அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (04.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 278

  1. நலியும் கலைகள்…

    ஆடும் கலையின் பொம்மைகள்
    ஆட்டம் நின்ற நினைவுகள்,
    கூடும் கூட்டம் போனதுவே
    குறைந்து விட்ட கலையாலே..

    வளர்ந்த கிராமக் கலையெல்லாம்
    வளர்ச்சி குன்றி அழிகிறதே,
    உளத்தில் கொள்வீர் உலகுளோரே
    உண்மைக் கலைகள் வளர்ப்பீரே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. பொம்மை

    கடைத்தெருவில்
    போன வருட
    சாயலில்லை.
    கூடிப்போயிருந்தது
    வண்ணமும் விலையும்.
    விற்றுத் தீர்ந்தது
    நிறக்குமிழி புட்டிகள்.
    சர்வ லட்சண
    பட்டாடை உடுத்தி
    வெட்கத்துடன்
    பொய்க்கால் பூட்டி
    சலிக்காமல்
    காற்றின் வாசிப்பில்
    ஒரு ஓரமாய்
    தலையாட்டிக்கொண்டிருந்தனர்
    ஒரு ஜோடி
    தஞ்சை
    தலையாட்டி பொம்மைகள்.

  3. படக்கவிதைப் போட்டி 278

    மெய்க்கால்களில் பொய்க்கால் ஆட்டமா
    பொய்க்கால் இணைத்த மெய்க்கால் ஆட்டமா
    ஒருகால் இருகால் பொய்க்காலாட்டமா
    எக்காலும் ஆடும் மெய்க்காலாட்டமா

    பாரம்பரிய நடனத்தின் சிறப்பாட்டம்
    பார்த்து வியக்கும் ஒயிலாட்டம்
    கிராமியக் கலைகளில் வியப்பாட்டம்
    வண்ண வர்ண நிறத்தில் மகிழாட்டம்

    திருவிழாக் காலங்களில் களையாட்டம்
    தெருக்கூத்து நடுவினுலும் இவ்வாட்டம்
    தமிழகப் பெருமையை இது பறைசாற்றும்
    அழிவிலா கலைகளில் இதன் அரங்கேற்றம்
    என்றும் நெகிழ்வூட்டும்.

    சுதா மாதவன்

  4. பொய்கால் அரசியல்வாதி குதிரைகள்

    தேர்தல் நேரத்தில்
    பொய்யான வாக்குறுதிகள்
    ஆட்சி அதிகாரத்தில்
    அதிகப்படியான ஊழல்கள்

    மக்கள் வரிப்பணத்தில்
    உருப்படாத திட்டங்கள்

    பொய்க்கால் குதிரைகள்
    ஆட்டம் கண்டு இரசிக்கலாம்

    பொய்க்கால் வாக்குறுதி
    அரசியல் வாதிகள்
    ஆடும் ஆட்டத்தில்
    ஆட்டம் காணப் போவது
    எதிர்கால தலைமுறையே

    தொலைநோக்கு
    சிந்தனை இல்லை

    நீர்நிலைகள் தான்
    உயிர் நிலைகள்
    காக்கும் வகையில்
    செயல் திட்டங்கள் இல்லை

    உழைக்கும் கரங்கள்
    பிழைக்கும் வகைகள்
    பிழையான திட்டத்தில்
    திசை மாறும் பயணத்தில்

    வரவினை பெருக்காத
    வகையேதும் அறியாது
    பற்றாக்குறை நிதியில்
    அரசாங்கம் பயணித்தால்
    பொருளாதார வளர்ச்சி
    நிரந்தர தளர்ச்சி

    பொய்க்காலை
    தூக்கி எறியுங்கள்
    உண்மை நிலையை
    உணர்த்தி விடுங்கள்

    நொண்டிக் கொண்டு
    திணறிக் கொண்டு
    அரசு பயணிக்கிறதென்று

    உள்ள நிலையை
    உண்மை நிலையை
    உரைக்கும் கலையை
    உரைக்காது

    பொய்க்கால் குதிரைகள்
    போல் வேண்டாம்
    வெளி ஆட்டம்

    சீ.காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  5. வண்ண வண்ண உடுப்பு பூட்டி
    சின்ன சின்ன ந(கை) டை போட்டு
    மின்ன மின்ன பொய்க் கால் குதிரையேறி வரும்
    கண்ணழகு இராசனக்கும் இராசாத்திக்கும் வணக்கம்

    மழலையர்க்கு மரப்பாச்சி
    மங்கையர்க்கு புனைப்பாவை
    மனைவியர்க்கு தலையாட்டி அவள்
    மனனவர்க்கு கைப்பாவை என

    மணிக் கையாலே மண்ணெடுத்து
    மந்திரத்து உழைப்பாலே
    மனிதனின் படைத்துவிட்டன்
    மயக்கவைக்கு பொம்மைகளை

    பாவைக் கூத்தினிலே அவனுக்கு
    பாராளும் மன்னர் வேடம்
    பசியின் கூத்தில்லவன் அவன்
    பட்டினியால் வாடும் பரதேசிக்கோலம்

    படைத்தவன் வாழ்கையின்று இன்று
    பச்சை மண்பானையாய் உடைந்து போனது
    பார்த்திருந்த விழிப் பாவைகள்
    பழுது பட்டு நிறக்குருடாய் ஆனது

    தொல்கலைகள் யாவுமிங்கு
    தொலைந்தழிந்தே பேனதனால்
    தொட்டதெல்லாம் பென்னாக்கும்
    தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது இன்நிலைமாறுமா?

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    noyyal.blogspot.in

  6. தலையாட்டி பொம்மைகள்

    மந்தை ஆடுகளாய்
    மதியில்லா மாடுகளாய்
    சுயம் கெட்டு
    சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
    சூத்திரங்கள் அழித்துவிட்டு
    எடுப்பார்க் கைப்பிள்ளையென
    ஏவல்கள் செய்திருந்து
    விதியை தினம் நொந்து
    வீண் பொழுதுப் போக்கிவிட்டுத்
    தன்னம்பிக்கை ஏதுமின்றித்
    தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
    தாளத்திற்கு ஆடிவிட்டு
    வேரருந்த விருட்சமென
    வீணாகி விழ்ந்துள்ளோம்…

    அறிவுக் கண் திறந்து
    அறப்பொருளைத் தானுணர்ந்து
    உண்மையை உணர்ந்தறியும்
    உன்னத ஞானம் தரும்
    நற்கல்வித் தேடிக் கற்று
    எல்லோரும் மன்னரென்றக்
    மக்களாட்சித் தத்துவத்தின்
    மாண்பதனை மிடடெடுப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.