படக்கவிதைப் போட்டி – 286

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை அவரது ஃபிளிக்கர் பக்கத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
பறக்காதே…
ஆசை மனிதனுக் கதிகம்தான்
அளவோ டிருந்தால் வெற்றியேதான்,
ஆசைப் பட்டே வான்பறக்க
அழகாய்ப் பறக்கிறான் விமானத்தில்,
மோசம் வந்திடும் மனிதனவன்
முகிலுடன் பறக்கத் தான்சென்றால்,
காசு பணத்தின் ஆசையிலே
காற்றாய்ப் பறந்தே அழிகிறானே…!
செண்பக ஜெகதீசன்…
எச்சரிக்கை
உள்ளம் களிப்பு
கொள்ள
உடல் உயரே
துள்ள
எள்ளளவும் பயம் இன்றி
ஏனிந்த குதியாட்டம் வாலிபனே?
தூரத்து நீலவானைத்
தொட்டு விடும் முயற்சியில்
ஆரம்பத்து வெற்றி கண்ட
ஆனந்தக் கொண்டாட்டமோ!
7.5 %இட ஒதுக்கீட்டில்
இலட்சங்கள் செலவில்லாமல்
இடம் கிடைத்த மகிழ்ச்சியோ!
ஈராண்டாய் காதலித்துப்
போராடி பலனின்றி
இதயம் மிக கனத்த வேளை
இருவீட்டார் சம்மதத்தால்
எழுந்தது இந்த களிப்பாமோ!
வருத்திடும் கொரானா நோயினை
எதிர்த்திடும் தடுப்பூசிக்கு
மருத்துவ அங்கீகாரத்திற்கான
மகிழ்ச்சியின் வெளிப்பாடோ!
எல்லையில்லா மகிழ்ச்சியில்
இதயம் திளைத்தாலும்
எச்சரிக்கை இல்லாது
எழும்பி உயர குதித்து.
வழுக்கும் பாறையில் அடிபட்டு
வாழ்க்கையை
நரகமாக்கிடாதே வாலிபனே!
கோ சிவகுமார்
மண்ணிவாக்கம்
வானத்தைத் தொடப் பறக்கிறாயா
இல்லை உன்னுடனே அழைத்து வர துடிக்கிறாயா?
வானமே எல்லைதான்
வானவில் அதன் அங்கம்தான்
நட்சத்திரக் கூட்டமும் அதிலுண்டு
சந்திர சூரியரரும் அதில் உலா வருவர்
அவர்களையும் பிடித்து வா
மேகங்கள் உனை மூழ்கடிக்கும்
உலகமே உன் கையிலெனத் தோன்றும்
உயரஉயரப் பறந்து போ
பட்சிகளாய் மாறு
பரவச வானம் உனது தான்
சுதா மாதவன்
துள்ளிக் குதித்து வானம் தொட்டு
உள்ளம் உவந்துக் களித்திருக்க
நித்தமும் ஏங்கித் தவித்திருந்தால்
இன்பம் கிட்டிட வாய்ப்பு இல்லை
வெள்ளத்தளவே மலர் நீட்டம் என்று
வள்ளுவம் கூறும் கூற்றைப் போல்
தெள்ளிய சிந்தையின் வழிவந்த
தன் திறம் இன்றி தந்திரம் இல்லை
வெள்ளை மனமும் கருணைக் குணமும்
உள்ளவர் இன்பம் அழிவதில்லை
கள்ளும் கயமையும் தந்திடும் களிப்பு
காலம் முழுவதும் தொடர்வதில்லை
தொல்லிய பெரியோர் உரைத்தது போல்
நல்லறம் செய்து உய்தலன்றி
இந்திரன் உலகம் எட்டிடவே
மந்திரம் ஏதும் இங்கு இல்லை
துங்கிய விழிகள் துடித்து விழித்தன
ஏங்கிய மனது எட்டித் தாவியது
ஓங்கிய வானம் விட்டு விலகி விரிந்தது
எங்கும் இல்லை எனக்கு எல்லை
சிறகில்லை ஆயினும் என்ன
சிறகானது கரம் இரண்டும்- விரியட்டும்
சிறு முயற்சி தானே சிக்கினால் சிகரம்
சிக்காது சறுக்கினால் பயிற்சி
வெளியே வழியாய் ஒளியே துணையாய்
வளியோடு வளியாய் ஒலியால்லா மொழியில்
விழியின் வழியே விழுங்கி அழகினால்
களிகொண்டு துள்ளி திரிய துணிந்தேன்
எட்டாதன எல்லாம் கிட்டும்
கிட்டாதன எல்லாம் எட்டும்
விடாத முயற்சியின் வினையால்
விடை பெறட்டும் அயற்சி
விண்ணளக்கும் நம்பிக்கையோடு
விசையுடைய நரம்புகள் இணையட்டும்
விதைபிளந்த விளைபயிர் முனை போல எழு
விரிவானும் விளையாட்டு களமாகட்டும்
நீல வான்னும் நீட்டும் நீண்ட கரம்
நிலவும் கூட நீ வா என விழி சிமிட்டும்
நிலமகளோ எனை ஏற்றிவிடுவாள்
நீ சாதிக்க பிறந்தவன் என்றே
யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679basgee@gmail.com
noyyal.blogspot.com