அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

எம்.மோகன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 277

 1. அளவோடு…

  அருவி நீரது குளித்திட மட்டுமே
  அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
  பெருமை மிக்கது சாதனை செய்தல்
  பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே..

  அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
  அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
  துச்ச மாக எதையும் எணாமல்
  துணிந்து தெளிந்து செயல்படு நீயே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. தற்காத்தலே தகவுடமை

  பொங்கிப் பொழிந்த கார் மழையால்
  பொங்கி வழியுது பாறையில் பாலருவி
  தேங்கிய சுனை நீரில் வெம்மை தனிக்க
  ஏங்கிய இளமை எட்டி தாவுது

  எல்லையில்ல துணிவே
  எமனாகலாம் எச்சரிக்கை!
  களிப்புடன் குளிக்க வந்த இடமே
  காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

  வழுக்குப் பாறை நீரோட்டம்
  வாழ்வை வழிமாற்றிடும்- உடன்
  வந்த நட்புகளுக்கு வழக்கானால்
  வாழ்வே போராட்டம் ஆகிடும்

  நீராடல் ஒரு கலை நீ நின்றாடு
  நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
  நீ விழிப்போடு களித்தாடு விழி
  நீர் வழிய வினை செய்யல் ஆகாது

  நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
  நிலையுயர்த்தும் இளமை அலை
  நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
  நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு

  தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
  தான் உனை நம்பியுண்டு – பயமறியா
  தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடமை
  தவறில்லா குறள் நெறி கொள் வாழ்வை வெல்

  யாழ். பாஸ்கரன்
  ஓலப்பாளையம்
  கரூர்- 639136
  9789739679
  basgee@gmail.com
  noyyal.blogspot.in

 3. படக்கவிதைப் போட்டி 277

  தண்ணீரின் வேகம் அதிகமா?
  உன் கால்களின் பாய்ச்சல் அதிகமா?
  இரண்டுமே ஒன்றோடொன்றுப் போட்டி
  வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்

  ஆற்று நீரோ அருவி நீரோ
  கடல் நீரோ கிணற்று நீரோ
  இதில் குளியல்கள்
  என்னவொரு சுகம்
  கிராமத்துப் பொக்கிஷங்கள்
  உடல் நலம் சிறக்கும் சாதனங்கள்

  தோழர்களுடன் பாய்ந்தடிக்கும்
  நீச்சல் ஒரு அருமைதான்
  பாடிபாடி கைகள் அடித்தெழ
  பாடல் கோடி பிறக்குதாம்

  இந்த சுகம் எதிலுமில்லை
  இளைஞனே நீ நீச்சலடித்தெழு
  தங்கப்பதக்கம் வாங்கிவாங்கி
  தாய்நாட்டிற்கே குவித்து விடு

  சுதா மாதவன்

 4. இளமையே நீ தாவி வா!

  தரையிருந்து வான் எட்டி
  மலை முகடு வழியிறங்கி
  தாவிக் குதித்தோடிக்
  கடும் பாறைச் சமமாக்கி
  பூமிவளம் தான் பெருக்கி
  குளிர்விக்கும் நீர்ப்போல
  தாயின் மடி குடியிருந்து
  தந்தைத்தோள் சேர்ந்து
  தன் காலில் தான் நின்று
  தரைமீது நடைபயின்று
  துள்ளிக் குதித்தோடி
  பழமைக் கறைக் களைந்துப்
  புதுப் புனல் பொங்கு நீராடிட
  இளமையே நீ தாவி வா!

Leave a Reply

Your email address will not be published.