-மேகலா இராமமூர்த்தி

பொய்க்கால் குதிரையில் சவாரி செய்யும் தலையாட்டி பொம்மைகளை அழகாகப் படம்பிடித்து வந்திருக்கின்றார் படக்கலை வல்லுநர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இந்தப் படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. படக்கலை வல்லுநருக்கு என் நன்றி!

சாய்த்துத் தள்ளினாலும் கீழே விழாமல் நேராக நிற்கும் வகையில் அற்புதமாய் உருவாக்கப்படும் இந்தத் தலையாட்டி பொம்மைகள், தஞ்சைத் தரணியின் கலைப் பாரம்பரியத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த கலைஞர்களின் தொழில்நுட்பத் திறனையும் பாருக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இப்பொம்மைகளுக்கான வரவேற்பு தற்காலத்தில் மக்களிடம் குறைந்துவருவது வேதனைக்குரியது. இந்த அரிய கலையை நாம் ஊக்குவிக்காவிட்டால் தலையாட்டி பொம்மைகள் வணிகம் தள்ளாட்டத்தைச் சந்திப்பதோடு இக்கலையும் நசிந்துபோகும். அந்நிலை ஏற்படாவண்ணம் இக்கலையையும் கலைஞர்களையும் காப்போம்!

இனி, இந்தப் பொம்மைகள் குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்று அறிந்து வருவோம்!

*****

”கிராமக் கலைகளெல்லாம் வளர்ச்சிகுன்றி அழிவதைத் தடுத்து அவற்றை வளர்ப்பீர் உலகத்தீரே!” என்று நற்கலைகள் வாழ வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நலியும் கலைகள்…

ஆடும் கலையின் பொம்மைகள்
ஆட்டம் நின்ற நினைவுகள்,
கூடும் கூட்டம் போனதுவே
குறைந்து விட்ட கலையாலே..

வளர்ந்த கிராமக் கலையெல்லாம்
வளர்ச்சி குன்றி அழிகிறதே,
உளத்தில் கொள்வீர் உலகுளோரே
உண்மைக் கலைகள் வளர்ப்பீரே…!

*****

”கடைத்தெருவில் நிறக்குமிழிப் புட்டிகளுக்குக் கிட்டிய ஆதரவு இந்தப் பொம்மைகளுக்குக் கிட்டாததால் அவை ஓர் ஓரமாய்த் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன” எனத் தலையாட்டி பொம்மைகளின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திருமிகு. விஜயகுமாரி.  

பொம்மை

கடைத்தெருவில்
போன வருடச்
சாயலில்லை.
கூடிப்போயிருந்தது
வண்ணமும் விலையும்!
விற்றுத் தீர்ந்தது
நிறக்குமிழிப் புட்டிகள்.
சர்வ லட்சணப்
பட்டாடை உடுத்தி
வெட்கத்துடன்
பொய்க்கால் பூட்டிச்
சலிக்காமல்
காற்றின் வாசிப்பில்
ஒரு ஓரமாய்த்
தலையாட்டிக்கொண்டிருந்தனர்
ஒரு ஜோடி
தஞ்சைத்
தலையாட்டி பொம்மைகள்!

*****

”தலையாட்டி பொம்மைகள் மெய்க்கால்களில் ஆடும் பொய்க்கால் ஆட்டம் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும்” என்று அழுத்தமாய் உரைக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

மெய்க்கால்களில் பொய்க்கால் ஆட்டமா?
பொய்க்கால் இணைத்த மெய்க்கால் ஆட்டமா?
ஒருகால் இருகால் பொய்க்காலாட்டமா?
எக்காலும் ஆடும் மெய்க்காலாட்டமா?

பாரம்பரிய நடனத்தின் சிறப்பாட்டம்
பார்த்து வியக்கும் ஒயிலாட்டம்
கிராமியக் கலைகளில் வியப்பாட்டம்
வண்ண வர்ண நிறத்தில் மகிழாட்டம்

திருவிழாக் காலங்களில் களையாட்டம்
தெருக்கூத்து நடுவினிலும் இவ்வாட்டம்
தமிழகப் பெருமையை இது பறைசாற்றும்
அழிவிலா கலைகளில் இதன் அரங்கேற்றம்
என்றும் நெகிழ்வூட்டும்!

*****

”பொய்க்கால் வாக்குறுதி அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தில்
ஆட்டம் காணப்போவது எதிர்காலத் தலைமுறையே” என்று பொம்மைகளின் பொய்க்கால் ஆட்டத்தை வைத்து நாட்டின் மெய்யான நிலையைப் புலப்படுத்தியுள்ளார் திரு. சீ. காந்திமதிநாதன்.

பொய்க்கால் அரசியல்வாதிக் குதிரைகள்!

தேர்தல் நேரத்தில்
பொய்யான வாக்குறுதிகள்!
ஆட்சி அதிகாரத்தில்
அதிகப்படியான ஊழல்கள்!

மக்கள் வரிப்பணத்தில்
உருப்படாத திட்டங்கள்!

பொய்க்கால் குதிரைகள்
ஆட்டம் கண்டு இரசிக்கலாம்

பொய்க்கால் வாக்குறுதி
அரசியல் வாதிகள்
ஆடும் ஆட்டத்தில்
ஆட்டம் காணப் போவது
எதிர்காலத் தலைமுறையே!

தொலைநோக்குச்
சிந்தனை இல்லை!

நீர்நிலைகள் தான்
உயிர் நிலைகள்
காக்கும் வகையில்
செயல் திட்டங்கள் இல்லை!

உழைக்கும் கரங்கள்
பிழைக்கும் வகைகள்
பிழையான திட்டத்தில்
திசை மாறும் பயணத்தில்

வரவினைப் பெருக்கும்
வகையேதும் அறியாது
பற்றாக்குறை நிதியில்
அரசாங்கம் பயணித்தால்
பொருளாதார வளர்ச்சி
நிரந்தரத் தளர்ச்சி!

பொய்க்காலைத்
தூக்கி எறியுங்கள்!
உண்மை நிலையை
உணர்த்தி விடுங்கள்!

நொண்டிக் கொண்டு
திணறிக் கொண்டு
அரசு பயணிக்கிறதென்று

உள்ள நிலையை
உண்மை நிலையை
உரைக்கும் கலையை
உரைக்காது
பொய்க்கால் குதிரைகள்
போல் வேண்டாம்
வெளி ஆட்டம்!

*****

”தொல்கலைகள் யாவுமிங்கு தொலைந்தழிந்தே போனதனால்
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது!
இந்நிலை மாறுமா?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

வண்ண வண்ண உடுப்புப் பூட்டி
சின்னச் சின்ன ந(கை)டை போட்டு
மின்ன மின்ன பொய்க் கால் குதிரையேறி வரும்
கண்ணழகு இராசனுக்கும் இராசாத்திக்கும் வணக்கம்!

மழலையர்க்கு மரப்பாச்சி
மங்கையர்க்குப் புனைபாவை
மனைவியர்க்குத் தலையாட்டி அவள்
மன்னவர்க்குக் கைப்பாவை என

மணிக் கையாலே மண்ணெடுத்து
மந்திரத்து உழைப்பாலே
மனிதன் படைத்துவிட்டான்
மயக்கவைக்கும் பொம்மைகளை!

பாவைக் கூத்தினிலே அவனுக்குப்
பாராளும் மன்னர் வேடம்!
பசியின் கூத்தில் அவனுக்குப்
பட்டினியால் வாடும் பரதேசிக்கோலம்!

படைத்தவன் வாழ்கையின்று
பச்சை மண்பானையாய் உடைந்து போனது!
பார்த்திருந்த விழிப் பாவைகள்
பழுது பட்டு நிறக்குருடாய் ஆனது!

தொல்கலைகள் யாவுமிங்கு
தொலைந்தழிந்தே போனதனால்
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது
இந்நிலை மாறுமா?

*****
தலையாட்டும் பொம்மைகளை வைத்துத் தலைசிறந்த கருத்துக்களைக் கவிதைகளாய் உதிர்த்திருக்கும் கவித் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

தலையாட்டி பொம்மைகள்!

மந்தை ஆடுகளாய்
மதியில்லா மாடுகளாய்
சுயம் கெட்டுச்
சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
சூத்திரங்கள் அழித்துவிட்டு
எடுப்பார் கைப்பிள்ளையென
ஏவல்கள் செய்திருந்து
விதியை தினம் நொந்து
வீண் பொழுது போக்கிவிட்டுத்
தன்னம்பிக்கை ஏதுமின்றித்
தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
தாளத்திற்கு ஆடிவிட்டு
வேரறுந்த விருட்சமென
வீணாகி வீழ்ந்துள்ளோம்…

அறிவுக் கண் திறந்து
அறப்பொருளைத் தானுணர்ந்து
உண்மையை உணர்ந்தறியும்
உன்னத ஞானம் தரும்
நற்கல்வி தேடிக் கற்று
எல்லோரும் மன்னரென்ற
மக்களாட்சித் தத்துவத்தின்
மாண்பதனை மீட்டெடுப்போம்!

”தன்னம்பிக்கை ஏதுமின்றிப் பிறர் தாளத்திற்கு ஆடும் தலையாட்டி பொம்மைகளாய் வாழ்வதை விடுத்து, நற்கல்வி பயின்று எல்லோரும் மன்னரென்ற மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை மீட்டெடுப்போம்” என்று சுந்தரமொழிகளில் சூளுரைத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *