திருவள்ளுவர் யார்? – 7

புதுக்கோட்டை பத்மநாபன்

“பொறிவாயில் ஐந்தவித்தான்”

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்”

என்பது அடுத்த குறட்பா.

ஐம்பொறிகளை அடக்கிய இறைவனின் பொய்யில்லாத ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “ஜிதேந்த்ரிய:” என்ற ஒரு நாமமுண்டு. அதற்கு ‘புலன்களை வென்றவன்’ என்று பொருள். பகவான் மனிதனாக அவதாரம் செய்தாலும் சராசரி மனிதனுக்குள்ள புலன் விஷயங்கள் அவனிடம் நெருங்குவதில்லை. ராமாவதாரத்தில் அவன் வாழ்ந்து காட்டிய நெறிமுறைப்படியும் கிருஷ்ணாவதாரத்தில் அவன் உபதேசித்த நெறிமுறைப்படியும் வாழ்பவன் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வான் என்பதே திருவள்ளுவர் இங்கு கூற வரும் கருத்து.

‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ’பொறி’ என்ற சொல்லுக்கு ‘தீப்பொறி’, ‘அழகு’ என்ற பொருள்களும் உண்டு. ப்ரளய காலத்தில் தீப்பொறிகளை உமிழ்கின்ற அல்லது அழகான தனது திருவாயில் (‘திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கோதையார் அனுபவித்த கோலத்திருவாயன்றோ அது!) ஐந்தின் மடங்கான தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கிய ப்ரபஞ்சத்தை அவித்துக்கொள்ளும் அல்லது விழுங்கிவிடும் திருமால் என்ற பொருளும் உண்டு. தனது அடியார்களின் புலன் விஷயமான உணர்வுகளை அறவே அழித்துவிடுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் “ஐந்து இருள் அறநீக்கி நான்கினுள் துடைத்து தம் ஒன்றாற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர்” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகிறது. ஆகவே இந்தக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது.

“தனக்குவமை இல்லாதான்”

அடுத்த குறட்பாவில் பகவானைத் “தனக்குவமை இல்லாதான்” என்று அழைக்கிறார் திருவள்ளுவர். “न ते विष्णो जायमानो न जातो देव महिम्नःपरमन्तमाप” (ந தே விஷ்ணோ ஜாயமானோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்த மாப-ரிக் வேதம்-7-99-2) என்று ரிக்வேதம் பகவானைத் துதிக்கிறது. “பகவானே! விஷ்ணோ! பிறக்கின்றவனும் பிறந்தவனும் உன் பெருமையின் மேல்எல்லையை அறியவில்லை” என்பது இந்த ரிக்வேத வாக்யத்திற்குப் பொருள்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘அனுத்தம’, ‘அதுல:’ என்று இரண்டு நாமங்கள் வருகின்றன. ‘அநுத்தமன்’ என்றால் ‘தனக்குமேல் உயர்ந்தவன் இல்லாதவன்’ என்று பொருள். ‘அதுலன்’ என்றால் ‘தனக்கு ஸமமானவன் எவனும் இல்லை’ என்று பொருள். “न त्वत्समोऽस्त्यभ्यधिकःकुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव”(ந த்வத் ஸமோஸ்த்யப்4யதி4க:குதோந்யோ லோகத்ரயேப்யப்ரதிம ப்ரபா4வ -கீதை-11-43) என்று கீதையிலும் சொல்லப்பட்டது. “மூவுலகிலும் உனக்கு ஸமமானவன் இல்லாதபோது உயர்ந்தோர் எங்கிருப்பர்” என்பது இந்த கீதை வசனத்தின் பொருள்.

“இன்னோர் அனையை இனையயால் என அன்னோர் யாம் இவண் காணாமையின்” (பரிபாடல்-1) என்றும் “நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (பரிபாடல்-3) என்றும் எம்பெருமான் விஷயமாகச் சங்க இலக்கியம் பேசுகின்றது. அதனால் திருவள்ளுவர் குறிப்பிடும் தனக்குவமை இல்லாதான் திருமால்தான் என்பதில் ஐயமில்லை.

“அற ஆழி அந்தணன்”

அடுத்த குறட்பாவில் பகவானை “அற ஆழி அந்தணன்” என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் பகவானின் அஸாதாரண அடையாளமான ஆழிப்படையை நினைவுபடுத்துகிறார் திருவள்ளுவர். பகவான் தன் கையில் வைத்திருக்கும் ஸுதர்ஶனச் சக்கரத்தால் உலகில் தர்மத்தைக் குலைக்கும் துஷ்டர்களை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிறார். உலகில் தர்மத்தை நிலைநாட்டவே சக்கரத்தைத் தனது கையில் தரித்திருக்கிறான் பகவான். அதனாலேயே “அறஆழி” என்று குறிப்பிட்டார்.

“चतुर्भिस्साकं नवतिञ्च नामभिश्चक्रं न वृत्तं व्यतीनवीविपत्” (தனது ஸுதர்ஶனச் சக்கரத்தைச் சுழற்றுவதுபோல், தொண்ணூற்று நான்கு அவயவங்களைக் கொண்ட காலச் சக்கரத்தையும் விஷ்ணு தன் கையில் வைத்துக்கொண்டு சுழற்றுகிறார்) என்று ரிக்வேதம் (ரிக்-1-155-6) கூறுகிறது. இதனால் ஸுதர்ஶனமே காலச் சக்கரமாகவும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. “மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே”(பரிபாடல்-3) என்று எல்லா உலகத்தின் பாதுகாப்பும் பகவானது திருச்சக்கரத்தின் நிழலில் தான் உள்ளது என்று சங்க இலக்கியமும் கூறுகிறது.

உலகில் அந்தணர்களையும் அவர்களது தர்மமான வைதிக நெறியையும் ஒரு மன்னன் பாதுகாக்க வேண்டும் என்று ‘ஆபயன் குன்றும்’ ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்கள் மூலம் திருவள்ளுவரே கூறுகிறார். வேத வைதிக நெறியான அந்தணரின் அறம் தான் உலகில் உள்ள மற்றவர்களின் அறங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. உலகில் அந்தணருக்கும் அவர்களது அறத்திற்கும் நலிவு ஏற்படுகின்ற பொழுது அதர்மம் தலைதூக்கி விடுகிறது. பகவான் அந்த அறத்தை நிலைநாட்டி உலகத்தைக் காக்கவே தனது அவதார காலங்களில் அந்தணர் வடிவிலும் தோன்றியிருக்கிறான். அதனால்தான் ‘அந்தணன்’ என்று பகவானைக் குறிப்பிட்டார் திருவள்ளுவர். அதனால் இக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது. 

எண்குணத்தான்

அடுத்த குறட்பாவில் பகவானை எண்குணத்தான் என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். சாந்தோக்ய உபநிஷத்தில் “एष आत्माऽपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपास्सत्यकामः सत्यसंकल्पः” (பாபமற்றவன், கிழத்தன்மையற்றவன், மரணமற்றவன், ஶோகமில்லாதவன், பசியற்றவன் தாக மற்றவன், உண்மையான எல்லா இன்பங்களையும் உடையவன், வீணாகாத ஸங்கல்பத்தை உடையவன்) என்று பரமாத்மாவுக்கு எட்டு குணங்கள் இயல்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை குணாஷ்டகம் என்று கூறுவர். முக்தி பெற்ற நிலையில் தான் ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் ஏற்படுகின்றன.

கோரர் என்ற ரிஷி, ஒரு க்ருஷ்ண பக்தர். ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா எனப் புரிந்துகொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால் அவரது இறுதிக் காலத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் பேறு பெற்றதுடன் மேற்படி எட்டு குணங்களை அடைந்து முக்தரானார் என்ற விஷயம் மேற்படி உபநிஷத்திலேயே சொல்லப்படுகிறது. பகவான் அநந்த கல்யாண குணங்களை உடையவன். அவனது குணங்களை எண்ண முடியாது. முக்தி பெறும் ஜீவாத்மாக்கள் பகவானிடமுள்ள பல்வேறு குணங்களில் குறிப்பாக எட்டு குணங்களை மட்டும் அடையும் தகுதி பெறுகிறார்கள் என்பதை உணர்த்தவே மேற்படி எட்டு குணங்களை மட்டும் உபநிஷத் எடுத்துக் காட்டுகிறது. அதுவே குணாஷ்டகம் என்று ப்ரஸித்தி பெற்றுவிட்டது. முக்தி பெற்றோருக்குத் தனது எட்டு குணங்களை மட்டும் அநுக்ரஹிப்பவன் என்பதால் தான் பகவான் “எண்குணத்தான்” என்றும் ப்ரஸித்தியடைந்தான்.

பரமாத்மாவின் இந்த எட்டு குணங்களை மட்டும்தான் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா பெற முடியுமேயொழிய பகவானின் மற்ற குணங்களைப் பெற முடியாது. அதனால் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு எல்லா வகையிலும் ஸாம்யத்தை அடைந்து விட முடியாது. இதுவே வேதாந்தத்தின் முடிவு. பரம வைதிகரான திருவள்ளுவர் அதை மனதிற் கொண்டுதான் பகவானை எண்குணத்தான் என்கிறார்.

பகவானது குணங்களை எண்ணினால் எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவில்லை. அதனாலும் எண்குணத்தான் என்பது பொருத்தம்தான். ‘எண்பதத்தான்’(குறள்-548) ‘எண்பதத்தால்’ (குறள்-991) என்ற இடங்களில் போல பகவானின் ஸௌலப்ய குணத்தைக் குறிப்பிடுவதற்காகக் கூட ‘எண்குணத்தான்’ என்று சொல்லலாம். இவ்விடத்துக்கு உரை செய்த பரிமேலழகர் எண்வகைப்பட்ட குணங்களை உடையானது என்று பொதுவாகச் சொல்லிச் செல்கிறாரேயொழிய அந்த குணங்கள் எவை என்னும் விஷயத்தில் தன் கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

இது குறித்துப் பலருடைய கருத்தை வெளிப்படுத்துமிடத்தில் ஶைவ ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். ஶைவாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று தான் கூறுகிறாரேயொழிய, திருவள்ளுவர் ஶைவாகமத்தைப் பின்பற்றியே எண் குணத்தான் என்று கூறினார் என்று அவர் சொல்லவில்லை. ஏனெனில் ஶைவாகமம், ஶைவ ஸித்தாந்தம் இவையெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை.

திருவள்ளுவர் சங்கத் தமிழர்களின் மரபில் வந்தவர். சங்கத் தமிழர்கள் இடம் சார்ந்து பல தெய்வங்களை வழிபட்டிருந்தாலும் வைதிக தெய்வமான திருமாலையே பரம்பொருளாகக் கருதி வழிபாடு செய்தனர். வேறொரு தெய்வத்தை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் திருமாலின் அவதாரச் செய்திகளும் பரத்வமும் தான் பேசப்படுகின்றன.

ருத்ரனைக் குறித்த சில குறிப்புகள் சில இடங்களில் வருகின்றனவேயொழிய ஶைவாகமம் ஶைவ ஸித்தாந்தம் இவற்றில் கூறப்படும் ஶிவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக் கூடச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ஶிவன். ஶைவம் என்ற சொற்களே சங்க இலக்கியங்களில் இல்லை. சங்கத் தமிழர்கள் வேத வைதிக நெறியையும் அதைப் பின்பற்றும் அந்தணர்களையும் ஆதரித்துப் போற்றியவர்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் சொல்லப்படும் எண்குணத்தான் என்பது தமிழர்களின் வைதிக தெய்வமான திருமாலைத்தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.