-மேகலா இராமமூர்த்தி

ஒளிப்பட நிபுணர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்துள்ள இப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 280க்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

மும்மூர்த்திகளெனத் தரையில் அமர்ந்திருக்கும் இம்முதியவர்களின் நிலையைக் காண்கையில் வருத்தம் மேலிடுகின்றது. நடுவிலிருப்பவர் சங்கொலி எழுப்புவது தம் துயரத்தைச் சிறுபொழுதேனும் அச் சங்கொலியில் சங்காரம் செய்யத்தானோ?

இப்படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளிவழங்க நம் கவிஞர்பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்! அவர்களை வரவேற்போம்!

*****

கையில் செல்போன் உடையவர் அறிவிப்பது அன்றைய கலெக்சனையா?
அருகிருக்கும் ஐயர் சங்கினை ஊதுவது சில்லறை சேர்த்திடவா? பையினைக் கையால் அணைத்திருப்பவர் பார்ப்பது முன்வரும் கிராக்கியையா? என்று வினாக்களை விவரமாகத் தொடுக்கின்றார் திரு. கருணானந்தராஜா.

யாரிவர்கள்?

கையினில் செல்போன் உடையவரோடு
கதைப்பது யாரவரின் சதியா?
ஐய இதென்ன அவர்அறி விப்பது
அன்றைய நாளின் கலெக்ஷனையா?
ஐயரிருந்துவெண் சங்கினை யூதி
அழைப்பது சில்லறை சேர்த்திடவா?
பையினைக் கையால் அணைத்திருக்கும் நபர்
பார்ப்பது முன்வரும் கிராக்கியையா

கையில் குறைகள் தெரியவில்லை அந்தக்
கால்களில் சோர்வா புரியவில்லை
மெய்யினிலே குறை யாதுமில்லை – அவர்
மேனியுறுதி தளரவில்லை.
உய்யும் வகைக்கவர் தேர்ந்தெடுத்த – இந்த
உழைக்கும் வழிக்கென்ன காரணமோ?
பையன்கள் பெண்கள் அன்னவரின்முது
மையை நிராகரித் திட்டனரோ!

தூரத்துரத்தி தெருவினில் விட்டு
துரோக மிழைத்தவர் பிள்ளைகளோ! – இல்லை
யாரும் சதமல்லவென்று உணர்ந்து தம்
ஊரைவிட்டேயிவர் வந்தனரோ!
வேரைப்பிடுங்கித் தம் பாசமறுத்து
வெளிக்கிட்டுவிட்ட நிலையிதுவோ – இந்தப்
பாரினில் யாதும் தம் ஊரெனும் நோக்கில்
பரதேசி வாழ்வினைத் தேர்ந்தனரோ!

*****

”கண்டதே காட்சி; கேட்பதே செய்தி என்று நம்பி அரசியல் வாணிகப் பாம்புகளின் ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு மயங்கி மதிகெட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!” என்று இன்றைய மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

கண்டதே காட்சி…
காண்பதே உண்மை…
கேட்பதே செய்தி …
– என்று
சொன்னதை நம்பி
தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
வாழ்வியல் செய்திகளை,
சமூக நிலைமைகளை,
சரித்திர உண்மைகளை
மூடி போட்டு மறைத்து வைத்து
வணிகச் செய்திகளை
வறட்டு விவாதங்களைப்
பசப்பு வார்த்தைகளைப்
படாடோப விளம்பரங்களை
வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
உண்மை என்று வாழ்ந்து
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் வாழுகின்றோம்
சொந்தங்களை இழந்துவிட்டு
அநாதையாய் இருக்கின்றோம்!

அரசியல் வாணிகப் பாம்புகளின்
ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
மயங்கி மதிகெட்டு நிற்கும்
பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!

*****

”இங்கே அமர்ந்துள்ளவர்கள் சித்தர்களா? பசிப்பிணியாலான பித்தர்களா? குழப்பம் நீங்க விளக்குங்கள்!” என்று வினவுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

சங்கினைத் துணைக் கொண்டு
கோவில் வாயிலில் அமர்ந்து
சாப்பாட்டிற்கான உத்தியாகச்
சரித்திரம் உருவாகிறதா?

ஆலயத்தினுள் தான் முழங்க வேண்டி
முன்னோர்கள் வகுத்த வழி
ஆலயத்திற்கு வெளியே வந்ததன்
விந்தைதான் என்ன?

யாசகம் கேட்பதற்குச் சங்கு
இதுவோ வரிசைகட்ட!
அமர்ந்துள்ள சித்தர்களா…
இல்லை பசிப்பிணியாலான பித்தர்களா?

விளக்குங்கள்
அதிகரிக்கும் குழப்பங்கள்
சங்கே நீ முழங்கு
சங்கே நீயே முழங்கு!

*****

”பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி பெற்றவரை விட்டுவிட்டுத் தனம்
பெறப் பரதேசம் போனதனால் பெற்றவர்கள் பெற்றது இந்தப் பரதேசிக்கோலம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
ஆடல் வல்லான் ஆலய வாசலில்
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

நீறு அணிந்த பிறை நெற்றி
நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
நிறம் கருத்த நெடு மேனி
வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
பெறப் பரதேசம் போனதனால்
பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

உற்ற துணை யாரும் இல்லை
உறுதுணையாக வரும்
உறவுகள் ஏதுமில்லை – புது
உறவு உருவானது புண்ணிய பூமியில்!

முதுமையின் முடியாமையால்
முயல்வதற்கு இயலாமையால்
மூவரும் மூலவரை நோக்கி
முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

சங்கொலி முழங்கிச்
சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
சங்கரனே சற்று இரங்கிடு!
சங்குப்பால் குடித்தவர்கள்
செவியில் இதைச் சேர்த்திடு!

கோயில் வாயிலில் அமர்ந்திருக்கும் இம் முதியவர்களின் பரிதாப நிலை நம் கவிஞர்களின் பாக்களில் சோக ரசத்தை இழையோட விட்டிருக்கின்றது. எவ்விதச் சுவையையும் அழகாய் வெளிப்படுத்தும் உங்கள் அரிய ஆற்றலைப் பெரிதும் போற்றுகின்றேன் கவிஞர்களே!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பாடமாக…

சமூக இடைவெளி
சற்றுக் கூடுதலாகிவிட்டது,
பெற்று வளர்த்துப்
பேணிக்காத்தவர்கள் வயதில்
பெரியவர்கள் ஆனதும்
தெருவில் நிற்கிறார்கள் அல்லது

தேடிச் செல்கிறார்கள்
முதியோர் இல்லங்களை…

வேலை செய்ய இயலாதபோது
வேடங்கள் போட்டு
ஓடவிடுகிறார்கள் பசியை…

வழிபாட்டுத் தலங்ளில்
வழிமறிக்கும் சாமிகளெல்லாம்
முற்றும் துறந்தவரல்லர்,
முழுதும் மறக்கப்பட்டவர்கள்…

இளைஞர்களே
எண்ணிப் பாருங்கள்!
முதுமைவரும் உங்களுக்கும்,
உதறிடாதீர் பெற்றோரை-
உங்கள் பிள்ளைகள்
பார்த்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பாடமாக…!

”வழிபாட்டுத் தலங்களில் வழிமறிக்கும் சாமிகள் எல்லாரும் முற்றும் துறந்தவரல்லர்; முழுதும் மறக்கப்பட்டவர்கள்” என்ற உண்மையை உணர்த்தி, ”முதுமை உங்களுக்கும் வரும் இளையோரே; உதறிடாதீர் பெற்றோரை! உங்கள் பிள்ளைகளுக்கும் அதுவே பாடமாகும்” என்ற வாழ்வியலையும் சேர்த்தே நினைவூட்டியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

Leave a Reply

Your email address will not be published.