-மேகலா இராமமூர்த்தி

உச்சியிலிருந்து வீழும் அருவிக்குப் போட்டியாய் நீரில் குதித்துக்கொண்டிருக்கும் பயமறியா இளங்கன்றைத் தம் படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. எம். மோகன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 277க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி உரியது!

அச்சம் என்பது சிறிதுமின்றிப் பாறை உச்சியிலிருந்து நீரைநோக்கிப் பாய்கின்ற இளமையின் வேகம் நம்மை மிரளவைக்கின்றது. கூடவே தொடித்தலை விழுத்தண்டினாரின் சங்கப் பாடலையும் நினைவலைகளில் உருளவைக்கின்றது.

தாம் சிறுவனாய் இருந்தபோது தாழ்ந்திருக்கும் மருதமரக் கிளையிலேறித் ’துடும்’ என்ற ஒலியெழ விரைந்து மடுவில் பாய்ந்ததையும், கரையில் இருந்தவர்கள் அதைக் கண்டு மருண்டதையும் இருமலோடும் இளைப்போடும் தண்டூன்றித் தள்ளாடும் முதுமையில் அசைபோட்டுப் பார்க்கின்றார் இந்தப் புலவர்.

”உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை.”
(புறம் – 243)

சிறுவர்களின் அறியாமை கலந்த அச்சமின்மைக்குச் சான்றாய் இந்தச் சங்கப் பாடலும் இவ்வாரப் படக்கவிதைக்கான படமும் விளங்குகின்றன.

இனி, இப்படத்திற்குப் பொருத்தமாய் நம் கவிஞர்கள் வரைந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம், வாருங்கள்!

”அருவியில் குளிப்பது நல்லதே; ஆனால் உயரேயிருந்து குதிப்பது ஆபத்து என்பதை அறிந்து செயல்படு!” என்று இவ் இளைஞனுக்கு அன்பாய் அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அளவோடு…

அருவி நீரது குளித்திட மட்டுமே
அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
பெருமை மிக்கது சாதனை செய்தல்
பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே…

அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
துச்ச மாக எதையும் எணாமல்
துணிந்து தெளிந்து செயல்படு நீயே…!

*****

”தண்ணீரின் வேகத்தோடு போட்டிபோட்டுக் குதிக்கும் இளைஞனே! தோழர்களுடன் நீந்துவது சுகமானது. நீச்சலடித்துப் பழகிவிடு! அதில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவித்துவிடு!” என்று இளைஞனுக்கு உற்சாகமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

தண்ணீரின் வேகம் அதிகமா?
உன் கால்களின் பாய்ச்சல் அதிகமா?
இரண்டுமே ஒன்றோடொன்று போட்டி
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்!

ஆற்று நீரோ அருவி நீரோ
கடல் நீரோ கிணற்று நீரோ
இதில் குளியல்கள்
என்னவொரு சுகம்
கிராமத்துப் பொக்கிஷங்கள்!
உடல் நலம் சிறக்கும் சாதனங்கள்!

தோழர்களுடன் பாய்ந்தடிக்கும்
நீச்சல் ஓர் அருமைதான்
பாடிப்பாடிக் கைகள் அடித்தெழப்
பாடல் கோடி பிறக்குதாம்!

இந்தச் சுகம் எதிலுமில்லை!
இளைஞனே நீ நீச்சலடித்தெழு!
தங்கப்பதக்கம் வாங்கிவாங்கி
தாய்நாட்டிற்கே குவித்து விடு!

*****

”தாயின் மடி குடியிருந்து, தந்தையின்தோள் சேர்ந்து, தன் காலில் தான் நின்று பழமைக் கறை களைய இளமையே தாவி வா!” என்று இளைஞனை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

இளமையே நீ தாவி வா!

தரையிருந்து வான் எட்டி
மலை முகடு வழியிறங்கித்
தாவிக் குதித்தோடிக்
கடும் பாறைச் சமமாக்கிப்
பூமிவளம் தான் பெருக்கிக்
குளிர்விக்கும் நீர்போலத்
தாயின் மடி குடியிருந்து
தந்தைதோள் சேர்ந்து
தன் காலில் தான் நின்று
தரைமீது நடைபயின்று
துள்ளிக் குதித்தோடிப்
பழமைக் கறை களைந்து
புதுப் புனல் பொங்கு நீராடிட
இளமையே நீ தாவி வா!

*****

இனிய கவிதைகளால் படிப்போர் இதயம் தொட்டிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

தற்காத்தலே தகவுடைமை!

பொங்கிப் பொழிந்த கார் மழையால்
பொங்கி வழியுது பாறையில் பாலருவி
தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

எல்லையில்லாத் துணிவே
எமனாகலாம் எச்சரிக்கை!
களிப்புடன் குளிக்க வந்த இடமே
காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

வழுக்குப் பாறை நீரோட்டம்
வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
வந்த நட்புகளுக்கு வழக்கானால்
வாழ்வே போராட்டம் ஆகிடும்!

நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
நீ விழிப்போடு களித்தாடு விழி
நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
நிலையுயர்த்தும் இளமை அலை
நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

”நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்!” என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *