படக்கவிதைப் போட்டி – 279
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (11.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
வேண்டாம் அங்கு…
வானில் மேகம் திரண்டுவந்து
வையம் நனைய மழைபெய்தால்
கோனி லிருந்து குடிகள்வரை
கும்பிட் டேத்துவர் மகிழ்ச்சியிலே,
தானியம் போலிலை உப்பதுவே
தண்ணீர் பட்டால் கரைந்திடுமே,
மேனி யுழைப்போர் உப்பளத்தில்
மேகம் கண்டால் பதைப்பாரே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதைப் போட்டி 279
இருவர் தூக்கியும் சுமையின் பாரம்
குறையவில்லை
வாழ்க்கையின் பாரமும் அதுதானே
வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்
எத்தனையெத்தனை இன்னல்கள்
அத்தனையத்தனை பாரங்கள் பிறகு
வந்தனவந்தன இன்பங்கள்
வாழ்வின் நிதசுகத்தருணங்கள்
மழலைகளைத் தூக்கினோம் உப்புமூட்டை
உழைக்கும் வர்க்கமென பலமூட்டை
புடைக்கும் நரம்பதிற் உடற்கூட்டை
இறுதியில் நம்மீது அடுக்கிடுவர் மணற்மூட்டை
மொத்தத்தில் பாரம் சுமந்திட மனிதனன்றோ
வாழ்க்கையின் பாடமும் அதுவன்றோ
சுதா மாதவன்
உப்பும் மேகமும்
ஆழக் கடலில் தான் விளையும்
ஆதவன் அருளால் உரு கொள்ளும்
கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
கொட்டும் மழையில் கரைந்து போகும்
மானுடனின் பசிதீர தான் கரையும்
வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
களவுசெய்ய ஒன்னாப் பெருஞ்செல்வம்
படிக வடிவில் உருவானப் பெட்டகமாம்
உப்பும் முகிலும் உலகம் காக்கும்
பகலவன் பார்வை பட்டு
பாற்கடலின் பரந்த கரை மடியில்
படிகம் படிகமாய் படிந்த
படியலின் பளிங்கு குவியல்
அவியல் முதல் பொரியல் வரை
அறிவியல் முதல் ஆன்மவியல் வரை
அலைகளின் உவர்ப்பு நீருக்குள்
அடங்கிய உப்புக்குள் அடக்கம்
கூடை நிறைய வெள்ளை உப்பு
கூட்டு உழைப்பில் விளைந்த உப்பு
நாட்டுக்கு விடுதலை நல்கிய உப்பு
நம்ம காந்தியார் காய்ச்சிய கல்உப்பு
உப்பளத்தில் உழைத்து உழைத்து
அப்பளமாய் ஆன உடம்பின்
உப்பு வியர்வை உரமானது
உப்பு நீர் கடலுக்கு உயிரானது
வெண்மேகம் தாலாட்டுமா இங்கு
வெயில் சுடும் தேகம் நீராடுமா
கைகள் இணைந்து சேராமல் போனால்
மெய்யுடல் ஒருவேளை பசியாறுமா
வானமே எங்கள் எல்லை
வாய்ப்புகளை என்றும் நாங்கள் நழுவவிட்டதில்லை
வல்லமையோடு வலிமை கொண்டு உழைத்தால்
வாழ்வில் என்றும் இல்லை தொல்லை