அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறுவது சேரிமக்கள் என்னும் தொகைப்பாத்திரம் ஆகும். ‘சேரிமக்கள்’ என்னும் தொடர் ஒரு பாடலிலும் இல்லை. பாடல் காட்சியில் சேரி மக்கள் நேரில் இடம் பெறவுமில்லை. ‘சேரி’ என்னும் இடவாகு பெயர் சேரிமக்கள் அனைவரையும் குறிப்பாகச் சுட்டுகிறது. தொல்காப்பியரின் ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல் சேரிமக்கள் கூற்றிற்கு உரியவராக இடம் பெறவில்லை. அகப்பாடல்களில் தோழி, தலைமக்கள் ஆகியோர் கூற்றில் அவர்கள் பேசியவராக இடம் பெறுகின்றனர்.
இடவாகுபெயர்ச் சிறுபாத்திரம்
செவிலித் தாயிடம் அறத்தோடு நிற்கும் தோழி;
“……………………………. அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க” (அகம்.- 110)
என்கிறாள். ‘வேண்டுமாயின் அலர் தூற்றும் சேரிமக்களிடம் சென்று கேட்டுக்கொள்; நாங்கள் கடலில் ஆடி; சிற்றில் இழைத்து; சிறுசோறு சமைத்து ஆயத்தோடு விளையாடிய போது; அவன் தான் விருந்துண்ண வரட்டுமா? என்று கேட்டான். இது இழிந்த மீனுணவு; உன்னால் உண்ணலாகாது என்று தான் பதிலிறுத்தோம்…’ எனத் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விதமாகப் பேசும் தோழி சேரியை நமக்கு அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகத் தான் அறிமுகப் படுத்துகிறாள்.
“கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய”த் (அகம்.- 347)
தலைவன் பிரிந்து செல்கிறான் என்று தோழியிடம் வருந்துகிறாள் தலைவி. ‘சேரிமக்கள் பழி கூற; அது கமுக்கமான அம்பலாகத் தொடர்ந்து; ஊர்மக்களால் ஆரவாரமிக்க அலராவதை நாம் மட்டுமே எதிர்கொள்ளும்படி; நம்மைத் தவிக்கவிட்டு நீங்குகிறான்’ என்கிறாள். இங்கும் சேரி இடவாகு பெயராயிற்று.
தலைவியின் பண்பைத் துலக்கும் சேரி
தலைவியின் பாத்திரப் படைப்பைத் துலங்க வைக்க சேரி என்னும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.
“சேரியும் மறைத்தாள் என்தோழி” (கலி.- 44)
எனத் ‘தன் துன்பத்தைச் சேரிமக்கள் அறியாவண்ணம் பொறுத்துக் கொண்டு மறைத்து வாழ்ந்த தலைவி; தலைவனுக்கு அவப்பெயர் வராமல் காத்தவள் என்னும் பெருமைக்கு உரியவள்’ என்பது தோழி கூற்றாக இடம்பெறும் தலைவி பற்றிய புகழ்மொழி ஆகும். இங்கும் சேரி இடவாகு பெயராக அங்கு வாழ்ந்த மக்களைக் குறிக்கிறது.
இடப்பெயராகும் சேரி
பல பாடல்களில் சேரி இடப்பெயராக அமைந்துள்ளது.
“ஊரும் சேரியும் ஓராங்கு அலர்எழ”த் (அகம்.- 383)
தன் மகள் சென்று விட்டாளே எனச் செவிலித்தாய் புலம்புமிடத்து; சேரி இடப்பெயராகவே பயின்று வருகிறது.
“வருகதில் அம்ம எம் சேரி” (அகம்.- 276)
என்று பரத்தை கூறுமிடத்தும்; ‘குதிரையின் மேல் ஏறி எம் சேரிக்கு வந்து தன் தாரும் கண்ணியும் காட்டினான்’ என்று பரத்தை தலைவர்க்குப் பாங்காயினோரிடம் கூறும் போதும் சேரி இடப்பெயரே.
“கலிமா கடைஇ வந்து எம் சேரி
தாரும் கண்ணியும் காட்டி” யதால் (நற்.- 150)
நான் அவனிடம் மயங்கினேன் என்கிறாள் பரத்தை.
சேரியின் தன்மைகள்
சேரி ஊர்ப்புறத்தில் இருந்தது. ஊரை ஒட்டி அமையாத சேரிகள். ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது.
“ஊர் அலரெழச் சேரி கல்லென” (குறுந். – 262)
எனும் போதும்; இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்படும் தோழி;
“ஊரும் சேரியும் உடனியைந்து அலர் எழ” (அகம்.- 220)
எனச் சூழலை உணர்த்தும் போதும்; ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை உறுதிப்படுகிறது.
“…… நல்லூர்……
……தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)
எனத் தலைவனை இரவுக்குறிக்கு ஊக்கும் தோழி ‘இவ்வூரைச் சார்ந்த சேரியில் இரவில் இவர் நம் உறவினர் என்று கூட அடையாளம் காண இயலாது; ஆகையால் அயலானாகிய நீ தயங்காமல் வா’ என்கிறாள். இங்கும் ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை தெளிவாகிறது.
“உறைக்கிணற்றுப் புறச்சேரி” (பட்டி.- அடி- 76)
என்ற தொடர் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.
“ஊரலம் சேரி சீறூர்” (நற்.- 77)
எனத் தலைவன் தன் நெஞ்சோடு கூறும் போது; ஊரளவு பெரிதாக இல்லாமல் ஒன்றோடொன்று சேர்ந்த சேரிகள் சீறூர் என்று சொல்லத்தக்க அளவு நிலவின என அறிகிறோம். அதனால் தான்;
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ எனச் சேரிதொறும்” (அகம்.- 390)
பண்டமாற்றுக்குக் குரல் கொடுக்கும் உமட்டி சிற்றூரின் ஒவ்வொரு சேரியிலும் ஓங்கிக் கூவியதாகத் தலைவன் பாங்கனிடம் விவரிக்கிறான்.
“புலாலம் சேரி புல்வேய் குரம்பை” (அகம். 200)
என்று சுட்டுவதில் சேரி புல்வேய்ந்த குடிசைகளுடன் இருந்தமை தெரிகிறது.
“மல்லல் எம் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதூர் அலரெழ” (நற்.- 249)
என்ற தலைவியின் கூற்றில் சேரியின் வளம் முதன்மை பெற்றுக் கௌவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சேரியின் தலைவரும் இருந்தனர். அகப்பாடல் தலைவி தன்னை;
“சேரி கிழவன் மகளேன் யான்” (கலி.- 91)
என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.
இரவுக்குறியை மறுக்கும் தோழி;
“அம்பல் சேரி அலர் ஆங்கட்டே” (ஐங்.- 279)
எனச் சேரிமக்களின் தன்மையை நறுக்குத் தெறித்தாற் போல உணர்த்துகிறாள். ‘தம்முள் முகிழ்த்த பழிச்சொல்லை யாவரும் அறியச் சென்று தூற்றும் மக்கள் வாழுமிடம்’ என்ற இவ்விமர்சனம் ஊர்மக்களுக்கும் பொருந்துவதே.
சேரியின் வகைகள் காட்டும் சமூகநிலை
வாழும் மக்கள் அடிப்படையில் பரதவர் சேரி, பரத்தையர் சேரி, கூத்தர் சேரி, பாணர் சேரி, மறவர் சேரி எனச் சேரிகளைத் தொகைநூல்கள் வகைப்படுத்துகின்றன.
“வாலிழை மகளிர் சேரி” (நற்.- 380)
என்ற பயன்பாடு பரத்தையர் சேரி இருந்தமையை உணர்த்துகின்றது.
“ஒள்ளிழை மகளிர் சேரி” (அகம்.- 146);
அதே பரத்தையர் சேரியை மாற்றுச் சொற்களால் உரைக்கிறது.
“புன்னை ஓங்கிய புலாலம் சேரி” (குறுந்.- 351);
“புன்னையம் சேரி” (குறுந்.- 320)
என்றெல்லாம் பரதவர் சேரி பாடப்பெற்றுள்ளது. அங்கு சங்கு வளையல் செய்வோரின் குடியிருப்பு;
“இலங்குவளை இருஞ்சேரி” (மது.- அடி- 136)
எனப் பெயர் பெறுகிறது. வையை வெள்ளம்
“ஆடுவோர் சேரி அடைந்தென”ப் (பரி.-7)
பாடப்படுவதால் கூத்தர் சேரி இருந்தமை அறிகிறோம். பாணர் சேரியை;
“மீன் சீவும் பாண்சேரி” (புறம்.- 348& மது.- அடி- 269)
என்கிறது செவ்விலக்கியம். பொருநர் என்று ஆங்காங்கு சுட்டப்படும் வீரர் வாழ்ந்த சேரி;
“மறம்கொள் சேரி” (மது.- அடி- 594)
ஆயிற்று. வயலில் பணிசெய்யும் உழவராகிய திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்பவர் வாழ்ந்தமை அறிகிறோம். வேளாண்மை செய்வோர் ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர்ந்ததாகப் பாடும் தொகைநூல்கள்; சேரியில் துணங்கைக் கூத்து நிகழ்ந்ததாகப் பாடுவது; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது.
“துணங்கை அம்தழூஉவின் மணம்கமழ் சேரி” (மது.- 329);
“மன்றுதொறும் நின்ற குரவை
சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ” (அகம்.-390) போன்ற தரவுகள் ஒப்பீட்டு ஆய்விற்குரியன.
முடிவுரை
சேரிகள் ஊர்ப்புறத்தில் இருந்தன. ஊரை ஒட்டி அமையாத சேரிகள் ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது. பல பாடல்களில் சேரி இடப்பெயராக அமைந்துள்ளது. வயலில் பணிசெய்யும் உழவராகிய திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்யும் பரதவரும், பாணரும், பொருநரும், ஆடல் கலைஞரும், பரத்தையரும் வாழ்ந்தனர். வாழும் மக்கள் அடிப்படையில் சேரிகளைத் தொகை இலக்கியம் வகைப்படுத்துகிறது. ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர; சேரியில் துணங்கைக் கூத்து நிகழ்ந்தமை; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது. சேரிமக்கள் என்னும் தொகைப்பாத்திரம் தலைவியின் பண்பைத் துலங்க வைக்கும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரமாகவும்; அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகவும் இடம்பெறுகிறது.