படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
மரக்கிளையில் அழகாக அமர்ந்திருக்கும் மஞ்சள் வண்ணத் தேன்சிட்டைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு இப்படம் படக்கவிதைப் போட்டி 273க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!
காணத் தெவிட்டாத இந்தத் தேன்சிட்டை நம் வீட்டருகில் காணவேண்டுமானால் நிறைய மரம் செடிகொடிகள் நம் வீட்டைச் சுற்றி இருக்கவேண்டும்.
இத்தொல்லுலகில் பல்லுயிர்களுக்கும் அடைக்கலம் தரும் அன்னையாகத் திகழ்பவை மரங்களே. எனவே மரங்களை அழியாமல் காப்பதன் வாயிலாக இந்தச் சின்னஞ்சிறு வன்ன (அழகிய) குருவிகளையும் நாம் காக்கமுடியும்!
கண்கவர் சிட்டைப் படத்தில் நோக்கியதால், கவிபாட, பல்வேறு கற்பனைகளை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருக்கும் கவிஞர்களே வருக! உம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுக!
*****
”எல்லைகள் தாண்டியே தொல்லையில்லாப் பயணம் செய்கிறாய்! உடைமைகள் மீது ஆசைகொள்ளும் மடமை உனக்கில்லை” என்று சிட்டுக்குருவியின் சுதந்தர வாழ்வை விதந்தோதுகின்றார் திரு. காந்திமதிநாதன்.
சுதந்திர பறவை
எங்கு வேண்டுமானாலும்
எப்பொழுது வேண்டுமானாலும்
எல்லைகள் தாண்டியே பயணம்
உடைமை கொண்டாட்டமில்லை
மடமை கொண்டாடுவதில்லை
ஆசைகள் பிறப்பதில்லை
யாரையும் பின்பற்றுவதில்லை
என்னை வழிநடத்துபவன் என்
என்னுள்ளே இருப்பதால்
சூழ்ச்சி வலையில்
வீழ்ச்சிக்கு வழியில்லை
என்னைக் கேட்டுத்தான்
எல்லாமே நடக்கணும்
சர்வாதிகார சிந்தனை
சந்நதிக்கே இல்லையப்பா
மானிடா
உங்களுக்குள்ளே
எத்தனை எத்தனை பிரிவுகள்
பிரிவுகளுக்குள்ளே
எத்தனை எத்தனை
உட்பிரிவுகள்
வளர்கிறோமே
வாதாடுவாய்
சாதனைகள்
பட்டியலிடுவாய்
ஒரே கேள்வி
நிம்மதியாக
வாழ்கிறாயா?
*****
”மரக்கிளையில் கூடுகட்டி மறைவாக வாழ்ந்தாலும் இரக்கமற்ற மனிதனால் அதற்கும் ஆபத்து வந்துவிடுவதைக் கலக்கத்தோடு பார்த்திருக்கும் பறவை இது” என்று பறவை வாழ்வின் பரிதாபநிலையை விளக்குகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
அவன் செயல்…
சிறகில்
சுதந்திரத்தைக் கட்டிப்
பறக்கும் பறவைக்கு
வசப்பட்டுவிடுகிறது
வானம்..
மண்ணில்தான்
மாறுபாடாகிறது மனிதனால்..
உயர்ந்த மரக்கிளையில்
ஓவியமாய்க் கூடுகட்டி
இனத்துடன்
ஒற்றுமையாய் வாழ்ந்தாலும்
இடர்ப்பாடு வந்துவிடுகிறது
இவனால்-
மரத்தையே வெட்டிவிடுகிறானே
அடியோடு..
கலக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கிறது
பறவை யொன்று…!
*****
”துணையைப் பிரிந்த தாபமோ? குருவிக்கூட்டம் தள்ளிவைத்ததால் வந்த கோபமோ? எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளராதே!” என்று சிட்டுக்குத் துணிவூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.
தன்னம்பிக்கை
தன் துணை
தனிமைப்படுத்தியதின்
தாபமோ!
தன் கூட்டம்
தள்ளி வைத்ததின்
கோபமோ!
தன்னந்தனியாய்
தண்ணீருக்கான
தேடலோ!
தனியொரு பறவையாய்த்
தடித்த மரக்கிளையில்
தவிக்க விட்டது
தலைவிதியென்று
தளராதே குருவியே!
தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
தடைகளைத்
தகர்த்திடும் ஆயுதங்களாக்கு!
தவிக்க விட்ட
சொந்தங்கள்
தன்னால் வரும்
உன் பின்னால்!
*****
”ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும் வாட்டம் முகத்தில் காட்டிவைத்து
அழுது பொழுதைப் போக்காமல் நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்” என்று சிட்டுக்குருவி தனக்குச் சொன்ன நல்ல சேதியை நமக்கும் சொல்லியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி
காலை எழுந்து கடமையைச் செய்ய
மாடத்தில் தினமும் கூவிடுவாய்
மாலை நேரமாய் வீடுவந்து
சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்
சோம்பித் திரிந்து வாடிடாமல்
உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
சிறப்பைத் தினமும் காட்டிடுவாய்
படைப்பின் நியதிகள் மீறிடாமல்
அடைந்து கிடந்து தேங்கிடாமல்
சிறகை விரித்துப் பறந்து செல்லும்
விடுதலை வேட்கை விதைத்திடுவாய்
ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
அழுது பொழுதைப் போக்காமல்
நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்
சின்னச்சின்ன குருவி நீயும்
சொல்லும் சேதிகள் ஏராளம்
எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்…
*****
குருவியின் படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்து அருவிகளைப் பாயவிட்டிருக்கும் கவிஞர்களை நேயத்தோடு பாராட்டுகின்றேன்.
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…
மஞ்சள் வெல்வெட்டில்
கருப்புநிறக் கருகுமணி உன் கண்கள்!
பேனாவின் கூர்மை கொண்ட உன் அலகு!
பதிய வைத்த கால்களுடன்
மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகு
நளினத்தின் நளினம்!
இயந்திர நகர நரக வாழ்க்கையில்
உன்றன் குரலை மறந்திருந்தோம்!
ஊரடங்கில் உன்றன் குரல்
கேட்கக் கேட்க எத்தனை இனிமை!
அமைதியினிடையில் ஆனந்தம் தந்ததே…
இறுகிய மனத்தூடே இனிமை தந்ததே…
உன்னிசையைத் தந்து கொண்டேயிரு
நாங்கள் குதூகலிக்க!
மஞ்சள் மைனாவே
மறவாதே எங்களை!!
”மஞ்சள் வெல்வெட்டில் கருகுமணிகளாய் மின்னும் கண்களோடும், பேனாவின் கூர்மைகொண்ட அலகோடும் மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகே அழகு! உன்னிசையைக் கேட்டுமகிழும் இன்பத்தை நித்தமும் எமக்குத் தா” என்று மஞ்சள் சிட்டைக் கொஞ்சி அழைக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.