-மேகலா இராமமூர்த்தி 

கான மகளும் வான மகளும் துணையிருக்கக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் வேலவனை ஒளிப்படத்தில் பிடித்துவந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்வழகிய படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்படக்கலைஞருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

”தாமரை போன்ற எழிலார் திருவடிகளையும் பவழமொத்த மேனியையும், குன்றிமணிபோல் சிவந்த ஆடையையும் கிரவுஞ்ச மலையைப் பிளந்த நெடுவேலையும் உடைய சேவலங்கொடியோனாகிய முருகவேள் காப்பதனால் இவ்வுலக உயிர்கள் இன்பமாய் வாழ்கின்றன” என்று அழகன் முருகனின் அருளையும் ஆற்றலையும் வாயூறிப் பேசுகின்றது பெருந்தேவனாரின் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல்.

தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனி திகழொளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்
சேவலம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
(குறுந்தொகை – கடவுள் வாழ்த்து)

படத்தில் மனைவியரோடு மாண்புறக் காட்சிதரும் கந்தவேள் குறித்த தம் சிந்தனைகளைக் கவிதையில் அள்ளித்தரக் காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

*****
”வனத்துக்குக் குறத்தியையும் வான மகளையும் மணந்தவனை, சூரனைச் சீறி அழித்தவனை, அந்த மயில்வாகனனைப் பணிந்தால் அருள்கிட்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

அருள்தரும் வேலன்…

வனத்து வள்ளிக் குறத்தியுடன்
வான மகளை மணந்தவனை,
சினத்தில் வந்த சூரனையே
சீறும் வேலால் அழித்தவனை,
தனமும் கலையும் தருபவனைத்
தானே மயிலில் வருபவனை
மனத்தில் எண்ணிப் பணிந்திடுவாய்
மறவா தருள்வான் வேலவனே…!

*****
”ஆறுமுகன் ஏறுமுகன் அழகுமுகன் செந்தில் நகைமுகன்
குறவஞ்சி மகன் காரிருள் விலக்கும் கந்தனவன்” என்று முருகனின் தோற்றம் வீரம் பண்பு அனைத்தையும் பாங்குறப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

வள்ளி தெய்வானையுடன்
வடிவேல் முருகன்
வேலினைக் கையிலேந்தும்
வெற்றி வேல்முருகன்

சூரனை வதம் செய்த
ஆறுமுக வடிவழகன்
கடலையே முறியடித்த
மக்கள் சூழ் மால்மருகன்

வேழனின் இளையவனிவன்
புவி வலம் வந்த மருகன்
ஆறுமுகன் ஏறுமுகன்
அழகுமுகன் செந்தில் நகைமுகன்
இவனே குறவஞ்சி மகன்
தணிகை மகன் சாந்த முகன்

காரிருள் விலக்கும் கந்தனவன்
அடியார் கொஞ்சுமுகன்
அருள் மழை பொழியும் மாலன்
இவனே சரவணன் சக்திமகன்

*****

”ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால் பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து, சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!” என்று சந்தக் கவியில் ஆறுபடையப்பனின் வாழ்க்கை வரலாறுரைத்து நம் சிந்தை கவர்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

ஆறுபடையப்பன்

நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்துத்
தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்திச்
சேயோனாய்க் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்கத்
தென்பொதிகைப் பழனிபதி நின்ற பாலகுருநாதா!

ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால்
பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்துச்
சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

துள்ளிவரு வேலெடுத்துச் சூரர்தலை கிள்ளிச்
சினம்விடுத்துத் தேவவேழ வாகனத்திலேறி
வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்துக்
குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்திச்
சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
குன்றிருக்கு மிடமெல்லாம் குமரன்இடம் எனவே
செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

*****

”சங்கத்தமிழ்த் துதி துதிக்க…தங்கத்தேர் குலு குலுங்க…வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப வள்ளியோடு நீ வருவாய்!” என்று உள்ளம் அள்ளும் துள்ளிசைப் பாடலில் சிங்கார வேலனை அழைக்கின்றார் திருமிகு. ராதா.

சின்ன மயில் சிலுசிலுக்க…
சின்ன இடை தளதளக்க…
சித்தர் போற்றும் சீமானே
சிங்காரவேலா நீ வருவாய்!

பட்டாடை பளபளக்க…
பார்ப்பவர் மெய்மறக்க…
பாவங்களைப் போக்கிடவே
பாலகனே நீ வருவாய்!

செஞ் சிலம்பு சலசலக்க…
சேவல்கொடி படபடக்க…
செந்தூரில் நின்றாடும்
தேவாதி தேவனே நீ வருவாய்!

பால்குடம் பொங்கப் பொங்கப்
பக்தர்களும் பாடி வர
பாவங்களைப் போக்கிடவே
பால முருகனே நீ வருவாய்!

சக்திவேல் மினுமினுக்க…
சங்கடங்கள் பறந்து
சரணங்கள் பாடிவந்தேன்
சண்முகா நீ வருவாய்!

சங்கத்தமிழ்த் துதி துதிக்க…
தங்கத்தேர் குலு குலுங்க…
வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப
வள்ளியோடு நீ வருவாய்!

*****
”ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன அபிஷேகமில்லை;
சுத்திகரிப்பான்தான்! அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
அத்தொல்லையுணர்ந்தாவது வேல்கொண்டு விரட்டி அடித்துத் துரத்த
மாட்டாயா கொரோனாவை?”  என்று தம் ஆதங்கத்தைப் பாட்டில்
வெளிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

ஆதங்கத்துடன்…. அரகரோகரா!

ஆறுமுகத்தோனே உன் அண்ணன்
ஆனை முகத்தானெங்கே?
ஆதிமுதல்வனென அவனை
அனுதினமும் துதிபாடி
ஆளுக்கொரு சிலைசெய்து
ஆற்றங்கரையில் கரைத்தோம்!
அழகாய்த் தீபம் ஏற்றி உன் அப்பன்
அண்ணாமலையாரைத் தொழுதோம்!
ஆடித்தபசில் கைகூப்பி உன்
அன்னையையும் வேண்டினோம்!
அடுத்துவரும் கார்த்திகையில்
அன்புடன் வணங்குவோம் உன்னையும்!
அகிலமெல்லாம் வியக்கச் சூரனை வென்ற நீ
அடங்க மறுக்கும் நோய்த்தொற்றால்
அவதியுறும் எம்மக்களின் துன்பம்
அறியாது வள்ளிதெய்வானையுடன்
அளவளாவி நிற்கின்றாயோ?
ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன
அபிஷேகமில்லை சுத்திகரிப்பான்தான்!
அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
அத்தொல்லையுணர்ந்தாவது வேல் கொண்டு விரட்டி
அடித்துத் துரத்த மாட்டாயா கொரோனாவை…?

கருத்துச் செறிவான தம் கவிதை மலர்களால் தமிழவேள் முருகனுக்கு அணிசெய்திருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள்; அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

முப்பாட்டன் முருகனுக்கு அரகரோகரா – எங்க
முத்துக் குமரனன்றோ அரகரோகரா!
எப்பாடு பட்டாச்சும் அரகரோகரா – எங்களை
எலக்ஷனிலே வெல்ல வைப்பாய் அரகரோகரா!

ஊர் முழுதும் சுத்தி வந்தோம் அரகரோகரா – எமக்கு
ஒரு வழியும் தெரியலையே அரகரோகரா!
தேரிழுத்தும் நாம் வருவோம் அரகரோகரா – எங்களைத்
தேர்தலிலே ஜெயிக்க வைப்பாய் அரகரோகரா!

வேலெடுத்து நாம் வருவோம் அரகரோகரா – எமக்கு
வெற்றியை நீ தந்திடுவாய் அரகரோகரா!
காலலுக்க நடக்கின்றோம் அரகரேகரா – எங்க
கட்சியை நீ வெல்ல வைப்பாய் அரகரோகரா!

கள்ளவோட்டுப் போட்டாலும் அரகரோகரா – எங்களைக்
காட்டி நீயும் கொடுத்திடாதே அரகரோகரா!
வெள்ளமென ஓட்டு வந்து அரகரோகரா – எமக்கு
விழுந்திடவே வேண்டுமையா அரகரோகரா!

அரவிந்த மலரெடுத்து அரகரோகரா – உனக்கு
அர்ச்சனைகள் செய்திடுவோம் அரகரோகரா!
தரவேண்டும் ஆதரவை அரகரோகரா – எங்கும்
தாமரையே பூக்க வேண்டும் அரகரோகரா!

வெற்றிவடி வேலவனே அரகரோகரா – எமக்கு
வேறுவழி இல்லை ஐயா அரகரோகரா!
பொற்பாதம் பணிந்து நின்றோம் அரகரோகரா – நாங்கள்
போடும் வேஷம் வெல்ல வேண்டும் அரகரோகரா!

அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்காக முருகனின் பெயராலே செய்யும் வேடிக்கை விநோதங்களைத் தம் பாட்டில் நயம்பட நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

  1. நான் சற்றும் எதிர்பாராத வகையில் எனது கவிதைக்காக என்னை வாரத்தின் சிறந்த கவிஞரென்று பாராட்டியிருக்கும் நடுவர் மேகலா இராமமூர்த்திக்கும் வல்லமை குழுமத்திற்கும் பணிவான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ஏனைய கவிதைகளை எழுதிய நண்பர்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *