இருவருக்கிடையே மனதளவிலான இணைப்பை உருவாக்கியதாக அவர் விளக்கியுள்ளார்.

    இருவருக்கிடையேயான உறவு, யூகே-யூஸ்(UK–US) உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும், உள்நாட்டு விமர்சனங்களை ஏற்படுத்தும் காரணமாகவும் மாறியுள்ளது.

    ஸ்டாமர், “தேசிய நலனுக்காக” இந்த உறவை வளர்த்ததாக கூறுகிறார், ஆனால் சில இடதுசாரி விமர்சகர்கள், “மதிப்பீடுகளுக்கு விரோதமான நட்பு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது அரசியல் அல்ல, ஒரு பரஸ்பர நலன் சார்ந்த நட்பு என ஸ்டாமர் விளக்குகிறார். ஆனால், “இது எவ்வளவு நீடிக்கும்?” என்பது இன்னும் ஒரு திறந்த கேள்வியே.

    இங்கிலாந்து கடந்த ஒரு மாதத்தில் அரசியல் மாற்றம், சமூக சுழற்சி, வானிலை வேறுபாடு என பல பரபரப்புகளை கண்டது.

    அன்பினிய உறவுகளே !

    மாதாந்த முக்கிய நிகழ்வுகளை ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    Share
  • கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது

    கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது

    அண்ணாகண்ணன்

    திகில் ஊட்டக்கூடிய இந்த இயல்பினை அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன்.

    கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது என்றும் நான் நினைக்கவில்லை.

    திரைப்படம் பார்க்கையில் அதிலிருந்து வெளியே நின்று பார்ப்பதில்லை. அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமாகவும் நானே ஆகிவிடுவது. பல பாத்திரங்கள் இருக்கையில் அதில் ஒன்றுக்குள் புகுந்துவிடுவது. அதன் உணர்வுகளுடன் ஒன்றிக் கலந்துவிடுவது. அந்த நேரத்தில் புற உலகிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுவது.

    திரையில் போர்க்களக் காட்சி. வாளுருவி, குதிரையில் ஏறி, எதிர்வரும் வீரர்களின் மேல் பாய்ச்சிக் கொல்வது. சுற்றி நின்று தாக்கும் நூற்றுக்கணக்கான வீரர்களைத் தனியொருவனாக எதிர்த்து நின்று சுழன்று சுழன்று தாக்குவது. இங்கெல்லாம் அந்த நாயகன் அங்கே தனித்து இல்லை.

    நாயகி தண்ணீர் குடிக்கையில் அந்தத் தண்ணீராக அவள் வாய்க்குள் புகுந்து, கழுத்தில் இறங்கி, நெஞ்சுத் துடிப்போடு வயிற்றில் இறங்குவது. ஒவ்வொரு நடன அசைவின்போதும் தன்னிச்சையாக அதேபோல் நடனம் ஆடுவது, சொடுக்கும் பார்வையிலும் துடிக்கும் உணர்விலும் கலப்பது.

    கிரிக்கெட் பார்க்கையில் பந்து வீச வரும்போது அந்தப் பந்துவீச்சாளராக மாறுவது. பிறகு அந்தப் பந்தாகவே மாறிவிடுவது. மட்டைவீச்சாளருக்கு வருகையில் மட்டை வீச்சாளராகவே மாறுவது. இப்போது மொத்த மைதானமும் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவாக மாறி, ஓடிவரும் அவரது காலாக, அவரது கையாக, முட்டியாக, கைப்பிடியாக, பிறகு அந்த ஈட்டியாகவே மாறி, எழுச்சியுடன் பாய்வது. டென்னிஸ் பார்க்கும்போது அந்த ஆட்டக்காரராக மாறுவது. இப்போது பந்தை எதிர்கொள்வதும் அடிப்பதும் அவர் இல்லை. நானே. திரையில் மட்டுமில்லை, நிஜத்திலும் இப்படித்தான்.

    கர்நாடக சங்கீதத்தில் ஓர் ஆலாபனையைக் கேட்கையில், அந்த நாவின் அசைவை, கண்டத்தின் அதிர்வை, மூச்சுக் காற்றின் பயணத்தை, அந்த இசை தோன்றும் இடத்தை உணர முடிகிறது. இதையே ஊளையிடும் ஒரு நாயின் குரல், தீனமாக எழும் ஒரு பசுவின் குரல், ஏங்கி அழைக்கும் ஒரு குயிலின் குரல் எழும் இடத்தையும் நெருங்க முடிகிறது.

    குழந்தையுடன் பேசும்போது குழந்தையாகவே மாறிவிடுவது, அதனுடன் சண்டையிட நேர்ந்தால் குழந்தையுடன் சரிக்குச் சரியாக நின்று சண்டையிடுவது, வாகனத்தை ஓட்டுகையில் முழுமையாக ஓட்டுநராகவே மாறிவிடுவது, தோசை சுடும்போது முழு கவனத்தையும் தோசையின் மீது வைப்பது, சாலையோரம் ஒரு புன்னகையைக் கண்டால், அதை முழு உள்ளத்துடன் ஏற்றுப் புன்னகைப்பது, எந்த வேலையைச் செய்யும்போதும் அந்த வேலையை மட்டுமே மனத்தில் நிறுத்துவது போன்றவை இயல்பாக நடக்கின்றன.

    இலக்கிய வரிகளைப் படிக்கையில் அதை எழுதியவரின் உள்ளத்துடன் பொருந்தி வாசிப்பது, திருவள்ளுவரின், ஆண்டாளின், பாரதியின், விவேகானந்தரின் உள்ளத்திற்குள் வாழ்வது, ஓர் அன்றாட நடவடிக்கை. எந்தப் பெரிய முயற்சியும் இல்லாமலே இதைச் செய்ய முடிகிறது. நினைத்த மாத்திரத்தில் அதுவாகவே மாறுவது.

    கூர்மையான, நுணுக்கமான சில பணிகளைச் செய்யும்போது, என் உடலே கூர்முனையாக மாறிவிடும். மொத்த உணர்வுகளும் ஆற்றலும் ஒரு புள்ளியில் குவிந்துவிடும். என் பார்வை குவியும். என் விரல் குவியும். என் வாய் குவியும். என் மூச்சுக் காற்றும் அதைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அதை நிறுத்திவைத்து, நிறைவேற்றும் பணிகளும் உண்டு.

    நான் செய்யக்கூடிய செயல்கள் பலவும் மிகச் சிறப்பாக இருக்கக் காரணம், அதற்கு என்னை ஒப்படைப்பதே. அச்செயலில் மாபெரும் ஆற்றல் படைத்த, மகத்தான ஆளுமை என்ற எண்ணத்தில் அதை நான் செய்யத் தொடங்குகிறேன். செய்யத் தொடங்கிய பின், அந்த எண்ணத்தையும் மறந்துவிடுவேன். அந்த நேரத்தில் வேறு எது குறித்தும் நான் சிந்திப்பதில்லை. விளைவு, இயல்பாகவே என் செயல்களின் தரம், பெரும் உயரத்தில் இருக்கும். சில நேரங்களில் வேறு சிந்தனையில் இருக்கும்போது, இன்னொரு பணியைச் செய்தாக வேண்டிய சூழல் தோன்றும். மனம் ஈடுபடாத நிலையில், சில பணிகள் சாதாரணமாக அமையும். சில நேரங்களில் இந்தத் தரம் போதும் என நானாக நினைப்பதால், சிலவற்றில் அது சராசரியாக அமைவதும் உண்டு.

    இப்படியான தருணங்களைத் தவிர்த்து, பல நேரங்களில் நான் பற்றற்ற நிலையில் இருப்பதுண்டு. அதாவது, எத்தகைய பணிகளையும், கூடுபாய்வதையும் முடித்துவிட்டு, அமைதிக்குத் திரும்பிவிடுவது. இரண்டும் இரண்டு மனநிலை, அவ்வளவே.

    நீ எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு. இது வெறும் தத்துவம் இல்லை. வாழ்க்கைக் கொள்கை. அனைத்தும் மனத்திலிருந்தே தொடங்குகிறது. இதை இங்கு எழுதக் காரணம், என்னைப் போல் இது எல்லோராலும் முடியும். கடினமான பயிற்சி எதுவும் தேவையில்லை. முழுமையாக நம்பினால் போதும். சிறிதும் ஐயமின்றி நம்புங்கள். உங்களாலும் உங்கள் மனநிலையை ஒரு கணத்தில் மாற்ற முடியும். அதற்குரிய தேவையும் விருப்பமும் இருப்பது இந்த மனநிலையை இன்னும் எளிதில் கொண்டு வரும். முயற்சி திருவினையாக்கும். ஒரே ஒரு முறை முயன்றாலும் போதும்.

    படம்: ஐயப்பன் கிருஷ்ணன்

    Share
  • பாகவதப் பாரதத்தில் போர்ச் சித்திரிப்புகள்

    வே. பா. இதழ் நேசராஜ்
    முனைவர் பட்ட ஆய்வு மாணவி
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    ithazhjoyson@gmail.com
    ஆய்வு நெறியாளர்: முனைவர் த. ஆதித்தன், இணைப்பேராசிரியர்

    ஆய்வுச் சுருக்கம்

    மனிதனின் உள்ளத்தில் இயல்பாக ஊறி எழும் பல்வேறு உயிர்க்குணங்களுள் போர் உணர்வும் ஒன்று என்பதைப் பாரதம் போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு மன்னனின் புகழ்நிறைந்த, வளமான வாழ்வைக் கண்டு மனம்நொந்த இன்னொரு  நாட்டு மன்னனுக்கு, அத்தகைய வாழ்வு தமக்கு இல்லையே என்று பொறாமை ஏற்பட்டது.  அதைத் தாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால், அவர்களுக்குப் பலவகையிலும் குற்றங்கள் செய்யத் துணிந்தான். அதனால் அவர்களுக்கிடையில் அது மிகப்பெரிய போராக உருவெடுத்தது. இத்தகைய சூழலில் ஒரு நாட்டைப் பாதுகாப்போடு ஆள்வதற்கு அடிப்படை உறுப்பாகப் படை அமைந்தது. படை இருந்தால் பாதுகாப்பு என்ற இலக்கணத்தோடு நாட்டை ஆட்சி செய்தவன், அதற்கேற்ப படைகளை உருவாக்கினான். அதுவே காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்காக வகைப்படுத்தப்பட்டுப் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. போரின் ஆக்கமும் அழிவும் போர்த்தலைமையின் அறிவாற்றல், மதிநுட்பம், அரும்பண்புகள், படைவீரர்களின் தகுதி, குழுவுணர்வு முதலியவற்றைப் பொறுத்தே அமைகிறது; அதன் அடிப்படையிலேயே படையை அணிவகுத்தல், போர் நடைபெறும்போது அதில் முன்னேற்றம், தாக்குதல், காத்தல், பின்வாங்குதல் முதலிய செயல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு படைப்பிரிவினரும் அதற்கேற்பப் போர்க்கருவிகளைப் பயன்படுத்துதல் வெற்றிக்கு வழிவகுத்தன. சங்ககாலம் முதலே வில், வாள், வேல், அம்பு, தண்டம், கேடயம், கவசம் முதலிய கருவிகளைக் கொண்டு எதிரிகளோடு போரிட்டுள்ளனர். மகாபாரதத்தில் போரின்போது இக்கருவிகளோடு மேலும் பல ஆயுதங்கள், கணைகள் முதலியன பயன்படுத்தியதைக் காணலாம். குருச்சேத்திரப் போர் பாகவதப் பாரதத்தில் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    குறிப்புச் சொற்கள்: போர் – படை – அணிவகுப்பு – தூது – போர்க்கருவிகள் – போர்க்களம் – போரிசைக்கருவிகள்- போர் அறம் – கடமை

    முன்னுரை

    பாகவதப் பாரதம் பதினெட்டாம் நூற்றாண்டில் (பொ.ஆ.1745-1755) தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய, தமிழுக்குப் புதிய வரவான ஒரு நாட்டுப்புறக் காப்பியம். இதனை இயற்றியவர் தேரிக்கரையான் ஸ்ரீபல்பநாப நாடார் ஆவார். அம்மானை யாப்பிலான இக்காப்பியம் 26,000 அடிகளைக் கொண்டது. ‘பாரதமும் பாகவதமும் பண்பாய்த் தெரிந்தெடுத்து’ அவற்றைப் பொருத்தமாக இணைத்துப் படைத்து இக்காப்பியத்திற்குப் ‘பாகவதப் பாரதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் ஆசிரியர்1. பாகவதப் பாரதத்தில் பன்னிரண்டு போர்கள் இடம்பெற்றுள்ளன.  அவற்றுள் இறுதிப் போரான பாரதப்போர் என்னும் குருச்சேத்திரப் போர்ச் சித்திரிப்புகளை இக்கட்டுரை விவரிக்கிறது.

    போருக்கான காரணம்

    அளவுகடந்த மண்ணாசையால் போர் நிகழ்வதுண்டு. தன்னாட்டில் வாழும் குடிகள் வளத்துடன் வாழ்வதற்குப் போதிய இடமில்லாததினாலும்; இடம் சிறிதென்னும் ஊக்க மேலீட்டினாலும் மன்னர் போர் தொடுப்பர்; அரசுரிமைக்குத் தடையேற்படும்போதும்; சொல்லில் அல்லது செயலில் மானக்குறைவு ஏற்படும்போதும் போர் மூளும். தம் படைவலி, தம் செங்கோல், தம் ஆணை முதலியவற்றை யாவரும் ஒப்புக்கொண்டு தமது ஆட்சிக்கு உட்பட்டிருக்க, தாம் அரசருக்கு அரசராகத் திகழவேண்டும் என்ற உட்கோளே அக்கால அரசரின் போர்கள் பலவற்றிற்குக் காரணமாக இருந்துள்ளன. வெண்ணிப்பறந்தலை, கருவூர், கூடல், வாகைப்பறந்தலை, நெய்தலங்கானல், தலையானங்கானல், கானப்பேர் முதலிய இடங்களில் இக்காரணம் பற்றியே போர்கள் எழுந்துள்ளன2.  இவை மட்டுமன்றி, அரச குடும்பத்திற்குள் ஏற்படும் முரண்கூட போர் ஏற்படும் சூழலை உருவாக்கும்; அது மேற்குறித்த காரணங்களில் ஒன்றோ அல்லது பலவாகவோ இருக்கும். அத்தகைய காரணங்களால் ஏற்பட்ட போர்தான் பாரதப்போர்.

    பாகவதப் பாரதம்வழி பின்வருவனவற்றைப் போருக்கான காரணங்களாக அறியமுடிகிறது. அவை, துரியோதனனுக்கு ஏற்பட்ட மண்ணாசையும்; தானே ஒட்டுமொத்த நாட்டுக்கும் மன்னராக இருப்பதோடு, மன்னவர்க்கெல்லாம் மன்னவராகவும் இருக்க வேண்டும் என்ற பேராசை; பாண்டவர்களின் இராசசூய வேள்வியின்போது தர்மருக்கு வேதியர்களும் பிற மன்னவர்களும் செய்த சிறப்புகளைத் துரியோதனனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்தமை முதலியன.

    தன்புய வலியும் நான்குதம்பியர் வலியும் மாயன்
    வன்புய வலியும் கொண்டே மண்ணெலாம் கவரயெண்ணி
    இன்புயச் சிகரிமன்னர் யாரையும் தன்கீ ழாக்கி
    மின்புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான்3

    எனத் துச்சாதனன் துரியோதனிடம் கூறி, அவனை வெறுப்பேற்றினான். இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர்கள் வாழ்ந்துவரும் நாளில் துரியோதனன் மனத்தில் அச்சப்பட்டு, நாளை பாண்டவர்கள் நாட்டை இருகூறாப் பகுக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது என்று மனந்தடுமாறி, கன்னனிடம் அறிவுரை கேட்க, அதற்குக் கன்னன்,

    பஞ்சவரோ நாடு பகுந்தாள வாறதுகாண்
    அஞ்சப்பொருது வெட்டி ஐவரையும் கொன்றுழக்கி
    ஆருமறியாத அத்தினா புரத்தினிலே
    போர்பொரலா மென்று கன்னன் புத்திமிக உரைத்தான்4

    கன்னனின் அறிவுரையால் எப்படியும் பாண்டவர்களைப் போரில் வென்று நாடு முழுவதையும் தாமே ஆளலாம் என்று எண்ணினான் துரியோதனன்.

    பாண்டவர்களின் வளர்ச்சியால் துரியோதனனுக்கு ஏற்பட்ட பொறாமை; தம் ஆற்றலை மாற்றான் இகழ்வது கண்டு பொறுக்கமுடியாமை; தன்மானம் காத்து, ஆட்சியுரிமையை நிலைநாட்ட முயன்றமை ஆகியன துரியோதனாதிகள் சார்பில் பாண்டவர்களுக்கு எதிராகப் போர் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன. பாண்டவர்கள் சார்பில்  தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்துள்ளது.

    தூது

    ‘பகையை நட்பாகவும் நட்பைப் பகையாகவும் ஆக்குபவன் தூதுவன். போரும் அமைதியும் அவனால்தான் ஏற்படுகின்றன’5. இரு பெரும் மன்னர்களுக்கிடையே போர் நிகழாமல் தடுப்பதற்காகத் தூது செல்லும் வழக்கம் இருந்துள்ளதைப் பின்வரும் இலக்கியச் செய்திகள் வழி அறிகிறோம். ஒரு மன்னனிடம் தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறள்6 விளக்குகிறது. அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றதைப் புறநானூறு7 எடுத்துக்காட்டுகிறது. பாரதத்தில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வு  ‘கிருஷ்ணன் தூது’ என்னும் கதைப்பாட்டு இலக்கியமாகப் புகழுடன் நிலைத்து நின்று பேசப்படுகிறது8.

    பாகவதப் பாரதம் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் சபையில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வைச் சித்திரிக்கிறது. அங்குச் சென்ற கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு நாட்டில் பாதிப் பாகத்தைப் பகிர்ந்து கொடுக்கும்படி வேண்ட, அதற்குத் துரியோதனன் மறுப்புத் தெரிவிக்க, கிருஷ்ணர் ஆளுக்கொரு ஊரைக்கொடு அல்லவென்றால் ஆளுக்கொரு வீட்டையாவது கொடு என்று கேட்கிறார்9. அதற்குத் துரியோதனன், தெள்ளுதமிழ் வல்ல திருமாலே, ஐவருக்கு எள்ளளவு பூமிகூட கொடுக்கமாட்டேன் என்றான்10. கிருஷ்ணர் துரியோதனனிடம் சென்ற சமாதானத் தூது பலனளிக்கவில்லை.

    போர்ப் படைகள்:

    நாட்டைக் காப்பதற்கும் பகைமன்னன்மேல் போர்தொடுப்பதற்கும் ஒரு நாட்டில் நான்கு வகையான படை ஏற்படுத்தப்பட்டது. பகைநாட்டோடு போர்தான் தீர்வு என ஒரு மன்னன் நினைத்துவிட்டால், அவன் தன் படை பலத்தைப் பெருக்குவான்.  படையின் சிறப்பைக் கூறும் திருக்குறள், ”ஒரு மன்னவனின் செல்வங்கள் எல்லாவற்றிலும் மேலான செல்வம் என்பது, நான்கு படையுறுப்புகளும் நிறைந்து, அஞ்சாது பகைவரை வெல்லும் படை எனக் குறிப்பிடுகிறது11.   மன்னனின் திருமேனி எனப் போர்ப்படையைத்,

    ’தாழ்கழன் மன்னன் தன் திருமேனி
    வாழ்க சேனாமுகமென வாழ்த்தி’

    எனச் சிறப்பிக்கும் சிலப்பதிகார அடிகளுக்குத், ‘திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி’ என உரை வகுத்துள்ளார் அடியார்க்குநல்லார்’12.

    கன்னன் சொல்கேட்டுத் துரியோதனன் விராடபுரத்தில் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வருமாறு அஸ்வத்தாமனுக்கு ஆணையிட்டான். மன்னவனின் ஆணைக்கிணங்க, அவன் மூன்று அக்குரோணி படைகளைத் திரட்டிச் சென்று,

    தாம் முக்குறுணி தளத்துடனே தானடந்து
    வென்றியுடைய விலா(ரா)டன் திருநாட்டில்
    சென்றுநிரை கொள்ளவென்று திரைகடல்போலே வளைந்தான்13 .

    அக்குரோணி என்பது பாரதப்போரில் ஈடுபட்ட படைகளின் அளவைக் குறிப்பதாகும். அக்குரோணி என்பதில் பத்தி, சேனாமுகம், குல்மம், கணம், வாகினி, பிருதனை, சமு, அனீகினி என்ற எட்டு உட்பிரிவுகள் காணப்படும். பத்தி என்பது ஒரு தேர், மூன்று குதிரைகள், ஐந்து சிப்பாய்கள், ஒரு யானை ஆகியவை கொண்டது. சேனாமுகம் என்பது மூன்று பத்திகள்; குல்மம் என்பது மூன்று சேனாமுகங்கள்; கணம் என்பது மூன்று குல்மம்கள்; வாகினி என்பது மூன்று கணங்கள்; பிருதனை என்பது மூன்று வாகினிகள்; சமு என்பது மூன்று பிருதனைகள்; அனீகினி என்பது மூன்று சமுக்கள்; அக்குரோணி என்பது பத்து அனீகினிகள் ஆகும். அதாவது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது தேர்கள்; இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது யானைகள்; ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று ஐம்பது காலாட்கள்; அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்துக் குதிரைகள் அடங்கியது ஓர் அக்குரோணி ஆகும்14.

    சதுரத்துக்குச் சதுரமாகிய பத்துக் காதம் தொலைவுள்ள கடலில் படைகள் இறங்கும்போது, கடல் வற்றி வறண்டு எங்கும் ஒன்றுபோல் காட்சியளித்தால் அந்தப் படை ஓர் அக்குரோணி என்னும் இலக்கு ஆகும் எனப் பாகவதப் பாரதம் கூறுகிறது15.

    படை அணிவகுத்தல்:

    மன்னர்கள் படை, கொடி, குடை, முரசு முதலியவற்றோடு குதிரைப்படையும் யானைப்படையும் தேர்ப்படையும் தார்ப்படையும் (காலாட்படை மற்றும் தூசிப்படை) கொண்டிருந்தனர் என்பதைப்

    படையும் கொடியும் குடியும் முரசும்
    நடைநவில் புரவியும் களிறும் தேரும்
    தாரும் முடியும் நேர்வன பிறவும்
    தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய

    என்னும் தொல்காப்பிய நூற்பா16 வாயிலாக அறியலாம். எதிரிகளை வீழ்த்தும் வியூகம் அறிந்து நால்வகைப் படையையும் வகுப்பது படையணி வகுப்பு ஆகும். இதனைத் திருக்குறள்,

    தார்தாங்கிச் செல்வது தானை  தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து17

    எனக் குறிப்பிடும்.

    ஒரு படைக்குப் பகைவரைத் தாக்கும் திறமையும்; தாக்குதலைத் தாங்கும் திறமையும் இருக்க வேண்டும்; இது தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என நான்கு வகைப்படும். தண்டம் என்பது படையைக் குறுக்காக நிறுத்துவது; மண்டலம் என்பது பாம்புபோல் வளைவாக நிறுத்துவது; அசங்கதம் என்பது வேறுவேறாக நிறுத்துவது; போகமாவது நால்வகைப் படையையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துவது18. அதனைக் கருத்தில் கொண்டே படையை அணிவகுப்பர்.

    படையைத் தனக்கு அனுகூலமாக இருக்கும் பகுதியில் தெற்குநோக்கி நிறுத்தாமல் சூரியன் பின்புறமாக இருக்குமாறும்; தங்களுக்கு அனுகூலமாக காற்று வீசுமாறும் பார்த்து வியூகத்தை அமைக்க வேண்டும்19. எதிரி எதிர்ப்புறத்திலிருந்து தம்மை ஆக்கிரமிக்கக் கூடுமானால் மகரவியூகத்திலும் (முதலைவடிவம்); பின்புறத்திலிருந்து வளையக்கூடுமானால் சகடவியூகத்திலும் (வண்டிவடிவம்); பக்கங்களில் இருந்து தாக்கக்கூடுமென்றால் வஜ்ரவியூகத்திலும் (வைரக்கல் வடிவம்); நாற்புறத்திலிருந்தும் தாக்குதல் வரக்கூடும் என்ற ஐயமேற்பட்டால் சர்வதோபத்ர வியூகத்திலும் (சதுர வடிவம்); ஒவ்வொருவராக மட்டுமே செல்லக்கூடிய பாதையாக இருந்தால் ஊசி வியூகத்திலும் (ஊசிபோன்று நீள்வடிவம்) பயணிக்க வேண்டும்20.

    இரு பகைநாட்டு மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது, எதிரியை எதிர்த்துப் போரிடும் தன்மை அறிந்து, அவரவர்தம் படைகளின் தன்மைக்கேற்ப, தலைமைக்கேற்ப படைப்பிரிவை ஏற்படுத்திக் கொள்வர். துரியோதனனுக்குப் பாண்டவர்கள்மேல் இருந்த வன்மத்திற்குப் போர்தான் தீர்வு என முடிவானவுடன், இருதரப்பினரும் அவரவர் தங்கள் படைகளைத் தகுதியுடன் பிரித்தத்தைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

    ஓரணிக்குத் தேரதுதான் ஒன்பது நூறாயிரம்
    காரணிந்த தேரதுக்குக் கரிகள் நூறாக
    போரணிந்த தேரது கரிக்கு புரவியது நூறாக
    காரணிந்த தேரதுக்குக் காலாட்கள் நூறாக21

    படைகள் பிரிந்தன. துரியோதனனுக்காக முதலில் பீஷ்மர் படையை அணிவகுத்தார். வலிமையுடைய வீரர்களைக் கொண்ட படைகளை அவர், யானை, யாளி, சிங்கம் மற்றும் பெரிய பறவையின் வடிவாக  வகுத்தார். இதனை,

    காரானை யாளிசிங்கம் கவர்ந்த புள்ளிக்கு நாமாவும்
    பேரான கண்டப் பேரண்ட பட்சிதன் வடிவும்22

    எனப் பாகவதப் பாரதம் காட்சிப்படுத்துகிறது. அப்படைப்பிரிவு ஒன்றில் கன்னனை சேனாதிபதியாக்கி, அப்படைப் பிரிவை நாலணிக்குப் பின்னணியாக்கி வகுத்தார் பீஷ்மர்23. துரியோதனனிடம் பதினெட்டு அக்குரோணி படைகள் இருந்தன. பீஷ்மர் எட்டுத் திசையிலும் முந்நூற்று இருபது காத தூரத்தில், இருபத்தொரு அணிகளைக் கொண்ட படைகளைச் சிறு கடல்போல் நிறுத்தினார். பதினான்காம் நாள் போரில் துரியோதனாதிகள் தங்கள் படைகளை, ’நாலுதிக்குந் தறியாய் நாலெட்டுக் காதமிடம், எண்ணரிய சேனையெல்லாம் எண்பதணி வகுத்துப்’ போரிட்டனர்24.

    பாண்டவர் படையை மாயவர் கருடன் வடிவில் அமைத்தார்25. பகதத்தன், வீமசேனன், அருச்சுனன், நகுலன், சாத்தகி, கடோற்கயன், அவீமன், சீகண்டி, சுகந்தன் முதலியோரின் தலைமையில் படைகள் அணி வகுக்கப்பட்டன; அவை ஓர் அக்குரோணி அளவுடையதாக இருந்தன26.

    போர்க்கருவிகள்

    தானை, யானை, புரவி, தேர் என்னும் நால்வகைப் படையில் தானைப்படை எனப்படும் காலாட்படையினர் பயன்படுத்தும் போர்க்கருவிகளைக் கொண்டு அதனை வில்படை, வாள்படை, வேல்படை என மூன்றாக வகைப்படுத்துவர். இவ்வாறு அவர்கள் பிரிந்திருந்தாலும் படைவீரர்கள் இம்மூன்று போர்க்கருவிகளை மட்டுமன்றி, வேறு சரங்களையும் பயன்படுத்தினர்.  வில் வீரர்கள் பெரிய கேடயங்களையும் கவசங்களையும் குத்து வாள்களையும் வைத்திருந்தனர். தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தினர். குதிரைப்படை வீரர்கள் நீண்ட வேல்களுடன் குதிரைப்படைக்கென்று தனித்த முறையில் செய்யப்பட்ட கேடயங்களையும் குத்துவாள்களையும் உடைவாள்களையும் பெற்றிருந்தனர். தேர்ப்படை வீரர்கள் பல்வேறு விதமான வில்களையும் அம்புகளையும் பெற்றிருந்ததோடு, நீண்ட வேல்களையும் எறிவேல்களையும் குத்துவாள்களையும் பயன்படுத்தினர்; அவர்கள் தானைப்படையினர் வைத்திருப்பதுபோன்று கவசங்களையும் கேடயங்களையும் வைத்திருந்தனர்27.

    அர்ச்சுனன் ஏராளமான கணைகளைக் கொண்டு போரிட்டான். அவை அனைத்தும் அவனது குருமார்கள் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தவையாகும். துரோணர் அவனுக்குக் கம்சனை வதைத்த கண்ணன் சரம், இந்திரன் கொடுத்த ஈராணியன் கணை, சந்திரன் கொடுத்த சிவமணி, ஆதித்தன் கொடுத்த அக்கினிக்கோல் முதலியவற்றைக் கொடுத்தார். கிருபாச்சாரியார் சிவன் அவருக்கு அளித்த சரத்தைக் கொடுத்தார். பீஷ்மர் வில், பிறை, நான்கு கணைகள், மோகினி அஸ்திரம், மூர்த்தி அஸ்திரம், அன்னை பராசக்தியின் மெய்க்கவசம் போன்ற தேர், அழகிய தாமரை ஆகியவற்றைக் கொடுத்தார். பரசுராமன் அர்ச்சுனனுக்கு வாரி என்னும் கணை, வாசு என்னும் ஞாண், சிறந்த மழு, ஒரு தேர், மேனியைக் காக்கும் சக்கரம், பிறைவாய்ச்சரம், நான்கு திசைகளிலும் நான்கு விதமாய்த் திகழும் நாலாயிரம் கோடி கோலவாய் அம்புகள் ஆகியவற்றைக் கொடுத்தார். விதுரன் அர்ச்சுனனுக்கு முப்புரத்தை எரித்த விற்களில் மேலான வில் ஒன்றைக் கொடுத்தார். போர்க்களத்தில் புகுந்து உடன் மீளவும்; நடுவில் நின்று முன்னணியையும் பின்னணியையும் முறிக்கின்ற தந்திரத்தையும் வியாசர் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார்28. அர்ச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபதக் கணையைப் பெற்றிருந்தான்29. குருமார்கள் கொடுத்த போர்க்கருவிகளோடு அருச்சுனன் போர்க்களம் கண்டான்.

    துரியோதனனும் வீமனும் தேர்ப்படையினர் என்றாலும் அவர்கள் காலாட்படையினர்போல் தரையிலிருந்து தண்டாயுதத்தாலும் போரிட்டனர்30. கன்னன் அம்பு எய்வதில் வல்லவனாக இருந்தான். அவனிடம் சக்திவாய்ந்த நாகக்கணை இருந்தது31.

    படைக்கருவிகள் கைவிடுபடை, கைவிடாப்படை என அவை அவற்றின் செயல்பற்றி இருவகைப்படும். கைவிடுபடை அஸ்திரம் என்றும்; கைவிடாப்படை சஸ்திரம் என்றும் வழங்கப்படும். பண்டைக்காலப் போர்க்கருவிகள் எய்படை, எறிபடை, குத்துப்படை, வெட்டுப்படை, அடுபடை, தடுபடை என அறுவகைப்பட்டன. அம்பு எய்படை; விட்டேறு எறிபடை; வேல், ஈட்டி, குந்தம் முதலியன குத்துப்படை; வாள், மழு முதலியன வெட்டுப்படை; தண்டு முதலியன அடுபடை; கவசம், கேடயம் முதலியன தடுபடை என அழைக்கப்பட்டன. மேற்குறித்த அறுவகைப் படைக்கருவிகளின் செயலால் எய்படை முதல் அடுபடை முடியவுள்ள ஐந்தும் தாக்குப்படை என்றும்; ஆறாவதாக உள்ள தடுபடை காப்புப்படை என்றும் கொள்ளலாம்32.    

    போரிசைக் கருவிகள்

    பாரதப்போரில் போர்க்களத்தில் வீரத்தைத் தூண்டும் பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதை வில்லிபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர் போர்ப்படையை வருணிக்கும்போது பலவகை இசை வாத்தியங்களின் ஒலிகள் எழுந்ததை, ‘வளைமுழக்கின கிடுகு கொட்டின…..’ என்னும் பாடல் வழி அறியமுடிகிறது33. மேலும், மத்தளம் முதலாகவுள்ள தோற்கருவிகளும்; வெண்கலத்தால் செய்யப்பட்ட மணி, தாளம் முதலிய கஞ்சக்கருவிகளும்; புல்லாங்குழல், நாயனம் முதலிய துளைக்கருவிகளும்; வீணை, யாழ் முதலிய நரம்புக் கருவிகளும் ஏழுகடல்கள் பொங்கி எழுந்ததுபோலவும்; ஏழு தீவுகளும் எதிர்த்தனபோலவும்; ஏழுமேகங்களும் ஒருசேர இடித்தனபோலவும் முழங்கி இசைத்தது34. குருச்சேத்திரப் போரில் முரசுகள் ஒலித்ததையும்; இடம்புரி, வலம்புரி, சஞ்சலம் ஆகிய சங்குகள் முழங்கியதையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது35.

    பாரதப்போரில் பயன்படுத்தப்பட்ட போரிசைக் கருவிகள் சிலவற்றைப் பாகவதப் பாரதம் குறிப்பிடுகிறது. அவற்றில் முதலானது சங்கு. இச்சங்கு வெற்றிச் சங்கு, அபாயச் சங்கு என இருநிலைகளில் ஒலித்ததைக் காணமுடிகிறது. வீமன் வெற்றிச் சங்கு ஊதியதைப் பலவிடங்களில் காணமுடிகிறது36. படைவகுப்பில் இயற்றப்படும் குழூஉக்குறிகளை இசைக்கருவிகளின் வேறுபட்ட இசையால் அறிவிக்கும்போது அது இன்னதென்று படைவீரர் தவிர, வேறுயாரும் அறியாத வண்ணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்37. அந்த வகையில் அமைந்ததுதான் கிருஷ்ணர் எழுப்பிய அபாயச் சங்கு ஓசை. அவ்வோசையைப் பிறரால் புரிந்துகொள்ள முடியாதபோது தர்மர் மட்டுமே இது அபாயத்தைக் குறிக்கும் ஓசை எனப் புரிந்துகொண்டார். படையில் குழூஉக்குறிப் பயன்பாட்டின் சிறப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது. கிருட்டினரையும் அருச்சுனரையும் கன்னன் முதலானோர் சூழ்ந்த நிலையில் அருச்சுனன் இறப்பது முடிவாகிவிட்டது எனத் தேவர்கள் அஞ்சினர். அப்போது கிருட்டினர் அபாயச் சங்கை ஊதினார். அவ்வோசையைக் கேட்ட தருமர் அச்சத்தால் நடுங்கி, சாத்தகியை அணுகி விபரம் கேட்டார். இதனைப் பாகவதப் பாரதம்,

    அப்போது மாயவனார் அரசர் நடுநடுங்க
    மெய்ப்பான சங்கை விசனாக ஊதிடவே
    சங்கோசை கேட்டதற்பின் தன்மர் மிகநடுங்கி
    இங்கேவா சாத்தகியே என்றவரை வரவழைத்து
    தார்நெடுமாலும் இப்போ சங்குவாய் வைத்தனர் காண்
    போர்விசையர்க்கு இப்போது பொல்லாங்கு வந்ததுண்டோ38

    என அபாயச் சங்கொலி கேட்ட தருமரின் மனநிலையைச் சித்திரிக்கிறது.

    பதினான்காம் நாள் போரில் துரியோதனன் படையில், ‘சாலமொடு சங்கு சமுத்திரம்போலே முழங்க’ எனச் சங்கும் சாலகையும் முழங்கியது குறிப்பிடப்படுகிறது39. சாலம் என்பது சாலகை அல்லது சாலரி என வழங்கும். இது ஒரு வகை இசை வாத்தியம், முப்பத்தேழாவது மேளகர்த்தா ஆகும்40. மேலும், பதினான்காம் நாளில் கிருஷ்ணர்  தம் சக்கரத்தால் சூரியனை மறைக்க, போர் முடிந்துவிட்டது எனத் தவறாகக் கணித்த துரியோதனாதிகள் தம் இருப்பிடத்திற்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் பேரிகைகள் தாரை கொம்பு தான் முழங்கச் சென்றனர்’41. பதினேழாம் நாள் போரில் கன்னன் மகன் விசகருணன் போருக்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் நன்றதிர தாரை சின்னம் தானதிர’ தன் தந்தையின் முன் வந்தான்42. இவ்வாறு குருச்சேத்திரப் போரில் இசைக்கருவிகள் பல பயன்படுத்தப்பட்டிருப்பது புலப்படுகிறது.

    போர்க்களம்

    போர்க்களம் வந்த துரியோதன பாண்டவர் படையால் நான்கு திசையிலும் பூமி நடுங்கியது. துரியோதனன் படைகளைப் போர்க்களத்தில் பீஷ்மர் வகைவகையாய் அணிவகுத்து நிறுத்தினார்.

    தென்னான் பாவி திரியோதனன் படையை
    கோலமுள்ள வண்மை குருக்கேத்திரந் தனிலே
    நாலுதிக்கும் பூமி நடுநடுங்கக் கூடியதே
    எண்ணரியதோர் படையை இயல்வீட்டிமனாரும்
    மண்ணதிர விண்ணதிர வகைவகையாய் தானிறுத்தி43

    முன்னணிக்கு முகவாயில்போல் பீஷ்மரே நின்றார். பாண்டவர் படையைப் போர்க்களத்தில் கிருஷ்ணர் கொண்டு நிறுத்தியதை,

    ஏற்றமுள்ள பஞ்சவர்கள் எண்ணரிய சேனையெல்லாம்
    தோற்றமுள்ள மாயவனார் குருக்கேத்திரந் தனிலே
    வாய்த்த சிறுகெருடன் வன்னவடிவாகி யொக்க
    தோற்றமுடனே அணியைத் துவங்க மிகவே வகுத்தார்44

    எனப் போர்க்களத்தில் போர்வீரர்களின் அணிவகுப்பைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.

    முதல்நாள் முதல் பதினெட்டு நாள் வரையுள்ள போரில் போர்க்களம் பரவலாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. சான்றாக, பத்தாம்நாள் போரில் பீஷ்மர், பாண்டவர் படையை எதிர்த்துப் போரிடுவதற்காகப் போர்க்களம் நோக்கிப் புறப்படும்போது பலவித நிமித்தங்களை எதிர்கொண்டார். தேரேறிப் போர்க்களம் வந்தவர், மிக்க கோபத்துடன் பலரையும் வெட்டிச் சரித்தார். தேரோடு பல தேர்கள் முட்டி மோதின; அத்தருணத்தில் கரிகள் பரிகள் குடல்சரிந்தன; காலாட்கள் பார்வேந்தர் பட்டுவிழுந்தனர்; பகதத்தன், சிகசத்துவமுடைய சேரசோழ பாண்டியர், பாஞ்சாலர் முந்நூறு பேரும் பட்டார் படுகளத்தே45 எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.

    போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதால் கிளம்பிய செந்தூள் மேலிருக்கும் சூரியன் இருப்பதை அறியமுடியாதபடி மறைத்து விட்டது46. வீமன் கன்னனின் படைவீரர்களைத் துரத்தித் துரத்தி அடித்தான். பல மன்னர்களையும் வீரர்களையும் அவன் கொன்று குவித்ததால் வீரர்கள் கொதித்தெழுந்ததை,

    அடித்தே குமித்தனர்காண் அங்கேதான் துரத்தி
    இடித்தே குமித்தனர்காண் இரணகளம் சூடெனவே47

    எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது. மேலும், அங்குப் பேயும் கழுகும் பருந்தும் நரியும் விருந்துண்ட காட்சியும்; இரத்த ஆற்றில் யானைக்குட்டி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் கீழ்வருமாறு சித்திரிக்கப்படுகின்றன.

    கொன்று குருதியிட்டக் கொலைக்களத்தைப் பார்ப்பளவில்
    கரிகள் குடல்சரிய காலாக்கள் தான்மடிய
    பரிகள் குடல்சரிய பார்வேந்தர் பட்டுவிழ
    அரசர் தலையுருள ஆள்வீரர் தான்மடிய
    மூவுயற்றோன் தன்கரத்தை முகமுங் கரமுமுருள
    ஆறுங் குருதி யலைந்தோட அக்களத்தில்
    பாறுங் கழுகும் பருந்தும் விருந்துண்ணவே
    சீறுநரி பேய்கள் தின்றே யேப்பமிட்டிடவே
    ஏறுங் குருச்சேத்திரத்தில் ஆற்றொழுங்கிடவே
    கட்டன் கொடியன் கடும்பாவி நெட்டூரன்
    குட்டிமதக் கரியைக்கூட இழுத்தோடிடுமாம்
    இப்படியோடும் இரத்தாற்றைத் தான்பார்த்து
    செப்பமுள்ள சொல்லான் திருமாலும் ஏதுரைப்பார்48
    இவ்வாறு பாகவதப் பாரதத்தில் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.

    போர் வீரர்கள்

    துரியோதனாதிகளுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர்தான் தீர்வு என்று முடிவானபோது படைகள் அணிவகுக்கப்பட்டன. அப்போது தலைமைப் பொறுப்பேற்றிருந்த பீஷ்மரும் கிருஷ்ணரும் அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப படைத்தலைவர்களையும் அவர்களுக்குக் கீழ் நின்று போரிடும் போர் வீரர்களையும் தேர்வு செய்தனர். போரில் வீரமரணத்தைத் தழுவிய வீரர்களும்; உடல்பாகங்களை இழந்து துன்பத்தை அனுபவித்த வீரர்களும் ஏராளம். அவர்களின் புலம்பல்களைப் பாகவதப் பாரதம் எடுத்துரைக்கிறது. போரில் பரிகளையும் கரிகளையும் வெட்டித் துண்டாக்கிவிட்டு, கணையிழந்து வில்லிழந்து தட்டழிந்து, தலைகெட்ட நூல்போல் வீரர்கள் ஓடினர்49. ஏராளமானோர் பிழைப்பதற்கு வேறு வழிதெரியாமல் போரிட்டு, இது நம் விதியென எண்ணி மடிந்து விழுந்தனர். மேலும் பலர் காலிழந்து, கையிழந்து, சென்னி அறுபட்டு மயங்கி வீழ்ந்தனர். சிலர் நஞ்சையுண்ட மீன்போல் நடுங்கி வீழ்ந்தனர். சிலர் ஓடிப் பிழைத்துக் கொள்ளலாம் என்று போக வழிதேடிப் புலம்பித் திரிந்தனர். ஓடிப்பிழைக்க ஓரிடமும் காணாமல் வழிதேடித் தடுமாறித் திரிந்தனர்.

    மாண்டு விழுகையிலே மகாகோடி சேனையுள்ளார்
    பூண்ட விதியெனவே பொருது மடிவாரும்
    கால்தெறித்து வீழ்வாரும் கைதெறித்து வீழ்வாரும்
    நீலமுடன் அப்பொழுது நின்று விழுவாரும்
    சென்னியற்று வீழ்வாரும் சிவனெனவே வீழ்வாரும்
    வன்னிச் சிராயதுபோல் மதிமயங்கி வீழ்வாரும்
    நஞ்சையுண்ட மீன்போல் நடுநடுங்கி வீழ்வாரும்
    என்செய்வோம் ஈசுரரே என்று விழுவாரும்
    ஆபாத கேடன் அரவக் கொடியுடையோன்
    மாபாவி யென்று மயங்கி விழுவாரும்
    சாகமாட்டாமல் தலைமேல் கையைவைத்து
    போக வழிதேடிப் புலம்பித் திரிவாரும்
    ஓடிப்பிழைக்க ஒருவிடமும் காணாமல்
    தேடி வழிபார்த்துத் தியங்கித் திரிவாரும்50

    எனப் போர்க்களத்தில் உயிருக்குப் போராடிய போர்வீரர்களின் அவலநிலை சித்திரிக்கப்படுகிறது.

    போர் அறம்

    ஒரு மன்னனுக்கு அறமே செங்கோல், அனைவரும் உறங்கும்போது அது விழித்திருக்கும்51. ஒரு மன்னனுக்குப் போரில் வெற்றியைக் கொடுப்பது அவன் போர்க்கலமாகிய வேல் அல்ல; அவனது முறைதவறாத செங்கோல் ஆகும் என்பதை,

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉம் கோடது எனின்52

    எனத் திருக்குறள் எடுத்துரைக்கிறது. ‘மன்னன் உலகத்தைக் காப்பான்; அவனைச் செங்கோல் காக்கும்’53. அறநெறிப்படி ஆட்சி செய்யும் மன்னர்களுக்கிடையே ஏதோ சில காரணங்களுக்காகப் போர் மூண்டுவிட்டால், போரில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் சார்ந்த நெறிமுறைகள் பல காணப்படுகின்றன. அவற்றை அந்தந்த நாட்டுப் போர்வீரர்கள் ஒழுகி நடக்க வேண்டும். போருக்கான காரணங்கள் என்னவென்று புரிந்துகொள்ளுதல், போர் செய்யும் முறை, போரின்போது நடந்துகொள்ளும் விதம், கொல்லக்கூடாதோர் யார் யார்?, போர் வீரர்கள் ஒருவருக்கொருவரை மதித்தல், காலையில் சூரிய உதயத்திற்குப் பின்னர் போரைத் தொடங்கி, மாலையில் சூரிய மறைவில் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் முதலியவை போர் அறமாகக் கொள்ளப்படும். போர் என வந்துவிட்டால் எதிர்ப்பக்கம் போரிடுபவரைக் கொல்வதுவே வெற்றி. இந்தக் கொலை வெற்றியின் அடையாளம். ஆனால் எதிரிகளில்கூட இன்னாரைக் கொல்லலாம், இன்னாரைக் கொல்லக்கூடாது என அறம்சார்ந்த பல நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன நீதிநூல்கள்.

    போர்த் தருமத்தை அறிந்த போர்வீரன் அறத்தை மதித்து நடந்து கொள்வான். போர்க்களத்தில் போருக்கு அஞ்சி இன்னோரிடத்தில் அடைக்கலமாகி இருப்பவன், அலி, கைகூப்பி வணங்குபவன், தலைமயிர் அவிழ்ந்து சரியப் பெற்றவன், நான் உனக்கு ஆளாகின்றேன் எனக் கூறுகின்றவன், உறங்கிக்கொண்டிருப்பவன், கவசம் முதலியன பூண்டு போர்வீரனாக இல்லாதவன், ஆடை இல்லாதவன், ஆயுதம் இல்லாதவன், போர் செய்யாதவன், போரைக் கண்டுகொண்டிருப்பவன், மற்றொருவனோடு போரிட்டுக் கொண்டிருப்பவன், தண்ணீர் குடிப்பவன், உணவருந்துபவன், பிற செயல்களில் முனைந்திருப்பவன், அச்சமுடையவன், புறங்கொடுத்தோடுபவன் ஆகியோரைக் கொல்லுதல் தகாது. மேலும், வயது முதிர்ந்தோர், பாலகர், பெண்கள், துணையில்லாத மன்னவன் ஆகியோரையும் கொல்லுதல் கூடாது. போர்வீரர் தம் தகுதிக்கேற்பவுள்ள பகைவீரனோடு போரிட்டு அவனைக் கொல்லுதல் அறநெறிக்கு அப்பாற்பட்டதாகாது. அறத்தின்வழி செய்யப்படும் போருக்கு மட்டுமே இது பொருந்தும். வஞ்சகமாகச் செய்யப்படும் போருக்கு இவை பொருந்துவதில்லை54.

    போர்க்களத்தில் எதிரி நிராயுதபாணியாக நிற்கும்போது அவரைக் கொல்லுதல் அறத்திற்கு மாறானது. பத்தாம் நாள் போரிலும் பதினேழாம் நாள் போரிலும் முறையே பீஷ்மரும் கன்னனும் ஆயுதமின்றி நிற்கும்போது, அர்ச்சுனன் அவர்களைக் கொல்லுதல் முறையன்று, அவர்களை நான் கொல்வதில்லை என்று கிருஷ்ணரிடம் கூறியதைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு சித்திரிக்கிறது.

    ஆதி முதலான் அருள் வீட்டிமனாரும்
    பாதிநா ளொன்றதிலே பருத்த சிலைபோட்டு
    வெற்றிசெய்து போர்க்களத்தில் வெறுங்கையே நிற்கையிலே
    கொற்றவரே நானவரைக் கொல்லவல்லேன் எனவுரைத்தார்55
    கண்ணான பஞ்சவர்கள் காசினியை ஆள்வாரென்று
    விண்ணோரென கன்னன் வெறுங்கையே நிக்கலுற்றான்
    வெறுங்கையால் நிக்கையிலே விசையா நீ கொல்லுமென்றார்,
    மெய்யான கன்னனவன் வெறுங்கையால் நிக்கையிலே
    எய்வேனோ பாவம் எனக்குப் பலியாதோ56

    என்றான் அர்ச்சுனன். கிருஷ்ணர் அவனிடம் அவர்கள் மரிக்க வேண்டியவர்கள் என்பதற்கான அறநெறி சார்ந்த காரணங்களையும் அதற்குரிய வழிமுறைகளையும் கூறி, அவர்களைக் கொல்லுமாறு வற்புறுத்தினார்.

    தேற்றரசனால் தன் மகன் அவீமன் (அபிமன்யு) கொல்லப்பட்டான் என்பதை அறிந்து, பதினான்காம் நாள் போரில் மாலைநேரம் தேற்றரசனைக் கொல்வது என்று கிருஷ்ணரும் அர்ச்சுனனும் முடிவு செய்தனர். ஆனால் மாலையில் தக்க நேரத்தில் அவன் இருக்குமிடத்திற்குத் தேரைக் கொண்டுசெல்ல முடியாதபடி இருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர் தன் கையிலிருந்த சக்கரத்தால் சூரியனை மறைத்தார்57.. பொழுது அடைந்தது என போரை முடித்துக்கொண்டு, இசைக்கருவிகள் முழங்க, துரியோதனாதிகள் ஆற்றில் நீராடித் தம் பாசறைக்குச் சென்றனர். மகிழ்ச்சியோடு சென்ற மன்னர்களின் பின்னால் தேற்றரசன் சென்றுகொண்டிருந்தான். அந்தப்பொழுதில் மாயவர் சக்கரத்தைப் பின்வாங்க, சூரியனும் உதித்தான். அப்போது மாயவர் அர்ச்சுனனிடம், தேற்றரசன் போய்க்கொண்டிருக்கிறான், சிவனை நோக்கித் தவமிருக்கும் அவன் தகப்பன் கையில் தலை அறுந்து விழுமாறு அவன்மேல் சரத்தைச் செலுத்து என்றார்58. மாயவர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன், பொழுது அடைந்துவிட்டது என்று எண்ணிப் போகிறவரைக் கொல்வார்களோ? ஈசனை நோக்கிப் பூமியில் செய்துகொண்டிருக்கும் தவத்தைக் குலைப்பார்களோ? என்றான்59. உடனே கிருஷ்ணர், அர்ச்சுனா, போர்க்களத்தில் சாத்திரம், நீதி, தர்மம் பற்றிப் பேசுவார்களோ? இது உனக்கொரு பண்பா? என்று கூறி, வில்லில் சரத்தைப் பூட்டி அவன் கையில் கொடுத்து, தேற்றரசனைச் சொன்னபடி கொல் என்றார். கிருஷ்ணரின் கட்டளையை ஏற்ற அர்ச்சுனன் ஏவிய சரத்தில் தேற்றரசன் தலை அறுந்து, தவம் செய்துகொண்டிருந்த அவன் தந்தை கையில் வீழ்ந்தது60. தர்மத்திற்கு எதிராக இருப்பவனைக் கொல்லுதல் போர் அறம் என்பதற்கேற்பத் தேற்றரசன் அர்ச்சுனனால் கொல்லப்பட்டான்.

    மனிதாபிமான கடமை உணர்வு

    மனிதாபிமான கடமையுணர்வு என்பது ஒருவரின் சொந்த நலன்களைத் தாண்டி, பிறரின் நலன்களைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் செயல்பாடுகள் ஆகும். இது மனிதநேயம், இரக்கம், கருணை முதலிய உணர்வுகளோடு தொடர்புடையது. ஒருவருடைய துன்பத்தைக் கண்டு அதைத் தணிக்க அல்லது நீக்குவதற்கு உதவுவது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் கடமைகள் இதன்பால் அடங்கும். இறந்தவனைக் காணும்போது, காலை நம்மோடு இருந்தவன் மாலை நம்மோடு இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொருவர் மனத்தையும் அழுத்தும். அதனாலேயே விழுப்புண் பட்டிறந்தோரை முறைப்படி மரியாதையுடன் அடக்கம் செய்வர். பாகவதப் பாரதம், ஒவ்வொரு நாள் போரின் இறுதியிலும் இறந்தோரை அடக்கம் செய்வதோடு, அவர்களுக்குரிய கடமைகளையும் செய்து, நீராடிச் சென்ற படைத்தலைவர்கள் மற்றும் போர்வீரர்களின் மனிதாபிமான கடமை உணர்வைச் சித்திரிக்கிறது.

    வெற்றியுடன் பட்டவரை வீரமுடனே அடக்கி
    மற்றுமிரு படையும் வாகாகப் பட்டவரை
    முற்றும் எடுத்தடக்கி முழுகினார் நீரதிலே61

    என முதல்நாள் போரின் முடிவில் இறந்தோரை முறைப்படி அடக்கம் செய்து நீராடிச் சென்றதைக் காணமுடிகிறது. நான்காம் நாள் மற்றும் ஒன்பதாம் நாள் போரின் இறுதியில்,

    அன்றுபட்ட மன்னரையும் ஆனவீரர் தங்களையும்
    நன்றியுடன் நடத்தி நல்சுனையில் நீராடி
    முழுபடையும் தங்கள் பதிக்கேகினர் காணப்போது62
    அன்று வரையில் கதிரோனும் போய்மறைந்தான்
    பட்டவரசரையும் பார்வீரர் தங்களையும்
    இட்டமுடனே எடுத்தடக்கி நீர்மொழுகி63

    எனப் போரில் இறந்தோருக்குச் செய்யும் இறுதிக் கடனை நெறியோடு ஆற்றியதைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.

    முடிவுரை:

    பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவே இல்லை. அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல்மீதிலே ஆணை செலுத்த விரும்புவர். கடலாட்சி பெற்றபின்னர் வானவெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதிது இல்லை. அது இவ்வுலகத்து இயற்கை என்பது ஒரு தமிழ்க் கவிஞன் கூற்று64. அக்கூற்றுக்கு இணங்க மண்ணாசை கொண்ட வணங்காமுடியோனாகக் குருநாட்டில் வலம்வந்த துரியோதனனால் ஏற்பட்டதே குருச்சேத்திரப்போர். பாகவதப் பாரதம் அப்போரை வெகுவாகச் சித்திரிக்கிறது.

    மேற்கோள் குறிப்புகள்

    1. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, ப. 88
    2. சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, பக். 52, 53
    3. நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம், இராசசூயச் சருக்கம், பா.எ. 169
    4. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 409
    5. தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப. 103
    6. பரிமேலழகர் (உரை), திருக்குறள், அதிகாரம் 69
    7. இளங்குமரன் (உரை), புறநானூறு, பா. எ. 95
    8. க. கருப்பையா, ஓலைச்சுவடியில் மகாபாரதம்: கிருஷ்ணன் தூது
    9. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 796
    10. மேலது, ப. 796
    11. பரிமேலழகர் (உரை) மு.கு.நூல், பா.எ. 761
    12. அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், காட்சிக்காதை, 191, 192
    13. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 733
    14. லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், பக். 28, 29
    15. சிவ. விவேகானந்தன், மு.கு. நூல். பக். 835, 836
    16. புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், மரபியல், நூ. 72
    17. பரிமேலழகர், மு.கு. நூல், பா.எ. 767
    18. கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.. 683
    19. ஸ்ரீஆனந்தநாச்சியாரம்மா (மொ.பெ.ஆ), அர்த்தசாஸ்திரம், ப. 543
    20. மேலது, ப. 540
    21. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 820
    22. மேலது, ப. 820
    23. மேலது, ப. 821
    24. மேலது, ப. 945
    25. மேலது, ப. 838
    26. மேலது, ப. 840
    27. அ.இராகவன், தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், ப.21
    28. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: உரைநடைக் காப்பியம், பக். 95, 96
    29. மேலது, ப. 308
    30. மேலது, ப. 461
    31. மேலது, ப. 552
    32. தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், ப. 150
    33. நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) மு.கு.நூ, உத்தியோகப் பருவம், பா.எ. 376
    34. மேலது, பா.எ. 388
    35. மே.கு.நூ, முதற்போர்ச் சருக்கம், பா.எ. 18, 19
    36. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, பக். 889, 893, 905
    37. மு.கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), சுக்கிரநீதி, ப. 338
    38. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 955
    39. மேலது, ப. 946
    40. கழகத் தமிழகராதி, ப. 446
    41. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 964
    42. மேலது, ப. 988
    43. மேலது, ப. 843
    44. மேலது, ப. 843
    45. மேலது, பக். 912-915
    46. மேலது, ப. 930
    47. மேலது, ப. 959
    48. மேலது, ப. 964
    49. மேலது, ப. 950
    50. மேலது, பக். 950, 951
    51. தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப.101
    52. பரிமேலழகர் (உரை), திருக்குறள், பா.எ. 546
    53. மேலது, பா.எ. 547
    54. மு. கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), மே,கு.நூ, பக். 229, 230
    55. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 916
    56. மேலது, ப. 997
    57. மேலது, ப. 964
    58. மேலது, ப. 965
    59. மேலது, ப. 965
    60. மேலது, ப. 965
    61. மேலது, ப. 891
    62. மேலது, ப. 897
    63. மேலது, பக். 911, 912
    64. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழர் வீரம், ப. 16

    பயன்பட்ட நூல்கள்

    அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், உ.வே.சா. நூலகம், சென்னை, 1927

    இராகவன், அ, தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், அமிழ்தம் பதிப்பகம், சென்னை, 2007

    இளங்குமரன் (உரை), புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2003

    கதிரேசன் செட்டியார், மு (மொ.ஆ), சுக்கிரநீதி, சன்மார்க்கச் சபை, மேலைச் சிவபுரி, 1926

    கலைக்களஞ்சியம், தொகுதி-6, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1959

    கழகப் புலவர் குழு, கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை, 2004

    சேதுப்பிள்ளை, ரா.பி, தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2011

    தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1987

    தமிழ்நாடன் (மொ.ஆ), மநுதர்மம், காவ்யா, சென்னை, 2011

    நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம்- பாகம் 1-5, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2006

    பரிமேலழகர் (உரை), திருக்குறள், கழக வெளியீடு, சென்னை, 1951

    புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், பாரி நிலையம், சென்னை, 1977

    லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், லட்சுமி பிரசுரம், சென்னை, 2006

    வித்யானந்தன், சு, தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 2021

    விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் உரைநடைக் காப்பியம், காவ்யா, சென்னை, 2020

    விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் ஆராய்ச்சிப் பதிப்பு, காவ்யா, சென்னை, 2021

    ஸ்ரீஆனந்த நாச்சியாரம்மா, (உரை), அர்த்தசாஸ்திரம், ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010

    Share
  • ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்

    1975ஆம் ஆண்டு, 18 வயது மாணவனாக இங்கிலாந்து வந்தேன்.

    உயர்கல்வி எனும் கனவோடு வந்த என் பயணம், இன்று 51 ஆண்டுகளைக் கடந்த ஒரு தாத்தாவின் பயணமாக மாறியுள்ளது.

    இந்த காலப்பகுதியில், இங்கிலாந்து 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.

    ஒவ்வொருவரும் தனித்துவமான அரசியல் கோட்பாடுகளோடு வந்தாலும், அவர்களின் முடிவுகள் என் வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தாக்கியுள்ளன.

    மாறும் தலைமைகளும், மாறாத மக்களுமாய் கண்ட காட்சிகளின் தாக்கங்கள் தந்த அனுபவப் பரிமாணங்கள் பரபரப்பானவை , பிரமிப்பானவை.

    சிலரை மட்டும் இங்கு அலசிப் பார்க்கிறது எந்தன் மனம்.

    ஹரோல்ட் வில்சன் (1964–1970, 1974–1976)

    தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற கோட்பாட்டுடன் வந்தார்.

    கல்வி, சுகாதாரம், சமூக சமத்துவம் ஆகியவற்றில் முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார்.

    Open University திறந்த பல்கலைக்கழக உருவாக்கம் எனது உயர்கல்வி கனவுக்கு வழிகாட்டியது.

    நிற வேற்றுமை தடைச் சட்டம், கருத்தடை சட்டம், பாலியில் குற்ற சட்டம் போன்ற சட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன.

    புலம்பெயர்ந்தவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யபட்டன.

    மாணவனாக இருந்த எனக்கு, இங்கிலாந்து ஒரு திறந்த சமூகமாக மாறுவதற்கான ஆரம்பக் காலம் இது.

    ஹரோல்ட் வில்சன் பிரதமராக இருந்த காலத்தில் 1975ம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய பொதுச் சந்தையில் அங்கத்துவம் பெறுவதற்கான மக்கள் ஆணையை சர்வ ஐன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொண்டது.

    டெனிஸ் ஹீலி (1964–1970, 1974–1979)

    ஹரோல்ட் வில்சன் பதவி இராஜினாமா செய்ய இவர் எஞ்சியிருந்த காலத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றார்

    பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.

    – 1976ஆம் ஆண்டு, IMF கடன் பெறும் சூழ்நிலையில், கடும் செலவுக் குறைப்புகளை மேற்கொண்டார்.

    – மாணவனாக இருந்த எனக்கு, கல்வி உதவித் தொகைகள் குறைவடைந்தன; வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தன.

    – ஆனால், அவரது நேர்மையான அரசியல் அணுகுமுறை, எனக்கு பொறுப்பான நிர்வாகம் என்ற கருத்தை உருவாக்கியது.

    மார்கரெட் தாட்சர் (1979–1990)

    “இரும்பு பெண்மணி” என அழைக்கப்பட்ட இவர், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சங்கங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    என் மாணவ வாழ்க்கையில் வேலைவாய்ப்பு குறைபாடுகள், சமூக சேவைகளின் சுருக்கம் போன்றவை நேரடியாகத் தாக்கின.

    ஜோன் மேஜர் (1990–1997)

    மக்கள் வரிச் சட்டம் (Poll Tax) நீக்கம், உள்வரி அறிமுகம் என, சமூக நலனுக்கான மாற்றங்களை மேற்கொண்டார்.

    கறுப்பு புதன் (Black Wednesday) எனப்படும் பொருளாதார வீழ்ச்சி, எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் குலைத்தது.

    பிரஜைகள் சட்ட மூலம், அரசு சேவைகளில் பொறுப்புணர்வு உருவாக்க முயன்றார்.

    வட அயர்லாந்து சமாதன உடன்படிக்கை (Northern Ireland Peace Process) ஆரம்பித்தது, சமாதானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

    நான் தந்தையாகிய காலத்தில், பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் இவரது நடவடிக்கைகள் நேரடியாகப் பாதித்தன.

    டோனி பிளேயர் (1997–2007)

    “நியூ லேபர்” என்ற புதிய கோட்பாட்டுடன் வந்த இவர், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்தார்.

    என் பிள்ளைகள் பள்ளிக்கல்வி பெறும் காலத்தில், இவரது திட்டங்கள் நன்மை பயந்தன.

    டேவிட் கேமரூன் (2010–2016)

    இவரது ஆட்சியில் நடந்த பிரெக்சிட் வாக்களிப்பு, எனது குடும்பத்தில் எதிர்காலம் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியது.

    பொரிஸ் ஜான்சன் (2019–2022): கோவிட் காலத்தின் பிரதமர்

    கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள்

    2020 மார்ச் 23: முதல் தேசிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. “வீட்டில் இருங்கள், வைத்திய சேவையைப் பாவியுங்கள் , உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவுங்கள் (Stay at home, protect the NHS, save lives) என்ற முழக்கம் மக்கள் மனதில் பதிந்தது.

    பரிசோதனை மற்றும் தடுப்பூசி திட்டங்கள்:
    “சோதனை மற்றும் நோயாளிகளை கண்டறிதல்” திட்டம் £37 பில்லியன் செலவில் தொடங்கப்பட்டது,

    ஆனால் பல குறைபாடுகள் இருந்தன.
    UK உலகில் முதலில் தடுப்பூசியை அங்கீகரித்து வழங்கியது.

    பொருளாதாரத்தை சீராக்கும் திட்டத்தில் மக்கள் உணவகங்களில் உண்பதற்காக அரச உதவி அளிக்கப்பட்டது.
    – “Eat Out to Help Out” திட்டம், மக்கள் உணவகங்களுக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டது,

    ஆனால் இது கோவிட் பரவலை அதிகரித்தது என ஆய்வுகள் கூறுகின்றன.

    அரசியல் மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள்
    கட்சி விதி மீறல் (Partygate) பூட்டுதல் விதிகளை மீறி டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த கொண்டாட்டங்கள், நம்பகத்தன்மையை பாதித்தன.

    லாங் கோவிட் குறித்து அலட்சியம்: 2020ல், அவர் “லாங் கோவிட் என்பது உண்மையல்ல” என ஒரு ஆவணத்தில் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.

    டாமினிக் கமிங்ஸ், மட் கன்கொக் போன்ற முக்கிய ஆலோசகர்களுடன் கருத்து வேறுபாடுகள்.

    சமூக சமத்துவம் குறித்த விமர்சனங்கள்: கறுப்பு , ஆசிய இன சமூகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட போதும், ஜான்சன் அரசு “நிற வேற்றுமை நிராகரிப்பு ” அணுகுமுறையை பின்பற்றியது என கோவிட் விசாரணைக் குழு கூறியது.

    லிஸ் ட்ரஸ் (செப்டம்பர்–அக்டோபர் 2022): மிகக் குறுகிய காலம்

    தற்காலிக பட்ஜெட் £45 பில்லியன் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது,

    ஆனால் பங்கு சந்தை வீழ்ச்சி, பவுண்ட் மதிப்பு குறைவு, வட்டி உயர்வு ஆகியவை ஏற்பட்டன.

    உலக வங்கி, இங்கிலாந்து வங்கி ஆகியவை தலையீடு செய்ய வேண்டிய நிலை.

    குவாசி க்வாட்டங் பணி நீக்கம், ஜெர்மி கண்ட் நிதியமைச்சராக நியமனம்.
    – Conservative கட்சியில் ஆதரவு குறைந்து, 49 நாட்களில் பதவி விலகினார்.

    Thatcher-போன்ற “Iron Lady” பிம்பத்தை உருவாக்க முயற்சி.

    கன்சர்வேடிவ் (Conservative) உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பொதுமக்கள் ஆதரவு குறைவாக இருந்தது.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமை, பத்திரிகை விமர்சனங்கள், பார்டி உள்நோக்க சிக்கல்கள் ஆகியவை பதவி விலகும் நிலையை உருவாக்கின.

    ஒரு புலம்பெயர்ந்தவனின் பார்வையில்

    பொரிஸ் ஜான்சன் காலத்தில், கோவிட்-19 எனும் உலகளாவிய பேரழிவை எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள், நம்பகத்தன்மை வீழ்ச்சி, மற்றும் சமூக சீர்கேடுகள் எல்லாமே அந்த காலகட்டத்தின் சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு ஒரு வாழ்வாதார பிரச்சனையாகவே உருவானது.

    லிஸ் ட்ரஸ் காலம், ஒரு பொருளாதார சோதனையின் விளைவாக, அரசியல் நிர்வாகத்தின் நுட்பங்களை மீறிய ஒரு பாடமாகும்.

    இவர்கள் இருவரும், எனது 50 வருட அரசியல் அனுபவத்தில், நாட்டின் நிலைமையை மாற்றிய பிரதமர்கள். ஆனால், என் மனதில் பதிந்தது, மக்களின் நலனுக்கான அரசியல் தான்.

    ரிஷி சுனாக் ( 2022 – 2024 )

    ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசியர் பிரதமராக வருவது, எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமிதத்தை அளித்தது.

    ஆனால் பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார செலவுகள் ஆகியவை தொடர்ந்தே இருந்தன.

    பொருளாதரத்தில் நிபுணராக இருந்தும் அனைத்து பொருளாதார சிக்ககளின் பொறுப்பும் இவரையே சார்ந்தது.

    இவர் ஒரு புலம்பெயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது இவருக்கு எதுவிதமான அனுகூலத்தையும் அளிக்கவில்லை என்பதுவே உண்மை.

    ஐக்கிய இராச்சியம் கிறீஸ்துவ மதத்தை பெரும்பான்மையாகக் கொண்ட வெள்ளை இனத்தவரின் நாடு எனும் கருத்தை ஆதரிப்போர் இவரின் வீழ்ச்சியைக் கொண்டாடினார்கள் என்பதும் உண்மை.

    அதேநேரம் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ஒரு வேற்று மதம், இனம் , நிறம் கொண்ட ஒருவருக்குக்கு கொடுக்கும் சந்தர்ப்பம் இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டிலேயே நிகழும் என்பது எனக்கு இந்நாட்டின் பிரஜையாக பெருமையளிக்கிறது என்பதும் உண்மை.

    கியர் ஸ்டார்மர் (2024–தற்போது)

    தற்போதைய பிரதமர், “நிலைத்தன்மை மற்றும் மிதவாதம்” எனும் கோட்பாட்டுடன் ஆட்சி நடத்துகிறார்.

    சமூக சமத்துவம், புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் குறித்து நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    இங்கிலாந்து அரசியல், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் கொடுத்த தாக்கங்கள் கூட ஏதோ வகையில் என் செதுக்களில் பங்காற்றியிருக்கின்றன.

    ஆனால், என் தமிழ்ப் பாரம்பரியம், என் குடும்பத்தின் உறவுகள், என் மனதின் நிலைத்தன்மை இவை எனக்கு வழிகாட்டிய ஒளிகள்.

    அரசியல் மாற்றங்களை நேர்மறையாக அணுகும் மனப்பாங்கு, ஒரு புலம்பெயர்ந்தவனின் உண்மையான வெற்றிக்குறியாகும்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    வாழ்க்கை விரிகின்றது , கணவன், தந்தையாக பொறுப்புகள் பெரிதாகின்றன.

    உறவுகள், பணியிடம், குடும்ப வாழ்க்கை
    -மாறும் முன்னுரிமைகள். ‘நான் என்ன பெறலாம்’ என்ற நிலை ‘நாங்கள் என்ன தரலாம்’ என்ற நிலைக்கு மாறுகிறது.

    தொடர்புகளில் ஆழம். பிள்ளைகள் மூலம் நேர்மையான மனிதத் தன்மை மேம்படுகிறது.

    கடந்த நாள் கனவாகத் தோன்றுகிறது; இன்றைய நாள், எதையாவது அர்ப்பணிக்க வேண்டிய நேரமாக மாறுகிறது.

    அடக்கம் மற்றும் அமைதி. வாழ்க்கையின் முழுமையான பக்கங்களை பார்த்த பின் வரும் ஒரு தூர பார்வை.

    பாரம்பரியம் & கலாசார கவனம். ‘நாம் யார்’ என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    அருளும் அறிவும் ஒருங்கிணைகின்றன. சலிப்பற்ற காதல், விதி நிலைத்த ஞானம் இவை தாத்தா மனதின் தனிச் சீரிய தன்மைகள்.

    புதுமுறையை ஊக்குவிக்கும் முயற்சி. “பிழைத்ததை பகிர்வோம்” என்ற எண்ணம், இளம் தலைமுறையுடன் வேரடுக்கும்.

    “நான் வாழ்ந்த வாழ்க்கையின் மொத்தம் இப்போது ஒரு வழிகாட்டி தீபமாகிறது.”

    காலம் ஒரு சோதனை அல்ல, ஒரு அருள்

    ஒரு மாணவன் கனவுகளின் உச்சியில் நிற்பவர்.

    ஒரு தாத்தா, அனுபவங்களின் பள்ளத்தில் அமைதியுடன் வசிப்பவர்.

    இருவரும் ஒவ்வொரு பருவத்தில், வாழ்வை புதிதாய் எழுத்து எழுதுகிறவர்கள்.

    என் இனிய வாசக உள்ளங்களே ! எனது இந்த 50 வருட கால இங்கிலாந்து வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு புர்ஹித கோணத்தில் பார்க்க விழைந்ததன் விளைவே இது.

    Share
  • பறந்து போ – திரை விமர்சனம்

    பறந்து போ – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.

    சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?

    அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.

    சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.

    படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.

    சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
    படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.

    கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.

    படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.

    மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.

    ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.

    பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.

    Share
  • நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    அண்ணாகண்ணன்

    ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.

    வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.

    இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

    சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.

    ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

    ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?

    Share