Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    கான மகளும் வான மகளும் துணையிருக்கக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் வேலவனை ஒளிப்படத்தில் பிடித்துவந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்வழகிய படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்படக்கலைஞருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    ”தாமரை போன்ற எழிலார் திருவடிகளையும் பவழமொத்த மேனியையும், குன்றிமணிபோல் சிவந்த ஆடையையும் கிரவுஞ்ச மலையைப் பிளந்த நெடுவேலையும் உடைய சேவலங்கொடியோனாகிய முருகவேள் காப்பதனால் இவ்வுலக உயிர்கள் இன்பமாய் வாழ்கின்றன” என்று அழகன் முருகனின் அருளையும் ஆற்றலையும் வாயூறிப் பேசுகின்றது பெருந்தேவனாரின் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல்.

    தாமரை புரையும் காமர் சேவடி
    பவழத் தன்ன மேனி திகழொளி
    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
    நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்
    சேவலம் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே.
    (குறுந்தொகை – கடவுள் வாழ்த்து)

    படத்தில் மனைவியரோடு மாண்புறக் காட்சிதரும் கந்தவேள் குறித்த தம் சிந்தனைகளைக் கவிதையில் அள்ளித்தரக் காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****
    ”வனத்துக்குக் குறத்தியையும் வான மகளையும் மணந்தவனை, சூரனைச் சீறி அழித்தவனை, அந்த மயில்வாகனனைப் பணிந்தால் அருள்கிட்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அருள்தரும் வேலன்…

    வனத்து வள்ளிக் குறத்தியுடன்
    வான மகளை மணந்தவனை,
    சினத்தில் வந்த சூரனையே
    சீறும் வேலால் அழித்தவனை,
    தனமும் கலையும் தருபவனைத்
    தானே மயிலில் வருபவனை
    மனத்தில் எண்ணிப் பணிந்திடுவாய்
    மறவா தருள்வான் வேலவனே…!

    *****
    ”ஆறுமுகன் ஏறுமுகன் அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    குறவஞ்சி மகன் காரிருள் விலக்கும் கந்தனவன்” என்று முருகனின் தோற்றம் வீரம் பண்பு அனைத்தையும் பாங்குறப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    வள்ளி தெய்வானையுடன்
    வடிவேல் முருகன்
    வேலினைக் கையிலேந்தும்
    வெற்றி வேல்முருகன்

    சூரனை வதம் செய்த
    ஆறுமுக வடிவழகன்
    கடலையே முறியடித்த
    மக்கள் சூழ் மால்மருகன்

    வேழனின் இளையவனிவன்
    புவி வலம் வந்த மருகன்
    ஆறுமுகன் ஏறுமுகன்
    அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    இவனே குறவஞ்சி மகன்
    தணிகை மகன் சாந்த முகன்

    காரிருள் விலக்கும் கந்தனவன்
    அடியார் கொஞ்சுமுகன்
    அருள் மழை பொழியும் மாலன்
    இவனே சரவணன் சக்திமகன்

    *****

    ”ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால் பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து, சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!” என்று சந்தக் கவியில் ஆறுபடையப்பனின் வாழ்க்கை வரலாறுரைத்து நம் சிந்தை கவர்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    ஆறுபடையப்பன்

    நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
    ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
    போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
    பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

    வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்துத்
    தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
    ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்திச்
    சேயோனாய்க் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

    பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
    பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
    சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்கத்
    தென்பொதிகைப் பழனிபதி நின்ற பாலகுருநாதா!

    ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால்
    பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்துச்
    சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
    ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

    துள்ளிவரு வேலெடுத்துச் சூரர்தலை கிள்ளிச்
    சினம்விடுத்துத் தேவவேழ வாகனத்திலேறி
    வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்துக்
    குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

    சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
    ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
    அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்திச்
    சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

    ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
    கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
    குன்றிருக்கு மிடமெல்லாம் குமரன்இடம் எனவே
    செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

    *****

    ”சங்கத்தமிழ்த் துதி துதிக்க…தங்கத்தேர் குலு குலுங்க…வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப வள்ளியோடு நீ வருவாய்!” என்று உள்ளம் அள்ளும் துள்ளிசைப் பாடலில் சிங்கார வேலனை அழைக்கின்றார் திருமிகு. ராதா.

    சின்ன மயில் சிலுசிலுக்க…
    சின்ன இடை தளதளக்க…
    சித்தர் போற்றும் சீமானே
    சிங்காரவேலா நீ வருவாய்!

    பட்டாடை பளபளக்க…
    பார்ப்பவர் மெய்மறக்க…
    பாவங்களைப் போக்கிடவே
    பாலகனே நீ வருவாய்!

    செஞ் சிலம்பு சலசலக்க…
    சேவல்கொடி படபடக்க…
    செந்தூரில் நின்றாடும்
    தேவாதி தேவனே நீ வருவாய்!

    பால்குடம் பொங்கப் பொங்கப்
    பக்தர்களும் பாடி வர
    பாவங்களைப் போக்கிடவே
    பால முருகனே நீ வருவாய்!

    சக்திவேல் மினுமினுக்க…
    சங்கடங்கள் பறந்து
    சரணங்கள் பாடிவந்தேன்
    சண்முகா நீ வருவாய்!

    சங்கத்தமிழ்த் துதி துதிக்க…
    தங்கத்தேர் குலு குலுங்க…
    வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப
    வள்ளியோடு நீ வருவாய்!

    *****
    ”ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன அபிஷேகமில்லை;
    சுத்திகரிப்பான்தான்! அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல்கொண்டு விரட்டி அடித்துத் துரத்த
    மாட்டாயா கொரோனாவை?”  என்று தம் ஆதங்கத்தைப் பாட்டில்
    வெளிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    ஆதங்கத்துடன்…. அரகரோகரா!

    ஆறுமுகத்தோனே உன் அண்ணன்
    ஆனை முகத்தானெங்கே?
    ஆதிமுதல்வனென அவனை
    அனுதினமும் துதிபாடி
    ஆளுக்கொரு சிலைசெய்து
    ஆற்றங்கரையில் கரைத்தோம்!
    அழகாய்த் தீபம் ஏற்றி உன் அப்பன்
    அண்ணாமலையாரைத் தொழுதோம்!
    ஆடித்தபசில் கைகூப்பி உன்
    அன்னையையும் வேண்டினோம்!
    அடுத்துவரும் கார்த்திகையில்
    அன்புடன் வணங்குவோம் உன்னையும்!
    அகிலமெல்லாம் வியக்கச் சூரனை வென்ற நீ
    அடங்க மறுக்கும் நோய்த்தொற்றால்
    அவதியுறும் எம்மக்களின் துன்பம்
    அறியாது வள்ளிதெய்வானையுடன்
    அளவளாவி நிற்கின்றாயோ?
    ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன
    அபிஷேகமில்லை சுத்திகரிப்பான்தான்!
    அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல் கொண்டு விரட்டி
    அடித்துத் துரத்த மாட்டாயா கொரோனாவை…?

    கருத்துச் செறிவான தம் கவிதை மலர்களால் தமிழவேள் முருகனுக்கு அணிசெய்திருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள்; அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    முப்பாட்டன் முருகனுக்கு அரகரோகரா – எங்க
    முத்துக் குமரனன்றோ அரகரோகரா!
    எப்பாடு பட்டாச்சும் அரகரோகரா – எங்களை
    எலக்ஷனிலே வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    ஊர் முழுதும் சுத்தி வந்தோம் அரகரோகரா – எமக்கு
    ஒரு வழியும் தெரியலையே அரகரோகரா!
    தேரிழுத்தும் நாம் வருவோம் அரகரோகரா – எங்களைத்
    தேர்தலிலே ஜெயிக்க வைப்பாய் அரகரோகரா!

    வேலெடுத்து நாம் வருவோம் அரகரோகரா – எமக்கு
    வெற்றியை நீ தந்திடுவாய் அரகரோகரா!
    காலலுக்க நடக்கின்றோம் அரகரேகரா – எங்க
    கட்சியை நீ வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    கள்ளவோட்டுப் போட்டாலும் அரகரோகரா – எங்களைக்
    காட்டி நீயும் கொடுத்திடாதே அரகரோகரா!
    வெள்ளமென ஓட்டு வந்து அரகரோகரா – எமக்கு
    விழுந்திடவே வேண்டுமையா அரகரோகரா!

    அரவிந்த மலரெடுத்து அரகரோகரா – உனக்கு
    அர்ச்சனைகள் செய்திடுவோம் அரகரோகரா!
    தரவேண்டும் ஆதரவை அரகரோகரா – எங்கும்
    தாமரையே பூக்க வேண்டும் அரகரோகரா!

    வெற்றிவடி வேலவனே அரகரோகரா – எமக்கு
    வேறுவழி இல்லை ஐயா அரகரோகரா!
    பொற்பாதம் பணிந்து நின்றோம் அரகரோகரா – நாங்கள்
    போடும் வேஷம் வெல்ல வேண்டும் அரகரோகரா!

    அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்காக முருகனின் பெயராலே செய்யும் வேடிக்கை விநோதங்களைத் தம் பாட்டில் நயம்பட நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சுடர்விடும் சோடிக் குத்துவிளக்குகளை அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ் ஒளிப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 284க்கு  வழங்கப்பட்டிருக்கின்றது. அழகொளிரும் படம்தந்த ஒளிப்பட வல்லுநர்க்கு என் நன்றி!

    ”இருளகற்றும் சோதி விளக்குகளைப் போலநம்
    மருளகற்றும் கல்வி ஒளி!”

    சுடர்விடும் இந்தக் குத்துவிளக்குகள் குறித்து முத்தாகக் கவிசொல்லக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்!

    *****

    ”மனிதனின் மன இருட்டை விரட்ட உண்மையே விளக்கு” என்ற நற்கருத்தை நவிலும் திரு. செண்பக ஜெகதீசன், ஏற்றிவைத்த குத்துவிளக்குக்கு ஈடாக வேறோர் விளக்கில்லை என்கிறார் வியப்போடு!

    எல்லா விளக்கும்…

    இருளை அகற்றிட ஏற்றிடும் விளக்கு
    இருக்கும் இடமே ஒளியால் சிறப்பு,
    இருட்டு மனிதன் இதயத்தில் இருந்தால்
    இதனை ஓட்டிட உண்மையே விளக்கு!

    எத்தனை விளக்குகள் வகைகள் பலவாய்
    ஏற்றி வைத்தே அழகு பார்த்தாலும்
    குத்து விளக்கின் அழகைப் போலக்
    குடும்பப் பாங்காய் எதுவும் இலையே…!

    *****

    ”இருமுக விளக்கு; இல்லற விளக்கு; கார்த்திகை விளக்கு; காரிருள் விலக்கு” என்று விளக்கின் சிறப்பினை விவரமாய் விளம்புகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இருமுக விளக்கு
    இல்லற விளக்கு
    இருள் அகல் விளக்கு
    இறை அருள் விளக்கு

    சொல்லக விளக்கு
    சுடரொளி விளக்கு
    பன்முக விளக்கு
    பாவை கை விளக்கு

    ஒளிச்சுடர் விளக்கு
    ஓங்கச் செய் விளக்கு
    ஒற்றுமை ஆக்கும் விளக்கு
    ஓங்கார விளக்கு

    கார்த்திகை விளக்கு
    காரிருள் விலக்கு
    வள்ளலார் விளக்கு
    வாழ்வு மலரச்செய் விளக்கு!

    *****

    விளக்குகளை வைத்து நல்ல கருத்துக்களை விளக்கியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    தீப ஒளி!

    கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
    வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
    இருளெனும் மௌனம் விரட்டிட
    வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை

    மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
    வெளிச்சக் கீற்றெனும் தேவதை
    அறியாமை இருளை நீக்கி உண்மை
    ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை

    இருளை விலக்கி வாழ்வில் தினமும்
    வெளிச்சம் செதுக்கும் உளி
    காரிருள் நீக்கிப் பார்வையில்
    தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி

    தனிமை வெக்கைப் போக்கித்
    துணையைக் காட்டும் இன்ப வளி
    இனிமை பொங்கி நம் இல்லம் சிறக்க
    ஒளிரட்டும் நல் தீப ஒளி!

    ”இருளை விலக்கி வாழ்வில் தினமும் வெளிச்சம் செதுக்கும் உளி; காரிருள் நீக்கிப் பார்வையில் தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி” எனும் அழகிய வரிகளால் நம் சிந்தையை வருடியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 283இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 283இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஓவியமா? செதுக்கிய சிற்பமா? என்று நம்மை மலைக்கவைக்கின்ற இந்தக் காட்சியை அழகாய் ஒளிப்படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து வழங்கப்பட்டிருக்கின்றது இப்படம்; ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

    “வையத்திலே பெண்ணொருத்தி மையமாக வீற்றிருக்க,
    திண்ணென்ற மூட்டையொன்று அவள்பின்னே சாய்ந்திருக்க,
    காளைகளைப் பூட்டிக்கொண்டு காளையிவன் கிளம்பியது
    வணிகத்துக்கோ வேறெதற்கோ விளம்பிடுவீர் வையத்தீரே!”

    வையம் என்ற சொல்லுக்கு உலகம் என்ற பொருளோடு வண்டி என்ற பொருளுமுண்டு!

    இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்டக் கவிஞர்களை அழைக்கின்றேன் அன்போடு! வருக… உம் கவிதைகளைத் தருக!

    *****

    ”கட்டைமரத்தில் செய்த இவ்வண்டி கண்ணுக்கழகாக இருந்தாலும், அந்நாளில் காணக்கிடைத்த  உண்மை வண்டிகள் இந்நாளில் மறைந்துவிட்டனவே!” என்ற தம் ஏக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கலையை ரசிப்போம்…

    கண்ணுக் கழகாய்க் கட்டைவண்டி
    கட்டை மரத்தில் செய்துவிட்டார்,
    வண்ணம் பலவும் பூசியேதான்
    வனப்பு மிக்கதாய் ஆக்கிவிட்டார்,
    உண்மை வண்டிபோ லிருந்தாலும்
    உண்மையில் வண்டிகள் மறைந்தனவே,
    எண்ணிப் பார்ப்போம் அந்தநாளை
    எழுதிய கலைஞனை வாழ்த்திவிட்டே…!

    *****

    ”வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம் சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை; ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட ஏதும் செய்திட நாம் முனைவதில்லை” என்று ஓடப்பர்களின் அவலநிலையெண்ணிக் கவலுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மூக்கணாங்கயிறு!

    உழைக்கும் மக்கள் பிழைத்து வாழும்
    வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
    அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
    மாற்றம் ஏதும் கிட்டவில்லை!

    வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
    சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
    திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
    அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை!

    ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
    ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
    ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
    இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்
    வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
    மூக்கணாங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
    அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
    கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்!

    *****

    வண்டியைக் கண்டதும் தம் உளத்தில் ஊறிய வெவ்வேறான எண்ணங்களைத் தம் கவிதைகளில் வனப்புற வெளிப்படுத்தியுள்ளார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன்!  

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    இரட்டைக் காளைப் பூட்டி விட்ட எங்க மாட்டு வண்டி
    இறுக்கிப் பிடிச்சக் கயிற்றோட வண்டிக்கார அண்ணே
    ஆடியாடி உடம்பை அசைக்கும் எங்க பாசக்கார அண்ணி
    எல்லாச் சுமையும் சுமக்கத்தானே எங்க மாட்டு வண்டி!

    சல்சல்லுனு பறக்கப் போற எங்க வண்டியப் பாரு
    சீறிப் பாயும் சிங்கமாகக் கிளம்பப் போறான் பாரு
    தாவித்தாவிப் புழுதி கிளப்பத் தயாராயிட்டான் பாரு
    மொத்தத்திலே நம்ம விமானம் இது என்பதைக் கூறு!

    கிராமத்துக்கே பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி
    குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப்போற வண்டி
    மனசு முழுக்க சந்தோசத்தை வாரிக் கொடுக்கும் வண்டி
    வாங்க நாமும் பயணம் செய்வோம்
    நம்ம மாட்டு வண்டி!
    அட நம்ம இரட்டை மாட்டு வண்டி!
    வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி!

    ”கிராமத்துக்கேப் பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி; குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப் போற வண்டி” என்று கிராமத்து மாட்டுவண்டிப் பயணத்தை நினைவுகூரும் திருமிகு. சுதா மாதவன், ”நம்ம இரட்டை மாட்டுவண்டி; வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி” என்று முத்தாய்ப்பாய்த் தம் கவிதையை முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 282இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 282இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தென்னை ஓலைமீது அமர்ந்திருக்கும் சின்ன அணிலை நுணுக்கமாய்ப் படம்பிடித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியுள்ளனர். ஒளிஓவியர் ராமலக்ஷ்மிக்கு நன்றி!

    அணில் என்ற பெயர் இவ்வுயிரிக்கு எப்படி வந்திருக்கும் என்று ஆராய்வோம்!

    அண்டு/அண்டி என்பது உடலோடு ஒட்டியிருக்கும் வாலைக் குறிக்கும். ’அண்டு’ என்ற அந்தச் சொல் ’அண்ணு’ என்றாகி அத்தோடு ’இல்’ சேர்ந்து ’அண்ணில்’ ஆனது. பின்னர்,  பேச்சுவழக்கில் ’அணில்’ என்று இடைக்குறைந்த சொல்லாக மாறிப் புழக்கத்திற்கு வந்திருக்கின்றது என்கிறார்கள் சொல்லாராய்ச்சியாளர்கள்.

    ஆக, அணில் என்பதற்கு ’வாலுயிரி’ என்று பொருள் என்பதை இதன்வழி அறிகின்றோம். 

    இன்னொரு பெயரும் அணிலுக்கு உண்டு. அது ‘வெளில்’ என்பது. வெளியே தொங்கும் வாலுக்கு ஆகுபெயரான ’வெள்’ என்பது ’இல்’ விகுதி பெற்று ’வெளில்’ ஆகியிருக்கின்றது.

    ஏனலங் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
    கிளிவிளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
    (அகம் – 12) என்ற அகநானூற்றுப் பாடலில் ‘வெளில்’ என்ற சொல் அணிலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    ஓலையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த அணிற்பிள்ளை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்னவென்று கண்டுவருவோம் இனி!

    *****

    ’ராமன்’ எனும் நாயகனால் ’புகழ்’ எனும் மூன்றெழுத்தை அடைந்த மூன்றெழுத்து உயிரான அணிலை, ’வாழ்க’வெனும் மூன்றெழுத்தால் நயம்பட வாழ்த்தியிருக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    மூன்றெழுத்து வாழ்த்து!

    ‘அணில்’ என்னும்
    மூன்றெழுத்துப் பெயர் கொண்ட
    பிராணியே!

    ‘ராமன்’ எனும்
    மூன்றெழுத்துப் புராண நாயகனுக்கு
    ‘உதவி’ என்ற
    மூன்றெழுத்தைச் செய்ததால்
    ‘முதுகு’ என்ற
    மூன்றெழுத்து உடலுறுப்பி‌ல் பொறித்த
    மூன்றுகோடுகளால்
    ‘புகழ்’ என்னும்
    மூன்றெழுத்தை அடைந்தாய்,
    புராண காலத்தில்!

    ‘சேமியா’ என்ற
    மூன்றெழுத்து உணவுப்பொருளிலும்
    பிரபலமடைந்தாய்
    கலியுகத்திலும்!

    ‘வாழ்க’ என்னும்
    மூன்றெழுத்துச் சொல்லால்
    வாழ்த்துகிறேன்
    உன்னை இன்று!

    *****

    ”அண்ணல் ராமன் கைபட்ட அணிலே! உனக்கு உண்ணக் கனியும் பாலும் தருவேன்” என்று கனிவுடன் இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அணிலே வா…

    அண்ணல் ராமன் கைபட்ட
    அணிலது கடித்தால் கனிசுவைக்கும்
    எண்ணம் நமக்கே இருப்பதாலே
    எல்லா அணிலையும் விரும்புகிறோம்,
    உண்ண ஒன்றும் கிடைக்காமல்
    ஓலையில் இருக்கும் அணிலேவுன்
    கண்ணது கலங்க விடமாட்டேன்
    கனியும் பாலும் தருவேனே…!

    *****

    ”சேதுப்பாலம் கட்டவந்த அழகு மனங்களே! ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே! நீங்கள் உண்ணும் அழகைக் கண்டுமகிழ நாங்கள் இருக்கிறோம்!” என்று அணிலினத்தை அன்போடு புகழ்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    ராமர் போட்ட மூன்று கோடு உங்கள் இனத்திற்கு
    நாளுமது சேதி சொல்லும் எங்கள் மனத்திற்கு
    சேதுப்பாலம் கட்ட வந்த அழகு மனங்களே
    ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே

    இங்குமங்கும் தாவித் தாவி ஓடித் திரியவே
    இறைவன் உங்களையே படைத்து மகிழ்ந்திட்டானே
    பழங்களையும் காய்களையும் தின்னும் அழகிலே
    பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட நாங்கள் இருக்கிறோம்

    *****

    ”பொய்ம்மைகளுக்கு நடுவில் மெய்ஞ்ஞானமும், கட்டுகளில்லாத போதும் கண்ணியம் இழக்காத தெளிவும் வேண்டும்” என்று அணிலுக்குச் சொல்வதுபோல் மானுடர்க்கு நல்லுரை நவின்றுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    தேவைகள்

    ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
    அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
    வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
    தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

    கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
    சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
    காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
    கனிவும் இனிமையும் தர வேண்டும்

    கூச்சல் குழப்பம் பொய்ம்மைகள் நடுவே
    உண்மையை அறியும் அறிவு வேண்டும்
    வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
    தன்னிலை உணரும் மெய்ஞ்ஞானம் வேண்டும்

    கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
    கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
    தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
    சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

    *****

    அணிலின் முதுகில் கோடு வரைந்தவன் அண்ணல் இராமன் எனும் புராணச் செய்தி நம் மக்களின் மனங்களில் எவ்வளவு தூரம் ஆழப் பதிந்திருக்கின்றது என்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். வாலுயிரியான அணிலின்பால் அன்பைப் பொழிந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    எதைப் பார்க்கிறாய்?
    என்ன கேட்கிறாய்?
    உன்னைச் சுற்றிய
    உலகின் ஓட்டத்தை
    உற்று நோக்கியே
    உன்னுள் நகைப்பா?

    கிடைத்ததை உண்டு
    காலத்தை வென்று
    வாழ்வினை முடிக்கும்
    வாடிக்கை உனக்கு!
    சந்ததி வளர்க்கும்
    சங்கதி அறிவாய்

    எடுத்தவை அனைத்தையும்
    எடுத்ததும் முடித்திடாமல்
    பின்னொரு வேளைக்காய்
    முன்னரே சேர்த்திடுவாய்!

    முதுகினில் வரிகளையும்
    மூளையில் அறிவையும்
    துணையாய்க் கொண்டே
    துணிவுடன் தாவிடுவாய்!

    உருண்டிடும் உலகினில்
    உன்னையும் என்னையும்
    உழன்றிட வைத்திட்டவன்
    உண்மையில் வித்தகனே!

    ”கிடைத்ததை உண்டு காலத்தைவென்று வாழும் அணிலே! பின்னொரு வேளைக்காய் முன்னரே சேர்த்திடும் மூளையுள்ள உன்னையும் என்னையும் உருண்டிடும் உலகினில் உழன்றிட வைத்தவன் உண்மையில் வித்தகனே!” என்று அணிலின் இயல்பையும் உயிர்களைப் படைத்து உழலவைக்கும் ஆண்டவனின் இயல்பையும் பாட்டினில் நேர்த்தியாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிந்தனையில் ஆழ்ந்தபடி எதையோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் சிற்பத்தை பாரீஸ் சென்று அற்புதமாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் திரு. நித்தி ஆனந்த். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்வுசெய்து வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

    ”மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி. ஆனால், மாதவம் செய்து பிறந்த அந்த மங்கையர்க்கு இந்தச் சமூகம் இழைக்கும் இன்னல்களும் இடும்பைகளும் கொஞ்சமில்லை. பெண்களின் நிலை இவ்வாறு இருப்பதற்குத் தீர்வென்ன என்றுதான் இந்தப் பெண்மணியும் ஆழ்ந்து சிந்திக்கின்றாரோ?

    ஒன்றைமட்டும் அழுத்தமாய்ச் சொல்லமுடியும்…”பெண்களைப் போற்றும் நாடும் வீடும் சிறப்பது திண்ணம்!”

    இனி, இந்தச் சிற்பமங்கை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்பதை அறிந்துவருவோம்!

    *****

    ”நம் கண்முன் இருக்கும் தெய்வமாம் அன்னையை வணங்கி மண்ணில் உய்வோம்” என்ற நல்வழியைக் கவிதையில் சொல்லியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கோபுரமாய்…

    அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
    அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
    முன்னே காணும் முதலாம் கடவுள்
    முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
    உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
    உயர்வில் அவளொரு கோபுர உருவே,
    பின்னர் அவளைத் தவிக்க விடாதே
    பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!

    *****

    ”காரழகியே! வாடிய மலராய் அமர்ந்திராமல் வாயைத் திறந்து உன் கதையைச் சொல்லிவிடு!” என்று கவலையாய் அமர்ந்திருக்கும் காரிகையை அக்கறையோடு விசாரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கவலை நிறைந்த முகத்தோடு
    காலினை நீட்டி அமர்ந்தபடி
    கண்ணினை நிலம் காண இருப்பவளே
    உன் கதையைத் தான் சொல்லிவிடேன்?

    கடற்கரையின் ஓரமது என்பதறிந்தே
    உன் மன அலையும் அதனூடே பொங்கியெழச்
    சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்க்
    கருத்த நிறக் காரழகி நீ என்பதறிவேன்

    காற்று கூட உன்னைத் தொடவில்லையா?
    கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா?
    வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
    வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
    வாழ்வே கசக்கும்!

    *****

    ”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்! உள்ளத்தின் உள்நோக்கி உன்திறன் அறிந்தால் உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!” என்று இம் மங்கைக்கு ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வளம் பெறும் வழி

    ஆணும் பெண்ணும்
    சரி நிகர் சமானம்
    அடையும் இலக்கில்
    அவரவர் உயரம்
    விடுதலை உணர்வு
    விகிதத்தில் இல்லை
    எட்டும் அறிவில்
    இளைத்தவர் இல்லை!

    உள்ளத்தின் உள் நோக்கி
    உன் திறன் அறிந்தால்
    உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!
    அச்சம் தவிர்த்து
    அகிலத்தை வெல்லலாம்
    வெற்றுப் புகழ்ச்சியை
    ஒதுக்கி வைத்து
    உண்மை அறிவை
    உயர்த்தும் கல்வியை
    வளர்த்து வளம்பெறும் வழியறிவாய்!

    சிற்பப் பெண்ணுக்குச் சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதைகளைப் படையலிட்டிருக்கும் நம் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    தாயவளே தூயவளே!
    தணியாத அன்பாலே
    தரணிதனில் உயிர் தழைக்கத்
    தன்னையே ஈந்தவளே தாயே!

    உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா!
    உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா!
    உனக்கு இணை உலகில் நீயே அம்மா!
    உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா!

    கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்!
    கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்!
    கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்!
    கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னைச் சிவப்பாக்கினாய்!

    நிலவு நீ காட்டிச் சோறூட்டினாய்!
    நிலத்தில் நடைபழக்கி வழிகாட்டினாய்!
    நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்!
    நிலைத்த உன்அன்பில் எனைக் குளிப்பாட்டினாய்!

    விழி இரண்டின் ஒளியாலே
    வெளிஎங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்!
    மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
    பொழிகின்ற மழை மேகமாகத் தாலாட்டினாய்!

    ஈன்ற தாயே இனியவளே அம்மா!
    ஈடில்லா உன் உழைப்பாலே
    ஈபிள் கோபுரம் போல் தலைநிமிர்ந்தேன்!
    ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்!

    ”கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்; கருணையோடு எனைவளர்த்து உயர்வாக்கினாய்; கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்; ஈடில்லா உன் உழைப்பாலே ஈபிள் கோபுரம்போல் நான் தலைநிமிர்ந்தேன்!” என்று அன்னையின் உழைப்பை, கைம்மாறு கருதாத அவள் ஈகத்தை எளிய வரிகளில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 280இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 280இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒளிப்பட நிபுணர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்துள்ள இப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 280க்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

    மும்மூர்த்திகளெனத் தரையில் அமர்ந்திருக்கும் இம்முதியவர்களின் நிலையைக் காண்கையில் வருத்தம் மேலிடுகின்றது. நடுவிலிருப்பவர் சங்கொலி எழுப்புவது தம் துயரத்தைச் சிறுபொழுதேனும் அச் சங்கொலியில் சங்காரம் செய்யத்தானோ?

    இப்படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளிவழங்க நம் கவிஞர்பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்! அவர்களை வரவேற்போம்!

    *****

    கையில் செல்போன் உடையவர் அறிவிப்பது அன்றைய கலெக்சனையா?
    அருகிருக்கும் ஐயர் சங்கினை ஊதுவது சில்லறை சேர்த்திடவா? பையினைக் கையால் அணைத்திருப்பவர் பார்ப்பது முன்வரும் கிராக்கியையா? என்று வினாக்களை விவரமாகத் தொடுக்கின்றார் திரு. கருணானந்தராஜா.

    யாரிவர்கள்?

    கையினில் செல்போன் உடையவரோடு
    கதைப்பது யாரவரின் சதியா?
    ஐய இதென்ன அவர்அறி விப்பது
    அன்றைய நாளின் கலெக்ஷனையா?
    ஐயரிருந்துவெண் சங்கினை யூதி
    அழைப்பது சில்லறை சேர்த்திடவா?
    பையினைக் கையால் அணைத்திருக்கும் நபர்
    பார்ப்பது முன்வரும் கிராக்கியையா

    கையில் குறைகள் தெரியவில்லை அந்தக்
    கால்களில் சோர்வா புரியவில்லை
    மெய்யினிலே குறை யாதுமில்லை – அவர்
    மேனியுறுதி தளரவில்லை.
    உய்யும் வகைக்கவர் தேர்ந்தெடுத்த – இந்த
    உழைக்கும் வழிக்கென்ன காரணமோ?
    பையன்கள் பெண்கள் அன்னவரின்முது
    மையை நிராகரித் திட்டனரோ!

    தூரத்துரத்தி தெருவினில் விட்டு
    துரோக மிழைத்தவர் பிள்ளைகளோ! – இல்லை
    யாரும் சதமல்லவென்று உணர்ந்து தம்
    ஊரைவிட்டேயிவர் வந்தனரோ!
    வேரைப்பிடுங்கித் தம் பாசமறுத்து
    வெளிக்கிட்டுவிட்ட நிலையிதுவோ – இந்தப்
    பாரினில் யாதும் தம் ஊரெனும் நோக்கில்
    பரதேசி வாழ்வினைத் தேர்ந்தனரோ!

    *****

    ”கண்டதே காட்சி; கேட்பதே செய்தி என்று நம்பி அரசியல் வாணிகப் பாம்புகளின் ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு மயங்கி மதிகெட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!” என்று இன்றைய மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

    கண்டதே காட்சி…
    காண்பதே உண்மை…
    கேட்பதே செய்தி …
    – என்று
    சொன்னதை நம்பி
    தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
    கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
    வாழ்வியல் செய்திகளை,
    சமூக நிலைமைகளை,
    சரித்திர உண்மைகளை
    மூடி போட்டு மறைத்து வைத்து
    வணிகச் செய்திகளை
    வறட்டு விவாதங்களைப்
    பசப்பு வார்த்தைகளைப்
    படாடோப விளம்பரங்களை
    வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
    உண்மை என்று வாழ்ந்து
    சொந்த மண்ணிலேயே
    அகதிகளாய் வாழுகின்றோம்
    சொந்தங்களை இழந்துவிட்டு
    அநாதையாய் இருக்கின்றோம்!

    அரசியல் வாணிகப் பாம்புகளின்
    ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
    மயங்கி மதிகெட்டு நிற்கும்
    பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!

    *****

    ”இங்கே அமர்ந்துள்ளவர்கள் சித்தர்களா? பசிப்பிணியாலான பித்தர்களா? குழப்பம் நீங்க விளக்குங்கள்!” என்று வினவுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    சங்கினைத் துணைக் கொண்டு
    கோவில் வாயிலில் அமர்ந்து
    சாப்பாட்டிற்கான உத்தியாகச்
    சரித்திரம் உருவாகிறதா?

    ஆலயத்தினுள் தான் முழங்க வேண்டி
    முன்னோர்கள் வகுத்த வழி
    ஆலயத்திற்கு வெளியே வந்ததன்
    விந்தைதான் என்ன?

    யாசகம் கேட்பதற்குச் சங்கு
    இதுவோ வரிசைகட்ட!
    அமர்ந்துள்ள சித்தர்களா…
    இல்லை பசிப்பிணியாலான பித்தர்களா?

    விளக்குங்கள்
    அதிகரிக்கும் குழப்பங்கள்
    சங்கே நீ முழங்கு
    சங்கே நீயே முழங்கு!

    *****

    ”பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி பெற்றவரை விட்டுவிட்டுத் தனம்
    பெறப் பரதேசம் போனதனால் பெற்றவர்கள் பெற்றது இந்தப் பரதேசிக்கோலம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
    ஆடல் வல்லான் ஆலய வாசலில்
    அடுத்த வேளைச் சோற்றுக்கு
    அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

    நீறு அணிந்த பிறை நெற்றி
    நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
    நிறம் கருத்த நெடு மேனி
    வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

    பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
    பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
    பெறப் பரதேசம் போனதனால்
    பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

    உற்ற துணை யாரும் இல்லை
    உறுதுணையாக வரும்
    உறவுகள் ஏதுமில்லை – புது
    உறவு உருவானது புண்ணிய பூமியில்!

    முதுமையின் முடியாமையால்
    முயல்வதற்கு இயலாமையால்
    மூவரும் மூலவரை நோக்கி
    முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

    சங்கொலி முழங்கிச்
    சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
    சங்கரனே சற்று இரங்கிடு!
    சங்குப்பால் குடித்தவர்கள்
    செவியில் இதைச் சேர்த்திடு!

    கோயில் வாயிலில் அமர்ந்திருக்கும் இம் முதியவர்களின் பரிதாப நிலை நம் கவிஞர்களின் பாக்களில் சோக ரசத்தை இழையோட விட்டிருக்கின்றது. எவ்விதச் சுவையையும் அழகாய் வெளிப்படுத்தும் உங்கள் அரிய ஆற்றலைப் பெரிதும் போற்றுகின்றேன் கவிஞர்களே!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பாடமாக…

    சமூக இடைவெளி
    சற்றுக் கூடுதலாகிவிட்டது,
    பெற்று வளர்த்துப்
    பேணிக்காத்தவர்கள் வயதில்
    பெரியவர்கள் ஆனதும்
    தெருவில் நிற்கிறார்கள் அல்லது

    தேடிச் செல்கிறார்கள்
    முதியோர் இல்லங்களை…

    வேலை செய்ய இயலாதபோது
    வேடங்கள் போட்டு
    ஓடவிடுகிறார்கள் பசியை…

    வழிபாட்டுத் தலங்ளில்
    வழிமறிக்கும் சாமிகளெல்லாம்
    முற்றும் துறந்தவரல்லர்,
    முழுதும் மறக்கப்பட்டவர்கள்…

    இளைஞர்களே
    எண்ணிப் பாருங்கள்!
    முதுமைவரும் உங்களுக்கும்,
    உதறிடாதீர் பெற்றோரை-
    உங்கள் பிள்ளைகள்
    பார்த்த்துக்கொண்டிருக்கிறார்கள்–

    பாடமாக…!

    ”வழிபாட்டுத் தலங்களில் வழிமறிக்கும் சாமிகள் எல்லாரும் முற்றும் துறந்தவரல்லர்; முழுதும் மறக்கப்பட்டவர்கள்” என்ற உண்மையை உணர்த்தி, ”முதுமை உங்களுக்கும் வரும் இளையோரே; உதறிடாதீர் பெற்றோரை! உங்கள் பிள்ளைகளுக்கும் அதுவே பாடமாகும்” என்ற வாழ்வியலையும் சேர்த்தே நினைவூட்டியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 279இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 279இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் கலைநுட்பத்தோடு எடுத்துவந்திருக்கும் இந்தக் கருப்புவெள்ளைப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

    ’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அந்த வகையில் வியர்வை சிந்தி உப்பை உருவாக்கி நம் உணவுக்குச் சுவைகூட்டும் தொழிலாளர்கள் என்றும் நம் நன்றிக்கும் நேயத்துக்கும் உரியவர்கள்.

    இனி, இப்படத்துக்குப் பொருத்தமான கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைப்போம்!

    *****

    ”வான்மழை கண்டால் கோனும் குடிகளும் மகிழ்வர்; ஆனால் உப்பளத் தொழிலாளர்களோ மழைநீர்ப்பட்டு உப்புக் கரைந்தால் உழைப்பும் பிழைப்பும் கரைந்துபோகுமே என்று பதைப்பர்!” என்ற உண்மையை விண்டுரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வேண்டாம் அங்கு…

    வானில் மேகம் திரண்டுவந்து
    வையம் நனைய மழைபெய்தால்
    கோனி லிருந்து குடிகள்வரை
    கும்பிட் டேத்துவர் மகிழ்ச்சியிலே,
    தானியம் போலிலை உப்பதுவே
    தண்ணீர் பட்டால் கரைந்திடுமே,
    மேனி யுழைப்போர் உப்பளத்தில்
    மேகம் கண்டால் பதைப்பாரே…!

    *****

    ”குழந்தைகளை நாம் தூக்குகிறோம் உப்புமூட்டை; இறுதியில் நம்மீது அடுக்கப்படுவதோ மணல்மூட்டை” என்று வாழ்க்கையின் சுமைகளை விளக்குகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இருவர் தூக்கியும் சுமையின் பாரம்
    குறையவில்லை
    வாழ்க்கையின் பாரமும் அதுதானே

    வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
    வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

    வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
    வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

    எத்தனையெத்தனை இன்னல்கள்
    அத்தனையத்தனை பாரங்கள் பிறகு
    வந்தனவந்தன இன்பங்கள்
    வாழ்வின் நிதசுகத் தருணங்கள்

    மழலைகளைத் தூக்கினோம் உப்புமூட்டை
    உழைக்கும் வர்க்கமெனப் பலமூட்டை
    புடைக்கும் நரம்பதில் உடற்கூட்டை
    இறுதியில் நம்மீது அடுக்கிடுவர் மணல்மூட்டை

    மொத்தத்தில் பாரம் சுமந்திட மனிதனன்றோ
    வாழ்க்கையின் பாடமும் அதுவன்றோ!

    *****

    ”ஆழக்கடலில் விளைந்து ஆதவன் அருளால் உருக்கொண்டு மானுடனின் பசிதீரத் தான் கரையும்” என்று உப்புக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமையை இனிதாய் இரட்டுற மொழிந்துள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    உப்பும் மேகமும்

    ஆழக் கடலில் தான் விளையும்
    ஆதவன் அருளால் உருக் கொள்ளும்
    கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
    கொட்டும் மழையில் கரைந்து போகும்
    மானுடனின் பசிதீரத் தான் கரையும்
    வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
    அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
    களவுசெய்ய ஒண்ணாப் பெருஞ்செல்வம்
    படிக வடிவில் உருவான பெட்டகமாம்
    உப்பும் முகிலும் உலகம் காக்கும்!

    கவிஞர்களே! உப்பின் சிறப்பை, உப்பளத் தொழிலாளரின் உழைப்பை விளக்கி நீங்கள் வடித்துள்ள கவிதைகள் நன்று! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பகலவன் பார்வை பட்டுப்
    பாற்கடலின் பரந்த கரை மடியில்
    படிகம் படிகமாய்ப் படிந்த
    படியலின் பளிங்குக் குவியல்!

    அவியல் முதல் பொரியல் வரை
    அறிவியல் முதல் ஆன்மவியல் வரை
    அலைகளின் உவர்ப்பு நீருக்குள்
    அடங்கிய உப்புக்குள் அடக்கம்!

    கூடை நிறைய வெள்ளை உப்பு
    கூட்டு உழைப்பில் விளைந்த உப்பு
    நாட்டுக்கு விடுதலை நல்கிய உப்பு
    நம்ம காந்தியார் காய்ச்சிய கல்உப்பு!

    உப்பளத்தில் உழைத்து உழைத்து
    அப்பளமாய் ஆன உடம்பின்
    உப்பு வியர்வை உரமானது
    உப்பு நீர்க் கடலுக்கு உயிரானது

    வெண்மேகம் தாலாட்டுமா இங்கு?
    வெயில் சுடும் தேகம் நீராடுமா?
    கைகள் இணைந்து சேராமல் போனால்
    மெய்யுடல் ஒருவேளை பசியாறுமா?

    வானமே எங்கள் எல்லை
    வாய்ப்புகளை என்றும் நாங்கள் நழுவவிட்டதில்லை
    வல்லமையோடு வலிமை கொண்டு உழைத்தால்
    வாழ்வில் என்றும் இல்லை தொல்லை!

    ”உப்பளத்தில் உழைத்துழைத்து அப்பளமாய் ஆன தொழிலாளர்களின் உடம்பின் உப்பு வியர்வையே உரமானது; உப்புநீர்க் கடலுக்கு உயிரானது” என்றுரைக்கும் திரு. யாழ். பாஸ்கரன், ”வல்லமையோடு உழைத்தால் வாழ்வில் என்றும் இல்லை தொல்லை” என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 278இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 278இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பொய்க்கால் குதிரையில் சவாரி செய்யும் தலையாட்டி பொம்மைகளை அழகாகப் படம்பிடித்து வந்திருக்கின்றார் படக்கலை வல்லுநர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இந்தப் படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. படக்கலை வல்லுநருக்கு என் நன்றி!

    சாய்த்துத் தள்ளினாலும் கீழே விழாமல் நேராக நிற்கும் வகையில் அற்புதமாய் உருவாக்கப்படும் இந்தத் தலையாட்டி பொம்மைகள், தஞ்சைத் தரணியின் கலைப் பாரம்பரியத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த கலைஞர்களின் தொழில்நுட்பத் திறனையும் பாருக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    இப்பொம்மைகளுக்கான வரவேற்பு தற்காலத்தில் மக்களிடம் குறைந்துவருவது வேதனைக்குரியது. இந்த அரிய கலையை நாம் ஊக்குவிக்காவிட்டால் தலையாட்டி பொம்மைகள் வணிகம் தள்ளாட்டத்தைச் சந்திப்பதோடு இக்கலையும் நசிந்துபோகும். அந்நிலை ஏற்படாவண்ணம் இக்கலையையும் கலைஞர்களையும் காப்போம்!

    இனி, இந்தப் பொம்மைகள் குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்று அறிந்து வருவோம்!

    *****

    ”கிராமக் கலைகளெல்லாம் வளர்ச்சிகுன்றி அழிவதைத் தடுத்து அவற்றை வளர்ப்பீர் உலகத்தீரே!” என்று நற்கலைகள் வாழ வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நலியும் கலைகள்…

    ஆடும் கலையின் பொம்மைகள்
    ஆட்டம் நின்ற நினைவுகள்,
    கூடும் கூட்டம் போனதுவே
    குறைந்து விட்ட கலையாலே..

    வளர்ந்த கிராமக் கலையெல்லாம்
    வளர்ச்சி குன்றி அழிகிறதே,
    உளத்தில் கொள்வீர் உலகுளோரே
    உண்மைக் கலைகள் வளர்ப்பீரே…!

    *****

    ”கடைத்தெருவில் நிறக்குமிழிப் புட்டிகளுக்குக் கிட்டிய ஆதரவு இந்தப் பொம்மைகளுக்குக் கிட்டாததால் அவை ஓர் ஓரமாய்த் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன” எனத் தலையாட்டி பொம்மைகளின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திருமிகு. விஜயகுமாரி.  

    பொம்மை

    கடைத்தெருவில்
    போன வருடச்
    சாயலில்லை.
    கூடிப்போயிருந்தது
    வண்ணமும் விலையும்!
    விற்றுத் தீர்ந்தது
    நிறக்குமிழிப் புட்டிகள்.
    சர்வ லட்சணப்
    பட்டாடை உடுத்தி
    வெட்கத்துடன்
    பொய்க்கால் பூட்டிச்
    சலிக்காமல்
    காற்றின் வாசிப்பில்
    ஒரு ஓரமாய்த்
    தலையாட்டிக்கொண்டிருந்தனர்
    ஒரு ஜோடி
    தஞ்சைத்
    தலையாட்டி பொம்மைகள்!

    *****

    ”தலையாட்டி பொம்மைகள் மெய்க்கால்களில் ஆடும் பொய்க்கால் ஆட்டம் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும்” என்று அழுத்தமாய் உரைக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    மெய்க்கால்களில் பொய்க்கால் ஆட்டமா?
    பொய்க்கால் இணைத்த மெய்க்கால் ஆட்டமா?
    ஒருகால் இருகால் பொய்க்காலாட்டமா?
    எக்காலும் ஆடும் மெய்க்காலாட்டமா?

    பாரம்பரிய நடனத்தின் சிறப்பாட்டம்
    பார்த்து வியக்கும் ஒயிலாட்டம்
    கிராமியக் கலைகளில் வியப்பாட்டம்
    வண்ண வர்ண நிறத்தில் மகிழாட்டம்

    திருவிழாக் காலங்களில் களையாட்டம்
    தெருக்கூத்து நடுவினிலும் இவ்வாட்டம்
    தமிழகப் பெருமையை இது பறைசாற்றும்
    அழிவிலா கலைகளில் இதன் அரங்கேற்றம்
    என்றும் நெகிழ்வூட்டும்!

    *****

    ”பொய்க்கால் வாக்குறுதி அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தில்
    ஆட்டம் காணப்போவது எதிர்காலத் தலைமுறையே” என்று பொம்மைகளின் பொய்க்கால் ஆட்டத்தை வைத்து நாட்டின் மெய்யான நிலையைப் புலப்படுத்தியுள்ளார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    பொய்க்கால் அரசியல்வாதிக் குதிரைகள்!

    தேர்தல் நேரத்தில்
    பொய்யான வாக்குறுதிகள்!
    ஆட்சி அதிகாரத்தில்
    அதிகப்படியான ஊழல்கள்!

    மக்கள் வரிப்பணத்தில்
    உருப்படாத திட்டங்கள்!

    பொய்க்கால் குதிரைகள்
    ஆட்டம் கண்டு இரசிக்கலாம்

    பொய்க்கால் வாக்குறுதி
    அரசியல் வாதிகள்
    ஆடும் ஆட்டத்தில்
    ஆட்டம் காணப் போவது
    எதிர்காலத் தலைமுறையே!

    தொலைநோக்குச்
    சிந்தனை இல்லை!

    நீர்நிலைகள் தான்
    உயிர் நிலைகள்
    காக்கும் வகையில்
    செயல் திட்டங்கள் இல்லை!

    உழைக்கும் கரங்கள்
    பிழைக்கும் வகைகள்
    பிழையான திட்டத்தில்
    திசை மாறும் பயணத்தில்

    வரவினைப் பெருக்கும்
    வகையேதும் அறியாது
    பற்றாக்குறை நிதியில்
    அரசாங்கம் பயணித்தால்
    பொருளாதார வளர்ச்சி
    நிரந்தரத் தளர்ச்சி!

    பொய்க்காலைத்
    தூக்கி எறியுங்கள்!
    உண்மை நிலையை
    உணர்த்தி விடுங்கள்!

    நொண்டிக் கொண்டு
    திணறிக் கொண்டு
    அரசு பயணிக்கிறதென்று

    உள்ள நிலையை
    உண்மை நிலையை
    உரைக்கும் கலையை
    உரைக்காது
    பொய்க்கால் குதிரைகள்
    போல் வேண்டாம்
    வெளி ஆட்டம்!

    *****

    ”தொல்கலைகள் யாவுமிங்கு தொலைந்தழிந்தே போனதனால்
    தொட்டதெல்லாம் பொன்னாக்கும் தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது!
    இந்நிலை மாறுமா?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    வண்ண வண்ண உடுப்புப் பூட்டி
    சின்னச் சின்ன ந(கை)டை போட்டு
    மின்ன மின்ன பொய்க் கால் குதிரையேறி வரும்
    கண்ணழகு இராசனுக்கும் இராசாத்திக்கும் வணக்கம்!

    மழலையர்க்கு மரப்பாச்சி
    மங்கையர்க்குப் புனைபாவை
    மனைவியர்க்குத் தலையாட்டி அவள்
    மன்னவர்க்குக் கைப்பாவை என

    மணிக் கையாலே மண்ணெடுத்து
    மந்திரத்து உழைப்பாலே
    மனிதன் படைத்துவிட்டான்
    மயக்கவைக்கும் பொம்மைகளை!

    பாவைக் கூத்தினிலே அவனுக்குப்
    பாராளும் மன்னர் வேடம்!
    பசியின் கூத்தில் அவனுக்குப்
    பட்டினியால் வாடும் பரதேசிக்கோலம்!

    படைத்தவன் வாழ்கையின்று
    பச்சை மண்பானையாய் உடைந்து போனது!
    பார்த்திருந்த விழிப் பாவைகள்
    பழுது பட்டு நிறக்குருடாய் ஆனது!

    தொல்கலைகள் யாவுமிங்கு
    தொலைந்தழிந்தே போனதனால்
    தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
    தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது
    இந்நிலை மாறுமா?

    *****
    தலையாட்டும் பொம்மைகளை வைத்துத் தலைசிறந்த கருத்துக்களைக் கவிதைகளாய் உதிர்த்திருக்கும் கவித் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    தலையாட்டி பொம்மைகள்!

    மந்தை ஆடுகளாய்
    மதியில்லா மாடுகளாய்
    சுயம் கெட்டுச்
    சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
    சூத்திரங்கள் அழித்துவிட்டு
    எடுப்பார் கைப்பிள்ளையென
    ஏவல்கள் செய்திருந்து
    விதியை தினம் நொந்து
    வீண் பொழுது போக்கிவிட்டுத்
    தன்னம்பிக்கை ஏதுமின்றித்
    தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
    தாளத்திற்கு ஆடிவிட்டு
    வேரறுந்த விருட்சமென
    வீணாகி வீழ்ந்துள்ளோம்…

    அறிவுக் கண் திறந்து
    அறப்பொருளைத் தானுணர்ந்து
    உண்மையை உணர்ந்தறியும்
    உன்னத ஞானம் தரும்
    நற்கல்வி தேடிக் கற்று
    எல்லோரும் மன்னரென்ற
    மக்களாட்சித் தத்துவத்தின்
    மாண்பதனை மீட்டெடுப்போம்!

    ”தன்னம்பிக்கை ஏதுமின்றிப் பிறர் தாளத்திற்கு ஆடும் தலையாட்டி பொம்மைகளாய் வாழ்வதை விடுத்து, நற்கல்வி பயின்று எல்லோரும் மன்னரென்ற மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை மீட்டெடுப்போம்” என்று சுந்தரமொழிகளில் சூளுரைத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உச்சியிலிருந்து வீழும் அருவிக்குப் போட்டியாய் நீரில் குதித்துக்கொண்டிருக்கும் பயமறியா இளங்கன்றைத் தம் படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. எம். மோகன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 277க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி உரியது!

    அச்சம் என்பது சிறிதுமின்றிப் பாறை உச்சியிலிருந்து நீரைநோக்கிப் பாய்கின்ற இளமையின் வேகம் நம்மை மிரளவைக்கின்றது. கூடவே தொடித்தலை விழுத்தண்டினாரின் சங்கப் பாடலையும் நினைவலைகளில் உருளவைக்கின்றது.

    தாம் சிறுவனாய் இருந்தபோது தாழ்ந்திருக்கும் மருதமரக் கிளையிலேறித் ’துடும்’ என்ற ஒலியெழ விரைந்து மடுவில் பாய்ந்ததையும், கரையில் இருந்தவர்கள் அதைக் கண்டு மருண்டதையும் இருமலோடும் இளைப்போடும் தண்டூன்றித் தள்ளாடும் முதுமையில் அசைபோட்டுப் பார்க்கின்றார் இந்தப் புலவர்.

    ”உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா விளமை.”
    (புறம் – 243)

    சிறுவர்களின் அறியாமை கலந்த அச்சமின்மைக்குச் சான்றாய் இந்தச் சங்கப் பாடலும் இவ்வாரப் படக்கவிதைக்கான படமும் விளங்குகின்றன.

    இனி, இப்படத்திற்குப் பொருத்தமாய் நம் கவிஞர்கள் வரைந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம், வாருங்கள்!

    ”அருவியில் குளிப்பது நல்லதே; ஆனால் உயரேயிருந்து குதிப்பது ஆபத்து என்பதை அறிந்து செயல்படு!” என்று இவ் இளைஞனுக்கு அன்பாய் அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அளவோடு…

    அருவி நீரது குளித்திட மட்டுமே
    அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
    பெருமை மிக்கது சாதனை செய்தல்
    பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே…

    அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
    அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
    துச்ச மாக எதையும் எணாமல்
    துணிந்து தெளிந்து செயல்படு நீயே…!

    *****

    ”தண்ணீரின் வேகத்தோடு போட்டிபோட்டுக் குதிக்கும் இளைஞனே! தோழர்களுடன் நீந்துவது சுகமானது. நீச்சலடித்துப் பழகிவிடு! அதில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவித்துவிடு!” என்று இளைஞனுக்கு உற்சாகமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தண்ணீரின் வேகம் அதிகமா?
    உன் கால்களின் பாய்ச்சல் அதிகமா?
    இரண்டுமே ஒன்றோடொன்று போட்டி
    வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்!

    ஆற்று நீரோ அருவி நீரோ
    கடல் நீரோ கிணற்று நீரோ
    இதில் குளியல்கள்
    என்னவொரு சுகம்
    கிராமத்துப் பொக்கிஷங்கள்!
    உடல் நலம் சிறக்கும் சாதனங்கள்!

    தோழர்களுடன் பாய்ந்தடிக்கும்
    நீச்சல் ஓர் அருமைதான்
    பாடிப்பாடிக் கைகள் அடித்தெழப்
    பாடல் கோடி பிறக்குதாம்!

    இந்தச் சுகம் எதிலுமில்லை!
    இளைஞனே நீ நீச்சலடித்தெழு!
    தங்கப்பதக்கம் வாங்கிவாங்கி
    தாய்நாட்டிற்கே குவித்து விடு!

    *****

    ”தாயின் மடி குடியிருந்து, தந்தையின்தோள் சேர்ந்து, தன் காலில் தான் நின்று பழமைக் கறை களைய இளமையே தாவி வா!” என்று இளைஞனை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    இளமையே நீ தாவி வா!

    தரையிருந்து வான் எட்டி
    மலை முகடு வழியிறங்கித்
    தாவிக் குதித்தோடிக்
    கடும் பாறைச் சமமாக்கிப்
    பூமிவளம் தான் பெருக்கிக்
    குளிர்விக்கும் நீர்போலத்
    தாயின் மடி குடியிருந்து
    தந்தைதோள் சேர்ந்து
    தன் காலில் தான் நின்று
    தரைமீது நடைபயின்று
    துள்ளிக் குதித்தோடிப்
    பழமைக் கறை களைந்து
    புதுப் புனல் பொங்கு நீராடிட
    இளமையே நீ தாவி வா!

    *****

    இனிய கவிதைகளால் படிப்போர் இதயம் தொட்டிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    தற்காத்தலே தகவுடைமை!

    பொங்கிப் பொழிந்த கார் மழையால்
    பொங்கி வழியுது பாறையில் பாலருவி
    தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
    ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

    எல்லையில்லாத் துணிவே
    எமனாகலாம் எச்சரிக்கை!
    களிப்புடன் குளிக்க வந்த இடமே
    காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

    வழுக்குப் பாறை நீரோட்டம்
    வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
    வந்த நட்புகளுக்கு வழக்கானால்
    வாழ்வே போராட்டம் ஆகிடும்!

    நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
    நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
    நீ விழிப்போடு களித்தாடு விழி
    நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

    நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
    நிலையுயர்த்தும் இளமை அலை
    நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
    நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

    தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
    தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
    தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
    தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

    ”நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்!” என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூரிய அலகும் விரிந்த குடைபோன்ற சிறகுகளுமாய் வானில் வலம்வரும் நாரையை நளினமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கப்பட்டிருக்கும் படமிது. ஒளிப்படக் கலைஞருக்கு என் நன்றியை அளித்து மகிழ்கின்றேன்.

    தமிழரைத் தலைநிமிரச் செய்யும் சிறப்பமை சங்கப் பாடல்களில் பறவைகள் பலவற்றின் இயல்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    ”அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும்
    தடந்தாள் நாரை” (குறுந்: 349) என்று அடும்பின் கொடியிடத்தே மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து ஆர்வமாய் மீனருந்தும் வளைந்த காலுடைய நாரையைப் பற்றிப் பேசுகின்றது குறுந்தொகைப் பாடலொன்று!

    நீர்நிலைகளையும் காடுகளையும் மனிதர்கள் தம்முடைய குடியிருப்புகளுக்காகத் தொடர்ந்து அழித்துவருவதனால் காட்சிக்கினிய பறவையினங்கள் உணவையும் உறைவிடத்தையும் இழந்து தவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் வருங்காலங்களில் பறவையினங்களை நாம் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே காணமுடியும் எனும் அவலநிலை வாய்த்துவிடும்!

    இதோ…சிறகுவிரித்துப் பறந்துவரும் எழிற்பறவையைப் பிடித்துத் தம் பாட்டெனும் கூட்டிலடைக்க நம் கவிஞர்களும் கற்பனைச் சிறகுகளோடு காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”குஞ்சுகளுக்கு இரைதேடிச்சென்ற பறவை திரும்பிவந்தபோது தன் கூடிருக்கும் மரம் மனிதனால் வெட்டப்படாதது கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டது” என ஏற்கனவே மனிதனால் கூட்டையும் குஞ்சுகளையும் இழந்த பறவையின் பதைபதைப்பைக் காட்சிப்படுத்தியுள்ளார திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறுவானா…

    குஞ்சுகளுக்கு இரைதேடிய
    பறவை
    கூட்டை நாடி வந்தது..

    நெடுந்தூரம் பறந்த
    களைப்பிலும் விட்டது
    நிம்மதிப் பெருமூச்சு-
    கூடிருக்கும்
    மரம் இருக்கிறது
    மனிதனால் வெட்டப்படாமல்…

    முன்பு
    கூட்டோடு குஞ்சுகளோடு
    மரம் வெட்டப்பட்டது
    மறக்கவில்லை பறவைக்கு,
    மனம் குமுறுகிறது
    மனிதனை நினைத்து..

    மனிதன் ஏன் இப்படி
    மாறிவிட்டான் இப்போது-
    தன்னினம் அழிக்கிறான்,
    தாயாய் உதவும்
    இயற்கையை அழித்து
    எங்களை வாட்டுவதுடன்
    தனக்கும்
    தேடுகிறான் கேடு..
    மாறுவானா மனிதன்…!

    *****

    ”உட்கார்ந்து ஓய்வெடுக்க மரம் கிடைக்காதா என்றெண்ணி நீ ஏங்கிய வேளையில் மரத்தினை உன் கண்ணில்காட்டிய இறைக்கு நன்றிசொல்!” என்று பறவைக்கு அறிவுறுத்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    பட்ட மரமும் பறவையும்

    விட்டுவிட்ட உறவுகளால்
    விரக்திதனை மிக அடைந்து
    எட்ட எட்டப் பறந்து
    எங்கெல்லாமோ திரிந்து
    சுட்டுப் பொசுக்கும் வெயிலால்
    சோர்வடைந்த பறவையே!

    உட்கார்ந்து ஓய்வெடுக்க
    ஓரிடம் கிடைக்காதா என்று
    கஷ்டம் கண்டு மனமிரங்கும்
    கடவுளிடம் முறையிட்டாயோ நீ!?

    பட்டமரக் கிளையொன்றை
    உன் பார்வையிலே பட வைத்துக்
    கஷ்டமதைத் தீர்த்து வைத்த
    கடவுளுக்கு நீ நன்றி சொல்!

    எந்தக் கவலையானாலும்
    இறைவனிடம் சரணடைந்தால்
    வந்த கவலை தீரும்
    வழி ஒன்று பிறக்குமென்று
    இந்தப் படம் விளக்கும்
    விந்தை கண்டு வியக்கின்றேன்!

    *****

    அந்நிய தேசத்துப் பறவையின் வாயிலாய் இந்திய நாட்டின் சிறப்புகளை, தனித்தன்மையினை விரிவாய்ப் பேசவைத்திருக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    அந்நிய தேசத்துப் பறவை நான்
    இந்திய தேசத்தில் தான்
    எத்தனை எத்தனை விதமாக
    வேறுபாடுகள் இருக்கின்றன!

    அத்தனை வேறுபாடுகள்
    இத்துணைக் கண்டத்தில்
    இந்தியன் ஒற்றைச் சொல்லில்
    இமயம் முதல் குமரி வரை
    கட்டுண்டு இருக்கும் அழகு
    உலகில் எங்கும் காண முடியாது!

    சுதந்திரமான பறவை நான்
    அதேபோல்
    சுதந்திரமான
    மக்கள் இந்திய மக்கள்!

    கருத்துச் சுதந்திரம்
    பத்திரிகைச் சுதந்திரம்
    தனிமனிதச் சுதந்திரம்
    பேச்சுச் சுதந்திரம்
    எழுத்துச் சுதந்திரம்
    மாபெரும் ஜனநாயக நாடு!

    இந்தியனின் அறிவு
    இதனாலே செறிவு!

    சிந்தனைக்கு
    எழுத்தாற்றலுக்கு

    இந்த மண்ணில் தான்
    சுதந்திரம்
    பறவையாகிய
    என்னைப் போல!

    சுதந்திர இந்தியா காண
    எத்தனை எத்தனை
    உயிர்த் தியாகங்கள்!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    பிறந்ததற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    வாழ்வதற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    மீண்டும் பிறப்பதற்கு!

    சுதந்திரத்தின் மகிமை
    சுதந்திரத்தின் அருமை
    குடிமக்களுக்குத்
    தராது
    வல்லரசு என்றால்
    அங்கே எங்கே
    தனிமனிதச் சிந்தனை
    தலைசிறந்து விளங்கும்??

    உலகிலேயே
    சுதந்திரமாகப்
    பறவை போல்
    வாழ்பவர்கள்
    கருத்துச் சுதந்திரத்தில்
    இந்தியர்களே!

    ******

    ”உறுமீனைக் கண்டறிந்து, காலமும் தானறிந்து இலக்குநோக்கிப் பாய்வோரே திறன்வாய்ந்த செயல்வீரர்” என்று மனிதர் வாழ்வில் வெற்றிபெறும் வழியைப் பறவையின் பண்பைவைத்து விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    செயல்வீரர்

    உறுமீனைக் கண்டறிந்து
    இலக்கு நோக்கிப் பாய்ந்து
    வான் நோக்கி மீண்டெழுந்து
    இரை தேடும் பறவையெனக்
    காலமதைத் தானறிந்து
    கனியும்வகை தெளிந்து
    காரியங்கள் செய்திடுவார்
    திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

    கொட்டும் மழை பொய்த்ததென
    வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
    கால்வாய் வெட்டிக் கழனி திருத்தி
    நிலம் கொழிக்க வழி செய்வார்!
    பட்டினியால் வாடினாலும்
    விதைநெல்லைச் சேர்த்துவைத்து
    வருங்காலச் சந்ததிக்கு
    வாழ வழி செய்திடுவார்!

    எதிர்காலம் கனவென்று
    எதிர்வாதம் செய்துவிட்டு
    நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
    வேதாந்தம் விட்டுவிட்டு
    வருங்கால வெற்றிக்குத்
    திட்டங்கள் தீட்டிவைத்து
    முயலாமை தனை விழுங்கி
    முன்னேற்றப் பாதையிலே
    சிறகடித்துப் பறந்திடுவர்!

    *****

    பறவையைக் கண்ட அறிவியல்வல்லார் விமானத்தைப் படைத்தனர்; கற்பனைவல்லாரான  நம் கவிஞர்களோ வாழ்வியல் உண்மைகள் பேசும் கவிதைகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்ல பண்பு

    நாடு விட்டு நாடு வந்து
    கூடு கட்டும் பறவையே!
    கூடு கட்ட இடம் தந்து
    குஞ்சுகளையும் காத்த மரம்
    காடு கண்ட காட்டுத்தீயால்
    கட்டையான சேதி கேட்டு
    நாடு விட்டு நாடு வந்து
    நலம் விசாரிக்க வருகின்றாயோ
    நன்றிதனை மறவாமல்!?
    நாட்டில் வாழும் மனிதரும்
    காட்டத் தயங்கும் பண்பினைக்
    கூட்டில் வாழும் பறவைக்கு
    கொடுத்தது அந்த இறைவனோ!?

    ”கூடுகட்ட இடம் தந்த மரம் காட்டுத்தீயால் கருகியதுகண்டு மனங்கசிந்த இப்பறவை, அம்மரம் நாடி வந்தது நலம் விசாரிக்க!” என்று மனிதரிடத்தும் காணவியலாத பறவையின் நன்றியறிதலைக் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிது வளர்ந்துநிற்கும் தென்னை மரங்கள், ”நிமிர்ந்து பாருங்கள் எம்மை” என்று நம்மை அழைப்பதுபோலிருக்கும் இந்தக் கவின்மிகு காட்சியைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. எம். மோகன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”பெற்றபிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது” என்பது கிராமங்களில் வாழும் மக்களின் நீங்காத நம்பிக்கை!

    மகாகவி பாரதிகூடத் தம் பாட்டில் பராசக்தியிடம், காணிநிலமும், கேணியும், அதனருகே பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் கேட்டார் என்பதிலிருந்து தென்னையின் அருமைதன்னை நன்குணரமுடிகின்றது.

    கண்ணைக் கவரும் தென்னை மரங்களைத் தம்  எண்ணச் சரங்களால் அலங்கரிக்க வருகின்றார்கள் புலமைமிகு கவிஞர் பெருமக்கள்! அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    *****

    ”பச்சை வயல்களின் ஓரத்திலே பாங்காய் நிற்கும் தென்னைகளை அழிக்காதே; இயற்கை அழகினில் இன்பம்கொள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அழிக்காதே அழகை…

    பச்சை வயல்கள் ஒரத்தில்
    பார்க்க அழகாய்த் தென்னைகள்
    உச்சி மரத்தில் காய்களுடன்
    உயர்ந்தே நிற்கும் காண்பாயே,
    துச்ச மாக எண்ணாதே
    துணைதான் இயற்கை நமக்கேதான்,
    இச்சை கொண்டே அழிக்காதே
    இன்பம் கொள்வாய் அழகினிலே…!

    *****

    ”தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது; உன்தலை விரித்துக் கிடந்தாலும் அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்! உன் நா வறண்டு கிடக்கையில் அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்” என்று தென்னையின் நல்லியல்புகளைப் பாட்டில் பட்டியலிட்டுள்ள முனைவர் செ.நீதி, தம்முடைய மற்றொரு பாட்டில், ”நீ என்னை மிதித்த போதும்  நான் உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்?! மிதிவண்டியாகிய என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதே! வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும் ஆத்மா இல்லாத ஆத்மா நான்!” என்று தென்னைகளின் அருகில் தனித்து நின்றிருக்கும் மிதிவண்டியையும் மதியூகியாய்ப் பேச வைத்திருக்கின்றார்.

    தென்னை

    வரிசையாய்நின்று யார் உயரம்? என்று
    வானிடம்கேட்டு நிற்கின்ற தென்னையே!
    உங்கள் உயரத்தை அளவிட முடியாமல்
    வானம் வியந்து முகம் வெளுத்து நிற்கிறது!
    கொடுப்பதில் உனக்கு நிகர் உலகில் இல்லை
    உயரத்தில் உனக்குச் சமம் எதுவுமில்லை!
    வேலை இல்லாதவனுக்கு உன் ஓலை வேலை தருகிறது
    குடில் இல்லாதவனுக்குக் குடிசைத் தருகிறது
    தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது
    உன்தலை விரித்துக் கிடந்தாலும் பரவாயில்லையென்று
    அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்!
    உன் நா வறண்டு கிடக்கையில்
    அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்
    உன் உடலைக் காயப்படுத்தினாலும்
    சுவையான காயைத் தருகிறாய்
    உன் ஓடும் ஓசைதரும் கருவியாய்ப் பேசுகிறது
    உன் ஏடும் கைவினைப் பொருளாய் அழகைப் பறைசாற்றுகிறது!
    தலையாட்டுப் பொம்மைக்கும்
    தலையாட்டக் கற்றுக் கொடுத்ததும் நீதானோ?
    நீ தருவ தெல்லாம் நன்மை
    இது உலகம் அறிந்த உண்மை!
    கஜா புயல்உன் தலையைப் பிடித்துப் பிய்த்துப் போட்டபோது
    வலியைத் தாங்கித் தாய்போல் நின்றாய்!
    உன் சேயெல்லாம் வீழ்ந்த போது
    தென்னீர் தந்தவனுக்காகக் கண்ணீர்விட்ட மக்கள் எத்தனையோ பேர்!
    ஏழைகளின் வாழ்வாதாரம் நீ!
    ஓங்கி நில்! உலகத்தைத் தாங்கி நில்!
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி யாண்டு!

    *****

    மிதிவண்டி!

    ஏய் நண்பனே! நன்றி மறந்தாயே நவீனப் பயணத்தில் ஓடி ஓடி -ஓடிய
    என் பயணத்தை நிறுத்தி விட்டாயே!
    சாலை ஓரத்தில்அனாதையாய் விட்டு விட்டாயே!
    விட்டுச் சென்ற கரங்கள் என்னை அழைத்துச் செல்லுமென்று
    முதியோர் இல்லத்து முதியவனாய் ஏக்கத்தோடு
    காத்துக்கொண்டிருக்கிறேன் கள்வன்கூட என்னை களவாட மறுக்கிறானே!
    அதோ காண்! தென்னையெல்லாம் என்னைப்பற்றி
    ஏதோ சலசலத்துப் பரிகாசம் செய்கிறது அதனால்தான்
    திரும்பி நிற்கிறேன் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு!
    நீ என்னை மிதித்த போதும்- நான்
    உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்!
    பழமையை விட்டுப் புதுமையில்
    பாரதி கண்ட செந்தமிழ்நாட்டைத் தொலைத்து விட்டாயே!
    நீ காணும் பாரதத்தை இதோ பாரய்யா!
    நஞ்சை நிலமெல்லாம் நஞ்சாகிப் போனதய்யா
    புஞ்சை நிலமெல்லாம் புண்ணாகிப் போனதய்யா
    சாலையோர மரங்களெல்லாம் காணாமல் போனதய்யா
    ஒற்றையடிப் பாதையெல்லாம் மறைந்து போனதய்யா
    ஆறுகள் எல்லாம் கழிவாகிப் போனதய்யா
    வாழ்க்கை தடம் மாறிப் போனதய்யா
    தூய்மையான காற்றில் இன்று துர்நாற்றம் வீசுதய்யா
    நாகரிகம் என்ற சொல்லும் துகிலுரிக்கப் பட்டதய்யா
    மிதிவண்டியாகிய என்னைச் சாதரணமாக நினைத்துவிடாதே
    வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும்
    ஆத்மா இல்லாத ஆத்மா நான்!

    *****

    ”ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில் ஆரோக்கியம் மட்டுமே இருந்தது! இன்றோ வாகனங்களின் மிகுதிபோல நோய்களும் மிகுந்துவிட்டன” என்று நியாயமாய்க் கவலையுறும் இயற்கை விவசாயியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    நான் ஒரு இயற்கை விவசாயி அப்பா
    காலநேரத்தைச் சரியாகக் கணக்கிடும் பட்டதாரி விவசாயி அப்பா!

    எதிர்காலத்தில் விவசாயம்தான் அதிக வருமானம்
    பெற்றுத்தரும் தொழிலாக இருக்கும் அப்பா!

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
    எனது வாழ்க்கை முறை அப்பா!

    மிதிவண்டியில் வந்து விவசாயம் காலை மாலை
    விளைச்சல் நிலம்தான் என் உடற்பயிற்சிக் கூடமப்பா!

    ஏன் செய்கின்றோம்
    எதற்குச் செய்கின்றோம்
    எதனால் செய்கின்றோம்
    என்ற சிந்தனை மறந்த நிலையில் தான்
    செய்வினை செய்பவர்களைப் பார்த்துச் சில கேள்விகள்…

    நடையை மறந்து எரிபொருள் வண்டியில் பயணிப்பதால்
    இருமடங்கு செலவை அதிகரிக்கிறீர்கள்!

    ஒன்று எரிபொருளுக்கு…
    மற்றொன்று வைத்தியத்திற்கு!

    ஏன் ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாக
    மிதிவண்டியில் செல்ல முடியாதா?
    பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாதா?

    ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில்
    ஆரோக்கியம் மட்டுமே இருந்தது!

    இன்றோ
    இருசக்கர வாகனங்கள் இரண்டு!
    நான்கு சக்கர வாகனங்கள் ஒன்று!
    நோய்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கு இரண்டாக!!

    சிந்திப்போம்…
    எது தேவையோ
    அதைத் தேடுவோம்
    அதை நாடுவோம்
    மற்றதை விடுவோம்

    இலவசமாக
    ஏரோபிளேனே கிடைத்தாலும்
    தேவையில்லை எனில்
    வாழ்க்கை பிளானில்
    இல்லை யென்று
    பிளாக் செய்து விடுவோம்!

    *****

    ”பசுமை வரப்பினிலே உடற்பயிற்சிக்கு ஏற்றதென நினைத்து வந்தவரின் மிதிவண்டி இது” என்று அதனை அறிமுகப்படுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”வாருங்கள்! மிதிவண்டியில் மனமகிழ்ந்து மிதந்துசெல்வோம்” என்று நமையழைக்கிறார்.

    பசுமை வரப்பினிலே
    வரிசையாய் நிற்கும் தென்னை மரத்தருகே
    உடற்பயிற்சிக்கு ஏற்றதென
    நினைத்தவருடைய மிதிவண்டி

    அழகிய சாலை நெடும் பயணம்
    ஆள் அரவமில்லாமல் வெறிச்சோட
    இரு சக்கரங்களை மிதிக்கும் போது
    மனம் பூங்காற்றில் அமைதியுறுமோ?

    எரிபொருள் விலையேற்றம்
    பொதுப் பயண மார்க்கங்கள்
    இயங்காத காலமிது என்பதனால்
    மிதிவண்டிப் பயணத்திலே
    மிதந்து செல்வோம் மனமகிழ்ந்து!

    *****

    ”சூரியனை மறைத்துச் சற்றே தாகம் தீர்த்திட வானுயர்ந்து வளர்ந்த தென்னை நிழலிங்கே, வளரும் புஞ்சையை மட்டுமல்லாது மறந்து போன விவசாயியையும் விவசாயத்தையும் தளராது காத்து நின்றதே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலை தூரப் பயணம்
    தொய்வில்லாமல் செல்ல
    சாலையோரம் எங்கும்
    தென்னை மரங்களை நட்டோம்!
    கார்மேகம் வந்து
    மாதம் மும்மாரிப் பொழிந்து
    வளம் எல்லாம் பெறுக
    வசதிகள் வந்து
    காரில் பயணம் செய்வதாய்
    வரும் தினம் கனவு!
    கரங்களாய் நீண்ட கதிர்களால்
    சீதையைச் சிறைபிடித்த ராவணனாய்
    எங்கள் வாழ்வைச்
    சிறைபிடித்த சூரியன்!
    வானரப் படை சூழச்
    சீதையை மீட்க வந்த ராமனாய்
    விண்மீன்கள் படை சூழ
    இரவில் வந்த வெண்ணிலவு
    இதயத்தை குளிரவைத்ததே!
    மெல்ல நகர்ந்திடும் நாடு
    முன்னேற்றப் பாதையில்
    பாதைகள் மாறியது சாலைகளாய்
    இன்னும் மாறாத
    எங்கள் வண்டிச்சக்கரம்
    என்றும் துணையாய் வரும்
    மிதிவண்டிச் சக்கரம்
    வானம் பார்த்த பூமியாய்
    வானம் பார்த்து
    மழை வருமோ என எதிர்பார்த்து
    வாழ்ந்திடும் எங்கள்
    வாழ்க்கை சக்கரம் மாறிடுமோ?
    ஓடிடும் மேகம்
    சூரியனை மறைத்து
    சற்றே தாகம் தீர்த்திட
    வானுயர்ந்து வளர்ந்த
    தென்னை நிழலிங்கே
    வளரும் புஞ்சையைக்
    காத்து நின்றதே
    மறந்து போன
    விவசாயியையும்
    விவசாயத்தையும்
    அது காத்து நின்றதே!

    *****

    தென்னையையும் மிதிவண்டியையும் வைத்து அருமையான கருத்துக்களைக் கவிமுத்துக்களாய்க் கோத்துத் தந்திருக்கும் பாவலர்களின் கவியாற்றலுக்கு என் வந்தனங்களையும் பாராட்டுக்களையும் சாற்றி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மிதிவண்டியும் தென்னையும்!

    ஆட்டும் திசையில் ஆடும்
    காட்டும் திசையில் ஏகும்
    நேர்பாதையில் நிமிர்ந்து செல்லும்
    மிதிவண்டியும் தென்னையைப் போலே…

    முதலில் கீழே சறுக்கும்
    மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
    பழகப்பழகக் கைக்கொள்ளும்
    சீராய் ஏற்றம் கொள்ளும்…

    க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
    நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
    வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
    கனியும் கையில் கிட்டும்!

    ”முதலில் கீழே சறுக்கும்; மிதித்து ஏறக் கீழ் தள்ளும்; க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்; நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்” என்று மிதிவண்டிக்கும் தென்னைக்கும் பொருந்துவதாய்த் தம் கவிதையில் இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 274இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 274இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரக்கிளையில் ஒயிலாய்ச் சாய்ந்திருக்கும் முருங்கை இலைகளைப் படமெடுத்திருப்பவர் அண்ணாகண்ணன். இப்படத்தைத் தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 274க்கு வழங்கியுள்ளனர், வல்லமையின் ஆசிரியர் குழுவினர் . படப்பதிவாளருக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    மர வகைகளில் முருங்கை வலிமையற்ற ஒன்றாகும். அதனால்தான் அதனை ”நாரில் முருங்கை” என்கின்றது அகநானூறு.

    “”…அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
    சூரலங் கடுவளி எடுப்ப ஆரூற்று
    உமைதிரைப் பிதிர்வில் பொங்கி…” (அகம்: 1)

    நார்த் திசுக்களே ஒரு மரத்திற்கு வலிமை தருவன. அவை இல்லாமையாலேயே முருங்கை மரம் வலியற்றிருக்கின்றது என்கிறது அறிவியல்.

    ’முருங்கை’ என்ற தமிழ்ச் சொல்லானது ’முருங்கா’ என்ற சிங்களச் சொல்லிலிருந்து வந்ததாகத் திறனாய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். ”அது தவறு! முருங்கை என்பது தமிழ்ச்சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியத்தில் அச்சொல் பயின்றுவந்திருப்பதே சான்று” என்பார் தமிழண்ணல்.

    இனி, படத்தில் காணப்படும் முருங்கை இலைகளுக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் கவி வண்ணங்களைக் காண்போம்!

    *****

    ”பச்சை இலைகள் பழுத்துவீழ்வது இயல்பானது; அதனால் மரத்திற்குப் பாதகம் ஏதுமில்லை” எனும் வாழ்க்கைப் பாடத்தை இவ் இலைகள் தமக்கு உணர்த்துவதை நமக்கும் அறியத்தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்க்கைப் பாடம்…

    பச்சை இலையுடன் முருங்கையிலே
    பழுத்தே யுதிரும் இலைகளெல்லாம்
    நிச்சய மாக ஓரிடத்தில்
    நிலைத்தே யென்று மிருப்பதில்லை,
    இச்சை கொண்டே கீரையாயினும்
    இயல்பாய்ப் பழுத்து வீழ்ந்திடினும்
    அச்ச மில்லை மரத்திற்கே
    அதுதான் வாழ்க்கைப் பாடமதே….!

    *****

    பல்விழுந்த கிழவிபோல் காட்சிதரும் பழுத்த இலைக்காம்பும், பச்சைப் பட்டுடுத்திய பருவப்பெண்போல் மினுமினுக்கும் பச்சை இலைக்காம்பும் தமக்குள் நிகழ்த்திய உரையாடலைச் சுவையான கவிதையாக்கியிருக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    இளமையும் முதுமையும்

    பல் விழுந்த‌
    கிழவி போல்
    பரிதாபமாய்ப்
    பழுத்த இலைக் காம்பு!
    பக்கத்தில்
    பச்சைப் பட்டுடுத்திய
    பருவப் பெண் போல்
    பச்சை இலைக் காம்பு!

    இலைக் காம்புகளுக்கிடையே
    ஏதோ சலசலப்பு.
    உற்றுப் பார்த்து
    ஒட்டுக் கேட்டேன்.
    பச்சை இலைக் காம்பு பரிகாசத்துடன் பேசியது,

    “பழுத்த இலைக் காம்பே,
    நான்
    பசியால் வாடும்
    உயிரினங்களுக்கு
    உணவாகப் போகின்றேன்!
    நீயோ,
    மேலும் பழுத்து
    யாருக்கும் பயனின்றி
    மண்ணில் புதையுண்டு
    மாளப் போகின்றாய்!”

    பதிலுக்குப்
    பழுத்த இலைக் காம்பு‌
    பணிவுடன்,
    “என்னைத் தாங்கிய
    மரத்தை வளர்த்த
    பூமித்தாய்க்கு
    என் பழுத்த இலைகளால்
    அர்ச்சனை செய்து
    புண்ணியம் தேடிக்கொள்வேன்”
    என்றது!

    பச்சை இலைக் காம்பு
    வெட்கித்
    தலைகுனிந்தது!

    இளமை
    இறுமாப்பு கொண்டு
    முதுமையைப் பழித்தல்
    முற்றிலும் தவறென்று
    இலைக்காம்புகளின்
    உரையாடல்
    இவ்வுலக மானிடருக்கு
    உணர்த்துகின்றதோ!

    *****

    ”ஒடித்து வளர்த்தும் அதற்காக வருந்தாது காய் தருகின்ற நீ, ஏன் கனி தருவதில்லை? உன்னைக் காயிலேயே நாங்கள் காயப்படுத்துவதாலா?” என்று முருங்கையை நோக்கிக் கேள்விக்கணை விடுக்கிறார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    பிள்ளையை
    அடித்து வளர்
    முருங்கையை
    ஒடித்து வளர்

    அகிம்சைப் பாடம்
    நடத்துகிறாய்
    இம்சை செய்பவருக்கும்
    பலன்கள் தருகிறாயே!

    பெயரில் தான்
    இருக்கிறதே கை
    ஏன் நீட்ட மறுக்கிறாய்?

    மரம் என்பதாலே
    மனித இனம்
    ஒடிக்கிறது
    நீ வளர!

    புரிந்து தான்
    தெரிந்து தான்
    பலன்கள் தருகிறாயே!

    உன்னிடம்
    ஒரு கேள்வி…

    நீ ஏன் கனி தருவதில்லை?

    காயிலேயே
    காயப்படுத்தி
    விடுகிறோம்
    என்பதாலா?

    உன்னிடம்
    கற்க வேண்டியவை
    ஏராளம் ஏராளம்!

    கீரை வகைகளில்
    கறிவேப்பிலை யாக
    மரமானவனே!

    இலை ஆகட்டும்
    பூ வாகட்டும்
    காய் ஆகட்டும்
    ஒவ்வொன்றும்
    ஒவ்வொரு
    மருத்துவ குணம்!

    சமூகத்திற்கும்
    வீட்டிற்கும்
    நாட்டிற்கும்
    மனிதனாகப்
    பிறந்தால்
    பயன்பட வேண்டும்
    நீ கற்றுத்தரும்
    பாடம்!

    நான்
    கற்றுக்கொண்ட
    பாடம்!!

    *****

    ”தோட்டத்தின் அழகுதனை நிர்ணயிக்கும் முருங்கையின் பசுமை இலையில் பறவைகளும் வந்தாடுகையில் ஏற்படும் குதூகலத்துக்கு அளவில்லை” என்று மகிழ்ந்துரைக்கும் திருமிகு. சுதா மாதவன்,  ”பசுமைத் தாயகமான இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படுத்துவோம்!” என்று  மக்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுக்கிறார்.

    பச்சைப்பசேல் இலைத்துளிகள்
    சார்ந்து வளரும் செடிகொடிகள்
    பார்ப்பதற்குக் கண் குளிர்ச்சிதான்
    மண் வளத்தைக் குறிக்கும் அது சிறப்புதான்!

    தோட்டத்தின் அழகுதனை
    நிர்ணயிக்கும் பசுமை இலை
    வளமான சுற்றுச்சூழல் என
    வார்த்தையிட்டுச் சொல்லிடலாம்!

    பறவைகளும் அதனூடே
    பறந்து வந்தாடுகையில்
    குதூகலமோ குறைவில்லை!
    நறுமணமும் நலியவில்லை!

    பசுமைத் தாயக இந்தியாவில்
    பசுமைப் புரட்சி ஏற்படுத்திப்
    பசுமையோடே காத்திடுவோம்!

    *****

    மரத்தின் ஆதாரம் தளிரா? தளிரின் ஆதாரம் மரமா? என்றோர் ஆய்வுசெய்து அதனோடு மனித உறவுகளையும் சமூகத்தையும் நயமாகப் பொருத்திக் காட்டியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    சுற்றம்

    தளிரா? மரமா?
    தனி மனிதனா? சமூகமா?

    விதை வீழ்ந்து
    சிறுமுளை விட்டு
    நாற்றாகி, தளிராகி,
    சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
    கிளை விரிந்து பெரு மரமாகி நின்றாலும்
    தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
    ஆகையின்…
    தளிரே மரத்தின் ஆதாரமோ?

    எனில்…
    பற்றும் கிளையின்றி, தண்டின்றி
    உணவளிக்கும் வேரின்றி
    மரத்தின் துணையின்றி
    தளிருக்கு வாழ்வு ஏது?
    ஆகையின்…
    மரமே தளிருக்கு ஆதாரமோ?

    மரமின்றித் தளிரில்லை
    தளிரின்றி மரமில்லை

    அதுபோன்று
    பிறப்பு முதல் இறுதிவரை
    உருத்துக் காட்டும் உறவு வேண்டும்
    பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
    சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
    மனிதம் வாழ நற்சமூகம் வேண்டும்
    சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்

    ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை!
    சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை!

    *****

    பலன்கள் பல நல்கும் முருங்கையின் அருமை அறியாத மாந்த சமூகம், பலனற்ற குரோட்டன்ஸ் செடிகளைக் கொண்டாடி மகிழ்வதை மென்மையான மொழிகளில் இடித்துரைத்திருக்கின்றார் திருமிகு. ஜெயஸ்ரீ.

    துரித சுவைகளின்
    அடிமை நாக்குகள்
    சிவந்த நஞ்சு நாவின்
    நிறமே பிடித்து உண்ணும்

    பிறிதோர் உயிர்க்குருதி
    காணும் குரூரப் பேருவகை
    பெருவெளியில் நீயோ
    பழுத்தும் பழுக்காமலும்
    பயனின்றி உதிர்கிறாய்

    கொல்லையில் ஊன்றினால்
    குழம்பு காய் கூட்டோடு
    குலம் தழைக்க வைப்பாய்
    வித்துக்களை உருவாக்கும்
    சத்துக்களைக் கொண்டதால்
    பிரம்ம விருட்சம் நீ!

    இருந்தும் என்ன?
    வேருக்கு நீரூற்ற நேரமில்லை
    எங்களுக்கே தாகம் தீர்க்க
    நெகிழிநீர் போதவில்லை
    முற்றியது கலி!

    நீயாகவே காய்ந்து போ!
    இல்லை கண்ணைப் பறிக்கும்
    வண்ணக் குரோட்டனாய் மாறு!
    அப்போது நாங்கள் ஆராதிப்போம்!

    *****

    முருங்கை இலையையும் மரத்தையும் ஆய்ந்து, பல்வேறு வாழ்வியல் உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கின்றார்கள் சீரிய சிந்தனையாளர்களான நம் கவிஞர்கள்; அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வாழ்க நீ!

    முருங்கையே! உன் இதழ் சிந்தும் புன்னகைக்கு வணக்கம்!
    சமதர்மத்தை நிலைநாட்டி நிற்கும் நீ மரம் அல்ல
    உச்சி முதல்அடி வரை உன்னதத்தை மறைத்து வைத்துள்ள
    கற்பகத்தரு! மனிதாபிமானத்தின் மறுவுரு!

    ”முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு!
    வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு!” என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ!
    சத்துக்களைச் சத்தமிடாமல் தந்து கொண்டிருக்கிறாய் – அன்றாட
    வீடுகளில் வெந்து கொண்டிருக்கிறாய்!

    காற்றோடு ஆடுகிறாய்; புயல்காற்றோடு ஓடுகிறாய்!
    எத்தனை முறை உன்னை அசைத்துப்போட்டாலும்
    அசந்து போகாத பூமித் தாயின் வீர மகன் நீ!

    முருங்கையே உன் கை ஏழைகளின் நம்பிக்கை!
    ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!
    புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவுக்கும் பிடித்த கை!
    உழைத்து உழைத்து உலகுக்குச் சோறூட்டும்
    பாட்டாளிகளுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு…
    நீ மரம்! அவன் மனிதன்!

    உன் கரம் துண்டிக்கப்பட்டால் முளைத்து விடும்
    அவன்கரம் துண்டிக்கப்பட்டால் சோற்றுக்கு அலையும் நாள்வரும்
    அந்த நாள் வந்துவிடக்கூடாது என்றுதானே
    வறுமையெனும் கொள்ளைக்காரனிடமிருந்து
    பாட்டாளியைக் காக்கக் காவலனாய் நிற்கிறாய் அவன் இல்லத்தில்!
    உன்பசுமையான இதழ்களுக்குச் சத்தமில்லாத முத்தமே
    என் அன்புக் காணிக்கை! வாழ்க நீ ! வளர்க நீ!

    ”முருங்கையே! முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு; வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு! என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ! உன் கை ஏழைகளின் நம்பிக்கை; ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!” என்று முருங்கையின் பெருமைகளைத் தம் கவிதையில் திறம்பட உரைத்திருக்கும் முனைவர் செ. நீதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரக்கிளையில் அழகாக அமர்ந்திருக்கும் மஞ்சள் வண்ணத் தேன்சிட்டைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு இப்படம் படக்கவிதைப் போட்டி 273க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!

    காணத் தெவிட்டாத இந்தத் தேன்சிட்டை நம் வீட்டருகில் காணவேண்டுமானால் நிறைய மரம் செடிகொடிகள் நம் வீட்டைச் சுற்றி இருக்கவேண்டும்.

    இத்தொல்லுலகில் பல்லுயிர்களுக்கும் அடைக்கலம் தரும் அன்னையாகத் திகழ்பவை மரங்களே. எனவே மரங்களை அழியாமல் காப்பதன் வாயிலாக இந்தச் சின்னஞ்சிறு வன்ன (அழகிய) குருவிகளையும் நாம் காக்கமுடியும்!

    கண்கவர் சிட்டைப் படத்தில் நோக்கியதால், கவிபாட, பல்வேறு கற்பனைகளை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருக்கும் கவிஞர்களே வருக! உம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுக!

    *****

    ”எல்லைகள் தாண்டியே தொல்லையில்லாப் பயணம் செய்கிறாய்! உடைமைகள் மீது ஆசைகொள்ளும் மடமை உனக்கில்லை” என்று சிட்டுக்குருவியின் சுதந்தர வாழ்வை விதந்தோதுகின்றார் திரு. காந்திமதிநாதன்.

    சுதந்திர பறவை

    எங்கு வேண்டுமானாலும்
    எப்பொழுது வேண்டுமானாலும்
    எல்லைகள் தாண்டியே பயணம்

    உடைமை கொண்டாட்டமில்லை
    மடமை கொண்டாடுவதில்லை

    ஆசைகள் பிறப்பதில்லை
    யாரையும் பின்பற்றுவதில்லை

    என்னை வழிநடத்துபவன் என்
    என்னுள்ளே இருப்பதால்
    சூழ்ச்சி வலையில்
    வீழ்ச்சிக்கு வழியில்லை

    என்னைக் கேட்டுத்தான்
    எல்லாமே நடக்கணும்
    சர்வாதிகார சிந்தனை
    சந்நதிக்கே இல்லையப்பா

    மானிடா
    உங்களுக்குள்ளே
    எத்தனை எத்தனை பிரிவுகள்

    பிரிவுகளுக்குள்ளே
    எத்தனை எத்தனை
    உட்பிரிவுகள்

    வளர்கிறோமே
    வாதாடுவாய்

    சாதனைகள்
    பட்டியலிடுவாய்

    ஒரே கேள்வி

    நிம்மதியாக
    வாழ்கிறாயா?

    *****

    ”மரக்கிளையில் கூடுகட்டி மறைவாக வாழ்ந்தாலும் இரக்கமற்ற மனிதனால் அதற்கும் ஆபத்து வந்துவிடுவதைக் கலக்கத்தோடு பார்த்திருக்கும் பறவை இது” என்று பறவை வாழ்வின் பரிதாபநிலையை விளக்குகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் செயல்…

    சிறகில்
    சுதந்திரத்தைக் கட்டிப்
    பறக்கும் பறவைக்கு
    வசப்பட்டுவிடுகிறது
    வானம்..

    மண்ணில்தான்
    மாறுபாடாகிறது மனிதனால்..

    உயர்ந்த மரக்கிளையில்
    ஓவியமாய்க் கூடுகட்டி
    இனத்துடன்
    ஒற்றுமையாய் வாழ்ந்தாலும்
    இடர்ப்பாடு வந்துவிடுகிறது
    இவனால்-
    மரத்தையே வெட்டிவிடுகிறானே
    அடியோடு..

    கலக்கத்துடன்
    பார்த்துக்கொண்டிருக்கிறது
    பறவை யொன்று…!

    *****

    ”துணையைப் பிரிந்த தாபமோ? குருவிக்கூட்டம் தள்ளிவைத்ததால் வந்த கோபமோ? எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளராதே!” என்று சிட்டுக்குத் துணிவூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    தன்னம்பிக்கை

    தன் துணை
    தனிமைப்படுத்தியதின்
    தாபமோ!

    தன் கூட்டம்
    தள்ளி வைத்ததின்
    கோபமோ!

    தன்னந்தனியாய்
    தண்ணீருக்கான
    தேடலோ!

    தனியொரு பறவையாய்த்
    தடித்த மரக்கிளையில்
    தவிக்க விட்டது
    தலைவிதியென்று
    தளராதே குருவியே!

    தன்னம்பிக்கையையும்
    தைரியத்தையும்
    தடைகளைத்
    தகர்த்திடும் ஆயுதங்களாக்கு!

    தவிக்க விட்ட
    சொந்தங்கள்
    தன்னால் வரும்
    உன் பின்னால்!

    *****

    ”ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும் வாட்டம் முகத்தில் காட்டிவைத்து
    அழுது பொழுதைப் போக்காமல் நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்” என்று சிட்டுக்குருவி தனக்குச் சொன்ன நல்ல சேதியை நமக்கும் சொல்லியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி

    காலை எழுந்து கடமையைச் செய்ய
    மாடத்தில் தினமும் கூவிடுவாய்
    மாலை நேரமாய் வீடுவந்து
    சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்

    சோம்பித் திரிந்து வாடிடாமல்
    உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
    உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
    சிறப்பைத் தினமும் காட்டிடுவாய்

    படைப்பின் நியதிகள் மீறிடாமல்
    அடைந்து கிடந்து தேங்கிடாமல்
    சிறகை விரித்துப் பறந்து செல்லும்
    விடுதலை வேட்கை விதைத்திடுவாய்

    ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
    வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
    அழுது பொழுதைப் போக்காமல்
    நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்

    சின்னச்சின்ன குருவி நீயும்
    சொல்லும் சேதிகள் ஏராளம்
    எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
    முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்…

    *****

    குருவியின் படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்து அருவிகளைப் பாயவிட்டிருக்கும் கவிஞர்களை நேயத்தோடு பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    மஞ்சள் வெல்வெட்டில்
    கருப்புநிறக் கருகுமணி உன் கண்கள்!
    பேனாவின் கூர்மை கொண்ட உன் அலகு!
    பதிய வைத்த கால்களுடன்
    மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகு
    நளினத்தின் நளினம்!

    இயந்திர நகர நரக வாழ்க்கையில்
    உன்றன் குரலை மறந்திருந்தோம்!
    ஊரடங்கில் உன்றன் குரல்
    கேட்கக் கேட்க எத்தனை இனிமை!
    அமைதியினிடையில் ஆனந்தம் தந்ததே…
    இறுகிய மனத்தூடே இனிமை தந்ததே…
    உன்னிசையைத் தந்து கொண்டேயிரு
    நாங்கள் குதூகலிக்க!
    மஞ்சள் மைனாவே
    மறவாதே எங்களை!!

    ”மஞ்சள் வெல்வெட்டில் கருகுமணிகளாய் மின்னும் கண்களோடும், பேனாவின் கூர்மைகொண்ட அலகோடும் மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகே அழகு! உன்னிசையைக் கேட்டுமகிழும் இன்பத்தை நித்தமும் எமக்குத் தா” என்று மஞ்சள் சிட்டைக் கொஞ்சி அழைக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 272இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 272இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கள்ளமில்லாப் புன்னகைப் பூக்களை காமிராவுக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றதெனத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!

    ”பொங்கிவரும் மழலையரின் மங்கலச் சிரிப்பதனில் 
    தங்காது பறந்திடும்நம் துயரமெல்லாம் வெகுதூரம்!”

    இனி, கவிஞர்கள் வருகிறார்கள்… மழலையர் குறித்துக் கவிசொல்ல!
    நம் மனம் வெல்ல!

    *****

    தாயில்லாப் பிள்ளைகளின் முகத்தில் புன்னகை ஒளிரத் தன்னைத் தியாக தீபமாய் மாற்றிக்கொண்ட அக்காவின் தூய அகத்தைப் போற்றுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தியாக தீபம்…

    மானாவாரிப் பயிராய்த்
    தானாய் வளரும்
    தாயில்லாப் பிள்ளைகள்..

    பெற்றவர்கள் இல்லாதபோது
    மற்றவர்கள் போற்ற
    உடன்பிறப்பு உறுதுணையாகிறது,
    அன்னையாய் தந்தையாய்
    ஆகிறாள் அக்காவே..

    உடன்பிறப்புகளின்
    உதட்டுச் சிரிப்பு நிலைக்க
    அவள்
    உருகும் மெழுகுவர்த்தியாய்
    உதவி,
    தன்சுகம் மறந்த
    தியாக தீபமாய் ஒளிர்கிறாள்…!

    *****

    ”வாழ்க்கைப் பயணம் தருகின்ற வலிகளால் சிரிப்பைத் தொலைத்துவிடாதீர்கள்! காலங்கள் கடந்தாலும் தொடரட்டும் இந்தக் களிப்பு!” என்று மழலையருக்கு அறிவுரை பகர்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    சிரிப்புத் தொடரட்டும்!

    கள்ளமில்லா
    வெள்ளைச் சிரிப்பு!
    கடவுள் வாழும்
    உள்ளங்களின் சிரிப்பு!
    வித்தை காட்டுபவர் செய்த
    வேடிக்கையால்
    விளைந்த சிரிப்போ!
    விலங்கினக் குரங்கின்
    சேட்டைகளால்
    எழுந்த சிரிப்போ!
    வளர வளர
    வாழ்க்கைப் பயணத்தில்
    வருகின்ற சோதனைகளின்
    வலிகளால்
    வாய்விட்டுச் சிரிக்காமல்
    நோய்த் தொற்றுக்கு ஆளாகி
    நொறுங்கி விடாதீர்கள்!
    காலங்கள் பல கடந்தாலும்
    தொடரவேண்டும்
    இந்தக் களிப்பு!

    *****

    அறிவைச் சொல்லிக் கொடுப்பதில் மாற்றங்கள் கொண்டு வந்து
    வெற்றி காணுங்கள்! அதைவிடுத்து அறிவைச் சோதிக்கத் தேர்வு என்பது
    தீர்வு ஆகுமோ? என்று மழலையர்க்குப் பொதுத்தேர்வு நடத்துவதன் பாதகத்தைத் தன் பாவில் விளக்குகின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    ஐந்தாவது
    எட்டாவது
    வகுப்பு
    மாணவர்கள்
    கண்டிப்பாக
    அரசு பொதுத்தேர்வு
    அறிவித்தீர்கள்

    பிஞ்சு மனதில்
    அச்சமோ அச்சம்

    நடந்தது என்ன

    ஒன்று முதல்
    பதினொன்று
    வரையில்
    தேர்வே இல்லை

    ஒன்பது வரையில்
    ஆல்பாஸ்

    குழந்தையும் தெய்வமும்
    ஒண்ணுன்னு
    உணர்த்தி விட்டது
    காலக் கடிகாரம்

    மாற்றம் வேண்டும்
    ஆணிவேரில்
    கிளைகளில் அல்ல

    அறிவைச் சொல்லி
    கொடுப்பதில்
    மாற்றங்கள்
    கொண்டு வந்து
    வெற்றி காணுங்கள்!

    அதை விட்டுவிட்டு
    அறிவை சோதிக்கத்
    தேர்வு என்பது
    தீர்வு ஆகுமோ?

    மழலைப் பள்ளி
    மகத்தான
    மாற்றங்கள்
    கண்டால்

    மற்ற பள்ளியில்
    புரிதல் எளிது!

    ஜப்பானியக்
    கல்விமுறை
    மழலைப் பள்ளிக்கே
    முன்னுரிமை

    தேசப் பற்று
    ஒழுக்கம்
    தற்காப்புக் கலை
    வாழ்வியல் பாடமாக!

    அதை விட்டு விட்டுத்
    தேர்வில் மட்டுமே
    மாற்றங்கள் என்பது
    தடுமாற்றங்கள்!

    *****

    ”காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
    சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
    சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.” என்று இந்நிழற்படத்தை எடுத்த நிபுணர் அனைவரையும் முழுமையாகப் படத்தில் கொண்டுவராததைப் பகடி செய்து பாட்டெழுதியிருக்கின்றார் திரு. சித்தி கருணானந்தராஜா.

    கொலை வெறி

    அண்ணாவின் தலையை வெட்டி அக்காவின் காதறுத்து
    என்ன மட்டும் உருப்படியா விட்டிருக்காரு – அவரு
    எங்க ஊரு தலைசிறந்த போட்டோக் கிராபரு

    சிரிச்சுக்கிட்டு நிக்கச்சொல்லி சிதறாமப் பதறாம
    மறிச்சு வச்சி எங்களையவர் படமெடுத்தாரு – அண்ணன்
    மண்டையைில்தான் பாதியில்லை பேத்துப்பிட்டாரு

    தலைவெட்டி நித்தியண்ணன் தரமான காமிராமென்
    கொலைவெறியில் நின்னுக்கிட்டு படமெடுத்தாரு – எங்களைக்
    கொல்லாமல் விட்டுவிட்டார் கடவுள் காத்தாரு.

    காதைவெட்டி அக்காவின் கதை முடிக்கப் பாத்தாரு
    வேதனையைத் தாங்கிக்கிட்டு சிரிச்சு நின்னாளு – அவளு
    வீரமுள்ள பொண்ணு நெல்ல விவரமான ஆளு

    கொத்துனாலும் கொதறினாலும் நித்தியண்ணன் கொலைவெறிய
    எத்தனைதான் தரமின்னாலும் நாங்க தாங்குவோம் – அவரு
    எடுக்கப் போகும் படத்துக்கெல்லாம் போஸு குடுப்போம்.

    இரக்கமுள்ள மனிதரவர் என்னை மட்டும் வுட்டுப்பிட்டார்
    சிரத்தை வெட்டி அரியாமத் தப்ப விட்டாரு – அவரு
    சிந்தையில கனிவிருக்கு உயிரைத் தந்தாரு.

    காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
    சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
    சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.

    அரகரோகரா சாமி அரகரோகரா
    அரகரோகரா சாமி அரகரோகரா

    *****

    ”கடற்கரைச் சோழிகளாய், காந்தக் கதிர்களாய், கபடமில்லா நகைசிந்தி என்றும் மகிழ்ந்திருங்கள்” என்று மழலையரை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கண்களைச் சுருக்கி
    வெண்பற்களைக் காட்டும்
    உங்கள் புன்னகை
    அதில் எத்தனை வெகுளித்தனம்!!

    முத்துப் பற்களாய் முல்லைப் பூக்களாய்
    கடற்கரைச் சோழிகளாய்க்
    காந்தக் கதிர்களாய்
    இதில் கள்ளமில்லை கபடமில்லை
    இப்படியே நகைத்திரு
    சுற்றமும் நட்பும் என்றும் சூழ
    சிரித்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

    *****

    ”சென்றதை எண்ணி வருத்தமில்லை; வருவதை நாடி ஏக்கமில்லை; இன்றைய பொழுதின் இன்பமதை இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை” என்று பிள்ளைகளின் குணத்தை எதார்த்தமாய்த் தம் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பிள்ளைப்பருவம்

    பட்டிதொட்டி அனைத்திலுமே
    பகைமை கொண்ட அனைவரையும்
    முட்டிமோதி வெற்றி கொண்டு
    பட்டம் சூடும் சூழ்ச்சியில்லை…

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
    ஒட்டிக் கட்டி முடித்து வைத்து
    கவலைக் கடலில் தத்தளித்துத்
    துன்பம் கொள்ளும் நிலைமையில்லை!

    தோல்விக்கு அஞ்சும் வீரமில்லை
    வெற்றிக்கு வாடும் வாட்டமில்லை
    அச்சம் நாணம் இச்சை இல்லை
    ஏதும் இல்லையென்ற வாட்டமில்லை

    சென்றதை எண்ணி வருத்தமில்லை
    வருவதை நாடி ஏக்கமில்லை
    இன்றைய பொழுதின் இன்பமதை
    இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை

    கள்ளம் கபடம் சூதுமின்றி
    வெள்ளை உள்ளம் கொண்டு
    பிள்ளைகள் வாழும் வாழ்க்கையைப்போல்
    இன்பம் ஏதும் உலகிலில்லை

    *****

    மழலையரின் மனத்தைப் பல்வேறு உளவியல் கோணங்களில் ஆராய்ந்து எழிலார் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    சிரித்து வாழ வேண்டும்
    சிரித்து வாழ வேண்டும்
    சிரித்து வாழ்கிறோம்
    நிகழ்காலமே முக்காலமென!

    இறந்த கால நினைப்பேது?
    எதிர்காலச் சிந்தனையேது?

    சிரித்து சிரித்து வாழ்கிறோம்
    அரை வயிற்றுக் கஞ்சி
    அழுக்கடைந்த ஆடை
    வறுமை இல்லை
    மனதின் எண்ணத்திற்கு!

    சிரித்தே வாழ்கிறோம்
    சிரித்தே வாழ்கிறோம்
    நிகழ்காலமே
    முக்காலமென!

    எக்காள ஏளனம் இல்லை
    எவர் மீதும் பொறாமை
    எண்ணம் எள்ளளவும் இல்லை!

    சிரித்தே வாழ்கிறோம்
    சிரித்தே வாழ்கிறோம்
    நிகழ்காலமே முக்காலமென!

    அன்பு தானே வலிமை
    புகட்டியது எளிமை

    பெரியோரை மதிக்கிறோம்
    பெரியோரைத் துதிக்கிறோம்

    சிரிக்கும் சிரிப்பு
    தருமாமே ஆரோக்கியம்!

    ஆரோக்கியம் தானே
    வாழ்வின் பாக்கியமே!

    மனிதருக்கு
    இறைவன் தந்த வரம்
    சிரிப்பு தானே!

    சிரிக்க மறந்தால்
    சிரிப்பைத் துறந்தால்
    பூரிப்போ பரிதவிப்பிலே!

    சிரிப்போம்
    சிரிப்போம்
    சிரித்துக்கொண்டே
    மற்றவர்களையும்
    சிரிக்க வைப்போம்!

    ”அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும், அழுக்கடைந்த ஆடை உடுத்தினாலும் அன்பே வலிமையாய்க் கொண்டு, எண்ணத்தில் ஏழ்மையின்றிச் சிரித்து மகிழும் மழலையர் இவர்” என்று எளிய வாழ்க்கையிலும் இனிமைகாணும் குழந்தைகள் மனத்தைத் தம் கவிதையில் படம்பிடித்திருக்கும் திரு. சீ. காந்திமதிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 271இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 271இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீர்த்துளி சொட்டும் வண்ண இலைகள் கொண்ட செடியைக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது இந்தப் படம். நிழற்பட நிபுணருக்கு  என் நன்றி!

    இயற்கையின் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எத்தனை விதமான விசித்திர உயிர்கள்! அதிலும் தாவரங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்துபடைப்பதோடு நம் மனத் துயருக்கும் மருந்தளிக்க வல்லவை!

    நுணுகிய நோக்குக் கொண்ட நம் கவிஞர்களின் கலைக்கண்கள், இந்தப் படத்தை எப்படி அணுகியிருக்கின்றன என்பதை அவர்களின் கவிதைகள்வழி அறிந்துவருவோம்!

    *****

    ”மேகக் காதலனால் கொட்டப்பட்ட நீர்த்துளிகள் இந்தச் செடியின் உடலெங்கும் முத்தத் தடங்கள்போல் மின்னுகின்றன” எனும் அழகிய கற்பனையைத் தன் கவிதையில் ஏற்றியிருக்கின்றார் திருமிகு. விஜயகுமாரி.

    சொட்டும் மிச்சமின்றி
    கொட்டி விட்டேன் காதலை
    சுமக்கிறாய்,
    உன் மேனியெங்கும்
    முத்தத்தடங்கள் போல.
    ஏந்துகிறாய்
    அன்னை போல்
    கண்ணாடிக் குழந்தைகள் போல
    முகம் பார்த்துக்கொள்கிறேன்
    நெடுநாள் கழித்து
    என் சாயல் அதனில்.
    சூரியனைப் பற்றி
    கவலை கொள்ளாதே.
    நாளையும் வருவேன்
    காதலிக்க.
    இப்படிக்கு
    உன் நான்
    மேகத்திலிருந்து!

    *****

    பனித்துளியால் இலைக்கழகா? இலையால் பனித்துளி அழகா? என்று விடை வேண்டி வினாக் கணை தொடுத்திருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பனித்துளி தாங்கிய இலைகள்
    பருவப்பெண்ணின் அழகிய உதடுகள்
    வண்ணவண்ண நிறத்திலிருப்பதனால்
    வானவில் வடிவில் நின்றதுவோ?
    பளபள நிறத்தில் பனித்துளிகள்
    மழைத்துளியின் மாற்று உருவமதோ?
    மொத்தத்தில்
    பனித்துளையால் இலைக்கழகா?
    இலையால் பனித்துளி அழகா?
    விடையைத்தான் கூறுங்கள்
    வெகுநேரம் காத்திருப்பேன்!

    *****

    ”பயனுள்ள துளசிச்செடி பக்கத்துவீட்டில் வாடியிருக்க, பணக்காரவீட்டுப் பயனிலாச் செடியான எனக்கோ நிதமும் விலைகொடுத்து நீருற்றுகின்றார்கள்!” என்று உள்ளம் குமுறும் செடியினைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதன் கவிதையில்.

    செடியின் உள்ளக் குமுறல்!

    வசதி உள்ளவன்
    வீட்டுத் தோட்டத்துச்
    செடி நான்!

    பணம் கொடுத்துத்
    தண்ணீர் வாங்கி
    என்னை வாழ வைத்து
    என்ன பயன்?

    அழகுக்கான செடி
    பூக்காத கொடி
    நீரே என் குடி
    செல்லாத உருப்படி!

    அடுத்த வீட்டுத்
    துளசி மாடம்
    நீரின்றி வாட்டம்!

    குடிக்க நீரின்றித்
    தெரு எல்லாம்
    தவியோ தவிப்பில்
    பணக்கார வீட்டில்
    தோட்டத்துச் செடியாக
    நானிருப்பது
    எனக்கது சிறுமையே!

    *****

    ”அகிலத்தை அசத்தும் அழகிய அழுகாத மலர் நான்! என்மீது விழுந்த பனித்துளியால் இன்னும் வாடாமல் வாழ்கிறேன்” என்று தன்னிலை விளக்கும் ரோஜாவைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. செ. சீத்தாலட்சுமி அய்யப்பன்.

    சிவந்த இதழுடன்
    சிரித்த முகத்துடன்
    கிளையுடன் இருந்தாலும்
    சிலையாக நின்றாலும்
    தனியாக இருக்கிறேன்
    வேரில் ஈரமில்லை
    வீழவும் துணிவில்லை
    ஆணிவேர் ஆனேன்
    ஆசை பல கொண்டேன்
    அடையவில்லை அனைத்தையும்
    ஏணி போல
    ஏற்றிவிட்டேன்
    ஏனோ……
    நான் ஏறவில்லை
    ஏமாற்றமும் எனக்குஇல்லை
    அகிலத்தை
    அசத்தும்
    அழகிய
    அழுகாத
    மலர் நான்
    என் மீது விழுந்த
    பனித்துளியால்
    இன்னும்
    வாடாமல் வாழ்கிறேன்!

    *****

    முள்ளாகவும் மலராகவும் மாறி மாறி விளங்கும் வாழ்வின் தன்மையை அழகிய சொற்களால் கவிச்சரமாக்கித் தந்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முள்ளும் மலரும்

    ஒருபக்கம்…
    மற்றோரின் வாழ்வு கண்டு
    ஆற்றாமை கோபம் கொண்டு
    விழுமியங்கள்யாவும் கெட்டு
    அழுக்காறு முள்ளாய் வளரும்!
    மறுபக்கம்…
    எளியோரின் இன்னல் கண்டு – அவர்
    துயர் நீக்கி வாழவைத்துக்
    களிப்பூட்டி உய்விக்கும்
    உயர் எண்ணம் பூவாய் மலரும்…

    ஒரு நேரம்….
    காலமதை வீணடித்துக்
    களிப்பொன்றே வாழ்வென்று
    முயற்சியென்ற சொல்கூட
    முள்ளாய்க் குத்தும்….
    மறு நேரம்….
    புதுமுயற்சி பலசெய்து
    பழமைகளைக் களைந்து
    புத்துலகம் படைப்பதற்கு
    உத்வேகம் பூவாய் மலரும்…

    வாழ்க்கையென்ற செடியினிலே
    வளர்வது முள்ளா? மலரா?
    வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை!

    சில நேரங்களில் ….
    முள் கொடுத்த சுகானுபவமும்
    மலர் கொடுத்த காயங்களின் வடுக்களும்
    அனுபவ வானில் மின்னலாய்க் கீற்றுவிடும்!

    *****

    கருத்துமணம் வீசும் கவிதைகளைத் திருத்தமாய்த் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்து!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    கண்ணீர் துடைக்க…

    முள்ளாலும்
    முழுப் பாதுகாப்பில்லை,
    எட்டா உயரத்தில்
    மொட்டாய் இருந்தாலும்
    எட்டிப் பறித்துவிடுகிறான்
    மனிதன்…

    அழகு அழகு என்று
    கூறிக்கொண்டே
    அழகை அழிப்பதுதான்
    அவன் வேலை…

    அதிலும் இப்போது
    காலா காலத்தில்
    பூவும் வரவில்லை
    பொழுதும் போகவில்லை,
    அழுது வடிகிறது
    அழகு ரோஜாச் செடி…

    அதோ,
    ஆறுதல் சொல்லிக்
    கண்ணீர் துடைக்கக்
    கீழை வானில் வருகிறான்
    கதிரவன்…!

    ”அழகை அழிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் மனிதன், எட்டாத உயரத்தில் நான் மொட்டாக இருந்தாலும் எட்டிப் பறித்துவிடுகிறான். அதோ! என் கண்ணீரைத் துடைத்துத் தேற்ற வருகிறான் கதிரவன்” என்று எதார்த்தத்தைக் கவிநயத்தோடு கலந்துதந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share