-மேகலா இராமமூர்த்தி

கூரிய அலகும் விரிந்த குடைபோன்ற சிறகுகளுமாய் வானில் வலம்வரும் நாரையை நளினமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கப்பட்டிருக்கும் படமிது. ஒளிப்படக் கலைஞருக்கு என் நன்றியை அளித்து மகிழ்கின்றேன்.

தமிழரைத் தலைநிமிரச் செய்யும் சிறப்பமை சங்கப் பாடல்களில் பறவைகள் பலவற்றின் இயல்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

”அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும்
தடந்தாள் நாரை” (குறுந்: 349) என்று அடும்பின் கொடியிடத்தே மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து ஆர்வமாய் மீனருந்தும் வளைந்த காலுடைய நாரையைப் பற்றிப் பேசுகின்றது குறுந்தொகைப் பாடலொன்று!

நீர்நிலைகளையும் காடுகளையும் மனிதர்கள் தம்முடைய குடியிருப்புகளுக்காகத் தொடர்ந்து அழித்துவருவதனால் காட்சிக்கினிய பறவையினங்கள் உணவையும் உறைவிடத்தையும் இழந்து தவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் வருங்காலங்களில் பறவையினங்களை நாம் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே காணமுடியும் எனும் அவலநிலை வாய்த்துவிடும்!

இதோ…சிறகுவிரித்துப் பறந்துவரும் எழிற்பறவையைப் பிடித்துத் தம் பாட்டெனும் கூட்டிலடைக்க நம் கவிஞர்களும் கற்பனைச் சிறகுகளோடு காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

*****

”குஞ்சுகளுக்கு இரைதேடிச்சென்ற பறவை திரும்பிவந்தபோது தன் கூடிருக்கும் மரம் மனிதனால் வெட்டப்படாதது கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டது” என ஏற்கனவே மனிதனால் கூட்டையும் குஞ்சுகளையும் இழந்த பறவையின் பதைபதைப்பைக் காட்சிப்படுத்தியுள்ளார திரு. செண்பக ஜெகதீசன்.

மாறுவானா…

குஞ்சுகளுக்கு இரைதேடிய
பறவை
கூட்டை நாடி வந்தது..

நெடுந்தூரம் பறந்த
களைப்பிலும் விட்டது
நிம்மதிப் பெருமூச்சு-
கூடிருக்கும்
மரம் இருக்கிறது
மனிதனால் வெட்டப்படாமல்…

முன்பு
கூட்டோடு குஞ்சுகளோடு
மரம் வெட்டப்பட்டது
மறக்கவில்லை பறவைக்கு,
மனம் குமுறுகிறது
மனிதனை நினைத்து..

மனிதன் ஏன் இப்படி
மாறிவிட்டான் இப்போது-
தன்னினம் அழிக்கிறான்,
தாயாய் உதவும்
இயற்கையை அழித்து
எங்களை வாட்டுவதுடன்
தனக்கும்
தேடுகிறான் கேடு..
மாறுவானா மனிதன்…!

*****

”உட்கார்ந்து ஓய்வெடுக்க மரம் கிடைக்காதா என்றெண்ணி நீ ஏங்கிய வேளையில் மரத்தினை உன் கண்ணில்காட்டிய இறைக்கு நன்றிசொல்!” என்று பறவைக்கு அறிவுறுத்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

பட்ட மரமும் பறவையும்

விட்டுவிட்ட உறவுகளால்
விரக்திதனை மிக அடைந்து
எட்ட எட்டப் பறந்து
எங்கெல்லாமோ திரிந்து
சுட்டுப் பொசுக்கும் வெயிலால்
சோர்வடைந்த பறவையே!

உட்கார்ந்து ஓய்வெடுக்க
ஓரிடம் கிடைக்காதா என்று
கஷ்டம் கண்டு மனமிரங்கும்
கடவுளிடம் முறையிட்டாயோ நீ!?

பட்டமரக் கிளையொன்றை
உன் பார்வையிலே பட வைத்துக்
கஷ்டமதைத் தீர்த்து வைத்த
கடவுளுக்கு நீ நன்றி சொல்!

எந்தக் கவலையானாலும்
இறைவனிடம் சரணடைந்தால்
வந்த கவலை தீரும்
வழி ஒன்று பிறக்குமென்று
இந்தப் படம் விளக்கும்
விந்தை கண்டு வியக்கின்றேன்!

*****

அந்நிய தேசத்துப் பறவையின் வாயிலாய் இந்திய நாட்டின் சிறப்புகளை, தனித்தன்மையினை விரிவாய்ப் பேசவைத்திருக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

அந்நிய தேசத்துப் பறவை நான்
இந்திய தேசத்தில் தான்
எத்தனை எத்தனை விதமாக
வேறுபாடுகள் இருக்கின்றன!

அத்தனை வேறுபாடுகள்
இத்துணைக் கண்டத்தில்
இந்தியன் ஒற்றைச் சொல்லில்
இமயம் முதல் குமரி வரை
கட்டுண்டு இருக்கும் அழகு
உலகில் எங்கும் காண முடியாது!

சுதந்திரமான பறவை நான்
அதேபோல்
சுதந்திரமான
மக்கள் இந்திய மக்கள்!

கருத்துச் சுதந்திரம்
பத்திரிகைச் சுதந்திரம்
தனிமனிதச் சுதந்திரம்
பேச்சுச் சுதந்திரம்
எழுத்துச் சுதந்திரம்
மாபெரும் ஜனநாயக நாடு!

இந்தியனின் அறிவு
இதனாலே செறிவு!

சிந்தனைக்கு
எழுத்தாற்றலுக்கு

இந்த மண்ணில் தான்
சுதந்திரம்
பறவையாகிய
என்னைப் போல!

சுதந்திர இந்தியா காண
எத்தனை எத்தனை
உயிர்த் தியாகங்கள்!

பெருமைப் படு
இந்த மண்ணில்
பிறந்ததற்கு!

பெருமைப் படு
இந்த மண்ணில்
வாழ்வதற்கு!

பெருமைப் படு
இந்த மண்ணில்
மீண்டும் பிறப்பதற்கு!

சுதந்திரத்தின் மகிமை
சுதந்திரத்தின் அருமை
குடிமக்களுக்குத்
தராது
வல்லரசு என்றால்
அங்கே எங்கே
தனிமனிதச் சிந்தனை
தலைசிறந்து விளங்கும்??

உலகிலேயே
சுதந்திரமாகப்
பறவை போல்
வாழ்பவர்கள்
கருத்துச் சுதந்திரத்தில்
இந்தியர்களே!

******

”உறுமீனைக் கண்டறிந்து, காலமும் தானறிந்து இலக்குநோக்கிப் பாய்வோரே திறன்வாய்ந்த செயல்வீரர்” என்று மனிதர் வாழ்வில் வெற்றிபெறும் வழியைப் பறவையின் பண்பைவைத்து விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

செயல்வீரர்

உறுமீனைக் கண்டறிந்து
இலக்கு நோக்கிப் பாய்ந்து
வான் நோக்கி மீண்டெழுந்து
இரை தேடும் பறவையெனக்
காலமதைத் தானறிந்து
கனியும்வகை தெளிந்து
காரியங்கள் செய்திடுவார்
திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

கொட்டும் மழை பொய்த்ததென
வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
கால்வாய் வெட்டிக் கழனி திருத்தி
நிலம் கொழிக்க வழி செய்வார்!
பட்டினியால் வாடினாலும்
விதைநெல்லைச் சேர்த்துவைத்து
வருங்காலச் சந்ததிக்கு
வாழ வழி செய்திடுவார்!

எதிர்காலம் கனவென்று
எதிர்வாதம் செய்துவிட்டு
நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
வேதாந்தம் விட்டுவிட்டு
வருங்கால வெற்றிக்குத்
திட்டங்கள் தீட்டிவைத்து
முயலாமை தனை விழுங்கி
முன்னேற்றப் பாதையிலே
சிறகடித்துப் பறந்திடுவர்!

*****

பறவையைக் கண்ட அறிவியல்வல்லார் விமானத்தைப் படைத்தனர்; கற்பனைவல்லாரான  நம் கவிஞர்களோ வாழ்வியல் உண்மைகள் பேசும் கவிதைகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

நல்ல பண்பு

நாடு விட்டு நாடு வந்து
கூடு கட்டும் பறவையே!
கூடு கட்ட இடம் தந்து
குஞ்சுகளையும் காத்த மரம்
காடு கண்ட காட்டுத்தீயால்
கட்டையான சேதி கேட்டு
நாடு விட்டு நாடு வந்து
நலம் விசாரிக்க வருகின்றாயோ
நன்றிதனை மறவாமல்!?
நாட்டில் வாழும் மனிதரும்
காட்டத் தயங்கும் பண்பினைக்
கூட்டில் வாழும் பறவைக்கு
கொடுத்தது அந்த இறைவனோ!?

”கூடுகட்ட இடம் தந்த மரம் காட்டுத்தீயால் கருகியதுகண்டு மனங்கசிந்த இப்பறவை, அம்மரம் நாடி வந்தது நலம் விசாரிக்க!” என்று மனிதரிடத்தும் காணவியலாத பறவையின் நன்றியறிதலைக் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

  1. இந்த‌வார‌ சிறந்த‌ கவிஞராகத் தேர்ந்தெடுநத்தமைக்கு நன்றி.
    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    கோ சிவகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *